30 December 2010

துருப்பிடிக்காத அம்பு..

கமல் உலக நாயகன் தான் ன்னு நிரூபிக்கறதுக்கு ஒரு அருமையான காட்சியோட பேரு போட ஆரம்பிக்கறாங்க :)) அதை நான் விளக்குவதை விட நீங்களே கண்டு களிச்சா தான் நல்லா இருக்கும் :)

ஹூ இஸ் த யீரோ? திருடருங்களோட சண்டை போட்டு கதாநாயகிக்கு பர்ஸ திருப்பித் தர்றவர் தான் யீரோ.. தமிழ்ப்பட யீரோ எப்பவுமே ஒரு சகலகலாவல்லவர்.. நல்லவர்.. இந்தப் படத்துலயும் அதே..

மாதவன் கேரக்டர் மாதிரி சுயநலம் மிகுந்த, நேர்மையற்ற, வெறுப்புணர்வு கொண்ட, ஒரு சந்தேகப்பேய் பிசினஸ்மேனோட, போராட்டங்கள் நிறைந்த வாழ்க்கை நடத்த வேண்டாம்ன்னு த்ரிஷா தெளிவா முடிவெடுத்த மாதிரி தான் இருக்குது.. அதுவும் ஒரு நடிகையாக ரொம்பவே சிரமப்பட வேண்டி இருந்திருக்கும்.. மாதவனோட அப்பா கூட மாதவன விட கொஞ்சம் நல்லவரா  இருக்கிறார்.. ஆனா இரண்டாவது பாதியில மாதவன ஒரு லூசாக மாத்தி படத்தை ஒரு காமெடி ட்ராமாவா ஆக்கிட்டாங்க..

ஆனாலும் ஒரு சந்தேகம் - தமிழ்த் திரையுலக நடிகர் நடிகைகள் இவ்வ்வ்வ்வ்ளோ நல்லவங்களா? :)))))))

சூர்யாவயும் நல்ல பையனா காட்டியிருக்காங்க.. நடுவால ஜோ போன்ல கூப்பிட்டு, குழந்தை கூட பேசி.. ன்னு ஒரே சென்டிமென்டல் டச்..

மாதவனோட அம்மாவுக்கு ஜாதியை ஒரு குறியீடாகக் காட்டாம, பொதுவான ஒரு அம்மாவாக காட்டியிருக்கலாம். ஒரு இலங்கைத் தமிழ் குடும்பத்த நக்கல் அடிச்சுவிட்டிருக்காங்க.. ஒரு மலையாள ப்ரொட்யூசர காரியவாத முட்டாளா ஆக்கியிருக்காங்க.. இதெல்லாம் பிடிக்கல..

கேன்சர் வந்து சிகிச்சை எடுத்துகிட்டு இருக்கற குடும்பம் - நெகிழ்ச்சி.. அந்த வலிகளை நேரில் பார்ப்பது போன்று தத்ரூபமாக படம் பிடித்தது நன்று.. கீமோதெரபி வாந்திக்கு மருந்தெல்லாம் ஏதும் கொடுக்க மாட்டாங்களா? :))) அவரு ரமேஷ் அரவிந்தா? அடையாளமே தெரியலைங்க!

சில நொடி கவனக்குறைவுகளால நடக்கும் விபத்துகள், பல வருஷங்களுக்கான வாழ்க்கையை இழக்கச் செய்பவை.. அந்த வலியையும் நல்லா காட்டியிருக்காங்க.. அந்தப் பாடல் முழுக்கவும் ரிவர்ஸ்லயே காட்டியதும் புதுமை.. அருமை..

கமலுக்கும் த்ரிஷாவுக்கும் காதல் மலர்ந்தத சரியாகக் காட்டல..

த்ரிஷா க்யூட்.. ஜூலியட்டும் அழகு.. சங்கீதா கேரக்டர் - நமக்கு அவங்க மேல கடுப்பு வரச் செய்யறதுல சக்சஸ் ஆகிட்டாங்க..

