29 August 2010

முடிஞ்சாச்சு.. 5

(இதுக்கு முன்னாடி பதிவுகள்ல முன்னாடி பாகங்கள் இருக்கு.. புதுசா படிக்கறவங்க அங்கயிருந்து வந்தா நல்லது..)

சகுந்தலா தனது சைக்கிளை தெரிந்தவர்கள் யாருக்காவது கொடுத்துச் செல்லலாம் என்று முடிவு செய்த போது, ஜான் அங்கிள்க்கு அடுத்ததாக நினைவுக்கு வந்தவன் பாஸ்கரன்.. கூடவே, லிண்டாவும் இருப்பதால், பெண்களுக்கான சைக்கிள் என்ற குறையிருக்காது.. இதை மனதில் கொண்டு தான் பாஸ்கரனை முன்பே கேட்டிருந்தாள்..இரண்டு வாரங்களுக்கு முன்பு ஆர்வத்தோடு சரியென்றவன், பின்னர் தொடர்பு கொள்ள முயற்சித்தபோது, போன் சரியாக எடுக்காமல் இருந்தான்.. சரியென்று லிண்டாவுக்கு மெயில் அனுப்பிப் பார்த்தால், அவளும் பதிலளிக்கவில்லை.. சகுந்தலாவுக்கு இது மனதை நெருடிக்கொண்டிருந்தது.. கிளம்பும் நாளுக்கு முந்தின நாள் மறுபடியும் போன் செய்த போது, பாஸ்கரன் சகுந்தலாவை சந்திக்க விரும்புவதாகச் சொன்னான்.. அதற்காகத் தான் லைப்ரரி வந்திருந்தாள் சகுந்தலா..

படித்துக் கொண்டிருந்த பாஸின் முன்னால் சகுந்தலா ப்ரசன்னமானதும், சகீஈஈஈஈ என்று அவன் விளித்து புன்னகைக்க, இருவரும் வெளியே வந்தார்கள்..

“எங்கயாச்சும் உக்காந்து கொஞ்ச நேரம் பேசலாம்.. எங்க போலாம் சகி?”

”பக்கத்துல தான் ஸ்டார்பக்ஸ் இருக்கு.. இந்த நேரத்துக்கு அவ்வளவா கூட்டம் இருக்காது... நடக்கற தூரம் தான்.. “

ஸ்டார்பக்ஸில் அவனுக்கு ஒரு ஐஸ் டீயும், இவளுக்கு ஒரு ஸ்ட்ராபெர்ரி ஸ்மூத்தியும் வாங்கிவிட்டு, அருகிலிருந்த சோஃபாக்களில் அமர்ந்தார்கள்.. இவர்கள் நினைத்தது போலவே கூட்டம் குறைவாகயிருந்தது...

”நீயும் ஒன்னும் சொல்ல மாட்டேங்கற.. அவளும் ஒன்னும் பதில் போடமாட்டேங்கறா.. நாளைக்கு நான் கிளம்பனும்.. சைக்கிள என்ன பண்ண?”

“அவ இன்னும் கொஞ்சம் நாள்ல கலிஃபோர்னியா கிளம்பப் போறா”

”சரி, அதுக்கென்ன இப்ப.. அவங்கப்பாம்மா அங்க தான இருக்காங்க.. போயிட்டு வரட்டும்.. எனக்கு பதில் சொல்றதுக்கு என்ன?”

”இல்ல.. நிரந்தரமா போகப் போறா..” இறுக்கமான முகத்துடன் பதிலளித்தான் பாஸ்கரன்..

”ம்ம்....”  இது போன்ற சமயங்களில், எதிரில் இருப்பவர் தன்னை சற்று ஆசுவாசப்படுத்திக்கொள்ள மவுனம் காப்பதே நல்லதாயிருக்கிறது.. மீண்டும் தொடர விருப்பமிருந்தால், அவர்களே சொல்வார்கள்.. இல்லையென்றால், சற்று நேரம் கழித்து, பேச்சை வேறு திசைக்கு மாற்றலாம்.. சகுந்தலா காத்திருந்தாள்..

”கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு சொல்றா..” சில நொடிகள் டீயை உறிஞ்சிய பின் பேச ஆரம்பித்தான் பாஸ்கரன்...

”பண்ணிக்கோங்க.. ரெண்டு பேருக்கும் பிடிச்சிருக்கு தான?”

”ம்ம்.. பிடிச்சிருக்கு.. ஆனா, எனக்கு கல்யாணத்துல விருப்பமில்ல.. ”

”ஏன்..”

”தெரியல.. பொறுப்புகள், எதிர்பார்ப்புகள் அதிகமாகிடும்ன்னு தோனுது.. ”

”ஹும்.. ” பெருமூச்செறிந்தாள் சகி.. ”ஒன்னு வேனும்னா இன்னொன்ன இழக்கத் தான் வேனும்.. இதுக்கு பயந்தா எப்படி? உலகத்துல இத்தன பேரு பண்ணிக்கலையா?”

”இல்ல.. எனக்கான விருப்பங்கள் வேற.. எனக்கு அவள பிடிச்சிருக்கு.. அவளோட தோழமை பிடிச்சிருக்கு.. எனக்காக ரொம்ப கேர் பண்ணிக்கறா.. எல்லாம் சரி தான்.. ஆனா..”

”ம்ம்.. சொல்லு..”

”நான் எதிர்பார்க்கறது ஒரு நல்ல தோழிய.. இப்ப இருக்கற மாதிரியே நான் நானாவும், அவ அவளாவும் இருக்கனும்.. தனித் தனி வீடுகள்ல.. விரும்பும் போது சந்திச்சுக்கலாம்.. ஒருத்தருக்கொருத்தர் உதவி பண்ணிக்கலாம்.. கேர் பண்ணிக்கலாம்..”

”அத ஒன்னாயிருந்தும் செய்யலாமே?”

”இல்ல.. எனக்குன்னு நண்பர்கள் இருக்காங்க.. அவங்க வந்தா தங்கறதுக்கு வீடு வேனும்... அவங்களோடவும் நான் நேரத்தக் கழிக்கனும்.. ஒன்னாயிருந்தா சரி வரும்ன்னு தோனல.. ”

சகுந்தலாவுக்கு புரிந்தது.. அந்தப் பெண்ணை அவன் விரும்பினாலும், தன் வீட்டை, தன் வாழ்க்கையின் பாதியை அவள் ஆக்கிரமிக்கப் போவதை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை..

”உன் விருப்பம் புரியுது பாஸ்.. சரி, இந்த நண்பர்களே நாளைக்கு கல்யாணம் பண்ணிட்டுப் போயிடறாங்கன்னு வச்சுக்குவோம்.. அப்புறம் உனக்குன்னு யார் இருப்பா?”

