Showing posts with label அலுவலகத்திலிருந்து அஞ்சலை. Show all posts
Showing posts with label அலுவலகத்திலிருந்து அஞ்சலை. Show all posts

30 April 2011

விரலாலாகாத்தனம்..



எங்க தலைவர் (மேனேஜர் மாதிரி), துணைத் தலைவர் ரெண்டு பேருமே ஐரோப்பாவுல ஒரே நாட்டுல இருந்து இங்க இடம் பெயர்ந்தவங்க. ரெண்டு பேரு பேசுறதும் ஒரே மொழி தான்.. யாருக்கும் ஒன்னும் புரியாது.. :) தலைவர் தான் துறை மேலாளர்.. இவரு அநேக நேரம் வேலை செய்வது மெயின் அலுவலகத்துல..

இதுல இருந்து இருபது நிமிஷத்திய நடை தூரத்துல, இதே நிர்வாகத்துக்கு உட்பட்டு, இன்னொரு குட்டி அலுவலகம் இருக்கு.. அங்க, எங்க துறைல, இந்தத் துணைத் தலைவர் தான் கிட்டத்தட்ட மேலாளர் மாதிரி (ஏன்னா எங்க துறைல யிருந்து அங்க இருக்கிறதே அவர் ஒருத்தர் தான் :)) ) .. அவரோட வேலையில நெறய நேரம் அங்கன தான் கழியும்.. அப்பப்போ இங்கயும் வருவார்..

அந்தக் குட்டி அலுவலகத்துல எங்களுக்கும் வாரம் ஒரு நாள் வேலை செய்யணும்.. எனக்கு அங்க லொங்கு லொங்குன்னு இருவது நிமிஷம் நடந்து போய் வர்றது கூட  பெரிய பிரச்சனையா தோனல..  அங்க இருக்கற சுண்டெலி தான் பெரிய தொல்ல.. மெயின் அலுவலகத்துல இருக்கற சுண்டெலில பொத்தான்கள் அதிகமா இருக்கும்.. வேலைக்கான கணினிப் பக்கங்கள்ல முன்னே பின்னே போறதுக்கு கீ போர்டுக்கு அடிக்கடி கைய மாத்தத் தேவையில்ல.. அதே மாதிரி இன்னொரு பொத்தான அமுக்கி, வேகமாகவும் மெதுவாகவும் ஸ்க்ரோலிங் வேகத்த மாத்திக்கலாம்.. அந்த குட்டி அலுவலகத்துச் சுண்டேலில இப்படியான பொத்தான்கள் இல்ல. எனக்கு ஸ்க்ரோல் பண்ணிப் பண்ணி விரலெல்லாம் ஒரே வலியாயிடும்.. இந்தச் சுண்டெலிய தூக்கிப் போட்டுட்டு பெரிய அலுவலகத்துல இருக்கற மாதிரி வாங்கிக்கலாம்ன்னு துணைத் தலைவர் கிட்ட பரிந்துரை சொன்னன்.. ஒருக்கா சொல்லி ஒன்னும் மாறல... ரெண்டாவது வாட்டி இன்னொருத்தர்கிட்ட (இந்த ஆசிரியர் இந்தியர்) புலம்பினதுல, இவர் கிட்ட சொல்றத விட தலைவர் கிட்ட சொன்னீன்னா ஒரே நாளுல வேலையாயிடும்ன்னு சொன்னார்.. அவர் பேச்ச நம்பி, தலைவருக்கு உருக்கமா ஒரு ஈ மெயில தட்டுனேன்.. அதைய ஒரு காப்பியா துணைத் தலைவருக்கும் அனுப்பிவிட்டேன்..

