27 February 2010

எரிகிறது தீ.. வேகுதென் உடல்...

தலைப்பைப் பார்த்து பதறியிருந்தால் மன்னித்திடவும்.. இந்த மாதிரி செய்திகளைப் படிக்கும் போது எனக்கு இப்படியொரு உணர்வு தான் ஏற்படுகிறது..





பள்ளியில் தீ
திருமண மண்டபத்தில் தீ
ஒரு அடுக்கு மாடிக் கட்டிடத்தில் தீ (சமீபத்தில் பெங்களூரில்)

இங்கெல்லாம் வடை சுட வடச்சட்டியில் காயவைத்த எண்ணை கொஞ்சம் அதிகமாகச் சூடேறிப்போனாலே கீ கீ என்று அலாரமலறி ஊரையே கூப்பிட்டு விடுகிறது..

அலுவலகத்தில், நூலகத்தில் இது போன்ற சத்தமான கீ கீ அலர்ட்களைக் கேட்டு எல்லோரும் விரைவாய் வெளியேறிட, இதைச் சமாளிப்பதில்  அனுபவமிக்கவர்கள் உள் நுழைந்து என்ன விஷயம் எனத் தேடி, எதுவுமில்லையென உறுதி செய்துகொண்ட பின்பு, மீண்டும் உள்ளே அனுமதிக்கப்படுவோம்.

நம் ஊரில் பள்ளி போன்ற இடங்களில் தீ யணைக்கும் கருவி ஒன்றை அங்கொன்றும் இங்கொன்றும் வைத்திருப்பார்கள்.. மிக எளிய பயன்பாடு.. அதன் மூக்கை தரையில் இடித்தால் உள்ளே ரசாயன மாறுதல்கள் ஏற்பட்டு செயலாற்ற ஆரம்பித்துவிடும் (எல்லா பொதுக் கட்டிடங்களுள்ளும் வைக்கபட்டிருக்கிறதா என்று தெரியவில்லை). ஆனால் தீயைக் கட்டுப்படுத்த இது போதுமா? எனக்குத் தெரிந்து நம்மூரில் ஃபயர் அலார்மை எங்கும் கண்டதில்லை.. கண்ணிமைக்கும் நேரத்தில் மிக வேகமாக சுற்றியெங்கும் பரவிடும் தீயை வருமுன் கட்டுப்படுத்துதல் தானே சரிப்பட்டு வரும்?

இலவச தொலைக்காட்சி வழங்குதல் போன்ற “அறிவார்த்தமான” நல்லவைகளை செய்து வரும் அரசாங்கம், இத்தனை சம்பவங்கள், இத்தனை உயிரிழப்புகள், இத்தனை வேதனைகளை எதிர்கொண்ட பின்பாவது, குறைந்தபட்சம் இது போன்ற பலர் கூடும்/ வசிக்கும் கட்டிடங்களிலாவது ஃபயர் அலார்ம் சிஸ்டத்தைக் கட்டாயமாக்குமா? அரசாங்கப் பள்ளிகளுக்கு, அலுவலகங்களுக்கு இந்தச் சேவையைச் செய்து தருமா?

THERE IS A DEVICE WHICH SENDS RAYS FROM ONE TERMINAL TO OTHER TERMINAL(LIKE CAPACITOR). LIKE

-------/ /-------

BETWEEN THESE, A RAY WIL TRAVEL. IF FIRE OCCURS, SMOKE WILL FORM, THAT ACTS AS A BARRIER FOR THE LIGHT, SO LIGHT WILL NOT ENTER THE OTHER TERMINAL. THE SENSOR SENSES THAT AND BLOWS ALARM.

தகவலுக்கு நன்றி - allinterview.com

வைத்து விட்டு அப்படியே மறந்து விடக் கூடாது.. அவ்வப்போது மாதமொருமுறை போன்று தரக்கட்டுப்பாட்டுச் சோதனையும் மேற்க்கொண்டு, இதன் செயல்பாட்டைத் தொடர்ந்து உறுதிப்படுத்தி வர வேண்டும். நடக்குமா???

