21 February 2010

நிறங்கள்...இது போன்று எழுதுவதற்கு என்னுள்ளே பெரிய போராட்டமே நடக்கிறது! எழுதவா வேண்டாமா என்று.. இன்று துணிந்து விட்டேன்..

முன்பொரு பதிவில் ராக்கண்ணன் இந்தியாவில் சதி பற்றிக் கேட்டிருந்ததாகவும் அது இப்போ வெகுவாக குறைக்கப்பட்டுவிட்டதாக அவருக்கு பதிலளித்ததாகவும் சொல்லியிருந்தேன்..  அவருக்கு இன்னும் கணவனை இழந்த நம் பெண்களின் நிலையை பற்றின விஷயங்கள் முழுமையாக தெரியவரவில்லை!!!

எங்கள் ஊரில் ஒரு அக்கா (உண்மையில் இவர் ஆன்டி ஆவார்)  இருக்கிறார்.. பூ வின் பெயர் கொண்டவர்.. இளம் வயதில் திருமணமானது.. ஆகி கொஞ்சம் நாட்களிருக்கும்.. ஒரு நாள் தாயூருக்கு வந்திருந்தனர்.. அப்போ நான் ரொம்ப சிறிய பெண்.. அதனால் என்ன நடந்தது என்பது தெரிய வரவில்லை.. வெகு நாட்கள் கழித்தே புரிந்தது.. துர்ச்சம்பவம்.. கணவர் கண் முன்னே இறந்து விட்டார்.. அக்கா கர்ப்பமாகயிருந்திருக்கிறார் அப்போ.. அதன் பிறகு பிள்ளை பெற்று, வளர்த்தி ஆளாக்கி.. பெற்றோர் ஓரளவு நல்ல நிலைமையில் இருந்ததால் அவர்களுடன் எங்கள் ஊரிலேயே செட்டில் ஆகிவிட்டார்கள்.. பெண் இப்போ கல்லூரி சென்று கொண்டிருக்கிறாள் என்று நினைக்கிறேன்..  ஆனால் அக்கா??? இழவு நடந்த அன்று துறந்த நிறங்களை, அலங்காரங்களை இன்னமும் மீட்டெடுக்கவில்லை..

ஒரு நாள் மாமா சொல்லிக்கொண்டிருந்தார் - அந்தக் காலத்தில் இந்த அக்காவிற்காக - இவர் இள வயதுப் பெண் என்பதால் இந்த துறப்புகளிலிருந்து விலக்கு அளித்து விடலாமென்றும், இதரப் பெண்களைப் போலவே இவரும் இருந்து விட்டு போகட்டுமென்றும் ஊர் மக்களிடம் கேட்டுக்கொண்டதாகவும், ஆனால் இதர ஊர்ப் பெரியவர்கள் மறுத்து விட்டதாகவும், அதனால் அந்த விஷயம் அப்படியே கிடப்பில் போடப்பட்டு விட்டதாகவும்.. பாட்டியர்களை இவ்வாறு கண்டிருக்கிறேன்.. ஏதும் தோன்றியதில்லை.. ஆனால், இவர் இவ்வாறு வாழ்ந்த காலமானது மிகவும் நீளமானதாகும்..

கல்லூரியில் ஒரு தோழி (உண்மையில் இவர் அக்கா ஆவார்) அறிமுகமான போது, எங்கள் ஊரைச் சேர்ந்தவரென்பதும், ஊர் டவுனில் இருக்கிறார் என்பதும், எங்களுக்கு தூரத்து உறவினர் ஆவாரென்பதும், ஒன்றாகத் தெரியவந்ததால் அவரை உடனேயே பிடித்துப் போனது.. அவரைப் பற்றி வீட்டில் பேசிக் கொண்டிருந்த போது தெரிய வந்த விஷயம் - இவரும் கணவரை இழந்தவர்.. ஆனால் கல்லூரியில் எல்லோருக்கும் அதைப் பறைசாற்றிடாதவாறு - அதற்கான அடையாளங்களே இல்லாமல், இதரப் பெண்களைப் போல, எப்போதும் போல, வருத்தங்களேதும் இல்லாமல் (இருந்திருந்தாலும் காட்டிக் கொள்ளாமல்) வலம் வந்தார்.. இதுபற்றி தெரிய வந்ததும் அவர் மேல் இன்னும் மரியாதை கூடியது.. ஆச்சர்யமாகவும் இருந்தது.. கல்லூரிக்குப் பிறகு அவருடன் நேரடித் தொடர்பில்லாமல் போய் விட்டதால் - இன்று கேள்விபட்ட வரையில், அவர் இன்னொரு மணம்புரிந்து வாழ்ந்துகொண்டிருக்கிறார்..

