29 October 2010

ஓர் எல்போர்ட் வண்டியோட்டுகிறது..

தலைப்பு எப்பூடி? சும்மா கவித மாதிரி இல்ல? ஓர் ஓடம் நதியாகிறது அப்படின்ற படத்தலைப்போட பாதிப்புல இ(சு)ட்டது.. (தமிழ்ப்படந்தான், டிவில எப்பவோ பாத்து பிடிச்சுப் போனது..) வானதி கிட்ட அடம் பண்ணி, கேட்டு வாங்குன தொடர் பதிவு..

எல்போர்டு வண்டியோட்ட பட்ட சிரமத்த விட, எல்போர்டு எல்போர்டாக பட்டச் சிரமந்தான் அதிகம்.. கதையச் சொல்றதுக்கு முன்னாடி, திரு. எக்ஸ் ஐப் பத்தி ஒத்த வரி அறிமுகம்.. தன்னப்பத்தி ப்ளாக்ல எதுவும் எழுதவேண்டாம்ன்னு வூட்டுக்காரர் சொல்லியிருக்கறதால, அவரப் பத்தி எதுவும் எழுதல, திரு. எக்ஸ் ஐப் பத்தி மட்டுந்தான் இங்க எழுதியிருக்கிறேன்னு இப்பவே சொல்லிப்போடறேன்.. :)

இங்க learner's permit (இது எல்போர்டா ஆவறதுக்கான லைசென்ஸ்) ஒரு முக்கியமான அடையாளச் சீட்டு.. ரெண்டு மூணு உறுதியான அடையாளச்சீட்டுக்கள் இருந்தாத்தான் பெர்மிட்டே கிடைக்கும்.. இந்த நாட்டுக்கு வேலைக்கான விசால வர்றவங்களுக்கு பிரச்சன எதுவும் இல்ல.. நாம யாரு.. கண்ணாலந்தான் கட்டிக்கிட்டு ஓடி வந்தவங்களாச்சே... அதனால, லொட்டு லொசுக்குன்னு பல அடையாளங்கள தேத்தோனும்.. இதுக்கோசரமே, வங்கியில கணக்கு ஆரம்பிச்சு, ரெண்டு வங்கிக்கணக்கு, இன்சூரன்ஸ், பாஸ்போர்ட், அது போவ இன்னும் ஒன்னோ ரெண்டோ..  எல்லாஞ் சேத்தி (அதுக்கே ஒரு வருஷமாயிப் போச்சு), ஒரு மஞ்சப் பையில போட்டு எடுத்துக்கிட்டு பஸ்ஸப் புடிச்சு தெகிரியமா ஒரு நா அந்த அலுவலகத்துக்குப் போயி நின்னா..  :(

எல்லாம் சரிதான், ஆனா இன்சூரன்ஸ் கார்டுல உன் நடு இனிசியல் வரல, அதனால செல்லுபடியாவாதுன்னு சொல்லிப்போட்டாங்க.. இந்த நாட்டுக்கு வந்ததுல இருந்தே பொழப்பு நாசமாத் தான் போயிக் கெடக்கு.. நமக்கு வாழ்க்கையே இனி அம்புட்டுத்தான் அப்பிடின்னு கண் கலங்க திரும்புனேன்.. அப்பப் பாத்து இன்னோரு அம்மா திரும்பவுங் கூப்புட்டு, இந்தா கண்ணு, போனாப் போவுதுன்னு உன்னைய ஏத்துக்கறோம்ன்னு பெரிய மனசு பண்ணி சொல்லிட்டாங்க.. பெர்மிட்டும் கிடைச்சுது..

முதன்முதல்ல ஓட்டுனது, எக்ஸ் சோட அலுவலகத்துல இருக்கற கார் பார்க்கிங்ல.. நாமளே முயற்சி பண்ணிப்பாக்கலாம் அப்பிடின்னு கூட்டிட்டு போனாரு.. கேஸ் பெடல (அக்சலறேட்டர்)  ஒரு அமுக்கு அமுக்கி, சும்மா விர்ருன்னு கிளம்பி, இன்னொரு கார் பின்னாடி ரொம்ப பக்கத்துல போயி, சடாருன்னு ப்ரேக்கப் போட்டு நிறுத்துனேன்.. திரும்பிப் பாத்தா, எக்ஸ் நெஞ்சைப் பிடிச்சிகிட்டு பேச்சு மூச்சில்லாம உட்கார்ந்திருந்தார்..