26 February 2010

தமிழ்ப்படம் :))))))))))))))))



நிறையத் தமிழ்ப் படம் பார்ப்பவரா நீங்கள்? நொந்து நூடுல்ஸாகியிருக்கீங்களா?? அப்படின்னா கண்டிப்பாக பார்த்து ரசிக்க வேண்டிய படம்..

ஹா ஹா.. வெகு நாட்கள் கழித்து மறுபடியும் என்னை வாய் விட்டு சிரிக்க வைத்தது... ஆங்கிலத்தில் ஸ்கேரி மூவிஸ் என்று புகழ்ப்பெற்ற படங்களைக் கிண்டலடித்து எடுப்பார்கள்.. அந்த விதத்தில் தமிழில் முதற் முயற்சி...  இயக்குனரின் தில் லை பாராட்டியாக வேண்டும்..

கதையென்று பெரிதாக ஒன்றுமில்லை.. வழக்கமான மசாலாப் படத்திலிருக்கும் கதையை விட குறைச்சலானதுமில்லை!!  நாட்டாமை சொல்லும் தண்டனைக்கு (சிம்பு படத்தை நூறு முறை டி வி யில் பார்ப்பது!!) பயந்து அவரது அப்பா அவரைக் கொல்ல முயல, பாட்டியால் (பரவை முனியம்மா) காப்பாற்றப்பட்டு, சென்னைக்கு வந்து (கிராமத்திலிருந்து செல்லும் எல்லா ரயிலும் சென்னைக்குத் தான் போகுதாம் :) )... சைக்கிள் பெடலைச் சுற்றியவாறே பெரியவராகிறார்.. காதல் மோதல்.. அடிதடி, அதிரடித் திருப்பங்கள் என்று கதை கண்டபடிக்கு பயணிக்கிறது..

கருத்தம்மாவில் தொடங்கி.. பல படங்களை கிண்டலடித்து.. எல்லா பெரிய நடிகர்களையும் இமிடேட் செய்து.. ஹா ஹா.. ஹீரோ எவ்வளவு பெரிய படையை எதிர்கொண்டாலும் அலட்சியமாக ஒரு புன்னகையை வீசுகிறார்.. கண்டபடி பஞ்ச் டயலாக் பேசுகிறார்.. பறந்து பறந்து அடிக்கிறார்.. ரொமாண்டிக் முகங்கொண்டு காதல் செய்கிறார்.. வெளிநாட்டில் ஹீரோயினுடன் தமிழ் வார்த்தைகளே இல்லாத ஒரு டூயட்டைப் பாடுகிறார்..

ரேடியோ மிர்ச்சி சிவா தான் ஹீரோ..  இவருடன் உடன் பயிலும் கல்லூரி நண்பர்கள் - வெண்ணிற ஆடை மூர்த்தி, பாஸ்கர், மற்றும் மனோ பாலா.. படத்தில் இவர்கள் பெயர் - நகுல், சித்தார்த்த், பரத் :)))) சிவா அருமையாக செய்திருக்கிறார். வில்லனை எட்டி உதைத்த ஷூ காலுடன் ஃப்ரீஸ் ஆகி நிற்கும் அவரது இண்ட்ரோ சீன் அருமை :))  தொடர்ந்து சிரிக்க வைத்துக் கொண்டே இருக்கிறார்..

ஒரு சாம்பிள் - கோடீஸ்வரராகி உங்கள் மகளைக் கைபிடிப்பேன் என்று ஹீரோயினின் தந்தையிடம் சவால் விட்டுச் சென்று, அந்தத் தந்தை ஒரு காப்பி குடித்து முடிப்பதற்குள், சிவா ஏர்போர்ட், சிவா ரயில்வே ஸ்டேஷன், சிவா எலக்ட்ரிக் போர்ட், என பலவற்றையும் சம்பாதித்து கட்டி விடுகிறார் :)) சொன்னால் சொல்லிக் கொண்டே போகலாம்.. அவ்வளவு நக்கல்..

