"காமினி.. ஆர் யூ ஆல்ரைட்?" அருகில் வந்து, படுக்கையில் அமர்ந்து, மென்மையாக அவளது விரல்களைக் கையிலெடுத்தார் டாக்டர் பரந்தாமன்.
சென்னையின் புறநகர்ப் பகுதி ஒன்றில், ரியல் எஸ்டேட் பெரும்புள்ளிகளால் வளைத்துப் போடப்பட்டு, ‘காலனி’யாதிக்கம் பெற்று, ஆங்காங்கே ஒன்றிரண்டு வீடுகள் கட்டப்பட்டு, புதியதாக ஆனால் பாதியே பருவம் எய்தியிருந்தது அந்த இடம். அந்தப் பரப்பளவின் ஒரு சிறிய அங்கமாக, அருகிலிருக்கும் பெரு நகரத்தின் ஆரவாரத்தைப் பூச விருப்பமில்லாமல் இருந்தது அந்தச் சாலை. அதிகம் ஆள் நடமாட்டமில்லாத அந்தப் பகுதியில் பயணிக்கும் எவரின் கண்ணும் சாலையோரத்தில் அமைந்திருந்த அந்த வீட்டின் மீது படாமல் கடந்து போனதில்லை. இதை உணர்ந்தே அதன் அழகையும் தனித்தன்மையையும் உரிமையற்ற பார்வைகளிடம் இருந்து காக்கும் பொருட்டு சுற்றிலும் பசுமையைப் போர்த்திவிட்டிருந்தார் உருவாக்கியவர். அந்த வீட்டின் கீழ்நிலையில் அமைந்திருந்த பெரியதொரு படுக்கையறையினுள், சுழலும் நாற்காலி ஒன்றின் மீது சாய்ந்தமர்ந்தவாறு, கண்களை மூடிய நிலையில், நடப்பதை உள்வாங்கிக்கொண்டிருந்தான் சிவா. காமினி பேசட்டும் எனக் காத்திருந்தான்..
கண் விழித்த காமினி, விரல்களை விடுவித்து, கைகளை ஊன்றி கொஞ்சமாக எழுந்து, தலையணையை பின்னே நிறுத்தி வைத்து, அதன் மீது சாய்ந்தாள்.. மாஸ்க்கை கொஞ்சமாக கீழே இழுத்து விட்டுக் கொண்டாள். எதிரில் இருந்த டீவியின் செய்தி கேட்டதும், "அந்த டீவிய முதல்ல நிறுத்தித் தொலைங்க.." எரிந்து விழுந்தாள்.
'ரேஷன் கடை அரிசி மூட்டைகளுக்கு சாக்குப் பை...... ' ரிமோட்டைக் கையிலெடுத்து அறையை அமைதியாக்கினான் சிவா.
"வேற ஆளே கிடைக்கலையா உங்களுக்கு?" காமினியின் குரலில் அதிகமாகியிருந்தது எரிச்சல்.
"நம்பிக்கையான ஆளா இருக்கணும் காமினி.. அதுவுமில்லாம, தேடினா சிக்கிக்கிற மாதிரி இருக்கக்கூடாது.. உன்ன இங்க யாருக்கும் அவ்வளவாத் தெரியாது.. அதான்" காமினியின் கண்களை கூர்ந்து நோக்கியவாறு, நிதானமாகப் பேசினார் பரந்தாமன்.
"நேத்திக்கு வரைக்கும் சரின்னு தான சொன்ன? என்ன தான் பிரச்சனை இப்ப உனக்கு? எவ்வளவு ரிஸ்க்கான வேலை, விளைவுகள் எப்படியிருக்கும்ன்னு சொல்றப்பக் கூட மறுத்துப் பேசலையே நீ?" அதுவரை அமைதியாய் இருந்த சிவா பொறுமையிழந்து குரலை உயர்த்தினான்.
“மூச்சு திணறுது எனக்கு” சிவாவின் ஆளுமைக்கு முன் கொஞ்சம் அடங்கி ஒலித்தது காமினியின் குரல்.
