30 July 2010

பதிவுலகில் நான் எப்படிப்பட்டவர்?? (எனக்கே சரியாத் தெரியலைங்க :)) )

இப்பிடியொரு அழைப்ப விடுத்து என்ன இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாக்குன வசந்த்க்கு நன்றி.. இது தான் நான் எழுதற முதல் தொடர்பதிவு அப்படின்னு கொஞ்சம் புல்லரிக்கவும் செய்யுது.. :))


1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?


இங்க என்னை சந்தனா அப்பிடின்னு கூப்பிடறாங்க.. செல்லமா சந்தூ.. அலறும் போது சந்தூஊஊ... ப்ரொஃபைல் ல எல்போர்ட்.. (அது ப்ளாக் ஆரம்பிக்கறப்ப பேருன்னு ஏதாச்சும் வைக்கனுமேன்னு வச்சது.. அப்பிடியே தொடருது..) 


2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?


இல்ல.. என்னோட இயற்பெயரைச் சொல்ல உண்மைல எனக்கு பயம்.. ப்ரைவசி காரணங்கள்.. சரி, ஏன் இந்தப் பெயர்ன்னு கேட்டா - அதிரா.. அவங்க தான் அறுசுவைக்குள்ள நுழைஞ்ச புதுசுல எனக்குன்னு ஏதாவது பேரு வச்சுக்கச் சொன்னாங்க.. திட்டறதுக்கு வசதியா இருக்கும்ன்னுட்டு.. :))அப்ப யோஓஓஓசிச்சு வச்சது தான் இது.. இதுக்கு மேல யாரும் கேக்கப்படாது.. :))


3 )நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.


எப்பிடி இது ஆரம்பிச்சதுன்னு கொஞ்சம் யோசிக்க வேண்டியதா இருக்கு.. சுமார் ஒரு வருஷத்துக்கு முன்னாடி யூத்ஃபுல் விகடன் இணையத்துல படிக்க ஆரம்பிச்சேன்.. (இதுக்கும் மேல ஆதி மூலம்ன்னா, தெரியல... ) அப்ப அங்கயிருக்கற குட் ப்ளாக்ஸ் பார்த்து, படிச்சு.. ஆரம்பத்துல வெறும் பின்னூட்டம் மட்டுந்தான் போட்டுகிட்டு இருந்தேன்.. அதுக்கப்புறம் என்னோட அறுசுவை நண்பர்கள் ஆளாளுக்கு ஒரு ப்ளாக் ஆரம்பிக்க, நானும் அவங்க கூட பேசறதுக்காக ஆரம்பிச்சது தான் இது.. 


4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?


எதுவும் செய்யல.. நாம எழுதறத நிறைய பேர் படிச்சு பின்னூட்டம் போட்டா, விவாதிச்சா, சந்தோஷமாத் தான் இருக்கும்.. நமக்குன்னு ஒரு அங்கீகாரம் கிடைக்குது, நண்பர்கள் கிடைக்கறாங்கன்னு.. ஆனா, பிரபலம் ஆகி என்ன பண்ண போறோம்ன்னும் ஒரு கேள்வி இருக்கு.. மேடைக்கு கீழ இருக்கும் போது என்ன ரகளை வேனும்ன்னாலும் பண்ணலாம்.. சுதந்திரமா விவாதம் செய்யலாம்.. மேடை மேல ஏறி, வெளிச்சம் பட ஆரம்பிச்சதுன்னா, ரொம்ப conscious (கவனமா இருக்கறது) ஆயிடுவோம்ன்னு தோனுது.. பிற்காலத்துல நேரம் கிடைக்கும் போது (நம்ம பொழப்பையும் பார்க்கனும்ல), இன்னும் நல்லா எழுத முடியும்ன்னு நினைக்கும் போது வேனும்னா திரட்டிகள்ல இணைக்கலாம்ன்னு இருக்கேன்..


5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?


ஆஹா.. என்னோட முதல் பதிவே சொந்த விஷயந்தான்.. :)) (ரொம்ப ஆவலா போயி படிச்சுப்போட்டு கடியாகிடாதீங்க... இப்போவே சொல்லிட்டேன்..) என்னப் பத்தி எழுதினதில்ல.. ஆனா ”என்னோட” பார்வைகள், அனுபவங்கள், சந்திச்ச மனிதர்கள்.. இப்பிடி எழுதியிருக்கேன்.. ஏதாச்சும் விளைஞ்சுதா இல்லியான்னு நீங்க தான் சொல்லனும்.. :)


6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?