நீளத்தைக் குறைத்து எடுத்திருக்கலாம்.. கதையை இன்னும் கொஞ்சம் சுவாரசியமாக செலுத்தியிருக்கலாம்..

பிடித்திருந்தது..

21 February 2010

நிறங்கள்...



இது போன்று எழுதுவதற்கு என்னுள்ளே பெரிய போராட்டமே நடக்கிறது! எழுதவா வேண்டாமா என்று.. இன்று துணிந்து விட்டேன்..

முன்பொரு பதிவில் ராக்கண்ணன் இந்தியாவில் சதி பற்றிக் கேட்டிருந்ததாகவும் அது இப்போ வெகுவாக குறைக்கப்பட்டுவிட்டதாக அவருக்கு பதிலளித்ததாகவும் சொல்லியிருந்தேன்..  அவருக்கு இன்னும் கணவனை இழந்த நம் பெண்களின் நிலையை பற்றின விஷயங்கள் முழுமையாக தெரியவரவில்லை!!!

எங்கள் ஊரில் ஒரு அக்கா (உண்மையில் இவர் ஆன்டி ஆவார்)  இருக்கிறார்.. பூ வின் பெயர் கொண்டவர்.. இளம் வயதில் திருமணமானது.. ஆகி கொஞ்சம் நாட்களிருக்கும்.. ஒரு நாள் தாயூருக்கு வந்திருந்தனர்.. அப்போ நான் ரொம்ப சிறிய பெண்.. அதனால் என்ன நடந்தது என்பது தெரிய வரவில்லை.. வெகு நாட்கள் கழித்தே புரிந்தது.. துர்ச்சம்பவம்.. கணவர் கண் முன்னே இறந்து விட்டார்.. அக்கா கர்ப்பமாகயிருந்திருக்கிறார் அப்போ.. அதன் பிறகு பிள்ளை பெற்று, வளர்த்தி ஆளாக்கி.. பெற்றோர் ஓரளவு நல்ல நிலைமையில் இருந்ததால் அவர்களுடன் எங்கள் ஊரிலேயே செட்டில் ஆகிவிட்டார்கள்.. பெண் இப்போ கல்லூரி சென்று கொண்டிருக்கிறாள் என்று நினைக்கிறேன்..  ஆனால் அக்கா??? இழவு நடந்த அன்று துறந்த நிறங்களை, அலங்காரங்களை இன்னமும் மீட்டெடுக்கவில்லை..

ஒரு நாள் மாமா சொல்லிக்கொண்டிருந்தார் - அந்தக் காலத்தில் இந்த அக்காவிற்காக - இவர் இள வயதுப் பெண் என்பதால் இந்த துறப்புகளிலிருந்து விலக்கு அளித்து விடலாமென்றும், இதரப் பெண்களைப் போலவே இவரும் இருந்து விட்டு போகட்டுமென்றும் ஊர் மக்களிடம் கேட்டுக்கொண்டதாகவும், ஆனால் இதர ஊர்ப் பெரியவர்கள் மறுத்து விட்டதாகவும், அதனால் அந்த விஷயம் அப்படியே கிடப்பில் போடப்பட்டு விட்டதாகவும்.. பாட்டியர்களை இவ்வாறு கண்டிருக்கிறேன்.. ஏதும் தோன்றியதில்லை.. ஆனால், இவர் இவ்வாறு வாழ்ந்த காலமானது மிகவும் நீளமானதாகும்..

