Showing posts with label சமூகம். Show all posts
Showing posts with label சமூகம். Show all posts

29 January 2012

அனைவரும் நலமா?

வணக்கம் மக்கள்ஸ். கன காலத்துக்குப் பின்ன இங்க ஒரு இடுகை :)

நேசம் என்ற தலைப்புல புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக சிறுகதை கட்டுரை மற்றும் குறும்படப் போட்டிகளை அறிவிச்சிருக்காங்க.. ஏற்கனவே இது குறித்து வந்த அறிவிப்புகளைப் பார்த்திருப்பீங்க.. நடுவில வந்த பொங்கல் விடுமுறை காரணமா இறுதி நாளை பிப்ரவரி 10 வரைக்கும் நீட்டித்து இருக்காங்க..

உங்களுக்கே தெரியும், மாறி வரும் சுற்றுப்புறச் சூழல்களாலும் தனிமனிதப் பழக்க வழக்கங்களாலும் மரபணுக் குறைபாடுகளாலும் புற்றுநோய்கள் அதிகரித்துக் கொண்டு வருகின்றன என்று.. நோய், உங்களுக்குத் தெரிந்தவர்களை முற்றிய நிலையில் தாக்கியிருப்பதை அறிந்த போது உங்களுக்குத் தோன்றியிருக்கலாம், அல்லது அவர்கள் வருந்தியிருக்கலாம், முன்னமே தெரிய வந்திருந்தா ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை அளித்து  இருக்கலாமேன்னு.. இதற்கென இருக்கும் வழிமுறைகளை அறிந்து கொள்வது  அதை மற்றவர்களுக்கு அறியத் தருவது - இது தான் இப்போட்டியினுடைய நோக்கம்..

விஷச் செடியை அடையாளங் கண்டு முளையிலேயே கிள்ளி எறிவோம் - புற்றுநோய்க்கான ஸ்க்ரீனிங் குறித்த தகவல்களை, பொதுமக்களுக்கு, அதிலும் குறிப்பா இதைப் பற்றி அவ்வளவாக அறிந்திராதவர்களுக்கு - பரவலாகக் கொண்டு போய்ச் சேர்க்கணும் என்ற அடிப்படையில.. உங்க படைப்புகளை உருவாக்கி அனுப்புங்க..

இப்படியான ஒரு படைப்பை எழுத இது குறித்த தகவல்களைச் சேகரிப்பீங்க என்பதால் உங்களுக்கும் இதைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள அருமையான வாய்ப்பு.. ப்ளாக்கில் உங்க படைப்பைப் போடும் போது, பின்தொடருபவர்கள் படிச்சுத் தெரிஞ்சுப்பாங்க.. திரட்டில இணைக்கும் போது இன்னும் ரீச் ஆகும்.. மேலும் உங்க நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் எடுத்துச் சொல்லுவீங்க..

பரிசுகளும் உண்டு.. மேலும் தகவல்களுக்கு இங்க எட்டிப் பாருங்க.. இந்தச் சுட்டியை உங்க ப்ளாக்லயும் வெளியிட்டு உதவுங்க.. 

http://nesampeople.blogspot.com/2012/01/blog-post.html 


ஆச்சு.. இன்னும் பன்னெண்டு நாள் தான் இருக்கு.. சீக்கிரமா ஆரம்பிங்க.. ஆரம்பிச்சவங்க நிறைவா முடிச்சு அனுப்பி வைங்க.. இந்த நல்ல நோக்கத்தில் உங்களுடைய பங்களிப்பையும் செலுத்தி இணைந்து கொள்ளுங்க..


நன்றி.. 

13 April 2011

பொன்(ண்ணு) எழுத்து..

மாட்டி விட்ட அதிராவுக்கு ஒரு கர்ர்ர்ரர்ர்ர்ர்.. 

