27 June 2010

சரண் வந்திருக்கேன்..

எப்பிடி எங்கயிருந்து ஆரம்பிக்க எங்கதைய? சரி, முந்தானேத்திலேர்ந்து ஆரம்பிக்கலாம்..

என்னப் பத்தி தெரியாதவங்க இங்க போய் படிச்சுக்கோங்க....எனக்கு அன்னிக்கு என்னமோ ஆகிப் போச்சு.. எப்பவும் நாந்தான் எல்லார்க்கும் முன்னாடி எழுவன்.. அம்மா எனக்குச் செல்லமா அவளோட ”குட்டி அலாரம்” ன்னு பேரு வச்சிருக்கா.. கொஞ்சம் நேரம் கால் கைய உதறிப்போட்டு, அப்பிடியே புரண்டு, அம்மாகிட்ட வந்து, அவ கைய என் குட்டிக் கையால உலுக்கி எழுப்பிவிடுவன்.. அம்மா தூக்கத்துல தட்டி விடுவா.. அப்புறம், அவ முடியப் பிடிச்சு இழுத்து, மூக்கப் பிடிச்சுக் கிள்ளி.. இப்பிடி எதையாவது பண்ணி அவள எழுப்பிவிட்டுட்டுத் தான் மறுவேல எனக்கு..

அம்மா எழுந்து, என்னத் தூக்கிப் போய், என்னோட பற்குருத்துகள அவ விரலால தேச்சிவிட்டு, பால் காச்சி, ஹார்லிக்ஸ் கலக்கித் தருவா.. அதுக்கப்புறம், அப்பாவ எழுப்பி அவர் கிளம்பிப் போற வரைக்கும் என்னக் கண்டுக்க மாட்டா.. நானும், இதான் நேரம்ன்னு ஏதாவது பொம்மையத் தேடி கிளம்பிடுவன்.. பொம்ம அலுத்துடுச்சுன்னா பேப்பர்.. எனக்கு எட்டக் கூடாதுன்னே பேப்பர் வகையறா எல்லாத்தையும் மேசை மேல வச்சிருப்பாங்க.. ஆனா நான் துறுதுறுன்னு அங்கயும் இங்கயும் தத்தி, தேடி, எது மேலயாவது ஏறி, கையில எடுத்துடுவன்.. பொம்மைய உடைக்கறது எவ்வளவு பிடிக்குமோ அந்தளவுக்கு பேப்பர் பிய்க்கறதும் பிடிக்கும்.. எவ்வளவு அழகா பிய்ப்பன் தெரியுமா? என்னாலயும் பிய்க்க முடியற அளவுக்கு மெலிசா பேப்பர் பண்றவங்களுக்கு பெரிய நன்றி..

சரி, அன்னிக்கு என்னமோ தான் ஆகிப்போச்சு.. கண் முழிக்கப் பிடிக்கல.. கை கால் அசைக்கவும் பிடிக்கல.. ரொம்பச் சலுப்பாயிருந்தது.. அம்மா எப்பிடியோ எழுந்து அப்பாவக் கெளப்பி விட்டுட்டா.. ஆனா, என்னால மட்டும் எழவே முடியல.. அப்பா போனப்புறம், எங்கிட்ட வந்து என்ன தொட்டுப் பாத்தா.. நெத்தில, கழுத்துல, வயித்துல... இப்பிடிச் சுடுதே ன்னு பதறிப்போனா.. நான் எப்படிச் சூடானேன்னு எனக்குப் புரியல.. மூச்சு வேற வேக வேகமா விட்டுகிட்டு இருந்தன்.. மூச்சு விடறப்ப சத்தம் வேற வந்துட்டு இருந்தது..  உடனே பாட்டிக்கு போன் பண்ணிக் கேட்டா.. அவங்க என்ன சொன்னாங்கன்னு தெரியல.. அப்புறம் அப்பாக்கு போன் பண்ணினா.. அப்புறம் எங்கயோ போன் பண்ணினா.. நடுநடுவுல எங்கிட்ட வந்து எழுப்பிப் பாத்தா.. நல்லாவே பதறிப் போயிருந்தா.. கொஞ்ச நேரத்துல என்ன தூக்கி வண்டில போட்டு, கூட்டிட்டுப் போயிட்டா..