அப்புறம் பாத்தா, அன்னைக்கு மதியம் துணைத் தலைவர் வந்து கன்னாபின்னான்னு கத்துறார்.. "என்ன நீயி, வேலைக்கு வந்து கொஞ்ச நாள் கூட ஆகல, அதுக்குள்ள எல்லாத்தையும் மாத்தனும்ன்னு நினைக்கறே.." எனக்கு ஒன்னும் புரியல.. நான் அப்படி என்ன தப்பு செஞ்சேன்? மாத்திப் பாக்கலாம் ன்னு விண்ணப்பம் போட்டது தப்பா? இவர்கிட்ட முதல்லயே  சொல்லியிருக்கேன், இவருக்கும் ஒரு காப்பி மெயில அனுப்பிவிட்டிருக்கேன்.. பிறகென்ன? "அப்படியெல்லாம் மாத்த முடியாது, நாங்க இங்க ரொம்ப நாளா இருக்கோம், எங்க விருப்பப்படி தான் எல்லாமும் இருக்கணும்.. நீ ஒரு நாள் தான் வர்ற, சுண்டெலிய உனக்கேத்த மாதிரி மாத்திட்டா அப்புறம் மத்த நாளெல்லாம் நாங்க என்ன பண்ணுறது? வேகமா ஸ்க்ரோல் பண்ணிட்டே போனா பாதியிதப்  பாக்காம மிஸ் பண்ணிடுவோம்.." இப்படி அவர் பேசிக்கிட்டே போக, நான் சொன்னேன், "மெயின் அலுவலகத்துல இருக்கற மாதிரி தான் வாங்கலாம்ன்னு சொன்னேன்.. நீங்க இப்ப ஸ்க்ரோல் பண்ற மாதிரி மெதுவாவும் பண்ணிக்கலாம், நான் சொல்ற மாதிரி வேகமாவும் பண்ணிக்கலாம்.. மிச்ச பொத்தான்களும் இதுல இருக்கற மாதிரியே உபயோகிக்க முடியும்.. எனக்கு கீ போர்டுக்கும் சுண்டெலிக்கும் மாத்தி மாத்தி கையை நகர்த்தரதுல சலுப்பாயிருக்கு.."

ஆனாலும் அவர் மனசு ஆறல.. "அதெல்லாம் முடியாது, நீ வேணும்னா உனக்குன்னு தனியா ஒன்னு வாங்கிவந்து வேலை பண்ணிக்கோ..", அப்படின்னு சத்தம் போட்டாரு.. எனக்கு கடியா இருந்தது, என்ன இப்படிச் சொல்றாரேன்னு.. "அப்படியெல்லாம் நீங்க சொல்லக் கூடாது. நான் ஒன்னும் பெருசா கேட்கல.. ஆப்டர் ஆல் ஒரு சுண்டெலி.. அதுவும் என் விரல் ரொம்ப வலிக்கரதால தான் கேக்கறேன்.. இதக் கூட செஞ்சுதர முடியாதா? என்னைய வாங்கிட்டு வரச் சொல்லுறீங்க? மெயின் அலுவலகத்துல என்னடான்னா, தலைவர் மானிட்டரை எல்லாம் தனக்குப் பிடிச்ச மாதிரி மாத்திட்டு இருக்கார்.. அதையெல்லாம் மாத்தித் தர்ற ஆளுங்க கிட்ட கேட்டா இதையும் தந்துட்டுப் போறாங்க?.."