”ம்ம்.. சரி தான்.. ”

”எல்லாப் பொண்ணுங்களுக்கும் ஏற்படற இன்செக்யூர் ஃபீலிங் அவளுக்கும் இருக்கு போல.. அதனாலத் தான் கல்யாணத்துக்கு கேக்கறா.. ”

”நான் அவளுக்கு கமிட் ஆகறேன்னு உறுதி கொடுத்துட்டேன்.. அப்புறம் என்ன பயம்?”

சிரித்தாள் சகுந்தலா.. ”உன் வார்த்தைக்கு என்ன உத்ரவாதம்? நாளைக்கே நீ மனசு மாறிட்டா?”

”இந்த நம்பிக்க கூட இல்லாம எப்படி? நான் நல்லவந்தான்..”

”நீ நல்லவனாவே இருந்துக்கோ.. சூழ்நிலை காரணமா மாற நேரிடலாம் இல்லையா? உங்கூட வேலை செய்யற, உன்னோட ஃபீல்ட்ல இருக்கற பொண்ண இன்னும் சில வருஷங்கள் கழிச்சுப் பிடிச்சுப் போகலாம் இல்லையா?”

:”அந்த மாதிரி அவளுக்கும் கூட ஆகலாம்.. ஆனா நான் அப்படி நினைக்கலையே?”

”சரி, இதுக்கு என்ன தான் முடிவு அப்போ?”

”அவ கலிஃபோர்னியாவுக்கு கிளம்பறா.. அடுத்த வாரம்.. ”

”சரி, போகட்டும் விடு.. ”

”எனக்கு ரொம்ப கஷ்டமாயிருக்கு.. எனக்குன்னு யாரும் இல்லாத மாதிரி இருக்கு”..

”அவ எப்படி ஃபீல் பண்றா?”

”அவளுக்கும் கஷ்டமாயிருக்கு.. அதையெல்லாம் என் மேல கோபமாக் காட்டிட்டு இருக்கா...”

அந்தத் தோழியை முழுமையாய் ஏற்கவோ இழக்கவோ அவனது மனம் விரும்பவில்லை..

”உன்னுடைய விருப்பம் இதுதான்னு சொல்லிட்டுப் பழக வேண்டியது தானே? ”

”அவளுக்கும் தெரியும்.. ஆரம்பத்துல சரின்னு சொன்னவ, இப்ப ரொம்ப அட்டாச் ஆயிட்டா.. ரெண்டு பேரும் சேர்ந்து வாழனும், குழந்த பெத்துக்கனும்.. இப்படியிருக்கு அவளோட ஆசைகள்..”

பெண் மனம்.. சகுந்தலாவுக்குப் புரிந்தது.. என்ன தான் வளர்ப்பு முறை, நடை, உடை, பேச்சு, லட்சியங்கள் வேறுபட்டாலும், இங்குக்கும் அங்குக்கும் பெண் மனசு ஒன்றைத் தான் விரும்புகிறது..

”நியாயமான ஆசைகள் தான்.. ” என்றாள் மெல்லிய குரலில், தனது ஸ்மூத்தியைப் பார்த்தவாறே...

சகுந்தலாவுக்கு அவர்களுடைய தனிப்பட்ட வாழ்வில், முடிவுகளில் தலையிட விருப்பமில்லை.. லிண்டாவும் அதை விரும்ப மாட்டாள்.. பாஸ்கரனுக்காக இவ்வளவு நேரம் பேசிப்பார்த்தாயிற்று.. அவர்களே யோசித்து அவர்களுக்காக முடிவெடுக்கட்டும்..

சூழலை இலகுவாக மாற்ற வேண்டி,

”எனக்கென்னமோ, நம்ம சினிமால வர்ற மாதிரி, அவ ஏர்போர்ட் வரைக்கும் போவா.. நீ வெளிய கண்ணத் தொடச்சிட்டு நிப்ப.. ப்ளேன் கெளம்புனதும், அவ வந்து உன்னோட தோளத் தொட்டு திரும்பிப் பாக்க வைப்பான்னு தோனுது”

மேலோட்டமாக புன்னகைத்தவாறே எழுந்தான் பாஸ்கரன்..

“என் கதையையே சொல்லி போரடிச்சுட்டேன்.. வா... சைக்கிளப் பாக்கலாம்”

இருவருமாக அவனது  காரில் அமர்ந்து வீடு சென்று சைக்கிளைப் பார்த்தபின்..... “என்னை விட வேற யார்கிட்டயாவது இருந்தா நல்லா உபயோகப்படுத்துவாங்கன்னு தோனுது” என்றான் கூலாக..

எதிர்பார்த்த பதில் தான்... சகுந்தலாவுக்கு பெரிய ஆச்சரியமில்லை...

“இத ரெண்டு வாரத்துக்கு முன்னாடியே சொல்லியிருந்தா என்ன குறைஞ்சா போயிருப்ப?” சகுந்தலா முறைக்க, அவன் குற்றச்சாட்டிலிருந்து நழுவி, “நாளைக்கு வழியனுப்ப வரட்டுமா?” என்றான்..

“கிழிஞ்சது போ.. உன்ன எதிர்பார்த்து உக்காந்திருந்தா, நான் இன்னும் ரெண்டு வாரத்துக்கு இங்கயே கிடக்க வேண்டியது தான்..”  சிரிக்காமல் சொன்ன சகுந்தலாவைப் பார்த்து சிரித்தவாறே பை சொல்லி கிளம்பினான்..

அவனை வழியனுப்பி வைத்துவிட்டு மேலே வந்து தனது இன்னொரு தோழியை அழைக்கலானாள்..

முடிந்தது..

இதுக்கு என்ன தான் முடிவு? 4

(புதுசா படிக்கறவங்க யாராச்சும் இருந்தா இதுக்கு முன்னாடி மூணு பதிவுகள பாத்துட்டு வந்துடுங்களேன்.. ப்ளீஸ்..)

ஸ்டேஷன் வந்ததும் இறங்கி சகுந்தலா லைப்ரரி நோக்கி நடக்கலானாள்.. ஆச்சு.. இன்னும் அஞ்சு நிமிஷம்.. அதற்குள் ஒரு கால் செய்து வெளியே வரச் சொல்லலாம் என்று போன் செய்தாள்.. வழக்கம் போல, பாஸ் எடுக்கவில்லை..

பாஸ்கரன் அமெரிக்கா போகப் போகிறான் என்றதுமே அலுவலகத்தில் பேச்சு கிளம்பிற்று.. ”இவனெல்லாம் எப்படி அங்க போயி வேல பண்ணப் போறான்... ” அதற்கேற்றவாறே, ஆரம்பத்தில் இங்கு வருவதில் சிரமங்கள் ஏற்பட்டன.. என்றாலும், வந்தான், படித்தான், வேலை வாங்கினான்.. சில வருடங்களில் இந்தியா திரும்பப் போவதாக சொல்லிக்கொண்டிருக்கிறான்.. கண்டிப்பாக, வேலை விஷயத்தில் தன்னைத் திருத்திக்கொண்டிருப்பான் என்று தான் சகுந்தலாவுக்குத் தோன்றியது..