வழியில போகும் போது கொஞ்சம் தெம்பானன்.. கண் முழிச்சுப் பாத்தன். ஏதோ ஒரு இடத்துல வண்டிய நிறுத்திட்டு, அம்மா என்னய தூக்கிட்டுப் போனா.. அந்த இடம்.. முன்ன எப்பவோ வந்து போன மாதிரி இருந்தது... பெர்ர்ர்ர்ர்ர்ர்ரிய வீடு மாதிரி இருந்தது.. நிறைய சேர், சோஃபா போட்டிருந்தாங்க.. எங்களுக்கு விளையாட நிறைய பொம்மைங்க வச்சிருந்தாங்க.. டீவில எனக்குப் பிடிச்ச தாமஸ் த டேங்க் எஞ்சின் படம் ஓடிட்டு இருந்தது.. (அத்தைக்கு ஒரு நா தாமஸக் காமிச்சன்.. அவளுக்கு அது கூடத் தெரீல.. நாந்தான் சொல்லிக்கொடுத்தன்.. அத்த மாதிரி மக்குங்களுக்காக மேல படம் போட்டிருக்கன்..)

உள்ளார என்ன மாதிரி கொஞ்சம் பேர், அம்மா மாதிரி கொஞ்சம் பேர், அப்பா மாதிரி கொஞ்சம் பேர் உட்காந்திருந்தாங்க.. என்ன மாதிரி இருந்தவங்க எல்லாரும் அழுதுட்டு கத்திட்டு இருந்தாங்க.. ஒன்னுரெண்டு பேர் உள்ளயே வரமாட்டேன்னு கத்த, அவங்க அப்பா அம்மா அவங்கள பிடிச்சு இழுத்தாந்தாங்க.. எனக்கு அப்பவே சந்தேகமாயிருந்துச்சு.. கொஞ்சம் நேரம் எல்லாரையும் பாத்துக்கிட்டு இருந்ததுல, ஞாபகம் வந்தே வந்துடுச்சு.. எனக்கும் ஓ ன்னு கத்தனும் போல இருந்தது.. ஆனா முடீல்ல்ல்ல.. அங்கயிருக்கற எல்லாருமே பேட் பாய்ஸ்.. பேட் கேர்ள்ஸ்..

நானும் அங்க போயிருக்கேன்.. இதுக்கு முன்னாடியே, மூணு தடவ.. முத தடவ என்னால எதயுமே பாக்க முடியாத சமயம்.. அப்பல்லாம் எப்பவுமே இருட்டு தான் எனக்கு.. ரொம்பச் சின்ன இடம்.. சுத்தி தண்ணி.. தண்ணிக்குள்ளாற கை கால் வீசிப் போட்டு விளையாடிட்டு இருப்பன்.. அப்பா அம்மா பேசறதெல்லாம் நல்லா ஒட்டுக் கேப்பன்.. அப்பத் தான் ஒரு நா, அம்மா அப்பா ரெண்டு பேரும் அங்க போனாங்க.. என்ன போட்டோ பிடிக்கப் போறதா பேசிட்டு இருந்தாங்க.. யாரோ ஒருத்தர், என்னோட இதயத்த போட்டோ பிடிச்சுக் காமிக்க, ரெண்டு பேரும் ரொம்ப சந்தோஷப் பட்டாங்க.. அப்புறம், என்னோட கண்ணு, மூக்கு, காது, என்னோட வயிறு, கை, காலுன்னு.. ச்ச.. என்னோட அனுமதியில்லாம என்ன முழுசா போட்டோ பிடிச்சிட்டாங்க.. எனக்கு ஒரே கோவம்.. நிறைய உத விட்டன்.. ஆனா எதுமே எடுத்தவங்க மேல விழவே இல்ல.. ஹூம்.. அப்புறம், நான் முதல்ல வெளிச்சத்தப் பாத்தது அந்த இடத்துல தான்.. அங்க வச்சுத் தான் அம்மா, அப்பா, பாட்டி எல்லாரையும் முதல்ல பாத்தன்.. எல்லாம் புதுசா வித்தியாசமாயிருக்கேன்னு நான் யோசிச்சுட்டு இருக்க,  யாரோ பலமாக் கிள்ளி, அழ வச்சுட்டாங்க.. அதுக்கடுத்த வாட்டி அங்க போயிருந்தப்பவும் என்ன அழ வச்சிருந்தாங்க..

