30 April 2011

விரலாலாகாத்தனம்..எங்க தலைவர் (மேனேஜர் மாதிரி), துணைத் தலைவர் ரெண்டு பேருமே ஐரோப்பாவுல ஒரே நாட்டுல இருந்து இங்க இடம் பெயர்ந்தவங்க. ரெண்டு பேரு பேசுறதும் ஒரே மொழி தான்.. யாருக்கும் ஒன்னும் புரியாது.. :) தலைவர் தான் துறை மேலாளர்.. இவரு அநேக நேரம் வேலை செய்வது மெயின் அலுவலகத்துல..

இதுல இருந்து இருபது நிமிஷத்திய நடை தூரத்துல, இதே நிர்வாகத்துக்கு உட்பட்டு, இன்னொரு குட்டி அலுவலகம் இருக்கு.. அங்க, எங்க துறைல, இந்தத் துணைத் தலைவர் தான் கிட்டத்தட்ட மேலாளர் மாதிரி (ஏன்னா எங்க துறைல யிருந்து அங்க இருக்கிறதே அவர் ஒருத்தர் தான் :)) ) .. அவரோட வேலையில நெறய நேரம் அங்கன தான் கழியும்.. அப்பப்போ இங்கயும் வருவார்..

அந்தக் குட்டி அலுவலகத்துல எங்களுக்கும் வாரம் ஒரு நாள் வேலை செய்யணும்.. எனக்கு அங்க லொங்கு லொங்குன்னு இருவது நிமிஷம் நடந்து போய் வர்றது கூட  பெரிய பிரச்சனையா தோனல..  அங்க இருக்கற சுண்டெலி தான் பெரிய தொல்ல.. மெயின் அலுவலகத்துல இருக்கற சுண்டெலில பொத்தான்கள் அதிகமா இருக்கும்.. வேலைக்கான கணினிப் பக்கங்கள்ல முன்னே பின்னே போறதுக்கு கீ போர்டுக்கு அடிக்கடி கைய மாத்தத் தேவையில்ல.. அதே மாதிரி இன்னொரு பொத்தான அமுக்கி, வேகமாகவும் மெதுவாகவும் ஸ்க்ரோலிங் வேகத்த மாத்திக்கலாம்.. அந்த குட்டி அலுவலகத்துச் சுண்டேலில இப்படியான பொத்தான்கள் இல்ல. எனக்கு ஸ்க்ரோல் பண்ணிப் பண்ணி விரலெல்லாம் ஒரே வலியாயிடும்.. இந்தச் சுண்டெலிய தூக்கிப் போட்டுட்டு பெரிய அலுவலகத்துல இருக்கற மாதிரி வாங்கிக்கலாம்ன்னு துணைத் தலைவர் கிட்ட பரிந்துரை சொன்னன்.. ஒருக்கா சொல்லி ஒன்னும் மாறல... ரெண்டாவது வாட்டி இன்னொருத்தர்கிட்ட (இந்த ஆசிரியர் இந்தியர்) புலம்பினதுல, இவர் கிட்ட சொல்றத விட தலைவர் கிட்ட சொன்னீன்னா ஒரே நாளுல வேலையாயிடும்ன்னு சொன்னார்.. அவர் பேச்ச நம்பி, தலைவருக்கு உருக்கமா ஒரு ஈ மெயில தட்டுனேன்.. அதைய ஒரு காப்பியா துணைத் தலைவருக்கும் அனுப்பிவிட்டேன்..

அப்புறம் பாத்தா, அன்னைக்கு மதியம் துணைத் தலைவர் வந்து கன்னாபின்னான்னு கத்துறார்.. "என்ன நீயி, வேலைக்கு வந்து கொஞ்ச நாள் கூட ஆகல, அதுக்குள்ள எல்லாத்தையும் மாத்தனும்ன்னு நினைக்கறே.." எனக்கு ஒன்னும் புரியல.. நான் அப்படி என்ன தப்பு செஞ்சேன்? மாத்திப் பாக்கலாம் ன்னு விண்ணப்பம் போட்டது தப்பா? இவர்கிட்ட முதல்லயே  சொல்லியிருக்கேன், இவருக்கும் ஒரு காப்பி மெயில அனுப்பிவிட்டிருக்கேன்.. பிறகென்ன? "அப்படியெல்லாம் மாத்த முடியாது, நாங்க இங்க ரொம்ப நாளா இருக்கோம், எங்க விருப்பப்படி தான் எல்லாமும் இருக்கணும்.. நீ ஒரு நாள் தான் வர்ற, சுண்டெலிய உனக்கேத்த மாதிரி மாத்திட்டா அப்புறம் மத்த நாளெல்லாம் நாங்க என்ன பண்ணுறது? வேகமா ஸ்க்ரோல் பண்ணிட்டே போனா பாதியிதப்  பாக்காம மிஸ் பண்ணிடுவோம்.." இப்படி அவர் பேசிக்கிட்டே போக, நான் சொன்னேன், "மெயின் அலுவலகத்துல இருக்கற மாதிரி தான் வாங்கலாம்ன்னு சொன்னேன்.. நீங்க இப்ப ஸ்க்ரோல் பண்ற மாதிரி மெதுவாவும் பண்ணிக்கலாம், நான் சொல்ற மாதிரி வேகமாவும் பண்ணிக்கலாம்.. மிச்ச பொத்தான்களும் இதுல இருக்கற மாதிரியே உபயோகிக்க முடியும்.. எனக்கு கீ போர்டுக்கும் சுண்டெலிக்கும் மாத்தி மாத்தி கையை நகர்த்தரதுல சலுப்பாயிருக்கு.."

ஆனாலும் அவர் மனசு ஆறல.. "அதெல்லாம் முடியாது, நீ வேணும்னா உனக்குன்னு தனியா ஒன்னு வாங்கிவந்து வேலை பண்ணிக்கோ..", அப்படின்னு சத்தம் போட்டாரு.. எனக்கு கடியா இருந்தது, என்ன இப்படிச் சொல்றாரேன்னு.. "அப்படியெல்லாம் நீங்க சொல்லக் கூடாது. நான் ஒன்னும் பெருசா கேட்கல.. ஆப்டர் ஆல் ஒரு சுண்டெலி.. அதுவும் என் விரல் ரொம்ப வலிக்கரதால தான் கேக்கறேன்.. இதக் கூட செஞ்சுதர முடியாதா? என்னைய வாங்கிட்டு வரச் சொல்லுறீங்க? மெயின் அலுவலகத்துல என்னடான்னா, தலைவர் மானிட்டரை எல்லாம் தனக்குப் பிடிச்ச மாதிரி மாத்திட்டு இருக்கார்.. அதையெல்லாம் மாத்தித் தர்ற ஆளுங்க கிட்ட கேட்டா இதையும் தந்துட்டுப் போறாங்க?.."