பொதுவாக, பெண்களுக்கு அலங்காரமென்பதும், அழகுணர்வென்பதும் மிகப் பிரியமான விஷயங்கள்.. இடத்துக்கிடம் தன்மையில் வேறுபடுமென்றாலும், அனைத்து  பெண்களுக்கும் இவை பொதுவானவை.. ஒரு ஆணைத் திருமணம் புரிவதற்க்கு முன்பு பூச்சூடல், வண்ண உடையணிதல், நகையணிதல் போன்றவைகளை ஒரு பெண் செய்து வருகிறார்.. திருமணத்துக்கு பிறகும் இது தொடர்கிறது.. அப்புறமேன் இழப்பிற்குப் பிறகு இவற்றை திடீரென முறிக்க வேண்டும்? ஏற்கனவே கணவனையிழந்த துக்கத்தில் இருப்பவரிடம் இவைகளையும் அவசர அவசரமாக பறித்தாக வேண்டிய தேவையென்ன?

தாத்தாவையிழந்த போது, பாட்டியிடம் நான் சொன்னது - எப்பவும் இருந்தது போலவே இரு என்று.. பாட்டி சொன்னார் - இனிமே எனக்கெதுக்கு அதெல்லாம் என்று..

ஏன் இவற்றை துறக்க வேண்டும் என்ற கேள்வி முதலில் எழுந்தாலும், அப்படியே துறந்தால் கூட - அதனைச் செய்வதும் செய்யாமலிருப்பதும், இன்னொருவரை மணப்பதும் இல்லை கணவர் நினைவிலேயே வாழ்வதும் அவரவர் விருப்பம்.. இந்த சமூகத்துக்கு, பெரிய மனிதர்களுக்கு என்ன உரிமையிருக்கிறது ஒருவரை துறக்கச் சொல்ல??? 

இரண்டாவதாகச் சொல்லப்பட்ட பெண்ணைப் போலவே முதலாமனவரையும் வாழ விட்டிருந்தால் என்ன குறைந்திருக்கப் போகிறது?? நல்ல வேளையாக இந்தக் கருமங்கண்றாவியெல்லாம் இப்போது குறைந்து வருகிறது..

18 comments:

 1. சரியாச் சொன்னீங்க. கணவன் கட்டியது தாலி மட்டும் தானே? பின் ஏன் பூவையும் பொட்டையும் கலர் புடவைகளையும் துறக்க வேண்டும்? அப்படித் துறக்கச் சொல்லும் ஊர்ப் பெரியவர்களா அந்தப் பெண்ணுக்கும் நிர்கதியாய் நிற்கும் குடும்பத்திற்கும் சோறு போடப் போகிறார்கள்?

  ReplyDelete
 2. சந்தனா சமூகப் பார்வையோடு கூடிய நல்ல பதிவு.

  என் பாட்டியும் சிறுவயதிலேயே(23வயது) கணவரை இழந்தவர். என் அம்மா பிறந்து 27நாட்களே ஆகியிருந்தது.
  ஆனால் எங்கள் பாட்டியின் உறவினர்கள் எப்படியோ கொஞ்சம் அறிவாக சிந்தித்திருக்கிறார்கள். பாட்டியை வெள்ளைச்சேலை உடுத்தச்சொல்லி கட்டாயப் படுத்தாமல் இருந்ததோடு வண்ணச்சேலைகளையே உடுத்தச் செய்திருக்கின்றனர். கடைசிவரை(76வயது) என் பாட்டி வெள்ளைச்சேலை கட்டியதில்லை. ஆனால் பொட்டையும் பூவையும் மறுமணத்தையும் மட்டும் என் பாட்டி மறுத்துவிட்டிருந்தார்.

  பாட்டியின் அம்மாவும் இளவயதில் கணவரை இழந்தவர். கையில் ஒரு ஆண் குழந்தை. ஆனால் அந்த காலத்திலேயே(90வருடங்களுக்கு முன்) அவருக்கு மறுமணம் செய்து வைத்திருக்கிறார்கள்!.

  ஆனால் இந்த காலத்திலும் கணவனை இழந்த பெண்கள் பொட்டு வைத்து வண்ணச் சேலை கட்டினால் குறை சொல்லி வேதனைப் படுத்துபவர்களும் இருக்கிறார்கள். இளம் பெண் என்றால் அதிகமாக எதுவும் சொல்வதில்லை. நடுத்தர வயது பெண் என்றால் மிகக் கேவலமாக பேசுகிறார்கள். இந்த நிலை மாறவேண்டும்.

  நீண்ட பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும் சந்தனா!