"உன்னாலே உன்னாலே"ன்னு ஒரு படம் வந்தது, மூணு வருஷம் முன்னால.. அதுல சதா கேரக்டரும் கொஞ்சம் சந்தேகப்படற கேரக்டர் தான்.. ஆனா மத்தபடிக்கு நல்ல பொண்ணு..  அவங்க இயல்பு அப்படித் தான்னு தோனுச்சு.. அதுல ஹீரோ, சதாவோட இயல்பு இதுதான்னு தெரிஞ்சும், கொஞ்சம் கூட தன்னை மாத்திக்க முயற்சி பண்ண மாட்டார்.. தன்னோட குறும்புகளை குறைச்சுக்கவே மாட்டார்.. ஒவ்வொரு குறும்பும் சதாவோட சந்தேகத்த அதிகப்படுத்திட்டு போகும்.. கடைசியா சதாவே ரெண்டு பேருக்கும் ஒத்து வராதுன்னு பிரிஞ்சிடுவாங்க.. எனக்கு அந்தக் கேரக்டரை புரிஞ்சுக்க முடிந்தது.. அவங்க பிரியும் போது கொஞ்சம் கஷ்டமாகவும் இருந்தது..

இந்தப் படத்துல ரொம்பத் தெளிவாகவே மாதவனை வில்லனாகவும், த்ரிஷாவையும் கமலையும் ரொம்ப நல்லவங்களாகவும் பில்டப் பண்ணிட்டாங்க.. அதனால வேலை ரொம்ப ஈசியா முடிஞ்சிடுச்சு :))))) நான் கூட கொஞ்சம் சர்ச்சைக்குரிய படம்ன்னு எதிர்பார்ப்போட பார்த்தேன்.. சாதாரணமாகத் தான் இருக்கு.. மூணு விதமான ஜோடிகளைக் காட்டியிருக்காங்க.. சுதந்திரமான இணைகளா ஒன்னு, இக்கட்டான சூழ்நிலைல செலவு பண்ண கையில ஒத்தப்பைசா இல்லாட்டியும் பரிவோட கவனிச்சுக்கற உறவுகளாக ஒன்னு, சுயநலத்தோட ஒன்னுன்னு.. அவ்ளோ தான்..

கமல் ரசிகர்கள் யாரும் அடிக்க வந்துடாதீங்க.. தசாவதாரத்த விட இது எனக்கு ஓகே வா இருந்தது..

29 December 2010

அந்த நாள் முதல் இந்த நாள் வரை..


சங்கரிக்கு அன்று சந்தோஷமாக இருந்தது. அவளுடைய பள்ளியில் சங்கரியின் ஏதோவொரு அத்தைக்கு கல்யாணம் என்று சொல்லி ஒரு நாள் விடுமுறை வாங்கிவிட்டார் அப்பா. ரேவதியிடம் மட்டும் உண்மையான காரணத்தைச் சொல்லியிருந்தாள். அதைக் கேட்கும் போதே ரேவதிக்கு முகம் சுளிந்தது. தனக்கு அதெல்லாம் பிடிப்பதில்லை என்று சொன்னாள். பின்னர் வழக்கம் போல கதை பேச ஆரம்பித்து அதை மறந்து போனார்கள்.