“சிவா.. ம்ம்ம்..” அதே அமைதியான, ஆனால் உறுதியான குரலில் அவனைப் பின்னுக்குப் போகச் செய்தார் பரந்தாமன். “காமினி.. ஐ அண்டர்ஸ்டேண்ட்.. இது தான முதல் தடவை? போகப் போகச் சரியாகிடும். என்ன நம்பு.. யூ நீட் நாட் வொர்ரி அபவுட் திஸ்.. அதுவுமில்லாம, நினைச்ச மாதிரியே எல்லாம் நடந்தாத் தான் இதெல்லாம் தேவைப்படும்.. ப்ளான் சரியா நடக்க சான்ஸ் அம்பது பெர்சென்ட் தான்.. புரியுதா?"
எதுவும் பேச விருப்பமற்று தலையைத் திருப்பிக் கொண்டாள் காமினி.
“சிவா.. எனக்கு நேரமாச்சு.. இன்னும் மூணு நாள் தான் இருக்கு.. மீதி ஆட்களையும் தயார் பண்ணனும்.. லுக் காமினி.. சிவாக்கு இன்னைக்கு லீவ்.. இங்கதான் இருக்கப் போறான்.. கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடு.. அப்புறம் ப்ராக்டீஸ் பண்ணு.. நாளைக்குப் பார்க்கலாம்..” பேசிக்கொண்டே எழுந்தார் பரந்தாமன்.
“நீங்க போங்க சார்.. காமினிய நான் பாத்துக்கறேன்” எழுந்து விடை கொடுத்தான் சிவா..
அறையை விட்டு டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அகற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்.
“ஹே காமினி.. என்னதிது சின்னப்புள்ளத்தனமா? எதுவாயிருந்தாலும் பேசிக்கலாம் வா..” சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு கவனமாகக் குரலைத் தாழ்த்தியிருந்தான் சிவா.
அவள் எழ முயற்சிப்பதற்குள், சிவாவும் வெளியே குதித்தான். காமினியை அவனது பிடிக்குள் கொண்டு வர அதிக முயற்சி தேவைப்படவில்லை. ஜன்னல் வீட்டின் பின்புறமாக அமைக்கப்பட்டிருந்ததாலும், அந்நேரம் வீட்டை விட்டு வெளியே வந்து காரில் ஏறி அமர்ந்துகொண்டதாலும், இதன் பாதிப்பு ஏதுமில்லாமல் பரந்தாமன் ஆட்டோமேடிக் கேட்டின் வழியே வெளியேறிக் கொண்டிருந்தார்.
அவளது திமிறல் அதிகமாகவும், “ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை” என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா. சத்தம் கேட்டு யாரும் வந்து விடப் போகிறார்கள் என்ற கவலை அவனுக்கு.
“இந்த வேலையெல்லாம் எங்கிட்ட ஆகாது இன்ஸ்பெக்டர்..” அவனை முறைத்தவாறே துப்பாக்கியைத் தட்டி விட்டாள் காமினி.
“முதல்ல வீட்டுக்கு வா. உட்காந்து பேசுவோம்..” என்றான் சிவா புன்னகையுடன்.
******
வெள்ளிகிழமை மாலை.. மாநகரின் மையப்பகுதியிலிருந்த அந்த மருத்துவமனையின் அகண்ட வரவேற்புப் பகுதியில், உறவினர்கள் விட்டுச் சென்ற நிறங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு, மங்கலான மஞ்சள் வெளிச்சம் மட்டும் மிச்சமிருந்தது. எமர்ஜென்சி பிரிவில், மருத்துவர்களுக்கான அறையில், அவனது அம்மா அனுப்பியிருந்த புகைப்படங்களை சிப்ஸ் கொறித்தவாறே கணினியில் ஜூம் செய்து கொண்டிருந்தான் மகேஷ்.. கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு “எஸ்” என்றான். பதற்றத்துடன் உள்ளே வந்தாள் நர்ஸ் செல்லா... “டாக்டர்.. ஒரு எமர்ஜென்சி.. “
கணினியின் பக்கமிருந்த தன் முகத்தைத் திருப்பினான் மகேஷ்... “மேல சொல்லு”
“இருபது வயசு இருக்கும் டாக்டர்.. ரொம்ப ப்ரெத்லெஸ்சா இருக்கா.. இன்னைக்கு காலைல தான் ஆரம்பிச்சுதாம்.. அதிகமாகிக்கிட்டே போகுதாம்...” செல்லாவுக்கு மூச்சு வாங்கிக் கொண்டிருந்தது..
“எங்க இருக்காங்க?” அறையை விட்டு வெளியே வந்திருந்தான் மகேஷ்..
