26 March 2010

ரண்டக்க ரண்டக்க..

டர்ரூன் டண்டக்க டர்ரூன் டண்டக்க..
டர்ரூன் டர்ரூன்..

”ச்ச.. யாரது காலங்காத்தால.. இப்படி சத்தம் போட்டுகிட்டு.. ”  கண் கசக்கியபடியே கதவைத் திறந்தார் எல்போர்ட்.. 

ஆஆஆஆஆ... இதாரு... இந்தக் கோலத்துல.. அருவா மீச.. கொடுவாப் பார்வ.. ஒரு கையில கத்தி.. மறு கையில எலுமிச்சம்பழம்..

”எலேய் யாருல அது??.. யாரது இங்க எல்லு போட்டு???...”

“ஹேய்.. ஹூ ஆர் யூ?”

“என்னல பீட்டருடற? எனக்குப் புரியாதுன்னு நெனச்சியா???”

“ஆல்ரைட்... யார் நீங்க? இதென்ன வேஷம்?”

“என்னது?? வேஷமா? ரெண்டு வருஷம் ஊருக்கு வராமயிருந்துட்டா.. பழசெல்லாம் மறந்துருமா??”

தூக்கக்கலக்கத்தில் சிறியதொரு கொசுசர்த்திச் சுருளை கொளுத்திப்பார்க்கிறார் எல்போர்ட்..

ட்ரூன்.. ட்ரூன்.. டண்டண்டன் ட்ரூன்...
ட்ரூன்.. ட்ரூன்.. டண்டண்டன் ட்ரூன்...

அட.. இவரு நம்ம....

“என்னல யோசிக்கற? எனக்குப் படைக்க நேரமில்லயாமா உனக்கு??”

அப்படியே உள்ளே ஓடிப்போய் கதவைச் சாத்தி தாழ்ப்போட்டு எஸ் ஆக  நினைக்கிறார் எல்போர்ட்.. கை கால் எதுவும் நகர மறுக்க...

“தெரியும்ல.. ஒம் மனசுல என்ன நெனப்பு ஓடுதுன்னு தெரியும்ல.. “

“அது வந்து.. ஹி ஹி”

“இந்தயிளிப்பு எல்லா எங்கிட்ட செல்லுபடியாகாதுல.. விட மாட்டோம்ல”

“சரி.. ஒரு நிமிஷம் இருங்க.. போய் லேப்டாப் எடுத்துட்டு வர்றேன்”

ஓடிப் போய் ஆன் செய்து எடுத்து வருகிறார்..

“வேகமாப்பண்ணுல.. எனக்குப் பசிக்குதுல்ல”

“நானென்ன பண்ணட்டுஞ் சாமி? அது கொஞ்சம் மெதுவாத் தான் வேல பண்ணும்..”

ப்ளாகில் நுழைந்து, கிடுகிடுவென கண்ணில் பட்ட பத்து பின்னூட்டங்களைப் பொறுக்கியெடுத்து.. அப்படியே காலில் விழுகிறார்..

“கும்படறங்க சாமீயோவ்.. ஏஞ்சாமீ.. உங்களப் போயி மறப்பனா? கொற பொறுக்கோனும்.. இந்தாங்க.. ஏத்துக்கோங்க..”

“இதென்னல இத்துனூண்டு கண்ணுல காமிக்கற? பத்தாதுல.. பத்தாது..”

“சரி.. இந்த ப்ளாக்ல இருக்கற எல்லாத்தையுமே எடுத்துக்கோங்க..”

ஒரே வழிப்பில் எல்லாவற்றையும் எடுத்துக்கொள்கிறார் குலச்சாமி..

“பத்தல... பத்தல...”

”எதக் கொடுத்தாலும் அடங்க மாட்டீங்க போலயிருக்கே.. இந்தாங்க.. நான் போட்ட எல்லாப் பின்னூட்டங்களையும் எடுத்துக்கோங்க..”

இரு கைகளாலும் அப்படியே வாரியெடுத்துக் கொள்கிறார்..

