12 November 2010

ஓர் எல்போர்ட் வண்டியோட்டுகிறது.. 2

முதல் பாகம் படிச்சு அசந்து (தூங்கிப்) போன எல்லாரையும் எழுப்ப, ஹாரன்.. ஹாங்.. ஹாங்.. ஹாங்..

எப்பிடியோ அடிச்சுப்பிடிச்சு, ஒரு learners permit வாங்கி, வண்டிக்கு வெளிய ஒரு எல் போர்ட மாட்டிட்டு, வண்டி ஓட்டப் பழகியாச்சு.. அடுத்தது, லைசென்ஸ்.. இங்க நம்ம ஊரு மாதிரி இல்ல.. அதுவும் நான் வசிக்கும் மாநிலம் இதற்கான பரிட்சைகள்ல கண்டிப்புக்குப் பெயர் போனது.. காரணம், நம்ம ஊர்ல இரண்டு சக்கர வாகனங்கள் மாதிரி, இங்க கார்கள் தான் முக்கியமான தரை வழிப் போக்குவரத்து.. பைக், சைக்கிள் - இதெல்லாம் இங்க ரொம்பவும் குறைவு.. அது மட்டுமில்லாம, இங்க சாலையில் கார்கள் போகும் வேகமும் மிக அதிகம்.. சாலை விதிகளுக்கு மிக முக்கியத்துவம் கொடுக்கும் நாடு இது.. எல்லாரும் விதிகளைப் பின்பற்றி ஓட்டிச் செல்லும் போது, ஒருத்தர் தவறு செய்தா, மற்றவருக்கு ஏற்படும் பாதிப்பு ரொம்பவே அதிகம்.. ஒரு நபருக்கு லைசென்ஸ் கொடுக்கும் போதே அவரது திறனை நன்றாகப் பரிசோதனை செய்து தான் கொடுக்கறாங்க.. அப்பிடியும், குடி, மித மிஞ்சிய வேகம், கவனக்குறைவு மற்றும் இன்னும் பிற காரணங்களால விபத்து நடந்துட்டுத் தான் இருக்குது.. :((

லைசென்ஸ் பரிட்சைக்கு ஆதிரேயனே தேதி எடுத்துக் கொடுத்துட்டார்.. அதுலயும், நாங்க விவரமா, எளிதான சாலைகள் இருக்கும் பகுதியில நடக்கற மாதிரி வேணும்ன்னு கேட்டிருந்தோம்.. பரிட்சை அன்னைக்கு, நானும் ஆதியும் கிளம்பிப் போனோம்.. பரிட்சைக்கு முன்னாடி, பக்கத்துல ஒரு இடத்துல, ஒரு மணி நேரம் கூடுதல் பயிற்சி வேற.. ஆதி கூட வந்தது, மன ரீதியா நல்ல தெம்பா இருந்தது..

கிட்டத்தட்ட ஒரு மாசத்துக்கு மேல பயிற்சி எடுத்திருந்தாலும், மனசளவில, எனக்கு என்னமோ நம்பிக்கை குறைச்சலாவே இருந்தது.. அதுக்கு பல பல காரணங்கள்.. எதைச் சொல்ல எதை விட.. ஆனா, வாங்கியே ஆகணும்ன்ற கட்டாயம் இருந்தது.. ஏன்னா, அடுத்த ரெண்டு மாசத்துல என்னோட வேலை/கல்வி தொடங்கறதா இருந்தது.. வண்டி இல்லாட்டி கஷ்டமாப் போயிடும்..