எனக்கு ஐடியா கொடுத்தவரும் (இந்தியர்) அந்த நேரத்துல அங்கிட்டு தான் இருந்தார்.. இப்படியே காரசாரமா போன பேச்சு, கடைசியா எங்க வந்து நின்னதுன்னா, "என்ன இருந்தாலும் நீ தலைவர இதுல ஈடுபடுத்தியிருக்கக் கூடாது.. அவருக்கு இங்க எந்த அதிகாரமும் இல்ல.. எதுன்னாலும் என்கிட்டக் கேளு, நான் இங்கத்த ஆளுங்க கிட்ட பேசிப் பாக்கறேன்.." இதைச் சொல்லிட்டு துணைத் தலைவர் கிளம்பிப் போயிட்டார்.. எனக்கு மூஞ்சி உர்ருன்னு கெடந்தது.. ஆனா இந்த இந்திய ஆசிரியருக்கு பிரச்சனை என்னன்னு புரிஞ்சிட்டது.. "நீ கேட்டதுல எந்தப் பிரச்சனையும் இல்ல.. ஆனா இவர விட்டுட்டு நீ தலைவர் கிட்ட மனுப் போட்டதால தான் இத்தன கடுப்பும்.. அவங்களுக்குள்ள ஏதோ பிரச்சனைன்னு  நினைக்கறேன். ரெண்டு பேரும் முன்ன மாதிரி பேசிக்கறதில்ல.. "

எனக்கு ஏதோ வெளங்குனாப்ல இருந்தது.. அந்த இந்திய ஆசிரியர் மேற்கொண்டு எங்கிட்ட சாரி சொன்னாரு.. "என்னால தான உனக்கு இம்புட்டுத் தொந்தரவும்.. நீ கேட்டதுல எந்தத் தப்பும் இல்லன்னு தான் நான் நினைக்கறேன்.. அவரும் இப்படிப் பேசுறவர் இல்ல.. தலைவர் பேரு உள்ள வந்ததால கடுப்பாயிட்டாரு போல.. "

அப்புறம் சாப்பிடப் போயிட்டேன்.. என்னமோ மனசே சரியில்லாத மாதிரி இருந்தது.. சாப்பிட்டு முடிச்சிட்டு, மதிய வகுப்புக்காக, இந்திய ஆசிரியரோட, மெயின் அலுவலகத்துக்கு கிளம்பினேன்.. துணைத் தலைவரோட அறையைக் கடந்து தான் போவோணும்.. நம்ம இந்திய ஆசிரியர், அவர் கிட்ட, போயிட்டு ஒரு மணி நேரத்துல திரும்பிடுவோம்ன்னு சொன்னார்.. நான் டக்குன்னு உள்ள நுழைஞ்சு, "என்னை மன்னிச்சிடுங்க.. இந்த ரெண்டு அலுவலகத்துக்கு இடையிலே அதிகாரப் பகிர்வு எப்படி நடக்குதுன்னு புதுசா வந்த எனக்குத் தெரியாது.. அதான் குழப்பிட்டேன்.." ன்னு சொன்னேன்.. அவரும் ஆறி இருந்தாரு.. "பரவால்ல, ஏற்கனவே இந்தக் குட்டி அலுவலகத்து அதிகாரத்துல கொஞ்சம் குழப்படிகள் இருக்கு.. இதுல நம்ம தலைவரையும் இழுத்து விட்டோம்ன்னா ரொம்பக் கஷ்டமாயிடும்.. அதான்.." நானும் புன்னகைச்சுட்டே வந்துட்டேன்.. ஆறுதலா இருந்தது.. அதுக்கப்புறம் அதைய மறந்து போயிட்டேன்..

அடுத்த வாரம், அதுக்கடுத்த வாரம்ன்னு ரெண்டு மூணு தடவ சம்பவத்துக்கப்புறம் அங்க வேலைக்குப் போயிருந்தேன்.. துணைத் தலைவரும் வழக்கம் போல பேச ஆரம்பிச்சுட்டாரு.. மூணாவது வாரம், மதிய வகுப்புக்காக மெயின் அலுவலகம் போயிட்டுத் திரும்பறேன், வந்து பாத்தா என் டேபிள் மேல புது சுண்டெலிப் பொட்டி!!! அவ்வ்வ்வவ்வ்வ்வ்.... இந்தப்பக்கம் திரும்பிப் பாத்தா, பக்கத்து டேபிள்லயும் (நாங்க இருக்கற நேரத்துல அவர் அதுல வேலை செய்வார்) ஒரு புது சுண்டெலிப் பொட்டி.. (நெல்லுக்குப் பாயற தண்ணி அப்புடியே புல்லுக்கும் பாயுமாமே? :)) )அதைய பிரிக்காம கூட எடுத்துகிட்டு அவரோட அறைக்கு ஓடிப் போயி நன்றி சொன்னேன்..  அவர் புன்னகைச்சார்..