“ரூம்ல படுக்க வச்சிருக்கேன்.. ஆக்சிஜன் போயிட்டு இருக்கு.. பல்ஸ் அண்ட் பிபி நார்மல்..” பேசிக்கொண்டே மகேஷ் பின்னால் ஓடினாள் செல்லா.
அறைக்குள் நிலைமை ஓரளவுக்குச் சீராக இருப்பதைக் கண்டு, முதற் கட்ட பரிசோதனைகளை ஆரம்பித்தான் மகேஷ். “கூட யார் இருக்காங்க.. வரச் சொல்லு”
“நீங்க அவங்களுக்கு என்ன வேணும்?”
“அம்மா சார்..” என்றார் அந்தப் பெண்மணி அழுகையினூடே,.. “காலைல நல்லாத் தான் இருந்தா.. திடீர்னு ஆரம்பிச்சுது... ஒண்ணுமே புரியல..” பதற்றம், கலக்கம், குழப்பம், இயலாமை என எல்லாம் சேர்ந்து அவரது கண்களில் கண்ணீராக வழிந்து கொண்டிருந்தன..
“அழாதீங்கம்மா.. முதல்ல கண்ணத் துடைங்க.. உட்காந்து பேசுவோம்..” செல்லாவின் பக்கம் திரும்பி, “செல்லா.. நீ பக்கத்துலயே இரு.. அஞ்சு நிமிஷத்துக்கு ஒருதரம் வைட்டல்ஸ் செக் பண்ணு.. நான் இவங்க கூட பேசிட்டு வர்றேன்..”
வெளியே, கேள்விகள்.. விசும்பல்கள்... பதில்கள்... செல்லா கவலையுடன் தனது பேஷன்ட்டைப் பார்த்தவாறு அமர்ந்தாள்.. ரொம்பச் சின்னப்புள்ளையா இருக்கே.. அவளது மனம் சலனமுற்றிருந்தது..
சில நிமிடங்கள் கரைந்த பின் உள்ளே வந்தான் மகேஷ். “செல்லா.. முதல்ல செஸ்ட் எக்ஸ்ரே.. ஈசிஜி.. அப்புறம் இந்த பிளட் டெஸ்ட்ஸ் எல்லாம் அனுப்பிடு.. ஷீ இஸ் ஸ்டேபிள் நவ்.. ஆனா, மறுபடியும் எப்பவேனும்னாலும் மோசமாகலாம்.. நான் ஐஸியூக்கு கால் பண்ணி அங்க நிலைமை என்னன்னு கேக்கறேன்..”
திரும்பி வந்தான்.. “ஐசியூ ஒன்ல இடமில்லையாம்.. டூ க்கு ஷிப்ட் பண்ணனும்.. வார்ட்பாய்க்கு கால் பண்ணு..”
அடுத்தடுத்து அவன் கொடுத்த வேலைகளால் திணறிப் போனாள் செல்லா. டெஸ்ட் ஆர்டர்கள் அனுப்பிமுடித்து, வார்ட்பாய்க்கு போன் செய்யப் போகும் போது தான் அவன் கடைசியாகச் சொன்னது உறைத்தது.. “டூ க்கு எப்படி டாக்டர்? விஸ்வநாதன் சொல்லியிருக்காரே..”
“சொல்லியிருக்கார் தான்.. ஒன்ல இடமில்லைன்னு தான அங்க போறோம்? தப்பில்ல.. விஸ்வநாதன் ரெண்டு நாளைக்கு லீவு.. நாந்தான் இன்சார்ஜ்.. நான் முதல்ல டூ க்குப் போய் நேர்ல பார்த்து பேசிட்டு வரேன்.. கவனமா ஷிப்ட் பண்ணுவோம்.. இவளுக்கும் இன்னும் முழுசா நினைவு திரும்பல.. யாருக்கும் தொந்தரவு இருக்காது.. அப்புறம்.. இப்போதைக்கு ஆக்சிஜன்லயே இருக்கட்டும்.. தேவைப்பட்டா மத்த மெடிசின்ஸ் கொடுத்துக்கலாம்.. முழுசும் படுக்க வைக்க வேண்டாம்.. ரெண்டு தலையணை வைத்து லேசா சாய்ந்த மாதிரி இருக்கட்டும்.. க்விக்.. லெட் அஸ் நாட் வேஸ்ட் ஹெர் மினிட்ஸ்..”
