29 December 2010

அந்த நாள் முதல் இந்த நாள் வரை..


சங்கரிக்கு அன்று சந்தோஷமாக இருந்தது. அவளுடைய பள்ளியில் சங்கரியின் ஏதோவொரு அத்தைக்கு கல்யாணம் என்று சொல்லி ஒரு நாள் விடுமுறை வாங்கிவிட்டார் அப்பா. ரேவதியிடம் மட்டும் உண்மையான காரணத்தைச் சொல்லியிருந்தாள். அதைக் கேட்கும் போதே ரேவதிக்கு முகம் சுளிந்தது. தனக்கு அதெல்லாம் பிடிப்பதில்லை என்று சொன்னாள். பின்னர் வழக்கம் போல கதை பேச ஆரம்பித்து அதை மறந்து போனார்கள்.

சங்கரி அன்று பட்டுப் பாவாடையும் சட்டையும் அணிந்திருந்தாள். அவளது வீட்டிலிருந்து அம்மாவும் அத்தையும் பாட்டியும் கிளம்பினார்கள். பெரிய சணல் பைகளில் பாத்திரம், அரிசி, வத்திப்பட்டி, மற்றும் பூஜைக்கான சாமான்கள் ஏற்றப்பட்டிருந்தன. போகும் வழியில் இருந்த வீடுகளில் நின்று பேசி, இன்னும் கொஞ்சம் பேர் இணைந்தார்கள். வீடுகளைத் தாண்டியதும் வயல்கள். வயல்களின் இடையே சென்ற ஒத்தையடி மண் தடத்தில் நடந்தார்கள். முதலில் சென்ற பெண், "பாத்து வாங்க.. ஒரே முள்ளா கெடக்கு..." என்றவாறே குனிந்து சிறு முள் குச்சி ஒன்றை கையிலெடுத்து தூர வீசி எறிந்தார்.



மண் பாதை, வயல்களை விட்டுவிட்டு, சிறு குன்றின் மீது ஏறத் துவங்கியது. வழியின் இரு நெடுகிலும் அடர்ந்த புதர்கள் கேட்பாரற்று வளர்ந்து கிடந்தன. கற்களையும் முட்களையும் கவனமாகத் தவிர்த்து விட்டு முன்னேறினர். குன்றின் சமபரப்பை அடைந்ததும் சங்கரிக்கு உற்சாகம் கரைபுரண்டது. சுற்றிலும் வயக்காடுகள். குன்றின் கீழ்புறம், மிதமான சரிவுகளைக் கொண்ட அடுக்குப் பாறை. அதிலே சறுக்கியபடியே சென்றால், கீழே மேலும் வயல்கள். சுத்தமான காற்று சுற்றிலும் சூழ்ந்திருந்த பொன்னான பூமி அது. காற்றின் மெல்லிய ஒலியையும், மரஞ்செடிகளின் அசைவையும், மனிதர்களின் பேச்சு சத்தத்தையும் தவிர்த்து, இரைச்சல் ஏதுமற்று இருந்தது.

ஆண்கள் முன்னமே அங்கு வந்துவிட்டிருந்தார்கள். கொஞ்சம் பெண்களும். புதிதாக வந்தவர்கள், தங்கள் சுமைகளை இறக்கி வைத்துவிட்டு வேலைகளில் சுறுசுறுப்பானார்கள். மூன்று மூன்று கற்களாகக் கூட்டி, சிறு அடுப்புகள் மூட்டப்பட்டன. விறகுகளுக்கு தீயிட்டு, மேலே பாத்திரமிட்டு, பொங்கலுக்கான உலை ஆரம்பமானது. சங்கரி, தனது ஒரு வயது சித்தி மகனை இக்கத்தில் இடுக்கிக்கொண்டு, மீதிப் பொடுசுகளை மேய்க்க ஆரம்பித்தாள். வேட்டுகள் முழங்க ஆரம்பித்ததும் சிறு குழந்தைகள் அழுது அலற, அந்த ஒரு வயதுக்காரன் மட்டும் இளங்கன்றாய்ச் சிரித்தான்.