அப்பாகிட்ட சண்ட போட்டு பொம்ம ஒன்னு வாங்கிட்ட கணக்கா சந்தோஷமா இருந்தது :)


பிகு: மொதல்ல இதுக்கு MOUSE vs mouse அப்படின்னு தலைப்பு வச்சிருந்தேன்.. யாரையாவது வம்புக்கு இழுக்கலைன்னா நமக்குத் தான் தூக்கம் வராதே.. அதுக்குத் தான் இந்தத் தலைப்பு.. என்ன பண்றது, விரல்ல வலின்னு சொல்றதுக்கும் விரலால தான் டைப்பு பண்ண வேண்டியிருக்கு.. :)))) )

08 February 2011

வணக்கம்!


எங்க அலுவலகத்துல நடக்கற சில விஷயங்களை அப்பப்போ இங்கே பகிர்ந்துக்கறேன்..

~~~~~~~~~~~

ஜனவரில ஆரம்பிக்கற வருடப் படிப்புக்காக ஒரு மாணவர் நேர்முகத் தேர்வுக்கு வந்திருந்தார்.. அவர் இங்கத்தவர்.. அதனால வேற எந்த பிக்கல் பிடுங்கலும் இல்ல.. அவரோட தகுதிகளும் நிறைவானவையாகவே இருந்தன.. நேர்முகத் தேர்வின் போது, அவர்கிட்ட தனித்தனியா கால் மணி நேரத்துல இருந்து அரை அணி நேரம் வரைக்கும் நாலஞ்சு பேர் பேசுவாங்க.. அரைநாள் வரைக்கும் இப்படிக் கழியறது, இறுதியா சாப்பாட்டு நேரத்துல எங்கள மாதிரி வெட்டிப்பசங்களோட அரட்டை அடிச்சுகிட்டே முடிஞ்சுபோவும்.. இது தான் நடைமுறை.. அவர் கிட்ட பேசினவங்க எல்லாருக்குமே திருப்தி தான்.. அவரும் வந்துட்டா எங்க வேலை நிறையவே குறையும்.. அதனால அப்பப்போ கேட்டுக்கிட்டே கெடந்தோம் - அவர் வருவாராஆஆஆஆஆஆஆ.. அவர் வருவாரா ன்னு.. ஜனவரியும் வந்து போச்சு.. பொறுக்க முடியாம, ஒரு நாள் மதிய உணவு நேரத்துல எங்க தலைவர (துறை மேலாளர்) காச்சி எடுத்ததுல, அவர் சொன்னார் - அந்தப் பையன் மனசு மாறிட்டான்னு.. நேர்முகத் தேர்வுக்கு வந்தவன் கிட்ட பேசின ஒன்னு ரெண்டு பேரு, இங்க புதுசா இன்னொரு துறை ஆரம்பிக்கப் போறாங்க தம்பி.. அதுல இங்க கொடுக்கறத விட சம்பளம் அதிகம்ன்னு சாதாரணமா பேச்சுவாக்குல சொல்லியிருக்காங்க.. பையன் இங்க மண்டைய மண்டைய ஆட்டிட்டு, வீட்டுக்கு  கிளம்பிப் போனவுடனே, அந்த புதுத் துறை ஆளுங்க கிட்ட விண்ணப்பம் போட்டிருக்கார்.. அவங்களுக்குத் தெரிஞ்சு போச்சு - இவன் வேறொரு துறைக்காக வந்தவன் இப்படி பல்டி அடிச்சிருக்கான்னு... இப்படி ஒரே நாள்ல மனசு மாறுறது அவனவன் விருப்பம்ன்னா, அப்படிப்பட்டவன எடுக்கறதும் விடறதும் அலுவலகத்தோட விருப்பமில்லையா!! அதனால வேணாம்னு அந்தத் துறைக்காரங்களே சொல்லிட்டாங்க.. (இத்தனைக்கும் அவங்களுக்கு ஆள் தேவையாத்தான் இருக்கு..  கடமைக்காக வேலை செய்யறவன விட காதலோட வேலை செய்யறவனை எதிர்பார்க்கிறாங்க.. ஆனா இந்த நிலைப்பாடு உறுதியானது  இல்ல..  ரொம்பவே ஆள் இல்லாத நிலையில, எப்படியிருந்தாலும் எடுத்துப்பாங்கன்னு தான் நினைக்கறேன்.. ) இந்தக் கதைய கேட்டதும், நான் சொன்னேன் - அக்காவப் பாக்க வந்த மாப்பிள அங்கயே வச்சு தங்கச்சி புடிச்சிருக்குன்னு சொன்ன கதையாயிருக்கேன்னு.. எல்லாரும் நல்லா சிரிச்சாங்க :)
 