எனக்கு ஐடியா கொடுத்தவரும் (இந்தியர்) அந்த நேரத்துல அங்கிட்டு தான் இருந்தார்.. இப்படியே காரசாரமா போன பேச்சு, கடைசியா எங்க வந்து நின்னதுன்னா, "என்ன இருந்தாலும் நீ தலைவர இதுல ஈடுபடுத்தியிருக்கக் கூடாது.. அவருக்கு இங்க எந்த அதிகாரமும் இல்ல.. எதுன்னாலும் என்கிட்டக் கேளு, நான் இங்கத்த ஆளுங்க கிட்ட பேசிப் பாக்கறேன்.." இதைச் சொல்லிட்டு துணைத் தலைவர் கிளம்பிப் போயிட்டார்.. எனக்கு மூஞ்சி உர்ருன்னு கெடந்தது.. ஆனா இந்த இந்திய ஆசிரியருக்கு பிரச்சனை என்னன்னு புரிஞ்சிட்டது.. "நீ கேட்டதுல எந்தப் பிரச்சனையும் இல்ல.. ஆனா இவர விட்டுட்டு நீ தலைவர் கிட்ட மனுப் போட்டதால தான் இத்தன கடுப்பும்.. அவங்களுக்குள்ள ஏதோ பிரச்சனைன்னு  நினைக்கறேன். ரெண்டு பேரும் முன்ன மாதிரி பேசிக்கறதில்ல.. "

எனக்கு ஏதோ வெளங்குனாப்ல இருந்தது.. அந்த இந்திய ஆசிரியர் மேற்கொண்டு எங்கிட்ட சாரி சொன்னாரு.. "என்னால தான உனக்கு இம்புட்டுத் தொந்தரவும்.. நீ கேட்டதுல எந்தத் தப்பும் இல்லன்னு தான் நான் நினைக்கறேன்.. அவரும் இப்படிப் பேசுறவர் இல்ல.. தலைவர் பேரு உள்ள வந்ததால கடுப்பாயிட்டாரு போல.. "

அப்புறம் சாப்பிடப் போயிட்டேன்.. என்னமோ மனசே சரியில்லாத மாதிரி இருந்தது.. சாப்பிட்டு முடிச்சிட்டு, மதிய வகுப்புக்காக, இந்திய ஆசிரியரோட, மெயின் அலுவலகத்துக்கு கிளம்பினேன்.. துணைத் தலைவரோட அறையைக் கடந்து தான் போவோணும்.. நம்ம இந்திய ஆசிரியர், அவர் கிட்ட, போயிட்டு ஒரு மணி நேரத்துல திரும்பிடுவோம்ன்னு சொன்னார்.. நான் டக்குன்னு உள்ள நுழைஞ்சு, "என்னை மன்னிச்சிடுங்க.. இந்த ரெண்டு அலுவலகத்துக்கு இடையிலே அதிகாரப் பகிர்வு எப்படி நடக்குதுன்னு புதுசா வந்த எனக்குத் தெரியாது.. அதான் குழப்பிட்டேன்.." ன்னு சொன்னேன்.. அவரும் ஆறி இருந்தாரு.. "பரவால்ல, ஏற்கனவே இந்தக் குட்டி அலுவலகத்து அதிகாரத்துல கொஞ்சம் குழப்படிகள் இருக்கு.. இதுல நம்ம தலைவரையும் இழுத்து விட்டோம்ன்னா ரொம்பக் கஷ்டமாயிடும்.. அதான்.." நானும் புன்னகைச்சுட்டே வந்துட்டேன்.. ஆறுதலா இருந்தது.. அதுக்கப்புறம் அதைய மறந்து போயிட்டேன்..

அடுத்த வாரம், அதுக்கடுத்த வாரம்ன்னு ரெண்டு மூணு தடவ சம்பவத்துக்கப்புறம் அங்க வேலைக்குப் போயிருந்தேன்.. துணைத் தலைவரும் வழக்கம் போல பேச ஆரம்பிச்சுட்டாரு.. மூணாவது வாரம், மதிய வகுப்புக்காக மெயின் அலுவலகம் போயிட்டுத் திரும்பறேன், வந்து பாத்தா என் டேபிள் மேல புது சுண்டெலிப் பொட்டி!!! அவ்வ்வ்வவ்வ்வ்வ்.... இந்தப்பக்கம் திரும்பிப் பாத்தா, பக்கத்து டேபிள்லயும் (நாங்க இருக்கற நேரத்துல அவர் அதுல வேலை செய்வார்) ஒரு புது சுண்டெலிப் பொட்டி.. (நெல்லுக்குப் பாயற தண்ணி அப்புடியே புல்லுக்கும் பாயுமாமே? :)) )அதைய பிரிக்காம கூட எடுத்துகிட்டு அவரோட அறைக்கு ஓடிப் போயி நன்றி சொன்னேன்..  அவர் புன்னகைச்சார்..


அப்பாகிட்ட சண்ட போட்டு பொம்ம ஒன்னு வாங்கிட்ட கணக்கா சந்தோஷமா இருந்தது :)


பிகு: மொதல்ல இதுக்கு MOUSE vs mouse அப்படின்னு தலைப்பு வச்சிருந்தேன்.. யாரையாவது வம்புக்கு இழுக்கலைன்னா நமக்குத் தான் தூக்கம் வராதே.. அதுக்குத் தான் இந்தத் தலைப்பு.. என்ன பண்றது, விரல்ல வலின்னு சொல்றதுக்கும் விரலால தான் டைப்பு பண்ண வேண்டியிருக்கு.. :)))) )

20 April 2011

ரத்தமின்றி.. கத்தியின்றி..

