Showing posts with label கேட்டதில் பிடித்தது. Show all posts
Showing posts with label கேட்டதில் பிடித்தது. Show all posts

04 April 2011

கிராமத்து ஓவியங்கள்..

ஆனந்தவிகடனின் கவிதைப்பக்கத்தில் இளையராஜா அவர்களின் ஓவியங்களைப் பார்த்திருக்கிறேன்.. பார்த்து விட்டு தாண்டிச் சென்றுவிடுவது உண்டு.. கொஞ்சம் நாள் முன்பு கதிர் அவர்களின் பக்கத்தில் இதைக் காண நேர்ந்தது.. புகைப்படமா இல்லை ஓவியமா என்று குழம்பும் அளவுக்கு நேர்த்தியாக இருந்தது.. 



இதற்கிடையில் அவரது கேலரியைப் பார்க்கும் வாய்ப்பு, பிலாசபி பிரபாகரன் 
அவர்களது பக்கத்தில் இருந்து கிடைத்தது.. எனக்குப் பிடித்தவை சில, அதிலிருந்து.. 

மேலே சொன்ன மாதிரி, புகைப்படமா இல்லை ஓவியமா என்று குழப்பும் இந்தப் படைப்பும் ஒரு உயிரோவியம்... பொண்ணு கருப்பா இருந்தாலும் களையா இருக்கு ம்பாங்களே.. அது இது தானோ?


அவரது ஓவியங்களில் இருக்கும் நேர்த்தியும் அந்த கிராமத்துப் பின்னணியும் ரொம்பவே ஈர்த்தன.. உதாரணத்துக்கு இதைப் பாருங்க.. இதிலே இந்தப் பெண் ஒரு விறகடுப்புல சமையல் செய்து கொண்டு இருக்கா.. இந்தத் தலைமுறைக்கு முன்னாடி நம்ம எல்லோர் வீட்டுலயும் விறகடுப்பு தான் சமையலுக்கு.. நம்ம தலைமுறைல கேஸ் வந்தாச்சு.. எங்க பாட்டி (அப்பாவோட அம்மா) இன்னும் இதிலயும் மற்றும் மண்ணெண்ணெய் ஸ்டவ் அடுப்புலயும் தான் சமைக்கறாங்க.. அடித்தட்டு மக்கள் வீட்டுல இந்த அடுப்பு தான் இன்னிக்கும் சோறு பொங்க வைக்குது.. 

அந்தப் பாத்திரத்தைப் பாருங்களேன்.. ஒன்னு சைடுல லேசா ஒடுங்கி இருக்குது.. இப்படியான அலுமினியப் பாத்திரங்கள் தான் பெரும்பாலும் சமையலுக்கு... வாங்கறப்ப வெள்ளை வெளேர்ன்னு இருக்கறது, நாளடைவுல கீழாப்ல தீ படும் பாகம் மட்டும் கருப்பாகிடும்.. அந்தப் பொண்ணு கையில ஒரு ஊதுகுழலும், மூச்சுத் திணற வைக்கும் புகையும், தணலும் சாம்பலும்,  கொழுந்துவிட்டு எரியும் நெருப்பும் மட்டுந்தான் மிஸ்ஸிங்..


அடுத்தடுத்த படங்கள பார்க்க ஆரம்பிச்சா இதுல மிஸ்ஸானது எல்லாமே இருக்கு :) சுவத்துல கரித்திட்டு படிஞ்சிருக்கு பாருங்க.. 


இதுல இந்தப் பொண்ணு என்னமோ நெரிச்சுகிட்டு இருக்கா..  பொது வழக்குல   உரல்ன்னு சொல்லுவது இதையத் தானே? ஊர்ல இதுக்கு வேற பேரு.. பக்கத்துல கருப்பா இருக்கறது அளக்குற படி.. அது போக சாணி முறம்.. பித்தளை அண்டா.. மட்டை உரிக்கப்படாத முழுத் தேங்கா.. கூடவே மேயும் கோழி.. 

அந்தச் சுவற்றைப் பாருங்க.. அதுல திட்டு திட்டா விட்டுப் போன பெய்ன்ட்.. என்னைக்கோ ஒரு விசேஷத்தப்பயோ இல்ல நல்ல மகசூல் தந்த ஒரு சாகுபடி அப்பவோ பூசப்பட்ட சுவராக இருக்கணும்.. அடுத்து இந்தப் பொண்ணு கல்யாணத்தப்ப தான் அதுக்கு மேல் பூச்சு பூசி கலரேத்துவாங்க.. 