“இது.. இது.. இந்தப் பயம் இருக்கட்டும்.. ஏதோ கா வயிறு நெறஞ்சிருக்கு..”

“இதுக்கு மேல கொடுக்கறதுக்கு ஒன்னும் இல்லீங்க..”

“பொழச்சுப்போ.. ஏதோ.. போனாப் போவுதுன்னு இத்தோட விட்டுட்டுப் போறன்.. அடுத்த வருஷம்.. நெனப்பு வச்சிக்கோ.. இப்போப் படச்சத விட ரெண்டு மடங்கு அதிகமாயிருக்கனும்.. என்ன? வெளங்குதா?”

”ஹிஹி.. எழுதறவங்கள நெறய எழுதச் சொன்னீங்கன்னா, எனக்கும் நெறய பின்னூட்டம் போட வசதியாயிருக்கும்..”

“எலேய்.. யாருலே அது வெட்டியா உக்காந்து இத இன்னம் படிச்சிட்டு இருக்கறது?  எல்லாருமு அவங்கவங்க ப்ளாக்குக்கு ஓடிப் போயி வெரசா எழுத ஆரம்பிங்கலேய்........ ”

ட்ரூன்.. ட்ரூன்.. டன் டன் டன் ட்ரூன்...
ட்ரூன்.. ட்ரூன்.. டன் டன் டன் ட்ரூன்...

21 March 2010

என்ன செய்ய?? அட என்ன செய்ய??

சரி பொன்னுத்தாயி.. நாங்க கிளம்பறோம்.. நேரமாச்சு.. போயித் தூங்கோனும்.. குட்டிப் பையா.. டாட்டா.. போயிட்டு வரோம்ங்க.. நீங்களும் முடியும் போது அங்க ஒரு நட வாங்க..

இரு இரு.. ஒரு நிமிஷம் நில்லு..

என்ன??

இந்தா.. பிரியாணி கொஞ்சம், குழம்பு கொஞ்சம் எடுத்துட்டுப் போ..

இல்ல.. வேண்டாம்..

அட உங்க சொந்தக்காரர் வந்திருக்கார்ன்னு சொன்னல்ல.. அவருக்கு கொடு..

இல்ல நீங்க ராத்திரிக்கு சாப்பிடுங்க..

எங்களுக்கு நிறைய இருக்கு.. ஒரே நிமிஷம்.. பேக் பண்ணித் தந்துடறேன்...

ம்ம்.. ரொம்ப நன்றி.. 

-------------------------------------------------------------------------------------------------------------

யப்பா.. ஒரு வழியா வீடு வந்தாச்சு.. செரியான மழ!!

இனிமே இந்த மாதிரி மழைல எல்லாம் கார்ல லாங்ட்ரைவ் போவக்கூடாது..

ம்ம்.. ஆமா.. என்ன இன்னைக்கு அபார்ட்மெண்ட் ஒரே இருட்டா இருக்கு?

ஓ.. ச்ச.. கரண்ட் போயிடுச்சு..

என்னது? அப்படி கூட நடக்குமா இங்க?

பின்ன? மழ பேயுது.. எல்லா வீடும் இருட்டாயிருக்கு? நிறைய பேர் வெளிய கிளம்பி போயிட்டு இருக்கற மாதிரி இருக்கு..

இல்ல.. அங்க கம்பத்துல லைட் எல்லாம் எரியுதே?

அது வேற கனெக்‌ஷன் போல..

பாரு.. கேரேஜ் ல கூட லைட் இல்ல.. நிறைய இடம் காலியாக்கிடக்கு.. எல்லாரும் வேறயெங்கயாவது போறாங்க போல..

காத்து இந்த அடி அடிக்குது.. மரங்கிரம் மேல சாஞ்சுடப் போவுது.. சீக்கிரமா வா..

-------------------------------------------------------------------------------------------------------------

கதவைத் தட்டியதும் வந்து திறந்து விடுகிறார் சுப்பரமணியண்ணன்..

அப்பாடி வந்துட்டீங்களா?

அப்ப நெசமாலுமே வீட்டுல கரண்ட் இல்ல..