இங்க பரீட்சைக்குன்னு தனி மைதானம் இல்ல.. எல்லாரும் உபயோகிக்கும் சாலை தான்.. பத்து-பதினைந்து நிமிஷம் தான் சோதனை நடக்கும்.. அதுக்குள்ள அவங்க சொல்ற மாதிரி நிறுத்தி, திருப்பி, சரியா ஓட்டிக் காமிக்கணும்.. ஒரே நாளைல நிறைய பேர் பரீட்சை எடுக்கறதால, பரிசோதகர்களும் சட்டுன்னு முடிவு பண்ணிடுவாங்க..  என்னோட முறை வந்தது.. என்னைப் பரிசோதிக்க வந்த அம்மா, வண்டியில ஏறும் போதே உர்ருன்னு இருந்தாங்க.. வண்டிய எடுத்தவுடனே முதல் குட்டு விழுந்தது.. வேகமாப் போ, பின்னாடி வர்ற வண்டிகளுக்கு இடைஞ்சலா இருக்கேன்னு.. அதுக்கப்புறம் அவங்க சொன்ன மாதிரி சரியாகத் தான் செஞ்சேன்.. ஆனா அவங்களோட ஆட்டிட்யூட் என்னை உதற வச்சிட்டே இருந்தது.. ஒவ்வொரு கட்டளைக்கும் உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் தான்.. கடைசியா, parallel parking.. இதை ஆதி மற்றும் ஆதிரேயன் கூட நல்லாத் தான் பழகியிருந்தேன்.. ஆனா, அந்த இடத்துல, பதற்றத்துல தப்பா செய்துட்டேன்.. உடனே தலைய இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் ஆட்டி, முகத்த சுளிச்சு, உதட்டப் பிதுக்கி (மறுபடியும், ஆட்டிட்யூட்), நீ தேறாத கேஸ் அப்பிடின்னு சொல்லாம சொல்லிக் காமிச்சாங்க..

எனக்காக ஆதி காத்திருந்தார் - என்ன பாஸா ன்னு சந்தோஷமான முகத்தோட.. அவரப் பாத்ததும் தான் கண் கலங்க ஆரம்பிச்சது.. தேறாம போனதுக்காக இல்ல.. நீயெல்லாம் தேறவே மாட்டே அப்பிடின்னு அந்தம்மா சொன்ன மாதிரி இருந்தது.. எம் முகத்தைப் பாத்துட்டு ஒண்ணும் சொல்லாம வண்டியைக் கிளப்பினார் ஆதி.. என்னால கட்டுப்படுத்தவே முடியல.. கண்ணுல இருந்து கொட்டுது.. அவரும் பாத்துட்டு, என்ன ஏதுன்னு கேக்காம, ஒரு டிஷ்யூ மட்டும் எடுத்துக் கொடுத்தார்... துடைச்சிட்டு, ரங்ஸ் க்கு போனப் போட்டு, மறுபடியும், ஹிஹி.. இப்ப நினைச்சா சிப்பு சிப்பா வருது.. :))

திரும்பிப் போகும் போது, ஆதி தன்னோட மனைவியோட கதையச் சொன்னார்.. அவங்களுக்கு சின்ன வயசுல ஏற்பட்ட ஒரு விபத்து மனசுல ஆழமா பதிஞ்சிருந்ததால ஓட்ட முடியாம சிரமப்பட்டதச் சொன்னார்.. அப்பத் தான் நானும் வாயத் திறந்து என்னோட கஷ்டங்களைச் சொன்னேன்.. அதை அவர் புரிஞ்சுகிட்டதே அந்த நேரத்துக்கு மிகப் பெரிய ஆறுதலா இருந்தது..

........................................  Intermission ......................................