ஆனாலும், முற்றிலுமாக அவனால் மாறிவிட முடியவில்லை.. இருவருக்கும் பொதுவான அலுவலக நண்பரொருவர் வீட்டுக்கு இவர்கள் சென்றிருந்த போது, அவர்கள் சொன்ன ஒரு சம்பவம், டிபிக்கல்லி பாஸ்கரனிஷ் ஆக இருந்தது... வெள்ளி இரவு அவர்களுக்கு போன் செய்து சொல்லியிருக்கிறான், அங்கு வார விடுமுறையைக் கழிக்க வருவதாக.. மூன்று மணி நேர ட்ரைவ்.. கிட்டத்தட்ட நள்ளிரவு ஒரு மணி வாக்கில் அவர்கள் வீட்டையடைந்து, கொஞ்சம் நேரம் பேசிவிட்டு, தூங்கச் செல்லும் போது தான் நினைவு வந்திருக்கிறது, சனியன்று காலையும் வேலைக்குச் செல்ல வேண்டுமென.. பிறகென்ன, மறுபடியும் மூன்று மணி நேர ட்ரைவ்.. காலையில் ஆஃபிஸ்...

சகுந்தலா அந்த ஊருக்கு வந்த புதிதில் அவனைத் தயங்கித் தயங்கி தான் தொடர்பு கொண்டாள்.. குடியேற வீடு பார்த்து வைத்திருந்தாலும், ஒரு நாள் முன்னயே வந்து விட்டதால், அவர்களைத் தனது வீட்டில் தங்கிக்கொள்ளச் சொல்லியிருந்தான்.. அவனைப் பற்றிய விவரனையைக் கேட்டிருந்த இவளது கணவனுக்கு அவ்வளவாக விருப்பமில்லையென்றாலும், பாஸ் வீட்டிலேயே தங்குவதென முடிவானது.. ஆனால், சந்தித்த ஓரீரு நாட்களிலேயே அவனை இவனுக்கும் பிடித்துப் போனது.. பாஸ் தன் மனம் போன போக்கில் வாழவிரும்பும் மனிதனென்றாலும், நல்லவனாகத் தோன்றுகிறானென்றான்..

சகுந்தலாவுக்கு என்னமோ அவனது வீட்டில் வித்தியாசமாகப் பட்டது.. ஆங்காங்கு கொஞ்சமாக அழகுபடுத்தப்பட்டிருந்தது. பூச்சாடியெல்லாம் வைத்திருக்கிறவன் அல்ல பாஸ்கரன்.. சமையலறையில் கையால் எழுதப்பட்டிருந்த வட இந்திய சமையல் குறிப்புகள் இருந்தன.. ஆச்சர்யம் மேலிட சகுந்தலா துருவ, அப்போது தான் லிண்டாவின் பெயர் அறிமுகமானது..

லிண்டாவை இவள் சந்தித்தபோது, இன்னமும் ஆச்சர்யப்பட்டுப் போனாள். சகுந்தலா தமிழ் என்றவுடன், ரஜினி பிடிக்குமென்றாள் லிண்டா.. முத்துவைத் தொடர்ந்து இப்போது சிவாஜி பார்த்தேனென்றாள்.. சகுந்தலாவால் நம்பவே முடியவில்லை.. வீட்டிலிருந்த சிவாஜி டிவிடியைக் கண்டபிறகு தான் கொஞ்சம் நம்பிக்கை வந்தது.. செட்டினாடு சிக்கன் சமையல் குறிப்பை மெயில் செய்தாள்.. கோயிலுக்கு சுரிதார் அணிந்து வந்தாள்.. நல்லதாய் ஏதாவது தமிழ்ப்படம் சொல்லு என்றாள்.. குறிப்பாக, வன்முறையற்ற, நகைச்சுவை அல்லது காதல் அல்லது குடும்பப் படம் வேண்டுமென்றாள்.. சப்டைட்டிலுடன் பார்த்திடுவேன் என்றாள்.. ரொம்ப நேரம் யோசித்துப் பார்த்து சகுந்தலா சொன்ன படம், மொழி ..

லிண்டாவும் நல்ல உயரம்.. வெள்ளையரென்று சொல்லிட முடியாத கொஞ்சமாக பிங்க் டிண்ட்டுடனான நிறத்தில் தோல்.. அவளது சுருட்டைமுடி, வம்சத்தில் எங்கோ கறுப்பினக் கலப்பு நடந்திருக்கவேண்டுமெனச் சொல்லியது.. ஹிஸ்பானிக் என்றும் சொல்ல முடியவில்லை.. ஒரு மாதிரி, வெள்ளையருக்கும், பாகிஸ்தானிக்கும் இடையில் இருந்தாற் போலத் தோன்றியது.. சகுந்தலா அவளிடமே கேட்டுவிட்டாள்.. லிண்டாவும் சிரித்து்க்கொண்டே சொன்னாள், என்னை நிறைய பேர் ஈரானியப் பெண் என்று தான் நினைப்பார்கள்.. உண்மையில், ப்யூட்டரிக்கன் (அமெரிக்கா அருகிலுள்ள தீவு ப்யூட்டரிகோ)..

சுருக்கமாகச் சொன்னால், லிண்டா க்யூட்டாக இருந்தாள்.. மொத்தத்தில், பாஸ்கரனோடு வைத்துப் பார்க்கையில், படு காண்ட்ராஸ்டாகத் தோன்றினாள்.. அவளது இந்திய ஆர்வம், அதிலும் தென்னிந்திய ஆர்வம், காதல் வயப்பட்டிருப்பாளோ என்று எண்ணவைத்தது.. ஆப்ரிக்க நாடுகளில் கொஞ்ச காலம் சேவைக்காகச் சுற்றி ஒன்றிரெண்டு ஆண்டுகள் முன்பு தான் நாடு திரும்பியிருந்தாள்..

அதற்கப்புறம், ஒன்றிரெண்டு முறை சந்தித்திருக்கிறார்கள்.. போன் செய்தால் ஒன்று, பாஸ்கரன் எடுக்க மாட்டான், அல்லது லிண்டாவுடன் வெளியே வந்திருக்கிறேன் என்பான்.. சகுந்தலாவும் அவர்களைத் தொந்திரவு செய்ய மனமில்லாமல் போன் செய்வதை குறைத்து விட்டாள்..