கல்லூரியில் ஒரு தோழி (உண்மையில் இவர் அக்கா ஆவார்) அறிமுகமான போது, எங்கள் ஊரைச் சேர்ந்தவரென்பதும், ஊர் டவுனில் இருக்கிறார் என்பதும், எங்களுக்கு தூரத்து உறவினர் ஆவாரென்பதும், ஒன்றாகத் தெரியவந்ததால் அவரை உடனேயே பிடித்துப் போனது.. அவரைப் பற்றி வீட்டில் பேசிக் கொண்டிருந்த போது தெரிய வந்த விஷயம் - இவரும் கணவரை இழந்தவர்.. ஆனால் கல்லூரியில் எல்லோருக்கும் அதைப் பறைசாற்றிடாதவாறு - அதற்கான அடையாளங்களே இல்லாமல், இதரப் பெண்களைப் போல, எப்போதும் போல, வருத்தங்களேதும் இல்லாமல் (இருந்திருந்தாலும் காட்டிக் கொள்ளாமல்) வலம் வந்தார்.. இதுபற்றி தெரிய வந்ததும் அவர் மேல் இன்னும் மரியாதை கூடியது.. ஆச்சர்யமாகவும் இருந்தது.. கல்லூரிக்குப் பிறகு அவருடன் நேரடித் தொடர்பில்லாமல் போய் விட்டதால் - இன்று கேள்விபட்ட வரையில், அவர் இன்னொரு மணம்புரிந்து வாழ்ந்துகொண்டிருக்கிறார்..

பொதுவாக, பெண்களுக்கு அலங்காரமென்பதும், அழகுணர்வென்பதும் மிகப் பிரியமான விஷயங்கள்.. இடத்துக்கிடம் தன்மையில் வேறுபடுமென்றாலும், அனைத்து  பெண்களுக்கும் இவை பொதுவானவை.. ஒரு ஆணைத் திருமணம் புரிவதற்க்கு முன்பு பூச்சூடல், வண்ண உடையணிதல், நகையணிதல் போன்றவைகளை ஒரு பெண் செய்து வருகிறார்.. திருமணத்துக்கு பிறகும் இது தொடர்கிறது.. அப்புறமேன் இழப்பிற்குப் பிறகு இவற்றை திடீரென முறிக்க வேண்டும்? ஏற்கனவே கணவனையிழந்த துக்கத்தில் இருப்பவரிடம் இவைகளையும் அவசர அவசரமாக பறித்தாக வேண்டிய தேவையென்ன?

தாத்தாவையிழந்த போது, பாட்டியிடம் நான் சொன்னது - எப்பவும் இருந்தது போலவே இரு என்று.. பாட்டி சொன்னார் - இனிமே எனக்கெதுக்கு அதெல்லாம் என்று..

ஏன் இவற்றை துறக்க வேண்டும் என்ற கேள்வி முதலில் எழுந்தாலும், அப்படியே துறந்தால் கூட - அதனைச் செய்வதும் செய்யாமலிருப்பதும், இன்னொருவரை மணப்பதும் இல்லை கணவர் நினைவிலேயே வாழ்வதும் அவரவர் விருப்பம்.. இந்த சமூகத்துக்கு, பெரிய மனிதர்களுக்கு என்ன உரிமையிருக்கிறது ஒருவரை துறக்கச் சொல்ல??? 

இரண்டாவதாகச் சொல்லப்பட்ட பெண்ணைப் போலவே முதலாமனவரையும் வாழ விட்டிருந்தால் என்ன குறைந்திருக்கப் போகிறது?? நல்ல வேளையாக இந்தக் கருமங்கண்றாவியெல்லாம் இப்போது குறைந்து வருகிறது..

17 February 2010

காலண்டர் வாசகங்கள்....

தோழியொருவருடைய வீட்டில் இருந்த 2009 காலண்டரில் நான் கண்ட வாசகங்கள்.. ஆங்கிலத்தில் இருந்தன.. ஒவ்வொரு மாதத்துக்கும் ஒரு வாசகம்.. சிந்தனையாளர்களால் சொல்லப்பட்டவை.. அதற்கேற்றவாறே எடுத்திணைக்கப்பட்ட அழகான இயற்கைப் புகைப்படங்களுடன், ரசனையைத் தூண்டும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது...


பிடித்ததால் பகிர்ந்து கொள்கிறேன்..  
 
ஜனவரி:

Family is one of nature's masterpieces

(குடும்பமெனும் கட்டமைப்பில் நம்பிக்கையுண்டு.. வழிமொழிகிறேன்.. )

- George Bernard Shaw




ஃபிப்ரவரி:

கிழித்து உபயோகித்து விட்டார்கள்... :))


மார்ச்:

A man is not old until regrets take the place of dreams.