சங்கரி அன்று பட்டுப் பாவாடையும் சட்டையும் அணிந்திருந்தாள். அவளது வீட்டிலிருந்து அம்மாவும் அத்தையும் பாட்டியும் கிளம்பினார்கள். பெரிய சணல் பைகளில் பாத்திரம், அரிசி, வத்திப்பட்டி, மற்றும் பூஜைக்கான சாமான்கள் ஏற்றப்பட்டிருந்தன. போகும் வழியில் இருந்த வீடுகளில் நின்று பேசி, இன்னும் கொஞ்சம் பேர் இணைந்தார்கள். வீடுகளைத் தாண்டியதும் வயல்கள். வயல்களின் இடையே சென்ற ஒத்தையடி மண் தடத்தில் நடந்தார்கள். முதலில் சென்ற பெண், "பாத்து வாங்க.. ஒரே முள்ளா கெடக்கு..." என்றவாறே குனிந்து சிறு முள் குச்சி ஒன்றை கையிலெடுத்து தூர வீசி எறிந்தார்.மண் பாதை, வயல்களை விட்டுவிட்டு, சிறு குன்றின் மீது ஏறத் துவங்கியது. வழியின் இரு நெடுகிலும் அடர்ந்த புதர்கள் கேட்பாரற்று வளர்ந்து கிடந்தன. கற்களையும் முட்களையும் கவனமாகத் தவிர்த்து விட்டு முன்னேறினர். குன்றின் சமபரப்பை அடைந்ததும் சங்கரிக்கு உற்சாகம் கரைபுரண்டது. சுற்றிலும் வயக்காடுகள். குன்றின் கீழ்புறம், மிதமான சரிவுகளைக் கொண்ட அடுக்குப் பாறை. அதிலே சறுக்கியபடியே சென்றால், கீழே மேலும் வயல்கள். சுத்தமான காற்று சுற்றிலும் சூழ்ந்திருந்த பொன்னான பூமி அது. காற்றின் மெல்லிய ஒலியையும், மரஞ்செடிகளின் அசைவையும், மனிதர்களின் பேச்சு சத்தத்தையும் தவிர்த்து, இரைச்சல் ஏதுமற்று இருந்தது.

ஆண்கள் முன்னமே அங்கு வந்துவிட்டிருந்தார்கள். கொஞ்சம் பெண்களும். புதிதாக வந்தவர்கள், தங்கள் சுமைகளை இறக்கி வைத்துவிட்டு வேலைகளில் சுறுசுறுப்பானார்கள். மூன்று மூன்று கற்களாகக் கூட்டி, சிறு அடுப்புகள் மூட்டப்பட்டன. விறகுகளுக்கு தீயிட்டு, மேலே பாத்திரமிட்டு, பொங்கலுக்கான உலை ஆரம்பமானது. சங்கரி, தனது ஒரு வயது சித்தி மகனை இக்கத்தில் இடுக்கிக்கொண்டு, மீதிப் பொடுசுகளை மேய்க்க ஆரம்பித்தாள். வேட்டுகள் முழங்க ஆரம்பித்ததும் சிறு குழந்தைகள் அழுது அலற, அந்த ஒரு வயதுக்காரன் மட்டும் இளங்கன்றாய்ச் சிரித்தான்.

"வெங்காட்டு வேலப்பன எல்லாரும் நல்லா கும்பிட்டுக்கோங்க.." பூசாரி சூடமேந்திய தட்டை எடுத்து வந்தார்.

"தள்ளுங்க.. தள்ளுங்க.." என்ற குரல் கேட்டதும் கூட்டத்தில் சிறிய பரபரப்பு தொற்றியது. நகர்ந்து நின்றார்கள். சுற்றிலும் மனிதர்கள் தன்னையே உறுத்துப் பார்ப்பதைக் கண்டு எதையோ உணர்ந்த ஆடு மேற்கொண்டு நகர மறுக்க, விடாமல் அதனை உறுதியாக இழுத்து வந்தான் கணேசன். கணேசன் சங்கரிக்கு மாமன் முறை. ஆட்டின் மீது சிறிது நீர் தெளித்தான். ஆடு இம்முறை எதையும் உணராமல் துளிர்த்துக் கொண்டது.

வலது கை கொண்டு குழந்தையின் கண்களைப் பொத்திவிட்டு, இமைகளை இறுக்கிக் கொண்டாள். "ஆச்சு.. கொஞ்ச நேரந்தான்.." அவனைச் சமாதானப் படுத்தினாள். இடையே தனது ஒற்றைக் கண் இமைகளை மட்டும் சற்றே தளர விட்டு, பின் மீண்டும் இறுக்கிக் கொண்டாள்.

*************

தொலைபேசி அழைத்ததும் சங்கரி படுக்கையறைலிருந்து எழுந்து வந்தாள். மாலையாகி இருந்தது பொழுது. தான் வர இரவு இரண்டு மணி போலாகும், காத்திருக்க வேண்டாம் என்று தகவல் கொடுத்தான் அவள் கணவன். கணினிக்கு உயிர் கொடுத்து, இணையப் பக்கமொன்றைத் திறந்து வைத்தாள். தேநீர் தயாரித்து, ஒரு கோப்பையில் எடுத்துக் கொண்டு, வந்தமர்ந்தாள்.