பெண் எழுத்துன்னா? பெண்கள் எழுதுவதா? இல்லை பெண்களை மையப்படுத்தி எழுதப்படுவதா என்று கொஞ்சம் குழப்பம்.. நான் இந்த இரண்டாவது வகை எழுத்துக்களை அதிகம் படித்ததில்லை.. அதனால அதைக் குறித்து என்ன சொல்லுவது என்று தெரியல.. ஆனால், ஒரு பெண்ணாக, பெண்கள் அன்றாட வாழ்வில் சந்திக்கும் பிரச்சனைகளைச் சார்ந்து எழுதப்படுவதை வாசிப்பது உண்டு.. அது போன்றவைகளுக்கு ஆதரவும் உண்டு.. (அதுக்காக, "பசங்க மட்டும் ஹெவியா புல்லட்டு ஓட்டுறாங்க.. எங்களுக்கு மட்டும் ஏன் லைட் வெயிட்டா ஸ்கூட்டின்னு தனியா விக்கிறீங்க?" அப்புடின்னெல்லாம் யாராவது கேட்டாங்கன்னா ஓட்டம் பிடிச்சிடுவேன்..)

சரி.. முதல் வகைன்னு எடுத்துகிட்டா, நானும் பெண் தானே.. அப்ப நான் எழுதுவதெல்லாம் "பெண்" எழுத்து ஆயிடுமா? நான் எழுதும் போது அநேக நேரங்களில் "நான் பெண்" என்ற உணர்வுடன் எழுதுவதில்லையே? அப்போ அது எப்படி பெண் எழுத்தாகும்? 

அப்புறம் இந்த வரைமுறைக்கு வருவோம்.. எழுத்து என்பது, பிறரைச் சிதைக்காத வகையில, பொய்யை உண்மைன்னு வேணும்னே திரிச்சுப் பேசாத வகையில (ஒரு விஷயத்தில் மாற்று கருத்து கொண்டிருப்பதெல்லாம் இதிலே வராது) - வரைமுறை என்பது இப்படி இருக்கனும்ன்னு நினைக்கிறேன்.. இதுல ஆண் என்ன பெண் என்ன?

இருவருக்கும் பொதுவான விஷயங்களை அலசும் போது, எழுதுபவர் அல்லது பேசுபவர்களிடையே ஆண் பெண் என்ற வேறுபாடு எதுக்குத் தேவை? இப்படியான விஷயங்களை பொதுப் பார்வையுடன் முன்னெடுத்து எழுதும் பெண்களை வரவேற்கிறேன்.. 

அப்புறம், இந்த காமம்.. பாலியல்.. இது குறித்தெல்லாம் அறிவுப்பூர்வமா அறிவியல்பூர்வமா உணர்வுப்பூர்வமா - பெண்கள் எழுதினால் வரவேற்கிறேன்..  இப்படியாக இல்லாம, வெறும் உணர்ச்சிகளைத் தூண்டி விடும் நோக்கத்துடன் எழுதப்படும் எழுத்துக்களை யார் எழுதினாலும் - நோ வரவேற்பு.. ஆனா இது போன்றவைகளைப் படிப்பதும் படிக்காததும் ஒவ்வொருத்தர் விருப்பம், அதுல நாம எதுவும் சொல்ல இயலாது.. 

வேறென்ன சொல்ல? 

16 November 2010

குடிக்கறவங்களெல்லாம் கெட்டவங்களா?

குடி நல்ல பழக்கமா? இல்ல..

அளவு மீறிப் போனா புத்தி மாறுமா? ஆமாம்

அளவு மீறிப் போனா குற்றம் செய்யத் தூண்டி விடுமா? அப்படித் தான் நினைக்கறேன்..

உடம்புக்கு உகந்ததா? இல்ல.. ஆனா விதிவிலக்கு இருக்கலாம்.. 

உடம்புக்கு என்ன ஆவும்? அல்சர்ல இருந்து கல்லீரல் புத்துநோய் வரைக்கும் வரலாம்..

குடி அடிக்ட் பண்ணுமா? ஆமாம்

எல்லாரையும் அடிக்ட் பண்ணுமா? இல்ல..