நீங்க வர்ற வரைக்கும் என்ன பண்றதுன்னு தெரியல.. அதான் நானே உருள சப்ஜி பண்ணிட்டேன்.. பாதி பண்ணிட்டு இருக்கும் போது கரன்ட் போயிடுச்சு..

என்ன செய்ய? என்ன செய்ய? என்ன செய்ய? என்ன செய்ய????????????

ஆமா.. ஏதாவது டார்ச் லைட் இருக்கா?

இல்லன்னு தான் நினைக்கறேன்..

இல்ல.. இருந்துச்சு.. அதுவும் கைக்கெட்டறா மாதிரி முன்னாடியே தான் செல்ஃபுல வச்சிருந்தேன்..

உங்க செல்ல ஆன் பண்ணுங்க அண்ணே.. பாப்போம்..

அப்பாடி கிடைச்சிடுச்சு..

மெழுகுவர்த்தி ஏதாச்சும் இருக்கா?

ம்ஹூம்..

அட நாளைக்கு காலைல நான் கெளம்போனுமப்பா.. ப்ளைட் ஸ்டேட்டஸ் பாக்கனும்..

பாக்கலாம்.. ஆ.. கரண்ட் இல்லன்னா இண்டர்னெட் வேல பண்ணாதே..

ஆஃபீஸ் ஐ டச் ல பாக்க முடியுமா?

இல்ல அதுக்கும் இங்கத்த நெட்வர்க் வேணும்..

நான் என்னோட ப்ரெசெண்டேசன் இன்னைக்கு முடிச்சி அனுப்பனுமே.. ஆஆஆஆ.. என் லேப்டாப்புல சுத்தமா சார்ஜ் இல்ல.. என்ன பண்ண?

அடுப்ப அணைங்க.. தீஞ்சுடப் போவுது..

அடுப்ப ஆஃப் பண்ணிடாத.. மறுபடியும் ஆன் ஆவாது..

ஏன்... இது கேஸ் அடுப்பு தான்.. கரண்ட் அடுப்பு இல்ல.. 

ஆமா.. ஆனா அது ஆன் ஆவறதுக்கும் கரண்ட் வேணும் போல???

அப்படியா? எங்க நான் பாக்கறேன்.. அட ஆமா.. ஆனாவ மாட்டீங்குது.. கொடுமடா சாமீ.. இருங்க எப்பவோ ஒருக்கா வாங்குன அடுப்பு லைட்டர் ஒன்னிருக்குது.. அத ஒருக்கா டெஸ்ட் பண்ணிப் பாத்துடலாம்..

ம்ம்.. இத பத்து வாட்டி க்ளிக் பண்ணினா ஒரு வாட்டி பத்துது..

சரி சரி.. அப்ப அது போதும்..

நீங்க சமைச்சத விடுங்கண்ணே.. காத்தாலைக்கு பாத்துக்கலாம்.. எம் ஃப்ரெண்டு சாப்பாடு கொடுத்தனுப்பியிருக்கா உங்களுக்கு.. இருங்க ஒரு நிமிஷம் சூடு பண்ணியாறேன்.. அடக்கொடுமையே.. மைக்ரோவேவுக்கும் கரண்ட் வேணுமில்ல...

பரவாயில்ல அப்படியே சாப்பிடலாம்..

எனக்கு ரொம்ப குளிருது.. அப்ப இன்னிக்கு ரூம் ஹீட்டரும் கிடையாதா??


இப்போதைக்கு ஸ்வெட்டரப் போட்டுக்க.. பாக்கலா

ஏம்ப்பா.. ப்ளைட்க்கு என்னப்பா பண்ண?

இருங்க.. கருப்பனுக்கு போனப் போடறேன்.. அப்படியே அவன மெழுகுவர்த்தி வாங்கிட்டு வரச் சொல்றேன்.. நீ அந்த டார்ச் லைட்ட ஆஃப் பண்ணு.. அதுவும் மங்கலாயிட்டே வருது.. 

கருப்பனின் நிலைமையோ அதை விட மோசமாயிருந்தது..

(தொடரும்..)