?????????????

இருளுடன் ஊடுருவிக் கலந்து, ஒளி மெல்ல மெல்ல தன் பலத்தைக் கூட்டி வெல்ல ஆரம்பித்திருந்த அந்த விடியற்காலை பொழுதில், சுமார் ஒரு மணி நேரத்திற்குள்ளாக, சங்கரியின் குழு வாழ்க்கை முடிவுக்கு வந்து விட்டிருந்தது. அந்தக் குழுவின் சிறிய எளிய குடில்கள் யாவும் சின்னாபின்னமாக்கப்பட்டு சூறையாடப்பட்டுக் கிடந்தன. என்ன நேர்ந்தது என்று விளங்கும் முன்னரே, அநேக மக்கள், விளங்கிக்கொள்ளும் நிலையைத் தாண்டி, நிரந்தர இருள்வெளியை நோக்கி பயணிக்க ஆரம்பித்து விட்டனர்.

சங்கரியும், எஞ்சியிருந்த கொஞ்சம் குழு மக்களும், தடியான நீளமானதொரு  மூங்கில் குச்சியால் கட்டப்பட்டு நடத்திச் செல்லப்பட்டார்கள். சங்கரிக்கு அழுகையாக வந்தது. அடக்கிக் கொண்டாள். இதெல்லாம் கனவாக இருந்து விடக்கூடாதா என்ற நப்பாசை அவ்வப்போது எட்டிப் பார்த்தது. உடம்பிலே ஏற்பட்டிருந்த காயங்கள், அவை தந்த வலிகள், அந்த நப்பாசையை நிராகரதித்து விரட்டின.

ஏதோ ஒரு ஊருக்கு அவர்கள் கொண்டு வரப்பட்டனர். வழிநடத்தியவர்களும் மனிதர்கள் தாம்.  ஆனால் இறுகிய முகத்துடன் உணர்வுடன் இருந்தார்கள். தான் வாழ்ந்த வாழ்க்கையை, தம்முடன் வாழ்ந்த மனிதர்களை நினைத்து வருந்திக் கொண்டிருந்தவள், மெல்ல நடப்பு நிலைக்கு வந்து, சூழலை உள்வாங்கத் துவங்கினாள். இது என்ன ஊர்? யார் இவர்கள்? ஏன் நம்மைச் சிறை பிடித்து வந்திருக்கிறார்கள்? நாமென்ன தீங்கு செய்தோம் இவர்கட்கு? இனி நம்மை என்ன செய்வார்கள்? வழியெங்கும் சங்கரியின் மனதில் கேள்விகள் எழுந்த வண்ணம் இருந்தன. வேற்று மனிதர்களின் முகபாவங்கள், செய்கைகள் மிகுந்த அச்சுறுத்தலைத் தந்தன. இரு நெடுகிலும் வேற்று மனிதர்கள் பரவசத்துடன் ஆர்ப்பரித்தவாறு இருந்தார்கள்.

மெல்ல ஒவ்வொருவராய் பீடத்தில் ஏற்றப்பட்டார்கள். பூசாரி ஒருவர் உச்சாடனங்களை உரக்கச் சொல்லிக் கொண்டிருந்தார். அங்கும் ஒரு சிறு பெண் தன் கண்களை இறுக்க மூடிக் கொண்டிருந்தாள்.

?????????????

சங்கரி சட்டென்று கணினியில் இருந்து வெளியேறி வந்தாள். மனம் இன்னமும் நடுங்கிக்கொண்டு தான் இருந்தது. பாஸ்ட் பார்வர்ட் பொத்தானை அமுக்கியதும், நடுக்கம் சற்று அடங்கியது. எழுந்து சென்று கொஞ்சம் தண்ணீர் அருந்திவிட்டு வந்தாள். படுக்கையில் சாய்ந்தமர்ந்தாள்.

?????????????

