Showing posts with label என்னன்னு லேபிள் பண்ண??. Show all posts
Showing posts with label என்னன்னு லேபிள் பண்ண??. Show all posts

19 December 2010

சில்லென்று இரண்டு கற்பனைகள்..



இளம் மாலை நேரம்..
கதவுசார் நிலைக்கண்ணாடி..
ஜோடித்து முடிக்கும் தருவாயில் அவள்..


பின்புறமிருந்து வந்து
சற்றே குனிந்து
அவளது வலது தோளின் மீது
தன் தலை வைத்துப் பார்த்து,
தங்களது பொருத்தம் மெச்சினான் அவன்..


"சுடிதார் நல்லாயிருக்கு..
தோடும்.."
மேய்ந்து கொண்டிருந்த அவன் பார்வை
அவளது விழிகளில் ஒரு யுகநொடி தொலைந்து நின்றது..
பின் மீண்டு, சட்டென உயர்ந்து, எதையோ தேடியது..
"என்னமோ குறையுது..
ம்ம்.. பொட்டு எங்க? பொட்டு வை.."
"பொட்டு வச்சாத் தாண்டி உம்முகம் முழுமையா இருக்கு.."


ப்ச்.. உதடு பிதுக்கி வருத்தம் காண்பித்தாள்
"ஊர்ல இருந்து வாங்கி வர மறந்துட்டேன்.."


"அதானே பாத்தேன்..
இதெல்லாம் மறந்துடுவியே..
மாடல் அழகின்னு மனசுல நெனப்பு.."
கன்னத்தில் மென்முத்தம் பதித்து விலகியவனை
சட்டை பற்றித் திருப்பினாள்..
"உம் மீச எங்கடா?
மீச வச்சாத் தாண்டா ஆம்பிளைக்கு அழகு.."

பழிவாங்கிய களிப்பு அவள் முகத்தில் வழிய,
குறும்பும் புன்சிரிப்பும் மின்ன பதிலுரைத்தான் அவன்..
"ம்ம்.. நானும் மறந்து ஊர்லயே விட்டுட்டு வந்துட்டேன்.."


..................................................

வா நனையலாம்
மழை பிடிக்கும்

என்றேன் நான்..


சளி பிடிக்கும்
என்றாய் நீ..


நனைந்தவாறே.. ஓடினோம்..

இருவரும்..
இருவருக்கும்...

24 September 2010

அவ்வ்வ்வ்வ்வ்....



இன்றிரவின் கனவினில்..


தனியே உறங்க முயலும்போது தான் 
நினைவுக்கு வந்து தொலைக்கின்றன
சிறு வயதில் சகோதரனுடன்
போர்வைக்குள் ஒளிந்துகொண்டு பார்த்த 
ஈவில்டெட் உருவங்களும்,
தோழியருடன் தியேட்டரில் 
பாதி நேரம் கண்ணை 
மூடிக்கொண்டே 'பார்த்து'விட்டு
சரியாக ஒரு வாரம் வரை
பயங்கொள்ளச் செய்த  
ரிங் படத்துச் சிறுமியும், 
இடையிலே பயந்ததால் 
கணினியில் நண்பர்களையழைத்து
உரையாடியபடியே பார்த்த 
யாவரும் நலம் டீவியும், 
பார்த்தவர்கள் எல்லோரும்
பயந்ததாகச் சொன்னதால் 
இன்னும் பார்க்காமலே விட்டிருக்கும் 
பாரா நார்மல் ஆக்டிவிட்டீஸ் படமும்,
மற்றும் இன்னபிற கற்பனைகளும்.. 

மன்னர்: எப்பூடி?? ச்ச்சும்மா டெர்ரர் கெளம்புதுள்ள?

அமைச்சர்: ஆம் மன்னா! மாபெரும் வெற்றி இம்முறை!! மக்கள் எல்லோரும் பயந்து-தெறித்து ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.. இனி ஒரு பயபுள்ள கூட நம்ம ப்ளாக் பக்கம் தலை வைத்துப் படுக்காது!!

மன்னர்: அப்படியா? ஹாஹ்ஹா! பின்னிவிட்டோம் மந்திரியாரே.. அதுசரி, எந்தப் பக்கமாக ஓடிக் கொண்டிருக்கிறார்கள்?

