09 June 2011

ஊர்சுற்றி 3....

நாங்க போன வாட்டி ஊருக்குப் போயிருந்தப்போ, கணவர் வீட்டுக்குப் பக்கத்துல ஒரு ஜோடி குடி வந்திருந்தாங்க.. புதுசாக் கல்யாணம் ஆனவங்க.. காதல் திருமணம்.. பெற்றோர் எதிர்ப்பை மீறித் திருமணம் செய்து போராட்டங்களுக்கிடையே வாழ்க்கைய நடத்திகிட்டு இருந்தாங்க.. அதுக்கிடையிலும் நாங்க கிளம்பும் போது எங்களுக்காக ரெண்டு பொம்மைகள் வாங்கித் தந்தாங்க.. அந்த ரெண்டும் இங்க எங்க வீட்டுல தான் இருக்கு.. இந்த வாட்டிப் போயிருந்தப்போ எப்படி இருக்காங்கன்னு வீட்டுல கேட்டதுக்கு, அவங்க ரெண்டு பேரும் பிரிஞ்சுட்டாங்க, இப்ப விவாகரத்துக்கு ஏற்பாடு பண்ணிட்டு இருக்காங்கன்னு சொன்னாங்க.. அதிர்ச்சியா இருந்தது.. அதுக்குள்ளேயான்னு.. அந்த ஆணோட குடி, சந்தேகம், நடவடிக்கை சரியில்ல, மனைவி மீதான வன்முறை - இதனால மனைவி தனியாப் போயிட்டதாவும், அந்தக் கணவர் அவங்களைச் சமாதானம் செய்றதுக்காக அவங்க வீட்டு முன்னாடி காத்துக் கெடக்கறதாவும் சொன்னாங்க.. அதுக்காக இருக்காரோ இல்ல வேற வாழ்க்கைய ஆரம்பிச்சிரப் போறான்னு காவல் இருக்காரோ தெரியல..  இனிமே அவரோட வாழுறது கஷ்டம், அதனால பிரிஞ்சுட்டாங்கன்னு புரிஞ்சாலும், என்னால அதைச் சாதாரணமாக் கடந்து போக முடியல, ஏன்னா இங்க மாதிரி இல்ல, அங்க காதலைத் திருமணம் வரைக்கும் கொண்டு போறதுக்கே, பொருளாதாரம் பெற்றோர் சம்மதம்ன்னு நிறைய இடையூறுகள்.. அதனாலேயே அப்படிப் போராடிக் கல்யாணம் பண்ணி உறுதியா வாழ்றவங்கள எனக்குப் பிடிச்சுப் போகும்.. இப்ப இவங்கள நினைச்சு, இதுக்காகவா இவ்வளவு போராட்டங்களைத் தாண்டி வந்தாங்கன்னு  கஷ்டமா இருக்கு..

எங்க ஊர்ல நானிருக்கும் போது ஒரு கொலை நடந்துருச்சு.. காரணம், மனைவியோட கள்ளக்காதல் ன்னு சொன்னாங்க.. கணவரே போயிச் சரண்டர் ஆயிட்டு எதோ டயலாக் விட்டிருக்கார்,  தான் செஞ்சது சரி தான் அப்படின்ற மாதிரி.. ஹ்ம்ம்..

எங்க உறவினர் ஒருத்தர் மண்புழுவை வச்சு இயற்கை உரம் தயாரிக்கறதுல ஈடுபட்டிருக்கார்.. அவர் கிட்ட விவரமாப் பேச நேரம் கிடைக்கல.. சுருக்கமா, ரசாயன உரம் போடாம அதை மட்டும் போட்டு விளைவிச்சா உற்பத்தி பாதிக்கப்படாதான்னு கேட்டேன்.. அந்தளவுக்கு பாதிக்கப்படாதுன்னு தான் சொன்னார்.. அடுத்தவாட்டி போறப்போ தீர விசாரிக்கணும்..

ஊர்ல அத்தை (மாமாவோட மனைவி) கம்பு ஆக்கித் தந்தாங்க.. அதை நீராகரமா சாப்பிட்டோம், பிடிச்சிருந்தது.. அந்தக் காலத்துல எல்லாம் சோளம் ராகி கம்பு தான் முக்கியமான உணவாம்.. அரிசிச் சோறு எல்லாம் அப்பப்பத் தான் இருக்குமாம்.. கம்பைச் சமைக்கறதுக்காக தயார் செய்யறதே பெரிய வேலையா இருக்கு.. அதைச் சுத்தம் செய்து, உரல்ல இடிச்சு, புடைச்சு, தவிடு நீக்கி, குருனையாக்கி.. அதுக்கப்புறமா சமைக்கணும்.. இதெல்லாம் என்னால ஆகற காரியமா??

ஹமாம் போட்டா rashes, allergy இதெல்லாம் வராதாம்.. காம்ப்ளான் சாப்பிட்டா பசங்க உயரமா வளருவாங்கன்னு விஞ்ஞானப்பூர்வமா நிரூபிக்கப்பட்டிருக்காம்.. அப்புறம் முக்கியமா, முன்னாடியெல்லாம் சிகப்பழகு நாலு முதல் ஆறு வாரங்கள்ல கிடைச்சிட்டு இருந்தது.. இப்பல்லாம் ஒரே வாரத்துல கிடைச்சுடுதாம்.. ஏனோ தெரியல, அங்க இருக்கும் கடந்து செல்ல நேரிட்ட ஒரு முதிய வறிய கிளி ஜோசியர் நினைவில வந்து போனார்.. இப்படியெல்லாம் சொல்லுறதால நான் இதுல எதையுமே உபயோகித்திருக்காத ஆளுன்னு நினைச்சுடாதீங்க.. சோப்பு போட்டுக் குளிச்சா புத்துணர்வா இருக்கும், அழுக்குப் போகும், உங்க தோல் தன்மைக்கேத்த சோப் - இப்படியெல்லாம் சொன்னா ஓகே.. அதைய விட்டுட்டு.. rashes, allergy எல்லாம் வராம இருக்கறதுக்கு அதென்ன மருந்தா?

வால்மார்ட் மாதிரி பெரிய டிபார்ட்மெண்டல் ஸ்டோர் ஒன்னு சங்கிலித் தொடரா ஒவ்வொரு ஊருலயும் வர ஆரம்பிச்சிருக்கு.. தென்மாவட்டத்துப் புள்ளைங்க வேலை செய்யறாங்க.. அங்காடித் தெரு நினைவு வந்ததுன்னு சொல்லித் தான் தெரியனுமா?

நெருங்கிய உறவினர் ஒருத்தர் வீடு கட்டப் போறதாச் சொன்னாங்க.. இப்பல்லாம் எஞ்சினியர்களே வாஸ்துவையும் உள்ளடக்கிக் கட்டிக் கொடுக்கறாங்களாம்.. வெளிய திண்ணை வச்சுக் கட்டச் சொன்னேன், அதெல்லாம் அவுட் ஆஃப் ஃபேஷனாம்.. அதுக்குப் பெரிய விவாதமே நடந்தது.. தெரியல, வீடுன்றது பல காலம் வாழப் போற இடம்.. தோற்றத்தை விட, நம்மோட வாழ்க்கை முறைகளை வசதிகளை முன்னிறுத்தி கட்டப்படனும்ன்னு நான் நினைக்கிறேன்.. இது ஒரு சின்ன உதாரணம் தான்.. இப்ப இருக்கிற வீட்டுல திண்ணை இருக்கு, பாட்டியால கீழ உட்கார முடியாது, சமையல் வேலைகள அதுல உட்காந்து செஞ்சுகிட்டு இருக்காங்க.. சாயந்திரம் மின்சாரம் இல்லாத நேரம் எல்லோரும் வெளிய வந்து உட்காந்து பேசறாங்க.. காய்க்காரம்மா வந்தாங்கன்னா கூடைய இறக்கி வச்சு உட்காந்து தண்ணி வாங்கிக் குடிச்சுட்டு வித்துட்டுப் போறாங்க.. பெரியவங்க யாராச்சும் கடந்து போனா உட்காந்து பேசிட்டுப் போறாங்க.. ஏன் அதை அவுட் ஆஃப் ஃபேஷன்னு விட்டுத் தரனும்?

இன்னொரு விவாதம் டாய்லட்களைப் பத்தி.. இந்தியனா வெஸ்டேர்னான்னு.. வயசான காலத்துல மூட்டு எல்லாம் தேஞ்சு போன பின்னாடி வெஸ்டேர்ன் தான் நல்லது, ஆனா ஒரு விஷயம் இடிக்குதே.. இங்க பேப்பர்  வச்சிருக்கான், எங்கயும் தண்ணி சிந்தாது.. அங்க அதுக்கேத்த மாதிரி ஒரு wired  ஷவர் வச்சாத் தானே சரி வரும்? இல்லாட்டி உக்காரும் இடம் அல்லது தரை அசுத்தம் ஆகிடாது?? வீட்டுல கூடப் பரவாயில்ல, பல பேரு உபயோகப்படுத்தற ஹாஸ்டல்ல இப்படிக் கட்டி வச்சுக் கொடுமப் படுத்துவாங்க.. ச்சை..
 
அம்மா ஆட்சி மலர்ந்தவுடனே மின்சாரத் தடைகள் குறையும்ன்னு நினச்சா, அந்த முதல் வாரம் கண்டபடிக்கு நிறுத்தி வச்சுட்டாங்க, அதும் இரவுல விட்டுவிட்டுப் போகும், கொசுக்களுக்கு ஒரே கொண்டாட்டமாப் போச்சு.. தூங்கவே முடியல.. இனிமே அவங்கவங்க வீட்டுத் தேவைக்கு அவங்களே உற்பத்தி செஞ்சுகிட்டாத் தான் உண்டு போல.. சூரிய ஒளி ல மின்சாரம் தயாரிக்கறதப் பத்திப் படிச்சுப் பாக்கணும், நாமே ஒன்னு வாங்கி நிறுவிக்க முடியுமான்னு.. இது மாதிரி விஷயங்களை எல்லாம் இலவசமாத் தந்தாங்கன்னா புண்ணியமாப் போவும்..

நான் பார்த்து வியந்த ஒரு விஷயமும் இருக்கு.. ரெம்ப பெருசா போயிடும் என்பதால அது அடுத்த இடுகையில..

கிளம்பற அன்னைக்கு ஒரு நண்பரை சந்திச்சோம்.. நாங்க மாறவே இல்லைன்னு சொன்னார்.. தோற்றமும் பேச்சும் அவ்வளவா மாறல தான், அதையத் தான் சொல்லியிருக்கார்..  சிந்தனைகள்ல கண்டிப்பா மாற்றம் ஏற்பட்டிருக்கு.. இன்னொரு நாட்டுக்கு வர்றோம், அங்க இருக்கிற விஷயங்களையும் உள்வாங்கி அலசி வளர்றது தானே இயல்பு?  ஆனா சில விஷயங்கள்ல நான் மாற விரும்பல,  எதை எடுத்துக்கணும் எதை விடனும்ன்னு முடிவு பண்ண வேண்டியது நான் தான்..

இன்னும் நாலஞ்சு வருஷத்துல ஊர் திரும்பிடலாம்ன்ற எண்ணம் தான் இப்போதைக்கு எனக்கு.. வேலை நிலவரம் குறித்து விசாரித்தப்போ, தனியாரிடத்திலே ஓரளவுக்கு இங்கிருப்பது போன்ற டெக்னாலஜி இருப்பதாக அறிந்தோம்.. ஆனால் பெற்றோர் இருக்குமிடத்திலே வேலை வாய்ப்பு saturated  ஆக இருக்கும் என்று தோன்றுகிறது. வேறேங்காவதும் சிறிது காலம் வசிக்க நேரிடலாம்.. ம்ம்.. பார்ப்போம்..

05 June 2011

ஊர் சுற்றி.. 2



பெரியண்ணன் நாட்டுல இருந்து கிளம்பி சென்னையில மூணு நாளு இருந்துட்டு அப்புறம் ஊருக்கு வந்து சேந்துன்னு ஒரு வாரம் ஓடிப் போச்சு.. சென்னைல இறங்குனதுல இருந்தே காலு ரெண்டும் கணுக் கணுன்னு வீங்கிக் கெடக்கு.. வீக்கம் விட்ட பாடில்ல.. அங்கயும் இங்கயும் சுத்திகிட்டே இருந்தா எப்படிக் கொறயும்.. கண்டங்களுக்கிடையே விமானப் பயணம் மேற்கொள்ளும் போது கால் ரத்தக் குழாய்களிலே ரத்தம் கட்டிப் போக வாய்ப்பு இருக்கு.. நான் ஏறுன மொத விமானம் அபுதாபி வந்து சேர்றதுக்கு பதினாலு மணி நேரம் ஆச்சு.. நான் வேற உட்காந்த இடத்த விட்டு எழாம தின்னுட்டும் தூங்கிட்டும் படம் பாத்துகிட்டும் இருந்துட்டேன்..  அந்த மாதிரி ரத்தம் உறைஞ்சு போயிருந்தா மருத்துவர் கிட்ட ஓடனும்.. மாத்ர மருந்து வாங்கித் தின்னனும்.. இருக்கிற தலைவலி பத்தாதா இது வேறயான்னு நொந்துகிட்டு ரெண்டு நாள் நல்லா ஓய்வெடுத்தேன், தூங்கும் போது பாதத்துக்குக் கீழ ரெண்டு தலையனைய முட்டுக் கொடுத்துத் தூங்குனேன்.. அப்புடியே கொஞ்சங் கொஞ்சமா நீர் வடிஞ்சு போச்சு.. திரும்பி வரும் போது உஷாரா விமானத்துலயே கொஞ்சம் நேரம் நடந்துகிட்டு இருந்தேன்.. இங்க வந்து ஒன்னும் ஆகல..
 
கல்லூரி மெஸ்சுல சில பல வருஷம் தின்னு வளர்ந்த அனுபவம் இருக்கு.. அங்க வெளயாட்டாப்  பேசிப்பாங்க.. இங்க இத்தன காலம் தின்னே உசிரு பொழைச்சிட்டோம்.. வேறென்ன நமக்குச் சேராம போகப் போவுதுன்னு.. ஒரு மெதப்புக்கு அப்படிச் சொல்லிக்கிட்டுத் திரிஞ்சாலும், அதுக்கப்புறம் அப்பப்ப வயித்தால போயிச் சரியாயிருக்கு.. amoebiasis மாதிரி.. ஆனா பெருசா பேதி ஆனதில்ல.. இப்பப் போயிருந்தப்ப ஊருல ஒரு நாள் முட்டைக் கொழம்பு வச்சுத் தந்தாங்க.. அதுல தான் என்னமோ பிரச்சனைன்னு நினைக்கிறேன்.. அன்னைக்கு ராத்திரி செம பேதி.. யாரையும் எழுப்பிக்கிட்டு இருக்கவேணாம், காலைல சொல்லிக்கலாம்ன்னு விட்டுட்டேன்.. விடியற்காலைல பாத்தா அப்படி ஒரு உடம்பு வலி.. தூங்கவும் முடியல.. எழவும் முடியல.. ரொம்ப வீக் ஆகிப் போச்சு.. வாய் உதடு எல்லாம் உலர்ந்து போய் சிறுநீர் போவதும் குறைஞ்சு போச்சு.. dehydrate ஆகிட்டேன் போல.. அப்புறம் நாலஞ்சு ors பாக்கெட் வாங்கி வரச் சொல்லி  தண்ணியில கலந்து குடிச்சேன்.. குடிச்சு கொஞ்ச நேரத்துல வலியெல்லாம் சரியாப் போச்சு.. பேதியும் கொறஞ்சு நின்னு போச்சு.. இதுல கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னன்னா, எங்க வீட்டுல லெற்றின் அறை மட்டும் வீட்டுல இருந்து கொஞ்சம் தூரம் தள்ளி இருக்கும் (லெற்றின் சிஸ்டம் எல்லாம் ஊருக்குள்ள அறிமுகம் ஆகாத காலத்துல கட்டப்பட்ட வீடு)... நல்ல வேளை, கணவர் வீட்டுல பக்கத்துலயே இருந்ததால தப்பிச்சேன் :))
 
எங்க நெருங்கின சொந்தக்காரங்க எல்லாத்துக்கும் (அப்பா அம்மா பாட்டி) ஏதாவது ஒரு வியாதி இருக்கு.. ஒரு வியாதின்னு சொல்றது குறைச்சல், ரெண்டு மூணு தான் நிதர்சனம்.. நோயற்ற வாழ்வுன்னு எல்லாம் எதுவும் இல்ல இனிமே, நோயோட வாழ்ந்து பழகிக்க வேண்டியது தான் போல... ரெண்டு மூணு வயதான பெரியவங்க (பெண்மணிகள்) கீழ விழுந்து கையக் கால உடைச்சுகிட்டு சரியாகி இருந்தாங்க.. ஃபோன்ல கால் வீக்கம்ன்னு சாதாரணமாச் சொல்லுறாங்க, அங்க போயிப் பாத்தா Congestive Cardiac Failure அப்படின்னு பெரிய diagnosis ஆ இருக்கு.. அவங்களுக்குத் தெரியறதில்ல, தெரிஞ்சாலும் நம்மகிட்டச் சொல்ல விரும்பறதில்ல.. சொன்னாக்க கவலைப்படுவோம்ன்னு.. நாங்க மட்டும் என்ன லேசுப்பட்ட ஆட்களா.. நாங்களும் அப்படித் தான் செய்றது.. :))
 
தேர்தல் முடிவு அறிவிக்கறப்போ நாங்க ஊர்ல தான் இருந்தோம்.. ஒரு அரசாங்க அலுவலகத்துல கொஞ்சம் வேலை இருந்ததால அங்க போயிருந்தோம், அங்க ஒரு தொலைக்காட்சிப் பொட்டி வச்சிருந்தாங்க (இலவசமாக் கொடுத்ததோ??), அதுல அப்பத் தான் ஒவ்வொரு தொகுதிலயும் யாரு முன்னணியில இருக்காங்கன்னு சொல்லிக்கிட்டு இருந்தாங்க.. ஒரே பரபரப்பா கவனிச்சிட்டு, அப்படியே மத்த சனங்க எல்லாரும் என்ன பண்ணிட்டு இருக்காங்கன்னு திரும்பிப் பாத்தா.. யாருமே செய்திய கவனிக்கக் காணோம்.. ஒருவேளை எல்லாருக்கும் ஏற்கனவே தெரிஞ்சதத் தான் செய்தியில சொல்லிக்கிட்டு இருந்தாங்களோ? :)) 

அதே மாதிரி இன்னொரு விஷயமும் தெரிஞ்சது, இன்னைக்கு அளவுல, தமிழகத்துல, நிஜவுலகத்தோட சேர்த்துப் பாக்குறப்போ இந்தப் பதிவுலகமெல்லாம் ஒரு புள்ளி மாதிரி தான், இங்க பேசப்படும் நிறைய விஷயங்கள இந்தளவுக்கு அவங்கள்லாம் யோசிச்சிருப்பாங்களான்னே தெரியல.. உதாரணத்துக்குச் சொல்லனும்னா திருமணப் பத்திரிக்கைகள்ல சாதிப் பேரெல்லாம் சாதாரணமாப் புழங்குது, அதை அவங்க பெருமைக்காகவோ சிறுமைக்காகவோன்னு இல்லாம சாதாரணமா ஒரு லாஸ்ட் நேம் மாதிரி அடையாளத்துக்குத் தான் போட்டிருக்காங்க.. அந்தப் பத்திரிக்கையத் தான் அங்க இருக்கிற எல்லாருக்கும் தருவாங்க, ஆனா அநேகம் பேருக்கு அது உறுத்தியிருக்காதுன்னு தான் நினைக்கிறேன்.. அதே மாதிரி கடைப் பேர்களும்..