அடுத்த பரீட்சைக்கு தேதி உடனடியா கிடைக்காததால, ரயில்வே ஸ்டேஷனுக்கு எதிராவே வீடு எடுத்துட்டோம்.. எல்போர்டுக்கு கண்டபடி ரோஷம் வந்துடுச்சு.. அதனால சுமார் ஆறேழு மாசம் மாதிரி, வண்டிய ஒரு வாட்டி கூட ஓட்டிப் பாக்கல.. ஒரு வழியா சமாதானம் ஆகி, ஒரு கிறிஸ்மஸ் விடுமுறைல (ஒரு வாரம் கிடைத்தது) தேதி எடுக்கச் சொல்லி, ரங்ஸ் கிட்டச் சொல்லியிருந்தேன்.. விடுமுறைக்கு முன்னால வேற ஊர்ல இருந்து வந்து, ஓட்டிப் பழகனும்.. நான் சனிக்கிழமை மாதிரி வந்து இறங்கி, வியாழக்கிழமை மாதிரி பரிட்சைக்கு தேதி எடுத்தா, அஞ்சு நாளு இருக்கும் நடுவுல, மறுபடியும் பழகிக்கலாம்ன்னு யோசிச்சு வச்சிருந்தேன்.. ரங்ஸ் போன் பண்ணி, திங்கக் கிழமை தான் தேதி கிடைச்சது, எடுத்துட்டேன்னார்.. அவ்வ்வ்வ்வ்வ்வ்.. மறுபடியும் கொட்டுது.. எதுக்கா? எனக்கெதிரா எல்லாருமாச் சேர்ந்து சதி பண்றீங்கன்னு :)) இந்த வாட்டி யாரும் பக்கத்துல இல்ல டிஷ்யூ தர.. வீட்டுல டிஷ்யூவும் இல்ல.. நானே கையால தொடச்சிகிட்டேன்.. ஒரு மாசமா ஓட்டு ஓட்டுன்னு ஓட்டியே ஆப்பு தான் கிடைச்சது, ரெண்டே நாள்ல என்னத்தக் கிழிக்க?

சனிக்கிழமை காலை, நான் வரல, மறுபடியும் அவமானப்பட என்னால முடியாதுன்னுட்டேன்..  எப்பிடியோ தேறி, மதியம் மாதிரி ஓட்ட ஆரம்பிச்சா, பனித்தூறல் வேற கூடவே ஆரம்பிக்குது.. எனக்குச் சுத்தமா நம்பிக்கை இல்ல.. இருந்தாலும் பரவாயில்லன்னு ரங்ஸ் கூட்டிட்டுப் போனார்.. அதே cemetry.. வேண்டா வெறுப்பா அங்க சுமார் ஒரு நிமிஷம் ஓட்டினேன்.. என்னத்தச் சொல்ல? பழைய மாதிரி ஓட்ட வந்துட்டது.. மறுபடியும் அங்க வச்சே நம்பிக்கை வந்தது.. ரொம்ப நேரம் ஓட்டினோம்..  ஞாயிறும் தொடர்ந்து பயிற்சி.. இந்த வாட்டி parallel parking பண்ணும் போது, அடுத்தடுத்த sequential steps சை சரியாக நினைவில் வைக்க, ஒரு சுலபமான வரிசையை நானே மனசுல உருவாக்கிட்டேன்.. இப்படிச் செய்தது, ஒவ்வொரு முறையும் மிகவும் உதவியாக இருந்தது..

திங்கக்கிழமை.. இந்த வாட்டி ஆதிரேயன் கூடப் போனேன்.. அதே ஒரு மணி நேரப் பயிற்சி.. அதே இடத்துக்குப் போனோம்.. இந்த வாட்டி ஒரு இளம் கறுப்பினப் பெண் வந்தார்.. சிரித்த முகம்.. ஒரு பட்சி உள்ள பறந்தது.. முயற்சித்துத் தான் பார்ப்போமேன்னு.. சரியாக வந்தது எல்லாமே.. ஒரு இடத்துல திருத்தம் சொல்லும் போது கூட, குண இனமாகச் (ஊர்ப் பதம்.. in gentle tone ன்ற மாதிரி) சொன்னார்.. இப்பிடிச் செய்திருக்கனும்ன்னு.. மறுபடியும் parallel parking.. ஏற்கனவே மனசுல வரிசைப் படுத்தி இருந்த மாதிரி சரியாகச் செய்தேன்.. என்ன, கொஞ்சம் தள்ளி வந்தது.. சரி, மறுபடியும் பண்ணிப் பார்க்கலாமேன்னு சொன்னார் (மறுபடியும்.. in gentle tone).. செய்தாச்சு..

