Showing posts with label மருத்துவம். Show all posts
Showing posts with label மருத்துவம். Show all posts

29 January 2012

அனைவரும் நலமா?

வணக்கம் மக்கள்ஸ். கன காலத்துக்குப் பின்ன இங்க ஒரு இடுகை :)

நேசம் என்ற தலைப்புல புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக சிறுகதை கட்டுரை மற்றும் குறும்படப் போட்டிகளை அறிவிச்சிருக்காங்க.. ஏற்கனவே இது குறித்து வந்த அறிவிப்புகளைப் பார்த்திருப்பீங்க.. நடுவில வந்த பொங்கல் விடுமுறை காரணமா இறுதி நாளை பிப்ரவரி 10 வரைக்கும் நீட்டித்து இருக்காங்க..

உங்களுக்கே தெரியும், மாறி வரும் சுற்றுப்புறச் சூழல்களாலும் தனிமனிதப் பழக்க வழக்கங்களாலும் மரபணுக் குறைபாடுகளாலும் புற்றுநோய்கள் அதிகரித்துக் கொண்டு வருகின்றன என்று.. நோய், உங்களுக்குத் தெரிந்தவர்களை முற்றிய நிலையில் தாக்கியிருப்பதை அறிந்த போது உங்களுக்குத் தோன்றியிருக்கலாம், அல்லது அவர்கள் வருந்தியிருக்கலாம், முன்னமே தெரிய வந்திருந்தா ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை அளித்து  இருக்கலாமேன்னு.. இதற்கென இருக்கும் வழிமுறைகளை அறிந்து கொள்வது  அதை மற்றவர்களுக்கு அறியத் தருவது - இது தான் இப்போட்டியினுடைய நோக்கம்..

விஷச் செடியை அடையாளங் கண்டு முளையிலேயே கிள்ளி எறிவோம் - புற்றுநோய்க்கான ஸ்க்ரீனிங் குறித்த தகவல்களை, பொதுமக்களுக்கு, அதிலும் குறிப்பா இதைப் பற்றி அவ்வளவாக அறிந்திராதவர்களுக்கு - பரவலாகக் கொண்டு போய்ச் சேர்க்கணும் என்ற அடிப்படையில.. உங்க படைப்புகளை உருவாக்கி அனுப்புங்க..

இப்படியான ஒரு படைப்பை எழுத இது குறித்த தகவல்களைச் சேகரிப்பீங்க என்பதால் உங்களுக்கும் இதைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள அருமையான வாய்ப்பு.. ப்ளாக்கில் உங்க படைப்பைப் போடும் போது, பின்தொடருபவர்கள் படிச்சுத் தெரிஞ்சுப்பாங்க.. திரட்டில இணைக்கும் போது இன்னும் ரீச் ஆகும்.. மேலும் உங்க நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் எடுத்துச் சொல்லுவீங்க..

பரிசுகளும் உண்டு.. மேலும் தகவல்களுக்கு இங்க எட்டிப் பாருங்க.. இந்தச் சுட்டியை உங்க ப்ளாக்லயும் வெளியிட்டு உதவுங்க.. 

http://nesampeople.blogspot.com/2012/01/blog-post.html 


ஆச்சு.. இன்னும் பன்னெண்டு நாள் தான் இருக்கு.. சீக்கிரமா ஆரம்பிங்க.. ஆரம்பிச்சவங்க நிறைவா முடிச்சு அனுப்பி வைங்க.. இந்த நல்ல நோக்கத்தில் உங்களுடைய பங்களிப்பையும் செலுத்தி இணைந்து கொள்ளுங்க..


நன்றி.. 

16 February 2011

விழிப்புணர்வுக்காக..

இன்று நடந்த ஒரு சம்பவம்..

அலுவலகத்தில், எங்கள் வேலைகளை முடித்த பின், ஒரு மேற்பார்வையாளரிடம் காண்பித்து, அவர் சொல்லும் திருத்தங்களைச் செய்து முடித்த பின், கையெழுத்திட்டு, நிறைவு செய்வோம்.. 