~~~~~~~~~~~

எங்க அலுவலகத்துல எங்க துறை க்குன்னு  ஒரு குட்டி டீ காப்பி உற்பத்தி நிலையம் :)  ஒன்னு இருக்கு (இங்க பல அலுவலகத்துல இப்படித் தான்னு நினைக்கறேன்.. காப்பி கடைக்குப் போய் வாங்கி குடித்துவிட்டு வரும் நேரம், பணம் ரெண்டுமே மிச்சம்).. அங்க டீ பைகள், சர்க்கரைப் பொட்டலங்கள், பால் குப்பிகள், ஒரு காப்பி தயாரிப்பு மெஷின், சுடு நீர்  வழங்கும் மெஷின் இதெல்லாம் இருக்கும்.. கூட, நிறைய பேப்பர்/பிளாஸ்டிக் கப்புகள், அதற்கான மூடிகள் இதையும் வச்சிருப்பாங்க.. (எங்க செலவு தான்).. நான் காலையில வீட்டுல டீ தயாரித்துக் குடிக்கும் வேலையை நேரத்தை மிச்சப்படுத்தி (என்ன அஞ்சு நிமிஷம் ஆவுமான்னு கேக்கறது புரியுது :) ), அங்க போயி குடிச்சிப்பேன்.. எழுந்த அரை மணி நேரத்துல கிளம்பி ஓடறதுன்னா சும்மாவா? :)).. ஒரு நாள், எங்க ஆசிரியர் ஒருத்தர், காலையில குடிச்ச கப் லயே சாயங்காலமும் குடிக்கறதப் பாத்து, ஏன் இப்படி செய்றீங்கன்னு கேட்டதுக்கு, எதுக்கு தேவையில்லாம ஒரு கப்பை குப்பையாக்கனும்ன்னு ஒரு தத்துவம் சொன்னார்.. நானும் யோசித்தேன் - ஒரு நாளைக்கு ரெண்டு வாட்டி  குடிச்சா, ரெண்டு கப், அதற்கான மூடிகள் மற்றும் கலக்குவதற்கான  குச்சிகள் ன்னு பொருள் வீணாகுது.. ஒரு மாதத்துக்கு இருபத்தஞ்சு நாள் நான் வேலை செய்கிறேன் என்றால், நான் ஒருத்தியே, இப்படி அம்பது பொருட்களை உபயோகப்படுத்தி தூக்கி எறிகிறேன்.. அதிகமாகத் தோணலை???  பொருட்களின் குப்பையை மறுசுழற்சி செய்வதை விட, தேவையைக் குறைத்து, குறைவாக உபயோகப்படுத்துதலுக்கே முன்னுரிமை அளிக்கணும்.. இந்த விதியை பின்பற்றி, நான் இப்போ என்னுடைய பீங்கான் கோப்பை ஒன்றையும், சிறு கரண்டி ஒன்றையும் எங்களுக்கென்று கொடுக்கப்பட்ட அறையில் வைத்துவிட்டேன்.. என்னைப் பார்த்து, எனது ஆசிரியரும் அவரது கோப்பையைக் கொண்டு வந்து விட்டார்.. ஏதோ என்னால முடிஞ்சது!
 
~~~~~~~~~~~~