இதோ, இன்று மீண்டும் பாஸைப் பார்க்கப் போகிறாள்.. மணி பிற்பகல் நான்கை நெருங்கி விட்டிருந்தது.. லைப்ரரி வந்ததும், மறுபடியும் போன் செய்து எரிச்சலடைய விரும்பாமல், நேராக உள்ளே சென்றாள்.. நல்லவேளையாக, நுழைந்ததும் தென்பட்டான் பாஸ்.. லேப்டாப்பில் ஏதோ படித்துக்கொண்டிருந்தான்.. தலை ஒழுங்காக க்ராப் செய்யப்பட்டு சீவப்பட்டிருந்தது.. முழுக்கைச் சட்டை.. பாண்ட்... டை.. அப்படியான கோலத்தில் அவனைப் பார்க்க பாஸ்கரனைப் பார்ப்பது போலவே இல்லை சகுந்தலாவுக்கு..

(அடுத்த பாகத்தில் முடியும்..)

27 August 2010

இதுக்கு என்ன தான் முடிவு? 3

(இதுக்கு முன்னாடி ரெண்டு பாகம் இருக்கு.. லிங்க் எல்லாம் தர முடியாது :)) இதுக்கு முன்னாடி பதிவுகள நீங்களே போய் படிச்சுக்கோங்க :)) )


மெட்ரோ ரயிலில் ஏறி அமர்ந்ததும், மீண்டும் நினைவுகள் எழுந்து ஆடத் துவங்கின.. அடிக்கடி நினைப்பதில்லை... ஆனாலும், சமயம் கிடைக்கும் போது அதுகள் ஆட்டம் போடத் தயங்குவதில்லை..


பாஸ்கரன்.. இவளை விட இரண்டு வயது பெரியவன்.. அறிமுகமானது அலுவலகத்தில்.. சேர்ந்த முதல் நாளன்று, இவளுக்கும் இவளது தோழிக்கும் யாரோவொருவர் அலுவலகத்தைச் சுற்றிக் காமித்துக் கொண்டிருக்க, அப்போது திடீரென எதிரில் உதயமானான்.. அவளது தோழியைப் பார்த்துக்கொண்டே சகுந்தலாவுக்கும் ஹாய் சொன்னான்.. தான் பாஸ்கரனென்றும், ஃப்ரம் வைசாக் என்றும் சொன்னான்.. அவனது தோற்றத்தைப் பார்த்து விட்டு, சகுந்தலா முதலில் நினைத்தது, வைசாக் என்பது அந்தமான் நிக்கோபாரில் இருக்கும் ஏதோ ஓர் ஊரென்று.. இத்தனைக்கும் அந்தமான் மக்களை இவள் பார்த்ததில்லை.. அப்புறம் வெகு நாட்களுக்குப் பின்னர் தான் தெரிய வந்தது, விசாகப்பட்டினத்துக்குப் சுருக்கப்பேர் தான் வைசாக் என்று.. 


பார்ப்பதற்கு சராசரி தென்னிந்தியனை விட சுமாரான தோற்றம்.. கருமை நிறம்.. உயரம்.. கண்ணாடி.. இவற்றையெல்லாம் தாண்டி, கண்ணைப் பறித்ததென்னவோ அவனது நீண்ட தலைமுடி தான்.. அன்று விரித்து விட்டிருந்தான்..  அவ்வப்போது அது குடுமியாகவும் உருவெடுக்கும்.. அவனது இன்னுமொரு தனித்தன்மை, அவனது தாடி ஸ்டைல்.. அதை இரண்டு மூன்று நாட்களுக்கொரு முறை, வேறு வேறு வடிவங்களுக்கு மாற்றிக்கொண்டேயிருப்பான்.. அலுவலகத்தில் ரொம்பவே பிரசித்தம்.. அப்புறம், அவனது புல்லட்.. யமஹாவும் ஹீரோ ஹோண்டாவும் வலம் வந்த அந்த வளாகத்தில், அவனது புல்லட் அனைவரது கவனத்தையும் ஈர்த்துக்கொண்டிருந்தது.. கவன ஈர்ப்புக்காகவே அவன் அத்தனையும் செய்து கொண்டிருந்தான் என்பது அனைவரும் அறிந்த விஷயம்.. 


அவனது தோற்றம் தான் ஒரு விதமாயிருந்தது என்றால், அவனது வேலைத்திறன் அதைவிட.. எல்லோரும் மாலை வேளையிலும், பல நாட்கள் இரவு நேரத்திலும் வந்தமர்ந்து முடித்துச் செல்லும் வேலையை, அவன் காலை நேரத்தில் ஏழு மணி சுமாருக்கு வந்து, ஒன்பது மணிக்குள் முடித்திடுவான்.. மேனேஜரிடம் ஒன்பதிலிருந்து பத்து வரைக்கும் நடக்கும் டிஸ்கஷன்.. அத்தோடு சரி.. பத்து மணிக்கப்புறம் ஆளை எங்கு தேடினாலும் கண்டுபிடிக்க முடியாது.. தனது குறிக்கோள் “மினிமம் வர்க்” என்பான்.. மினிமம் வர்க் போட்டாலும் மேக்சிமம் ரிசல்ட் எடுத்துடறீங்க என்றால், மினிமம் வர்க்கோடு மேக்சிமம் ரிசல்ட்டுக்கு ஆசைப்படக்கூடாது, ”மினிமம் வர்க் அண்ட் ஆப்டிமம் ரிசல்ட்” என்று தன்னடக்கத்துடன் பதில் வரும்.. 


அலுவலகத்தில் சேரும் எவருக்கும் பாஸ்கரனுடனான முதல் சந்திப்பு நன்கு நினைவில் இருக்கும்.. ஆறு மாதம் கழித்துச் சேர்ந்த கலாவதியின் முதல் சந்திப்புக் கதை இன்னும் ப்ரசித்தம். வேலை ஆரம்பிப்பதற்கு முந்தின நாள் மாலை, நண்பரொருவருடன் அங்கு வந்திருக்கிறாள்.. யாரோவொருவர் தன் வேலை காரணமாக பாஸ்கரனைத் தேடி வர, அவரது நேரம், அவனிடமே கேட்டுத் தொலைத்திருக்கிறார்.. ”பாஸ்கரனா.. அவன் இங்கயில்லயே” என்று அவனே சொல்லியனுப்பி வைத்திருக்கிறான்.. பின்னர் அவர் வேறு யாரிடமோ விசாரித்து திரும்பி வருவதற்குள் ஆள் எஸ்கேப்.. அப்போது பார்த்து உள்ளே நுழைந்த கலாவதியிடம் அந்த நபர் பொருமித் தள்ளிவிட்டுப் போயிருக்கிறார்!!