பள்ளிக்கூடம் போற குழந்தைங்க இருந்த பெற்றோர் நிறையப் பேரு குழம்பிப் போய் இருந்தாங்க.. சமச்சீர் கல்வி கொண்டு வர்றதா முந்தைய ஆட்சியில சொல்லிருந்ததால, இனிமே பணம் கறக்கறது குறைஞ்சிடும்ன்னு தனியார் பள்ளிகள் எல்லாம் உஷாராயிட்டாங்க.. அதனால மெட்ரிகுலேஷன் பள்ளி நடத்திட்டு இருந்தவங்கல்லாம் அப்படியே ஒரு பக்கம் சி பி எஸ் சி பள்ளிகள் கட்ட ஆரம்பிச்சுட்டாங்க.. நான் கேள்விப்பட்ட வரைக்கும் வருஷத்துக்கு அறுவதாயிரத்துல இருந்து ஒரு லட்சம் வரைக்கும் கட்டணமாம்.. ஓரளவுக்கு வசதியாயிருக்கிற பெற்றோர்களுக்கு என்ன நெனப்புன்னா, சமச்சீர் கல்வின்னா படிப்புத்தரம் குறைஞ்சு போயிடும், அதனால வாயக் கட்டி வயித்தக் கட்டியாவது சி பி எஸ் சி பள்ளிக்கூடத்துல படிக்க வச்சிரலாம்ன்னு அங்க சேத்திட்டதா சொல்லிக்கிட்டு இருந்தாங்க.. வசதியில்லாதவங்க கொஞ்சம் பேரு குட்டிக் குட்டி மெட்ரிக் பள்ளிகள்ல கைய மீறிச் செலவு செய்து படிக்க வச்சிட்டு இருந்தாங்க, அவங்களெல்லாம் அதுலயே இருந்துக்கலாம் முடிவு பண்ணியிருந்தாங்க..  இப்ப அம்மா சமச்சீர் கல்விக்கு ஆப்பு வைக்கப் போறதால சி பி எஸ் சி க்கு மாறினவங்களுக்கு எல்லாம் வீண் செலவு.. ஆட்சி மாறினா இந்தளவுக்கா படிப்புல குழப்படி நடக்கணும்? எல்லாருக்கும் ஒரே சிஸ்டம் ன்னு கொண்டுவந்து அதோட  கல்வித் தரத்த மேம்படுத்துறதுல தானே கவனம் செலுத்தனும்?

உறவினர் ஒருத்தர்.. தேர்தல் முடிவு வந்ததுக்கப்புறம் தான் அவரப் பாத்தோம்.. அவர் சொன்னதுல இருந்து.. அவர் இப்போ வேலை செய்து கொண்டிருக்கும், வணிக ரீதியா நல்லபடியாகப் போய்க்  கொண்டிருக்கும் ஒரு பிரபல தனியார் firm அ வாரிசுத் தரப்புல இருந்து ப்ரெஷர் கொடுத்து வாங்க முயற்சி செய்திருக்காங்க... அவருக்குத் தெரிஞ்ச வரைக்கும் அனேகமா அது பெண் வாரிசு.. ஆட்சி கவுந்ததால அந்த நிறுவனர் இப்போ பெரிய ரிலீஃப் ல இருக்காரு.. பழம் நழுவிப் பால்ல விழுந்த கதையா, தோழி தரப்பு அடுத்த முயற்சிய மேற்கொள்ளாம இருந்தா சரி தான்.. :)
 
இன்னொரு உறவினர் மருத்துவர்.. கார்டியாலஜிஸ்ட்.. அவர்கிட்டப் பேசிக்கிட்டு இருந்ததுல இருந்து..  இப்ப குறைந்த வயசுலேயே நெஞ்சு வலின்னு வர்றவங்க எண்ணிக்கை அதிகம் ஆகியிருக்கு.. சமீபத்துல பாத்தவருக்கு 25 வயசு தான்.. மரபுரீதியான குறைபாடுகள் ஒரு பக்கம் இருந்தாலும், ஸ்மோகிங் மற்றும் ஸ்ட்ரெஸ் இது இரண்டும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவை அப்படின்னாரு..  

ஒரு உறவுக்காரப் பொண்ணு வீட்டுக்கு வந்து ரெண்டு நாள் தங்கியிருந்தது.. இருந்து பொழைக்கறது  பட்டிக்காட்டுல.. எளிய குடும்பம்.. படிக்கிறது ஆங்கில வழிப் பாடத்திட்டத்தைக் கொண்ட மெட்ரிக் பள்ளில.. இரண்டாவது மொழியா இந்தி.. அது அவங்கவங்க விருப்பம், இன்னொரு மொழி அதுவும் இந்தி கத்துக்கறது நல்லது தான்.. ஆனா ஆறாவது படிக்கிற புள்ளைக்கு தமிழ் தினசரியக் கையில கொடுத்தா கடகடன்னு வாசிக்கத் தெரிய மாட்டேங்குது.. எழுத்துக்கூட்டிப் படிக்கிறா.. தினமும் வாசிச்சுப் பழகுன்னு சொன்னேன்.. ஆனா அவங்க வீட்டுல நாளிதழ் வாங்கற பழக்கம் எல்லாம் இல்லையாம்.. ஹூம்.. 

நாங்க அங்க இருந்தப்பத் தான் இந்த வருஷத்துக்கான சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டன.. தமிழ்நாட்டுல இருந்து மூணு பேர் மொத அஞ்சு ராங்க்குள்ள வந்திருந்தாங்க.. நல்ல விஷயம்.. ஏன்னா தில்லிக்குப் போனாத் தான் பெஸ்ட் கோச்சிங் அப்படிங்கற நிலை மாறினா இங்க இருந்தே நிறைய பேரால படிக்க முடியும்.. கலெக்டர் வேலையா, அதெல்லாம் விமான நிலையத்துக்குப் போயி மந்திரிங்களக் கூட்டி வரணும், அரசியல்வாதிங்களுக்குச்  சலாம் போடணும், நிறைய ஊழல்களுக்குத் துணை போனாத் தான் நெலச்சி நிக்க முடியும்.. இப்படியெல்லாம் நெனச்சிருக்கோம்.. அதுவுமில்லாம அந்தளவுக்கு மனத்திடமும் இருந்ததில்ல.. இப்போ நாம பாத்துக்கிட்டு இருக்கற வேலைல நமக்குன்னு ஒரு வாழ்க்கைய உருவாக்கிக்க முடியுமே தவிர, அதுக்குமேல சிறிய அளவு மாற்றத்தைக் கூடக் கொண்டு வர முடியாது.. உறவுக்காரப் பையன் ஒருத்தன் பி எஸ் சி முடிச்சிட்டு ஒரு வேலை பாத்துகிட்டே இதுக்காகப் படிக்கப் போறேன்னு சொன்னான்.. லேசா பீலிங்க்ஸ் கிளம்புச்சு, ஆனா இனிமே எங்க படிச்சு, பரிச்சை எழுதி.. அதனால அவன ஊக்கப்படுத்தி விட்டோம்.. 

அவனோட பேசிகிட்டு இருந்தப்போ இன்னொரு விஷயமும் நினைவுக்கு வந்தது.. எங்க கல்லூரி சீனியர் ஒருத்தர் கலெக்டரா இருக்கார்.. நான் கல்லூரிக்குள்ள நுழையறப்போ அவர் முடிச்சிட்டுக் கிளம்பிட்டார்.. அவர் முகம் கூடத் தெரியாது,.. ஆனா சீனியர்ஸ்ட்ட இருந்து கேள்விப்பட்டிருக்கேன், அவர் எப்படித் திறமையா வெற்றிகரமா ஒரு ஸ்ட்ரைக்கை நடத்துனாருன்னு, அவரோட தலைமைப் பண்புகள், அறிவுக் கூர்மை பத்தியெல்லாம்.. அவரப் பத்தி செய்தியில நல்லவிதமாப் படிச்சதும் சந்தோஷமா இருந்தது.. இந்த முகம் மற்றும் பெயரில்லா ஜூனியர் அவரை வாழ்த்திக்கிறேன்.. வணங்கிக்கிறேன்.. 

இங்க refrigerator அ fridge ன்னு சொல்லுற வாய் எங்க ஊருக்குப் போனதும் ப்ரிட்ஜ் ன்னு சொல்லுது :) ஃபோன், போன் ஆகிடும் :) அப்படித் தான் ஊர்ப் பேச்சும், ஊருக்குப் போனா, ஊர்க்காரங்கள எங்கயாவது பாத்தா தானா அதே மாதிரி பேச வந்துடும்.. ஆனா இங்க அப்படிப் பேச விரும்பல :((((((((((( 
 
இன்னொரு பகுதி இருக்கு மக்கா.. ரெண்டு வாரம் இருந்து வந்ததுக்கு இத்தன அலம்பலான்னு எனக்கே தோணுது.. இருங்க ஒரு சோடா குடிச்சிட்டு வந்துர்றேன்.. 

27 May 2011

ஊர்சுற்றி.. 1

இருபது நாட்களுக்கான விடுமுறை.. ஆனால் ஊரிலே தங்கியிருந்ததென்னவோ பத்து நாட்கள் போலத் தான்.. போனது வந்தது கொஞ்சம் நாட்கள் ஓய்வு மற்றும் சென்னையில் கொஞ்சம் நாட்கள் என்று இதர நாட்கள் விரைவாகக் கரைந்து விட்டன.. 

***

அபுதாபி வழியாகச் செல்லும் விமானப் பயணம்.. அபுதாபியில் சென்னை செல்வதற்கான போர்ட் மிகவும் மோசமாக கையாளப்பட்டு வருகிறது.. எந்த கேட் பக்கம் போவது என்பதைக் கூட சரியாகச் சொல்லவில்லை.. அங்கே சென்றதுமே தமிழ்நாட்டுக்கு வந்துவிட்ட உணர்வு.. எல்லோரும் தமிழ் முகங்கள்.. பேச்சுத் துணைக்கு வேறு, ஆள் கிடைத்துவிட்டார்.. :)

விசா வேலைகளுக்காக சென்னையில் மூன்று நாட்கள் தங்க நேர்ந்தது.. கடுமையான வெயில், நெரிசல் மற்றும் வாகனப் புகை முதல் நாளில் தகிக்க வைத்தன.. குளிக்கும் போதே வேர்த்துத் தொலைத்தது :) 

கொஞ்சமே கொஞ்சமாக பச்சையம் அதிகரித்தது போல இருக்கிறது.. 

இரண்டாவது நாளிலேயே ஜனத் திரளுடன் கலந்து விட்டோம்.. தி நகர் செல்வதற்காக மின்சார ரயில் ஏறுவதற்காக பிளாட்பார்முக்கு வந்தால், விசாரித்து விட்டு ஏறுவோம், ஏதாவது மாறியிருந்தாலும் மாறியிருக்கலாம் என்றார் கணவர்.. அந்தந்தத் தடங்களில் முன்பிருந்தது போன்ற திசைகளில் தான் ரயில்கள் ஓடிக் கொண்டிருந்தன.. அப்புறம் என்ன, பாரிசும் தாம்பரமுமா இடம் பெயர்ந்து மாறி உட்கார்ந்திருக்கும்? :))

மின்சார ரயிலில் கூட்டமாக சில பதின்ம வயதுப் பையன்கள் ஏறினார்கள்.. டிப்ளமோ மாணவர்கள் என்று நினைக்கிறேன்.. அவர்களிலே ஒருவன் அடித்துப் பிடித்து இருக்கையில் அமரப் போக, அந்நேரம் பார்த்து ஒரு சிறு பெண் ஏறி வர, அவனை எழுப்பி விட்டு விட்டார்கள் அவனது நண்பர்கள்.. அந்தப் பொண்ணு உட்காரட்டும்டா என்று.. என்னே ஒரு soft corner :))

கூவம் நதிக்கரை வீடுகள் இன்னமும் அப்படியே தான் உள்ளன.. பிளாட்பார மக்களும்.. 

இரவு எட்டு மணி போல மொட்டை மாடியில் ஏறி நின்றால்.. ஈரப்பதம் மிகுந்த குளிர்ச்சியான கடற்கரைக் காற்று உடலைத் தழுவி மனதைக் கொள்ளை கொண்டது.. 

சென்னையிலே எல்லோரும் சொல்வது போல விலைவாசி மிகவும் அதிகரித்து விட்டது.. அங்கே வாழ்வதென்று வந்துவிட்டால், ஆரம்பத்திலே செட்டில் ஆவதற்கான விலை மிகவும் அதிகம்.. வீட்டுக்கான முன்பணம், வீட்டுக்குத் தேவையான சாமான்கள் வாங்குதல், வாகன வசதி, குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கான கல்விக் கட்டணம்.. என்று கேட்கும் போதே கண்ணைக் கட்டியது.. 

உணவகங்களில் உணவிற்கான விலை இரு மடங்குக்கு மேலேயே அதிகரித்து விட்டது.. அதுவும் விமான நிலையங்களில், டாலர் கணக்கில் என்று எடுத்துக் கொண்டால் தான் டீ காப்பி கூட வாங்கிப் பருக முடியும்.. ரூபாய்க் கணக்கில் பார்த்தால் எதையும் வாங்க மனசு இடம் தராது.. 

விசா நேர்முகத்தின் போது வெளியே நிறைய நேரம் காத்திருக்க வேண்டி வந்தது.. அப்போது ஒருவர் அந்த வெய்யிலில் கோட்டும் சூட்டும் அணிந்து ஏகத்துக்கும் வியர்த்து வழிந்து கொண்டிருந்தார்.. அவன் அவனுடைய சீதோஷன நிலைக்கேற்ற உடைகளை அணிந்து கொண்டிருக்கிறான்.. அவனது நாட்டில் வேலை செய்யும் அனுமதி பெற அவனைச் சந்திக்கச் செல்லும் போது அவனது எதிர்பார்ப்புகளுக்கேற்ற ஃ பார்மல் உடையை அணிய வேண்டியது அவசியம் ஆகிறது - இதை மறுக்க இயலாது.. ஆனால் அதற்கு முழுக்கைச் சட்டையும் முழு நீளக் காற்சட்டையுமே போதுமே.. டையும் கோட்டும் அவசியமா என்ன? நீ உனது தட்பவெப்ப நிலைகேற்ற உடைகளை அல்லவா தேர்வு செய்து அணிய வேண்டும்??

வேலை முடிந்ததும் விரைவு ரயில் ஏறி ஊருக்குப் பயணம்.. ரயில் பயணங்களின் சிறப்பம்சமே எதிர் இருக்கைகளில் அமர்ந்து அறிமுகம் பெற்று உரையாடியபடியே பயணம் செய்யும் பயணிகள் தான்.. ஆனால் இம்முறை எல்லா இருக்கைகளுமே ஒரே திசை நோக்கி இருக்குமாறு அமைக்கப் பட்டிருந்தன.. பேருந்துகளில் இருப்பதைப் போன்று.. bore ஆக இருந்தது.. 

***

07 May 2011

இடைவேளை..

ஊருக்குப் போறோம் மக்கா.. மே மாசக் கடைசியில திரும்பி வர்றோம்.. வந்ததும் சந்திக்கிறேன்.. அதுவரைக்கும் பை..  டேக் கேர்.. 

30 April 2011

விரலாலாகாத்தனம்..



எங்க தலைவர் (மேனேஜர் மாதிரி), துணைத் தலைவர் ரெண்டு பேருமே ஐரோப்பாவுல ஒரே நாட்டுல இருந்து இங்க இடம் பெயர்ந்தவங்க. ரெண்டு பேரு பேசுறதும் ஒரே மொழி தான்.. யாருக்கும் ஒன்னும் புரியாது.. :) தலைவர் தான் துறை மேலாளர்.. இவரு அநேக நேரம் வேலை செய்வது மெயின் அலுவலகத்துல..

இதுல இருந்து இருபது நிமிஷத்திய நடை தூரத்துல, இதே நிர்வாகத்துக்கு உட்பட்டு, இன்னொரு குட்டி அலுவலகம் இருக்கு.. அங்க, எங்க துறைல, இந்தத் துணைத் தலைவர் தான் கிட்டத்தட்ட மேலாளர் மாதிரி (ஏன்னா எங்க துறைல யிருந்து அங்க இருக்கிறதே அவர் ஒருத்தர் தான் :)) ) .. அவரோட வேலையில நெறய நேரம் அங்கன தான் கழியும்.. அப்பப்போ இங்கயும் வருவார்..