(வருத்தங்கள் கனவுகளின் இடத்தைப் பெறும் வரை மனிதனுக்கு வயதாவதில்லை. நான் எடுத்துக்கொண்டபடி - கனவிருக்கும் வரை மனிதனுக்கு வயதாவதில்லை. நல்லாயிருக்கே.. எனவே, ஸ்டார்ட் ட்ரீமிங்...)
- John Barrymore




ஏப்ரல்:

The price of greatness is responsibility 

(சரி தான்.. அதுக்கு பயந்துதானே க்ரேட் ஆக வேண்டாம்ன்னு முடிவுபண்ணியிருக்கோம்.. :))) )

- Winston Churchill


மே:

Adopt the pace of nature, her secret is patience

(பொறுத்தார் பூமியாள்வார்.. அதத் தானுங் சொல்றீங்... பிடிச்சிருக்கு)
 - Ralph Waldo Emerson






ஜூன்:

The purpose of life is not to be happy. It is to be useful, to be honorable, to be compassionate, to have it make some difference that you have lived and lived well

(என்னால் இதனை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை..)

  - Ralph Waldo Emerson







ஜூலை:

Everything has beauty, but not everyonse sees it..

(ரொம்ப பிடிச்சிருக்கு.. அப்ப எங்களையும் அழகுன்றீங்க.. ஏக மனதா ஒத்துக்கறோம்.. )

- Confuscius



ஆகஸ்ட்:

The first step toward success is taken when you refuse to be a captive of the environment in which you first find yourself

(யோசித்துப் பார்த்தால் சரியென்றே தோன்றுகிறது..)

- Mark Caine



செப்டெம்பர்:

True prosperity is the result of well-placed confidence in ourselves and our fellow man.

(சரிதான்..)

- Robert Burton




அக்டோபர்:

The only true wisdom is in knowing you know nothing

(ஹா ஹா.. சாக்ஸ் உண்மைய இப்படி போட்டு உடைச்சிட்டாரே..)

- Socrates





நவம்பர்:

Faith is to believe what you  do not see; the reward of faith is to see what you believe.

(பிடிச்சிருக்கு.. ஆனா எல்லாவாட்டியும் நடக்கறதில்லயே..)

- Saint Augustine




டிசம்பர்:
Courage is the ability to go from failure to failure without losing enthusiasm

(ஹா.. ஹா.. அதுக்கு இப்படியொரு அர்த்தம் இருக்குங்ளா? சரியாத் தான்ஞ் சொல்லியிருக்கீங்ணா)

- Winston Churchill






பி. கு: வாசகந்தேன் அவியளுது.. படமெல்லாம் எல்போர்ட் எடுத்ததுங்கோ..

16 February 2010

கன்னடனும் தமிழனும்..

இங்கு ஒரு கன்னட தோழி இருக்கிறார்.. இவருக்கு சில தமிழ் நண்பர்கள்.. நன்றாகவே மிளகாய் அரைத்து அனுப்புவார்கள்.. எம்மைச் சந்திக்கும் போதெல்லாம் அம்மிளகாய்களைப் பற்றிய தெளிவு பெறுவார்..

அவ்வாறு கேட்கப்பட்ட சில கேள்விகளும், அவைகட்கு  தீவிர தமிழ் ஆராய்ச்சிக்குப் பின்னர் கண்ஸால் கண்டறியப்பட்டு சொல்லப்பட்ட பதில்களும்..

தோழி: ஆப்புன்னா என்னா?

கண்ஸ்:  ஆப்பா? ம்ம் இரு.. யோசிக்கனும்.. (கிட்டத்தட்ட ஒரு நிமிடம் யோசித்தார்..) ஆங்கிலத்தில் wedge.. மரம் பிளக்க உபயோகிக்கும் ஒரு கருவி..  கூர்மையான சற்று நீளமான முனை கொண்டது..  மேல்பக்கம் அகலமாக, சுத்தியலைப் பாய்ச்ச ஏதுவாக இருக்கும்.. அடி மேல் அடி கொடுத்து சிறிது சிறிதாக உள்ளே செலுத்தப்படும்..




