ஆனந்தவிகடனின் கவிதைப்பக்கத்தில் இளையராஜா அவர்களின் ஓவியங்களைப் பார்த்திருக்கிறேன்.. பார்த்து விட்டு தாண்டிச் சென்றுவிடுவது உண்டு.. கொஞ்சம் நாள் முன்பு கதிர் அவர்களின் பக்கத்தில் இதைக் காண நேர்ந்தது.. புகைப்படமா இல்லை ஓவியமா என்று குழம்பும் அளவுக்கு நேர்த்தியாக இருந்தது..
இதற்கிடையில் அவரது கேலரியைப் பார்க்கும் வாய்ப்பு, பிலாசபி பிரபாகரன்
அவர்களது பக்கத்தில் இருந்து கிடைத்தது.. எனக்குப் பிடித்தவை சில, அதிலிருந்து..
மேலே சொன்ன மாதிரி, புகைப்படமா இல்லை ஓவியமா என்று குழப்பும் இந்தப் படைப்பும் ஒரு உயிரோவியம்... பொண்ணு கருப்பா இருந்தாலும் களையா இருக்கு ம்பாங்களே.. அது இது தானோ?
அவரது ஓவியங்களில் இருக்கும் நேர்த்தியும் அந்த கிராமத்துப் பின்னணியும் ரொம்பவே ஈர்த்தன.. உதாரணத்துக்கு இதைப் பாருங்க.. இதிலே இந்தப் பெண் ஒரு விறகடுப்புல சமையல் செய்து கொண்டு இருக்கா.. இந்தத் தலைமுறைக்கு முன்னாடி நம்ம எல்லோர் வீட்டுலயும் விறகடுப்பு தான் சமையலுக்கு.. நம்ம தலைமுறைல கேஸ் வந்தாச்சு.. எங்க பாட்டி (அப்பாவோட அம்மா) இன்னும் இதிலயும் மற்றும் மண்ணெண்ணெய் ஸ்டவ் அடுப்புலயும் தான் சமைக்கறாங்க.. அடித்தட்டு மக்கள் வீட்டுல இந்த அடுப்பு தான் இன்னிக்கும் சோறு பொங்க வைக்குது..
அந்தப் பாத்திரத்தைப் பாருங்களேன்.. ஒன்னு சைடுல லேசா ஒடுங்கி இருக்குது.. இப்படியான அலுமினியப் பாத்திரங்கள் தான் பெரும்பாலும் சமையலுக்கு... வாங்கறப்ப வெள்ளை வெளேர்ன்னு இருக்கறது, நாளடைவுல கீழாப்ல தீ படும் பாகம் மட்டும் கருப்பாகிடும்.. அந்தப் பொண்ணு கையில ஒரு ஊதுகுழலும், மூச்சுத் திணற வைக்கும் புகையும், தணலும் சாம்பலும், கொழுந்துவிட்டு எரியும் நெருப்பும் மட்டுந்தான் மிஸ்ஸிங்..
அடுத்தடுத்த படங்கள பார்க்க ஆரம்பிச்சா இதுல மிஸ்ஸானது எல்லாமே இருக்கு :) சுவத்துல கரித்திட்டு படிஞ்சிருக்கு பாருங்க..
இதுல இந்தப் பொண்ணு என்னமோ நெரிச்சுகிட்டு இருக்கா.. பொது வழக்குல உரல்ன்னு சொல்லுவது இதையத் தானே? ஊர்ல இதுக்கு வேற பேரு.. பக்கத்துல கருப்பா இருக்கறது அளக்குற படி.. அது போக சாணி முறம்.. பித்தளை அண்டா.. மட்டை உரிக்கப்படாத முழுத் தேங்கா.. கூடவே மேயும் கோழி..
அந்தச் சுவற்றைப் பாருங்க.. அதுல திட்டு திட்டா விட்டுப் போன பெய்ன்ட்.. என்னைக்கோ ஒரு விசேஷத்தப்பயோ இல்ல நல்ல மகசூல் தந்த ஒரு சாகுபடி அப்பவோ பூசப்பட்ட சுவராக இருக்கணும்.. அடுத்து இந்தப் பொண்ணு கல்யாணத்தப்ப தான் அதுக்கு மேல் பூச்சு பூசி கலரேத்துவாங்க..