ஒரு மாசமா ஓட்டிக் கிடைக்காத லைசென்ஸ், ரெண்டே நாள்ல கிடைத்து விட்டது.. என்னத்தச் சொல்ல? அந்தப் பெண் இல்லாட்டி கிடைத்திருக்காதுன்னு நினைக்கறேன்.. அவங்களுக்கு, அவங்களோட மென்மையான அணுகுமுறைக்கு, மானசீகமா ஒரு நன்றி.. ஆதிரேயன் கூடத் தான் வந்திருந்தேன்..  திரும்பிப் போகும் போது, அந்த இடத்துல ஆதியும் நின்றிருந்தார்.. வேறொரு ஆளைக் கூட்டி வந்திருந்தார்.. அவர்கிட்ட ஓடிப் போயி சந்தோஷத்தப் பகிர்ந்துகிட்டு வந்தேன்..

என்ன, ரங்ஸ்சால தான் நம்பவே முடியல.. ஹாஹ்ஹா..

 ........................................  சுபம் ......................................

இதைத் தொடர இலாவையும் (வானதி கிட்ட இவங்களும் அடம் பண்ணினாங்க), ஹூசைனம்மாவையும் (தனக்கும் ஒரு இனிய எல்போர்ட் காலம் இருந்ததாகச் சொன்னாங்க) அழைக்கிறேன்.. நேரம் இருக்கும் போது தொடருங்க.. நன்றி.. 

19 comments:

  1. நீங்க என்னா EQ 100 க்கு மேலயா? அருமையா எழுதி இருக்கீங்க! நீங்களாவது ஒரு எல்போர்டு, நானு 4 எல்போர்டு :))))

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  2. ;) அப்பாடா! சந்தோஷமா இருக்கு. ;)

    ReplyDelete
  3. ஏன் முதல் பதிவிற்கும் இரண்டாவதிற்கும் இவ்வளவு பெரிய இடைவெளி... முதல் பாகத்திற்கான இணைப்பை இந்த பாகத்தில் கொடுக்கவும்...

    ReplyDelete
  4. சந்தூ, நல்ல சுவாரஸ்யமா இருக்கு படிக்க.
    // எல்போர்டுக்கு கண்டபடி ரோஷம் வந்துடுச்சு.. அதனால சுமார் ஆறேழு மாசம் மாதிரி, //

    உங்கள் ரோஷம் வந்த லைன் சூப்பர். நான் முதல் தடவை பெஸில் ஆனப்போ இன்னும் தீவிரமா ஓடிப்பழகினேன். இப்ப நிறைய ரூல்ஸ் இருக்கு போல. நான் எடுத்த போது இப்படி எல்லாம் கிடையாது. முக்கியமா அப்பாயின்மென்ட் கிடையாது. walk in மாதிரி தான் இருந்திச்சு. இப்ப நிறைய மாற்றங்கள்.
    நல்லா ரசிச்சேன்.

    ReplyDelete
  5. ஊரில மக்கள் எல் எல் ஆர் போட்டுட்டே வண்டி ஓட்டுறானுங்க .. இங்கதான் இவ்வளோ கஷ்டம் ...!!

    சந்தோஷமான விஷயத்தை சோகமா சொல்றீங்க .பயப்பட வேனாம் ஸ்வீட் கேக்க மாட்டோம் ஹா..ஹா..

    ReplyDelete
  6. இதுல இருந்து ரெண்டு விஷயம் கத்துகிட்டேன்!

    ReplyDelete
  7. அட பரவால்லையே, ரெண்டே டெஸ்டுல வாங்கிட்டீங்களே!! நானெல்லாம்... ஹூம் அந்தக் கதையக் கேக்காதீங்க, எழுதுறதாவும் இல்லை.

    ReplyDelete
  8. நன்றி ஹைஸ்.. EQ என்றால் என்னவென்று தேடித் தெரிந்து கொண்டேன்.. நன்றி.. எனக்கு அது ரொம்பக் குறைவுன்னே தோணுது.. இல்லாட்டி முதல் வாட்டி அவங்க ஆட்டிட்யூட் கண்டு உதறிப் போயிருக்க மாட்டேன்.. :)

    ReplyDelete
  9. க்கும்.. சந்தோஷம் எதுக்கு இமா? இப்போ மறுபடியும் ஓட்டறதை விட்டாச்சு.. :) வீடு கிட்டக்கவே இருப்பதால்.. மறுபடியும் ஓட்டிப் பழகனும்..