அந்தக் குட்டி அலுவலகத்துல எங்களுக்கும் வாரம் ஒரு நாள் வேலை செய்யணும்.. எனக்கு அங்க லொங்கு லொங்குன்னு இருவது நிமிஷம் நடந்து போய் வர்றது கூட  பெரிய பிரச்சனையா தோனல..  அங்க இருக்கற சுண்டெலி தான் பெரிய தொல்ல.. மெயின் அலுவலகத்துல இருக்கற சுண்டெலில பொத்தான்கள் அதிகமா இருக்கும்.. வேலைக்கான கணினிப் பக்கங்கள்ல முன்னே பின்னே போறதுக்கு கீ போர்டுக்கு அடிக்கடி கைய மாத்தத் தேவையில்ல.. அதே மாதிரி இன்னொரு பொத்தான அமுக்கி, வேகமாகவும் மெதுவாகவும் ஸ்க்ரோலிங் வேகத்த மாத்திக்கலாம்.. அந்த குட்டி அலுவலகத்துச் சுண்டேலில இப்படியான பொத்தான்கள் இல்ல. எனக்கு ஸ்க்ரோல் பண்ணிப் பண்ணி விரலெல்லாம் ஒரே வலியாயிடும்.. இந்தச் சுண்டெலிய தூக்கிப் போட்டுட்டு பெரிய அலுவலகத்துல இருக்கற மாதிரி வாங்கிக்கலாம்ன்னு துணைத் தலைவர் கிட்ட பரிந்துரை சொன்னன்.. ஒருக்கா சொல்லி ஒன்னும் மாறல... ரெண்டாவது வாட்டி இன்னொருத்தர்கிட்ட (இந்த ஆசிரியர் இந்தியர்) புலம்பினதுல, இவர் கிட்ட சொல்றத விட தலைவர் கிட்ட சொன்னீன்னா ஒரே நாளுல வேலையாயிடும்ன்னு சொன்னார்.. அவர் பேச்ச நம்பி, தலைவருக்கு உருக்கமா ஒரு ஈ மெயில தட்டுனேன்.. அதைய ஒரு காப்பியா துணைத் தலைவருக்கும் அனுப்பிவிட்டேன்..

அப்புறம் பாத்தா, அன்னைக்கு மதியம் துணைத் தலைவர் வந்து கன்னாபின்னான்னு கத்துறார்.. "என்ன நீயி, வேலைக்கு வந்து கொஞ்ச நாள் கூட ஆகல, அதுக்குள்ள எல்லாத்தையும் மாத்தனும்ன்னு நினைக்கறே.." எனக்கு ஒன்னும் புரியல.. நான் அப்படி என்ன தப்பு செஞ்சேன்? மாத்திப் பாக்கலாம் ன்னு விண்ணப்பம் போட்டது தப்பா? இவர்கிட்ட முதல்லயே  சொல்லியிருக்கேன், இவருக்கும் ஒரு காப்பி மெயில அனுப்பிவிட்டிருக்கேன்.. பிறகென்ன? "அப்படியெல்லாம் மாத்த முடியாது, நாங்க இங்க ரொம்ப நாளா இருக்கோம், எங்க விருப்பப்படி தான் எல்லாமும் இருக்கணும்.. நீ ஒரு நாள் தான் வர்ற, சுண்டெலிய உனக்கேத்த மாதிரி மாத்திட்டா அப்புறம் மத்த நாளெல்லாம் நாங்க என்ன பண்ணுறது? வேகமா ஸ்க்ரோல் பண்ணிட்டே போனா பாதியிதப்  பாக்காம மிஸ் பண்ணிடுவோம்.." இப்படி அவர் பேசிக்கிட்டே போக, நான் சொன்னேன், "மெயின் அலுவலகத்துல இருக்கற மாதிரி தான் வாங்கலாம்ன்னு சொன்னேன்.. நீங்க இப்ப ஸ்க்ரோல் பண்ற மாதிரி மெதுவாவும் பண்ணிக்கலாம், நான் சொல்ற மாதிரி வேகமாவும் பண்ணிக்கலாம்.. மிச்ச பொத்தான்களும் இதுல இருக்கற மாதிரியே உபயோகிக்க முடியும்.. எனக்கு கீ போர்டுக்கும் சுண்டெலிக்கும் மாத்தி மாத்தி கையை நகர்த்தரதுல சலுப்பாயிருக்கு.."

ஆனாலும் அவர் மனசு ஆறல.. "அதெல்லாம் முடியாது, நீ வேணும்னா உனக்குன்னு தனியா ஒன்னு வாங்கிவந்து வேலை பண்ணிக்கோ..", அப்படின்னு சத்தம் போட்டாரு.. எனக்கு கடியா இருந்தது, என்ன இப்படிச் சொல்றாரேன்னு.. "அப்படியெல்லாம் நீங்க சொல்லக் கூடாது. நான் ஒன்னும் பெருசா கேட்கல.. ஆப்டர் ஆல் ஒரு சுண்டெலி.. அதுவும் என் விரல் ரொம்ப வலிக்கரதால தான் கேக்கறேன்.. இதக் கூட செஞ்சுதர முடியாதா? என்னைய வாங்கிட்டு வரச் சொல்லுறீங்க? மெயின் அலுவலகத்துல என்னடான்னா, தலைவர் மானிட்டரை எல்லாம் தனக்குப் பிடிச்ச மாதிரி மாத்திட்டு இருக்கார்.. அதையெல்லாம் மாத்தித் தர்ற ஆளுங்க கிட்ட கேட்டா இதையும் தந்துட்டுப் போறாங்க?.."

எனக்கு ஐடியா கொடுத்தவரும் (இந்தியர்) அந்த நேரத்துல அங்கிட்டு தான் இருந்தார்.. இப்படியே காரசாரமா போன பேச்சு, கடைசியா எங்க வந்து நின்னதுன்னா, "என்ன இருந்தாலும் நீ தலைவர இதுல ஈடுபடுத்தியிருக்கக் கூடாது.. அவருக்கு இங்க எந்த அதிகாரமும் இல்ல.. எதுன்னாலும் என்கிட்டக் கேளு, நான் இங்கத்த ஆளுங்க கிட்ட பேசிப் பாக்கறேன்.." இதைச் சொல்லிட்டு துணைத் தலைவர் கிளம்பிப் போயிட்டார்.. எனக்கு மூஞ்சி உர்ருன்னு கெடந்தது.. ஆனா இந்த இந்திய ஆசிரியருக்கு பிரச்சனை என்னன்னு புரிஞ்சிட்டது.. "நீ கேட்டதுல எந்தப் பிரச்சனையும் இல்ல.. ஆனா இவர விட்டுட்டு நீ தலைவர் கிட்ட மனுப் போட்டதால தான் இத்தன கடுப்பும்.. அவங்களுக்குள்ள ஏதோ பிரச்சனைன்னு  நினைக்கறேன். ரெண்டு பேரும் முன்ன மாதிரி பேசிக்கறதில்ல.. "

எனக்கு ஏதோ வெளங்குனாப்ல இருந்தது.. அந்த இந்திய ஆசிரியர் மேற்கொண்டு எங்கிட்ட சாரி சொன்னாரு.. "என்னால தான உனக்கு இம்புட்டுத் தொந்தரவும்.. நீ கேட்டதுல எந்தத் தப்பும் இல்லன்னு தான் நான் நினைக்கறேன்.. அவரும் இப்படிப் பேசுறவர் இல்ல.. தலைவர் பேரு உள்ள வந்ததால கடுப்பாயிட்டாரு போல.. "

அப்புறம் சாப்பிடப் போயிட்டேன்.. என்னமோ மனசே சரியில்லாத மாதிரி இருந்தது.. சாப்பிட்டு முடிச்சிட்டு, மதிய வகுப்புக்காக, இந்திய ஆசிரியரோட, மெயின் அலுவலகத்துக்கு கிளம்பினேன்.. துணைத் தலைவரோட அறையைக் கடந்து தான் போவோணும்.. நம்ம இந்திய ஆசிரியர், அவர் கிட்ட, போயிட்டு ஒரு மணி நேரத்துல திரும்பிடுவோம்ன்னு சொன்னார்.. நான் டக்குன்னு உள்ள நுழைஞ்சு, "என்னை மன்னிச்சிடுங்க.. இந்த ரெண்டு அலுவலகத்துக்கு இடையிலே அதிகாரப் பகிர்வு எப்படி நடக்குதுன்னு புதுசா வந்த எனக்குத் தெரியாது.. அதான் குழப்பிட்டேன்.." ன்னு சொன்னேன்.. அவரும் ஆறி இருந்தாரு.. "பரவால்ல, ஏற்கனவே இந்தக் குட்டி அலுவலகத்து அதிகாரத்துல கொஞ்சம் குழப்படிகள் இருக்கு.. இதுல நம்ம தலைவரையும் இழுத்து விட்டோம்ன்னா ரொம்பக் கஷ்டமாயிடும்.. அதான்.." நானும் புன்னகைச்சுட்டே வந்துட்டேன்.. ஆறுதலா இருந்தது.. அதுக்கப்புறம் அதைய மறந்து போயிட்டேன்..

அடுத்த வாரம், அதுக்கடுத்த வாரம்ன்னு ரெண்டு மூணு தடவ சம்பவத்துக்கப்புறம் அங்க வேலைக்குப் போயிருந்தேன்.. துணைத் தலைவரும் வழக்கம் போல பேச ஆரம்பிச்சுட்டாரு.. மூணாவது வாரம், மதிய வகுப்புக்காக மெயின் அலுவலகம் போயிட்டுத் திரும்பறேன், வந்து பாத்தா என் டேபிள் மேல புது சுண்டெலிப் பொட்டி!!! அவ்வ்வ்வவ்வ்வ்வ்.... இந்தப்பக்கம் திரும்பிப் பாத்தா, பக்கத்து டேபிள்லயும் (நாங்க இருக்கற நேரத்துல அவர் அதுல வேலை செய்வார்) ஒரு புது சுண்டெலிப் பொட்டி.. (நெல்லுக்குப் பாயற தண்ணி அப்புடியே புல்லுக்கும் பாயுமாமே? :)) )அதைய பிரிக்காம கூட எடுத்துகிட்டு அவரோட அறைக்கு ஓடிப் போயி நன்றி சொன்னேன்..  அவர் புன்னகைச்சார்..


அப்பாகிட்ட சண்ட போட்டு பொம்ம ஒன்னு வாங்கிட்ட கணக்கா சந்தோஷமா இருந்தது :)


பிகு: மொதல்ல இதுக்கு MOUSE vs mouse அப்படின்னு தலைப்பு வச்சிருந்தேன்.. யாரையாவது வம்புக்கு இழுக்கலைன்னா நமக்குத் தான் தூக்கம் வராதே.. அதுக்குத் தான் இந்தத் தலைப்பு.. என்ன பண்றது, விரல்ல வலின்னு சொல்றதுக்கும் விரலால தான் டைப்பு பண்ண வேண்டியிருக்கு.. :)))) )

20 April 2011

ரத்தமின்றி.. கத்தியின்றி..

கிபி பத்தொன்பதாம் நூற்றாண்டு, வருடம் 21, திகதி -182.5. நேரம்: 8

ரிஜூஸால் அவனது ஆசிரியர் சொன்னதை லாஜிக்கலாகப் புரிந்து கொள்ளவே முடியவில்லை. இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் இருபத்தோராம் நூற்றாண்டு நிகழ்ந்தது என்றால், நாம் இன்று வாழ்வது இருபத்திமூன்றாம் நூற்றாண்டு என்று தானே எண்ணிக்கை வர வேணும்? பாடத்தின் இடையில் ஆசிரியரிடம் இப்படி ஒரு சந்தேகத்தைக் கேட்ட போது, அவர் அவனை ஒரு புழுவைப் பார்ப்பது போன்று பார்த்தார். இருபத்தோராம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆதி மனிதன், காலமென்பது ஒரு திசையில் மட்டுமே செல்லக் கூடியது என்று நம்பியிருந்தான். அதனால் தான் அவனது காலத்தில், வருடங்கள் எல்லாமே முன்னோக்கி நகர்ந்தன. அதற்குப் பின்னர் பற்பல ஆராய்ச்சிகள் மூலமாக, கணக்கியல் வல்லுனர்களும் காலவியலாளர்களும், காலம் இரண்டு திசையிலும் பயணிக்கக் கூடியது என்று கண்டுபிடித்தார்கள். அதனால் தான் இப்போது பத்தொன்பதாம் நூற்றாண்டில் இருக்கிறோம், அடுத்ததாக பதினெட்டாம் நூற்றாண்டை நோக்கி பயணிக்கப் போகிறோம் என்றார். 

வேகமாக ஒரு கம்ப்யூட்டர் போர்டில் ஃபார்முலாக்களை அவர் கிறுக்கிக் காண்பிக்க, அதே நேரம் மற்றும் வேகத்தில், பல்லாயிரம் மைல்களுக்குப் அப்பால் இருந்த இவனது அறையின் திரையில் அவை ஒளிர்ந்து கொண்டிருந்தன. இதெல்லாம் தனது புரிதலுக்கு அப்பால் என்று உணர்ந்த ரிஜுஸ், தனது அடுத்த சந்தேகத்தை கொஞ்சம் தயக்கத்துடன் கேட்டான், “அப்படியென்றால் இதற்கு முன்னர் நிகழ்ந்து முடிந்திருந்த பத்தொன்பதாம் நூற்றாண்டின் மனிதர்களைச் சந்திக்க முடியுமா?”. ஆசிரியர் கொஞ்சமும் தயங்காமல், இப்போது தான் அது குறித்த ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன, முடிவுகள் வெளிவர சிலகாலம் ‘முன்ன’ ‘பின்ன’ ஆகும் என்றார்.

அந்தக்கால மனிதர்கள் வருடத்தை நாட்களாகவும் வாரங்களாகவும் மாதங்களாகவும் பிரித்து வைத்திருந்தனர் என்று அவர் சொன்னது அவனுக்கு மிகுந்த ஆச்சர்யத்தைத் தந்தது. பருவ நிலைகள் மாறி மாறி வந்தாலும், நாளை என்பது நேற்று என்பதிலிருந்து மாறுபட்டது என்ற ஆதி மனிதனின் நம்பிக்கையை அறிவியல்பூர்வமாகத் தகர்த்தெறிந்து காலநிலைக் கணக்கு மாற்றியமைக்கப்பட்டதாகவும், அதன்படி, வருடத்தின் பாதி நாட்களின் திகதி தொடர்ச்சியாக அமைக்கப்பட்டு, பாதி வருடம் வரை கூட்டலிலும் மீதி வருடம் கழித்தலிலும் கழியும் என்று விளக்கினார். 

அந்நேரம் கதவு தட்டப்படும் சத்தம் கேட்கவே, பாடத்தில் ஆழ்ந்திருந்த ரிஜூஸ் இயல் நிலைக்கு வந்தான். ரியா தான் தட்டிக் கொண்டிருந்தாள். ஆசிரியரிடம் அனுமதி கேட்கவும், அவரது நாப்பரிமாண வடிவம் அறையில் இருந்து மறைந்தது. அதே நொடியில், வகுப்பறையில் ஆசிரியரின் முன் அமர்ந்திருந்த மாணவர்களில், ரிஜூசின் நாப்பரிமாண வடிவம் மறைந்து போனது.

ரியாவின் வருகைக்கான அனுமதியை ரிஜூஸ் உறுதி செய்ததும், அவளது வடிவம் அறையில் உருவெடுத்தது. "இன்று -பத்து மணிக்கு சைல்ட் மார்ட்டில் அவர்களது நிபுணருடன் கலந்துரையாட நாம் நேரம் வாங்கியிருக்கிறோம்.. உனக்கு நினைவுபடுத்திவிட்டுச் செல்ல வந்தேன்.." "ம்ம்.. வகுப்பு முடிந்தவுடன் உனக்கு தெரிவுபடுத்துகிறேன்.." என்றான் ரிஜூஸ். அத்துடன் ரியா அங்கிருந்து மறைந்து போனாள். ஆசிரியரின் அறையைத் தட்டி அனுமதி வாங்கி, மீண்டும் வகுப்பறையில் ஐக்கியமானான் ரிஜூஸ். 

****************

கிபி பத்தொன்பதாம் நூற்றாண்டு, வருடம் 21, திகதி -182.5. நேரம்: -10

சைல்ட் மார்ட் கட்டிடம் மிகப் பிரமாண்டமாக இருந்தது. முற்றிலும் குளிரூட்டப்பட்ட நிலையம். மிக விசாலமான வரவேற்பறை, அதிலே வீழ்ந்து வருவோர் போவோருக்கு சாரலைத் தெளித்துக் கொண்டிருந்த பெரிய நீர் வீழ்ச்சி, சூரிய வெளிச்சத்தை போன்றே ஒளிர்வூட்டிய செயற்கை ஒளி, இனிய இசை, என்று ரம்மியமான சூழலைக் கொண்டிருந்தது.  தங்களுக்கான அழைப்பு வந்ததும், நிபுணர் திரு சாம்சனின் அறைக்குள் நுழைந்தனர் இருவரும்.

திரு சாம்சன் தன்னை மரபணு வடிவமைப்பாளர் (genetic designer) என்று அறிமுகப் படுத்திக் கொண்டார். முதல் சந்திப்பில் நேரடியாகப் பேசுவது அவசியமென்றும், அடுத்தடுத்த சந்திப்புகளை இருந்த இடத்திலிருந்தே நடத்திக் கொள்ளலாம் என்றும் கூறினார். அவர்களைப் பற்றிய சில விபரங்கள் தேவைப்படுவதாகவும், அதைத் தொடர்ந்து சில பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும் என்றும், முடிவில் குழந்தையைக் குறித்த தங்களது எதிர்பார்ப்புகளை வெளிப்படுத்தலாம் என்றும் சொன்னார்.