ஆப்பசைத்த குரங்கைப் போன்று மாட்டிக்கொண்டதாக பழமொழியும் உண்டு..



ஆனால் சொல்வழக்கப்படி, ஏமாற்ற உணர்வை கொஞ்சம் நகைச்சுவை கலந்து சொல்ல உபயோகப்படுத்தப்படுகிறது..  


தோழி: வட போச்சே?

கண்ஸ்:  வடை கிடைக்காமல் போய்விட்டது! அதாவது, அதை வேறொருவர் எடுத்துக்கொண்டுவிட்டார்..



சொல்வழக்கம்.. இருக்கையொன்றைப் பிடிக்க வேகமாக ஓடி வந்து  பார்த்தால்.. அங்கு ஏற்கனவே ஒருவர் குறட்டை விட்டுத் தூங்கிக்கொண்டிருப்பார்..  அப்போது ஏற்படும் உணர்வை வெளிப்படுத்தச் சொல்வது..

தோழி: காவேரிய அனுப்புன்னா?????

கண்ஸ்: ஆஹா.. இத எந்த மொழியில எப்படி விளக்கினாலும் உனக்குப் புரியப் போறதில்ல :))) விட்டுடுவோம்..


இதெல்லாம் பரவாயில்லை..

இன்னொரு நாள் இந்த பாட்டை ஓட விட்டு கேட்கச் சொல்லியிருக்கிறார்கள்.. இதைக் கேட்டால் சொர்க்கத்திலிருப்பது போல உணர்வைத் தருமாம்..

பாடல்..

தோழி: பாடலின் முதல் மூன்று வார்த்தைகளுக்கு அர்த்தமென்ன?

கண்ஸ்: முதல் வார்த்தைக்கு அர்த்தம் (??!!) நீளமான தொங்கட்டானுடன் கூடிய தோடு..




இரண்டாவது மற்றும் மூன்றாவது வார்த்தைகள்.. என்னால் ஆகாத காரியம்... பதிவுலகத் தமிழறிஞர்கள் யாரையாவது கேட்டுச் சொல்கிறேன்..

யாருக்காவது அர்த்தம் தெரிந்தால் அந்தப் பேதைப் பெண்ணுக்கு உதவுங்களேன்!! ப்ளீஸ்...

(இப்போதைக்கு இது மட்டுந்தான்.. இன்னும் எதுக்காவது அர்த்தம் துழாவினால் சொல்கிறேன்.. )

14 February 2010

ஒவ்வொரு நாளும்.. இனிய நாளே..

உலகக் காதலர்கள் அனைவருக்கும் இனிய காதலர் தின வாழ்த்துக்கள்.



காதலும் இந்த ஓவியத்தைப் போன்றதே..

சிக்கலானது ஆனால் அழகானது!
புரியாதது ஆனால் அர்த்தமுள்ளது!!


 


எனக்குப் பிடித்த இரண்டு காதல் பாடல்களை இங்கு பகிர்ந்துகொள்கிறேன்..




(ரெண்டாவது பாட்டு ஜீனோ சொல்லி அறிந்தது..  )

09 February 2010

இடர்பாடுகளுக்கிடையில் ஒரு வாரம்.. நண்பரின் அனுபவங்கள்..