பூ கட்டும் இந்தப் பொண்ணு.. அதோட பாவாடையைப் பாருங்க.. சின்னப் புள்ளைகளுக்கு பாவாட தைக்கும் போது மடிப்பு வச்சுத் தச்சுப்பாங்க.. வளர வளர பிரிச்சு விட்டுக்கலாம்ன்னு .. அதையக் கூட விட்டுவைக்கல இந்த மனுஷன்.. ஒருவேளை புகைப்படமா எடுத்து அதுல முகத்த மட்டும் வரைஞ்சிருப்பாரோ??
ஒரு குறை என்னன்னா இதில எல்லாப் பெண்களுமே பட்டுடை உடுத்தி இருக்காங்க.. அது கொஞ்சம் உறுத்துது.. வீட்டுல இருக்கிற மாதிரி சாதாரண உடையில இருந்திருந்தா இன்னும் பொருத்தமா இருந்திருக்கும்..
கேலரிக்கான வழி..
*********************************************
எனக்கு திடீர்ன்னு பூ படத்துல வர்ற சூ சூ மாரி கேட்கணும் போல இருந்ததுன்னு யூ ட்யூப் ல கேட்டுகிட்டு இருந்தேன்.. அப்போ அதுக்கு கீழ இந்தப் பாட்டும் இருந்தது.. கேள்விப்பட்ட மாதிரி இருக்கேன்னு நினைச்சுப் போட்டேன்.. ரொம்ப பிடிச்சுப் போச்சு.. அருமையான கிராமிய வாடை..
இந்தப் புள்ளைகளப் பாருங்க.. என்னா ஆட்டம் என்னா ஆட்டம்.. கேரளால எதோ கல்லூரி போல... ஒரு கட்டத்துல இதுகளோட ஆட்டம் தாங்க முடியாம பாடறவங்க கீழ குதிச்சு வந்துருவாங்க :) நாம காலேசு படிக்கும் போது இந்தப் பாட்டு வராம போயிடுச்சேன்னு கொஞ்சமா ஏங்க வச்சிடுச்சு..
இதோட ஒரிஜினல் பாட்டை யூ ட்யூப் ல ரொம்ப நேரம் தேடி கிடைக்கவே இல்ல.. சரின்னு நம்ம தமிழ்ப்பதிவுலகத்துல தேடினப்போ தான் தெரிஞ்சது, இந்தப் படம் வெளி வரவே இல்லைன்னு.. பாதி தயாரிக்கப்பட்டு முடியாம கிடப்புல போட்டாச்சு.. படம் பேரு "இரண்டு பேர்".. ராம்கி, குஷ்பூ, சங்கவி நடிச்சதாம்.. இசை, சுனில் வர்மா (?சர்மா) ன்னு புது ஆளு.. பாடியது ஆபாவாணன் (இணைந்த கைகள், ஊமை விழிகள் படமெல்லாம் நினைவுல இருக்கா?, அதோட தயாரிப்பாளராம்.. இந்தப் படத்துக்கும் அவரே தயாரிப்பாளர்.. ) மற்றும் இசையமைப்பாளர்ன்னு போட்டிருந்தது.. மேலும், ஊமைவிழிகள் இசையமைப்பாளர்கள் மனோஜ்-க்யான் ல க்யானோட பையன் தான் இந்த சுனில் வர்மா (?சர்மா) ன்னு ஒரு உபரித் தகவல் வேற..
இது குட்டீஸ் வெர்சன்.. மடகாஸ்கர் எஸ்கேப் டூ ஆப்ரிகா படத்துல வர்ற பாட்டைப் போட்டு ரீ மிக்ஸ் பண்ணிவிட்டுட்டாங்க..






