குறிப்பிட்டு இவங்களைத் தான் செய்யும், இவங்களைச் செய்யாதுன்னு சொல்ல முடியாது.. ஆனா, கொஞ்சம் பேருக்கு இயல்பாவே எதுக்கும் அடிமையாகிடும் பழக்கம் இருக்கு.. அவங்க அடிக்ட் ஆகறது எளிது.. இப்ப, நானே வீட்டு வேலைய கொஞ்சம் தள்ளி வச்சுட்டு ப்ளாக் எழுத உட்கார்ந்திருக்கேன்.. வேலைய முடிச்சிட்டு எழுதலாம்னா, இல்ல எழுதிட்டு செய்யலாம்ன்னு மனசு சொல்லுது.. அதே, பக்கத்து வீட்டு ருக்மணி, வேலைய எல்லாம் செஞ்சு முடிச்சிட்டு சும்மா இருக்கற நேரத்துல மட்டும் தான் ப்ளாக் பக்கம் வருவா..

குடிக்கறவங்க எல்லாரும் குடிகாரங்க ஆயிடுவாங்களா? மேல சொன்னதே தான்.. யாரும் குடிகாரர் ஆகணும்ன்னு விரும்பி குடிக்க ஆரம்பிக்கறதில்ல.. ஆனா குடிக்காம இருக்கறவன விட குடிக்க ஆரம்பிச்சிட்டவனுக்கு குடிகாரர் ஆகறதுக்கான ரிஸ்க் கண்டிப்பா அதிகம் :)

குடும்பத்துக்கு உகந்ததா? இதுவும் ஒருத்தருக்கொருத்தர் வேறுபடும். கட்டுப்பாட்டுல உறுதியா இருக்கறவங்க குடும்பத்துக்கு பாதிப்பு இல்ல.. தனது விருப்பங்களை கட்டுப்படுத்திக்கத் தெரியாதவனோட குடும்பம் நாசம் தான்..

குடிச்சிட்டு காரோட்டறது நல்லதா? கண்டிப்பா இல்ல.. குடியால வரக் கூடிய போதை ஆளாளுக்கு வேறுபடும்.. ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல ரத்தத்துல அல்கஹால் அளவு இருந்தா வண்டி ஓட்டி வரக் கூடாதுன்னு சட்டமே இருக்கு.. கைது, லைசென்ஸ் ரத்து, பைன், ஜெயிலு எல்லாம் உண்டு..

எதிரில் வரும் வாகனத்தின் வேகத்தை சட்டென அனுமானித்து தனது வாகனத்தை கண்ட்ரோல் செய்யும் நேரம் அதிகமாகும்.. அதிகமா குடிச்சிட்டு வீடு திரும்பறதா இருந்தா குடிக்காத ஒருத்தரை ஓட்டச் சொல்லி திரும்பி வரலாம்..

நீ குடிப்பியா? ச்சே.. கருமம்..

உன் தம்பி குடிச்சா ஒத்துப்பியா? அவனுக்கு வேலை கிடைச்சப்பவே சொன்னேன், பாத்து சூதானமா இருந்துக்கப்பான்னு..

நம்ம நாட்டுல இவ்வளவு மக்கள் ஏழ்மையில இருக்கும் போது, டாஸ்மாக் ரொம்ப அவசியமா? இதுக்கு எனக்கு தெளிவான பதில் சொல்லத் தெரியல.. ஆனா அவசியம்ன்னு நினைக்கல

குடிக்கறவங்களெல்லாம் கெட்டவங்களா? இல்ல..

உன் ஆபிசுல பக்கத்து டேபிள்ல வேல பண்ற குமாரு குடிப்பான் தானே? அப்பப்ப குடிப்பான்.. ஆனா குடிச்சிட்டு யாருக்கும் எந்தப் பிரச்சனையும் கொடுத்ததில்ல.. நேரங்காலமா வேலையை செஞ்சு முடிச்சடறான்.. எங்க கிட்ட மரியாதையா நடந்துக்கறான்.. அது அவன் விருப்பம்ன்னு விட்டுடறேன்..