ரிஜூஸ் மற்றும் ரியா பிறந்த பொழுது இம்மாதிரியான வசதிகள் எல்லாம் இருக்கவில்லை. அவர்களது பெற்றோரின் காலத்தில், முற்றிலும் உடலுக்கு வெளியே, கண்ணாடியால் ஆன சிறு பெட்டியினுள், பெற்றோரின் அரவணைப்புடன் சுயமாக இயங்கக் கூடிய மனிதக் குழந்தையை ஒரே மாதத்தில் உருவாக்கக் கூடிய அளவு தான் விஞ்ஞானம் முன்னேறி இருந்தது. அதன் வளர்ச்சியை முறையாகக்  கண்காணித்து நிறைவான ஊட்டச்சத்து அளித்து குறை வளர்ச்சி கொண்ட குழந்தைகளை சரிப்படுத்தியோ அல்லது அழித்துவிட்டோ, பிறப்புக் குறையற்ற குழந்தைகளை உருவாக்கிக்கொண்டு இருந்தார்கள். ரிஜூஸ் ரியா மற்றும் அவர்களது நண்பர்கள் எல்லோரும் அப்படிப் பிறந்தவர்கள் தாம். அதே காலகட்டத்தில் சில ஏழை நாடுகளில் வசதியற்ற பெண்கள் தங்கள் உடலினுள் கரு சுமந்து ஒன்பது மாதங்கள் வரைக் காத்திருந்து குழந்தை பெற்றுக் கொண்டிருந்தனர். அவர்களது பிள்ளைகளில் சிலர் குறைகளுடன் பிறப்பது தவிர்க்கவியலாததாக இருந்தது.

விபரங்கள் பெற்று முடிந்த பின்னர், ரிஜூஸ் மற்றும் ரியாவின் விரல் நுனிகளைச் சிறு ஊசி கொண்டு குத்தி, சில துளி ரத்தத்தை சிறு கண்ணாடிப் பேழையில் சேமித்துக் கொண்டார் திரு சாம்சன். பின் எழுந்து சென்று உள்ளறையில் ஒரு ப்ரீசரினுள் வைத்துவிட்டு தமது இருக்கையில் அமர்ந்து கொண்டார். இந்த ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் டி என் ஏ வையும், அவர்கள் கருவாக இருந்த பொழுது எடுத்து வைத்திருந்த மிக ஆரம்ப நிலைச் செல்களையும், ஒப்பிட்டு உறுதி செய்த பின்னர்,  அவற்றிலிருந்து டி என் ஏ வை ச் சேகரித்து, அதன் மரபணு அமைப்பை ஆய்ந்து, ஜெனிடிக் மேப் வரைந்தெடுத்துக் கொள்வோம் என்றார். அடுத்ததாக இருவரும் தங்களது குழந்தையின் உருவ அமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்று கணினியில் டிசைன் செய்து கொடுத்தால், அதற்கேற்ப இருவரின் டி என் ஏ விலிருந்தும் அந்தந்த ஜீன்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றின் மாதிரிகளை வெளி வேதிப்பொருட்களைக் கொண்டு கட்டமைத்து, பின்னர் அவற்றை ஒருங்கிணைத்து, அடிப்படை டி என் ஏ வை உருவாக்கி, அதிலிருந்து ஒற்றைச் செல்லை வருவித்து, அதை மேற்கொண்டு வளர விடுவோம் என்றார். 

வெளிப்புறத் தோற்றமானது, குழந்தை இருபது வயதை எட்டும் நிலையில் எப்படி இருக்க வேண்டும் என்று பெற்றோர் எதிர்பார்க்கிறார்களோ அதற்கேற்ற மாதிரி டிசைன் செய்வோம். உட்பாகங்களைப் பொறுத்த வரை, யாருடைய மரபணு சிறப்பாக இயங்கக் கூடிய உறுப்பு அமைப்பைத் தரும் நிலையில் இருக்கிறதோ, அதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றார். 

இப்படிச் செய்வதால், பிறவி நோயற்ற ஆரோக்கியமான குழந்தையை உருவாக்க முடிகிறதென்றும், இதன் மூலம் அவர்களுக்கு பின்னாளில் வரும் நோய்களும் பெருமளவு குறைகின்றன என்று அறிவியற்பூர்வமாக நிரூபிக்கப் பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். ஒரு மாதத்தில் குழந்தை கிடைத்துவிடும் என்றும், ஒரே நேரத்தில் இரண்டு பிள்ளைகளை உருவாக்கிக் கொள்ளலாம், அப்படிச் செய்தால் தனித்தனியாகச் செய்வதை விட விலை குறைவு என்ற ஆஃபர் இருப்பதாகவும் தெரிவித்தார். அது போக, சில பிரபலங்களின் ஜெனிடிக் மேப்பும் தங்களிடம் இருப்பதாகவும், அவர்களின் தோற்ற அமைப்பு போன்று வேண்டுமென்றால், ஒவ்வொரு பாகத்துக்கும் தனித் தனி செலவாகும் என்றார். இது அவர்களின் அனுமதியோடு செய்யப்படும் என்றும் உறுதிப்படுத்தினார்.  அவர்களைப் போன்று என்றால் அது எப்படி தங்களது குழந்தையாகும் என்று சட்டென்று ரிஜூஸ்க்குத் தோன்றியதால் உடனே மறுத்துவிட்டான். 

ரியாவுக்கு குழந்தையின் நிறம் இருவரையும் கலந்தது போன்று கோதுமை நிறத்தில் வேண்டும் என்று விருப்பம். கூந்தலமைப்பு தன்னைப் போன்றே சிறு சிறு சுருள்களாக இருக்கட்டும் என்றாள். ஆண் குழந்தைக்கு மூக்கு அவனைப் போன்றும், பெண்ணுக்கு அவளைப் போன்றும் என்று ஏற்கனவே முடிவு செய்திருந்தார்கள். இப்படியாக, கணினியில், கொஞ்சம் கொஞ்சமாக கண் உதடு தாடை கன்னம் என்று ஏற்றப்பட்டு, அவர்களது குழந்தைகளின் இருபது வயதுக்கான முகங்கள் முழுமை பெறத் துவங்கின. உயரம் இருவரையும் விடச் சற்று கூடுதலாக இருக்கட்டும் என்றார்கள். முழுவதும் உருவாகிய பின்னர், பார்வையிட்டு இன்னும் சில மாற்றங்கள் செய்த பின்னர், இருவருக்கும் திருப்தியாக இருந்தது. இறுதியாக, ரிஜூஸ், பெண் குழந்தைக்கு, உதட்டின் இடது ஓரத்தை ஒட்டிய கன்னத்து தோலில் சிறு மச்சம் வேண்டும் என்றான். 

**************

பெரும்பாலான கல்வி மற்றும் அலுவலக வேலைகள் இருந்த இடத்திலிருந்தே நடந்து கொண்டிருந்ததால், மக்கள் பயணிப்பது வெகுவாகக் குறைந்திருந்தது. அதனால் சாலைகளில் மிகக் குறைவான வாகனங்களே தென்பட்டன. தங்கள் வீட்டை விரைவாக அடைந்துவிட்டனர். உள்ளே நுழைந்ததும், ரியா, உறங்கப் போகிறேன் என்று சொல்லிவிட்டு தனது அறைக்குச் சென்றாள். ரிஜூஸ் தனது அறைக்குச் சென்று, கணினியைத் திறந்து, கோப்புகளின் ஏதோவொரு மூலையில் புதைந்து கிடந்த தனது முன்னாள் காதலியின் புகைப்படத்தைக் கண்டுபிடித்து பெரிதுபடுத்தினான். அவளது மச்சம் இடது பக்கமா இல்லை வலது பக்கமா என்று அவனுக்குச் சிறு குழப்பம் இருந்தது.. இடது பக்கம் தான், உறுதிப்படுத்திக் கொண்டான். 

***************

19 April 2011

சுயமரியாதை..



முரளிக்கு அன்று மனம் ஒரு நிலையில் இல்லை. அவனது கல்லூரியைச் சேர்ந்த மாணவர் விடுதியின் ஆண்டு விழா அன்று இரவு நடைபெறுவதாக இருந்தது. போகலாம் என்றும், இல்லை நேர விரயமென்றும், அவனுக்குள் போராட்டங்கள் நிகழ்ந்த வண்ணம் இருந்தன. சரி கொஞ்சம் நேரம் போயிட்டு வந்துடலாம்.. இல்லாட்டி அதையே நினைச்சுக்கிட்டு நேரத்த வீணாக்குவோம் என்று தோன்றியதால் கிளம்பிச் செல்வதென்று முடிவு செய்தான்.

முரளியைப் பற்றி சில வரிகள். கே ஜி எஸ் இன்ஜினியரிங் கல்லூரியின் இறுதி ஆண்டு மாணவன். டே ஸ்காலர். விடுதியில் தங்கிப் படிக்கும் அவனது நண்பர்கள், அவனையும் இதர டே ஸ்காலர் பசங்களையும் விழாவுக்கு வந்து விசிலடித்து ஆட்டம் போட்டு சிறப்பிக்கச் செய்யுமாறு அழைத்திருந்தனர். இதற்கு முன்பு ஒரு முறை முதலாம் ஆண்டு படிக்கும்பொழுது போய் வந்திருக்கிறான். அடுத்த இரண்டு வருடங்கள் சில காரணங்களால் போக முடியவில்லை.. இந்த வருடம் போயாக வேண்டும் என்று அவன் நினைக்க ஒரே காரணம், சிம்ரன்.. அவனுக்கு மிகவும் பிடித்த சிம்ரன். ஆம், நடிகை சிம்ரனே தான். அவரைத்தான் சிறப்பு விருந்தினராக அந்த நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தனர். அவரும் தனது வருகையை உறுதி செய்திருந்தார். மிகக் குறைந்த நேரமே என்றாலும் அவர் ஒப்புக்கொண்டதே அவர்களுக்கு பெரிய சந்தோஷத்தைத் தந்தது. சிம்ரன் மேலே முரளிக்கு செம க்ரேஸ்.. நளினமான உருவம், அழகிய முகத்தோற்றம், வெட்டி வெட்டி ஆடும் நடனம், அப்பப்போ நடிப்பு என்று கலக்கிய அவரை நேரில் காணக் கிடைக்கும் வாய்ப்பைத் தவற விடுவது தவறு என்று முரளிக்குத் தோன்றியது. 

போக வேண்டாம் என்று அவன் நினைக்கவும் ஒரே ஒரு காரணம் இருந்தது. அன்று வெள்ளிக்கிழமை. வரும் திங்கட்கிழமையில் இருந்து அவனுக்கு செமஸ்டர் பரிட்சைகள் தொடங்கப் போகின்றன. ஹாஸ்டலில் இருக்கும் இறுதியாண்டு படிப்ஸ் மாணவர்களும், கொஞ்சம் நேரம் மட்டும் தலை காட்டிவிட்டு அறைக்கு படிக்கப் போய்விடலாம் என்ற எண்ணத்துடன் தான் இருந்தார்கள். மற்றவர்கள், அன்றிரவு நன்றாக என்ஜாய் செய்துவிட்டு அடுத்தடுத்த நாட்களில் பார்த்துக்கொள்ளலாம் என்ற "தெளிவான" முடிவில் இருந்தார்கள்.

போகலாம் என்று முடிவு செய்ததும் கார்த்திக்கை அலைபேசியில் அழைத்தான். கார்த்திக், முரளியின் வகுப்புத் தோழன் மற்றும் விடுதி மாணவன். இருவருக்கும் படிப்பு, விளையாட்டு, சினிமா என்று நிறைய விஷயங்களில் ஒத்த ரசனைகள் உண்டு. கார்த்திக்குக்கும் சிம்ரனைப் பிடிக்கும். அவன்தான் இந்த விஷயத்தை முதலில் முரளியிடம் பகிர்ந்தது. கொஞ்ச நேரம் வந்துட்டுப் போயிடுடா என்று வற்புறுத்திக் கொண்டிருந்தான். முரளிக்காக அன்றிரவு விருந்துக்கு முன்னமே சொல்லி வைத்திருந்தான். கார்த்திக்கிடம், அலைபேசியில், சிம்ரன் வருவதற்கு அரை மணி நேரம் முன்பாக தனக்கு தகவல் சொல்லும்படி சொல்லிவிட்டு, முரளி முகம் கழுவப் போனான்.

கார்த்திக் மறுபடியும் அழைத்தவுடன், அம்மாவிடம் அதிகபட்சம் இரண்டு மணி நேரத்தில் வந்துவிடுவேன் என்று சொல்லிவிட்டு, யமஹாவில் ஏறிப் பறந்தான். மனம் கூண்டில் இருந்து விடுபட்ட பறவையைப் போல குதூகலித்துக் கொண்டிருந்தது. இதெல்லாம் பரிட்சை முடிந்தபின் நடந்தால் ரொம்ப நன்றாக இருக்கும் என்று தோன்றியது. கொஞ்சம் சாலை நெரிசல் இருந்தாலும் அதிகம் தாமதிக்காமல் போய்ச் சேர முடிந்தது. வழக்கமாகவே விடுதி களேபரமாகத் தான் இருக்கும். அன்றிரவு கண்டபடிக்கு களை கட்டியிருந்தது. மாணவிகளையும் வருமாறு அழைத்திருந்தார்கள். அவர்கள் பேட்சில் இருந்து யாரும் வரக் காணோம். நிறைய ஜூனியர் மாணவிகள் தென்பட்டார்கள். 

மூன்று வருடங்களுக்கு முன்பு விழாவுக்கென்று இங்கு வந்திருந்த போது நடிகர் விக்ரமை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார்கள். கூட, இவர்கள் துறையைச் சேர்ந்த ஒரு நிறுவன மேலாளரையும். விக்ரம் பேசிமுடித்து விழாமேடையில் இருந்து இறங்கி முன்வரிசையில் அமர்ந்ததும் முரளியின் நண்பர்கள் அவரை நோக்கி முன்னேறிச் சென்றார்கள். முரளியும் அவர்களுடன் இணைந்துகொண்டான். அவரை அருகில் இருந்து பார்க்க வேண்டும் என்று தோன்றியது. இவர்களைக் கண்டதும் விக்ரம் புன்னகைத்தார். அவரிடம் ஆட்டோக்ராப் வாங்க வேண்டும் என்றெல்லாம் தோன்றவில்லை.  ஆனால் மற்றவர்கள் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொள்வதைப் பார்த்ததும், இவனுக்கும் அந்த ஆசை எழுந்தது. நண்பனுடைய கேமராவில் தன்னையும் எடுக்கச் சொல்லி, நினைவில் வைத்திருந்து, அவனிடம் கேட்டு வாங்கி ப்ரிண்டும் போட்டுக் கொண்டான். இன்றும் அந்தப் புகைப்படம் அவன் வீட்டு பீரோவில் ஏதோ ஓர் ஆல்பத்தின் பிளாஸ்டிக் கவருக்குள் சிறைபட்டு படுத்துக் கிடக்கிறது. புகைப்படம் எடுத்துவிட்டு வரும்போது கார்த்திக்கைத் தேடினால், அவன் அந்த நிறுவன மேலாளருடன் கை குலுக்கிக் கொண்டிருந்தான். அதைப் பார்த்ததும் ஏனோ முரளிக்கு கொஞ்சம் பொறாமையாக இருந்தது.

கார்த்திக் வரவேற்பு ஹாலில் காத்திருந்தான். அவனுடன் சென்று சாப்பிட்டு முடித்து, மறுபடியும் வரவேற்பு ஹாலுக்கு வந்தமர்ந்து பேசிக்கொண்டிருந்த வேளையில், சிம்ரன் வந்தே விட்டார்.. விடுதியின் நுழைவுவாயிலுக்கும் விடுதிக் கட்டிடத்துக்கும் இடையே இருந்த பெரிய விளையாட்டு மைதானத்தில் தான் மேடை அமைக்கப்பட்டு நாற்காலிகளும் போடப்பட்டிருந்தன.  மேடையை அடைவதற்காக இவர்கள் நின்றிருந்த பகுதியை சிம்ரன் கடந்து போகும் பொழுது, ஹாலின் உள்ளிருந்து ஜன்னல் வழியாக, நிமிடத்திற்கும் குறைவான பொழுதில், அவரை ஓரளவுக்கு கிட்டே பார்க்க முடிந்தது. கருப்பு நிறச் சேலை அணிந்திருந்தார். முகத்தை சரியாகப் பார்க்க முடியவில்லை. ஆனால், நேரில் பார்த்ததை விட திரைப்படத்தில் அழகாக இருந்தார் போன்று தோன்றியது.

கூட்டத்தில் நிறைய பேர் பரபரப்பாகி எழுந்து நின்று விட்டார்கள். சிலர் முண்டியடிக்கவும் ஆரம்பித்தனர். விசிலுக்கும் கூச்சலுக்கும் குறைவே இல்லை. முரளியும் கார்த்திக்கும் விடுதிக் கட்டிடத்தை விட்டு வெளியே வந்து, கூட்டத்தின் முடிவில், மேடைக்கு வெகு தூரத்தில் நின்று கொண்டார்கள். ஏனோ இந்த முறை அருகில் சென்று பார்க்க வேண்டும் என்று முரளிக்குத் தோன்றவில்லை. சிம்ரனைப் பேச அழைத்தார்கள். கொஞ்சம் நேரம் தமிங்கலத்தில் என்னவோ பேசினார். அடுத்த நிகழ்ச்சியாக, ஆண்டுவிழா கொண்டாட்டங்களையொட்டி நடத்தப்பட்ட விளையாட்டு மற்றும் பல்சுவை போட்டிகளில் வெற்றிபெற்றோருக்கு, சிம்ரனின் கையால் பரிசளிப்பு ஆரம்பித்தது. இறுதியில் கலைநிகழ்ச்சிகள் நடைபெறுவதாக ஏற்பாடு. 

கார்த்திக்கின் பெயரும் மேடையில் அழைக்கப்பட்டது.. அவன் முரளியைப் பார்த்தான். "ஏன்டா.. போயேன்.." என்றான் முரளி. கார்த்திக் சிரித்தான்.. "ஸ்கிட் லயோ இல்ல டான்ஸ்லயோ ஜெயிச்சிருந்தா கண்டிப்பா போயிருப்பேண்டா.. வாலிபால் டீம் கேப்டனா போகனும்ன்னு தோனல.. சிம்ரன சிம்ரனா இருக்க விடுவோம்டா.. ரசிக்கறதோட நிறுத்திப்போம்.. ஆராதிக்கவும்  வேணாம்.. அப்புறமா தூக்கி குப்பையில போடுறதும் வேணாம்.."   