பொழுதுபோக்குக்காகவும், நண்பர்களோட பேசிக் கொள்ளவும், அவங்க கொடுக்கற ஊக்கத்தப் பெற்று இன்னமும் எழுதவும் தான்.. சும்மா சொல்லக் கூடாது.. எல்லாரும் நல்லாவே ஊக்கம் கொடுக்கறீங்க.. இது வரைக்கும் எதிர்மறையாக் கூட யாரும் சொன்னதில்ல.. நன்றி மக்கள்ஸ்..


7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?


இப்போதைக்கு இது ஒன்னு மட்டும்.. அப்புறம், பேக் அப்புக்காக, இதுலயே இன்னொன்னு.. 


8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?


கோபம் இல்ல.. ஆனா, ஏதாச்சும் ரொம்பவே தப்பா சொல்லியிருந்தாங்கன்னா எரிச்சல் ஏற்பட்டிருக்கு.. என்ன வேனும்னாலும் எழுதறாங்களேன்னு.. பொறாமை ஏதும் இல்ல.. ஆனா, நிறைய பேரோட பதிவுகள ரசிச்சதுண்டு, எப்பிடி இப்பிடியெல்லாம் யோசிக்கறாங்க, எழுதறாங்கன்னு வியந்தது உண்டு..


9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..


மறுபடியும் எட்டிப்பாத்துச் சொல்றேன்.. :) வேற யாரு.. எங்கட செல்ல இமா ரீச்சர்.. :) ஆசிரியர்.. அழகான தமிழ்ல எழுதுவாங்க.. கைவினைப் பொருட்கள் அழகா செய்வாங்க.. கத்தும் தருவாங்க.. அன்பானவங்க.. ஈரமான மனசு.. நீங்களே அவங்க உலகத்துக்குள்ள எட்டிப் பாத்து தெரிஞ்சுக்கோங்க.. :) அனுமதி உண்டு தானே இமா? 


எங்க பாராட்டுனாங்க? முறைச்சிட்டு இல்ல போனாங்க.. பப்பீ கள திட்டிட்டேனாம்..  :))))


10. கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...


என்னயப் பத்தி சொல்றதில்லன்னு தான் முடிவு பண்ணியாச்சே.. இருந்தாலும், நீங்க கேக்கறதுக்காக.. சராசரித் தமிழ்ப் பெண்.. விரியும் பார்வைகளோடவும், ரசனையுள்ள மனதோடவும், கொஞ்சம் பயத்தோடவும் (ஒளிஞ்சு சுத்திகிட்டு இருக்கறதப் பாத்தாலே தெரியல??), ஏகப்பட்ட சோம்பேறித்தனத்தோடவும்.. கூடவே, இத்துனூண்டு கனவுகளோடவும்...


இதப் படிக்கறங்க எல்லாரையும் அழைக்கறேன்.. விருப்பமுள்ளவங்க தொடருங்க.. (ஐடியா உதவி - ஜெய்லானி)


நன்றி...............















25 July 2010

விளக்கம்..

இதுக்கு முன்னாடி பதிவுல ஒரு கவிதைய எழுதினாலும் எழுதினேன், வந்தவங்க எல்லாரும் ஆம்லெட், வட இதுலயே கண்ணாயிருந்து பிச்சுப் பிச்சுத் தின்னுட்டுப் போயிட்டாங்கள் (நன்றி அதிரா).. யாருக்கும் புரிஞ்சதான்னு தெரியல.. அதனால, இங்க அதோட விளக்கம் கொடுத்துட்டுப் போறேன்.. 

வேற ஒன்னுமில்ல.. இந்த பாஸ்வர்ட் கள் தொல்ல தாங்க முடியல.. அதான்.. நான் படிக்கற/வேல பாக்கற இடத்துக்கு மட்டுமே நிறைய இருக்கு.. அதய வச்சுத் தான் ரூம் உள்ளார நுழைய முடியும்.. கம்புயூட்டர ஆன் பண்ண முடியும்.. அதுக்கப்புறம், ஒவ்வொரு அப்ளிகேஷனுக்கும் ஒன்னொன்னு... என்னோட பேர வைக்கக் கூடாதாம்.. ஒவ்வொன்னும் ஒவ்வொரு மாதிரி - சிலதுக்கு எழுத்து மட்டும் இருக்கனுமாம். சிலதுக்கு எழுத்து, அதுல கேப்பிடல் லெட்டர் ஒன்னு, ஒரு நம்பர் இப்பிடி இருக்கனுமாம்.. எத்தன எழுத்துன்னும் கணக்கு இருக்கு.. வேற யாரும் கண்டுபுடிக்காத மாதிரி இருக்கனுமாம்.. 