அதுக்கப்புறம், பயிற்சி ஆட்களோட, அவங்க கார்கள்ல சில மணி நேரங்கள் கடுமையான பயிற்சி.. ரெண்டு பேரு வந்தாங்க; ஆதிரேயன் - இவர் பெரியவர்.. இவர் தான் பயிற்சிப் பள்ளி முதலாளி.. சொல்லிக் கொடுக்கறதும் கண்டிப்போட இருக்கும்.. பயந்து பயந்து ஓட்டுவேன்.. தான் சொன்ன மாதிரி சரியாகச் செய்யணும்ன்னு எதிர்பார்ப்பார்.. டூ வீலர் ஓட்டியிருக்கேன்னு சொல்லற, அதைய விட இது எளிதானது தான்னு சொன்னார்..  இவர் கூட ஓட்டுன வரைக்கும் நம்பிக்கையே வரல..

ரெண்டாவது - ஆதி.. இவர் நம்ம வயசுக்காரர்.. அதனால பயிற்சி ரொம்பவே இயல்பா இருக்கும்.. இப்போதைக்கு நான் சொல்ற மாதிரி ஓட்டு, நாளாக ஆக நீயே உனக்குன்னு ஒரு ஸ்டைல்ல (?!) ஓட்டுவ, அப்படிம்பார்.. எனக்கு பிரச்சனையே, வேகமாப் போக பயப்படறது தான்.. பின்னாடி வர்றவங்க எல்லாம் பொறுமையிழந்து போயி ஹாரன் அடிப்பாங்க.. ஒரு நாள் ரொம்ப நொந்து போய்ச் சொன்னார் - உன்னைய நம்பி நான் என் வாழ்க்கையவே பணயம் வச்சு இந்தக் கார்ல உட்கார்ந்திருக்கேன், நீயும் பதிலுக்கு என்னைய நம்பி தெகிரியமா ஓட்டனும்..

அதுக்கப்புறம் நிலைமை கொஞ்சம் சுமாராச்சு.. ஒருக்கா, இறக்கத்துல (downhill) போறப்ப, யாராயிருந்தாலும் தன்னிச்சையா இந்த இடத்துல ப்ரேக் போட்டிருப்பாங்களே, உனக்கு அது தோணலையா ன்னு ஆதிரேயன் கேட்டார்.. நாமல்லாம் யாரு?! கஷ்டப்பட்டு பெடல மிதிச்சு, மேடேறி, மேடு தாண்டினதும் வர்ற இறக்கத்துல, ரெண்டு கையையும் விட்டுட்டு சும்மா சல்லுன்னு சைக்கிள்ல போனவங்களாச்சே.. நமக்கெல்லாம் அது தன்னிச்சையா வராதுன்னு சொல்லிட்டேன்.. இந்த வெத்துப் பெருமைக்கெல்லாம் குறைச்சலே இல்ல!

இதெல்லாம் கொஞ்சம் மணி நேரங்கள் தான், பத்தாதுன்னு, எக்ஸ் சொன்னாரு.. எல்போர்டா இருக்கற வரைக்கும் தனியா ஓட்டக் கூடாது; அதனால அவரு கூட எங்கயாச்சும் போயி நல்லா பழகனும்.. எங்க போக? அப்பத்தான் இந்த எல்போர்ட் மண்டையில ஒரு "பயங்கரமான" யோசனை உதிச்சது.. நம்ம வீட்டுப் பக்கத்துல ஒரு cemetry இருக்கே (அர்த்தம் தெரியாதவங்க தேடிப் பிடிச்சு படிச்சுக்கோங்க :) ), அங்க போனா "யாருக்கும்" எந்தப் பிரச்சனையும் இருக்காதேன்னு! சும்மா சொல்லக் கூடாது.. நெறைய ரோடுங்க, குறுக்கும் நெடுக்குமா போட்டு வச்சிருந்தாங்க.. அந்தப்பக்கம் இந்தப்பக்கம்ன்னு திருப்பிப் பழகறதுக்கு ரொம்பவே உபயோகமா இருந்தது.. எப்பவாச்சும் ஒருக்காத் தான் ஏதாவது வண்டி கண்ணுல படும்.. மீதி நேரமெல்லாம் எங்க ராஜ்ஜியம் "மட்டுந்" தான்.. அங்க பல மணிநேரங்கள் ஓட்டின பிறகு, வாழ்க்கையில கொஞ்சம் நம்பிக்க வந்தது (?!)..