முரளி ஆமோதிப்பாய் புன்னகைத்தான். "சரிடா, நேரமாச்சு.. கிளம்பறேன்.." என்றபடி கார்த்திக்கின் தோளை ஒருமுறை தட்டி, பற்றி இறுக்கித் தளர்த்தினான்.. "போய்ச் சேர்ந்ததும் போன் பண்ணுடா.."   என்றான் கார்த்திக். பைக்கில் ஏறி நுழைவுவாயிலில் இருந்து வெளியேறும் முன், முரளி ஒருமுறை தலையைத் திருப்பிப் பார்த்தான்.. சிம்ரன் மேடையில் இருந்து இறங்குவதற்கு முன்பே மேடைக்குக் கீழே கூட்டம் சூழ ஆரம்பித்திருந்தது. கார்த்திக் விடுதியை நோக்கி நடந்து கொண்டிருந்தான்..


***************************

இது சில உண்மைச் சம்பவங்களை வைத்து எழுதப்பட்டது.. சிம்ரன் என்றால் இன்றைய சிம்ரன் அல்ல, அவர் பீக் இல் இருந்த போது நடந்தது.. என் தோழியின் அண்ணன் இவ்வாறு ஒரு நடிகையின் கையால் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றதற்கான பாராட்டுச் சான்றிதழைப் பெற மறுத்துவிட்டார் என்று கேள்விப் பட்டிருக்கிறேன்..


13 April 2011

பொன்(ண்ணு) எழுத்து..

மாட்டி விட்ட அதிராவுக்கு ஒரு கர்ர்ர்ரர்ர்ர்ர்.. 

பெண் எழுத்துன்னா? பெண்கள் எழுதுவதா? இல்லை பெண்களை மையப்படுத்தி எழுதப்படுவதா என்று கொஞ்சம் குழப்பம்.. நான் இந்த இரண்டாவது வகை எழுத்துக்களை அதிகம் படித்ததில்லை.. அதனால அதைக் குறித்து என்ன சொல்லுவது என்று தெரியல.. ஆனால், ஒரு பெண்ணாக, பெண்கள் அன்றாட வாழ்வில் சந்திக்கும் பிரச்சனைகளைச் சார்ந்து எழுதப்படுவதை வாசிப்பது உண்டு.. அது போன்றவைகளுக்கு ஆதரவும் உண்டு.. (அதுக்காக, "பசங்க மட்டும் ஹெவியா புல்லட்டு ஓட்டுறாங்க.. எங்களுக்கு மட்டும் ஏன் லைட் வெயிட்டா ஸ்கூட்டின்னு தனியா விக்கிறீங்க?" அப்புடின்னெல்லாம் யாராவது கேட்டாங்கன்னா ஓட்டம் பிடிச்சிடுவேன்..)

சரி.. முதல் வகைன்னு எடுத்துகிட்டா, நானும் பெண் தானே.. அப்ப நான் எழுதுவதெல்லாம் "பெண்" எழுத்து ஆயிடுமா? நான் எழுதும் போது அநேக நேரங்களில் "நான் பெண்" என்ற உணர்வுடன் எழுதுவதில்லையே? அப்போ அது எப்படி பெண் எழுத்தாகும்? 

அப்புறம் இந்த வரைமுறைக்கு வருவோம்.. எழுத்து என்பது, பிறரைச் சிதைக்காத வகையில, பொய்யை உண்மைன்னு வேணும்னே திரிச்சுப் பேசாத வகையில (ஒரு விஷயத்தில் மாற்று கருத்து கொண்டிருப்பதெல்லாம் இதிலே வராது) - வரைமுறை என்பது இப்படி இருக்கனும்ன்னு நினைக்கிறேன்.. இதுல ஆண் என்ன பெண் என்ன?

இருவருக்கும் பொதுவான விஷயங்களை அலசும் போது, எழுதுபவர் அல்லது பேசுபவர்களிடையே ஆண் பெண் என்ற வேறுபாடு எதுக்குத் தேவை? இப்படியான விஷயங்களை பொதுப் பார்வையுடன் முன்னெடுத்து எழுதும் பெண்களை வரவேற்கிறேன்.. 

அப்புறம், இந்த காமம்.. பாலியல்.. இது குறித்தெல்லாம் அறிவுப்பூர்வமா அறிவியல்பூர்வமா உணர்வுப்பூர்வமா - பெண்கள் எழுதினால் வரவேற்கிறேன்..  இப்படியாக இல்லாம, வெறும் உணர்ச்சிகளைத் தூண்டி விடும் நோக்கத்துடன் எழுதப்படும் எழுத்துக்களை யார் எழுதினாலும் - நோ வரவேற்பு.. ஆனா இது போன்றவைகளைப் படிப்பதும் படிக்காததும் ஒவ்வொருத்தர் விருப்பம், அதுல நாம எதுவும் சொல்ல இயலாது.. 

வேறென்ன சொல்ல? 

04 April 2011

கிராமத்து ஓவியங்கள்..

ஆனந்தவிகடனின் கவிதைப்பக்கத்தில் இளையராஜா அவர்களின் ஓவியங்களைப் பார்த்திருக்கிறேன்.. பார்த்து விட்டு தாண்டிச் சென்றுவிடுவது உண்டு.. கொஞ்சம் நாள் முன்பு கதிர் அவர்களின் பக்கத்தில் இதைக் காண நேர்ந்தது.. புகைப்படமா இல்லை ஓவியமா என்று குழம்பும் அளவுக்கு நேர்த்தியாக இருந்தது.. 



இதற்கிடையில் அவரது கேலரியைப் பார்க்கும் வாய்ப்பு, பிலாசபி பிரபாகரன் 
அவர்களது பக்கத்தில் இருந்து கிடைத்தது.. எனக்குப் பிடித்தவை சில, அதிலிருந்து.. 

மேலே சொன்ன மாதிரி, புகைப்படமா இல்லை ஓவியமா என்று குழப்பும் இந்தப் படைப்பும் ஒரு உயிரோவியம்... பொண்ணு கருப்பா இருந்தாலும் களையா இருக்கு ம்பாங்களே.. அது இது தானோ?


அவரது ஓவியங்களில் இருக்கும் நேர்த்தியும் அந்த கிராமத்துப் பின்னணியும் ரொம்பவே ஈர்த்தன.. உதாரணத்துக்கு இதைப் பாருங்க.. இதிலே இந்தப் பெண் ஒரு விறகடுப்புல சமையல் செய்து கொண்டு இருக்கா.. இந்தத் தலைமுறைக்கு முன்னாடி நம்ம எல்லோர் வீட்டுலயும் விறகடுப்பு தான் சமையலுக்கு.. நம்ம தலைமுறைல கேஸ் வந்தாச்சு.. எங்க பாட்டி (அப்பாவோட அம்மா) இன்னும் இதிலயும் மற்றும் மண்ணெண்ணெய் ஸ்டவ் அடுப்புலயும் தான் சமைக்கறாங்க.. அடித்தட்டு மக்கள் வீட்டுல இந்த அடுப்பு தான் இன்னிக்கும் சோறு பொங்க வைக்குது.. 

அந்தப் பாத்திரத்தைப் பாருங்களேன்.. ஒன்னு சைடுல லேசா ஒடுங்கி இருக்குது.. இப்படியான அலுமினியப் பாத்திரங்கள் தான் பெரும்பாலும் சமையலுக்கு... வாங்கறப்ப வெள்ளை வெளேர்ன்னு இருக்கறது, நாளடைவுல கீழாப்ல தீ படும் பாகம் மட்டும் கருப்பாகிடும்.. அந்தப் பொண்ணு கையில ஒரு ஊதுகுழலும், மூச்சுத் திணற வைக்கும் புகையும், தணலும் சாம்பலும்,  கொழுந்துவிட்டு எரியும் நெருப்பும் மட்டுந்தான் மிஸ்ஸிங்..


அடுத்தடுத்த படங்கள பார்க்க ஆரம்பிச்சா இதுல மிஸ்ஸானது எல்லாமே இருக்கு :) சுவத்துல கரித்திட்டு படிஞ்சிருக்கு பாருங்க.. 


இதுல இந்தப் பொண்ணு என்னமோ நெரிச்சுகிட்டு இருக்கா..  பொது வழக்குல   உரல்ன்னு சொல்லுவது இதையத் தானே? ஊர்ல இதுக்கு வேற பேரு.. பக்கத்துல கருப்பா இருக்கறது அளக்குற படி.. அது போக சாணி முறம்.. பித்தளை அண்டா.. மட்டை உரிக்கப்படாத முழுத் தேங்கா.. கூடவே மேயும் கோழி.. 

அந்தச் சுவற்றைப் பாருங்க.. அதுல திட்டு திட்டா விட்டுப் போன பெய்ன்ட்.. என்னைக்கோ ஒரு விசேஷத்தப்பயோ இல்ல நல்ல மகசூல் தந்த ஒரு சாகுபடி அப்பவோ பூசப்பட்ட சுவராக இருக்கணும்.. அடுத்து இந்தப் பொண்ணு கல்யாணத்தப்ப தான் அதுக்கு மேல் பூச்சு பூசி கலரேத்துவாங்க.. 


பூ கட்டும் இந்தப் பொண்ணு.. அதோட பாவாடையைப் பாருங்க.. சின்னப் புள்ளைகளுக்கு பாவாட தைக்கும் போது மடிப்பு வச்சுத் தச்சுப்பாங்க.. வளர வளர பிரிச்சு விட்டுக்கலாம்ன்னு .. அதையக் கூட விட்டுவைக்கல இந்த மனுஷன்.. ஒருவேளை புகைப்படமா எடுத்து அதுல முகத்த மட்டும் வரைஞ்சிருப்பாரோ??


ஒரு குறை என்னன்னா இதில எல்லாப் பெண்களுமே பட்டுடை உடுத்தி இருக்காங்க.. அது கொஞ்சம் உறுத்துது.. வீட்டுல இருக்கிற மாதிரி சாதாரண உடையில இருந்திருந்தா இன்னும் பொருத்தமா இருந்திருக்கும்..

கேலரிக்கான வழி.. 

*********************************************

எனக்கு திடீர்ன்னு பூ படத்துல வர்ற சூ சூ மாரி கேட்கணும் போல இருந்ததுன்னு யூ ட்யூப் ல கேட்டுகிட்டு இருந்தேன்.. அப்போ அதுக்கு கீழ இந்தப் பாட்டும் இருந்தது.. கேள்விப்பட்ட மாதிரி இருக்கேன்னு நினைச்சுப் போட்டேன்.. ரொம்ப பிடிச்சுப் போச்சு.. அருமையான கிராமிய வாடை.. 

இந்தப் புள்ளைகளப் பாருங்க.. என்னா ஆட்டம் என்னா ஆட்டம்.. கேரளால எதோ கல்லூரி போல... ஒரு கட்டத்துல இதுகளோட ஆட்டம் தாங்க முடியாம பாடறவங்க கீழ குதிச்சு வந்துருவாங்க :) நாம காலேசு படிக்கும் போது இந்தப் பாட்டு வராம போயிடுச்சேன்னு கொஞ்சமா ஏங்க வச்சிடுச்சு.. 

இதோட ஒரிஜினல் பாட்டை யூ ட்யூப் ல ரொம்ப நேரம் தேடி கிடைக்கவே இல்ல.. சரின்னு நம்ம தமிழ்ப்பதிவுலகத்துல தேடினப்போ தான் தெரிஞ்சது, இந்தப் படம் வெளி வரவே இல்லைன்னு.. பாதி தயாரிக்கப்பட்டு முடியாம கிடப்புல போட்டாச்சு.. படம் பேரு "இரண்டு பேர்".. ராம்கி, குஷ்பூ, சங்கவி நடிச்சதாம்.. இசை, சுனில் வர்மா (?சர்மா) ன்னு புது ஆளு.. பாடியது ஆபாவாணன் (இணைந்த கைகள், ஊமை விழிகள் படமெல்லாம் நினைவுல இருக்கா?, அதோட தயாரிப்பாளராம்.. இந்தப் படத்துக்கும் அவரே தயாரிப்பாளர்.. ) மற்றும் இசையமைப்பாளர்ன்னு போட்டிருந்தது..  மேலும், ஊமைவிழிகள் இசையமைப்பாளர்கள் மனோஜ்-க்யான் ல க்யானோட பையன் தான் இந்த சுனில் வர்மா (?சர்மா) ன்னு ஒரு உபரித் தகவல் வேற.. 



இது குட்டீஸ் வெர்சன்..  மடகாஸ்கர் எஸ்கேப் டூ ஆப்ரிகா படத்துல வர்ற பாட்டைப் போட்டு ரீ மிக்ஸ் பண்ணிவிட்டுட்டாங்க.. 

18 March 2011

இன்னும் இருக்கா??


ஜூன் 12 2007
சென்னை

நீ அமெரிக்கா கிளம்பிச் சென்று பதினைந்து நாட்கள் ஆகியும் இன்னும் என்னுடன் தொலைபேசாமல் இருப்பது என்னை மிகவும் ஆச்சர்யப்படுத்துகிறது. என்னைப் பற்றி துளியளவும் அக்கறை இல்லாத ஒருவருக்காக நான் எனது பொழுதை வீணடிக்கிறேனோ என்று கூட நினைக்கிறேன். நான் இங்கே ஒரு நாளைக்கு பன்னிரண்டு மணி நேரம் வேலை செய்து ஆறுமணி நேரம் தூங்கி எழுந்து உழைத்துக் கொண்டிருக்கிறேன். இருந்தும் தினமும் வந்து செக் செய்கிறேன் - உன்னிடம் இருந்து மெயில் வந்திருக்கிறதா என்று. ஒன்றையும் காணோம்..

நீ உனது பெற்றோரை அழைத்துப் பேசாமல் இருந்திருந்தால், உனக்கு தொலைபேசுவதில் ஏதோ பிரச்சனை என்று தான் நினைத்திருப்பேன். என்னைத் தவறாக நினைத்து விடாதே - அவர்களிடம் பேசியதற்காக உன்னைக் குறை சொல்லவில்லை. அவர்களிடம் பேசிவிட்டு ஏன் என்னிடம் பேசாமல் போனாய் என்று தான் கேள்வி. 

ஒரு ஐந்து நிமிடமும் சிறிதளவு பணமும் கூடவா உன்னால் செலவழிக்க முடியாது, என்னிடம் தொலை பேசுவதற்கு? இந்தப் பதினைந்து நாட்களாக நீ என்னைப் பற்றி நினைத்துக் கூட பாத்திருக்க மாட்டாய் என்று தான் நினைக்கிறேன். உடன் வேலை செய்யும் சங்கர் கூட, இன்று, ஏன் சோர்வாக இருக்கிறாய், உடம்பு சரியில்லையா என்று கேட்டான். அவனிடம் எப்படிச் சொல்வேன், உண்மையில் எனது பிரச்சனை வேறு என்று. 

உன்னுடைய இந்த பாராமுகம் என்னை மிகவும் வருத்துகிறது. எனது வேலையை பாதிக்கிறது. காதலனாக இருக்க வேண்டாம், ஒரு நண்பராகவாவது உன்னால் இருக்க முடியாதா? 

கடுமையான வேலைப் பளுவுக்கிடையிலும் இவ்வளவு பெரிய மெயில் எழுதுகிறேன். இதற்கு ஒரு வரி பதில் கூட எழுத மாட்டாய் என்று தெரியும். கடந்த ஒரு வாரமாக அடிக்கடி அழுது கொண்டிருக்கிறேன் - குறிப்பிட்டுச் சொல்ல வேறெந்த காரணமும் இல்லாமல்.. வேலை காரணமாக மனச் சோர்வும் அழுத்தமும் அடைந்திருக்கிறேன், அடிக்கடி உணர்வுவயப் படுகிறேன்.. அதனால் தான் அழுகிறேனோ.. இந்த மாதத்துடன் இந்த வேலை முடிந்தவுடன் சரியாகிவிடுவேனோ? தெரியவில்லை.. 

இதைப் படித்ததும் கொஞ்சம் நேரம் எடுத்து யோசித்துப் பார்.. நீ அடுத்த முறை என்னிடம் பேசும் போது இது குறித்து அலசி முடிவெடுக்கலாம். இப்படித் தான் இனியும் உனது நடவடிக்கை இருக்குமென்றால் - இத்துடன் விட்டு விடுவோம்.. நீ இன்னொரு பெண்ணைக் காதலித்து அவளை மணந்து சந்தோஷமாக இருந்து கொள். 

பை

கோபமும் அழுகையும் ஒரு சேர்ந்து பொங்கி வர, கடிதத்துக்கு காதலனின் முகவரியிட்டு, ஜி மெயிலின் சென்ட் பட்டனைத் தட்டி விட்டு, எழுந்து சென்று படுக்கையில் விழுந்து, அழ ஆரம்பித்தாள் ராதா. 

*****************************

ஆகஸ்ட் 20, 2010
கலிபோர்னியா 

கணினியில் தனது மெயில்களைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த ராதா, சோம்பல் முறித்து எழுந்தாள். காப்பி தயாரித்து, கணவன் சிவாவுக்கு கொடுத்து விட்டு, குளிக்கச் சென்றாள்.  அவள் மெயிலிலிருந்து லாக் அவுட் செய்ய மறந்ததை சிவா கவனித்து இருந்தான். ராதா குளியலறைக் கதவைத் தாளிட்டு, ஷவரைத் திறந்து விட்டதும், சட்டென எழுந்து வந்தான். அவளது லேப்டாப்பைக் கையில் எடுத்து, மிக வேகமாக இயங்கினான். 

அவர்களுடைய மெயில்கள் தனித் தனியாகத் தான் இயங்கி வந்தன. ஒருவரது பாஸ்வர்ட் இன்னொருவருக்குத் தெரிய வேண்டாம் என்று முன்கூட்டியே முடிவு செய்திருந்தார்கள். என்ன தான் கணவன் மனைவி என்றாலும், ஒருவரது தனிப்பட்ட வட்டத்தை இன்னொருவர் மதித்து நடக்க வேண்டும் என்பது தான் இருவரது விருப்பமும். ஆனால் கடந்த சில நாட்களாக சிவாவுக்கு என்னவோ ஒரு குறுகுறுப்பு..  இருப்பு கொள்ளவில்லை. எப்படியாவது அவளது மெயிலை எட்டிப்பார்த்து விடுவது என்று கங்கணம் கட்டியிருந்தான். 