இத்தோட முடிஞ்சிட்டா பரவாயில்லீங்க.. மூணு மாசத்துக்கு ஒருக்கா எக்ஸ்பயர் ஆயிடுதுங்க.. ஏற்கனவே வச்ச பேர மறுபடியும் வைக்கக் கூடாதாம்.. என்ன பேர் வைக்கன்னு ரொம்ப நேரம் யோசிச்சு (தெனமும் ஞாபகம் வரனும்ல்ல) வைக்க வேண்டியதாயிருக்கு.. பேர மாத்துன ஒரு வாரத்துக்கு, பழய பேரயே மாத்தி அடிச்சிடறேன்.. மூணு வாட்டி தப்பா அடிச்சா - அம்புட்டுத் தான்.. அக்கவுண்டே எக்ஸ்பயர் ஆயிடுது.. அதுக்கப்புறம், ஐ டி ஆட்களக் கூப்பிட்டு, அவங்க என்னப் பத்தின விவரங்கள சரி பாத்து, மறுபடியும் ஆரம்பிச்சுத் தருவாங்க..

அதக்கூட ஒன்னொன்னாத் தான் எக்ஸ்பயர் ஆவற மாதிரி வச்சிருக்காங்க.. அப்ப ஒன்ன மட்டும் மாத்திட்டு, மத்ததெல்லாம் கிட்டத்தட்ட அதே மாதிரி இருக்கும்.. அதய இதுக்குத் தட்டி இதய அதுக்குத் தட்டின்னு ஒரே குழப்பம் தான்.. என்னிக்காவது எல்லா பாஸ்வர்டையும் ஒரே வாட்டில சரியாத் தட்டி எண்டர் ஆயிட்டேன் வச்சுக்கோங்க - அன்னிக்கு மழை தான்..

எங்க ஆஃபிசர் ஒருத்தர் - எப்பவுமே மூணாவது வாட்டில தான் சரியாத் தட்டுவார்.. அது ஏன்னே தெரியல :) எப்பிடியோ, மூணுக்குள்ள நடந்தா சரி தான்..

இது போவ, மெயிலுக்கு, துணிக்கடைக்கு, பேங்க்க்கு, இண்டர்னெட் கனெக்‌ஷனுக்கு, லைப்ரரிக்கு, விமானம்.காம் களுக்கு (அது ரெண்டு மூணு இருக்கும்) அப்பிடியிப்பிடின்னு ஒரு அம்பதாவது தேறும்..  

இதெல்லாம் எதுக்குன்னா - செக்யூரிட்டி காரணத்துக்காக.. அதான் இதுகளையும், காவல் தெய்வங்களையும் (ஊர்ல இருக்கற மக்களோட நம்பிக்கை) ஒப்பிட்டு எழுதுனன்.. 

அதிரா - என் புலம்பல் கேக்குதா? இப்பப் புரிஞ்சதா?

இந்தக் கடையில நோ வடை, ஓம்லெட்.. (அதாவது பின்னூட்டம் கிடையாது) ஏதாவது திட்டனும்ன்னா, அந்தக் கவிதைப் பதிவுலயே திட்டிக்கோங்க :)) யாராவது எட்டிப் பாத்து இதெல்லாம் ஒரு பதிவான்னு யாரும் கேட்டுடக்கூடாது :) அதான்... ரெண்டு மூணு நாளுல நீக்கிடறேன் இதய.. 

நன்றி..


23 July 2010

காவல் தெய்வங்கள்....



மொத்தம் எத்தனைபேர்?
சரியாக நினைவில்லை..
ஆறேழு இருக்கலாம்,
அலுவலகத்துக்கு மட்டும்..
அங்கே, நாளும் காவலிருப்பர் நால்வர்..
அவ்வப்பொழுதில் மற்றவரும் ..

இவர்கட்கு பெயரிடுதல் எனது கடமை..
எளிதல்ல இவ்வேலை..
எனது பெயர் பிடிப்பதில்லை
இவர்களது இறைவனுக்கு..
இதற்கு முன்னே காவல்
இருந்தவரது பெயருந்தான்..


ஒருவனுக்கு ஐந்திலக்கப் பெயர்,
எல்லாமே எழுத்துக்களாய்...
இன்னொருவனுக்கு ஏழு,
இறுதியில் ஓரெண் தேவையாம்..
மூன்றாமானவன் எட்டப்பன்..
எட்டிலே ஓரெழுத்து பெரியதாயிருக்க,
சின்னமொன்றும், எண்ணொன்றும்
உடனிருந்து பாதுகாக்க,
மற்றதெல்லாம் சிற்றெழுத்துக்கள்..
நாலாமானவனுக்கு எண்கள் மட்டும்...