இதயெல்லாம் நினைச்சுகிட்டே, அங்கயிருந்த குழந்தைகள வேடிக்க பாத்துகிட்டு இருந்தன்.. கொஞ்ச நேரங் கழிச்சு, அம்மா ஒரு ரூமுக்குள்ள என்ன தூக்கிட்டுப் போனா.. அதே ரூம்... அதே வாசன.. அதே கண்ணாடி போட்ட மாமா, அதே அக்கா.. எனக்கு இவங்க என்ன பண்ணுவாங்கன்னு நல்லாவே தெரியும்.. அம்மா என்னப் பத்தி கொஞ்சம் சொன்னா.. அந்த மாமா ட்யூப் மாதிரி பொம்மைய வச்சு என்னத் தொட்டுப் பாத்தாங்க.. அந்த அக்காவோட வேல, அந்த நேரத்துல எனக்கு எதாவது பொம்மையக் காமிச்சு போக்கு காட்டறது, என்ன அழ விடாம பாத்துக்கறது.. யார்கிட்ட??.. எனக்கு எப்ப அழனும்ன்னு நல்லாவே தெரியும்.. அதனால பேசாம அவங்க பண்ணுன குரங்கு சேஷ்டயெல்லாம் பாத்து கஷ்டகாலமேன்னு சிரிச்சிட்டு இருந்தன்.. அப்புறம் மாமா வாய்க்குள்ள வெளிச்சம் அடிச்சுப் பாத்தாங்க..  என்ன ஒரு மெத்த மேல படுக்க வச்சு,  வயித்த அமுக்கிப் பாத்தாங்க.. எனக்குத் தான் தெரியுமே.. அப்பவும் நல்ல பையனாவே இருந்தன்..

அப்புறமா எல்லாரும் ரொம்ப ரகசியமா என்னமோ பேசுனாங்க..  அம்மா என்ன மடியில உக்கார வச்சு அமுக்கி பிடிச்சுகிட்டா.. மாமா எங்கையப் பிடிச்சாங்க.. அக்கா இன்னொரு பொம்மைய எடுத்து வந்து இன்னொரு கைல கொடுத்தா.. எம்முகத்த அவ பக்கம் திருப்புனா. நான் நல்லா உஷாராயிட்டன்..  அதான் நேரம்..

அக்கா கொடுத்த பொம்மைய தூக்கி வீசுனன்.. ஹூம்.. அது உடையவே இல்ல.. பொம்மையத் தான் உடைக்க முடியல.. மாமா மூக்கையாச்சும் உடச்சிடலாம்ன்னு, ஓஓஓஒஓங்கி ஒரு உத விட்டன்.. ஹூம்.. மறுபடியும் ஒன்னுமே ஆகல.. உன்ன மாதிரி எத்தன பேர பாத்திருப்பன்ற மாதிரி நக்கலா சிரிச்சாங்க.. எனக்கு சோகத்துல அழுகையே வந்துடுச்சு..  எங்கைய இறுக்கிப் பிடிச்சாங்க.. வீச்சுன்னு கத்துனன்.. கையக் கால உதறுனன்.. ஹூம்.. எதுவுமே பலிக்கல...

அப்புறமா அம்மா மறுபடியும் என்ன எடுத்துகிட்டா.. இருக்கட்டும்.. இன்னொரு வாட்டி அங்க போகாமலா போயிடுவன்? நல்லா பலசாலியாகி, மாமா மூக்கு, பொம்ம ரெண்டையுமே ஒரே நேரத்துல உடைக்கனும்... இப்போதைக்கு இதான் என் ஆச..

சரி, பசிக்குது.. அம்மா சாப்பாடு ஊட்டி விட வந்துட்டிருக்கா.. மீதிக் கத அப்புறமா பேசலாம்..

26 June 2010

குறும்பு பண்றதுன்னா கரும்பு தின்ற மாதிரி...

நாந்தான் சரண்.. அத்த என்னப் பத்தி முன்னாடி சொல்லியிருக்கறதாச் சொன்னா.. அவ சரியாத் தான் சொல்லியிருக்காளான்னு சந்தேகமா இருக்கறதால நானே என்னப் பத்திச் கொஞ்சமா சொல்லிக்கறன்..