பூ கட்டும் இந்தப் பொண்ணு.. அதோட பாவாடையைப் பாருங்க.. சின்னப் புள்ளைகளுக்கு பாவாட தைக்கும் போது மடிப்பு வச்சுத் தச்சுப்பாங்க.. வளர வளர பிரிச்சு விட்டுக்கலாம்ன்னு .. அதையக் கூட விட்டுவைக்கல இந்த மனுஷன்.. ஒருவேளை புகைப்படமா எடுத்து அதுல முகத்த மட்டும் வரைஞ்சிருப்பாரோ??


ஒரு குறை என்னன்னா இதில எல்லாப் பெண்களுமே பட்டுடை உடுத்தி இருக்காங்க.. அது கொஞ்சம் உறுத்துது.. வீட்டுல இருக்கிற மாதிரி சாதாரண உடையில இருந்திருந்தா இன்னும் பொருத்தமா இருந்திருக்கும்..

கேலரிக்கான வழி.. 

*********************************************

எனக்கு திடீர்ன்னு பூ படத்துல வர்ற சூ சூ மாரி கேட்கணும் போல இருந்ததுன்னு யூ ட்யூப் ல கேட்டுகிட்டு இருந்தேன்.. அப்போ அதுக்கு கீழ இந்தப் பாட்டும் இருந்தது.. கேள்விப்பட்ட மாதிரி இருக்கேன்னு நினைச்சுப் போட்டேன்.. ரொம்ப பிடிச்சுப் போச்சு.. அருமையான கிராமிய வாடை.. 

இந்தப் புள்ளைகளப் பாருங்க.. என்னா ஆட்டம் என்னா ஆட்டம்.. கேரளால எதோ கல்லூரி போல... ஒரு கட்டத்துல இதுகளோட ஆட்டம் தாங்க முடியாம பாடறவங்க கீழ குதிச்சு வந்துருவாங்க :) நாம காலேசு படிக்கும் போது இந்தப் பாட்டு வராம போயிடுச்சேன்னு கொஞ்சமா ஏங்க வச்சிடுச்சு.. 

இதோட ஒரிஜினல் பாட்டை யூ ட்யூப் ல ரொம்ப நேரம் தேடி கிடைக்கவே இல்ல.. சரின்னு நம்ம தமிழ்ப்பதிவுலகத்துல தேடினப்போ தான் தெரிஞ்சது, இந்தப் படம் வெளி வரவே இல்லைன்னு.. பாதி தயாரிக்கப்பட்டு முடியாம கிடப்புல போட்டாச்சு.. படம் பேரு "இரண்டு பேர்".. ராம்கி, குஷ்பூ, சங்கவி நடிச்சதாம்.. இசை, சுனில் வர்மா (?சர்மா) ன்னு புது ஆளு.. பாடியது ஆபாவாணன் (இணைந்த கைகள், ஊமை விழிகள் படமெல்லாம் நினைவுல இருக்கா?, அதோட தயாரிப்பாளராம்.. இந்தப் படத்துக்கும் அவரே தயாரிப்பாளர்.. ) மற்றும் இசையமைப்பாளர்ன்னு போட்டிருந்தது..  மேலும், ஊமைவிழிகள் இசையமைப்பாளர்கள் மனோஜ்-க்யான் ல க்யானோட பையன் தான் இந்த சுனில் வர்மா (?சர்மா) ன்னு ஒரு உபரித் தகவல் வேற.. 



இது குட்டீஸ் வெர்சன்..  மடகாஸ்கர் எஸ்கேப் டூ ஆப்ரிகா படத்துல வர்ற பாட்டைப் போட்டு ரீ மிக்ஸ் பண்ணிவிட்டுட்டாங்க.. 

05 December 2010

பெண்.. மனம்.. பாட்டு..

//பெண் மனதை சொல்லும் பாட்டு


பெண்கள் மனசை வெளிபடுத்தும் பாட்டு, அதுவும் பெண் பாடிய பாட்டு, அதுவும் பெண் குரலிலேயே இருக்கிற பாட்டு//

இதை மஹி என்னை தொடர அழைத்திருக்கிறார்.. முதலில் அதற்கு ஒரு நன்றி.. எழுத விருப்பம் இருக்கும் தலைப்பு.. இந்த வரிகளை ஆசியா அவர்களின் பதிவில் இருந்து எடுத்துப் போட்டுள்ளேன்..