எங்க வீட்டுல இருந்து கொஞ்சம் தொலைவுல, நல்ல இயற்கை வளத்தோட, ரெண்டு பக்கமும் அடர்ந்த மரங்களோட, லேசான வலைவுகளோட, பாதைகள் உண்டு.. இங்க கொஞ்சம் நேரம் ஓட்டிப் பழகினேன்.. மழை லேசாத் தூறும் போது, இந்த மாதிரி இடத்துல, வேற யாராவது வண்டி ஓட்ட, உட்கார்ந்து பாட்டு கேட்டுக்கிட்டு வர்றது, சுகமான அனுபவம் - அப்படின்னு எக்ஸ் சார்பா நானே சொல்லிக்கறேன்.. என்ன, அப்பப்ப எதிர்தாப்புல வர்ற சிக்னல், ஸ்டாப் சைன் - இதெல்லாம் கவனமாப் பாத்து சொல்லிக்கிட்டே வரணும் :))


பிகு: கார்ல பயிற்சி ஆரம்பிக்கறதுக்கு முன்னால, பயிற்சிப் பள்ளில,  சாலை விதிகள் பத்தின வகுப்பு நடந்தது.. ஆதிரேயன் தான் சொல்லிக் கொடுத்தார்.. எல்லா நாடுகள்லயும், ஸ்டாப் சைன், ஓரளவுக்கு ஒரே மாதிரி தான் இருக்கும் அப்பிடின்னு சொல்லிட்டு, வெளிநாட்டு ஆளுங்க ரெண்டு மூணு பேர எழுப்பிவிட்டு, சொன்னது சரிதானன்னு கேட்டார்.. என் போதாத நேரம், என்னையும் எழுப்பி விட்டுட்டார்..  எங்க நாட்டுல நான் ஸ்டாப் சைனையே பாத்ததில்ல அப்பிடின்னு ஒரே போடாப் போட்டேன்.. கொஞ்சம் நேரம் விவாதம் பண்ணுனார் - அதில்லாம எப்படின்னு.. அப்பிடித் தான், வேணும்னா நீங்களே வந்து பாத்துக்கோங்கன்னு சொல்லிட்டு உட்கார்ந்துட்டேன்.. நீங்க யாரும் பாத்திருக்கீங்களா?

ஆவ்.. சொல்ல மறந்துட்டேன்.. இன்னொரு பாகம் இருக்கு! என்ன  செய்ய? பேச ஆரம்பிச்சா நிறுத்த முடியறதே இல்ல! 

27 October 2010

இவர்களைக் காணவில்லை!!
மிஸ் பண்றோம் பூஸ்!


டோரா இக்கத்த (இடுப்பு) விட்டு இறங்க முடியலையோ?


ம.பொ.ர? விமானம் எப்பிடி ஓட்டறதுன்னு திரும்பி உட்கார்ந்து படிச்சிட்டு இருக்காரோ!!

24 October 2010

உணவு, காதல்

நேற்று முன் தினம்.. ஆஷா, எங்க அலுவலகத்தில் வேலை/படிப்பு கற்கும் ஒரு சக பணியாளர்.. இவர், புலம் பெயர்ந்ததொரு இந்தியப் பெற்றோருக்கு, அமெரிக்காவில் பிறந்து, இங்கேயே வளர்ந்தவர்.. பெற்றோரின் பூர்வீகம் வட இந்தியா..  ஒன்றிரண்டு வருடங்களுக்கு ஒரு முறை அங்கு சென்று வருவது வழக்கம்..  வெள்ளி மாலை, வழக்கத்துக்குப் புறம்பாக, வேலை குறைவாக இருந்தது.. மெதுவாகப் பேச ஆரம்பித்தோம்..

நான் தமிழர் என்றதும் அவர் என்னிடம் முதலில் கேட்டது, இட்லி செய்யும் வித்தை :).. பின், அவரவர் கல்வி, குடும்பம் என, பேச்சு நீண்டது.. அவர் இன்னும் திருமணமாகாதவர்.. பையன் தேடிக் கொண்டிருக்கிறார்.. அதுக்கென்ன, சீக்கிரம் கிடைச்சிடுவான் என்று சொல்லிக் கொண்டிருந்தேன்.. எனக்கென்னமோ அப்படித் தோன்றவில்லை என்றார்.. ஏன் என்று கேட்டதற்கு, அவர் சொன்ன காரணம், உணவுப் பழக்கம்.. சைவம் என்பதையும் தாண்டி.. VEGAN என்பார்கள் ஆங்கிலத்தில்.. அதாவது, பால், தயிர், முட்டை, சீஸ் இதெல்லாம் கூட சாப்பிட மாட்டாராம்.. எனக்கு கொஞ்சம் தலை சுற்றித் தான் போனது.. முட்டை சாப்பிட மாட்டாரெனில், இங்கு விக்கும் ரொட்டிகள் கூட சாப்பிட முடியாது.. ஒரு பீட்சா கூட.. முட்டை கலக்காமலும் ரொட்டிகள் செய்கிறார்கள், அந்த பிராண்டை தெரிந்து வைத்துக் கொண்டால் எளிது தான் என்றார்.. தினமும் தனக்கென்று சமைத்து தான் சாப்பிடுகிறார்..