  ReplyDelete
 3. மிக்க நன்றி முகிலன்.. ஊர்ப் பெரியவர்களை இன்னமும் திட்டியிருக்க வேண்டும்.. அந்த அக்கா யாரிடம் தொடர்ந்து பேசினாலும் அவரை சந்தேகக் கண் கொண்டு பார்த்திருக்கிறார்கள்.. அப்படியே பேசிப் பிரியமாகி அந்த ஆணோடு இன்னொரு வாழ்வு வாழ்ந்தால் கூட என்னவொழுக்கம் குறைந்து விடப் போகிறது?

  ReplyDelete
 4. மிக்க நன்றி கவிசிவா.. பாட்டி மறுத்து விட்டது அவரது விருப்பம்.. அதனைக் கட்டாயப்படுத்தாமல் விட்டதில் உங்கள் ஊர் எவ்வளவோ பரவாயில்லை.. மறுமணம்.. க்ரேட்.. எங்களூரில் இப்போத் தான் மாறி வருகிறார்கள்..

  ஆமாம்.. நடுத்தர வயதுப் பெண்கள் என்றால் கேவலமாகத் தான் இன்னமும் பேசி வருகிறார்கள் :( பேசுபவர்களுக்கு அந்த நிலைமை வந்தால் தான் தெரியும்..

  ReplyDelete
 5. I hate this kind of social slavary. My close friend lost her husband in 15 days of marriage.
  A very nice gentleman married her.
  One more thing .... Wearin Thali is a fashion statement now. You have to (if you can) do a google search to find it in your own home.

  ReplyDelete
 6. நல்ல கருத்தான பதிவு... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 7. எங்க ஊர்ப்பக்கம் இது மாதிரி வன்கொடுமை(எனக்குத் தெரிந்த அளவில்) நடக்கலை..உங்கள் ஊர் அக்காவின் நிலை கொடுமைதான்!

  இப்பவெல்லாம் இந்த நிலை கிட்டத்தட்ட மறைந்து கொண்டே வருகிறதுன்னு சொல்லலாம்..பொறுப்புள்ள பதிவு சந்தனா!:)

  கவிசிவா,ரொம்பவே முற்போக்கான சிந்தனையோடு இருக்காங்க உங்க ஊர்ப்பக்கம்!கேட்கும்போதே சந்தோஷமா இருக்கு.

  ReplyDelete
 8. மிக்க நன்றி இலா.. நகர்ப்புறங்கள்ல பரவாயில்லன்னு நினைக்கறேன்.. கிராமங்கள்ல இன்னமும் இருக்கத் தான் செய்யுது.

  தாலி :) இதைப் பத்தி தனிப் பதிவு தான் போடனும்..

  மிக்க நன்றி அண்ணாமலையான்..

  மிக்க நன்றி மஹி.. உங்க ஊருங்கூட பரவாயில்ல போல.. அதெல்லாம் சிட்டியாச்சே :) ஆமாம்.. இப்போ பரவாயில்ல.. எங்க ரிலேடிவ்ஸ் கூட கொஞ்சம் பேரு கலர்ப் புடவை கட்டிட்டு இருக்காங்க.. படிச்ச பிள்ளைகள் கொடுக்கற தைரியத்துல..

  ReplyDelete
 9. உங்க ஃப்ரெண்ட் துணிஞ்சு முடிவெடுத்திருக்காங்க இலா.. தனக்காகத் தான் வாழனும்.. வாழ்த்துக்கள் அவங்களுக்கு..

  ReplyDelete
 10. வருத்தற்குரிய விஷயம்; ஆனால் இப்போ நிறைய மாற்றங்கள் வர்றது சந்தோஷம்.

  உண்மையில் என் ஊரில் நிலைமை தலைகீழ் என்றுதான் சொல்ல வேண்டும்!! என் பாட்டி, அம்மா காலங்களில் பெண்கள் மறுமணம் என்பது மிகமிக சாதாரண நிகழ்வாக இருந்தது. ஆனால், இப்போ சிறிது சிரமப்பட வேண்டியிருக்கிறது. மக்களின் வாழ்நாள் காலம் நீடித்ததும் காரணமாக இருக்கலாம்.

  ReplyDelete
 11. இன்னும் மாற்றம் வேணும் எல் போர்ட் பீ சீரியஸ் ஆன மாதிரி....

  ReplyDelete
 12. சந்தனா, நல்ல பதிவு. இப்படி பெண்கள் மாற சமுதாயமே காரணம்.

  நான் இந்தியாவில் இருந்த போது என் அயலார் வீட்டில் இப்படி ஒரு பெண்மணி இருந்தார். வெள்ளை சேலை உடுத்தி, பொட்டில்லாமல் பார்க்கவே பாவமாக இருக்கும். இதை விடக்கொடுமை அந்த பெண் எதிரில் வந்தால் அபசகுணம் என்று நினைப்பவர்கள். போன காரியம் இனிமேல் நடந்தமாதிரி தான் என்று முணுமுணுப்பார்கள்.