ஒன்றிரண்டு வாரத்துக்கு முன்பு.. நண்பரொருவரை வெகு நாட்கள் கழித்து தொலைபேச அழைத்திருந்தேன்.. பேசி முடித்து விடை பெறப் போகும் நேரத்தில் அவர் இந்த விஷயத்தைச் சொல்லி என்னை பெரும் வியப்பிற்குள்ளாக்கினார்.. ஒரு வாரம் ஹைதி சென்று வந்திருக்கிறார்.. தன்னால் முடிந்த உதவிகளை அவர்களுக்காற்றி விட்டு திரும்பியிருக்கிறார்.. இதை பகிர்ந்து கொள்ள வேண்டுமெனத் தோன்றியதால் அவரிடம் அந்த அனுபவங்களை சிறிய தொகுப்பாக எழுதித் தருமாறு கேட்டிருந்தேன்.. அதனுடன் சில புகைப்படங்களையும் அனுப்பியுள்ளார்.. நான் அவரிடம் ஏற்க்கனவே சொல்லியிருந்தேன் - அங்கு கண்டதை அப்படியே விவரிக்க வேண்டாம்.. படிப்பவர்களை மிகவும் பாதிக்கலாம். பதிலாக அங்கு சென்று செயலாற்ற யாரேனும் விரும்பினால் அவர்களுக்கு உதவுமாறு இருக்கட்டும். என்னுடைய வேண்டுகோளுற்கிணங்க, ஆங்கிலத்தில் அவர் எழுதியிருந்ததை, இங்கு மொழி பெயர்த்து தந்திருக்கிறேன்.. நண்பர் தமிழர்..

ஹைதியைப் பற்றி செய்திகளில் அறிந்து கொண்டவுடன் அங்கு நேரடியாக செல்வதென்று முடிவு செய்தேன். பல நிர்வாகங்களை தொடர்பு கொண்ட போது அவர்கள் ஆட்களை அப்போது தேர்வு  செய்து கொண்டிருக்கவில்லை.. இறுதியாக, ஹைதி லீக் ஆர்கனைசேஷன் ஐ தொடர்பு கொண்டேன்.. ஹைதியின் ஏர்போர்ட் சேதமடைந்திருந்ததால் யூ எஸ் ஆர்மி அதனை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருந்தது.. மிலிட்டரி ஃப்ளைட்காக ஒரு வாரம் காத்திருந்து அதில் இடங்கிடைக்காமல், லீக்கின் மற்றவர்களுடன் சேர்ந்து டோமினிகன் ரிபப்ளிக் சென்று அங்கிருந்து ஒரு சிறு வேனில் பயணித்து பத்து மணி நேரத்துக்குப் பிறகு ஹைதியைச் சேர்ந்தடைந்தோம். இதில் எங்களுடன் வந்தவொருவர் 9/11 ரெஸ்க்யூ டீமில் இருந்தவர்..

ஹைதி.. மேற்க்கத்திய நாடுகளில் மிகவும் வறுமைக்குள்ளான நாடு.. இதில் எண்பது சதவிகிதத்தினர் வ. கோட்டுக்குக்கு கீழுள்ளவர்கள்.. அங்குள்ள பெருமான்மையான படித்த மக்கள் பல்வேறு நாடுகளுக்கு சென்று விட்டனர்..

யாரேனும் செல்ல விரும்பினால்:

தனியாகச் செல்ல வேண்டாம்.. மரணம் நிச்சயம்..

அங்கு சென்ற பிறகும்  தனியாக நடமாட வேண்டாம் (பாதுகாப்பு காரணங்களுக்காக). எப்பவும் மக்களூடே இருக்கவும்..

திடீரென மக்கள் அலறுவதைக்  கேட்டால், உங்களுக்கு பதினைந்து நொடிகள் இருக்கின்றன.. தப்பிவிடுங்கள்.. காரணம் ஆஃப்டர் ஷாக்ஸ்.. எங்களுக்கு முப்பது முறை ஏற்பட்டன.. கட்டிடத்துக்குள் நுழையும் முன்னர் தப்பிக்க வழி பார்த்து விட்டு பின் உள் செல்லவும்.. கட்டிடத்துக்குள்ளோ இல்லை மரங்களின் அருகிலோ தங்க வேண்டாம்..