ஒரு மல்டி டிபார்ட்மெண்ட் மீட்டிங் பற்றி சுத்தமாக மறந்து போய் தூங்கிக்கொண்டிருக்க, அன்று காலை மீட்டிங் ஆரம்பித்ததும் யாரோ நல்லவர் அவனது ரூமுக்குச் சென்று அவனை எழுப்பிவிட, அன்று பாகி பாண்ட்டுடனும், கலைந்த தலையுடனும், விலக்காத பற்களுடனும் அவன் செய்த திடீர் ப்ரவேசமும் ப்ரசண்டேஷனும் அலுவகத்தில் இன்னமும் பேசப்படுபவை.. அவனது கொலிக்ஸ் கொஞ்சம் பேர் அவனை வெறுத்தார்கள்.. அவனது வேலையையும் அவர்களே செய்ய வேண்டியிருந்ததால்.. சகுந்தலாவும் நொந்து தான் போனாள், அவனுடன் ஒரு மாதம் வேலை செய்த போது.. ஒரு நாளில் அதிக பட்சம் மூன்றே மணி நேரம் வேலை செய்துவிட்டு ஆள் எஸ்கேப் ஆகிக் கொண்டிருக்க, அதற்கப்புறம் நாள் முழுதும் வேலை ஒரு புறம், அவனைத் தேடி வந்து ஏசிவிட்டுச் செல்பவர்கள் ஒருபுறம் என்று திணறித் தான் போனாள்.. ஆனால், அவள் செய்த உதவிகளுக்காக அவன் நன்றி சொன்னதும் ஆறிப் போனது மனது.. பின் சில நாட்களில் அவனே தேடி வந்தும் உதவியிருக்கிறான்.. 


அதென்னமோ மேனேஜருக்கு பாஸ்கரனைப் பிடிக்கும்.. அலுவலகத்தின் கவனயீர்ப்பு விஷயமாகத் திகழ்ந்து கொண்டிருந்ததாலோ என்னவோ.. அதுவும் அவனது தாடி ஸ்டைலை கவனித்து கமெண்ட் சொல்லுவார்.. அவன் குட்டிச் சுவரை நோக்கி மெதுவாக முன்னேறிக்கொண்டிருந்ததற்கு அவரும் ஒரு காரணம்.. 


இந்தக் கதையெல்லாம் அமெரிக்கா வருவதற்கு முன்பு.. 




(தொடரும்)

இதுக்கு என்ன தான் முடிவு? 2

(இதுக்கு முன்னாடி ஒரு பாகம் இருக்கு.. லிங்க் எல்லாம் தர முடியாது :)) இதுக்கு முன்னாடி பதிவ நீங்களே போய் படிச்சுக்கோங்க :)) )

ஆச்சு.. இன்னும் கொஞ்சம் நேரம் தான் இருக்கு இன்னிக்கு.. சீக்கிரம் எல்லாத்தையும் செட்டில் பண்ணியாகனும்.. சகுந்தலா துடைத்தவாறே அடுத்து செய்ய வேண்டிய வேலைகளைக் கணக்கிட்டாள்..

மொதல்ல பாஸ்கரனுக்கு போனப் போடனும்.. அப்புறம், ஆஃபிசுக்கு போய் வரனும்... பேட்ஜ திருப்பித் தரனும்.. ஜான் அங்கிள முடிஞ்சா பாத்து பேசனும்.. கணக்கு நீளத் துவங்கியதைக் கண்டு அச்சமாயிருந்தது..  அவசர கதியில் சைக்கிளின் இதர உபகரணங்களையும் வெளியே எடுத்து வைத்தாள்.. அவைகளைக் கண்டதும் இன்னமும் துக்கம் பீறிட்டது.. 

சைக்கிள் வாங்கச் சென்ற போது தான் தெரிந்தது, இந்தியாவில் கிடைத்தது போல முழுமையானவை இங்கு கிடைப்பதில்லையென.. அங்கு சைக்கிள் பிரதான வாகனம் என்பதால், கூடவே வரும் பூட்டு, நேராய் நிறுத்தக் கூடிய ஸ்டேண்ட்,  பெரிய கேரியர்.. அப்புறம், மிக முக்கியமாக, உறுதியான ப்ரேக், பின்னால் பார்க்கக் கூடிய கண்ணாடி, பெல்.. என ஊர் மக்களின் அத்தியாவசியத் தேவைகளுக்கேற்ப வடிவமைக்கப்பட்டு இருந்தன.. உயரமும் அப்படியே.. இங்கு அப்படியில்லை.. ரொம்ப நேரம் தேடி, கிட்டத்தட்ட அங்கு ஓட்டியதைப் போன்ற ஒன்றைக் கண்டார்கள்.. சீட்டுக்கு தனியாக குஷன், காய்கறி வாங்கி மாட்டி வர முன்னால் ஒரு கூடை, பின்னால் பை வைத்துச் செல்ல கேரியர், பம்ப், ஹெல்மெட், தனியே பூட்டு என கூட சுமார் ஏழெட்டு உபகரணங்களை தேர்ந்தெடுத்து வாங்கி வந்தார்கள்.. 

அதிலும், அந்தக் கூடையைக் கண்டதும், தாங்கமுடியாமல் முகம் சுருங்கியது.. சைக்கிளையாவது கடையில் இருந்து வரும் போது ஓட்டி வந்தாள்.. அந்தக் கூடை.. ம்ஹூம்.. 

இனி என்ன யோசிச்சு என்னாவப் போவுது... பாஸ்கரா.. உங்கையில தான் எல்லாம் இருக்கு.. 

வழக்கம் போல போனை எடுக்கவில்லை பாஸ்கரன்.. அவன் எடுத்திருந்தால் தான் அதிசயம்.. எரிச்சலுடன் அதை வீசிவிட்டு, அடுத்த வேலையைப் பார்க்கலாமென முடிவு செய்த போது, ”கால் ஃபர்ம் பேஸ்கர்ன்” என்று சத்தமிட்டது செல்பேசி..

“சகீஈஈஈஈஈஈஈஈ”

”ம்ம்.. பரவாயில்லயே.. இன்னிக்கு நீயே திருப்பி கூப்பிட்டுட்ட”

“சரி.. நான் லைப்ரரில இருக்கேன்..”

எப்பவும் சுருக்கமாக பேசித் தான் பழக்கம் அவனுக்கு.. அவன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கு அவன் என்றுமே நேரடியாக பதிலளித்ததில்லை.. 

”சரி, இன்னும் இருபது நிமிஷத்துல அங்கயிருக்கேன்...”

செல்லை அணைத்து பையில் போட்டுவிட்டு, விரைவாகக் கிளம்பி, ஐந்து நிமிடங்களில் ரயிலடிக்கு வந்து சேர்ந்தாள்..  பாஸ்கரனைப் பாத்து என்ன, குரலைக் கேட்டே வெகு நாட்களாகிவிட்டன.. 

ஆசைப்பட்டு வாங்கிய, ஓட்டியிருக்காத சைக்கிள் என்பதால் அதை பாதி விலைக்கு விற்க மனமில்லை.. நட்டமாயிடுமே.. சரி, பிரியமானவர்கள் யாருக்காவது சும்மா கொடுத்துச் செல்லலாம் என்று நினைத்த போது, முதலில் அணுகியது ஜான் அங்கிளை.. ஆனால், அவர் புன்னகையுடன் மறுத்து விட்டார்.. லேடீஸ் மாடலாம்.. விலைச்சீட்டு இருந்தால் கொண்டு வா, திருப்பிவிடலாம் என்றார்.. வாங்கியது எல்லாம் அப்படியே பத்திரமாயிருக்க, விலைச்சீட்டு மட்டும் எங்கு போய்த் தொலைந்ததெனத் தெரியவில்லை.. 