ஊர் கூடுவது நன்று.
இறையைக் கும்பிடுவது அவரவர் விருப்பம்.
ஓர் உயிரின் உணவாக இன்னோர் உயிரைப் புசித்து வாழ்வது இயற்கை.
ஆனால்... இறையின் பெயரால் ஒரு உயிரை எடுப்பதை, ஆதி மனிதன் வேண்டுமானால் அறியாமையால் செய்திருக்கலாம். பகுத்தறியத் தெரிந்த இன்றைய மனிதனுக்கு அது அறிவல்ல அழகல்ல என்று தோன்றியது சங்கரிக்கு.

*****************

19 December 2010

சில்லென்று இரண்டு கற்பனைகள்..இளம் மாலை நேரம்..
கதவுசார் நிலைக்கண்ணாடி..
ஜோடித்து முடிக்கும் தருவாயில் அவள்..


பின்புறமிருந்து வந்து
சற்றே குனிந்து
அவளது வலது தோளின் மீது
தன் தலை வைத்துப் பார்த்து,
தங்களது பொருத்தம் மெச்சினான் அவன்..


"சுடிதார் நல்லாயிருக்கு..
தோடும்.."
மேய்ந்து கொண்டிருந்த அவன் பார்வை
அவளது விழிகளில் ஒரு யுகநொடி தொலைந்து நின்றது..
பின் மீண்டு, சட்டென உயர்ந்து, எதையோ தேடியது..
"என்னமோ குறையுது..
ம்ம்.. பொட்டு எங்க? பொட்டு வை.."
"பொட்டு வச்சாத் தாண்டி உம்முகம் முழுமையா இருக்கு.."


ப்ச்.. உதடு பிதுக்கி வருத்தம் காண்பித்தாள்
"ஊர்ல இருந்து வாங்கி வர மறந்துட்டேன்.."


"அதானே பாத்தேன்..
இதெல்லாம் மறந்துடுவியே..
மாடல் அழகின்னு மனசுல நெனப்பு.."
கன்னத்தில் மென்முத்தம் பதித்து விலகியவனை
சட்டை பற்றித் திருப்பினாள்..
"உம் மீச எங்கடா?
மீச வச்சாத் தாண்டா ஆம்பிளைக்கு அழகு.."

பழிவாங்கிய களிப்பு அவள் முகத்தில் வழிய,
குறும்பும் புன்சிரிப்பும் மின்ன பதிலுரைத்தான் அவன்..
"ம்ம்.. நானும் மறந்து ஊர்லயே விட்டுட்டு வந்துட்டேன்.."


..................................................

வா நனையலாம்
மழை பிடிக்கும்

என்றேன் நான்..


சளி பிடிக்கும்
என்றாய் நீ..


நனைந்தவாறே.. ஓடினோம்..

இருவரும்..
இருவருக்கும்...

05 December 2010

பெண்.. மனம்.. பாட்டு..

//பெண் மனதை சொல்லும் பாட்டு


பெண்கள் மனசை வெளிபடுத்தும் பாட்டு, அதுவும் பெண் பாடிய பாட்டு, அதுவும் பெண் குரலிலேயே இருக்கிற பாட்டு//

இதை மஹி என்னை தொடர அழைத்திருக்கிறார்.. முதலில் அதற்கு ஒரு நன்றி.. எழுத விருப்பம் இருக்கும் தலைப்பு.. இந்த வரிகளை ஆசியா அவர்களின் பதிவில் இருந்து எடுத்துப் போட்டுள்ளேன்..

சில இயக்குனர்கள் தமது படங்களின் பெண் பாத்திரங்களை சரியாக உருவகப் படுத்துவதில்லை.. ஒன்று, த்ரிஷாவுக்கு பாவாடை தாவணி கட்டி பாந்தமான பெண்ணாக காட்ட முயற்சிப்பார்கள்.. இல்லை, ஸ்ரேயாவை அல்ட்ரா மாடர்ன்-அரை லூசு-அழகுப் பெண்ணாக வளைய விடுவார்கள் (நேற்று பார்த்த சிக்கு புக்கு என்ற படத்தை வைத்து சொல்கிறேன்.. அந்தப் பாத்திரம் செயற்கையாக இருந்தது.. ஜப் வீ மெட் படத்தின் கரீனாகபூர் பாத்திரத்தை கொண்டு வர முயற்சித்து தோல்வி கண்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.. ஜப் வீ மெட்டில் வரும் கரீனாவின் பாத்திரம் மிக நன்றாக இருக்கும்..).. அதுவும் இல்லையா, இருக்கவே இருக்கு ஈகோ பிடித்த பெண் :)) 