அமெரிக்காவில், பொதுவாக, அசைவ உணவுப் பிரியர்களே அதிகம்.. நிறைய பேர் தினமும் அசைவம் உண்கிறார்கள்.. இங்கு பிறந்து வளரும் இந்தியக் குழந்தைகளும், பொதுவாக, எல்லா வகை அசைவமும் (சிக்கன், போர்க், பீப், டர்கி) உண்பதைக் கண்டிருக்கிறேன்... இதற்கு சில விதிவிலக்குகளையும் கண்டிருக்கிறேன்..

சரி, மறுபடியும் கதைக்கு வருவோம்.. முதலில் சைவம் சாப்பிடுபவர் மட்டுமே துணையாக வேண்டும் என்று நினைத்ததாகவும், இப்பொழுது தன்னுடைய எதிர்பார்ப்பினை கொஞ்சம் தளர்த்திக் கொண்டதாகவும் சொன்னார்.. இருவகை உணவுகளுக்கும் ஒரே பாத்திரங்களைப் புழங்கினால் ஒத்துக் கொள்ள முடியுமா என்றேன்.. வேறு வழியில்லை என்றார்.. சைவ உணவு சாப்பிடுபவரே ஆனாலும், கொஞ்சம் பேர் flexible ஆக இருப்பார்கள்.. அவர்களுடைய பாத்திரங்களில் அசைவம் சமைத்தாலும் ஒன்றும் சொல்ல மாட்டார்கள்.. எங்கள் தோழி அறையில், அவரது கட்டில் மேலேயே வைத்து அசைவம் சாப்பிட்டு இருக்கிறோம் (அவர் இருக்கும் போது தான் :) ).. ஆனால், கொஞ்சம் பேருக்கு இதெல்லாம் பார்த்தாலே அருவருப்பாக இருக்கும்..

இதையெல்லாம் யோசித்திருந்தாலும், நம்ம ஆட்களில், சைவ-அசைவ ஜோடிகள் கொஞ்சம் பேரைக் கண்டிருப்பதால், நான் பாட்டுக்கு, அதெல்லாம் பிரச்சனையாகாது, அசைவ உணவுப் பழக்கம் இருந்தாலும், பையனைப் பிடித்திருந்தால் ஒத்துக்கொள் என்று சொல்லியிருந்தேன்.. என் எண்ணத்துக்கு நேர்மாறாக வந்து விழுந்தது, இன்று ஆனந்த விகடனில் நான் படித்த ஒரு கதை..

கதை ஆசிரியர், திரு எஸ்.ரா அவர்கள்.. கதையில், சைவ உணவுப் பழக்கம் உள்ள ஒரு பெண், அசைவ உணவுப் பிரியனைக் காதலித்து மணந்து, அவனது குடும்பத்தில் ஒருத்தியாக வாழும் நிலைமையில், அசைவ அருவருப்பினால் ஏற்படும் இன்னல்களும், அந்தப் பெண்ணுக்கு ஏற்படும் மனக்கசப்பும், படிக்கவே ரொம்ப கவலையாக, பதைபதைப்பாக இருந்தது.. கதையின் பெயர் - "ஜெயந்திக்கு ஞாயிற்று கிழமை பிடிப்பது இல்லை".. நம்மூர் உணவுப் பழக்கத்தை அறிந்தவர்களுக்கு இந்தத் தலைப்பை விளக்கத் தேவையில்லை :).. குடும்பம் (கணவன், மாமனார், மாமியார், நாத்தனார்) மொத்தமும், ஞாயிறு அன்று, அசைவம் சமைத்து ருசித்து உண்ண, தனித்து விடப்பட்டிருப்பார் கதை நாயகி.. அவளது கணவனுக்கு அசைவம் ரொம்பவே விருப்பம்.. முடிவில், அந்தப் பெண், இன்னும் எத்தனை வருடங்கள் இப்படி காலத்தை ஓட்ட வேண்டியிருக்குமோ என்று மனம் வெதும்பியிருப்பார்..