கிபி பத்தொன்பதாம் நூற்றாண்டு, வருடம் 21, திகதி -182.5. நேரம்: 8

ரிஜூஸால் அவனது ஆசிரியர் சொன்னதை லாஜிக்கலாகப் புரிந்து கொள்ளவே முடியவில்லை. இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் இருபத்தோராம் நூற்றாண்டு நிகழ்ந்தது என்றால், நாம் இன்று வாழ்வது இருபத்திமூன்றாம் நூற்றாண்டு என்று தானே எண்ணிக்கை வர வேணும்? பாடத்தின் இடையில் ஆசிரியரிடம் இப்படி ஒரு சந்தேகத்தைக் கேட்ட போது, அவர் அவனை ஒரு புழுவைப் பார்ப்பது போன்று பார்த்தார். இருபத்தோராம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆதி மனிதன், காலமென்பது ஒரு திசையில் மட்டுமே செல்லக் கூடியது என்று நம்பியிருந்தான். அதனால் தான் அவனது காலத்தில், வருடங்கள் எல்லாமே முன்னோக்கி நகர்ந்தன. அதற்குப் பின்னர் பற்பல ஆராய்ச்சிகள் மூலமாக, கணக்கியல் வல்லுனர்களும் காலவியலாளர்களும், காலம் இரண்டு திசையிலும் பயணிக்கக் கூடியது என்று கண்டுபிடித்தார்கள். அதனால் தான் இப்போது பத்தொன்பதாம் நூற்றாண்டில் இருக்கிறோம், அடுத்ததாக பதினெட்டாம் நூற்றாண்டை நோக்கி பயணிக்கப் போகிறோம் என்றார். 

வேகமாக ஒரு கம்ப்யூட்டர் போர்டில் ஃபார்முலாக்களை அவர் கிறுக்கிக் காண்பிக்க, அதே நேரம் மற்றும் வேகத்தில், பல்லாயிரம் மைல்களுக்குப் அப்பால் இருந்த இவனது அறையின் திரையில் அவை ஒளிர்ந்து கொண்டிருந்தன. இதெல்லாம் தனது புரிதலுக்கு அப்பால் என்று உணர்ந்த ரிஜுஸ், தனது அடுத்த சந்தேகத்தை கொஞ்சம் தயக்கத்துடன் கேட்டான், “அப்படியென்றால் இதற்கு முன்னர் நிகழ்ந்து முடிந்திருந்த பத்தொன்பதாம் நூற்றாண்டின் மனிதர்களைச் சந்திக்க முடியுமா?”. ஆசிரியர் கொஞ்சமும் தயங்காமல், இப்போது தான் அது குறித்த ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன, முடிவுகள் வெளிவர சிலகாலம் ‘முன்ன’ ‘பின்ன’ ஆகும் என்றார்.

அந்தக்கால மனிதர்கள் வருடத்தை நாட்களாகவும் வாரங்களாகவும் மாதங்களாகவும் பிரித்து வைத்திருந்தனர் என்று அவர் சொன்னது அவனுக்கு மிகுந்த ஆச்சர்யத்தைத் தந்தது. பருவ நிலைகள் மாறி மாறி வந்தாலும், நாளை என்பது நேற்று என்பதிலிருந்து மாறுபட்டது என்ற ஆதி மனிதனின் நம்பிக்கையை அறிவியல்பூர்வமாகத் தகர்த்தெறிந்து காலநிலைக் கணக்கு மாற்றியமைக்கப்பட்டதாகவும், அதன்படி, வருடத்தின் பாதி நாட்களின் திகதி தொடர்ச்சியாக அமைக்கப்பட்டு, பாதி வருடம் வரை கூட்டலிலும் மீதி வருடம் கழித்தலிலும் கழியும் என்று விளக்கினார். 

அந்நேரம் கதவு தட்டப்படும் சத்தம் கேட்கவே, பாடத்தில் ஆழ்ந்திருந்த ரிஜூஸ் இயல் நிலைக்கு வந்தான். ரியா தான் தட்டிக் கொண்டிருந்தாள். ஆசிரியரிடம் அனுமதி கேட்கவும், அவரது நாப்பரிமாண வடிவம் அறையில் இருந்து மறைந்தது. அதே நொடியில், வகுப்பறையில் ஆசிரியரின் முன் அமர்ந்திருந்த மாணவர்களில், ரிஜூசின் நாப்பரிமாண வடிவம் மறைந்து போனது.

ரியாவின் வருகைக்கான அனுமதியை ரிஜூஸ் உறுதி செய்ததும், அவளது வடிவம் அறையில் உருவெடுத்தது. "இன்று -பத்து மணிக்கு சைல்ட் மார்ட்டில் அவர்களது நிபுணருடன் கலந்துரையாட நாம் நேரம் வாங்கியிருக்கிறோம்.. உனக்கு நினைவுபடுத்திவிட்டுச் செல்ல வந்தேன்.." "ம்ம்.. வகுப்பு முடிந்தவுடன் உனக்கு தெரிவுபடுத்துகிறேன்.." என்றான் ரிஜூஸ். அத்துடன் ரியா அங்கிருந்து மறைந்து போனாள். ஆசிரியரின் அறையைத் தட்டி அனுமதி வாங்கி, மீண்டும் வகுப்பறையில் ஐக்கியமானான் ரிஜூஸ். 

****************

கிபி பத்தொன்பதாம் நூற்றாண்டு, வருடம் 21, திகதி -182.5. நேரம்: -10

சைல்ட் மார்ட் கட்டிடம் மிகப் பிரமாண்டமாக இருந்தது. முற்றிலும் குளிரூட்டப்பட்ட நிலையம். மிக விசாலமான வரவேற்பறை, அதிலே வீழ்ந்து வருவோர் போவோருக்கு சாரலைத் தெளித்துக் கொண்டிருந்த பெரிய நீர் வீழ்ச்சி, சூரிய வெளிச்சத்தை போன்றே ஒளிர்வூட்டிய செயற்கை ஒளி, இனிய இசை, என்று ரம்மியமான சூழலைக் கொண்டிருந்தது.  தங்களுக்கான அழைப்பு வந்ததும், நிபுணர் திரு சாம்சனின் அறைக்குள் நுழைந்தனர் இருவரும்.

திரு சாம்சன் தன்னை மரபணு வடிவமைப்பாளர் (genetic designer) என்று அறிமுகப் படுத்திக் கொண்டார். முதல் சந்திப்பில் நேரடியாகப் பேசுவது அவசியமென்றும், அடுத்தடுத்த சந்திப்புகளை இருந்த இடத்திலிருந்தே நடத்திக் கொள்ளலாம் என்றும் கூறினார். அவர்களைப் பற்றிய சில விபரங்கள் தேவைப்படுவதாகவும், அதைத் தொடர்ந்து சில பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும் என்றும், முடிவில் குழந்தையைக் குறித்த தங்களது எதிர்பார்ப்புகளை வெளிப்படுத்தலாம் என்றும் சொன்னார்.