இதைத் தாண்டி சற்றேனும் பெண்களை இயல்பாக, நல்லவராகவோ இல்லை கெட்டவராகவோ, வெளிப்படுத்தும் படங்கள் உண்டு.. பெண்ணினது பாத்திரம் சரியாக வடிவமைக்கப்பட்டாலே எனக்கு அந்தப் படம் கொஞ்சமாவது பிடித்துப் போகும்.. கல்லூரி, பூ, அங்காடித் தெரு, வாரணம் ஆயிரம், பருத்தி வீரன், மொழி.. இப்படி..

சரி.. பாட்டுக்கு வருவோம்.. அந்தந்த பாத்திரம் (அடுப்பங்கரைப் பாத்திரம் இல்லீங்கோ :) ) பாடும் பாட்டு என்பதால் சில.. பாடல் இனிமையாக, பாடியிருக்கும் குரல் இனிமையாக இருப்பதால் சில.. பிடித்ததை பத்துக்குள் அடக்கி விட முடியாது.. நேற்று இரவு சட்டென நினைவுக்கு வந்தவை மட்டுமே இங்கு.. வரிசைப்படியும் தரவில்லை.. பெண்ணின் மனது இப்பாடல்களில் வெளிப்படுகிறது என்றெல்லாம் சொல்லிவிட முடியாது :) படங்களில் பாடலைப் பாடுபவர்கள் பெண் கதாப்பாத்திரங்கள்.. பாட்டு எனக்குப் பிடிக்கும்.. அவ்வளவே.. 

௧. பொதுவாக பெண்கள் தனது காதலை நேரடியாக வெளிப்படுத்த தயங்குவார்கள்.. இந்த நாட்டிலும் அப்படித் தான் என்று நினைக்கிறேன்.. ஆனால் அந்த வட்டத்தை தாண்டி, நான் உன்னை விரும்புகிறேன்.. உன்னை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்.. உன்னோடு வாழ விரும்புகிறேன்.. என்று மாயா தைரியமாக தனது காதலைச் சொல்கிறார்.. திருமணம் முடிந்து, தேனிலவுக்காக ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து, அங்கு அந்தப் பெண் பாடும் பாடல்.. தாமரையினது வரிகள்.. பாம்பே ஜெயஸ்ரீ குரல்.. 


இதில் வரும் "பெண்களை நிமிர்ந்தும் பார்த்திடா.. உன் இனிய கண்ணியம் பிடிக்குதே.." வரிகளின் மேல் எனது தோழியருக்கு விமர்சனங்கள் எழுந்ததுண்டு.. பெண்ணைப் பாத்திடவே விரும்பாதவன் கண்ணியமானவனா என்று :) ஆனால் அடுத்து வந்த "கண்களை நேராய் பார்த்து தான்.. நீ பேசும் தோரணை பிடிக்குதே.." என்ற வரிகள் பிடிக்கும்.. 

௨. ஒரு சைக்கோ கணவனை விவாகரத்து செய்து விட்டு வாழும் பெண்.. கொஞ்சம் நாள் கழித்து சகோதரனின் நண்பருடன் அறிமுகம் ஏற்பட்டு, கொஞ்சம் தயக்கத்துடன் பழகி.. பின் மெல்ல காதல் கனியும்.. இந்தச் சூழ்நிலையில் வரும் இந்தப் பாடல் அந்தப் பெண்ணின் மனதே பேசுவது போல இருக்கும்.. சத்தம் போடாதே எனும் இந்தப் படம் அவ்வளவாக வெற்றி பெறவில்லை.. பாடியவர் நேஹா பாஸின்.. 