இவர்களின் ஆயுட்காலம்,
மூன்றே மாதங்கள் தாம்..
முடிந்ததும், செவ்வனே
இயற்கையெய்திடப்படுவர்..
ஒன்றாய் மரிப்பதில்லை அனைவரும்..
ஒவ்வொருவனாய்த் தான்..
காலஞ்சென்ற ”இன்னார்” இடத்துக்கு,
இன்னொருவனைத் தேடிப்பிடித்து,
அவனது தலைவிதிக்கேற்ப
பெயரிட்டழைக்க வேண்டும்,
மானிடர் யார்க்கும்
புரிந்திடாத ரகசியக் குரலில்...

கொள்ளு பேரப்பிள்ளைகளை
மாற்றி மாற்றியழைக்கும்
தொன்னூறு வயது தாத்தன் போல்,
சிலவேளைகளில் குழம்பிப்
போய் விடுகின்றேன் நானும்....
புதிதாய் இவர்களைப்
பணியமர்த்திய பொழுதுகளில்,
என்பாடு சொல்லி மாளமுடிவதில்லை...
இதுநாள் வரை காத்தவனது
நன்றி மறக்கயியலாமல்,
அப்பெயரிட்டே அழைத்துத்
தொலைக்கின்றேன் புதியவனையும்..

காவலில் கெட்டிக்காரர்கள்..
பெயரைச் சரியாக உச்சரிப்பவனுக்கே
சொர்க்க வாசல் திறக்கப்படும்.
ரோசக்காரப் பயல்கள்..
மாற்றியழைத்தால்
மிகுந்த வருத்தம் கொள்வர்..
மும்முறை தவறிழைக்கப்பட்டால், 
தற்கொலை செய்து கொள்வர்..

இவர்கள் போக,
வீடு, விமானம், வங்கி, வழக்கு,
அஞ்சல், அலும்பு,
செருப்புக் கடை, பருப்புக் கடைக்கென
இன்னும் இருக்கிறார்கள்,
சுமார் ஐம்பது பேர்...

பொருத்தமான பெயர் தேடி,
சலித்துதான் போகின்றேன்,
நித்தமும் சலிப்பில்லாமல்
கடமையே கண்னென
கணினியில் ”உயிர்” வாழும்
எனதருமை கருப்பண்ணச் சாமியர்க்கு..

19 July 2010

Inception


வித்தியாசமான திரைப்படங்களை காண விரும்புபவரா நீங்கள்? உங்களுக்கு ஒரு படத்தை ரெண்டு மணி நேரம் உக்காந்து பாக்க பொறுமையும், அதுக்கப்புறம் ஒரு அரை நாள் உக்காந்து யோசிக்க நேரமும், தேவைப்பட்டால் இன்னொரு முறை பார்க்கும் வசதியும் இருக்கா? அப்படி என்றால் தாராளமாக இந்தப் படத்துக்கு போகலாம் :)

இதை பார்த்து விட்டு வெளியில் வரும் போது, இரண்டு வகையான எண்ணங்கள் தோன்றலாம் - என்னடா படம் இது? ஒரு மண்ணுமே புரியல.. என்னத்த தான் சொல்லியிருக்கான்? இல்லையென்றால், அட அட அட.. என்னமா எடுத்திருக்கான்.. அருமை அருமை... இப்படி ஒரு தெளிவான மனநிலையுடன் நீங்கள் வெளியே வந்தால், இதில் எது தோன்றினாலும், உங்களுக்கு படம் புரியவில்லை என்று தான் பொருள் :))

மாறாக, படம் முடிந்து வெளியே வரும் போது, படத்துக்கு போகும் போது எந்த வழியில் போனோம், அப்போது என்ன காலநிலை - இதெல்லாம் மறந்து போய், சென்றது, பார்த்தது எல்லாமே ஒரு கனவாக, குழப்பமாகத் தோன்றினால்,  படம் ஏதோ புரிந்திருக்கிறது என்று அர்த்தம்.. :)) எங்களுக்கும் இப்படித்தான் ஆயிற்று.. வீட்டில் இருந்து கிளம்பும் போதே வானம் மேகமூட்டமாய்த் தான் இருந்தது.. பின் கருக்கல் அதிகமாகி, இடி இடித்து, இருள் சூழ்ந்து, மழை துவங்கி, வெள்ளமாகப் பெருக்கெடுத்தது.. வானிலை பார்க்காமல், பொதுப் போக்குவரத்தில் சென்றதால், கிட்டத்தட்ட தெப்பமாக நனைந்து, டிஸ்யூ வைத்து துவட்டிக் கொண்டு சென்றோம் :)) பாதிவழியில் பஸ் ஐ நிறுத்தி விட்டார்கள்.. இதற்கு மேல் போக முடியாது, வழியெல்லாம் ஒரே தண்ணியென.. சிறிது நேரம் காத்திருந்த பின் நிலைமை சரியாயிற்று.. ஆனால், வீடு திரும்பும்போது, வானம் தெளிந்து, பாதைகளும் தெளிந்திருந்தன.. எல்லாமே ஏதோ ஒரு கனவாய்த் தோன்ற, வீடு வந்து சேர்ந்தோம்..