அவன் உனக்கு நண்பன் தான? உடம்பு கெட்டுப் போயிரும்ன்னு எடுத்துச் சொல்ல மாட்டியா? அது அவனுக்குத் தெரியாதா? அதுவுமில்லாம அவனுக்கு உபதேசம் பண்ண என் உடம்ப நான் முதல்ல ஒழுங்கா வச்சிருக்கறனா? எண்ணையும் வெண்ணையுமா திங்கறேன்.. உடற் பயிற்சி எதுவும் பண்றதில்ல.. நான் எப்படி அவனுக்குச் சொல்ல? அப்புறம், பதிலுக்கு அவன் என்னைப் பாத்து, "நீ தெனமும் ரெண்டு தடவ நல்லா ஸ்ட்ராங்கா காப்பி குடிக்கற, குடிக்கலைன்னா தலை வலிக்க ஆரம்பிச்சுடுதுன்னு சொல்லற.. நீயும் காப்பி அடிக்ட் தான்.. காப்பி குடிச்சா இதயத்துக்கு கெடுதல்" அப்படின்னு பேச ஆரம்பிச்சுட்டா?

அப்ப அளவோட குடிச்சா தப்பில்லங்கற? அது குமாரோட விருப்பம்.. அரசாங்கமே மது விற்பனைய அனுமதிக்கும் போது நான் எப்படி தடை சொல்ல?

குடிக்கறதப் பத்தி உங்கம்மா என்ன சொல்லிருக்காங்க? குடிக்கறவன் எல்லாம் கெட்டவன்னு சொல்லி வளர்த்துனாங்க..

நீ அது உண்மைன்னு ஒத்துக்கறியா? அது தம்பிக்கும் எனக்கும் மனசுல அழுத்தமா பதியறதுக்காக அப்படிச் சொன்னது.. காரணமில்லாம இல்ல.. ஊருல ரெண்டு மூணு பேரு குடிச்சுக் குடிச்சே குடல் வெந்து போயிச் சேந்துட்டாங்க..

ஆனா, நான் செய்யாத, செய்ய விரும்பாத ஒரு விஷயத்த இன்னொருத்தர் செய்யறதாலயே அவரைக் கெட்டவர்னு சொல்ல விரும்பல. என்னைப் பொறுத்தவரைக்கும் அது ஒரு பழக்கம்.. அதை வச்சே ஒருத்தன முழுசா எடை போடக் கூடாது.. இன்னைக்கு நான் ஏறுன ரயிலுல வாழ்க்கைல ஒரு வாட்டி கூடக் குடிக்காதவங்கள விரல் விட்டு எண்ணிடலாம். ஆனா யாரும் எம்மேல வந்து உரசல.. தப்பான பார்வை பார்க்கல.. எனக்கு அது தான் முக்கியம்..

ஆனா அதுவே குடிச்சிட்டு போதைல வம்பு பண்ணுனா, வண்டி ஓட்டுனா கண்டிப்பா தப்பு..
ஒரு கொள்கைக்காக குடிக்கவே வேண்டாம்ன்னு நினைச்சிருக்கற ஒருத்தனுக்கு ஜூஸ் ல அவனுக்கே தெரியாம வீம்புக்குன்னு கலக்கிக் கொடுத்து குடிக்க வச்சா தப்பு..
குடிப்பழக்கத்தோட பின் விளைவுகளைப் பத்தி சரியாத் தெரியாதவனுக்கு பழக்கி விட்டா தப்பு..
அதென்ன இவன் மட்டும் குடிக்க மாட்டேன்றான்னு வயித்தெரிச்சல்ல மெண்டல் ப்ரெஷர் கொடுத்து குடிக்க வச்சா தப்பு..
குடிக்காதவனெல்லாம் ஆம்பளையே இல்லன்னு பேசிட்டு சுத்துனா அதுவும் தப்பு..
வெவரந் தெரியாத பத்து வயசுப் பையனுக்கு ஊத்திக் கொடுத்தா தப்பு..

குடியைப் பற்றின கருத்துகள் நாட்டுக்கு நாடு வேறுபடுமா? ஆமாம்.. 

குடிக்காதவங்க எல்லாரும் நல்லவங்களா? எதிர் டேபிள் வைஷு குடிக்கறதில்ல தான்.. ஆனா, வேலையெல்லாம் நைசா மத்தவங்க தலையில கட்டிடறா.. மத்தவங்களப் பத்தி இல்லாத புரளி பேசிட்டு சுத்தறா.. அதை என்னன்னு சொல்ல?