**********
பரபரப்பெல்லாம் ஓய்ந்து போய் குறட்டைச் சத்தம் கேட்க ஆரம்பித்ததும், துளி வெளிச்சம் புகும் அளவுக்கு மட்டும் கண்ணைத் திறந்தாள் காமினி. எதிர் பெட்டில் இருப்பவர் குறட்டை விட்டவாறு தூங்கிக்கொண்டிருக்க, மறுபக்கம் நர்ஸ் டேபிள் மேல் தலையை வைத்து கண் அசந்திருந்தார். சுற்றிலும் மானிட்டர்கள் இயங்கிக் கொண்டிருந்தன.. கண்களை மூடிக் கொண்டாள்..
அதிகம் சத்தமெழுப்பாமல், இரவில் இருமுறை மகேஷ் ரவுண்ட்ஸ் வந்து போனான். அவளது சீரான மூச்சைக் கண்டு நிம்மதியடைந்தான். அவனது தொடுதலை உணர்ந்து, விழித்து, புன்னகைத்தாள் காமினி. அவனுக்கும் மனசு கேட்கவில்லை.. பாவம், சின்னப் பெண்.. விஸ்வநாதன் புரிந்து கொள்வார் என்று நம்பினான். ரிசல்ட்கள் அனைத்தும் நார்மலாக இருந்தன. அந்தத் தாயிடம் சொல்லி, அவளது பெருமூச்சில் பங்கெடுத்து, மனநிறைவு அடைய விரும்பினான்.
அடுத்த நாள் காலை விடிவதற்குள் தனிரூமுக்கு மாற்றப்பட்டு, மதியமே டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாள் காமினி. தாயானவள், இம்முறை ஆனந்தக் கண்ணீர் வடித்தாள்.
**********
“காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே” என்று பாராட்டினார் பரந்தாமன்.
“ம்ம்ம்.. இனிமே உங்க விஷப் பரீட்சையையெல்லாம் என்ன வச்சு எழுத வைக்காதீங்க.. இதோ நிக்கிறாரே சிவா.. இவர் போகட்டும்” கடுப்புடன் தன் காதிலிருந்த பெரிய வைரத் தோடுகளை கழற்றித் தந்தாள் காமினி.
“சிவா.. காமினி முதல்ல அமெரிக்கா கிளம்பட்டும்.. மீதி வேலைகளெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம்.. உன் உதவிக்கு ரொம்ப தேங்ஸ் சிவா.. உன்னோட ப்ளூ பிரிண்ட் இல்லாம எதுவும் நடந்திருக்காது..”
“உங்களுக்குத் தான் சார் நன்றி சொல்லணும்.. ரொம்ப சந்தோஷமா இருக்கு சார்..”
*******
நான்கு நாட்கள் கழித்து....
விடுமுறை நாட்களை இந்தியாவில் கழித்துவிட்டு ஊர் திரும்பியிருந்த காமினி, டல்லசில் தனது வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தாள். நடந்ததெல்லாம் மனதில் ஓடிக்கொண்டே இருந்தாலும், முன்பிருந்ததை விட வேகம் குறைந்திருந்தது. அப்பாவை நினைத்து ஒருபுறம் பெருமையாகவும் மறுபுறம் கவலையாகவும் இருந்தது. அவருக்கு எதுவும் ஆபத்து வந்து விடக் கூடாது என்று கடவுளை வேண்டிக் கொண்டாள். நினைவுகளில் சிவா வந்து போனான்.. கூட அவனது ஆளுமையும் நேர்மையும் வந்து போயின.. மகேஷ் வந்து போனான்.. கூட அவனது மென்மையும் கடமையுணர்வும்.. அப்பாவுக்காகவும் நாட்டுக்காகவும் துணிய வைத்த தனது பாசத்தையும் பற்றையும் நினைத்து அவளுக்கு பெருமையாக இருந்தது.
சிவா அன்று சந்தோஷமாக இருந்தான். கரையானரித்துப் போய் பெருச்சாளிகள் பலவற்றை தப்ப விட்டிருந்த அவனது டிபார்மெண்டின் ஓட்டைகளை, அதிகாரப்பூர்வமற்ற ‘டெல்டா.காம்’ இன் உதவியுடன் வெளிச்சத்துக்கு கொண்டு வந்ததை நினைத்து நினைத்து சந்தோஷப்பட்டான்.