Inception எண்டால் ஆரம்பம் என்று பொருளாம்.. படத்தின் ஆரம்பமும் முடிவும் ஒரே மையப் புள்ளியில் வந்து முடிவது போல் இருக்கிறது.. அப்படி என்றால் ஆரம்பம் எங்கே?? முடிவுதான் எங்கே? எத்தனை பேர் deja vu  பார்த்திருப்பீர்கள் எனத் தெரியவில்லை.. ஆனால் sixth sense, அப்புறம் நம்மூரு 12 B நிறைய பேர் பார்த்திருப்பீர்கள்.. ஆனால், இவற்றையெல்லாம் தூசு என்று சொல்லும் அளவுக்கு complex கதையிது :)

படத்தின் கதையைச் சொல்ல, அதனை முழுமையாக அனுபவித்து விமர்சிக்க இப்போது எனக்கு தெம்பு கிடையாது.. (ஹி ஹி, இன்னும் ஒரு முறையாவது மறுபடியும் பார்த்தால் தான் நன்கு புரியும் :)) ).. இம்புட்டு பில்டப் கொடுத்து விட்டு, ஒன்னுமே சொல்லாம எஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஆவுறயே என்று திட்டுபவர்களுக்காக, மேம்போக்காக மட்டும் சொல்லிப் போகிறேன்..


ஹீரோ (லியோ... டி காப்ரியோ) ஓர் உள்ளங்கவர் கள்வன் :) அதாவது, எதிராளியின் மனதில் இருக்கும் ரகசியத்தை திருடுபவன்.. எப்படி தெரியுமா - எதிராளியும் இவனும் தூங்க, தூக்கத்தில் இருவருக்குமான ஒரு கனவினை சஞ்சரித்து, அந்தக் கனவுக்குள் ஓர் உலகத்தை, சம்பவங்களை உருவாக்கி, இவனும் எதிராளியும் அதில் பேசித்திரிந்து, அப்போது எதிராளியின் மனதில் இருப்பதை அறிந்து கொள்ளையடிப்பவன் :)))

குற்றவாளியான காரணத்தால், லியோ தன் குழந்தைகளிடம் இருந்து பிரிந்து வாழ வேண்டிய சூழ்நிலை.. தனக்கான ஒரு வேலையை லியோவால் நடத்திக்கொடுக்க முடிந்தால், லியோவை அவனது குழந்தைகளிடம் சேர்ப்பிக்கும் பொறுப்பை தான் ஏற்றுக்கொள்வதாக பெரும் புள்ளி ஒருவன் பேரம் பேசுகிறான்.. இது இன்னும் சற்று கடினமான வேலை.. அதாவது, லியோ, எதிராளி ஒருவனது ஆழ்மனதிற்குள் ஊடுருவி, அவனுள் அப்போதைக்கு உறுதியாக நிற்கும் ஓர் எண்ணத்தை மாற்றியமைக்க வேண்டும்!!

இந்த எதிராளியின் பெயர் ராபர்ட்.. இவனது அப்பா பெட்ரோலியத் துறையுலகில் பெரும் பணக்காரர்.. அப்பா மரணப்படுக்கையில் இருக்க, மகன் வாரிசாகப் போகும் நேரம்.. வில்லனுக்கும் இவர்களுக்கும் இடையேயான தொழிற் போட்டியின் காரணமாகவே லியோவுடன் இந்தப் பேரம் பேசப்படுகிறது... லியோவும் அதற்கு சம்மதிக்க, அதற்கான ஏற்பாடுகள், ஆட்கள் என தேவைகளை செய்து முடிக்கிறார்கள்.. கனவுக்குள் கனவு கண்டு, அதற்குள் இன்னோரு கனவு கண்டு என மெதுமெதுவாக எதிராளியின் மனதை கையகப்படுத்த வேண்டும்.. எல்லோருமாக இந்த விளையாட்டின் விதிமுறைகளை விவாதிக்கிறார்கள்.. கனவில் பயணிக்கும் சமயம், நனவுலக்குக்கும் கனவுலகுக்குமான  காலநிலைப்பாடு வெகுவாக வேறுபடுகிறது.. ஒரு மணி நேரக் கனவென்றால் வெளியே ஐந்து நிமிடம் மட்டுமே ஆகியிருக்கும்.. இதனால் ஏற்படும் விளைவுகள், கனவுலகில் இருந்து விழிக்க என்ன செய்ய வேண்டும், கனவிலே இறந்துபோனால் என்ன நடக்கும், இது கனவா நனவா எப்படி கண்டுபிடிக்க என பல விதிமுறைகள்!!!