"வெங்காட்டு வேலப்பன எல்லாரும் நல்லா கும்பிட்டுக்கோங்க.." பூசாரி சூடமேந்திய தட்டை எடுத்து வந்தார்.

"தள்ளுங்க.. தள்ளுங்க.." என்ற குரல் கேட்டதும் கூட்டத்தில் சிறிய பரபரப்பு தொற்றியது. நகர்ந்து நின்றார்கள். சுற்றிலும் மனிதர்கள் தன்னையே உறுத்துப் பார்ப்பதைக் கண்டு எதையோ உணர்ந்த ஆடு மேற்கொண்டு நகர மறுக்க, விடாமல் அதனை உறுதியாக இழுத்து வந்தான் கணேசன். கணேசன் சங்கரிக்கு மாமன் முறை. ஆட்டின் மீது சிறிது நீர் தெளித்தான். ஆடு இம்முறை எதையும் உணராமல் துளிர்த்துக் கொண்டது.

வலது கை கொண்டு குழந்தையின் கண்களைப் பொத்திவிட்டு, இமைகளை இறுக்கிக் கொண்டாள். "ஆச்சு.. கொஞ்ச நேரந்தான்.." அவனைச் சமாதானப் படுத்தினாள். இடையே தனது ஒற்றைக் கண் இமைகளை மட்டும் சற்றே தளர விட்டு, பின் மீண்டும் இறுக்கிக் கொண்டாள்.

*************

தொலைபேசி அழைத்ததும் சங்கரி படுக்கையறைலிருந்து எழுந்து வந்தாள். மாலையாகி இருந்தது பொழுது. தான் வர இரவு இரண்டு மணி போலாகும், காத்திருக்க வேண்டாம் என்று தகவல் கொடுத்தான் அவள் கணவன். கணினிக்கு உயிர் கொடுத்து, இணையப் பக்கமொன்றைத் திறந்து வைத்தாள். தேநீர் தயாரித்து, ஒரு கோப்பையில் எடுத்துக் கொண்டு, வந்தமர்ந்தாள்.

?????????????

இருளுடன் ஊடுருவிக் கலந்து, ஒளி மெல்ல மெல்ல தன் பலத்தைக் கூட்டி வெல்ல ஆரம்பித்திருந்த அந்த விடியற்காலை பொழுதில், சுமார் ஒரு மணி நேரத்திற்குள்ளாக, சங்கரியின் குழு வாழ்க்கை முடிவுக்கு வந்து விட்டிருந்தது. அந்தக் குழுவின் சிறிய எளிய குடில்கள் யாவும் சின்னாபின்னமாக்கப்பட்டு சூறையாடப்பட்டுக் கிடந்தன. என்ன நேர்ந்தது என்று விளங்கும் முன்னரே, அநேக மக்கள், விளங்கிக்கொள்ளும் நிலையைத் தாண்டி, நிரந்தர இருள்வெளியை நோக்கி பயணிக்க ஆரம்பித்து விட்டனர்.

சங்கரியும், எஞ்சியிருந்த கொஞ்சம் குழு மக்களும், தடியான நீளமானதொரு  மூங்கில் குச்சியால் கட்டப்பட்டு நடத்திச் செல்லப்பட்டார்கள். சங்கரிக்கு அழுகையாக வந்தது. அடக்கிக் கொண்டாள். இதெல்லாம் கனவாக இருந்து விடக்கூடாதா என்ற நப்பாசை அவ்வப்போது எட்டிப் பார்த்தது. உடம்பிலே ஏற்பட்டிருந்த காயங்கள், அவை தந்த வலிகள், அந்த நப்பாசையை நிராகரதித்து விரட்டின.