அமைச்சர்: தூக்கத்துல கண்ணு தெரியாம போறதுக்கு இலவசமா ஆலோசனை சொல்ற எடத்துக்கு...




************

ஆறுதலுக்கு...

டிஸ்க்ளெய்மர்: இங்கயே இப்பவே சொல்லிடறேன்.. இந்தப் பகுதியில் வரும் சம்பவம் மற்றும் இதில் வரும் மனிதர்கள் யாவும் கற்பனையே.. இதற்குப் பின்னர் யார் வீட்டிலாவது இது போன்ற சம்பவங்கள் நடைபெற்றால் அதற்கு கம்பெனி பொறுப்பேற்காது!! 

அப்பாவி ரங்ஸ்: இன்னிக்கு என்ன சாப்பாட்டுக்கு?

தங்ஸ்: ம்ம்ம்.. புதினா சட்னி..

அ.ர: சட்னியா? அதெல்லாம் எங்க வீட்டுல இட்லி தோசைக்குத் தான் பண்ணுவாங்க.. சாப்பாட்டுக்கு செய்ய மாட்டாங்க.. 

த: இல்ல.. அது வேற இது வேற.. இது வேற மாறி பண்ணியிருக்கேன்..

அ.ர: (சுவைத்துப் பார்த்து விட்டு) இல்ல.. தொண்டைல அடைக்கறா மாதிரி இருக்கு.. வேணாம்.. ரசத்த எடு..

இரண்டு மாதங்கள் கழித்து,

அ.ர: இன்னைக்கு என்ன சாப்பாட்டுக்கு?

த: (கொஞ்சம் கூட யோசிக்காமல்) புதினா துவையல்.. 

அ.ர: (சுவைத்துப் பார்த்து விட்டு) அட.. நீ துவையலெல்லாம் பண்ணுவியா? நல்லாயிருக்கே!! 


************




19 August 2010

என்றோ தோன்றியவை...

பெருமாயி..

சுட்டெரிக்கும் வெயிலில்
கடற்கரையின் சுடுமணலில்
படுத்துக்கிடந்தவர்களைக் கண்டு
முதன்முதலாகத்
தன்னிறங் குறித்து
பெருமிதம் கொண்டாள்
முத்தழகு...

வலையவிரயம்..

இல்லாத நாட்களில்
இல்லையேயென்று
தவித்தேங்கிய மனம்
கேட்டது கிடைத்ததும்,
வேறெங்கும் நகரயியலாமல்
வலையில் சிக்கிய தேனீயாய்
இன்று...


நுணலும்..


நீயும் உன் வாயால் கெடுவாய்
யாரோ சொல்லிக்
கேட்டறிந்திருந்தது
சட்டென நினைவு வர,
விழித்துக்கொண்டது..
இனி நுணலும்
இடம் பொருள் ஏவலறிந்து
தன் வாய் திறக்கும்..

கூச்சம் மற..

இன்னிக்கும் கத்திரிக்கா குழம்பா
போன வாரம் தானேம்மா செஞ்ச
என்றோ வெறுப்பை
உமிழ்ந்திருந்த வாய்,
இன்று உமிழ்நீரைக் குழப்பி
கூசாமல் மென்றுதின்றது
மூன்று வேளையும்
அதே சோற்றை..
பசி வந்தால் ருசியும் பறக்கும்..

23 July 2010

காவல் தெய்வங்கள்....



மொத்தம் எத்தனைபேர்?
சரியாக நினைவில்லை..
ஆறேழு இருக்கலாம்,
அலுவலகத்துக்கு மட்டும்..
அங்கே, நாளும் காவலிருப்பர் நால்வர்..
அவ்வப்பொழுதில் மற்றவரும் ..

இவர்கட்கு பெயரிடுதல் எனது கடமை..
எளிதல்ல இவ்வேலை..
எனது பெயர் பிடிப்பதில்லை
இவர்களது இறைவனுக்கு..
இதற்கு முன்னே காவல்
இருந்தவரது பெயருந்தான்..


ஒருவனுக்கு ஐந்திலக்கப் பெயர்,
எல்லாமே எழுத்துக்களாய்...
இன்னொருவனுக்கு ஏழு,
இறுதியில் ஓரெண் தேவையாம்..
மூன்றாமானவன் எட்டப்பன்..
எட்டிலே ஓரெழுத்து பெரியதாயிருக்க,
சின்னமொன்றும், எண்ணொன்றும்
உடனிருந்து பாதுகாக்க,
மற்றதெல்லாம் சிற்றெழுத்துக்கள்..
நாலாமானவனுக்கு எண்கள் மட்டும்...