அப்புறம் தான் படம் சூடு பிடிக்கிறது.. ராபர்ட் செல்லும் விமானத்தில் இவர்களும் பயணமாகி, அவனுக்கு மயக்க மருந்து கொடுத்து தூங்க வைத்து விட்டு, இவர்களும் தூங்க.. முதலில் ஒரு பொது கனவினை உண்டாக்கி - அதில் அனைவரும் பயணிக்க, அதற்குள்ளே இருந்து இன்னொரு கனவு, அதற்குள்ளே இருந்து இன்னொன்று என, கிட்டத்தட்ட ஐந்து கனவுலங்கள்.. அதே பாத்திரங்கள் தான், ஆனால் முற்றிலும் வேறுபட்ட சூழ்நிலைகளில்... கொஞ்சம் கொஞ்சமாக ராபர்ட்டின் அந்த எண்ணத்தை நெருங்க, அவனது மனமோ இது போன்ற திருட்டுகளிடம் இருந்து தப்பிக்க ஏற்கனவே பெற்ற பயிற்சியால் இவர்களைச் சுட்டு எதிர்க்க முயல.. இதற்கிடையே, லியோவின் ஆழ்மனதில் புதைந்து கிடக்கும் ஒரு வலி வேறு வந்து குறுக்கிட...




ஒரு வழியாக ராபர்ட்டின் மனதில் இவர்கள் விருப்பப்பட்ட அந்த எண்ணத்தை ஆழ விதைத்துவிட்ட பின், முடிவில், எல்லாரையும் ஹா என்று வாய் திறக்க வைத்ததோர் அழகான திருப்பத்துடன் முடிக்கிறார்கள்...

படத்தில் பிடித்த விஷயமே - மிகக் கடினமான திரைக்கதையை நமக்கும் புரியும் வண்ணம் வடிவமைத்திருப்பது.. அதாவது, படம் பார்க்கப் பார்க்க, ஒரு கடினமான புதிரை நாம் அவிழ்ப்பது போன்ற உற்சாகத்தை நமக்குள்ளே தோற்றுவிப்பது.. அப்புறம், இத்தனை கடினத்திலும், மிகத் தெளிவான திரைக்கதையை கொண்டிருப்பது.. கற்பனையுலகக் கான்செப்ட் கொஞ்சமாக Matrix படத்தை நினைவுபடுத்தியது.. இப்படத்தை உருவாக்க பத்தாண்டுகள் பிடித்ததாம்.. கனவிலேயே உருவாக்கியிருப்பார்களோ?

நேற்று இரவு, படத்தைப் பற்றிய தெளிவு பெற, இணையதளத்தில் கொஞ்சம் துழாவிப் பார்த்த போது தான் தெரிந்தது, படத்தின் முடிவு குறித்து ஒரு பட்டிமன்றமே நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.. அதாவது, முழுப் படமுமே ஒரு கனவு தான் என ஒரு சாராரும், இல்லை, நனவு தான் என ஒரு சாராரும்.. ஒவ்வொருவரும் தத்தம் பார்வையில் இதற்கான விளக்கங்களும் சொல்லியிருந்தார்கள்.. இதையெல்லாம் படித்து பார்த்தும், எந்தவொரு முடிவுக்குமே வர முடியாமல் போனதால், பொழப்பில்லாம இப்பிடி வெட்டியா இந்தப் படத்தப் பத்தி பேசிகிட்டு இருக்காங்களே என அவர்களைக் கொஞ்சம் திட்டி விட்டு, நானும் இப்போது வெட்டியாய் இந்தப் படத்தை பற்றிச் சொல்லி உங்களை குழப்பிக் கொண்டிருக்கிறேன்.. :)))


ஏதாச்சும் புரிஞ்சதா?? :)))))))))) இல்லாட்டி கனவுல வந்து புரிய வைக்கறேன்.. ஓக்கை?? நல்லிரவு!!