௩. நண்பன்-நட்பு என்று நாயகி ஒருவனுடன் பழகுகிறார்.. அந்த ஆண் இவரை விரும்ப ஆரம்பிக்க, நாயகி இன்னொருவனைக் காதலிக்கிறார்.. முதலில் சொன்ன நண்பன் கொஞ்சம் சைக்கோ.. நாயகியை கடத்தி வந்து சிறை வைத்து விடுகிறார்.. இதை உணராத நாயகி நண்பன் சோகமாக இருப்பதைக் கண்டு ஒரு தோழியினது பரிவோடு பாடும் பாடல்.. (எனக்கு இந்தப் படம் அவ்வளவாகப் பிடிக்கவில்லை.. ஆனால் பாட்டு வரும் சூழ்நிலை அதன் இனிமை.. நன்றாகயிருக்கும்..) தான் செய்த தவறை உணர்ந்து அந்த நண்பன் அழுவான்.. பெண் குரல் யாருடையது என்று தெரியவில்லை.. யுவன் இசையில் இனிமையான பாடல்... 


௪. இந்தப் பெண் போல ஒரு தோழி கிடைத்தால் எவ்வளவு நல்லாயிருக்கும்? தோல்வியில் துவண்டு கொண்டிருக்கும் நண்பர்களுக்கு தம்மால் முடிந்த உதவிகள் செய்து அவர்களை ஒரு நிகழ்ச்சிக்கு அழைத்து அங்கு இவர் பாடும் இந்தப் பாடல்.. தெளிவான உறுதியான பெண்!! அந்த நண்பர்களுக்கு மட்டுமல்ல எனக்கும் சில நேரம் நல்லுணர்வு கொடுத்திருக்கும் பாடல்.. சித்ரா வின் இனிய குரலில்.. 


௫. ஒரு கலைஞனின் வாசகியாய், மேடையேறி, தான் கண்ட குறையைச் சொல்லும் பாடல்.. அந்தத் துணிவும் அவருக்கு தன் கருத்தில் இருக்கும் தெளிவும் பிடிக்கும்.. இசைக்கும் மொழிக்கும் கலைக்கும் வரம்புகள் இல்லை என்று தான் நானும் நினைப்பேன்.. ஆனால், கட்டமைக்கப்பட்ட ஒழுங்கினை மிக ஒட்டி இசையோ அல்லது மொழியோ வெளிப்படும் போது, அந்த ஒழுங்கைப் புரிந்து கொண்டவர்களுக்கு பரவசம் ஏற்படுவதும் உண்மை.. இலக்கணங்களுக் குட்பட்டு அழகுத் தமிழில் ஒரு கவிதை படித்தால் நன்றாகத் தான் இருக்கும்.. ஆனால் அது மட்டுந்தான் தமிழ் என்றால் ஏற்றுக் கொள்ள முடியாது தானே? மறுபடியும் சித்ராவின் குரலில்.. இது அவங்களோட முதல் பாட்டுன்னு நினைக்கறேன்..


௬. சில படத்துல ரெண்டு பொண்ணுங்களைக் காட்டினாலே ஒருத்தி நல்லவளாகவும் ஒருத்தி கெட்டவளாகவுந் தான் காமிப்பாங்க :) விதிவிலக்கா சில சமயம் ரெண்டு பேரையுமே வேறுபடுத்தி ஆனா நல்ல விதமா காட்டியிருப்பாங்க.. உதாரணத்துக்கு, பார்த்திபன் கனவு படத்தில் ரெண்டு சிநேஹா வருவாங்க.. ஒருத்தர் லட்சியப் பெண்.. இன்னொருத்தர் குடும்பத்தோட இருப்பதே போதும் ன்னு நினைப்பவர்..