இவர்களின் ஆயுட்காலம்,
மூன்றே மாதங்கள் தாம்..
முடிந்ததும், செவ்வனே
இயற்கையெய்திடப்படுவர்..
ஒன்றாய் மரிப்பதில்லை அனைவரும்..
ஒவ்வொருவனாய்த் தான்..
காலஞ்சென்ற ”இன்னார்” இடத்துக்கு,
இன்னொருவனைத் தேடிப்பிடித்து,
அவனது தலைவிதிக்கேற்ப
பெயரிட்டழைக்க வேண்டும்,
மானிடர் யார்க்கும்
புரிந்திடாத ரகசியக் குரலில்...

கொள்ளு பேரப்பிள்ளைகளை
மாற்றி மாற்றியழைக்கும்
தொன்னூறு வயது தாத்தன் போல்,
சிலவேளைகளில் குழம்பிப்
போய் விடுகின்றேன் நானும்....
புதிதாய் இவர்களைப்
பணியமர்த்திய பொழுதுகளில்,
என்பாடு சொல்லி மாளமுடிவதில்லை...
இதுநாள் வரை காத்தவனது
நன்றி மறக்கயியலாமல்,
அப்பெயரிட்டே அழைத்துத்
தொலைக்கின்றேன் புதியவனையும்..

காவலில் கெட்டிக்காரர்கள்..
பெயரைச் சரியாக உச்சரிப்பவனுக்கே
சொர்க்க வாசல் திறக்கப்படும்.
ரோசக்காரப் பயல்கள்..
மாற்றியழைத்தால்
மிகுந்த வருத்தம் கொள்வர்..
மும்முறை தவறிழைக்கப்பட்டால், 
தற்கொலை செய்து கொள்வர்..

இவர்கள் போக,
வீடு, விமானம், வங்கி, வழக்கு,
அஞ்சல், அலும்பு,
செருப்புக் கடை, பருப்புக் கடைக்கென
இன்னும் இருக்கிறார்கள்,
சுமார் ஐம்பது பேர்...

பொருத்தமான பெயர் தேடி,
சலித்துதான் போகின்றேன்,
நித்தமும் சலிப்பில்லாமல்
கடமையே கண்னென
கணினியில் ”உயிர்” வாழும்
எனதருமை கருப்பண்ணச் சாமியர்க்கு..

01 July 2010

அக்காவக் கண்டு சொக்கி நின்ன மாமன்...

வலைகடல்ல எதயோ பாத்து, எதுமேலயோ இடிச்சு, அது பதிலுக்கு எங்கிருந்தோ எங்கயோ என்னத் தூக்கிப்போட, இந்த இடத்துல வந்து நின்னேன்..



யாரு இவகன்னு தெரியுதா?

மொதல்லாம், எனக்கு அசின் ன அவ்வளவாப் பிடிச்சதில்ல (ரசிகப் பெருமக்க ஆரும் சண்டைக்கு வந்துபோடாதீங்கப்பு).. ஏன்னு தெரியல (கண்டிப்பா பொறாமை காரணமில்ல :) ).. போக்கிரி, கஜினி.. இப்படி சில படங்களப் பாத்திருந்தாலும், என்னமோ, இவிக முகம், பாத்தவுடனே அழகாயிருக்குன்னு மனசுல பதிஞ்சதில்ல.. ஆனாலும், நம்மூருப் பயலுவ கொஞ்சம் பேருக்கு அசின் ன ரொம்பவே பிடிச்சிருக்கறதப் பாத்திருக்கேன்..

எது எப்பிடியோ, இந்தப் புகைப்படத்துல இவிக கொஞ்சம் (சரி.. சரி.. நெறயத்தேன்...) அழகா இருந்த மாதிரி இருந்தது.. தொடர்ந்து, இவிக காலரி பாக்க ஆரம்பிச்சேன்.. முன்னாடி இருந்ததுக்கும் இப்போப் பாக்கறதுக்கும், மேக்கப்பு ல, ஸ்டைலுல, நிறைய மாற்றங்கள்.. இந்திப் படத்துல தல காட்ட ஆரம்பிச்சப்புறம், அக்கா (அப்பிடிக் கூப்பிடலாமாங்க்கா??) சும்மா ஜொலிச்சுகிட்டு இருக்காங்கன்னு தோனுது... என்னது, அக்கா மேக்கப் இல்லாமயும் அழகாத்தேன் இருப்பாங்கன்றீயளா.. சரி.. சரி.. விஷயத்துக்கு வருவோம்..