அடுத்ததாக நினைவில் வந்தவன் பாஸ்கரன்.. பாஸ் எனச் செல்லமாக அனைவராலும் அழைக்கப்படுபவன்..

தொடரும்..

(இன்னும் ரெண்டு பார்ட் போவும் போல.. முடிஞ்சா இன்னிக்கே எழுதிடறேன்.. )

26 August 2010

இதுக்கு என்ன தான் முடிவு?

தன்னுடைய சைக்கிளை பார்த்தபடி நின்றிருந்தாள் சகுந்தலா..

”ச்சே என்ன பொண்ணு நீ.. இப்பிடி வெல கொடுத்து வாங்கி வந்த சைக்கிள ஆறு மாசமா வெளிய எடுக்காமயே போட்டு வச்சிருந்திருக்கியே.. ” அவளின் மீதான கோபத்தை மனம் வெளிப்படுத்தியது..

பால்கனி ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்தது அந்த புழுதி படிந்த சைக்கிள்.. நீல நிறத்துடையது..  குறுக்கே தண்டியற்ற பெண்களுக்கான வகை.. கையை வைத்து இழுத்துப் பார்த்தாள்.. ஒரு இஞ்ச் அளவுக்கு புழுதி வந்தது.. தன் பெயரை எழுதிப் பார்த்தாள்.. ”ம்க்கூம்.. இதுக்கொன்னும் குறைச்சலேயில்ல...” மறுபடியும் மனம் ஒரு பக்கம் கிண்டலடித்தது.. சைக்கிளின் கழுத்தில் தொங்கிய விலைச்சீட்டைக் கண்டதும் ரொம்பவே அவமானமாக இருந்தது.. ”வாங்கி ஆறு மாசத்தில் ஒரு நாள் கூட வெளியே எடுக்காம..” மறுபடியும் மனம் அவளைத் திட்டுவதாக எண்ணி தன்னைத் தானே திட்டிக் கொள்ளத் துவங்கியது..

அவள் சைக்கிள் வாங்கின கதையையே தனியாகச் சொல்லலாம்.. சைக்கிள் ஒன்றிருந்தால், தேவையான போது கடைக்குச் சென்று காய்கறிகள் வாங்கிக்கொள்வேன் என்று கணவனை நச்சரித்துக் கொண்டிருந்த நேரம்.. அவன் தலையில் அடித்துச் சத்தியம் செய்யாத குறையாகச் சொன்னான்.. ”கண்டிப்பா இதயும் வீண் தான் பண்ணப் போற..”  அவன் பேச்சைக் கேட்டிருக்க வேண்டும்.. இனி எதுக்கெடுத்தாலும் இதையே, குறைந்தது ஆறு வருஷத்துக்காவது சொல்லிச் சொல்லி அவன் குத்திக் காட்டப் போவது உறுதி!

எப்படி இதெல்லாம் ஆரம்பித்தது? ம்ம்.. ஜான் அங்கிள் தான் எல்லாத்துக்கும் காரணம்.. அவர் தான் முதன் முதலில் ஆசை காட்டியிருந்தார்.. ”இப்பிடியே உன்னோட அப்பார்ட்மெண்ட் கேட் வழியா வெளிய வந்து, எதுத்தாப்புல இருக்கற ஸ்டேட் பார்க் வழியா சைக்கிள் பண்ணி போனீன்னா.. அஞ்சே நிமிஷத்துல வால்மார்ட் சூப்பர் மார்கெட் வந்துடும்.. நான் இப்பல்லாம் தெனமும் எக்சர்சைஸ் பண்ணற மாதிரி ஓட்டிட்டு போயிட்டு அன்னன்னிக்கு என்னென்ன தேவைப்படுதோ, அதெல்லாம் வாங்கி வரேன்.. ”

ஜான் அங்கிள் அவளுடைய அபார்ட்மெண்டின் இன்னொரு மூலையில் இருக்கும் சக வசிப்பாளர்.. ஜான் என்றதும் வெள்ளையரோ என்று நினைத்திட வேண்டாம்.. கேரளாக்காரர்.. கல்ஃபில் சில வருஷம், ஆஸ்திரேலியாவில் சில வருஷம், ஐரோப்பாவில் சில வருஷம், மற்றும் தென் அமெரிக்காவில் சில வருஷம் என வாழ்நாளைக் கழித்திருப்பவர்.. இன்னும் அண்டார்டிக்கா ஆஃப்ரிக்கா மட்டும் தான் மிச்சம் வச்சிருக்கீங்க என்று கிண்டலடித்திருக்கிறாள்.. தன்னுடைய சைக்கிளை தான் எங்கு சென்றாலும் எடுத்துச் செல்வதாகவும், தன்னுடனே பல வருடங்களாக பயணிக்கும் தோழனென்றும் அதனைப் பற்றிப் பேசி, நினைவுகளின் ஓர் ஓரத்தில் புதைந்து போய்க் கிடந்த அவளுடைய பால்ய கால சைக்கிள் நினைவுகளைக் கிளறி விட்டவர்..

ம்ம்.. பள்ளி காலச் சைக்கிள்.. அவளுடைய மிக உற்ற தோழனாக ஒரு காலத்தில இருந்த சைக்கிள்.. அதுவும் நீல நிறத்துடையது.. ”போதும் நிறுத்து.. வெளியே வா.. நீ மூழ்க ஆரம்பிச்சா மீள மாட்ட... இப்ப ஆகற வேலையப் பாரு..” மறுபடியும் அவளைத் திட்டி நிகழ்காலத்துக்கு தன்னைத் தானே இழுத்து வந்தது அவள் மனம்.. ”நீ எப்போ தான் என்னைத் திட்டாமல் இருப்ப..” அதனிடம் சண்டையிட்டவாறே தன் சைக்கிளைத் துடைக்கலானாள்..

தொடரும்..

(சைக்கிளயே வச்சு எழுதப்பட்ட கதை இல்ல.. அடுத்த பாகத்துல மிச்ச ஆட்கள் வருவாங்க.. :)) அப்புறம், கதைல வர்றது ரெண்டு சக்கரச் சைக்கிள் :)) )

19 August 2010

என்றோ தோன்றியவை...

பெருமாயி..

சுட்டெரிக்கும் வெயிலில்
கடற்கரையின் சுடுமணலில்
படுத்துக்கிடந்தவர்களைக் கண்டு
முதன்முதலாகத்
தன்னிறங் குறித்து
பெருமிதம் கொண்டாள்
முத்தழகு...

