நாங்க போன வாட்டி ஊருக்குப் போயிருந்தப்போ, கணவர் வீட்டுக்குப் பக்கத்துல ஒரு ஜோடி குடி வந்திருந்தாங்க.. புதுசாக் கல்யாணம் ஆனவங்க.. காதல் திருமணம்.. பெற்றோர் எதிர்ப்பை மீறித் திருமணம் செய்து போராட்டங்களுக்கிடையே வாழ்க்கைய நடத்திகிட்டு இருந்தாங்க.. அதுக்கிடையிலும் நாங்க கிளம்பும் போது எங்களுக்காக ரெண்டு பொம்மைகள் வாங்கித் தந்தாங்க.. அந்த ரெண்டும் இங்க எங்க வீட்டுல தான் இருக்கு.. இந்த வாட்டிப் போயிருந்தப்போ எப்படி இருக்காங்கன்னு வீட்டுல கேட்டதுக்கு, அவங்க ரெண்டு பேரும் பிரிஞ்சுட்டாங்க, இப்ப விவாகரத்துக்கு ஏற்பாடு பண்ணிட்டு இருக்காங்கன்னு சொன்னாங்க.. அதிர்ச்சியா இருந்தது.. அதுக்குள்ளேயான்னு.. அந்த ஆணோட குடி, சந்தேகம், நடவடிக்கை சரியில்ல, மனைவி மீதான வன்முறை - இதனால மனைவி தனியாப் போயிட்டதாவும், அந்தக் கணவர் அவங்களைச் சமாதானம் செய்றதுக்காக அவங்க வீட்டு முன்னாடி காத்துக் கெடக்கறதாவும் சொன்னாங்க.. அதுக்காக இருக்காரோ இல்ல வேற வாழ்க்கைய ஆரம்பிச்சிரப் போறான்னு காவல் இருக்காரோ தெரியல.. இனிமே அவரோட வாழுறது கஷ்டம், அதனால பிரிஞ்சுட்டாங்கன்னு புரிஞ்சாலும், என்னால அதைச் சாதாரணமாக் கடந்து போக முடியல, ஏன்னா இங்க மாதிரி இல்ல, அங்க காதலைத் திருமணம் வரைக்கும் கொண்டு போறதுக்கே, பொருளாதாரம் பெற்றோர் சம்மதம்ன்னு நிறைய இடையூறுகள்.. அதனாலேயே அப்படிப் போராடிக் கல்யாணம் பண்ணி உறுதியா வாழ்றவங்கள எனக்குப் பிடிச்சுப் போகும்.. இப்ப இவங்கள நினைச்சு, இதுக்காகவா இவ்வளவு போராட்டங்களைத் தாண்டி வந்தாங்கன்னு கஷ்டமா இருக்கு..
எங்க ஊர்ல நானிருக்கும் போது ஒரு கொலை நடந்துருச்சு.. காரணம், மனைவியோட கள்ளக்காதல் ன்னு சொன்னாங்க.. கணவரே போயிச் சரண்டர் ஆயிட்டு எதோ டயலாக் விட்டிருக்கார், தான் செஞ்சது சரி தான் அப்படின்ற மாதிரி.. ஹ்ம்ம்..
எங்க உறவினர் ஒருத்தர் மண்புழுவை வச்சு இயற்கை உரம் தயாரிக்கறதுல ஈடுபட்டிருக்கார்.. அவர் கிட்ட விவரமாப் பேச நேரம் கிடைக்கல.. சுருக்கமா, ரசாயன உரம் போடாம அதை மட்டும் போட்டு விளைவிச்சா உற்பத்தி பாதிக்கப்படாதான்னு கேட்டேன்.. அந்தளவுக்கு பாதிக்கப்படாதுன்னு தான் சொன்னார்.. அடுத்தவாட்டி போறப்போ தீர விசாரிக்கணும்..
ஊர்ல அத்தை (மாமாவோட மனைவி) கம்பு ஆக்கித் தந்தாங்க.. அதை நீராகரமா சாப்பிட்டோம், பிடிச்சிருந்தது.. அந்தக் காலத்துல எல்லாம் சோளம் ராகி கம்பு தான் முக்கியமான உணவாம்.. அரிசிச் சோறு எல்லாம் அப்பப்பத் தான் இருக்குமாம்.. கம்பைச் சமைக்கறதுக்காக தயார் செய்யறதே பெரிய வேலையா இருக்கு.. அதைச் சுத்தம் செய்து, உரல்ல இடிச்சு, புடைச்சு, தவிடு நீக்கி, குருனையாக்கி.. அதுக்கப்புறமா சமைக்கணும்.. இதெல்லாம் என்னால ஆகற காரியமா??