இப்பிடி அடுத்தடுத்ததா பாத்துக்கிட்டு இருக்கறப்பத்தேன், இந்தப் போட்டோவும் கண்ணுல பட்டுது..


இதுலயும், மேக்கப் கொஞ்சம் அதிகமாயிருக்கற மாதிரித்தேன் எம்மனசுக்குப் பட்டுது (நேர்மையாத்தேன் சொல்லுதேன், சந்தேகங்கிந்தேகம் படாதீக).. இதுல வேற நம்மூரு பொண்ணுப்புள்ள வேசத்துல இருக்காகளா.. இதுல இவிய சிரிக்கறதப் பாத்தா, என்னமோ எதுத்தாப்புல மாமன் இருக்கற மாறியும், அவிய இவியள லுக்கு வுட்டுகிட்டு இருக்கற மாறியும், அக்கா அப்பிடியே கொஞ்சம் வெக்கப்பட்டு சிரிக்கற மாறியும் எனக்குப் பட்டுது.. அதேன்.. பதிலுக்கு, நம்ம மாமன் மனசுல இப்பிடி இவியளப் பாத்தோடனே என்ன தோனியிருக்கும்ன்னு, நெனச்சுப் பாத்தேன்.. மாமன்
                                
                                                 இப்பிடி யோசிச்சிருப்பாகளோ???

இல்ல,
                                                இப்பிடி பாட்டுப் படிச்சிருப்பாகளோ?

சரி சரி, நமக்கெதுக்கு ஊர் வம்பு??

இன்னொன்னும் தோணுச்சு.. நம்ம அக்கா யேன் இப்பிடி சைடு லுக்கு விடறாக? திரும்பி நின்னு நேராப் பாக்க வேண்டியதான மாமன் மொகத்த??.. ஆருக்காவது பதிலு தெரிஞ்சா சொல்லிப்போடுங்கப்பு.. புண்ணியமாப் போவும்..

சரி, ஆரம்பிச்ச இடத்துக்கே மறுபடியும் வருவோம்.. அக்கா பண்ணுன காரியத்துக்கு அவிய மேல கோவந்தேன்..

09 April 2010

எங்கவூரில் ஒரு மழைக்காலம்...



விடுமுறைப் பொழுது.....
மாலை நேரத்து மழை.....
தெளித்தெழுப்பும் மண் வாசனை.....
பால்கனியில் தெறிக்கும் சாரல்....
வருடிக் கொண்டிருக்கும் தென்றல்....
இளஞ்சூடான தேனீர்....
மூடிக்கிடக்கும் கண்கள்.....
விழித்திருக்கும் உணர்வுகள்.....
என்னருகே நீ.....
கொஞ்சம் நேரமேயாயினும்
உலகம் மறந்திருக்கக்
கிடைத்த இவ்வேளை..............

இது, சென்ற புதன் கிழமையன்று கிடைத்த  மாலை மழைப் பொழுதில் எழுதப்பட்டது.. அப்படியே புகைப்படம் எடுக்கலாம் என்று நினைத்த போது, ஏற்கனவே இந்த மாதிரி எடுத்ததொன்று நினைவுக்கு வந்தது.. இந்தப் புகைப்படம் இந்தியாவில் கல்லூரி விடுதியின் பால்கனியில் இருந்து எடுத்தது.. உண்மையில், இதே இடத்திலிருந்து இதைப் போன்றதொரு பொழுதில் முதலில் எடுக்கப்பட்ட படம், சேமிக்கத் தவறி கேமராவில் இருந்து அழிக்கப்பட்டு விட்டது.. வருத்தமோ வருத்தம்.. அடுத்த சில நாட்களில், மீண்டும் அதே நேரத்தில் மழை.. அதே உணர்வுகள்.. அம்முறை, எடுத்தவுடனே சேமித்து வைத்தாயிற்று.. என்னருகே நீ இதில் மிஸ்ஸிங் :))

(போதும் நிறுத்து எல்போர்ட்.. எத்தனையோ முறை மழைய கண்டபடிக்கு திட்டிப்போட்டு ஒரே ஓட்டமா ஓடிப் போயிருக்க.. இந்த ஹீரோயின் பீலிங்ஸ் எல்லாம் விடக் கூடாது...)