காலத்தில் பின்னோக்கிச் சென்று வேகமாகத் தேடியவன், தனக்குத் தேவையானது கிடைத்தவுடன், உடனே பார்வர்ட் செய்தான். பின், ஒன்றும் தெரியாதவன் போல தன்னிடத்தில் வந்து அமர்ந்து கொண்டான். 

ராதா தலையைத் துவட்டிக் கொண்டே வந்தவள், காப்பிக் கோப்பையைச் சூடு செய்து, கணினியை மடியில் எடுத்துக் கொண்டு, சோபாவில் அமர்ந்தாள்.  புதியதாக ஒரு மெயில் வந்திருப்பதைக் கண்டதும், படிப்பதற்காக கிளிக்கினாள். 

****************

மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் மெயில், அவளுக்கே பார்வர்ட் செய்யப்பட்டிருந்தது. கூடவே ஒரு வரிக் கேள்வியும்..

"இந்த இன்னொரு பொண்ணக் கல்யாணம் பண்ணிக்கிற ஆபர் இன்னும் எனக்கு வேலிட் ஆ இருக்கா?"

அடுத்த நொடி அங்கே "ஐயோ அம்மா.. அடிக்காத.. கிள்ளாத.." என்ற அலறல் கேட்டது.. யார் யாரை அடித்திருப்பார்கள் என்பதை படிப்பவர்கள் யூகத்துக்கே விட்டு விடுகிறேன்.. :)

11 March 2011

சொல்லாத பேருக்கு... பொல்லாத காரணம்...


என் பெயரைச் சொல்ல விருப்பம் இல்லைன்னு ஏற்கனவே சொல்லியிருக்கேன்.. அதே தான் மறுபடியும்..


பெயர்க் காரணத்தைக் கேட்டால், என்னன்னு சொல்ல? எங்க ஊருல பொதுவான வழக்கம் என்னன்னா (தமிழ்நாட்டுல நிறைய ஊருல இப்படித்தான்).. கொழந்த பொறந்த உடனே, அது பொறந்த நாளு, நேரம் பாத்து குறிச்சு வச்சுப்பாங்க.. அதைய ஜோசியரு கிட்ட கொடுத்து ராசி நச்சத்திரம் எல்லாம் கணிக்கச் சொல்லி, ஜாதகம் எழுதச் சொல்லி, வாங்கி வச்சுப்பாங்க.. இந்த ஜாதகந்தா பிற்காலத்துல பலரோட தலைவிதிகளை நிர்ணயிக்கும் (நெஜமாத் தாங்க.. இதய வச்சுத் தானே பொருத்தம் பாத்து கண்ணாலம் கட்டி விடுறாங்க, அப்பிடிச் சொல்ல வர்றேன்).. அந்த மாதிரி தான் எனக்கும் என்னமோ நிர்ணயிச்சு, ரெண்டு மூணு எழுத்துகள அவரு சொல்லக் கேட்டு, அதுல தொடங்கற மாதிரி பேரத் தேர்ந்தெடுத்தாங்க.. எங்கம்மா ஒரு பேரை முடிவு பண்ணி வச்சிருக்க, எங்க பாட்டி (சின்னதா ஏதோ சடங்கு மாதிரி வச்சு, அவங்க மடியில போட்டு அவங்க வாயால பேர மூணு தடவ சொல்ல, அதிலேர்ந்து அந்தப் பேரு தான்) வெவரமா அதையே கொஞ்சம் மாத்திச் சொல்லி, மருமக வயித்தெரிச்சல வாங்கிக் கட்டிகிட்டாங்க.. அதுல இருந்து அதான் எம் பேரு..


மொதல்ல ஒன்னும் தெரியல.. பள்ளிக்கோடம் எல்லாம் போக ஆரம்பிச்ச பின்னால கொஞ்சம் பிடிக்காம போயிட்டது.. எங்க வீட்டுல கூட யோசிச்சாங்க, இவ்வளவு வெசனமாக் கெடக்காளே, மாத்தியிறலாமான்னு.. அப்புறம் அதுக்கு என்னென்னமோ செய்யணும்ன்னு அப்படியே விட்டாச்சு.. ஹூம்..


காலேஜ் வந்த பொறவு தான் கொஞ்சம் பிரச்சனையாச்சு.. அன்னன்னிக்கு பாடம் எடுக்கறவங்க அந்தந்த வகுப்புக்கு மட்டும் அட்டன்டென்ஸ் எடுப்பாங்க.. எம் பேரு கொஞ்சம் வித்தியாசமா இருந்ததால, கொஞ்சம் தடுமாறிட்டு, அதுக்கு பதிலா பையன் பேரு வர்ற மாதிரி ஒரு பேர தப்பாக கூப்பிடுவாங்க.. ஒருக்கா ரெண்டுக்கா இல்ல.. நெறைய வாட்டி இப்படித் தான்.. இதுல என்ன கொடுமைன்னா, அப்படி அவங்க கூப்பிடுற பையன் பேருல பாதிப் பேரு கொண்ட பையன் ஒருத்தரும் எங்க வகுப்புல இருந்தாரு.. அப்புறம் என்ன, நம்ம ப்றேன்ட்சு மக்களுக்கு ஒரே கொண்டாட்டந்தான்.. எம் பேரு தப்புத் தப்பா கூப்பிடப்படும் போதெல்லாம், அவர் அந்தப் பக்கமும் நான் இந்தப் பக்கமும் (எங்க காலேசுல, பசங்க பிள்ளைங்க தனித்தனியாகத் தான் உக்காருவோம்), ஓட்டப்படுவோம்.. யாராச்சும் வந்து அட்டன்டென்ஸ் எடுக்கும் போதே மனசு பக்கு பக்குன்னு அடிச்சுக்கும்.. இந்த வாட்டியாவது சரியாகக் கூப்பிட்டுத் தொலைக்கனுமேன்னு.. இல்லாட்டி இந்தக் களவாணிப் பயலுவ ஓட்டி ஒழிப்பானுவ.. அப்பவும் தப்பாத் தான் கூப்பிடுவாங்க..


இங்க வந்து இந்தத் தொரமாருங்க கூப்பிடற கூப்பிடுல, எம் பேரு எனக்கே மறந்து போயிரும் போல இருக்கு.. :) நல்ல வேள, இங்க கொஞ்சம் ப்றேன்ட்சு மக்கா கூப்பிடறதாலயும் அப்பப்ப பேனாவால பேரு எழுதி கையெழுத்துப் போடறதாலயும் இன்னமும் நினைவுல வச்சிருக்கேன்.. :)


புனைப் பேரு தான் எல்லாத்துக்கும் தெரியுமே - எல்போர்டு அலையாஸ் சந்து.. எல்போர்டு, புதுசா ப்ளாக் ஆரம்பிச்சப்ப என்ன பேரு வைக்கறதுன்னு தெரியாம வச்சது, அதே இப்ப நிலையா ஆயிட்டது.. சந்து, அதிரா திட்டறதுக்கு ஒரு பேரு வேணுமேன்னு கேட்டதால வச்சது.. ஏன் இந்தப் பேருன்னா, அதுக்கு வேணா ஒரு காரணம் இருக்கு, ஆனா அதைச் சொல்ல மாட்டேன் :)


இந்தக் கதை போதுமா?


26 February 2011

நடுநிசிப் பேய்கள்.. "விழிப்புணர்வு" விமர்சனம்..

இளகிய மனமுள்ளவர்கள் இதைப் படிக்க வேண்டாம்...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இதை எழுத வேண்டாம் என்று தான் நினைத்திருந்தேன்.. ஆனால் சிலர் இதற்கு வாங்கும் வக்காலத்தைப் பார்க்கும் போது, எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் என்றே தோன்றுகிறது..

நேற்று இரவு, ஒன்பதிலிருந்து பதினொன்று வரை, நடுநிசி நாய்கள் என்ற உன்னத காவியத்தைக் காண நேர்ந்தது.. த்ரில்லர் என்று நினைத்துப் பார்க்க ஆரம்பித்தது, ஆனால் ஆரம்பத்திலேயே தெரிந்து விட்டது - இது வேட்டையாடு விளையாடு வகையறாவுக்கு அண்ணன் என.. சரி என்ன தான் நடக்கப் போகிறது பார்க்கலாம் என்று பார்த்து முடித்தோம்..

சிட்னி ஷெல்டன் "Tell me your dreams" நாவலை எழுதும் போது நினைத்தே பார்த்திருக்க மாட்டார், தனது நாவல் தமிழ் சினிமா இயக்குனர்களுக்கு இந்தளவுக்குப் பிடித்துப் போகுமென்று.. எதோ ஒரு தோழியின் அறையில் கிடைத்த இந்த நாவல், நாளொன்றை வெட்டியாகப் போக்க உதவியது.. கதையில்,  ஆரம்பத்தில் மூன்று பெண்கள் வருவார்கள்.. ஒருத்தி பயந்தாங்கொள்ளி யாகவும், ஒருத்தி காதலிப்பது போன்றும், இன்னொருத்தி - சரியாக நினைவில்லை, ஆனால் இவர் தான் அந்த ஆண்களை கொலை செய்பவர்.. இதிலே ரெண்டு பேருக்கு மற்றவரையும் தெரியும்.. பிறகு ஒரு புள்ளியில் இவர்கள் மூவருமே ஒரே பெண்ணின் வெவ்வேறு மனோநிலைகள் (alters) என்று காட்டி, கோர்ட்டில் அவளை மனநிலை பாதிக்கப்பட்டவள் (Dissociative Identity Disorder) என்று நிரூபிக்க நடக்கும் போராட்டங்களையும் சொல்லி, அதற்கு காரணம் சிறு வயதில் அந்தப் பெண்ணுக்கு அவளது தகப்பன் செய்த sexual abuse தான் என்று முடியும்.. இந்தக் கதையைப் படித்து அப்போது என்ன நினைத்தேன் என்று நினைவில்லை..

இந்தக் கதையை இப்படியே எடுக்க மனமில்லாமல் அல்லது தெகிரியமில்லாமல், ஷங்கர், தனது வழக்கமான தேசிய உணர்வை அடிப்படையாகக் கொண்டு, லஞ்சத்துக்கு எதிராக ஆக்ரோஷமான தண்டனைகளைத் தரும் படமாக எடுத்தார்.. விக்ரமின் நடிப்பு, ரெண்டக்க ரெண்டக்க பாட்டு என்று மசாலா நன்றாகவே இருந்தது.. படமும் வியாபார ரீதியாக நன்றாகவே செய்தது என்று நினைக்கிறேன்..

இப்போது மீண்டும்.. ஆனால் இதிலே அப்படியே தலைகீழாக, தகப்பனின் sexual abuse இல் ஆரம்பிப்பது, Dissociative Identity Disorder இல் முடிகிறது என்று கதை செல்கிறது.. இத்தோடு நிறுத்தி இருந்தால் சிட்னி ஷெல்டனை ஒரு தமிழ் சினிமா இயக்குனர் எப்படி மிஞ்சுவது? அதனால், இதிலே பெண்ணுக்கு பதிலாக ஆண், அவன் தொடர்ந்து செய்யும் பாலியல் வக்கிரங்கள்..

Incest, child sexual abuse, group sex, rape, murder, serial killing, sadism, மற்றும் இது போக, pyromania என்று பல வகையறாக்களை தனித் தனி சீட்டுகளில் எழுதி, ஒரு பாட்டிலில் போட்டு குலுக்கி, சீட்டுகள் வந்த வரிசையில் எல்லாவற்றையும் கோர்த்து கதையை உருவாக்கினார் போலும்.. இத்தனை விஷயங்களையும் அடுத்தடுத்து ஒரே படத்தில் காட்டுவது விழிப்புணர்வுக்காகவா? இல்லை, பார்ப்பவர்களை ஒவ்வொரு காட்சிக்கும் அதிர்ச்சியுடன் பதைபதைக்க வைத்து பரபரப்புக்கு வழி செய்து காசு பார்ப்பதற்கா??

விழிப்புணர்வாம் விழிப்புணர்வு.. வெங்காயம்.. child sexual abuse மற்றும் incest க்கு விழிப்புணர்வு வேண்டும் என்று நினைப்பவர்கள், precious என்று ஒரு ஆங்கிலப் படம் வந்தது.. உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் என்று நினைக்கிறேன்.. அதைப் பாருங்கள்.. அப்போ தெரியும் அந்த உயிரின் வலி.. நான் இன்னும் பார்க்கவில்லை, என் தோழி பார்த்துவிட்டு அழுதேன் என்று சொன்னதால் தெகிரியமில்லாமல் விட்டு வைத்திருக்கிறேன்.. மகாநதியில் காட்டியிருப்பார்கள், ஒரு பதின்ம வயதுக் குழந்தைக்கு ஏற்படும் அவலத்தை.. அதையெல்லாம் இப்படியா திட்டினார்கள்?

சரி, மனநோய்க்காவது விழிப்புணர்வு ஊட்டியிருக்கிறாரா? இப்படி ஒரு நோய் உள்ளவனுக்கு என்ன பாதிப்புகள் ஏற்படுகின்றன, அவனை மற்றவர்கள் எப்படி நடத்துகிறார்கள், அதற்கு என்ன காரணங்கள், சரி செய்வது எப்படி.. இதெல்லாம் சொன்னால் தான் விழிப்புணர்வு.. இந்தப் படத்தைப் பார்த்தவர்களுக்கு என்ன தோன்றும்? இந்த மாதிரி ஒரு மனநோய் பிடித்த நாய் இருந்தால் என்ன செத்தால் என்ன என்று தான் தோன்றும்.. Childhood sexual abuse இனால் பிற்காலத்தில் இப்படி மனநிலை பாதிக்கப்படலாம் என்பதைத் தவிர்த்து, Dissociative Identity Disorder குறித்த என்ன மாதிரியான சித்தரிப்பு இது?

இயக்குனரே இறுதியில் சொல்கிறார் - அப்படிச் செய்யப்பட்டவர்கள் எல்லோருக்கும் மனநிலை இந்தளவுக்கு பாதிக்கப்படாது,  இந்தமாதிரி மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் எல்லாரும் இப்படியான காரியங்களைச் செய்வதில்லை என்று.. பிறகு ஏன் இப்படி - மிக அரிதான ஒரு possibility ஐ படமாக எடுக்க வேண்டும்? தகப்பன் தான் சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் குடித்துவிட்டு வந்து பொண்டாட்டி பிள்ளைகளைப் போட்டு அடிப்பதும், அதுகளை பட்டினி போடுவதும், படிக்கவைக்காமல் வேலைக்கு அனுப்புவதும்.. ஒரு பெண் இயலாமையினாலும் புருஷன் மீது இருக்கும் கோபத்தினாலும் பிள்ளைகளைப் போட்டு அடிப்பதும் - இதெல்லாம் கூட child abuse தான்.. இதையெல்லாம் எடுத்தால் பரபரப்பு இருக்காதே..

இந்த மாதிரியான சம்பவங்கள் நடைபெறாமல் இல்லை.. இந்தியாவில் நொய்டா வில் நடந்த child sexual abuse மற்றும் serial killing எல்லோருக்கும் தெரியும்.. ஆஸ்திரியாவில் ஒன்றிரண்டு வருடங்களுக்கு முன் தெரிய வந்த 42 ஆண்டுகால incest மற்றும் sexual abuse குறித்து செய்தியில் படித்துவிட்டு உறைந்து போயிருக்கிறேன்.. இப்படியான சம்பவங்களைப் படமாக்கியிருந்தால் கூட பரவாயில்லை.. எந்த அடிப்படையில் இப்படி ஒரு தொடர் வக்கிரச் சித்தரிப்பை இதில் தந்திருக்கிறார்?

மேலும், இந்தப் படம் எடுக்கப்பட்டு ரிலீஸ் செய்யப்பட்ட சமூகத்தின் பின்புலம் என்ன? அதன் பாலியல் கட்டமைப்பு, நம்பிக்கை, இப்படியான அதிர்வுகளை எதிர்நோக்கும் திறன், படிப்பு மற்றும் பகுத்தறிவுத் திறன் என்ன? இதைப் பார்ப்பதால் அம்மக்களுக்கு என்ன தாக்கம் ஏற்படும் என்று யோசித்தாரா? பிள்ளைகள் வயதுக்கு வரும் வரை பெற்றோருடன் ஒரே அறையில் தூங்கி வளரும் வழக்கம் தான் பல குடும்பங்களில் இருக்கிறது.. இதெல்லாம் கூட பரவாயில்லை.. தத்துத் தாயை மகன் கற்பழிப்பது போன்ற காட்சிகள் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும்?

இயக்குனருக்கு சிலவற்றுக்காக நன்றி சொல்ல வேண்டும்.. படத்தில் காட்டியிருக்கும் அவலங்கள் ஒன்றுக்கொன்று தொடர்புள்ளன (for example, child sexual abuse leading to post traumatic stress disorder, sexual perversions, and dissociative identity disorder) என்று உண்மையாக விளக்கியிருக்கிறார்.. நான் தேடிப் படித்தவரைக்கும், இது உண்மை தான்.. though the possibility of all such things occurring together would be rare.. மேலும், வன்முறைகளை நேரடியாக காட்டவில்லை.. ஆனால் செயல்களின் கொடூரங்களும் கதாப்பாத்திரங்களின் முகபாவங்களும் நமக்கு அந்த வன்முறையை உணர்த்தி விடும்..

இறுதியாக, படம் எந்த மாதிரியான விழிப்புணர்வை ஊட்டியிருக்கிறது என்றால், நாளை ஒரு வக்கிரம் பிடித்த, கூட பண மற்றும் அரசியல்/அதிகார பலம் உள்ள ஒருவன், இப்படியான காரியத்தைச் செய்துவிட்டு பிடிபடும் நிலையில், நெஞ்சு வலி என்று அரசியல்வாதிகள் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆவதைப் போல, சிறு வயதில் நானும் abuse செய்யப்பட்டிருக்கிறேன், அதனால் மனநிலை பாதிக்கப்பட்டிருக்கிறேன் என்று சொல்லி தப்பிக்க வேண்டுமானால் உதவும்..