சில இயக்குனர்கள் தமது படங்களின் பெண் பாத்திரங்களை சரியாக உருவகப் படுத்துவதில்லை.. ஒன்று, த்ரிஷாவுக்கு பாவாடை தாவணி கட்டி பாந்தமான பெண்ணாக காட்ட முயற்சிப்பார்கள்.. இல்லை, ஸ்ரேயாவை அல்ட்ரா மாடர்ன்-அரை லூசு-அழகுப் பெண்ணாக வளைய விடுவார்கள் (நேற்று பார்த்த சிக்கு புக்கு என்ற படத்தை வைத்து சொல்கிறேன்.. அந்தப் பாத்திரம் செயற்கையாக இருந்தது.. ஜப் வீ மெட் படத்தின் கரீனாகபூர் பாத்திரத்தை கொண்டு வர முயற்சித்து தோல்வி கண்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.. ஜப் வீ மெட்டில் வரும் கரீனாவின் பாத்திரம் மிக நன்றாக இருக்கும்..).. அதுவும் இல்லையா, இருக்கவே இருக்கு ஈகோ பிடித்த பெண் :)) 

இதைத் தாண்டி சற்றேனும் பெண்களை இயல்பாக, நல்லவராகவோ இல்லை கெட்டவராகவோ, வெளிப்படுத்தும் படங்கள் உண்டு.. பெண்ணினது பாத்திரம் சரியாக வடிவமைக்கப்பட்டாலே எனக்கு அந்தப் படம் கொஞ்சமாவது பிடித்துப் போகும்.. கல்லூரி, பூ, அங்காடித் தெரு, வாரணம் ஆயிரம், பருத்தி வீரன், மொழி.. இப்படி..

சரி.. பாட்டுக்கு வருவோம்.. அந்தந்த பாத்திரம் (அடுப்பங்கரைப் பாத்திரம் இல்லீங்கோ :) ) பாடும் பாட்டு என்பதால் சில.. பாடல் இனிமையாக, பாடியிருக்கும் குரல் இனிமையாக இருப்பதால் சில.. பிடித்ததை பத்துக்குள் அடக்கி விட முடியாது.. நேற்று இரவு சட்டென நினைவுக்கு வந்தவை மட்டுமே இங்கு.. வரிசைப்படியும் தரவில்லை.. பெண்ணின் மனது இப்பாடல்களில் வெளிப்படுகிறது என்றெல்லாம் சொல்லிவிட முடியாது :) படங்களில் பாடலைப் பாடுபவர்கள் பெண் கதாப்பாத்திரங்கள்.. பாட்டு எனக்குப் பிடிக்கும்.. அவ்வளவே.. 

௧. பொதுவாக பெண்கள் தனது காதலை நேரடியாக வெளிப்படுத்த தயங்குவார்கள்.. இந்த நாட்டிலும் அப்படித் தான் என்று நினைக்கிறேன்.. ஆனால் அந்த வட்டத்தை தாண்டி, நான் உன்னை விரும்புகிறேன்.. உன்னை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்.. உன்னோடு வாழ விரும்புகிறேன்.. என்று மாயா தைரியமாக தனது காதலைச் சொல்கிறார்.. திருமணம் முடிந்து, தேனிலவுக்காக ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து, அங்கு அந்தப் பெண் பாடும் பாடல்.. தாமரையினது வரிகள்.. பாம்பே ஜெயஸ்ரீ குரல்.. 


இதில் வரும் "பெண்களை நிமிர்ந்தும் பார்த்திடா.. உன் இனிய கண்ணியம் பிடிக்குதே.." வரிகளின் மேல் எனது தோழியருக்கு விமர்சனங்கள் எழுந்ததுண்டு.. பெண்ணைப் பாத்திடவே விரும்பாதவன் கண்ணியமானவனா என்று :) ஆனால் அடுத்து வந்த "கண்களை நேராய் பார்த்து தான்.. நீ பேசும் தோரணை பிடிக்குதே.." என்ற வரிகள் பிடிக்கும்.. 