ரிஜூஸ் மற்றும் ரியா பிறந்த பொழுது இம்மாதிரியான வசதிகள் எல்லாம் இருக்கவில்லை. அவர்களது பெற்றோரின் காலத்தில், முற்றிலும் உடலுக்கு வெளியே, கண்ணாடியால் ஆன சிறு பெட்டியினுள், பெற்றோரின் அரவணைப்புடன் சுயமாக இயங்கக் கூடிய மனிதக் குழந்தையை ஒரே மாதத்தில் உருவாக்கக் கூடிய அளவு தான் விஞ்ஞானம் முன்னேறி இருந்தது. அதன் வளர்ச்சியை முறையாகக்  கண்காணித்து நிறைவான ஊட்டச்சத்து அளித்து குறை வளர்ச்சி கொண்ட குழந்தைகளை சரிப்படுத்தியோ அல்லது அழித்துவிட்டோ, பிறப்புக் குறையற்ற குழந்தைகளை உருவாக்கிக்கொண்டு இருந்தார்கள். ரிஜூஸ் ரியா மற்றும் அவர்களது நண்பர்கள் எல்லோரும் அப்படிப் பிறந்தவர்கள் தாம். அதே காலகட்டத்தில் சில ஏழை நாடுகளில் வசதியற்ற பெண்கள் தங்கள் உடலினுள் கரு சுமந்து ஒன்பது மாதங்கள் வரைக் காத்திருந்து குழந்தை பெற்றுக் கொண்டிருந்தனர். அவர்களது பிள்ளைகளில் சிலர் குறைகளுடன் பிறப்பது தவிர்க்கவியலாததாக இருந்தது.

விபரங்கள் பெற்று முடிந்த பின்னர், ரிஜூஸ் மற்றும் ரியாவின் விரல் நுனிகளைச் சிறு ஊசி கொண்டு குத்தி, சில துளி ரத்தத்தை சிறு கண்ணாடிப் பேழையில் சேமித்துக் கொண்டார் திரு சாம்சன். பின் எழுந்து சென்று உள்ளறையில் ஒரு ப்ரீசரினுள் வைத்துவிட்டு தமது இருக்கையில் அமர்ந்து கொண்டார். இந்த ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் டி என் ஏ வையும், அவர்கள் கருவாக இருந்த பொழுது எடுத்து வைத்திருந்த மிக ஆரம்ப நிலைச் செல்களையும், ஒப்பிட்டு உறுதி செய்த பின்னர்,  அவற்றிலிருந்து டி என் ஏ வை ச் சேகரித்து, அதன் மரபணு அமைப்பை ஆய்ந்து, ஜெனிடிக் மேப் வரைந்தெடுத்துக் கொள்வோம் என்றார். அடுத்ததாக இருவரும் தங்களது குழந்தையின் உருவ அமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்று கணினியில் டிசைன் செய்து கொடுத்தால், அதற்கேற்ப இருவரின் டி என் ஏ விலிருந்தும் அந்தந்த ஜீன்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றின் மாதிரிகளை வெளி வேதிப்பொருட்களைக் கொண்டு கட்டமைத்து, பின்னர் அவற்றை ஒருங்கிணைத்து, அடிப்படை டி என் ஏ வை உருவாக்கி, அதிலிருந்து ஒற்றைச் செல்லை வருவித்து, அதை மேற்கொண்டு வளர விடுவோம் என்றார். 

வெளிப்புறத் தோற்றமானது, குழந்தை இருபது வயதை எட்டும் நிலையில் எப்படி இருக்க வேண்டும் என்று பெற்றோர் எதிர்பார்க்கிறார்களோ அதற்கேற்ற மாதிரி டிசைன் செய்வோம். உட்பாகங்களைப் பொறுத்த வரை, யாருடைய மரபணு சிறப்பாக இயங்கக் கூடிய உறுப்பு அமைப்பைத் தரும் நிலையில் இருக்கிறதோ, அதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றார். 

இப்படிச் செய்வதால், பிறவி நோயற்ற ஆரோக்கியமான குழந்தையை உருவாக்க முடிகிறதென்றும், இதன் மூலம் அவர்களுக்கு பின்னாளில் வரும் நோய்களும் பெருமளவு குறைகின்றன என்று அறிவியற்பூர்வமாக நிரூபிக்கப் பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். ஒரு மாதத்தில் குழந்தை கிடைத்துவிடும் என்றும், ஒரே நேரத்தில் இரண்டு பிள்ளைகளை உருவாக்கிக் கொள்ளலாம், அப்படிச் செய்தால் தனித்தனியாகச் செய்வதை விட விலை குறைவு என்ற ஆஃபர் இருப்பதாகவும் தெரிவித்தார். அது போக, சில பிரபலங்களின் ஜெனிடிக் மேப்பும் தங்களிடம் இருப்பதாகவும், அவர்களின் தோற்ற அமைப்பு போன்று வேண்டுமென்றால், ஒவ்வொரு பாகத்துக்கும் தனித் தனி செலவாகும் என்றார். இது அவர்களின் அனுமதியோடு செய்யப்படும் என்றும் உறுதிப்படுத்தினார்.  அவர்களைப் போன்று என்றால் அது எப்படி தங்களது குழந்தையாகும் என்று சட்டென்று ரிஜூஸ்க்குத் தோன்றியதால் உடனே மறுத்துவிட்டான். 

ரியாவுக்கு குழந்தையின் நிறம் இருவரையும் கலந்தது போன்று கோதுமை நிறத்தில் வேண்டும் என்று விருப்பம். கூந்தலமைப்பு தன்னைப் போன்றே சிறு சிறு சுருள்களாக இருக்கட்டும் என்றாள். ஆண் குழந்தைக்கு மூக்கு அவனைப் போன்றும், பெண்ணுக்கு அவளைப் போன்றும் என்று ஏற்கனவே முடிவு செய்திருந்தார்கள். இப்படியாக, கணினியில், கொஞ்சம் கொஞ்சமாக கண் உதடு தாடை கன்னம் என்று ஏற்றப்பட்டு, அவர்களது குழந்தைகளின் இருபது வயதுக்கான முகங்கள் முழுமை பெறத் துவங்கின. உயரம் இருவரையும் விடச் சற்று கூடுதலாக இருக்கட்டும் என்றார்கள். முழுவதும் உருவாகிய பின்னர், பார்வையிட்டு இன்னும் சில மாற்றங்கள் செய்த பின்னர், இருவருக்கும் திருப்தியாக இருந்தது. இறுதியாக, ரிஜூஸ், பெண் குழந்தைக்கு, உதட்டின் இடது ஓரத்தை ஒட்டிய கன்னத்து தோலில் சிறு மச்சம் வேண்டும் என்றான். 