17 July 2010

ரங்கோலி



கவனிக்க: படத்தின் கதையேதும் சொல்லவில்லை :)

டாய் ஸ்டோரி 3, 3 டி யில் பார்த்தோம்.. இதற்கான நல்ல விமர்சனங்களை படித்திருந்ததால், மற்ற படங்களை விட்டுவிட்டு இதற்கே செல்வதென முடிவெடுக்கப்பட்டது.. எனக்கு இப்படம் காண விருப்பமிருந்தாலும், கொஞ்சம் நடுக்கமாகத்தானிருந்தது.. ஏற்கனவே ஒரு முறை கார்ட்டூன் கதாப்பாத்திரங்களைத் தெரியாமல் முழித்திருக்க, இப்போது இதில் வரக்கூடிய பொம்மைகளையும் யார் ஏதென்று தெரியாமல் முழிக்கப் போகிறோம் என்றெண்ணினேன்.. மேலும், இப்படத்தின் முதலிரண்டு பாகங்களை பார்த்திராததால், இது புரியாமல் போய் விடலாம் என்றும் தோன்றியது.. வேறெதுவும் உருப்படியாக இல்லாததால் இதற்கே செல்ல வேண்டிய நிலைமை.. இதையெல்லாம் தாண்டி, படம் பார்த்த பொழுது நன்றாகவே புரிந்தது.. படம் பிடித்தது.. ஆனால், ரொம்போப் பிடிச்சிருக்கு என்று உரக்கக் கத்திச் சொல்ல முடியவில்லை.. ஒரு வேளை, முந்தைய பாகங்களையும் பார்த்திருந்தால், கதையின் பாத்திரங்களோடு நன்றாகவே ஒன்றியிருந்திருக்கலாம்.. படத்தில், பாராட்ட வேண்டிய விஷயங்கள் நிறைய.. கதையின் போக்கு சீராக இருந்தது.. அனிமேஷன் மிக அருமை.. பொம்மைகளின் உணர்வுகளை அழகாக வடிவமைத்திருந்தார்கள்.. மனம் ஏங்குகிறது - இப்படியொரு கற்பனையுலக உருவாக்கப்பணியில் இருந்தால் நல்லாயிருக்குமென்று.. முடிவில், சுபமோ சுபமென்று செயற்கையாக முடிக்காமல், சுபமாக அதே சமயம், நடைமுறைக்கு ஏற்றவாறு படம் முடிக்கப்பட்டது நன்றாகயிருந்தது.. கிட்ஸ் மூவி என்ற உணர்வு இறுதியில் வந்தாலும், உண்மையில் அது குழந்தைகளுக்கான படந்தானே.. ம்ம்..

இந்தப் படத்தைப் பற்றி இவ்வளவு குறைவாக எழுதியிருப்பவள் நான் மட்டுந்தானென்று நினைக்கிறேன்.. :)) 

படம் பார்த்து விட்டு வீடு திரும்புகையில், வழியில் காண நேர்ந்த துணிக்கடையில் தென்பட்ட பொம்மைகளும், இப்படித் தான், மனிதர்களற்ற பொழுதுகளில் பேசிக்கொள்ளுகின்றனவோ என்ற எண்ணம் வந்து புன்னகைக்கச் செய்தது..

நீங்களும் பார்த்துட்டுச் சொல்லுங்க.....

********************

இப்போது தான்.. கொஞ்சம் நேரம் முன்பு, ஒரு தோழி லேப்டாப்பை தூக்கிக் கொண்டு பயங்கர உற்சாகமாய் வந்தார்.. அவர் லேப்டாப்பில் இந்த நிகழ்ச்சியை பார்க்க ஆரம்பித்தாராம்.. ஆனால், யாரோடாவது சேர்ந்து பார்த்தால் இன்னமும் நல்லாயிருக்குமென்று தோன்றியதால், அதை அப்படியே பாஸ் செய்து விட்டு, இங்கு வந்திருந்தார்..


வேறொன்றுமில்லை.. தோழி இன்னமும் கல்லூரி வயதை விட்டு நீங்காமல், ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் பார்த்து குதூகலிப்பவர்.. எமக்கெல்லாம் பொழப்பே திண்டாட்டமாக இருக்கையில், இது போன்றவைகளைப் பார்த்து வெகு நாட்களாகிப் போயாச்சு.. இருந்தாலும், இந்த நிகழ்ச்சி பிடித்தது.. புதிதாக கற்பனையுடனும் திறமையுடனும் இருந்ததால்.. நீங்களும் பார்த்துட்டுச் சொல்லுங்க..