௨. ஒரு சைக்கோ கணவனை விவாகரத்து செய்து விட்டு வாழும் பெண்.. கொஞ்சம் நாள் கழித்து சகோதரனின் நண்பருடன் அறிமுகம் ஏற்பட்டு, கொஞ்சம் தயக்கத்துடன் பழகி.. பின் மெல்ல காதல் கனியும்.. இந்தச் சூழ்நிலையில் வரும் இந்தப் பாடல் அந்தப் பெண்ணின் மனதே பேசுவது போல இருக்கும்.. சத்தம் போடாதே எனும் இந்தப் படம் அவ்வளவாக வெற்றி பெறவில்லை.. பாடியவர் நேஹா பாஸின்.. 


௩. நண்பன்-நட்பு என்று நாயகி ஒருவனுடன் பழகுகிறார்.. அந்த ஆண் இவரை விரும்ப ஆரம்பிக்க, நாயகி இன்னொருவனைக் காதலிக்கிறார்.. முதலில் சொன்ன நண்பன் கொஞ்சம் சைக்கோ.. நாயகியை கடத்தி வந்து சிறை வைத்து விடுகிறார்.. இதை உணராத நாயகி நண்பன் சோகமாக இருப்பதைக் கண்டு ஒரு தோழியினது பரிவோடு பாடும் பாடல்.. (எனக்கு இந்தப் படம் அவ்வளவாகப் பிடிக்கவில்லை.. ஆனால் பாட்டு வரும் சூழ்நிலை அதன் இனிமை.. நன்றாகயிருக்கும்..) தான் செய்த தவறை உணர்ந்து அந்த நண்பன் அழுவான்.. பெண் குரல் யாருடையது என்று தெரியவில்லை.. யுவன் இசையில் இனிமையான பாடல்... 


௪. இந்தப் பெண் போல ஒரு தோழி கிடைத்தால் எவ்வளவு நல்லாயிருக்கும்? தோல்வியில் துவண்டு கொண்டிருக்கும் நண்பர்களுக்கு தம்மால் முடிந்த உதவிகள் செய்து அவர்களை ஒரு நிகழ்ச்சிக்கு அழைத்து அங்கு இவர் பாடும் இந்தப் பாடல்.. தெளிவான உறுதியான பெண்!! அந்த நண்பர்களுக்கு மட்டுமல்ல எனக்கும் சில நேரம் நல்லுணர்வு கொடுத்திருக்கும் பாடல்.. சித்ரா வின் இனிய குரலில்.. 


௫. ஒரு கலைஞனின் வாசகியாய், மேடையேறி, தான் கண்ட குறையைச் சொல்லும் பாடல்.. அந்தத் துணிவும் அவருக்கு தன் கருத்தில் இருக்கும் தெளிவும் பிடிக்கும்.. இசைக்கும் மொழிக்கும் கலைக்கும் வரம்புகள் இல்லை என்று தான் நானும் நினைப்பேன்.. ஆனால், கட்டமைக்கப்பட்ட ஒழுங்கினை மிக ஒட்டி இசையோ அல்லது மொழியோ வெளிப்படும் போது, அந்த ஒழுங்கைப் புரிந்து கொண்டவர்களுக்கு பரவசம் ஏற்படுவதும் உண்மை.. இலக்கணங்களுக் குட்பட்டு அழகுத் தமிழில் ஒரு கவிதை படித்தால் நன்றாகத் தான் இருக்கும்.. ஆனால் அது மட்டுந்தான் தமிழ் என்றால் ஏற்றுக் கொள்ள முடியாது தானே? மறுபடியும் சித்ராவின் குரலில்.. இது அவங்களோட முதல் பாட்டுன்னு நினைக்கறேன்..


௬. சில படத்துல ரெண்டு பொண்ணுங்களைக் காட்டினாலே ஒருத்தி நல்லவளாகவும் ஒருத்தி கெட்டவளாகவுந் தான் காமிப்பாங்க :) விதிவிலக்கா சில சமயம் ரெண்டு பேரையுமே வேறுபடுத்தி ஆனா நல்ல விதமா காட்டியிருப்பாங்க.. உதாரணத்துக்கு, பார்த்திபன் கனவு படத்தில் ரெண்டு சிநேஹா வருவாங்க.. ஒருத்தர் லட்சியப் பெண்.. இன்னொருத்தர் குடும்பத்தோட இருப்பதே போதும் ன்னு நினைப்பவர்..