எகிப்துல நடக்கற புரட்சியை எல்லோரும் அறிந்திருப்பீங்க.. என்கூட வேலை பார்க்கும் ரெண்டு பேரோட குடும்பங்கள் அங்கே தான் இருக்கின்றன.. ஒருத்தரோட மனைவி மற்றும்  குழந்தையே அங்க தான் இருக்காங்க!! இன்னொருத்தருக்கு, பெற்றோர்கள், உறவுகள்ன்னு இப்படி.. தினமும், வேலையோட வேலையாக, கணினியில் செய்திகளை பார்த்துகிட்டு இருப்பாங்க.. இதுல ஒருத்தங்க கிட்ட அங்க இருக்கற நிலைமை பத்தி அங்கத்த குடியானவரா என்ன நினைக்கறீங்கன்னு கேட்டுப் பாத்தோம்.. அவரும் புரட்சியின் தேவையை முன் வைத்தார்.. அவருடைய கருத்துகள், தமிழ் வலைபதிவுகளில் காணப்படும் கண்ணோட்டத்தையே பிரதிபலிப்பதாக இருந்தன.. முபாரக், எட்டு வருடங்கள் துணை  அதிபராகவும், அதற்கப்புறம் முப்பது ஆண்டுகள் போலி ஜனநாயகத்தின் பெயரில் தொடர்ந்து அதிபராகவும் பதவியில் இருந்துவிட்டு, அதற்கடுத்து வாரிசு அரசியலுக்கும் வழி தோண்டிக் கொண்டிருக்கிறார்.. அவரை தீவிரமாக எதிர்ப்பவர்கள் பொதுவாக காணாமல் போய் விடுவார்கள்.. இதை விட்டால் அவரைத் தூக்கி எறிய வேறு சந்தர்ப்பம் கிடைக்கப் போவதில்லை.. ஆனால் இதன் பேரில் இஸ்ரேலின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் வர வாய்ப்பு இருப்பதால், அமெரிக்கா இந்த மாற்றத்தை வரவேற்கத் தயாராக இல்லை.. இது அனைவரும் அறிந்தது தான்.. ஆனால் இதன் மறுபக்கத்தையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.. இது நாள் வரை நான் பார்த்து வளர்ந்த கட்டிடங்கள் தீயில் எறிவது வேதனை அளிக்கிறது என்றாலும் முக்கியமான இன்னொரு விஷயம், இது போன்ற நிலையற்ற ஆட்சி நேரங்களில், சட்ட ஒழுங்கு சீர் குலைதல்..   காவலதிகாரிகள் காவல் நிலையங்களுக்குப் போகாமல் இருந்த நாட்களில் கைதிகள் தப்பித்து   இருக்கிறார்கள்.. அங்கிருந்த ஆயுதங்களையும் கடத்திக் கொண்டு.. கடைகளை, வங்கிகளை இஷ்டம் போல கொள்ளையடிக்க முடியும்.. பொது மக்களின் உடைமைகளையும் தான்.. ஆனால் முபாரக் இன்று வரை பிடி கொடுக்காமலே இருக்கிறார்.. மக்கள் உணவுக்கும் மருந்துக்கும் என்ன செய்கிறார்கள் என்றும் கவலையாக இருக்கிறது.. இவரது சொந்தங்களைக் குறித்தும்..