அடிக்க வராதீங்க ஆரும்.. பெருசா இருக்கு.. மிச்சத்த நாளைக்கு ரிலீஸ் பண்ணிடறேன்..

10 March 2010

ச்ச.. இந்தப் பொண்ணுங்களே இப்படித்தான்.. (மகளிர் தின ஸ்பெஷல் அல்ல)

ஒருத்தரில்ல.. நூறு பேரும் இல்ல.. நண்பர்கள் கொஞ்சம் பேர் அடிக்கடிச் சொல்லி புலம்புற தலைப்பு இது.. அதாவது இவங்கள பொண்ணுங்க எல்லாம் யூஸ் பண்ணி த்ரோ பண்ணிட்டுப் போகுதுங்களாம்.. இவிங்க எங்க என்ன பேச ஆரம்பிச்சாலும் வந்து முடியற வாக்கியம் இதுவாத்தான் இருக்கும் - ”ச்ச இந்தப் பொண்ணுங்களே இப்படித்தான்”.. வேறொன்னுமில்ல.. திரும்பத்திரும்ப பல்பு வாங்கின அயர்ச்சி.. பல்புக் கத ரொம்ப சிம்பிள்.. ஆனா அதப்பத்தி எதுவும் சொல்லப் போறதில்ல.. ப்ரைவசி.. எல்லா பல்புக்கும் பொதுவான ஃப்யூஸ மட்டும் பார்ப்போம்..

பிரச்சனை என்னன்னா -  இவங்க எல்லாருமே நல்ல கலா ரசிகர்கள்.. அதாவது, அழகான பொண்ண எங்க பார்த்தாலும் இவங்களுக்கு மூக்கு வேர்க்க ஆரம்பிச்சிடும்.. நாம தொடர்ந்து கண்ண விரிச்சு வச்சுப் பாத்துகிட்டு இருக்கற அந்தப் பொண்ணு ஒரு நொடியாவது நம்மள பார்ப்பாளான்னு ஆரம்பிக்கற இவங்களோட எதிர்பார்ப்பு  கொஞ்சம் கொஞ்சமா அதிகமாகி பேச மாட்டாளா வெளிய வர மாட்டாளான்னு வளர்ந்துகிட்டே போகும்.. இதுல அப்பப்ப இவங்களுக்கு சின்னச்சின்னதா வெற்றியுங் கிடைச்சிடும்.. இதுவரைக்கும் ஓகே.. ஆனா இதுக்கப்புறம், அவ நம்மள ”டொண்டடொய்ன்” அதாங்க லவ்வு பண்ணுவாளான்னோ இல்ல பண்ணிட்டு இருக்காளான்னோ நினைக்க ஆரம்பிச்சிடுறாங்க..

அட, இவங்களுக்கு ஏற்கனவே தெரிஞ்ச பொண்ணு.. இல்ல கூட வேல பாக்கற பொண்ணுன்னா கூட பரவாயில்லங்க.. நம்ம தமிழ் சினிமா கதாநாயகர்கள் ரேஞ்சுல பஸ்ஸுல எதிர்படற பொண்ணு, ஐஸ்கிரீம் கடையில வேல பாக்கற பொண்ணு.. இப்படிப் பல பேர்.. ஒரே ஒரு க்ரைட்டீரியா தான் - பொண்ணு அழகா இருக்கோனும்.. அவ்வளவு தான்.. இவங்களே ஐஸ்கிரீமா உருக ஆரம்பிச்சிடுவாங்க.. ஆனா இந்த மாதிரிப் பொண்ணுங்க எல்லாம் இவங்கள ஏறெடுத்தும் கூட பார்க்க மாட்டாங்கன்றதால அவ்வளவாப் பிரச்சனை இல்ல..