ஏதோ ஒரு ஊருக்கு அவர்கள் கொண்டு வரப்பட்டனர். வழிநடத்தியவர்களும் மனிதர்கள் தாம்.  ஆனால் இறுகிய முகத்துடன் உணர்வுடன் இருந்தார்கள். தான் வாழ்ந்த வாழ்க்கையை, தம்முடன் வாழ்ந்த மனிதர்களை நினைத்து வருந்திக் கொண்டிருந்தவள், மெல்ல நடப்பு நிலைக்கு வந்து, சூழலை உள்வாங்கத் துவங்கினாள். இது என்ன ஊர்? யார் இவர்கள்? ஏன் நம்மைச் சிறை பிடித்து வந்திருக்கிறார்கள்? நாமென்ன தீங்கு செய்தோம் இவர்கட்கு? இனி நம்மை என்ன செய்வார்கள்? வழியெங்கும் சங்கரியின் மனதில் கேள்விகள் எழுந்த வண்ணம் இருந்தன. வேற்று மனிதர்களின் முகபாவங்கள், செய்கைகள் மிகுந்த அச்சுறுத்தலைத் தந்தன. இரு நெடுகிலும் வேற்று மனிதர்கள் பரவசத்துடன் ஆர்ப்பரித்தவாறு இருந்தார்கள்.

மெல்ல ஒவ்வொருவராய் பீடத்தில் ஏற்றப்பட்டார்கள். பூசாரி ஒருவர் உச்சாடனங்களை உரக்கச் சொல்லிக் கொண்டிருந்தார். அங்கும் ஒரு சிறு பெண் தன் கண்களை இறுக்க மூடிக் கொண்டிருந்தாள்.

?????????????

சங்கரி சட்டென்று கணினியில் இருந்து வெளியேறி வந்தாள். மனம் இன்னமும் நடுங்கிக்கொண்டு தான் இருந்தது. பாஸ்ட் பார்வர்ட் பொத்தானை அமுக்கியதும், நடுக்கம் சற்று அடங்கியது. எழுந்து சென்று கொஞ்சம் தண்ணீர் அருந்திவிட்டு வந்தாள். படுக்கையில் சாய்ந்தமர்ந்தாள்.

?????????????

ஊர் கூடுவது நன்று.
இறையைக் கும்பிடுவது அவரவர் விருப்பம்.
ஓர் உயிரின் உணவாக இன்னோர் உயிரைப் புசித்து வாழ்வது இயற்கை.
ஆனால்... இறையின் பெயரால் ஒரு உயிரை எடுப்பதை, ஆதி மனிதன் வேண்டுமானால் அறியாமையால் செய்திருக்கலாம். பகுத்தறியத் தெரிந்த இன்றைய மனிதனுக்கு அது அறிவல்ல அழகல்ல என்று தோன்றியது சங்கரிக்கு.

*****************

13 comments:

  1. இறுதியாக வந்த காட்சிகள் அனைத்தும் apocalypto என்ற படத்தைத் தழுவி எழுதப்பட்டது.

    புரியாதவர்களுக்காக - கணினியில் ஒரு படத்தைப் பார்க்க ஆரம்பிக்கும் நாயகி, அந்தக் கதையின் காட்சிகளில் தானே இருப்பது போல் உணர்ந்து, பின் வெளியே வருகிறார். இதையும் சிறு வயது அனுபவம் ஒன்றையும் ஒப்பிட்டுப் பார்க்கிறார்.

    ReplyDelete
  2. /இந்தப் பதிவை இளகிய மனமுள்ளவர்கள் படிக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.. முக்கியமாக மஹி.. இமா.../
    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!எ.கொ.ச.இ.? சீரியஸா சொல்றீங்களா?? நிஜமாவே படிக்கவேணாமா?!!

    ReplyDelete
  3. ஆடு மட்டும் கண்ணில பட்டுது,இனி படிக்கல! /கணினியில் ஒரு படத்தைப் பார்க்க ஆரம்பிக்கும் நாயகி, அந்தக் கதையின் காட்சிகளில் தானே இருப்பது போல் உணர்ந்து, பின் வெளியே வருகிறார். இதையும் சிறு வயது அனுபவம் ஒன்றையும் ஒப்பிட்டுப் பார்க்கிறார். /இதைப் படித்து ஒரு மாதிரியா புரிஞ்சுகிட்டேன்.