வலையவிரயம்..

இல்லாத நாட்களில்
இல்லையேயென்று
தவித்தேங்கிய மனம்
கேட்டது கிடைத்ததும்,
வேறெங்கும் நகரயியலாமல்
வலையில் சிக்கிய தேனீயாய்
இன்று...


நுணலும்..


நீயும் உன் வாயால் கெடுவாய்
யாரோ சொல்லிக்
கேட்டறிந்திருந்தது
சட்டென நினைவு வர,
விழித்துக்கொண்டது..
இனி நுணலும்
இடம் பொருள் ஏவலறிந்து
தன் வாய் திறக்கும்..

கூச்சம் மற..

இன்னிக்கும் கத்திரிக்கா குழம்பா
போன வாரம் தானேம்மா செஞ்ச
என்றோ வெறுப்பை
உமிழ்ந்திருந்த வாய்,
இன்று உமிழ்நீரைக் குழப்பி
கூசாமல் மென்றுதின்றது
மூன்று வேளையும்
அதே சோற்றை..
பசி வந்தால் ருசியும் பறக்கும்..

13 August 2010

நதிபோலே ஓடிக் கொண்டு இரு...



எதயும் எழுத மூட் இல்லை.. படிக்கவும்.. ஏன், எதற்குமே இப்போ மூட் இல்லை.. இந்தத் தலைப்பும் எனக்கு நானே அறிவுருத்திக்கொள்வது..

ஓரிடத்தில் இருந்து இன்னொரு ஊருக்கு மாறுகிறேன்.. மீண்டும் அங்கு என்றாவது செல்வேனோ தெரியவில்லை.. சொல்லாதீங்கோ என்று சொல்லியிருந்தும் மிஸ் யூ சொல்லி கலங்க வைத்தாயிற்று..

நதியானது எத்தனையோ இடங்களை, வனங்களை, மனிதர்களை பார்த்திருந்தாலும் , தான் போகும் வழியெங்கும் ஈரத்தை மிச்சம் விட்டுச் சென்றாலும், தன் இலக்கு நோக்கி ஓடிக் கொண்டே தான் இருக்கிறது.. நானோ இப்போதைக்கு கலங்கிய குட்டை போல நேற்றைய தேதியிலேயே தேங்கி நிற்கிறேன்..

எல்லாம் கொஞ்சம் நாட்களுக்குத் தான்.. சரியாகிக்கொண்டிருக்கிறேன்.. இன்னும் ஓரீரு நாட்களில் சரியாகிவிடுவேன் என்று தோன்றுகிறது..



04 August 2010

புளியங்கொட்டையும் கொஞ்சம் பூர்வீக நினைவுகளும்...




மஹி புளியங்கொட்டைய கண்ணுல காமிச்சாலும் காமிச்சாங்க.. பய புள்ளைக ஆளாளுக்கு அவங்கவங்க பூர்வீக நெனப்பு கிளம்பிடுச்சு.. மஹிக்கு அதயப் பாத்ததும் அவங்க ஊர் புளியமரங்கள், நிழல், புளியம்பூ, புளியங்கா.. இப்படி பலப்பல விஷயங்கள் ஞாபகம் வந்து, இப்போ அதெல்லாம் அழியப் போவுதேன்னு மனசுல கஷ்டப்பட்டுகிட்டு இருக்காங்க.. இமாவுக்கும்  அவங்க வீட்டு புளியமரம், கூடவே அத சாப்பிட்டு வளர்ந்த ஆமைகள், முயல்கள் அப்படின்னு பழைய நினைவுகள் வந்தாச்சு.. எனக்கு எங்கவூருல விளையாண்ட  தாயக்கரம் நெனவுக்கு வந்துச்சு.. ஜெய்லானிக்கு நான் தாயக்கரம்ன்னு சொன்னவுடனே அவங்க ஊர்ல விளையாண்ட பல்லாங்குழி ஞாபகம் வந்திருக்கு.. ஆனா ஒரு கேட்ச் - தாயக்கரத்த பல்லாங்குழின்னு நினைச்சுட்டாங்க.. அதனால, இந்த தமிழ் கூறும் பதிவுலகத்துக்கு தாயக்கரம்ன்னா என்னன்னு வெளக்க வேண்டியது எங்கடமையாயிப் போச்சு.. மேல படம் இருக்கு பாருங்க - அதான்.. அனேகம் பேருக்கு தெரிஞ்சதாத் தான் இருக்கும்... இப்ப டச்சு விட்டுப்போனதால, லேசா மறந்து போன மாதிரி இருக்கு.. இப்படி எழுதி வச்சா பின்னாடி என்னைக்காவது விளையாடனும்ன்னு தோனுச்சுன்னா பாத்துக்கலாம்.. அதுக்காகவும் தான் எழுதறேன்..

ஊருல எங்க தாத்தா வீட்டுக்கு ஒட்டுன மாதிரியே அவரோட தம்பி வீடு இருக்கும் (சின்னத்தாத்தா).. அவங்க மூலமா எனக்கு கொஞ்சம் சித்திங்க, மாமா.. கூடவே, எங்க வீட்டு கும்பல் - எங்கம்மா, அத்த, பாட்டி.. இப்படி எல்லாருமாச் சேந்து லீவு நாள், பண்டிக காலங்கள்ல விடிய விடிய ஆடுவாங்க.. நேரம் போறதே தெரியாது.. அப்புறமா சித்திங்க ஒருத்தொருத்தரா கண்ணாலங்கட்டிப் போயிட்டாங்க.. மிஞ்சியிருந்த ரெண்டு வீட்டு பெருசுங்ககளுக்கு இதுதான் முக்கிய பொழுதுபோக்காகிப் போச்சு.. கிட்டத்தட்ட தெனமும் விளையாடிட்டு இருப்பாங்க.. இப்போ அந்த கும்பல்ல மிச்சம் இருக்கறது எங்க பாட்டி மட்டுந்தான் :(( மத்த பெரியவங்க எல்லாரும் ஒருத்தொருத்தரா போயி சேர்ந்துட்டாங்க.. மேல போயும் விளையாடிகிட்டுத் தான் இருப்பாங்கன்னு நெனக்கறன்.. :)) நாங்களும் அப்பப்ப கலந்துக்குவோம்.. மத்த நேரம் வேடிக்க பாப்போம்.. 