நேற்று முன் தினம் நான் ஆஷாவுக்கு சொன்னது தவறோ என்று இப்போது படுகிறது.. தினமும் ஒரு வேளையாவது சேர்ந்து உண்ணப் போகும் உணவு... அதற்கு சமைக்கும் நேரம் வேறு.. இருவருக்கும் ஓரளவுக்காவது ஒத்த ரசனை இருந்தால் தான் காதலும் உணவோடு சேர்ந்து ருசிக்கும் என்று தோன்றுகிறது.. ஓரளவு மட்டும் அசைவம் உண்ணுபவராக இருந்தால் பிரச்சனை இருக்கப் போவதில்லை தான்.. ஆனால், ஒருவர் மிகுதியான அசைவப் பிரியராகவும், இன்னொருவர் அசைவத்தைக் கண்டே அருவருப்பு கொள்பவராகவும் இருத்தல் கடினம் என்று படுகிறது.. நீங்க என்ன நினைக்கிறீங்க?

16 October 2010

இலக்கை மீறிய பயணம்...பிரபஞ்சவெளியில்
உயிர்த்தெழும்பியிருந்த
ரோஜாவின் மேற்
பனித்துகள்கள் அகற்றி
அதன் ஒற்றையிதழ் உதிர்த்து
முகர்ந்து சுவாசித்த வேளையில்
என்னருகில் மிதந்துவந்த
நிலவின் மீதேறி,
தேடித்திரிந்து கண்டெடுத்த கல்லில்
என்னவளின் நிழலைச்
செதுக்கி முடித்தபொழுது
வந்த பெரும் பிரளயத்தில்
அடித்துச் செல்லப்பட்டு
எதுவுமற்ற பல
வெளிகளைக் கடந்து
கொடியொன்றினைப் பற்றி
கரை சேர்ந்திருந்த
 'நான்'
அங்கு தியானித்துக் கொண்டிருந்த
ஜென் துறவி யொருவரின்
மூச்சில் உள்ளிழுக்கப்பட்டு
செந்நிறத்துச் சிறு
உலகமொன்றின் உதவிகொண்டு,
பிணைந்திருந்த ஏணிகளை
எட்டிப்பிடித்து அவைகளை
இணைத்திருந்த தொரு
கம்பியின் அங்கமாகி
யுகங்கள் சில காத்திருந்து
பின் வெளிப்பட்டதொரு நாளில்
மண்ணில் விழுந்து
முளைத்து வளர்ந்து
பூத்து ரோஜாவானேன்..

12 October 2010

சிலே

எல்லாரும் நல்ல படியா மேல வந்து சேரனும் (கடவுளே)!

http://www.reuters.com/article/idUSN0925972620101013

02 October 2010

எந்திரன் - காதுல வயர்

அழகு - இருக்குங்க (ஐஸ்க்கு வயசே ஆகாதா?)

பிரமிப்பு - இருக்குங்க

பிரமாண்டம் - இருக்குங்க

கற்பனை, உழைப்பு, கிராபிக்ஸ் - குறைச்சலே இல்லாம இருக்குங்க

கலர் - கிளிமஞ்சாரோ ன்னு ஒரு பாட்டு வருதுங்க. அதுல ஐஸ் கலர் கலரா வராங்க.

உணர்வு - தலீவரு பேரு வர்றப்வே, படம் பாக்கற மக்களுக்கெல்லாம் பொங்கி வந்துடுச்சுங்க. விசிலு, பேப்பரு, கைதட்டலுன்னு தூள் கெளம்புது. எழுந்து நின்னு சாமியாடாதா கொற ஒன்னு தான்..

இசை - காதடைக்கற அளவுக்கு இருக்குங்க


அட, உலோகம் கூட டன் கணக்குல இருக்குதுங்க..

கதை - இது கூட ஒரு வரில சொல்ற அளவுக்காவது இருக்குங்க லாஜிக் - புல் மீல்சுல ஓரமா இத்துனூண்டு ஊறுகா தொட்டுக்க வைப்பாங்களே, அந்தளவுக்காவது இருக்குங்க


உயிர் - அதையத் தானுங்க காணோம்.


நான் கூட எந்திரன் படத்துல ரஜினி நடிச்சிருக்காருன்னு நெனச்சு போனேங்க.. பொறவு தான் தெரிஞ்சது, ரஜினி படத்துல ரோபோட்டும் நடிச்சிருக்குன்னு.. அதுக்காகவே அந்த "ரோபோட்"ட பிடிச்சிருக்குங்க.