நிலனடுக்கத்தின் போது ஹைதியின்  ஜெயிலும் சேதமடைந்ததால், அங்கிருந்து குற்றவாளிகள் பலர் தப்பி விட்டனர்.. அதனால் யாரும் ஆறு மணிக்கு பிறகு ஓரிடத்தில் தங்கி உதவி செய்ய அஞ்சினோம்.. ஆர்மி மக்களுக்கும் இந்தத் தயக்கம் இருந்தது.. பணம் உணவு இவை யாவும் குறைவாக இந்ததால் வழிப்பறி கொள்ளை அதிகரித்திருந்தன.. இருப்பினும் நாங்கள் அங்கே தங்குவதென முடிவு செய்தோம்..

ஒரு நாளைக்கு பதினெட்டு முதல் இருபது மணி நேரம் வரை போராடினோம்.. மூன்று மணித் தியாலங்களே ஒரு நாளைக்கு உறங்குவதற்கு.. சாயந்திரம் ஆறு மணிக்கு ஆரம்பித்து அடுத்த நாள் பத்து மணி வரை வேலை.. பிறகு ஹைதியன் லீக் ஆஃபிசில் உணவு.. அங்கிருந்து ஒரு அம்பாசடர் வீட்டிற்கு சென்று தூக்கம்.. அங்கிருந்து ஆஃபிஸ்.. மறுபடியும் வேலை.. மின்சாரமில்லை.. இரவு பதினொன்று வரை மட்டுந்தான் ஜெனரேட்டர்.. அதற்கப்புறம் ஃப்ளாஷ் லைட்கள் மட்டுமே..

காயமடைந்திருந்த ஒரு பெண்ணுக்கு உதவியாற்றிய பின்னர் குழந்தையை எடுத்துக் கொடுத்து பால் கொடுக்கச் சொன்னபோது கிருமி உள்ளதென்றும், கொடுக்க முடியாதென்றும் சொன்னார்.. என்ன கிருமி என்று கேட்ட போது.. என்னமோ எய்ட்ஸ் என்று சொன்னார்கள் என்றார்!! நல்லவேளை, க்ளவ்ஸ் அணிந்திருந்தோம்..

இன்னும் பல திக் திக் அனுபவங்கள்.. எல்லாவற்றையும் சொல்ல மனமில்லை.. இத்தோடு போதும்..

இந்த நிகழ்வை எல்லோரும் அறிந்திருப்போம்.. வருத்தப்பட்டிருப்போம். சிலர் பண உதவி செய்திருக்கலாம்.. அங்கு சென்று நேரடியாக உதவுவது என்பது இன்னும் பல படிகள் மேலே செல்வது போன்று.. அனைவராலும் முடியாது.. பலருக்கு நேரமின்மையால்.. சிலருக்கு தயக்கத்தால்.. பயவுணர்வால்.. இன்னும் பல காரணங்களால்.. இந்தத் தடைகளையெல்லாம் கடந்து அங்கு சென்று வந்த அவரை பாராட்டுவதற்கு இன்னும் ஒரு காரணமும் உள்ளது.. அங்குள்ள ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்துள்ளார்..  தத்தெடுத்தல் என்றால் வீட்டுக்கு நேரடியாக அழைத்து வருவதை போலில்லாமல் பொருளாதார ரீதியாக உதவுவது..  ”இக்குழந்தைக்கு சுமார் பதிமூன்று வயதிருக்கலாம். மூட்டுக்கு கீழே கால் அகற்றப்பட்டுள்ளது... இவரின் பெற்றோர்கள் இறந்து விட்டனர்.. தங்களுடைய குழந்தைகளை தேடிக் கொண்டிருந்த வேறொரு பெற்றோர்களால் இவர் கண்டெடுக்கப்பட்டார்.. அங்கிருந்த ஒரு மருத்துவரை தொடர்பு கொண்டு அவரிடத்தில் இவரை ஒப்படைத்தேன்.. எப்போதும் புன்னகைத்துக் கொண்டே இருப்பார்.. ”



இதனைப் படித்த எங்கள் கண்களில் தான் நீர் தளும்புகிறது... முடிந்தால் இன்னொரு முறை செல்லலாம் என்றிருக்கிறார்.. hats off to you நண்பரே..