பால் - இப்போதைக்கு பையன் பால், இன்னும் பல வருஷங்கழிச்சு ஆண் பால்…

வயசு – தத்தித் தத்தி நடக்கறதத் தாண்டி, கொஞ்சமா ஓடவும் பழகியிருக்கும் வயசு.. நாலஞ்சு வார்த்த தெரியும், ஆனா முழுசா பேச வராது.. மொத ரெண்டு எழுத்த மட்டுந்தான் சொல்லுவன்.. அதையும் எனக்குப் பிடிச்ச மாதிரி மாத்தித்தான் சொல்லுவன்.. நீங்களா யோசிச்சுப் புரிஞ்சுக்கனும்.. எங்க, என் வயசு எவ்வளவுயிருக்கும்ன்னு சொல்லுங்க பாக்கலாம்?

வேலை – உங்களாலெல்லாம் என்னோட வேலையப் பாக்க முடியாது.. துக்கமேயில்லாம தூங்கறது, துள்ளி விளையாடறது, காக்கா குருவிய கை காட்டி வேடிக்க பாத்து அதுங்களோட பேசறது, நினைச்சவுடனே இருக்கற இடத்துலயே உச்சா போறது.. இப்பச் சொல்லுங்க.. உங்களால முடியுமா?
 
பொழுதுபோக்கு – பொம்மைகள உடைக்கறது.. இதுவரை கெடச்ச வெற்றிகள் - ரெண்டு மடிக்கணினி, ஒரு ப்ளாக் பெர்ரி, கொஞ்சம் (நம்புங்க, கொஞ்சமே கொஞ்சந்தான்) பீங்கான் தட்டு-டம்ளர் வகையறா, ஒன்னு ரெண்டு அலமாரிக் கதவு.. யாரது, இதெல்லாம் பொம்மைகள் வரிசைல வராதுன்னு முணுமுணுக்கறது? எங்கண்ணுக்கு, எம்மனசுக்கு, எல்லாமே பொம்மைங்க தான்.. உடைக்கனும்ன்னு தோனுச்சுன்னா உடைச்சிடுவேன்.. உண்மை என்னன்னா, என் அம்மா இவன் எதையும் உடைச்சிடக் கூடாதுன்னே பாத்துப் பாத்து நல்ல கனமான பொம்மைகளா வாங்கித் தந்திருக்கறா.. ஆனா, இதையெல்லாம் உடைச்சாத்தான புது பொம்மை கிடைக்கும்?.. ஹூம்.. அம்மாக்கு இதெல்லாம் தெரியாதா என்ன? எவ்வளவு தான் தூக்கிப் போட்டாலும், தரையில போட்டுத் தட்டினாலும், என்னால உடைக்க முடியலை.. அந்தக் கடுப்பில தான், இப்பிடி மத்த ஏனை எளியோர்கிட்ட என் வீரத்தைக் காட்டிக்கிட்டு இருக்கறன்... 

சாதனை – விளையாட்டுப் பள்ளிக்கூடத்துல ஒரு மணி நேரம் விளையாடினது (அதுக்கப்புறம் வச்சு சமாளிக்க முடியலைன்னு வீட்டுக்கு அனுப்பி வச்சுட்டாங்க.. அந்தக் கதைய முடிஞ்சா அப்புறமாச் சொல்றன்).


சோகம் - எனக்குன்னு கொஞ்சம் பதிவுலக நண்பர்கள் இருக்கறாங்க.. பரண், அரண், தீபுக்குட்டி... ஆனா யாரும் பக்கத்துல இல்ல.. :( இந்த வயசுலயே பதிவுலகமா இவனுக்குன்னு யாராச்சும் நினைச்சீங்கன்னா, உங்களுக்கும் எனக்கும் பெரிய தலைமுறை இடைவெளி விழுந்திடுச்சின்னு அர்த்தம்.. அதாவது, நீங்க எனக்கு கொள்ளுப்பாட்டன்/பாட்டியா முறை வேனும்.. ஓக்கை? பரணோட அத்த அடிக்கடி அவங்க நண்பர்களையெல்லாம் ஒன்னாச் சேத்தி வச்சு பேச விளையாட விடுவாங்க.. எங்களுக்கும் அப்பிடியொரு ”ஒன்று சேர்தல்” வைக்கச் சொல்லி பரண் கிட்டச் சொல்லி விடனும்.. 


சரி சரி.. என் சுய புராணத்தை, இன்னிக்கு இத்தோட முடிச்சுக்கறேன்.. தூக்கம் வர்றா மாதிரி இருக்குது.. ஹாஆஆஆஆஆவ்… ஆருக்காச்சும் சந்தேகமிருந்தா அத்தகிட்ட சொல்லிவையுங்க.. அப்புறமா கேட்டுக்கறேன்..