    ReplyDelete
  4. சந்தூதூஊஊஊஉ, அதேன் மகிக்கும், இமாக்கும் தான் இளகிய இதயமா கர்ர்ர்ர்ர்ர்ர்.
    எனக்கும் விலங்குகளை பலி கொடுப்பது பற்றி கேள்விப்பட்டால் எரிச்சலா வரும். இப்ப குறைஞ்சு விட்டதா நம்புகிறேன்.
    nice story.

    ReplyDelete
  5. சூப்பரா இருந்துச்சு உங்களுடைய கதை... இந்த மாதிரி கதைகளை படிப்பது எனக்கு ரொம்ப பிடிக்கும்...

    ReplyDelete
  6. //புரியாதவர்களுக்காக - //
    என்னை மனசில வச்சு இதை எழுதின மாதிரி தெரியுதே!! :-))) நல்லவேளை எழுதுனீங்க, இல்லைன்னா வழக்கம்போல ‘ஞே’தான் நான்!!

    ஆமா, இதெல்லாம் இந்த காலத்துலயும் நடக்குதா என்ன? அந்தப் படம் நான் பார்க்கலை; பார்க்கவும் மாட்டேன்.

    ReplyDelete
  7. //இறையின் பெயரால் ஒரு உயிரை எடுப்பதை, //

    நீங்க ஆட்டை பலிகொடுப்பதை பற்றி சொல்லியிருந்தா ரைட்டுங்க

    அப்போ வெறுமனே அதுங்கள வெட்டி சிக்கன் 65 , மட்டன்ரோஸ்ட் சாப்பிடலாங் தானே குத்தமில்லையே சங்கரி!

    ReplyDelete
  8. @Mahi

    ரெட் கலர்ல கொட்டை எழுத்துல போட்டாத் தான் நம்புவீங்களா? :)) நன்றி மஹி..

    ReplyDelete
  9. @vanathy

    வான்ஸ்.. அவங்க ரெண்டு பேருக்கும் செல்லங்கள் மேல பாசம் அதிகம்.. அதான்.. சந்தூவையும் அந்த லிஸ்ட்ல சேர்த்தல.. அதனால சந்து கிட்ட இருந்தும் ஒரு கர்ர்ர்ர்ர்ர் :)

    நன்றி வான்ஸ்..

    ReplyDelete
  10. @ஹுஸைனம்மா

    அந்தப் படம் பாத்துடாதீங்க ஹூசைனம்மா.. பத்து நாளைக்கு சோறு உள்ள இறங்காது :) படத்துல காட்டியிருக்கறதுல நிறைய தவறு இருக்கறதா விவாதம் பண்ணியிருக்காங்க.. நான் பொதுவாக "மாயன்" அப்படின்ற தென்னமெரிக்க பூர்வகுடி மக்களைப் பற்றிய படமாக நினைச்சுத் தான் பார்க்க ஆரம்பிச்சேன்..

    ReplyDelete
  11. @ப்ரியமுடன் வசந்த்

    //நீங்க ஆட்டை பலிகொடுப்பதை பற்றி சொல்லியிருந்தா ரைட்டுங்க//

    அதைப் பத்தி தான்.. உணவுக்குன்னு சாப்பிடுங்க.. இறைவனுக்காக இதை கொடுக்கறேன்னு சொல்லி ஒரு உயிரைக் கொல்லாதீங்கன்னு தான் கதை..

    //அப்போ வெறுமனே அதுங்கள வெட்டி சிக்கன் 65 , மட்டன்ரோஸ்ட் சாப்பிடலாங் தானே குத்தமில்லையே சங்கரி!//

    இதுக்கான பதில் //ஓர் உயிரின் உணவாக இன்னோர் உயிரைப் புசித்து வாழ்வது இயற்கை.//

    வேற வழியில்லைங்க.. வாழனும்ன்னா எதையாவது சாப்பிட்டுத் தான் ஆகணும்..

    ReplyDelete
  12. ssssapppa... oru valiyaa padichu mudichutten...payment eppadi vaangikaradhu... (ha ha ha)

    ReplyDelete

பழைய வரிய மாத்தச் சொல்லீட்டாங்க.. இப்ப புதுசு “என்ன சொல்லனும்னாலும் தெகிரியமா சொல்லிட்டுப் போங்க” :)