**************

பெரும்பாலான கல்வி மற்றும் அலுவலக வேலைகள் இருந்த இடத்திலிருந்தே நடந்து கொண்டிருந்ததால், மக்கள் பயணிப்பது வெகுவாகக் குறைந்திருந்தது. அதனால் சாலைகளில் மிகக் குறைவான வாகனங்களே தென்பட்டன. தங்கள் வீட்டை விரைவாக அடைந்துவிட்டனர். உள்ளே நுழைந்ததும், ரியா, உறங்கப் போகிறேன் என்று சொல்லிவிட்டு தனது அறைக்குச் சென்றாள். ரிஜூஸ் தனது அறைக்குச் சென்று, கணினியைத் திறந்து, கோப்புகளின் ஏதோவொரு மூலையில் புதைந்து கிடந்த தனது முன்னாள் காதலியின் புகைப்படத்தைக் கண்டுபிடித்து பெரிதுபடுத்தினான். அவளது மச்சம் இடது பக்கமா இல்லை வலது பக்கமா என்று அவனுக்குச் சிறு குழப்பம் இருந்தது.. இடது பக்கம் தான், உறுதிப்படுத்திக் கொண்டான். 

***************

19 April 2011

சுயமரியாதை..முரளிக்கு அன்று மனம் ஒரு நிலையில் இல்லை. அவனது கல்லூரியைச் சேர்ந்த மாணவர் விடுதியின் ஆண்டு விழா அன்று இரவு நடைபெறுவதாக இருந்தது. போகலாம் என்றும், இல்லை நேர விரயமென்றும், அவனுக்குள் போராட்டங்கள் நிகழ்ந்த வண்ணம் இருந்தன. சரி கொஞ்சம் நேரம் போயிட்டு வந்துடலாம்.. இல்லாட்டி அதையே நினைச்சுக்கிட்டு நேரத்த வீணாக்குவோம் என்று தோன்றியதால் கிளம்பிச் செல்வதென்று முடிவு செய்தான்.

முரளியைப் பற்றி சில வரிகள். கே ஜி எஸ் இன்ஜினியரிங் கல்லூரியின் இறுதி ஆண்டு மாணவன். டே ஸ்காலர். விடுதியில் தங்கிப் படிக்கும் அவனது நண்பர்கள், அவனையும் இதர டே ஸ்காலர் பசங்களையும் விழாவுக்கு வந்து விசிலடித்து ஆட்டம் போட்டு சிறப்பிக்கச் செய்யுமாறு அழைத்திருந்தனர். இதற்கு முன்பு ஒரு முறை முதலாம் ஆண்டு படிக்கும்பொழுது போய் வந்திருக்கிறான். அடுத்த இரண்டு வருடங்கள் சில காரணங்களால் போக முடியவில்லை.. இந்த வருடம் போயாக வேண்டும் என்று அவன் நினைக்க ஒரே காரணம், சிம்ரன்.. அவனுக்கு மிகவும் பிடித்த சிம்ரன். ஆம், நடிகை சிம்ரனே தான். அவரைத்தான் சிறப்பு விருந்தினராக அந்த நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தனர். அவரும் தனது வருகையை உறுதி செய்திருந்தார். மிகக் குறைந்த நேரமே என்றாலும் அவர் ஒப்புக்கொண்டதே அவர்களுக்கு பெரிய சந்தோஷத்தைத் தந்தது. சிம்ரன் மேலே முரளிக்கு செம க்ரேஸ்.. நளினமான உருவம், அழகிய முகத்தோற்றம், வெட்டி வெட்டி ஆடும் நடனம், அப்பப்போ நடிப்பு என்று கலக்கிய அவரை நேரில் காணக் கிடைக்கும் வாய்ப்பைத் தவற விடுவது தவறு என்று முரளிக்குத் தோன்றியது. 

போக வேண்டாம் என்று அவன் நினைக்கவும் ஒரே ஒரு காரணம் இருந்தது. அன்று வெள்ளிக்கிழமை. வரும் திங்கட்கிழமையில் இருந்து அவனுக்கு செமஸ்டர் பரிட்சைகள் தொடங்கப் போகின்றன. ஹாஸ்டலில் இருக்கும் இறுதியாண்டு படிப்ஸ் மாணவர்களும், கொஞ்சம் நேரம் மட்டும் தலை காட்டிவிட்டு அறைக்கு படிக்கப் போய்விடலாம் என்ற எண்ணத்துடன் தான் இருந்தார்கள். மற்றவர்கள், அன்றிரவு நன்றாக என்ஜாய் செய்துவிட்டு அடுத்தடுத்த நாட்களில் பார்த்துக்கொள்ளலாம் என்ற "தெளிவான" முடிவில் இருந்தார்கள்.

போகலாம் என்று முடிவு செய்ததும் கார்த்திக்கை அலைபேசியில் அழைத்தான். கார்த்திக், முரளியின் வகுப்புத் தோழன் மற்றும் விடுதி மாணவன். இருவருக்கும் படிப்பு, விளையாட்டு, சினிமா என்று நிறைய விஷயங்களில் ஒத்த ரசனைகள் உண்டு. கார்த்திக்குக்கும் சிம்ரனைப் பிடிக்கும். அவன்தான் இந்த விஷயத்தை முதலில் முரளியிடம் பகிர்ந்தது. கொஞ்ச நேரம் வந்துட்டுப் போயிடுடா என்று வற்புறுத்திக் கொண்டிருந்தான். முரளிக்காக அன்றிரவு விருந்துக்கு முன்னமே சொல்லி வைத்திருந்தான். கார்த்திக்கிடம், அலைபேசியில், சிம்ரன் வருவதற்கு அரை மணி நேரம் முன்பாக தனக்கு தகவல் சொல்லும்படி சொல்லிவிட்டு, முரளி முகம் கழுவப் போனான்.