இதுக்கு பெருசா எதுவும் தேவையில்ல.. வாசல்ல, சாக்பீஸால இந்த மாதிரி கட்டம் வரைஞ்சுக்கோனும்.. புளிய சுத்தம் பண்ணுறப்ப, புளியங்கொட்டைகள தனியா எடுத்து வச்சிடுவாங்க.. அதுகள ஒரு பக்கமா மட்டும் நல்லாத் தரையில தேச்சு வெள்ளையாக்கிடனும்.. மொத்தம் ஆறு புளியங்கொட்டைங்க தேவைப்படும்.. எல்லாத்தையும் கையில வாரி எடுத்து ஒரு குலுக்கு குலுக்கி, கையத் திருப்பி, மெதுவா விசிர்ற மாதிரி வீசோனும்.. ரெண்டு பேர் மட்டும் ஆடலாம்.. இல்ல ரெண்டு ரெண்டு பேரா குழு சேர்ந்து நாலு பேர் ஆட்டமும் ஆடலாம்.. கூட்டாளிங்க ரெண்டு பேரும் எதுத்தெதுத்தாப்ல உக்காந்துக்கனும்.. தாயக்கட்ட இருந்தா, அதயும் உருட்டி விட்டு விளையாடலாம்.. ஆனாலும் புளியாங்கொட்டைங்க தான் எங்க சாய்ஸ்...

விளையாட்டுக் கட்டத்தப் பத்திச் சொல்லிடறேன்..  ஒவ்வொருத்தருக்கும் நாலு காயின்ஸ் அல்லது காய்கள் (குட்டியா சிவப்பு மற்றும் பச்சக் கலர்ல இருக்குது பாருங்க)... அவங்கவங்க உட்காந்திருக்கற பக்கம் இருக்கற பெரிய rectangle கட்டம் அவங்களோட வீடு மாதிரி.. அங்கயிருந்து தான் ஆட்டம் ஆரம்பிக்கும்.. க்ராஸ் போட்ட எடங்களயும், ப்ளூ ஷேட் பண்ணுன எடங்களயும் மலை அப்படிம்போம்.. ஏரோ போட்டிருக்கற திசைல காய்கள நகர்த்தோனும்.. 

இனி விதிமுறைகளப் பாப்போம்.. புளியங்கொட்டைகள விசிறும் போது ஒன்னே ஒன்னு மட்டும் வெள்ளையா விழுந்ததுன்னா, அதுக்கு தாயம்ன்னு பேரு.. (மேல ப்ரவுன் அண்ட் வைட் ஆ தெரியுது பாருங்க)..  தாயம் விழுந்தாத் தான் ஒவ்வொரு காயா கீழ இறக்க முடியும்.. ஒவ்வொரு வெள்ளைக்கும் ஒவ்வொரு பாயிண்ட்ஸ்.. எல்லாமே வெள்ளைன்னா ஆறு.. எல்லாமே ப்ரவுன்னா விழுந்தா பன்னெண்டு.. இதுல, தாயம், அஞ்சு, ஆறு, பன்னெண்டு - இதெல்லாம் ஸ்பெஷல் ஸ்கோர்ஸ்.. அதாவது, இப்பிடி விழுந்தா இன்னொரு சான்ஸ் நாமே விசிறலாம்.. இல்லாட்டி, ஒரு வாட்டியோட அடுத்தாளுக்கு பாஸாயிடும்.. எவ்வளவு ஸ்கோர் கிடைக்குதோ, அவ்வளவு சின்னக் கட்டங்களுக்கு காய்கள நகர்த்தலாம்.. 

காய்கள ஒன்னொன்னா கீழ எறக்கி, அப்படியே நாலு கட்டத்தயும் சுத்தி வந்து,  மறுபடியும் ஆரம்பிச்ச எடத்துக்கே கொண்டு வந்து, வெளிய எடுக்கனும்.. யாரு நாலு காய்களையும் இப்படி முதல்ல வெளிய எடுக்கறாங்களோ, அவங்க தான் ஜெயிச்சவங்க.. 

இதுல சுவாரசியமான விஷயமே வெட்டு தான்.. உதாரணத்துக்கு - எதிராளி காய் எதுத்தாப்ல ரெண்டு சின்னக் கட்டங்கள் தள்ளி இருந்தா, நம்ம ஸ்கோர் ரெண்டு வந்துச்சுன்னா - வெட்டிடலாம்.. சாதுர்யமா காய்கள நகர்த்தி அவங்க கையில சிக்காத மாதிரி கொண்டு போகனும்.. வெட்டுனாலும் வெட்டாட்டம் அப்படின்னு இன்னொரு சான்ஸ் விசிறக் கிடைக்கும்.. வெட்டப்பட்ட காய்ங்க மறுபடியும் வீட்டுக்குத் திரும்பிடும்.. தாயம் இல்ல அஞ்சு போட்டு தான் மறுபடி இறக்க முடியும்...  ஒரு வாட்டியாவது எதிராளிய வெட்டுனாத்தான் முழுசும் சுத்தி வந்து வீடு உள்ளாற போயி காய வெளிய எடுக்கலாம்.. இல்லாட்டின்னா மறுபடியும் சுத்தி வரனும்.. 

இந்த மலைகள் கொஞ்சம் ஸ்பெஷல் ஏரியா.. அங்கயிருக்கும் போது, நாம எதிராளிய வெட்டலாம்.. ஆனா, அவங்க நம்மள வெட்ட முடியாது.. அதுனால, எப்ப சான்ஸ் கிடைச்சாலும், மலையில ஏறி உக்காந்துக்கோனும்.. 

கூட்டு சேர்ந்து ஆடும் போது, ரெண்டு பேருக்கும் சேர்த்து நாலு காய்ங்க இருக்கும்.. ரெண்டு பேரோட ஸ்கோர்ஸுமே காய் நகர்த்தறதுக்கு செல்லுபடியாகும்.. இப்படி நாலு பேரா சேர்ந்து விளையாடும் போது ஆட்டம் நல்ல பரபரப்பா இருக்கும்.. இத இப்படி நகர்த்து, அதய வெட்டு, இத மலையில கட்டு, இத வெளிய எடுன்னு ஒரே சத்தமா இருக்கும்.. நம்ம சித்திங்க மாமாங்க எல்லாரும் கொஞ்சம் கள்ள ஆளுங்க.. உஷாராயில்லைன்னா அப்படியே அந்தப்பக்கமா காய நகர்த்தி வச்சுட்டு ஒன்னுந் தெரியாத மாதிரி முகத்த வச்சுப்பாங்க.. அதனால அவங்க கைகள் மேல ஒரு கண்ணு எப்பவும் வச்சிருக்கோனும்.. 

ஹூம்.. இப்படி எல்லாருமாச் சேந்து விளையாடி பல வருஷங்களாயிப் போயாச்சு.. கல்லூரில படிக்க வெளியூரு போனப்ப, ஊரோட டச்சு விட ஆரம்பிச்சது.. இப்ப.. ம்ம்.. நிறையவே கம்மியாயிடுச்சு.. இப்போ போனாலும், அந்த பழைய ஆட்கள் யாரும் பக்கத்துல இல்ல.. எல்லாரும் வேற வேற ஊர்ல இருக்காங்க.. பெரியவங்களும் உயிரோட இல்ல.. என்னமோ போங்க.. Take life as it comes....