இந்தப் படத்திலும் அப்படி ரெண்டு பேர்.. ஒருத்தர் நாயகனோட காதலி.. இன்னொருத்தர் மனைவி.. மனைவி, கணவனோட பழைய டைரிய படிச்சிட்டு, மொதல்ல கஷ்டப்பட்டு, பின்னர் அவன் ஒரு காலத்தில தன் காதலியை ரொம்ப விரும்பியிருக்கிறான்னு புரிஞ்சுகிட்டு, அந்தக் காதலிய தேடிக் கண்டுபிடிச்சு அழைத்து வருவாங்க..  "ஒரு நாள்னாலும் உன்கூட வாழ்ந்துட்டுப் போயிடனும்" ன்னு இருக்கும் டைரியில.. உன்னை மட்டுமில்ல, உன்னோட ஆசைகளையும் காதலிக்கிறேன்னு கணவன் கிட்ட சொல்லிட்டு இவங்க ரெண்டு பேரையும் தனியா விட்டுட்டு மனைவி கிளம்பிப் போயிடுவாங்க (பாதி மனசோட தான் :))) ).. காதலியோ, என் பொருள் இன்னொரு இடத்துல இருந்தாலும் பத்திரமா இருக்குன்னு சந்தோஷப்படறேன் ன்னு சொல்லிட்டு கிளம்பிடுவாங்க..

ப்ளாஷ் பேக்ல, கல்லூரியில, நாயகன் தன் காதலியோட பாடற இந்தப் பாட்டு பிடிக்கும்..  பாடகி? இனிய உணர்வுப்பூர்வமான குரலுக்குச் சொந்தக்காரரான ஸ்ரேயா கோஷல்.. பாட்டுல நாயகி முகத்துல தெரியற சந்தோசத்தை, பரவசத்தை, காதலைப் பாருங்க.. கூடவே நாயகனோட குறும்பும்.. இவங்க ரெண்டு பேரும் சேர்ந்திருந்தா ரொம்ப நல்லாயிருந்திருக்கும்ன்னு நினைக்க வைச்ச பாடல்..


௭. தத்துப் பெண்ணோட, அம்மா பாடற பாடல்.. சிம்ரனும் குழந்தையும் ரொம்ப நல்லாப் பண்ணியிருப்பாங்க.. சின்மயி யின் குரலில் பாட்டு.. உண்மையில இதை விட அப்பா பாடற பாடல் (இதே, ஆண் குரலில்) பிடிக்கும்.. இசை ரொம்ப நல்லாயிருக்கும்..

செல்ல மழையும் நீ.. சின்ன இடியும் நீ..

௮. ஜெஸ்ஸி யின் இனிமையான குரல்.. இவங்களோட பேட்டி கொஞ்சம் வருஷத்துக்கு முன்னாடி தான் படிச்சேன்.. ரொம்ப நல்லா வந்திருக்க வேண்டியவங்க.. கொஞ்சம் படங்களோட காணாம போயிட்டாங்க.. ம்ம்.. தெய்வீக ராகம்.. தெவிட்டாத பாடல்.. கேட்டிருக்கீங்க தானே? பாடியவர் அவரே..

இப்ப நான் சொல்லப் போற படத்துல நாயகி ஒரு பாடகி.. அவங்க பாடற பாடல் தான் இது.. ஒரு பாடகியா இசையை ரசிச்சுப் பாடியிருப்பாங்க..

ஒரு இனிய மனது இசையை அணைத்துச் செல்லும்..

௯. ஹரிணியின் குரலுக்காக இந்தப் பாட்டு.. இது கொஞ்சமாவது பெண் மனசைச் சொல்லுதோ இல்லையோ.. அந்த ஐஸ்கிரீம் குரலுக்காக கேட்கலாம் :)

நிலா காய்கிறது..

௰. புலியை முறத்தால் விரட்டின மூத்த குடியில் வந்த இளம் குடிகள் தானே நாமெல்லாம்??!! :))) மேலும், பெண் என்றாலே இள நடுத்தர வயதுப் பெண்கள் மட்டுந்தானா? பாட்டி எல்லாம் பாடப்படாதா? தனது பேராண்டியின் வீரத்தைப் போற்றி, தனது பெருமிதத்தை வெளிப்படுத்தி, ஒரு பாட்டி "போர்க்களத்திலே" ஆடிப் பாடும் இந்தப் பாடல் ரொம்பவே புடிக்குமுங்கோ!! :))