கார்த்திக் மறுபடியும் அழைத்தவுடன், அம்மாவிடம் அதிகபட்சம் இரண்டு மணி நேரத்தில் வந்துவிடுவேன் என்று சொல்லிவிட்டு, யமஹாவில் ஏறிப் பறந்தான். மனம் கூண்டில் இருந்து விடுபட்ட பறவையைப் போல குதூகலித்துக் கொண்டிருந்தது. இதெல்லாம் பரிட்சை முடிந்தபின் நடந்தால் ரொம்ப நன்றாக இருக்கும் என்று தோன்றியது. கொஞ்சம் சாலை நெரிசல் இருந்தாலும் அதிகம் தாமதிக்காமல் போய்ச் சேர முடிந்தது. வழக்கமாகவே விடுதி களேபரமாகத் தான் இருக்கும். அன்றிரவு கண்டபடிக்கு களை கட்டியிருந்தது. மாணவிகளையும் வருமாறு அழைத்திருந்தார்கள். அவர்கள் பேட்சில் இருந்து யாரும் வரக் காணோம். நிறைய ஜூனியர் மாணவிகள் தென்பட்டார்கள். 

மூன்று வருடங்களுக்கு முன்பு விழாவுக்கென்று இங்கு வந்திருந்த போது நடிகர் விக்ரமை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார்கள். கூட, இவர்கள் துறையைச் சேர்ந்த ஒரு நிறுவன மேலாளரையும். விக்ரம் பேசிமுடித்து விழாமேடையில் இருந்து இறங்கி முன்வரிசையில் அமர்ந்ததும் முரளியின் நண்பர்கள் அவரை நோக்கி முன்னேறிச் சென்றார்கள். முரளியும் அவர்களுடன் இணைந்துகொண்டான். அவரை அருகில் இருந்து பார்க்க வேண்டும் என்று தோன்றியது. இவர்களைக் கண்டதும் விக்ரம் புன்னகைத்தார். அவரிடம் ஆட்டோக்ராப் வாங்க வேண்டும் என்றெல்லாம் தோன்றவில்லை.  ஆனால் மற்றவர்கள் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொள்வதைப் பார்த்ததும், இவனுக்கும் அந்த ஆசை எழுந்தது. நண்பனுடைய கேமராவில் தன்னையும் எடுக்கச் சொல்லி, நினைவில் வைத்திருந்து, அவனிடம் கேட்டு வாங்கி ப்ரிண்டும் போட்டுக் கொண்டான். இன்றும் அந்தப் புகைப்படம் அவன் வீட்டு பீரோவில் ஏதோ ஓர் ஆல்பத்தின் பிளாஸ்டிக் கவருக்குள் சிறைபட்டு படுத்துக் கிடக்கிறது. புகைப்படம் எடுத்துவிட்டு வரும்போது கார்த்திக்கைத் தேடினால், அவன் அந்த நிறுவன மேலாளருடன் கை குலுக்கிக் கொண்டிருந்தான். அதைப் பார்த்ததும் ஏனோ முரளிக்கு கொஞ்சம் பொறாமையாக இருந்தது.

கார்த்திக் வரவேற்பு ஹாலில் காத்திருந்தான். அவனுடன் சென்று சாப்பிட்டு முடித்து, மறுபடியும் வரவேற்பு ஹாலுக்கு வந்தமர்ந்து பேசிக்கொண்டிருந்த வேளையில், சிம்ரன் வந்தே விட்டார்.. விடுதியின் நுழைவுவாயிலுக்கும் விடுதிக் கட்டிடத்துக்கும் இடையே இருந்த பெரிய விளையாட்டு மைதானத்தில் தான் மேடை அமைக்கப்பட்டு நாற்காலிகளும் போடப்பட்டிருந்தன.  மேடையை அடைவதற்காக இவர்கள் நின்றிருந்த பகுதியை சிம்ரன் கடந்து போகும் பொழுது, ஹாலின் உள்ளிருந்து ஜன்னல் வழியாக, நிமிடத்திற்கும் குறைவான பொழுதில், அவரை ஓரளவுக்கு கிட்டே பார்க்க முடிந்தது. கருப்பு நிறச் சேலை அணிந்திருந்தார். முகத்தை சரியாகப் பார்க்க முடியவில்லை. ஆனால், நேரில் பார்த்ததை விட திரைப்படத்தில் அழகாக இருந்தார் போன்று தோன்றியது.

கூட்டத்தில் நிறைய பேர் பரபரப்பாகி எழுந்து நின்று விட்டார்கள். சிலர் முண்டியடிக்கவும் ஆரம்பித்தனர். விசிலுக்கும் கூச்சலுக்கும் குறைவே இல்லை. முரளியும் கார்த்திக்கும் விடுதிக் கட்டிடத்தை விட்டு வெளியே வந்து, கூட்டத்தின் முடிவில், மேடைக்கு வெகு தூரத்தில் நின்று கொண்டார்கள். ஏனோ இந்த முறை அருகில் சென்று பார்க்க வேண்டும் என்று முரளிக்குத் தோன்றவில்லை. சிம்ரனைப் பேச அழைத்தார்கள். கொஞ்சம் நேரம் தமிங்கலத்தில் என்னவோ பேசினார். அடுத்த நிகழ்ச்சியாக, ஆண்டுவிழா கொண்டாட்டங்களையொட்டி நடத்தப்பட்ட விளையாட்டு மற்றும் பல்சுவை போட்டிகளில் வெற்றிபெற்றோருக்கு, சிம்ரனின் கையால் பரிசளிப்பு ஆரம்பித்தது. இறுதியில் கலைநிகழ்ச்சிகள் நடைபெறுவதாக ஏற்பாடு. 

கார்த்திக்கின் பெயரும் மேடையில் அழைக்கப்பட்டது.. அவன் முரளியைப் பார்த்தான். "ஏன்டா.. போயேன்.." என்றான் முரளி. கார்த்திக் சிரித்தான்.. "ஸ்கிட் லயோ இல்ல டான்ஸ்லயோ ஜெயிச்சிருந்தா கண்டிப்பா போயிருப்பேண்டா.. வாலிபால் டீம் கேப்டனா போகனும்ன்னு தோனல.. சிம்ரன சிம்ரனா இருக்க விடுவோம்டா.. ரசிக்கறதோட நிறுத்திப்போம்.. ஆராதிக்கவும்  வேணாம்.. அப்புறமா தூக்கி குப்பையில போடுறதும் வேணாம்.."   