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இது சில ஆங்கிலப் படங்களின் காப்பி என்றும் சில விமர்சினங்களில் படித்தேன்.. அப்படியான படங்களை பார்த்திராததால், அது பற்றி நான் எதுவும் சொல்வதற்கில்லை.. மேலும், இயக்குனரின் திறமை குறித்துப் பேச எனக்கு எந்த அருகதையும் இல்லை, சொல்லப்பட்ட கருத்தைக் குறித்து மட்டுமே எனது பார்வை.. 

17 February 2011

Infidelity - மேலோட்டமான ஒரு உரையாடல்


சென்ற சனிக்கிழமை ஒரு தோழி வீட்டுக்குப் போயிருந்தோம்.. எங்களுடன் எங்கள் நண்பரும்.. அந்தப் பெண்ணை நான் சந்திக்கப் போவது அதுவே முதல் முறை.. என் கணவருடன் வேலை செய்பவர்.. தமிழ் வம்சாவெளி.. ஆனால் தாத்தன் காலத்தில் மைசூருக்கு குடி பெயர்ந்தவர்கள்.. அவரது அப்பா அம்மா இங்கே (அமெரிக்கா) சிறிது காலம் இருந்து பின் நாடு திரும்பியவர்கள்.. கன்சர்வேட்டிவான குடும்பம்.. இந்தப் பெண் மற்றும் இரு தங்கைகள்.. அதிலே இவர் குழந்தைப் பருவத்தை, அதாவது பன்னிரண்டு வயது வரை அமெரிக்காவிலும், பதின்ம வயதை பெங்களூரிலும் கழித்துவிட்டு இப்பொழுது மீதும் இங்கே வாசம்.. அமெரிக்கக் குடிமகள்..

சாப்பிட்டுவிட்டுப் பேசிக் கொண்டிருந்தோம்.. மற்றவர்கள் எழுந்து சென்றுவிட, நானும் அந்தத் தோழியும் மட்டும் இப்போ சமையலறையில்.. பொழுதுபோக்கைப் பற்றிய பேச்சில் ஆரம்பித்த எங்களது உரையாடல் எங்கெங்கோ சுற்றத் துவங்கியது.. என்னுடைய பிரதானமான பொழுதுபோக்கு சினிமா பார்ப்பது என்று நான் சொல்ல, உனக்குப் பிடித்த படங்களைச் சொல்லு என்றார்.. எனக்கு ஓரளவுக்கு இயல்பாக இருந்தாலே பிடிக்கும்.. சமீபத்தில் ரசித்தது ஆடுகளம்.. ஆனால் அவருக்கு நமது பிராந்திய மொழிப் படங்கள் ஏதும் தெரியாது.. எனவே ஆங்கிலப் படங்களைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தேன்..


நான் பொதுவாகப் பார்ப்பது, ஓரளவுக்காவது நல்ல ரெவ்யூ வந்த படங்களைத் தான்.. அது எந்தக் களமானாலும் சரி.. முடிவு சோகமாக இருக்கக் கூடாது :)  படம் பார்க்க ஆரம்பிக்கும் போது கதை தெரியக் கூடாது.. அதில் மட்டும் கொஞ்சம் பிடிவாதம்.. இப்படித் தான் நான் பார்த்த ஒரு படத்தின் பெயரைச் சொன்னேன்.. அவருக்குத் தெரிந்து தானிருந்தது அந்தப் படத்தைப் பற்றி.. இயக்குனர் பெயர் கூட அவரே சொன்னார்.. பிறகு என்ன கதை என்று என்னிடம் கேட்டார்.. நான் சுருக்கமாகச் சொன்னேன்..


கதையில், ஒரு கணவன் மனைவி.. மனைவிக்கு ஒரு குற்றவுணர்ச்சி மனதிலே எப்போதும் இருக்கிறது - திருமணத்துக்குப் பின்னர் ஏதோ ஒரு நாளில் எவனோ ஒருவனைக் கண்டு மையல் கொண்டுவிடுகிறார்.. மனதாலே தான் நினைத்தார் என்றாலும் கூட, கொஞ்சம் அதிகப்படியாகவே நினைத்துவிடுகிறார்.. ஆனால் கணவன் தன் மீது மிகவும் பிரியமாய் இருப்பதைக் கண்டு உடனே மனதை மாற்றிக் கொண்டு விடுகிறார்.. ஆனாலும் இது உறுத்திக்கொண்டு இருக்க, இதை ஒரு நாள் கணவனிடம் சொல்லப் போக, கணவன் கோபம் கொண்டு, ஒரு மாதிரி பித்துப் பிடித்த நிலையில், பழி வாங்குவதற்கென்றே  பதிலுக்கு தானும் ஏதோ செய்ய நினைத்து, இறுதியில் மனைவிடமே வந்து மன்னிப்பு கேட்கிறார்.. இனி தங்களது திருமண வாழ்வு என்னவாகப் போகுதோ என்று அவர் நினைக்கையில், மனைவி சொல்கிறார் - இந்த ஒரு நாளை மறந்து விட்டு இத்தனை நாள் வாழ்ந்த வாழ்க்கையை நினைவில் வைத்து உறவைத் தொடருவோம்..


இதைச் சொன்னதுமே தோழி  மிகுந்த சினம் கொண்டார்.. எப்படி நீ இப்படி ஒரு படத்தை நல்லாயிருக்கு என்கிறாய் என்று.. நான் சொன்னேன், நான் எனது நிலைபாட்டில் உறுதியாக இருக்கிறேன்.. (அதுவுமில்லாமல், நான் என்ன கதை தெரிந்து கொண்டா பார்த்தேன்?).. அதைப் பார்த்ததால் புதிதாக ஒன்றும் தோன்றவில்லை.. கதையில் அப்படி வருகிறது என்றால், உண்மையில் அப்படித் தானே ஊருக்குள்ளும் நடந்து கொண்டிருக்கிறது.. உண்மை நிகழ்வுகளையெல்லாம் கடந்து செல்லும் போது, இதுக்கென்ன என்றேன்.. சிறு வயதிலேயே நான் வாழ்ந்த ஊரில் வசித்த சில மனிதர்கள் இது போன்று தாவிச் சென்றதைக் கண்டிருக்கிறேன்.. 


இது என்ன தலைவலி என்று தோன்றியது எனக்கு.. அவர் என்னைத் தவறாக நினைக்கிறாரோ என்றும் சங்கடமாக இருந்தது..  இப்படி ஒரு படத்தைப் பார்த்ததாலோ அல்லது இது விஷயமாகத் தெரிந்து கொள்ளலாம் என்று நினைத்தாலோ, உடனே இவளும் இப்படித் தான் என்று எப்படி முடிவு செய்ய முடிகிறது?  நான் ஒரு நோயைக் குறித்து அறிந்து கொள்ள விரும்புகிறேன் என்றால் உடனே இவளுக்கு அது இருப்பதால் தான் என்று நினைத்தால் எப்படி? கேள்விப்பட்டதாலோ இல்லை அறிந்து கொள்ளும் ஆர்வத்திலோ இருக்கப்படாதா? யாரும் விவகாரமாகத் தான் யோசிக்கிறார்கள், அடுத்தவர்களைப் பற்றி..


அவர் சொன்னார் - என்னால் அப்படி ஒரு நிலையை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.. ஒருவருக்கொருவர் உண்மையாய் இருத்தலே திருமண வாழ்வு.. நான் என் கணவனை (இன்னும் திருமணமாகவில்லை.. காதலித்துக் கொண்டிருக்கிறார்கள்..) விட்டுப் பிரிந்தால் அதற்கு இரண்டே காரணங்கள் தான் இருக்க  முடியும் - அவன் என்னை அடித்திருப்பான் அல்லது வேறு ஒருத்தியை நாடியிருப்பான்..


அவரது உறுதியும் தெளிவும் எனக்குப் பிடித்து இருந்தது.. இரு வேறு கலாச்சாரங்களில் வாழ்ந்த பெண்.. இரண்டையும் கலந்து எடுத்துக் கொண்டிருப்பதாகவே நான் நினைக்கிறேன்.. அதாவது, கணவன் எப்படி இருந்தாலும் பொறுத்து சகித்து வாழ விரும்பவில்லை.. அதே நேரம், சண்டையா ஒத்து வரலையா, உடனே பிரிந்து விடலாம் என்றும் நினைக்கவில்லை.. "நான் உன்னைக் காதலிக்கிறேன்.. உனது நிறைகுறைகளை ஏற்று வாழ்வின் இக்கட்டான நேரங்களிலும் உன்னிடம் கமிட்டடாக இருப்பேன்.. உண்மையாக இருப்பேன், அதையே உன்னிடமும் எதிர்பார்க்கிறேன்.. நீ என்னை விட்டு வேறு ஒருத்தி பின்னால் சென்றாலோ இல்லை துன்புறுத்தினாலோ, நானும் உன்னை விட்டுப் பிரிந்துவிடுவேன்" என்கிற மாதிரி.. 


நான் சொன்னேன், அப்படி ஒரு நிகழ்வை நேரடியாகக் காண்கையில் (ஊர் உலகத்தில் நடப்பவற்றை எல்லாம் சொல்லவில்லை), நான் அதற்கான காரணங்களை அலச விரும்புவேன்.. இப்படி நடக்கவே நடக்காது அல்லது நடக்கவே கூடாது என்று நம்புவதிலோ நினைப்பதிலோ விருப்பமில்லை..  மனித மனம், எல்லாம் அமைந்திருந்தும் இருப்பதில் சலிப்புற்று புதியதாக எதையாவது தேடி அலையக் கூடியதா (is it all innate??), இப்படி அலைபாயும் தன்மை மனிதருக்கு மனிதர் மாறுபடுமா, கணவன் மனைவிக்குள்ளே ஏதேனும் பிணக்கு இருந்து அதன் காரணமாக இப்படி வேறு உறவில் நாட்டம் ஏற்பட்டதா, வேறு ஏதாவது ஸ்ட்ரெஸ் ஆ, ஏதோ ஒரு புள்ளியில் ஆரம்பிக்கும் பழக்கம் தொடர்ந்து நடந்து ஈர்ப்பாக மாறி பின் காதலாக மாறுவதாலா, வளர்ந்த இடத்தின் கலாச்சாரம் (இங்கே பெரியதொரு தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர்களாக, பெற்றோர்கள், முக்கிய உறவினர்கள், ரோல் மாடல்ஸ் மற்றும் நண்பர்கள் - இவர்களின் வாழ்க்கையை மட்டும் கருத்தில் கொண்டு..) அதை உள்வாங்கியதன் விளைவாக சிலருக்கு வேறு  மனிதர்கள் மேல் நாட்டம் வருவதில்லையா, அப்படியே வந்தாலும் தவறு என்று உணர்ந்து உடனே முளையிலேயே கிள்ளி எரிந்து விடுவார்களா, குற்றவுணர்வுடன் அதைத் தொடருவார்களா, குற்ற உணர்ச்சியே இல்லாமல் ஏமாற்றுவார்களா இல்லை சொல்லிவிட்டுப் பிரிந்து விடுவார்களா.. இப்படியெல்லாம் இதை அணுகலாம் என்றேன்..

உண்மையில் அவரை விடவே நான் கன்சர்வேட்டிவ்.. இதை நான் விளக்க வேண்டியதாக இருந்தது.. புரிந்து கொண்ட பின்னர் நான் சொல்ல வந்ததையும் ஏற்றுக் கொண்டார்.. ஆனாலும், அவரால் இன்னொருவரிடத்தில் காதல் ஏற்படுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.. "நான் வேலையிடத்தில் நிறைய ஆண்களுடன் பழகுகிறேன்.. சிலரைப் பிடிக்கவும் செய்கிறது.. ஆனால் யாரையும் என் காதலன் இடத்தில் வைத்துப் பார்க்க மாட்டேன்.. அதுவே என்னைப் பொறுத்தவரை தவறு" என்றார்..


நீங்கள் conscientious personality ஆக இருக்கிறீர்கள்.. இது சரி இது தவறு என்ற தேடுதல் உங்களுக்கு இருக்கிறது என்றேன் (இவர் மற்றவர்களைப் பற்றி அவர்கள் இல்லாதபோது பேசுவதையும் விரும்பவில்லை என்பதையும் கண்டேன்).. ஒரு வேளை, அப்படிப்பட்ட புரிதல் இல்லாதவர்கள் இல்லை புரிந்தும் சுயநலத்துடன் சிந்திப்பவர்கள் பாதை மாறலாம் என்றேன்.. 


அவர் சொன்னார், இப்படிப்பட்ட மனிதர்களிடம் இருந்து நான் விலகி இருக்கவே விரும்புகிறேன்.. நான் சொன்னேன், என்னாலும் இப்படிப்பட்டவர்களிடம் (துணைக்குத் தெரியாமல் செய்பவர்கள்..  விவாகரத்து பெற்று வேறோருவரைக் காதலிப்பவர்கள் அல்ல) நட்பாக நெருங்க முடியாது.. ஆனால் வெறுத்து ஒதுக்கவும் மாட்டேன் என்று..


இப்படியாகத் தொடர்ந்த உரையாடல், வேறொரு விஷயத்தையும் மேலோட்டமாக அலசியது.. அதைப் பற்றி இப்போது எழுத மனமில்லை..அதற்குள் எங்களை வந்து எழுப்பிவிட்டார்கள்.. நாங்களும் விடைபெற்றுக் கிளம்பினோம்.. உரையாடியது நிறைவாகவே இருந்தது.. நான் என் கருத்து தான் சரி என்று சொல்லவும் இல்லை, அவரும் அதைச் செய்யவில்லை.. மாறாக மனதில் இருந்ததை அப்படியே பேசமுடிந்ததில், மற்றவரது கருத்தையும் அறிய முடிந்ததில் மகிழ்ச்சி.. பதிவுலகில் இப்படிப் பேச முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? முடிந்தால் இன்னொரு நாள் பேசலாம் என்றார்.. எங்கள் வீட்டுக்கு வந்து செல்லுமாறு அழைப்பு விடுத்தேன்.. 

16 February 2011

விழிப்புணர்வுக்காக..

இன்று நடந்த ஒரு சம்பவம்..

அலுவலகத்தில், எங்கள் வேலைகளை முடித்த பின், ஒரு மேற்பார்வையாளரிடம் காண்பித்து, அவர் சொல்லும் திருத்தங்களைச் செய்து முடித்த பின், கையெழுத்திட்டு, நிறைவு செய்வோம்.. 

இன்றும் அப்படித் தான் ராபர்ட் (வழக்கம் போல பெயர் மாற்றித் தான் சொல்லியிருக்கிறேன்) வந்திருந்தார் - மேற்பார்வை செய்ய.. எப்பவும் கொஞ்சம் வேலை பற்றிய பேச்சு கொஞ்சம் வெட்டிப் பேச்சு என்று கழியும் இந்த நேரம், இன்று ஏனோ ஒருவரும் பேசாமலே கழிந்து கொண்டிருந்தது..

இங்கு இடைச் செருகலாக, நேற்று நடந்த ஒரு குட்டி கலாட்டாவை சொல்லிவிடுகிறேன் - இந்த டீ காப்பி நிலையம் பற்றிச் சொல்லியிருக்கிறேன் இல்லையா.. அந்தப் பொருட்களைப் பூட்டி வைத்திருக்கும் கப் போர்டின் சாவி நேற்று தொலைந்து போய், எல்லோரும் தேடிக் கொண்டிருந்தனர்.. இறுதியாக, ராபர்டின் பான்ட் பாக்கெட்டில் இருந்ததைப் பார்த்துவிட்டு, இன்று காலையில் திருப்பித் தந்தார்.. இதை வைத்து அவரை ஓட்டுவதற்காக, என் சக அலுவலர் சாதியா எங்க மேசைக்கு வந்தார்.. உங்களால் நேற்று நான் டீ குடிக்கமுடியவில்லை, அதனால் எனக்கு தலைவலி வந்து சரியாக சாப்பிடவும் இல்ல.. அதனால, நீங்கதான் எங்களுக்கு இன்னைக்கு மதியச் சாப்பாடு வாங்கித் தரனும் என்று ஓட்டிக் கொண்டிருந்தார்.. இதற்கும் ராபர்ட் ஒன்றும் பதில் பேசவில்லை.. சிரித்துவிட்டு வேலையை சரிபார்க்கத் துவங்கினார்.. சாதியாவும் நகர்ந்து சென்றார்..

நானும் பார்க்கிறேன் - ராபர்ட் மவுசை ஸ்க்ரோல் செய்து கொண்டே இருக்கிறார்.. ஒருப்படியாக ஒரு குறிப்பும் சொல்லக் காணோம்.. எப்பவும் ஐந்து நிமிடத்தில் முடியக் கூடிய ஒரு வேலை, இருபது இருபத்தைந்து நிமிடங்கள் கடந்தும் ஒன்றும் ஆகக் காணோம்.. இது போன்று இன்னும் ஏழெட்டு சரிபார்த்தல்கள் மிஞ்சி இருந்தன.. இவ்வளவு நேரம் எடுக்கிறாரே என்று எனக்கு சலுப்பாக இருந்தது.. அப்படியே பக்கத்தில் இன்னொரு கணினியைத் திறந்து, மெயில்களைக் குப்பையில் தூக்கிக் கடாசும் வேலையைச் செய்து கொண்டிருந்தேன்.. 

திடீரென்று, இந்த இடம் சூடாக இருப்பது போல இருக்கு என்றார்.. எங்களுக்கு அவ்வளவாக வெப்பம் தெரியவில்லை.. பார்த்தால், அவரது நெற்றி வியர்த்திருப்பது போன்று இருந்தது.. 

இன்னும் முதல் வேலையே முடிக்கவில்லை.. மவுசை உருட்டிக்கொண்டே இருந்தவரிடம், எனக்கு இருந்த சில சந்தேகங்களைக் கேட்டேன்.. ஒரு நிமிடம் மாதிரி நான் பேசி முடித்து அவர் முகத்தைப் பார்த்தால், எந்த ரியாக்ஷனும் இல்லை.. கடுப்பாக இருந்தது.. "இப்போ நான் சொன்னதைப் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க?" என்று தெளிவாக அவரிடம் கேட்டேன்.. திரும்பி, "வாட்?" என்றார்.. மீண்டும் நான் விளக்கினேன்.. மறுபடியும், "வாட்?" தான் பதிலாகக் கிடைத்தது!