மகேஷும் செல்லாவும் விஸ்வநாதனின் முன்பு நின்று கொண்டிருந்தார்கள்.. தங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லையென்றும், உயிர் காக்கவே அப்படிச் செய்ததாகவும் வாதாடிக் கொண்டிருந்தார்கள்.. மகேஷ் கலங்கியிருந்தான்.. செல்லா அழுது கொண்டிருந்தாள்..
பன்-டி-டிவியில், அன்று மட்டுமே நூற்றி எட்டாவது முறையாக, கவனமாக எடிட் செய்யப்பட்டிருந்த அந்த வீடியோ, ஒளிபரப்பாக்கிக் கொண்டிருந்தது.. 'ரேஷன் கடை அரிசி மூட்டைகளுக்கு சாக்குப் பை வழங்கியதில் ஊழல் புரிந்தததற்காக கைது செய்யப்பட்டு, மாரடைக்கிறது என்று கோர்ட்டில் மயங்கி விழுந்து, கப்பல்லோ ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகியிருந்த ஆளுங்கட்சி அமைச்சர் மெய்யப்பன், ஐசியூவில் உட்கார்ந்து மட்டன் பிரியாணியும், சிக்கன் 65 வும் தின்றுகொண்டிருக்க, நடுநடுவே காவல் துறை உயரதிகாரிகள் வந்து போய்க்கொண்டிருந்தனர்’
மாநில ஆளுங்கட்சிக்கு எதிராகப் படம்பிடிக்கப்பட்ட ஆதாரத்தை, மத்திய ஆளுங்கட்சியிடம் விலைபெற்று வழங்கி, தனது ஆட்சி-அதிகார ஆசைப் பேய்க்கு, பாசம்-நேர்மை-கடமையென, நல்லுணர்வுகளை இரையாக்கியிருந்த டெல்டா.காம் பரந்தாமன், சோபாவில் சாய்ந்தவாறு, பன்-டி-டிவி யில் நாட்டு நடப்பை அவதானித்துக் கொண்டிருந்தார்.. அவரிடத்தில் கொஞ்சம் நஞ்சம் மிச்சமிருந்த குற்றவுணர்வும், விஸ்கி க்ளாசினுள் ஐஸ்கட்டியாகக் கரைந்து கொண்டிருந்தது...
டிஸ்கி: கதையோட தலைப்புக்கும், இன்னைக்கு வந்திருக்கற தீர்ப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்ல..
பிகு:
இதுக்காக எழுதப்பட்ட ரெண்டு மூணு கதைகளைப் படிச்சதும், எனக்கும் ஆச வந்தது.. எழுதிட்டேன்.. "L" கதைன்றதால போட்டிக்கு அனுப்ப விருப்பமில்ல.. யாராச்சும், "பரவாயில்ல.. அந்தளவுக்கு மோசமில்ல.. சுமாரா இருக்கு.. அனுப்புங்க" ன்னு சொன்னா, அவங்க வீட்டுக்கு ஆட்டோ அனுப்பலாம்ன்னு இருக்கேன்..
அடுத்தவன் காரோட்டும் போது, அந்தப் பக்கமா போ.. இப்படித் திருப்புன்னு சொல்றது ஈஸி.. சொந்தமா முதல்ல கார்ல உட்காரும் போது தான் சிரமம் தெரியும்.. இங்கயும் அப்படித் தான்.. எழுதி முடிச்ச பின்னாடி, இதுக்கு முன்னாடி நிறைய கதைகளப் படிச்சு கேள்வி கேட்டு வச்சிருக்கோமே, நம்ம கதைலயும் அப்படி கேட்டுப் பாக்கலாம் ன்னு கேட்டா, ஏகப்பட்ட ஓட்டைஸ்.. என்னால கண்டு பிடிக்க முடிஞ்சதெல்லாம் கோந்து போட்டு ஒட்டிட்டேன்.. நீங்களும் கண்டுபிடிச்சு சொன்னா பரிசு உண்டு (ஆட்டோ இல்ல).. இலக்கணப் பிழை கணக்குல வராது.. இப்பவே சொல்லிட்டேன்..
அப்புறம், இந்தப் பொண்ணு அழகா இருந்ததால இந்தப் படத்த இணைச்சேன்.. கதைல வர்ற மாஸ்க் வேற..