அப்ப நீ குடிய சரியான விஷயம் தான்னு ஆமோதிக்கற? அப்படி நான் சொன்னனா? மறுபடியும் படிங்க மேல இருந்து..

நீ உனக்கானமட்டில் என்ன நினைக்கற? என்னைப் பொருத்தவரைக்கும் எனக்கு அது தேவையில்லாத பழக்கம்.. அப்புறம், மனசுல ஆழமா தப்புன்னு பதிஞ்சிருக்கறதால என்னால அப்படிச் செய்ய முடியாது..

மேல சொன்னதெல்லாம் "குடி" யப் பத்தி இன்னைக்கு எனக்கு இருக்கற புரிதல் மற்றும் கருத்துகள்.. நாளைக்கு மாறலாம்.. இதுல நான் சொல்லியிருக்கறது தவறாகயிருந்தா இல்லை யாருக்கும் தவறாகப்பட்டா, மன்னிக்கனும்.. எதிர் கருத்து இருக்கறவங்க கண்டிப்பா பின்னூட்டம் போடணும்.. பேசலாம்.. விவாதம் நன்று.. விதண்டாவாதம் வேண்டாம்.. நன்றி.. 

21 February 2010

நிறங்கள்...



இது போன்று எழுதுவதற்கு என்னுள்ளே பெரிய போராட்டமே நடக்கிறது! எழுதவா வேண்டாமா என்று.. இன்று துணிந்து விட்டேன்..

முன்பொரு பதிவில் ராக்கண்ணன் இந்தியாவில் சதி பற்றிக் கேட்டிருந்ததாகவும் அது இப்போ வெகுவாக குறைக்கப்பட்டுவிட்டதாக அவருக்கு பதிலளித்ததாகவும் சொல்லியிருந்தேன்..  அவருக்கு இன்னும் கணவனை இழந்த நம் பெண்களின் நிலையை பற்றின விஷயங்கள் முழுமையாக தெரியவரவில்லை!!!

எங்கள் ஊரில் ஒரு அக்கா (உண்மையில் இவர் ஆன்டி ஆவார்)  இருக்கிறார்.. பூ வின் பெயர் கொண்டவர்.. இளம் வயதில் திருமணமானது.. ஆகி கொஞ்சம் நாட்களிருக்கும்.. ஒரு நாள் தாயூருக்கு வந்திருந்தனர்.. அப்போ நான் ரொம்ப சிறிய பெண்.. அதனால் என்ன நடந்தது என்பது தெரிய வரவில்லை.. வெகு நாட்கள் கழித்தே புரிந்தது.. துர்ச்சம்பவம்.. கணவர் கண் முன்னே இறந்து விட்டார்.. அக்கா கர்ப்பமாகயிருந்திருக்கிறார் அப்போ.. அதன் பிறகு பிள்ளை பெற்று, வளர்த்தி ஆளாக்கி.. பெற்றோர் ஓரளவு நல்ல நிலைமையில் இருந்ததால் அவர்களுடன் எங்கள் ஊரிலேயே செட்டில் ஆகிவிட்டார்கள்.. பெண் இப்போ கல்லூரி சென்று கொண்டிருக்கிறாள் என்று நினைக்கிறேன்..  ஆனால் அக்கா??? இழவு நடந்த அன்று துறந்த நிறங்களை, அலங்காரங்களை இன்னமும் மீட்டெடுக்கவில்லை..

ஒரு நாள் மாமா சொல்லிக்கொண்டிருந்தார் - அந்தக் காலத்தில் இந்த அக்காவிற்காக - இவர் இள வயதுப் பெண் என்பதால் இந்த துறப்புகளிலிருந்து விலக்கு அளித்து விடலாமென்றும், இதரப் பெண்களைப் போலவே இவரும் இருந்து விட்டு போகட்டுமென்றும் ஊர் மக்களிடம் கேட்டுக்கொண்டதாகவும், ஆனால் இதர ஊர்ப் பெரியவர்கள் மறுத்து விட்டதாகவும், அதனால் அந்த விஷயம் அப்படியே கிடப்பில் போடப்பட்டு விட்டதாகவும்.. பாட்டியர்களை இவ்வாறு கண்டிருக்கிறேன்.. ஏதும் தோன்றியதில்லை.. ஆனால், இவர் இவ்வாறு வாழ்ந்த காலமானது மிகவும் நீளமானதாகும்..