ஹமாம் போட்டா rashes, allergy இதெல்லாம் வராதாம்.. காம்ப்ளான் சாப்பிட்டா பசங்க உயரமா வளருவாங்கன்னு விஞ்ஞானப்பூர்வமா நிரூபிக்கப்பட்டிருக்காம்.. அப்புறம் முக்கியமா, முன்னாடியெல்லாம் சிகப்பழகு நாலு முதல் ஆறு வாரங்கள்ல கிடைச்சிட்டு இருந்தது.. இப்பல்லாம் ஒரே வாரத்துல கிடைச்சுடுதாம்.. ஏனோ தெரியல, அங்க இருக்கும் கடந்து செல்ல நேரிட்ட ஒரு முதிய வறிய கிளி ஜோசியர் நினைவில வந்து போனார்.. இப்படியெல்லாம் சொல்லுறதால நான் இதுல எதையுமே உபயோகித்திருக்காத ஆளுன்னு நினைச்சுடாதீங்க.. சோப்பு போட்டுக் குளிச்சா புத்துணர்வா இருக்கும், அழுக்குப் போகும், உங்க தோல் தன்மைக்கேத்த சோப் - இப்படியெல்லாம் சொன்னா ஓகே.. அதைய விட்டுட்டு.. rashes, allergy எல்லாம் வராம இருக்கறதுக்கு அதென்ன மருந்தா?
வால்மார்ட் மாதிரி பெரிய டிபார்ட்மெண்டல் ஸ்டோர் ஒன்னு சங்கிலித் தொடரா ஒவ்வொரு ஊருலயும் வர ஆரம்பிச்சிருக்கு.. தென்மாவட்டத்துப் புள்ளைங்க வேலை செய்யறாங்க.. அங்காடித் தெரு நினைவு வந்ததுன்னு சொல்லித் தான் தெரியனுமா?
இன்னொரு விவாதம் டாய்லட்களைப் பத்தி.. இந்தியனா வெஸ்டேர்னான்னு.. வயசான காலத்துல மூட்டு எல்லாம் தேஞ்சு போன பின்னாடி வெஸ்டேர்ன் தான் நல்லது, ஆனா ஒரு விஷயம் இடிக்குதே.. இங்க பேப்பர் வச்சிருக்கான், எங்கயும் தண்ணி சிந்தாது.. அங்க அதுக்கேத்த மாதிரி ஒரு wired ஷவர் வச்சாத் தானே சரி வரும்? இல்லாட்டி உக்காரும் இடம் அல்லது தரை அசுத்தம் ஆகிடாது?? வீட்டுல கூடப் பரவாயில்ல, பல பேரு உபயோகப்படுத்தற ஹாஸ்டல்ல இப்படிக் கட்டி வச்சுக் கொடுமப் படுத்துவாங்க.. ச்சை..
அம்மா ஆட்சி மலர்ந்தவுடனே மின்சாரத் தடைகள் குறையும்ன்னு நினச்சா, அந்த முதல் வாரம் கண்டபடிக்கு நிறுத்தி வச்சுட்டாங்க, அதும் இரவுல விட்டுவிட்டுப் போகும், கொசுக்களுக்கு ஒரே கொண்டாட்டமாப் போச்சு.. தூங்கவே முடியல.. இனிமே அவங்கவங்க வீட்டுத் தேவைக்கு அவங்களே உற்பத்தி செஞ்சுகிட்டாத் தான் உண்டு போல.. சூரிய ஒளி ல மின்சாரம் தயாரிக்கறதப் பத்திப் படிச்சுப் பாக்கணும், நாமே ஒன்னு வாங்கி நிறுவிக்க முடியுமான்னு.. இது மாதிரி விஷயங்களை எல்லாம் இலவசமாத் தந்தாங்கன்னா புண்ணியமாப் போவும்..
நான் பார்த்து வியந்த ஒரு விஷயமும் இருக்கு.. ரெம்ப பெருசா போயிடும் என்பதால அது அடுத்த இடுகையில..
கிளம்பற அன்னைக்கு ஒரு நண்பரை சந்திச்சோம்.. நாங்க மாறவே இல்லைன்னு சொன்னார்.. தோற்றமும் பேச்சும் அவ்வளவா மாறல தான், அதையத் தான் சொல்லியிருக்கார்.. சிந்தனைகள்ல கண்டிப்பா மாற்றம் ஏற்பட்டிருக்கு.. இன்னொரு நாட்டுக்கு வர்றோம், அங்க இருக்கிற விஷயங்களையும் உள்வாங்கி அலசி வளர்றது தானே இயல்பு? ஆனா சில விஷயங்கள்ல நான் மாற விரும்பல, எதை எடுத்துக்கணும் எதை விடனும்ன்னு முடிவு பண்ண வேண்டியது நான் தான்..
இன்னும் நாலஞ்சு வருஷத்துல ஊர் திரும்பிடலாம்ன்ற எண்ணம் தான் இப்போதைக்கு எனக்கு.. வேலை நிலவரம் குறித்து விசாரித்தப்போ, தனியாரிடத்திலே ஓரளவுக்கு இங்கிருப்பது போன்ற டெக்னாலஜி இருப்பதாக அறிந்தோம்.. ஆனால் பெற்றோர் இருக்குமிடத்திலே வேலை வாய்ப்பு saturated ஆக இருக்கும் என்று தோன்றுகிறது. வேறேங்காவதும் சிறிது காலம் வசிக்க நேரிடலாம்.. ம்ம்.. பார்ப்போம்..