முரளி ஆமோதிப்பாய் புன்னகைத்தான். "சரிடா, நேரமாச்சு.. கிளம்பறேன்.." என்றபடி கார்த்திக்கின் தோளை ஒருமுறை தட்டி, பற்றி இறுக்கித் தளர்த்தினான்.. "போய்ச் சேர்ந்ததும் போன் பண்ணுடா.."   என்றான் கார்த்திக். பைக்கில் ஏறி நுழைவுவாயிலில் இருந்து வெளியேறும் முன், முரளி ஒருமுறை தலையைத் திருப்பிப் பார்த்தான்.. சிம்ரன் மேடையில் இருந்து இறங்குவதற்கு முன்பே மேடைக்குக் கீழே கூட்டம் சூழ ஆரம்பித்திருந்தது. கார்த்திக் விடுதியை நோக்கி நடந்து கொண்டிருந்தான்..


***************************

இது சில உண்மைச் சம்பவங்களை வைத்து எழுதப்பட்டது.. சிம்ரன் என்றால் இன்றைய சிம்ரன் அல்ல, அவர் பீக் இல் இருந்த போது நடந்தது.. என் தோழியின் அண்ணன் இவ்வாறு ஒரு நடிகையின் கையால் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றதற்கான பாராட்டுச் சான்றிதழைப் பெற மறுத்துவிட்டார் என்று கேள்விப் பட்டிருக்கிறேன்..


13 April 2011

பொன்(ண்ணு) எழுத்து..

மாட்டி விட்ட அதிராவுக்கு ஒரு கர்ர்ர்ரர்ர்ர்ர்.. 

பெண் எழுத்துன்னா? பெண்கள் எழுதுவதா? இல்லை பெண்களை மையப்படுத்தி எழுதப்படுவதா என்று கொஞ்சம் குழப்பம்.. நான் இந்த இரண்டாவது வகை எழுத்துக்களை அதிகம் படித்ததில்லை.. அதனால அதைக் குறித்து என்ன சொல்லுவது என்று தெரியல.. ஆனால், ஒரு பெண்ணாக, பெண்கள் அன்றாட வாழ்வில் சந்திக்கும் பிரச்சனைகளைச் சார்ந்து எழுதப்படுவதை வாசிப்பது உண்டு.. அது போன்றவைகளுக்கு ஆதரவும் உண்டு.. (அதுக்காக, "பசங்க மட்டும் ஹெவியா புல்லட்டு ஓட்டுறாங்க.. எங்களுக்கு மட்டும் ஏன் லைட் வெயிட்டா ஸ்கூட்டின்னு தனியா விக்கிறீங்க?" அப்புடின்னெல்லாம் யாராவது கேட்டாங்கன்னா ஓட்டம் பிடிச்சிடுவேன்..)

சரி.. முதல் வகைன்னு எடுத்துகிட்டா, நானும் பெண் தானே.. அப்ப நான் எழுதுவதெல்லாம் "பெண்" எழுத்து ஆயிடுமா? நான் எழுதும் போது அநேக நேரங்களில் "நான் பெண்" என்ற உணர்வுடன் எழுதுவதில்லையே? அப்போ அது எப்படி பெண் எழுத்தாகும்? 

அப்புறம் இந்த வரைமுறைக்கு வருவோம்.. எழுத்து என்பது, பிறரைச் சிதைக்காத வகையில, பொய்யை உண்மைன்னு வேணும்னே திரிச்சுப் பேசாத வகையில (ஒரு விஷயத்தில் மாற்று கருத்து கொண்டிருப்பதெல்லாம் இதிலே வராது) - வரைமுறை என்பது இப்படி இருக்கனும்ன்னு நினைக்கிறேன்.. இதுல ஆண் என்ன பெண் என்ன?

இருவருக்கும் பொதுவான விஷயங்களை அலசும் போது, எழுதுபவர் அல்லது பேசுபவர்களிடையே ஆண் பெண் என்ற வேறுபாடு எதுக்குத் தேவை? இப்படியான விஷயங்களை பொதுப் பார்வையுடன் முன்னெடுத்து எழுதும் பெண்களை வரவேற்கிறேன்.. 

அப்புறம், இந்த காமம்.. பாலியல்.. இது குறித்தெல்லாம் அறிவுப்பூர்வமா அறிவியல்பூர்வமா உணர்வுப்பூர்வமா - பெண்கள் எழுதினால் வரவேற்கிறேன்..  இப்படியாக இல்லாம, வெறும் உணர்ச்சிகளைத் தூண்டி விடும் நோக்கத்துடன் எழுதப்படும் எழுத்துக்களை யார் எழுதினாலும் - நோ வரவேற்பு.. ஆனா இது போன்றவைகளைப் படிப்பதும் படிக்காததும் ஒவ்வொருத்தர் விருப்பம், அதுல நாம எதுவும் சொல்ல இயலாது.. 

வேறென்ன சொல்ல? 

04 April 2011

கிராமத்து ஓவியங்கள்..

ஆனந்தவிகடனின் கவிதைப்பக்கத்தில் இளையராஜா அவர்களின் ஓவியங்களைப் பார்த்திருக்கிறேன்.. பார்த்து விட்டு தாண்டிச் சென்றுவிடுவது உண்டு.. கொஞ்சம் நாள் முன்பு கதிர் அவர்களின் பக்கத்தில் இதைக் காண நேர்ந்தது.. புகைப்படமா இல்லை ஓவியமா என்று குழம்பும் அளவுக்கு நேர்த்தியாக இருந்தது.. இதற்கிடையில் அவரது கேலரியைப் பார்க்கும் வாய்ப்பு, பிலாசபி பிரபாகரன் 
அவர்களது பக்கத்தில் இருந்து கிடைத்தது.. எனக்குப் பிடித்தவை சில, அதிலிருந்து.. 

மேலே சொன்ன மாதிரி, புகைப்படமா இல்லை ஓவியமா என்று குழப்பும் இந்தப் படைப்பும் ஒரு உயிரோவியம்... பொண்ணு கருப்பா இருந்தாலும் களையா இருக்கு ம்பாங்களே.. அது இது தானோ?