  இதெல்லாம் இன்னும் முழுதாக மாறவில்லை என்பதே என் கருத்து.

  ReplyDelete
 13. சினிமாப் படங்களில் இப்படி அதிகம் பார்த்திருக்கிறேன்.நெஞ்செல்லாம் வலிக்கும். அதுவும் பெண்ணின் பொட்டு, வளையலை பெண்களே... அழிக்கிறார்கள்..
  எம் நாட்டில் தானாக விரும்பிச் செய்தாலொழிய அடுத்தவர்கள் வற்புறுத்தி எதையும் நான் அறியவில்லை.

  ReplyDelete
 14. எங்க பக்கம் இந்த மாதிரி எதுவும் பார்த்ததா எனக்கு நினைவு வரல.

  எங்க மாமி (அத்தை - இப்போ அவங்களுக்கு 84 வயசு.) கொஞ்ச காலம் தானாவே வெள்ளைச் சேலையோட ஸ்கூல் போனாங்க. 79 ல், யாரும் எதிர்பாராத நேரத்தில் நேர்ந்த இழப்பு. ஆனால் பிறகு தன்னால மெதுவா மாறிட்டாங்க. டீச்சர் அவங்க. அவங்க இஷ்டப்படி சந்தோஷமா இருந்தாங்க. அவங்க ஊரார் கலியாண வீட்டில் எல்லாம் முன்னுக்கு நின்று எல்லா வேலையும் பண்ணுவாங்க, ஆரத்தி எடுத்த போட்டோஸ் கூட பார்த்து இருக்கேன். யாரும் அவங்க செய்த எந்தச் செயலையும் வேணாம் என்று சொன்னதில்லை.

  ReplyDelete
 15. என் மாமியாருக்கும் இப்படி செய்த போது எனக்கு வந்த கோவத்தில் இப்ப யாரும் என்னை எதுத்து பேசுவதில்லை.. "தாலி"(her choice not to wear it) தவிர வழக்கம் போல நார்மலா இருக்கத்தான் சொல்லிட்டு வந்தேன்.. இப்ப யார் என்ன சொன்னாங்களோ மூக்குத்தியை போடுவதில்லை... என்ன ஜன்மங்களோன்னு இருக்கு...

  சந்தூ!!! என் பிரெண்ட் அவள் கணவரின் குணம் நல்ல குணம்... இப்போ இங்கதான் கின்டர்கார்டன் ரீச்சராயிருக்கிறாள்...வெரி லக்கி கேர்ள் அன்ட் அடோரபிள் ஜோடி...

  ReplyDelete
 16. பரவாயில்லயே உங்க ஊரிலும் நல்ல விதமாத் தான் நடத்தறாங்க ஹூசைனம்மா. எங்க ஊர்ல மட்டும் யாரப் பாத்து பழக்கம் பழகினாங்கன்னு தெரியல..

  ஆமா வானதி.. அபசகுணம் ந்னு சொல்றவங்கள நானும் பாத்திருக்கேன்.. அடுத்தவங்க மேல இப்படி பழியப் போடறவங்கள என்னன்னு சொல்ல??

  சினிமால பாக்கற அளவுக்கு செய்யறது இல்லன்னு தான் நினைக்கரேன் அதிரா.. காலம் முழுக்க இப்படி இருக்கனும்ன்றது டூ மச் :(

  குட் இமா.. நீங்க சொல்றது பாத்தா தென் தமிழ்னாட்டுலயும் இலங்கை லயும் இல்ல போல.. ஹூம் எங்க பக்கந்தான் இப்படி..

  இல்ஸ்... யாராச்சும் ஏதாச்சும் சொல்லியிருப்பாங்க கண்டிப்பா.. இல்லாட்டி போடாம இருக்க மாட்டாங்க.. ரொம்ப சந்தோஷமா இருக்கு, உங்க ஃப்ரெண்ட் பத்தி கேக்கவே..

  நன்றி வசந்து.. பீ சீரியஸ் ல நத்திங்க் சீரியஸ் :))

  ReplyDelete
 17. இதுக்கு கால மாற்றமும் மன மாற்றமும் தான் ஒரே வழி

  ReplyDelete
 18. மிக்க நன்றி பேனாமூடி.. ஆமா.. கொஞ்சம் கொஞ்சமா மாறிட்டுத் தான் வராங்க.. பிற நாட்டவரோட பழகும்போது தான் இதெல்லாம் எவ்வளவு முட்டாள்த்தனம்ன்னு தெரிய வருது.

  ReplyDelete

பழைய வரிய மாத்தச் சொல்லீட்டாங்க.. இப்ப புதுசு “என்ன சொல்லனும்னாலும் தெகிரியமா சொல்லிட்டுப் போங்க” :)