அப்ப என்ன தாஆஆஆஆஆஆன் பிரச்சனைன்றீங்களா? அடிக்கடி இவங்க சந்திக்கக்கூடிய நிலைமைல இருக்கற பொண்ணுங்க.. உதாரணத்துக்கு - கூட வேல பாக்கற பொண்ணு அழகா மட்டும் இருந்துடுச்சுன்னு வச்சுக்கோங்களேன்.. இந்தப் பொண்ணுங்கள இம்ப்ரஸ் பண்ணறதுக்காக காப்பி வாங்கிக் கொடுக்கறதுலயிருந்து அவங்கள வீடு வரைக்கும் கூடவே வந்து ட்ராப் பண்ணிட்டுப் போற பாடிகார்ட் வேல, அது மட்டுமா.. அந்தப் புள்ளைங்க வளர்க்கற நாய்க்குட்டி பூனக்குட்டியக் கொஞ்சற வேல வரைக்கும் விழுந்து விழுந்து கவனிப்பாங்க.. அந்தப் பொண்ணு தனக்கேத்த பொண்ணா.. திருமண பந்தத்துக்கு ஒத்து வருமா அப்படின்னெல்லாம் தோனவே தோனாது.. அட்லீஸ்ட் அந்தப் பொண்ணு நம்மள திருப்பியும் லவ் பண்ணுவாளான்னு யோசிக்கக் கூட தோனாது.. தங்களோட முயற்சிகள் மேல அவ்வளவு நம்பிக்கை..

இத்தனைக்கும் இவங்க சும்மா சுத்திட்டு விட்டுட்டுப் போற பசங்களும் கிடையாது..  சின்சியராத்தான் ட்ரை பண்ணுவாங்க.. ஆனா செலக்‌ஷன் மட்டும் சட்டுசட்டுன்னு பண்ணிடுவாங்க.. அந்தப் பொண்ணுங்களுக்கென்ன.. எவனாவது இ வா இந்த மாதிரி தானே வந்து விழுந்து எல்லா வேலயும் பண்ணித் தந்தா வேண்டாம்ன்னா சொல்லுவாங்க - used.. அப்புறம் நம்ம பசங்க தன் மனச வெளிப்படுத்தினவுடனே - thrown... ஒன்னு ரெண்டு தப்பான்னா அந்தப் பொண்ணுங்கள தப்பு சொல்லலாம்.... தொடர்ந்து தப்பாயிக்கிட்டே இருந்து... அதுல தன்னோட தப்ப உணராம எவளாவது உக்காந்து கத கேக்கக் கெடச்சா சொல்லிப் புலம்புவாங்க பாருங்க.. ச்ச இந்தப் பொண்ணுங்களே இப்படித்தான்னு... அப்பத்தான் கடியாவுது..

ச்ச.. இந்தப் பசங்களே இப்படித்தான்.. (ஆரும் கோச்சுகிட்டு திட்டிப் போடாதீங்கப்பு.. ஜஸ்ட் ஒரு கடைசிவரிப் பன்ச்.. அம்புட்டுத்தேன்)..

06 March 2010

உடைந்த பேனா.. கிழியாத காகிதம்...


கருவொன்றை உள்ளிழுத்து
சொற்கடலில் மூழ்கி
கற்பனையைச் சிலுப்பி
சிந்தனையைச் செதுக்கி
கவிதையென்ரொன்றை...
முடியவில்லை.. முட்டுகிறது...
மொழியதனின் புலமையறியேன்..
இலக்கணம் இலக்கியம்
அறியேன் அறியேன்..

சமைத்தவன் பசியடங்குவது
ருசித்தவன் நன்றியில்..
ரசனையெனும் ருசிகொண்டு
காகிதமாய் மை சுமந்து..
படைத்தவன் பசியாற்ற
கணினியைக் கடவுகின்றேன்..
உடைந்த பேனாவாய்..
கிழியாத காகிதமாய்..
இயலாமையில் இன்புற்று..
அறியாமையில் அகமகிழ்ந்து!!

அபாய அறிவிப்பு: தீவிர அறுவை சிகிச்சையின் பலனாக எல்போர்டு, பேனா இருவருமே காப்பாற்றப்பட்டுவிட்டதால் இது போன்ற அட்டெம்ப்டுகள் அவ்வப்போது நடக்கலாமெனத் தெரிகிறது.. பக்கத்தூர்காரர்கள் எதற்கும் எச்சரிக்கையாக இருக்கவும்
Posted by Picasa