அவரது ஓவியங்களில் இருக்கும் நேர்த்தியும் அந்த கிராமத்துப் பின்னணியும் ரொம்பவே ஈர்த்தன.. உதாரணத்துக்கு இதைப் பாருங்க.. இதிலே இந்தப் பெண் ஒரு விறகடுப்புல சமையல் செய்து கொண்டு இருக்கா.. இந்தத் தலைமுறைக்கு முன்னாடி நம்ம எல்லோர் வீட்டுலயும் விறகடுப்பு தான் சமையலுக்கு.. நம்ம தலைமுறைல கேஸ் வந்தாச்சு.. எங்க பாட்டி (அப்பாவோட அம்மா) இன்னும் இதிலயும் மற்றும் மண்ணெண்ணெய் ஸ்டவ் அடுப்புலயும் தான் சமைக்கறாங்க.. அடித்தட்டு மக்கள் வீட்டுல இந்த அடுப்பு தான் இன்னிக்கும் சோறு பொங்க வைக்குது.. 

அந்தப் பாத்திரத்தைப் பாருங்களேன்.. ஒன்னு சைடுல லேசா ஒடுங்கி இருக்குது.. இப்படியான அலுமினியப் பாத்திரங்கள் தான் பெரும்பாலும் சமையலுக்கு... வாங்கறப்ப வெள்ளை வெளேர்ன்னு இருக்கறது, நாளடைவுல கீழாப்ல தீ படும் பாகம் மட்டும் கருப்பாகிடும்.. அந்தப் பொண்ணு கையில ஒரு ஊதுகுழலும், மூச்சுத் திணற வைக்கும் புகையும், தணலும் சாம்பலும்,  கொழுந்துவிட்டு எரியும் நெருப்பும் மட்டுந்தான் மிஸ்ஸிங்..


அடுத்தடுத்த படங்கள பார்க்க ஆரம்பிச்சா இதுல மிஸ்ஸானது எல்லாமே இருக்கு :) சுவத்துல கரித்திட்டு படிஞ்சிருக்கு பாருங்க.. 


இதுல இந்தப் பொண்ணு என்னமோ நெரிச்சுகிட்டு இருக்கா..  பொது வழக்குல   உரல்ன்னு சொல்லுவது இதையத் தானே? ஊர்ல இதுக்கு வேற பேரு.. பக்கத்துல கருப்பா இருக்கறது அளக்குற படி.. அது போக சாணி முறம்.. பித்தளை அண்டா.. மட்டை உரிக்கப்படாத முழுத் தேங்கா.. கூடவே மேயும் கோழி.. 

அந்தச் சுவற்றைப் பாருங்க.. அதுல திட்டு திட்டா விட்டுப் போன பெய்ன்ட்.. என்னைக்கோ ஒரு விசேஷத்தப்பயோ இல்ல நல்ல மகசூல் தந்த ஒரு சாகுபடி அப்பவோ பூசப்பட்ட சுவராக இருக்கணும்.. அடுத்து இந்தப் பொண்ணு கல்யாணத்தப்ப தான் அதுக்கு மேல் பூச்சு பூசி கலரேத்துவாங்க.. 


பூ கட்டும் இந்தப் பொண்ணு.. அதோட பாவாடையைப் பாருங்க.. சின்னப் புள்ளைகளுக்கு பாவாட தைக்கும் போது மடிப்பு வச்சுத் தச்சுப்பாங்க.. வளர வளர பிரிச்சு விட்டுக்கலாம்ன்னு .. அதையக் கூட விட்டுவைக்கல இந்த மனுஷன்.. ஒருவேளை புகைப்படமா எடுத்து அதுல முகத்த மட்டும் வரைஞ்சிருப்பாரோ??


ஒரு குறை என்னன்னா இதில எல்லாப் பெண்களுமே பட்டுடை உடுத்தி இருக்காங்க.. அது கொஞ்சம் உறுத்துது.. வீட்டுல இருக்கிற மாதிரி சாதாரண உடையில இருந்திருந்தா இன்னும் பொருத்தமா இருந்திருக்கும்..

கேலரிக்கான வழி.. 

*********************************************

எனக்கு திடீர்ன்னு பூ படத்துல வர்ற சூ சூ மாரி கேட்கணும் போல இருந்ததுன்னு யூ ட்யூப் ல கேட்டுகிட்டு இருந்தேன்.. அப்போ அதுக்கு கீழ இந்தப் பாட்டும் இருந்தது.. கேள்விப்பட்ட மாதிரி இருக்கேன்னு நினைச்சுப் போட்டேன்.. ரொம்ப பிடிச்சுப் போச்சு.. அருமையான கிராமிய வாடை.. 

இந்தப் புள்ளைகளப் பாருங்க.. என்னா ஆட்டம் என்னா ஆட்டம்.. கேரளால எதோ கல்லூரி போல... ஒரு கட்டத்துல இதுகளோட ஆட்டம் தாங்க முடியாம பாடறவங்க கீழ குதிச்சு வந்துருவாங்க :) நாம காலேசு படிக்கும் போது இந்தப் பாட்டு வராம போயிடுச்சேன்னு கொஞ்சமா ஏங்க வச்சிடுச்சு.. 

இதோட ஒரிஜினல் பாட்டை யூ ட்யூப் ல ரொம்ப நேரம் தேடி கிடைக்கவே இல்ல.. சரின்னு நம்ம தமிழ்ப்பதிவுலகத்துல தேடினப்போ தான் தெரிஞ்சது, இந்தப் படம் வெளி வரவே இல்லைன்னு.. பாதி தயாரிக்கப்பட்டு முடியாம கிடப்புல போட்டாச்சு.. படம் பேரு "இரண்டு பேர்".. ராம்கி, குஷ்பூ, சங்கவி நடிச்சதாம்.. இசை, சுனில் வர்மா (?சர்மா) ன்னு புது ஆளு.. பாடியது ஆபாவாணன் (இணைந்த கைகள், ஊமை விழிகள் படமெல்லாம் நினைவுல இருக்கா?, அதோட தயாரிப்பாளராம்.. இந்தப் படத்துக்கும் அவரே தயாரிப்பாளர்.. ) மற்றும் இசையமைப்பாளர்ன்னு போட்டிருந்தது..  மேலும், ஊமைவிழிகள் இசையமைப்பாளர்கள் மனோஜ்-க்யான் ல க்யானோட பையன் தான் இந்த சுனில் வர்மா (?சர்மா) ன்னு ஒரு உபரித் தகவல் வேற.. இது குட்டீஸ் வெர்சன்..  மடகாஸ்கர் எஸ்கேப் டூ ஆப்ரிகா படத்துல வர்ற பாட்டைப் போட்டு ரீ மிக்ஸ் பண்ணிவிட்டுட்டாங்க..