********************

மெயிலில் வந்தவை.. அரதப் பழசாயிருந்தா, கமுக்கமா கிழிச்சுப் போட்டுட்டுப் போயிட்டே இருங்க :)) புதுசா, முடிஞ்சா சிரிங்க.. கஷ்டமாயிருந்தா விட்டுடுங்க :))
















ஓக்கை.. நல்லிரவு

**************************************************************************


01 July 2010

அக்காவக் கண்டு சொக்கி நின்ன மாமன்...

வலைகடல்ல எதயோ பாத்து, எதுமேலயோ இடிச்சு, அது பதிலுக்கு எங்கிருந்தோ எங்கயோ என்னத் தூக்கிப்போட, இந்த இடத்துல வந்து நின்னேன்..



யாரு இவகன்னு தெரியுதா?

மொதல்லாம், எனக்கு அசின் ன அவ்வளவாப் பிடிச்சதில்ல (ரசிகப் பெருமக்க ஆரும் சண்டைக்கு வந்துபோடாதீங்கப்பு).. ஏன்னு தெரியல (கண்டிப்பா பொறாமை காரணமில்ல :) ).. போக்கிரி, கஜினி.. இப்படி சில படங்களப் பாத்திருந்தாலும், என்னமோ, இவிக முகம், பாத்தவுடனே அழகாயிருக்குன்னு மனசுல பதிஞ்சதில்ல.. ஆனாலும், நம்மூருப் பயலுவ கொஞ்சம் பேருக்கு அசின் ன ரொம்பவே பிடிச்சிருக்கறதப் பாத்திருக்கேன்..

எது எப்பிடியோ, இந்தப் புகைப்படத்துல இவிக கொஞ்சம் (சரி.. சரி.. நெறயத்தேன்...) அழகா இருந்த மாதிரி இருந்தது.. தொடர்ந்து, இவிக காலரி பாக்க ஆரம்பிச்சேன்.. முன்னாடி இருந்ததுக்கும் இப்போப் பாக்கறதுக்கும், மேக்கப்பு ல, ஸ்டைலுல, நிறைய மாற்றங்கள்.. இந்திப் படத்துல தல காட்ட ஆரம்பிச்சப்புறம், அக்கா (அப்பிடிக் கூப்பிடலாமாங்க்கா??) சும்மா ஜொலிச்சுகிட்டு இருக்காங்கன்னு தோனுது... என்னது, அக்கா மேக்கப் இல்லாமயும் அழகாத்தேன் இருப்பாங்கன்றீயளா.. சரி.. சரி.. விஷயத்துக்கு வருவோம்..

இப்பிடி அடுத்தடுத்ததா பாத்துக்கிட்டு இருக்கறப்பத்தேன், இந்தப் போட்டோவும் கண்ணுல பட்டுது..


இதுலயும், மேக்கப் கொஞ்சம் அதிகமாயிருக்கற மாதிரித்தேன் எம்மனசுக்குப் பட்டுது (நேர்மையாத்தேன் சொல்லுதேன், சந்தேகங்கிந்தேகம் படாதீக).. இதுல வேற நம்மூரு பொண்ணுப்புள்ள வேசத்துல இருக்காகளா.. இதுல இவிய சிரிக்கறதப் பாத்தா, என்னமோ எதுத்தாப்புல மாமன் இருக்கற மாறியும், அவிய இவியள லுக்கு வுட்டுகிட்டு இருக்கற மாறியும், அக்கா அப்பிடியே கொஞ்சம் வெக்கப்பட்டு சிரிக்கற மாறியும் எனக்குப் பட்டுது.. அதேன்.. பதிலுக்கு, நம்ம மாமன் மனசுல இப்பிடி இவியளப் பாத்தோடனே என்ன தோனியிருக்கும்ன்னு, நெனச்சுப் பாத்தேன்.. மாமன்
                                
                                                 இப்பிடி யோசிச்சிருப்பாகளோ???

இல்ல,
                                                இப்பிடி பாட்டுப் படிச்சிருப்பாகளோ?

சரி சரி, நமக்கெதுக்கு ஊர் வம்பு??

இன்னொன்னும் தோணுச்சு.. நம்ம அக்கா யேன் இப்பிடி சைடு லுக்கு விடறாக? திரும்பி நின்னு நேராப் பாக்க வேண்டியதான மாமன் மொகத்த??.. ஆருக்காவது பதிலு தெரிஞ்சா சொல்லிப்போடுங்கப்பு.. புண்ணியமாப் போவும்..

சரி, ஆரம்பிச்ச இடத்துக்கே மறுபடியும் வருவோம்.. அக்கா பண்ணுன காரியத்துக்கு அவிய மேல கோவந்தேன்..