அதற்காக, மழையில், வானம் பார்த்து, கைகளை விரித்து, வாய் திறந்து, சுற்றியவாறே, பாடிக் கொண்டிருப்பேன் என்று மட்டும் யாரும் கற்பனை பண்ணிப் போடாதீர்கள் :)) மழையைக் காணும் போதெல்லாம் அப்படி ஆடி மகிழ்வததென்பது, மிக்க உணர்வுப்பூர்வமான நம் தமிழ்ச் சினிமா நாயகிகளால் மட்டுமே முடியும் :)))

06 March 2010

உடைந்த பேனா.. கிழியாத காகிதம்...


கருவொன்றை உள்ளிழுத்து
சொற்கடலில் மூழ்கி
கற்பனையைச் சிலுப்பி
சிந்தனையைச் செதுக்கி
கவிதையென்ரொன்றை...
முடியவில்லை.. முட்டுகிறது...
மொழியதனின் புலமையறியேன்..
இலக்கணம் இலக்கியம்
அறியேன் அறியேன்..

சமைத்தவன் பசியடங்குவது
ருசித்தவன் நன்றியில்..
ரசனையெனும் ருசிகொண்டு
காகிதமாய் மை சுமந்து..
படைத்தவன் பசியாற்ற
கணினியைக் கடவுகின்றேன்..
உடைந்த பேனாவாய்..
கிழியாத காகிதமாய்..
இயலாமையில் இன்புற்று..
அறியாமையில் அகமகிழ்ந்து!!

அபாய அறிவிப்பு: தீவிர அறுவை சிகிச்சையின் பலனாக எல்போர்டு, பேனா இருவருமே காப்பாற்றப்பட்டுவிட்டதால் இது போன்ற அட்டெம்ப்டுகள் அவ்வப்போது நடக்கலாமெனத் தெரிகிறது.. பக்கத்தூர்காரர்கள் எதற்கும் எச்சரிக்கையாக இருக்கவும்
Posted by Picasa

20 January 2010

நேரத்தைத் தின்று செரித்த பின்பு...




அதிகாலை.. அலுப்பு.. அசதி.. அலாரமணைத்து..

முடிவுறா முழுமைபெறாக்

கனவுடன் கண் கசக்கி..

போர்வை விலக்கி.. குளித்துடுத்தி..

அவசரமாய் விரையும் பொழுதில்..

எங்கிருந்தோ வரும் ஊதுபத்தி மணம்..

எங்கும் பரவும் சூர்யோதயம்..

ஓடோடி வந்து வண்டியை விட்டதில்

சிந்தவிடப்பட்ட புன்னகை..

இவைகளைக் கடந்து சென்ற வண்டியில் நானும்..






பத்தோடு பதினொன்றாய்..

பாதை கடந்து.. பணி சென்று..

உணர்வுகளை உள்ளடக்கி..

கற்று கற்பித்து.. களைப்புற்று.. கண்ணயர்ந்து..

அந்தியில் கூடு திரும்பி...

இணையம்.. கணினி.. வலைதளம்.. வலம்..

சமையல்.. சாப்பாடு..

உண்டுறங்கி.. வாரநாட்களோட்டி..



விடுமுறையில் வீட்டினருடன்..

அலைபேசி.. அளவளாவி..

திரைப்படங்கண்டு.. சலித்து முடித்து..

வீடு துலக்கி.. பொழுதுபோக்கி..



வாரமொன்று கழிந்தோடி..

ஞாயிறிரவு உறங்கச் செல்கையில்..

தூக்கம் வர மறுத்து..

ஏதோவொன்று மனதை யுறுத்த..

என்னவென்று தேடித் துழாவியிருக்கையில்...

நினைவுக்கு வருகின்றன...

முயற்சிக்கப்படாத என் முயற்சிகளும்

தின்று செரிக்கப்பட்ட என் நேரமும்.....................



இப்பவே சொல்லிட்டன்.. எல் போர்டு..  இதென்னன்னெல்லாம் கேள்வி கேட்டு ஆரும் இன்சல்ட் பண்ணப்படாது :))