கல்லூரியில் ஒரு தோழி (உண்மையில் இவர் அக்கா ஆவார்) அறிமுகமான போது, எங்கள் ஊரைச் சேர்ந்தவரென்பதும், ஊர் டவுனில் இருக்கிறார் என்பதும், எங்களுக்கு தூரத்து உறவினர் ஆவாரென்பதும், ஒன்றாகத் தெரியவந்ததால் அவரை உடனேயே பிடித்துப் போனது.. அவரைப் பற்றி வீட்டில் பேசிக் கொண்டிருந்த போது தெரிய வந்த விஷயம் - இவரும் கணவரை இழந்தவர்.. ஆனால் கல்லூரியில் எல்லோருக்கும் அதைப் பறைசாற்றிடாதவாறு - அதற்கான அடையாளங்களே இல்லாமல், இதரப் பெண்களைப் போல, எப்போதும் போல, வருத்தங்களேதும் இல்லாமல் (இருந்திருந்தாலும் காட்டிக் கொள்ளாமல்) வலம் வந்தார்.. இதுபற்றி தெரிய வந்ததும் அவர் மேல் இன்னும் மரியாதை கூடியது.. ஆச்சர்யமாகவும் இருந்தது.. கல்லூரிக்குப் பிறகு அவருடன் நேரடித் தொடர்பில்லாமல் போய் விட்டதால் - இன்று கேள்விபட்ட வரையில், அவர் இன்னொரு மணம்புரிந்து வாழ்ந்துகொண்டிருக்கிறார்..

பொதுவாக, பெண்களுக்கு அலங்காரமென்பதும், அழகுணர்வென்பதும் மிகப் பிரியமான விஷயங்கள்.. இடத்துக்கிடம் தன்மையில் வேறுபடுமென்றாலும், அனைத்து  பெண்களுக்கும் இவை பொதுவானவை.. ஒரு ஆணைத் திருமணம் புரிவதற்க்கு முன்பு பூச்சூடல், வண்ண உடையணிதல், நகையணிதல் போன்றவைகளை ஒரு பெண் செய்து வருகிறார்.. திருமணத்துக்கு பிறகும் இது தொடர்கிறது.. அப்புறமேன் இழப்பிற்குப் பிறகு இவற்றை திடீரென முறிக்க வேண்டும்? ஏற்கனவே கணவனையிழந்த துக்கத்தில் இருப்பவரிடம் இவைகளையும் அவசர அவசரமாக பறித்தாக வேண்டிய தேவையென்ன?

தாத்தாவையிழந்த போது, பாட்டியிடம் நான் சொன்னது - எப்பவும் இருந்தது போலவே இரு என்று.. பாட்டி சொன்னார் - இனிமே எனக்கெதுக்கு அதெல்லாம் என்று..

ஏன் இவற்றை துறக்க வேண்டும் என்ற கேள்வி முதலில் எழுந்தாலும், அப்படியே துறந்தால் கூட - அதனைச் செய்வதும் செய்யாமலிருப்பதும், இன்னொருவரை மணப்பதும் இல்லை கணவர் நினைவிலேயே வாழ்வதும் அவரவர் விருப்பம்.. இந்த சமூகத்துக்கு, பெரிய மனிதர்களுக்கு என்ன உரிமையிருக்கிறது ஒருவரை துறக்கச் சொல்ல??? 

இரண்டாவதாகச் சொல்லப்பட்ட பெண்ணைப் போலவே முதலாமனவரையும் வாழ விட்டிருந்தால் என்ன குறைந்திருக்கப் போகிறது?? நல்ல வேளையாக இந்தக் கருமங்கண்றாவியெல்லாம் இப்போது குறைந்து வருகிறது..