    ReplyDelete
  10. இதுல லிங்க் கொடுத்திருக்கேன்.. முதல் பாகம் என்னும் வார்த்தைகளில் உள்ளது..

    இதை எழுதலாம்ன்னு உட்கார்ந்தா, அலைபாய்ந்து, இதற்கு முந்தைய இரண்டு பதிவுகளை எழுதிவிட்டேன்.. அதான்.. நன்றி..

    ReplyDelete
  11. வானதி.. இப்போ முன் கூட்டியே அப்பாயின்ட்மென்ட் எடுப்பது தேவையாயிருக்குன்னு தான் நினைக்கறேன்.. இரண்டு முறையுமே பயிற்சியாளரே எடுத்து விட்டார்..

    அந்த ரோஷம் சூழ்நிலையால வந்தது.. உடனே தேதி இருந்திருந்தா எடுத்திருப்பேன்.. தேதி கிடைக்கலைன்ன வுடனே விட்டுட்டேன்..

    ReplyDelete
  12. வண்டி learners permit வச்சுட்டே ஓட்டலாம்.. ஆனா, கூட லைசன்ஸ் வாங்குன ஒருத்தர் அமர்ந்திருக்கணும்.. விதிமுறைகள் கண்டிப்பா இருக்கறது தான் எல்லோருக்கும் நல்லது..

    சந்தோஷம் தான்.. வாங்கி முடித்து கிட்டத்தட்ட ஒரு வருஷம் ஆகப் போகுது.. அதான் ரொம்பவும் துள்ளல :)

    ReplyDelete
  13. என்ன கத்துகிட்டீங்க ன்னு தெரியல வசந்த்.. உபயோகமா இருந்திருந்தா, நன்றி..

    ReplyDelete
  14. அவ்வவ்.. நான் வாங்கினதுல, கொடுத்தவங்களுக்கும் சரி பங்கு இருக்கிறது ஹூசைனம்மா.. அவங்க நல்ல மூட்ல இருந்தாங்க அன்னைக்கு..

    ReplyDelete
  15. இமா. பாத்துட்டேன்.. நன்றி.. ட்ரையல் அங்கிக்கே போடுங்கோ.. ஒன்று மட்டும் தான்னு சொல்லி மனச உடைச்சிட்டீங்கோ.. இட்ஸ் ஓகை :)

    ReplyDelete
  16. ;) tkz. பார்த்துட்டே இருந்தேன். பதில் வந்தாச்சு. உடைஞ்சதை ஒட்டிக்கோங்கோ. 1 வாபஸ். ;)

    ReplyDelete
  17. ஒரு வழியா ரெண்டாவது முறையிலயே லைசென்ஸ் வாங்கிட்டீங்க. எனக்குத்தான் இன்னும் ஃபோபியா போகலை. ஏதாச்சும் டிப்ஸ்?!

    ReplyDelete
  18. கவி.. போபியா போக ஒரே வழி, ஓட்டித் தீக்கறது தான் (பெற்றோலச் சொன்னேன் :) )

    அங்க என்ன ரூல்ன்னு தெரியலையே? எந்தப் பக்கம் உட்கார்ந்து ஓட்டுவாங்க? பொதுவா சொல்றதுன்னா.. கண்டிப்பா முதல் கொஞ்சம் நாட்கள் சிரமமாத்தான் இருக்கும்.. ஆனா போகப் போக நாமளே ஜட்ஜ் பண்ணிப் பழகிடலாம்.. சைக்கிள் ஓட்டறத விட ஈசி தான் கவி :)

    ReplyDelete

பழைய வரிய மாத்தச் சொல்லீட்டாங்க.. இப்ப புதுசு “என்ன சொல்லனும்னாலும் தெகிரியமா சொல்லிட்டுப் போங்க” :)