"உங்க உடம்புக்கு ஏதும் சரியில்லையா? Are you okay?" என்று கொஞ்சம் பயந்தபடியே கேட்டேன்.. திரும்பி என்னை முப்பது நொடிகள் முறைப்பது மாதிரி பார்த்தார்.. பிறகு மீண்டும் மவுஸ் உருட்டல்.. எனக்குப் பொறுமையே போய் விட்டது..  "உங்களுக்கு வேர்த்திருக்கிறது.." என்று சொன்னேன்.. மீண்டும் திரும்பி முறைத்துவிட்டு, "யா.. யா.. I am fine.." என்று சொல்லிவிட்டு, தொடர் மவுஸ் உருட்டல்.. 

என்னமோ சரியில்லை.. எனக்கு விளங்கினார் போல இருந்தது.. நானே அவசரமாக அந்த வேலையை மூடிவிட்டு, அடுத்த பக்கத்தைத் திறந்தேன்.. அதுக்கும் இப்படியே தெளிவில்லாமல் உருட்டல்.. அதையும் நானே மூடிவிட்டு அவரை ஏறிட்டேன்.. அவருக்கு தான் குழப்பத்தில் இருக்கிறோம் என்பதே புரியவில்லை.. அதனால் அதை ஒப்புக்கொள்ளவும் முடியவில்லை..  "லஞ்ச் சாப்பிட்டுவிட்டுத் தொடரலாம்" என்று சொல்லி அவரை எழுப்பிவிட்டேன்.. திடமாக எழுந்து நடந்து போனார்.. அவர் போவதைப் பார்த்துக்கொண்டிருந்த நான் உடனே இன்னொரு ஆசிரியரிடம் சென்று நடந்ததைச் சொன்னேன்.. நான் நினைத்ததே தான்.. அவர், தலைவரிடம் போய்ச் சொல்லு என்றார்.. எனக்குத் தயக்கம் - மாட்டி விடுவது போன்று ஆகிவிடக் கூடாதில்லையா? அதற்குள் இன்னொருவர், "ராபர்டின் நலனுக்காகத் தான் சொல்கிறோம், உனக்குத் தயக்கமாக இருந்தால், நான் போய் சொல்கிறேன்" என்றார்.. 

நான் அதற்குள் கீழே சென்று ராபர்டைத் தேடினேன்.. சாப்பிடச் சென்று விட்டார்.. இடையில் சந்தித்த சாதியாவும், ராபர்ட் தன்னிடம் சரியாகப் பேசவில்லை என்றார்.. நான் நிலைமையை விளக்கிவிட்டு என் வேலையை கவனிக்கச் சென்றேன்..

லஞ்ச் நேரம் முடிந்து, ராபர்ட்டுக்கு போன் செய்தேன்.. கீழே இறங்கி வந்தார்.. தெளிவாகப் பேசினார் - எப்போதும் போல.. அதே பழைய ஆளாக மாறியிருந்தார்.. நீ கிளம்பு, நான் மீதியைக் கவனித்துக் கொள்கிறேன் என்று சொன்னார்..

உங்களுக்கு என்ன காரணமென்று புரிந்ததா? 

ராபர்ட்க்கு சர்க்கரை நோய்.. இள வயதிலேயே வந்துவிட்டது.. அதற்கான மருத்துவம் எடுத்துக் கொண்டிருக்கிறார்..  அதன் விளைவு தான் இது - மருந்தினால் ரத்தத்தில் குளுகோஸ் அளவு மிகவும் இறங்கிப் போனதால், யோசிக்கும் திறனில் வந்த குழப்பம்.. Hypoglycemia (மேலும் தகவல்களுக்கு லிங்க் கொடுத்திருக்கிறேன்) பொதுவாக, இப்படிப்பட்டவர்கள் மயங்கி கீழே விழுந்து விடுவார்கள்.. அவர்களைக் கண்டவர்கள் மருத்துவமனைக்கு கூட்டிச் சென்று ட்ரீட் செய்வார்கள்.. இல்லை, அவர்களே  தங்களுக்கு இப்படி இருக்கிறது என்று உணர்ந்து உடனே சர்க்கரை மாத்திரை (நோய்க்கான மாத்திரை அல்ல, சர்க்கரையே தான்) அல்லது ஜூஸ் எடுத்துக் கொள்ளுவார்கள்.. சர்க்கரை நோய்க்கான மருந்து உட்கொள்ளும் எனது பாட்டி கூட அடிக்கடி தலை கிறுகிறுப்பதாகச் சொல்லுவார்.. ஆனால் என்னுடன் வேலை செய்பவர் நான் பார்த்து கொண்டிருக்கக் கொண்டிருக்க இப்படியானது எனக்கும் திகைப்பு தான்.. 

உங்களுக்குத் தெரிந்தவரும் யாரேனும் இருக்கலாம், சர்க்கரை நோய்க்கான மருந்துகளை எடுத்துக் கொண்டு - ஒரு விழிப்புணர்வுக்காகவே இதைப் பகிர்ந்திருக்கிறேன்.. ராபர்டுக்காக அறையில் சர்க்கரை மாத்திரைகள் வாங்கி வைத்திருக்கிறார்கள் என்று இது முடிந்ததும் தான் தெரிந்து கொண்டேன்.. அவர் திடமாக இருந்ததால் மட்டுமே அவரை சாப்பிட அனுப்பி வைத்தேன்.. இல்லையென்றால், அவரை அங்கேயே இருத்திவிட்டு, உடனே  மற்றவர்களை உதவிக்கு அழைத்து, அவரை எமர்ஜென்சிக்கு அழைத்துப் போவது போன்று ஏதாவது செய்திருப்போம்.. (ஏற்கனவே ஒரு முறை இவ்வாறு செய்திருக்கிறார்கள், அப்போது நான் நேரிடையாக அவ்விடத்தில் இல்லை.. அதற்கப்புறம் தான் அவருடைய உடல்நிலை குறித்து ஆசிரியர்கள் தவிர்த்த ஏனையோருக்கும் (என்னைப் போன்று) தெரிய வந்தது..)

14 February 2011

தொலச்சுப்போடுவேன் தொலச்சு..!




இன்னைக்கு மதியம் ஒரு விமானப் பயணம் இருந்ததால, ஒரு கேப் (டாக்ஸி) நிறுவனத்தைக் கூப்பிட்டு, என் வீட்டு முகவரியத் தந்திருந்தேன். இவங்க எப்பவும் சொன்னா சொன்ன நேரத்துக்கு வந்துடுவாங்க, நல்ல நேர்த்தி.. அதனால, நான் எப்பவும் இந்த கேப்ல தான் போறது! 

குறிப்பிட்ட நேரத்துக்கு, எங்க வீட்டு ஜன்னல் வழியா எட்டிப் பார்த்த பொழுது, அங்க எனக்காக ஒரு கேப் காத்துக்கொண்டிருந்தது. நானும் தயாராக இருந்ததால, உடனே கீழ வந்துட்டேன். கேப்பை கிளப்பினதும், அந்த ஓட்டுனர் திரும்பி எங்கிட்ட, “இதுக்கு முன்னாடி நான் உங்களைக் கூப்பிட்டுப் போயிருக்கேனா?” ன்னு கேட்டார். எனக்கு அவரைப் பார்த்த மாதிரி நினைவு இல்லன்னு சொன்னேன். உடனே அவர், “உங்களுக்குத் தெரியுமா? நான் இந்த முகவரிக்கு வரக் கூடாதுன்னு நினைச்சிருந்திருக்கேன். தெரியாம இன்னைக்கு வந்துட்டேன்..” னார்.

ஏன் இப்படிச் சொல்றார்ன்னு நினைக்கும் போதே, அவர், “ஆமா.. உங்க வீட்டுல இருந்து யாராவது இந்தியப் பயல் விமான நிலையத்துக்கு எங்க கேப்ல போயிருக்காங்களா? குறிப்பிட்டுச் சொல்லணும்னா, சுமார் ஒரு மாசத்துக்கு முன்னாடி?” ன்னு கேட்டார். நான் யோசிச்சேன்.. எங்க வூட்டுக்காரர் சமீபத்துல விமானப் பயணம் ஏதும் போனதில்ல.. “எங்க வீட்டுல இருந்து யாரும் போயிருக்க வாய்ப்பில்ல.. கீழ் வீட்டுப் பையன் வேணும்னா போயிருக்கலாம்.. அவன் ஐரோப்பிய அமெரிக்கன்..” ன்னேன். “இல்ல.. நான் சொல்ற ஆளு இந்தியன்.. இள வயசுக்காரன்..” ன்னார்..

யாராயிருக்கும்ன்னு குழம்பினேன் நான்.. “அன்னைக்கு அந்தப் பையன் பெரிய கூத்து பண்ணினான்.. அவன் சொன்ன நேரத்துக்கு நான் எங்க நிறுவனத்திலிருந்து ஒரு கேப் அனுப்பியிருந்தேன்.. அந்த ஓட்டுனர், அவனுக்காக வெளிய காத்துட்டு இருந்திருக்கார்.. அவனைக் கூப்பிட்டுச் சொல்லுங்க ன்னு எனக்கு அலைபேசில சொன்னார்.. நானும் அவனோட அலைபேசிக்கு மணியடிச்சுப் பார்க்கறேன்.. எடுக்கவே மாட்டேன்றான்.. இப்படியே அரை மணி நேரத்துக்கு மேல ஆயிடுச்சு.. இதுக்கு மேல காத்திருந்து பயன் இல்லன்னு, அந்த ஓட்டுனர் திரும்பிவரப் போறதாச் சொன்னார்.. இல்ல, வர்றாதீங்க, அவன் அங்கதான் இருக்கறான், எப்படியும் கொஞ்ச நேரத்துல வந்திருவான்னு நான் அவரை சமாதானப்படுத்தி வச்சிருந்தேன்..”

“அந்தப் பையனை மறுபடியும் மறுபடியும் கூப்பிட்டுப் பார்த்தேன்.. பதிலே இல்ல.. அதுக்கப்புப்புறம் பதினஞ்சு நிமிஷம் கழிச்சு ஒரு வழியா போனை எடுத்து, எங்க இருக்கிறன்னு கேட்டா, விமான நிலையத்துல ன்னு சொல்றான்.. எப்படிப்பா வந்தன்னா, உங்க நிறுவனத்துக் கேப்ல தான்னு சொல்றான்.. நான் செம கடுப்பாயிட்டேன்.. அப்புறம் தான் தெரிஞ்சது, அவன் இன்டர்நெட் மூலமா எங்களுக்கு போன் செய்து, அவனுடைய செல் நம்பர் கொடுத்து முன்பதிவு செய்திருக்கான்.. அவனோட போனுக்கு அந்த வீட்டுல இருந்து சிக்னல் கிடைக்கல.. எப்படியோ அரைமணி நேரத்துக்கப்புறம், வெளிய கேப் நிற்கரதப் பாத்துட்டு அவனே இறங்கி வந்திருக்கான்.. எங்கள இப்படிக் காக்க வச்ச கடுப்பு எனக்கு இன்னமும் போகல..”

“இன்டர்நெட் போன்..” “அந்த வீட்டுல இருந்து சிக்னல் கிடைக்கல..” இந்த வரிகளக் கேட்டதும் எனக்குப் பொறி தட்டுச்சு.. கடந்த சில மாதங்களா நம்ம ஒடன்பொறப்பும் பக்கத்து மாநிலத்துல தான் குப்ப கொட்டிக்கிட்டு இருக்காப்ல.. ஒரு மாசத்துக்கு முன்னாடி, எங்க வீட்டுக்கு வந்துட்டு திரும்பிப் போகும் நேரம், நாந்தான் இந்தக் கேப் நிறுவனத்துல முன்பதிவு செய்துக்கோன்னு, இவங்க தொலைபேசி எண் கொடுத்திருந்தேன்.. அன்னைக்கு எனக்கு வேலை இருந்ததால நான் அலுவலகம் கிளம்பிப் போயிட்டேன்.. அவனோட போனுக்கு எங்க வீட்டுல சிக்னல் கிடைக்காது..

மெதுவா அவர் கிட்ட, இது என்னோட சகோதரனா இருக்கலாம்ன்னு சொன்னேன்.. அவரு திரும்பி ஒரு மொறை விட்டாரு.. எதுக்கும் உறுதி படுத்திக்கலாம்ன்னு அவனுக்கு போன் செய்து பார்க்கிறேன்னு சொன்னேன்.. சரின்னார்.. பையன் வேலையில இருந்தான்.. “என்ன இந்த நேரத்துல? சொல்லு..” ன்னான்.. நானும் தமிழ்ல, இங்கயிருந்து கிளம்பிப் போறப்போ கேப் சம்பந்தமா ஏதும் பிரச்சனையாச்சா ன்னு கேட்டேன்.. அவனும் கிட்டத்தட்ட இதே கதைய சுருக்கமா சொல்லிட்டு, இப்ப ஏன் அதைக் கேக்கற ன்னான்.. அந்த கேப் ஓட்டுனர் தான் கேட்கச் சொன்னார், அவரோட தான் இப்போ போயிட்டு இருக்கேன்னு சொல்லிட்டு சிரிக்க ஆரம்பிச்சேன்.. பையன் கடுப்பாகி, “இப்ப எனக்கு வேலை இருக்கு.. வை போனை..” ன்னு வச்சிட்டான் அவரு உடனே, “பாத்தியா.. நான் சொன்னன்ல..” ங்கற ரீதியில தொடர்ந்து கொஞ்சம் நேரம் திட்டினார்.. எனக்கு உள்ளூர சந்தோஷந்தான் J பயபுள்ள அடுத்த வாட்டி வீட்டுக்கு வரும் போது இத வச்சே ஓட்டி ஒழிச்சிட மாட்டோம்? J

அடுத்ததா ஒரு கதை சொன்னார்.. இது வேறொரு பையன் செய்ததைப் பத்தி.. அவன், அவசரமா விமான நிலையம் போகணும், பத்து நிமிஷத்துல கேப் வேணும்ன்னு கேட்டிருக்கான்.. நேரத்துக்கு வந்துடனும்ங்கறதுல உறுதியா இருக்கறதால, இவர் அடிச்சுப்புடிச்சு போயிச் சேர்ந்திருக்கார்.. பாத்தா, அவன் இன்னொரு கேப்ல ஏறிட்டு இருந்திருக்கான் (ஒரே நேரத்துல ரெண்டு கேப்கள கூப்பிட்டு இருக்கான்).. இவர் செம கடுப்பாயிட்டு, அவனோட தொலைபேசி எண்ணுக்கு ஒரு பெயர் கொடுத்து பாதுகாத்து வச்சிருந்திருக்கார்..

பின்னொரு நாள், அவன் மறுபடியும் இவங்களக் கூப்பிட்டப்போ, வர்றேன்னு சொல்லிட்டு, சொன்ன நேரத்துக்குப் போகாம, அஞ்சு நிமிஷம் கழிஞ்சதும், தோ வந்துகிட்டே இருக்கேன்னு சொல்லி, மறுபடியும் பத்து நிமிஷம் கழிச்சு, “மன்னிக்கணும், வர்ற வழியில எங்களுக்கு இன்னொரு ஆள் கிடைச்சுட்டார், அதனால நீங்க வேற கேப் கூப்பிட்டுக்கோங்க..” ன்னு சொல்லிட்டு, போகாமலே விட்டுட்டார்!!! அதுக்கப்புறம், அவனோட வாய்ஸ் மெயில்ல, வராததுக்கான உண்மையான காரணத்தையும் சொல்லி இருக்கார்!

அவர் செய்ததில எனக்கு உடன்பாடில்ல.. அந்தப் பையனுக்கு என்ன அவசரமோ, விமானத்தை தவற விட்டிருந்தான்னா, அவனுக்கு அது பெரிய பிரச்சனையாயிருக்கும்.. நான் சொன்னேன், “உங்க நிறுவனத்தப் பத்தி அவனுக்கு தெரிஞ்சிருக்காதா இருக்கும்.. எங்க வராம போயிடுவீங்களோன்னு தான் அவன் அவசரத்துக்கு ரெண்டு பேரைக் கூப்பிட்டிருப்பான்.. காத்திருந்து ஏமாந்த அனுபவம் எனக்கும் இருக்கு..” 

ஆனா அவர் ஒத்துக்கல.. “என்னோட கேப்பைப் பாருங்க.. எவ்வளவு சுத்தமா வைத்திருக்கேன்.. நேரந் தவறாமை எங்களோட குறிக்கோள்.. நாங்க ரொம்ப ப்ரோபஷனல்.. வாடிக்கையாளருக்காக நாங்க கொண்டிருக்கும் பொறுப்புணர்வை, அவங்களும் எங்களுக்காகக் கொண்டிருக்கணும்..” ன்னார்.. “ம்ம்..” ன்னேன்.. இறங்கும் பொழுது, “You too.. remember this.. If you mess with me, I will pay back..” ன்னார்.. நான் சிரிச்சுட்டேன் J.. நான் அப்படிச் செய்ய மாட்டேன்னு சொல்லிட்டுக் கிளம்பினேன்..

அந்தப் பையனுக்குச் செய்ததுல எனக்கு உடன்பாடு இல்லாட்டியும்,  அவரோட ஆட்டிட்யூட் பிடிச்சிருந்தது.. அவருக்கு தன்னை ஏமாத்திட்டாங்களே ன்னு சுயபச்சாதாபம் இல்ல. நான் பொறுப்பா இருக்கேன், அதை உங்க கிட்டையும் எதிர்பார்க்கிறேன், என்னை நீங்க ஏமாத்தினா அதைத் திருப்பிக் கொடுப்பேன் என்கிற அந்தக் கோபம், சுயகம்பீரம் பிடிச்சிருந்தது!!

(வெள்ளியன்று எழுத ஆரம்பித்தது.. அதனால இன்று என்று வருவதெல்லாம் இன்று முந்தாநேத்து ஆகி விட்டது J )



இந்தப் பாட்டுக்கும் இடுகைக்கும் என்ன சம்பந்தம்ன்னு கேட்டுட மாட்டீங்கன்னு நம்பறேன் :)