இந்தப் படத்திலும் அப்படி ரெண்டு பேர்.. ஒருத்தர் நாயகனோட காதலி.. இன்னொருத்தர் மனைவி.. மனைவி, கணவனோட பழைய டைரிய படிச்சிட்டு, மொதல்ல கஷ்டப்பட்டு, பின்னர் அவன் ஒரு காலத்தில தன் காதலியை ரொம்ப விரும்பியிருக்கிறான்னு புரிஞ்சுகிட்டு, அந்தக் காதலிய தேடிக் கண்டுபிடிச்சு அழைத்து வருவாங்க..  "ஒரு நாள்னாலும் உன்கூட வாழ்ந்துட்டுப் போயிடனும்" ன்னு இருக்கும் டைரியில.. உன்னை மட்டுமில்ல, உன்னோட ஆசைகளையும் காதலிக்கிறேன்னு கணவன் கிட்ட சொல்லிட்டு இவங்க ரெண்டு பேரையும் தனியா விட்டுட்டு மனைவி கிளம்பிப் போயிடுவாங்க (பாதி மனசோட தான் :))) ).. காதலியோ, என் பொருள் இன்னொரு இடத்துல இருந்தாலும் பத்திரமா இருக்குன்னு சந்தோஷப்படறேன் ன்னு சொல்லிட்டு கிளம்பிடுவாங்க..

ப்ளாஷ் பேக்ல, கல்லூரியில, நாயகன் தன் காதலியோட பாடற இந்தப் பாட்டு பிடிக்கும்..  பாடகி? இனிய உணர்வுப்பூர்வமான குரலுக்குச் சொந்தக்காரரான ஸ்ரேயா கோஷல்.. பாட்டுல நாயகி முகத்துல தெரியற சந்தோசத்தை, பரவசத்தை, காதலைப் பாருங்க.. கூடவே நாயகனோட குறும்பும்.. இவங்க ரெண்டு பேரும் சேர்ந்திருந்தா ரொம்ப நல்லாயிருந்திருக்கும்ன்னு நினைக்க வைச்ச பாடல்..


௭. தத்துப் பெண்ணோட, அம்மா பாடற பாடல்.. சிம்ரனும் குழந்தையும் ரொம்ப நல்லாப் பண்ணியிருப்பாங்க.. சின்மயி யின் குரலில் பாட்டு.. உண்மையில இதை விட அப்பா பாடற பாடல் (இதே, ஆண் குரலில்) பிடிக்கும்.. இசை ரொம்ப நல்லாயிருக்கும்..

செல்ல மழையும் நீ.. சின்ன இடியும் நீ..

௮. ஜெஸ்ஸி யின் இனிமையான குரல்.. இவங்களோட பேட்டி கொஞ்சம் வருஷத்துக்கு முன்னாடி தான் படிச்சேன்.. ரொம்ப நல்லா வந்திருக்க வேண்டியவங்க.. கொஞ்சம் படங்களோட காணாம போயிட்டாங்க.. ம்ம்.. தெய்வீக ராகம்.. தெவிட்டாத பாடல்.. கேட்டிருக்கீங்க தானே? பாடியவர் அவரே..

இப்ப நான் சொல்லப் போற படத்துல நாயகி ஒரு பாடகி.. அவங்க பாடற பாடல் தான் இது.. ஒரு பாடகியா இசையை ரசிச்சுப் பாடியிருப்பாங்க..

ஒரு இனிய மனது இசையை அணைத்துச் செல்லும்..

௯. ஹரிணியின் குரலுக்காக இந்தப் பாட்டு.. இது கொஞ்சமாவது பெண் மனசைச் சொல்லுதோ இல்லையோ.. அந்த ஐஸ்கிரீம் குரலுக்காக கேட்கலாம் :)

நிலா காய்கிறது..

௰. புலியை முறத்தால் விரட்டின மூத்த குடியில் வந்த இளம் குடிகள் தானே நாமெல்லாம்??!! :))) மேலும், பெண் என்றாலே இள நடுத்தர வயதுப் பெண்கள் மட்டுந்தானா? பாட்டி எல்லாம் பாடப்படாதா? தனது பேராண்டியின் வீரத்தைப் போற்றி, தனது பெருமிதத்தை வெளிப்படுத்தி, ஒரு பாட்டி "போர்க்களத்திலே" ஆடிப் பாடும் இந்தப் பாடல் ரொம்பவே புடிக்குமுங்கோ!! :))