இன்றும் அப்படித் தான் ராபர்ட் (வழக்கம் போல பெயர் மாற்றித் தான் சொல்லியிருக்கிறேன்) வந்திருந்தார் - மேற்பார்வை செய்ய.. எப்பவும் கொஞ்சம் வேலை பற்றிய பேச்சு கொஞ்சம் வெட்டிப் பேச்சு என்று கழியும் இந்த நேரம், இன்று ஏனோ ஒருவரும் பேசாமலே கழிந்து கொண்டிருந்தது..

இங்கு இடைச் செருகலாக, நேற்று நடந்த ஒரு குட்டி கலாட்டாவை சொல்லிவிடுகிறேன் - இந்த டீ காப்பி நிலையம் பற்றிச் சொல்லியிருக்கிறேன் இல்லையா.. அந்தப் பொருட்களைப் பூட்டி வைத்திருக்கும் கப் போர்டின் சாவி நேற்று தொலைந்து போய், எல்லோரும் தேடிக் கொண்டிருந்தனர்.. இறுதியாக, ராபர்டின் பான்ட் பாக்கெட்டில் இருந்ததைப் பார்த்துவிட்டு, இன்று காலையில் திருப்பித் தந்தார்.. இதை வைத்து அவரை ஓட்டுவதற்காக, என் சக அலுவலர் சாதியா எங்க மேசைக்கு வந்தார்.. உங்களால் நேற்று நான் டீ குடிக்கமுடியவில்லை, அதனால் எனக்கு தலைவலி வந்து சரியாக சாப்பிடவும் இல்ல.. அதனால, நீங்கதான் எங்களுக்கு இன்னைக்கு மதியச் சாப்பாடு வாங்கித் தரனும் என்று ஓட்டிக் கொண்டிருந்தார்.. இதற்கும் ராபர்ட் ஒன்றும் பதில் பேசவில்லை.. சிரித்துவிட்டு வேலையை சரிபார்க்கத் துவங்கினார்.. சாதியாவும் நகர்ந்து சென்றார்..

நானும் பார்க்கிறேன் - ராபர்ட் மவுசை ஸ்க்ரோல் செய்து கொண்டே இருக்கிறார்.. ஒருப்படியாக ஒரு குறிப்பும் சொல்லக் காணோம்.. எப்பவும் ஐந்து நிமிடத்தில் முடியக் கூடிய ஒரு வேலை, இருபது இருபத்தைந்து நிமிடங்கள் கடந்தும் ஒன்றும் ஆகக் காணோம்.. இது போன்று இன்னும் ஏழெட்டு சரிபார்த்தல்கள் மிஞ்சி இருந்தன.. இவ்வளவு நேரம் எடுக்கிறாரே என்று எனக்கு சலுப்பாக இருந்தது.. அப்படியே பக்கத்தில் இன்னொரு கணினியைத் திறந்து, மெயில்களைக் குப்பையில் தூக்கிக் கடாசும் வேலையைச் செய்து கொண்டிருந்தேன்.. 

திடீரென்று, இந்த இடம் சூடாக இருப்பது போல இருக்கு என்றார்.. எங்களுக்கு அவ்வளவாக வெப்பம் தெரியவில்லை.. பார்த்தால், அவரது நெற்றி வியர்த்திருப்பது போன்று இருந்தது.. 

இன்னும் முதல் வேலையே முடிக்கவில்லை.. மவுசை உருட்டிக்கொண்டே இருந்தவரிடம், எனக்கு இருந்த சில சந்தேகங்களைக் கேட்டேன்.. ஒரு நிமிடம் மாதிரி நான் பேசி முடித்து அவர் முகத்தைப் பார்த்தால், எந்த ரியாக்ஷனும் இல்லை.. கடுப்பாக இருந்தது.. "இப்போ நான் சொன்னதைப் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க?" என்று தெளிவாக அவரிடம் கேட்டேன்.. திரும்பி, "வாட்?" என்றார்.. மீண்டும் நான் விளக்கினேன்.. மறுபடியும், "வாட்?" தான் பதிலாகக் கிடைத்தது!

"உங்க உடம்புக்கு ஏதும் சரியில்லையா? Are you okay?" என்று கொஞ்சம் பயந்தபடியே கேட்டேன்.. திரும்பி என்னை முப்பது நொடிகள் முறைப்பது மாதிரி பார்த்தார்.. பிறகு மீண்டும் மவுஸ் உருட்டல்.. எனக்குப் பொறுமையே போய் விட்டது..  "உங்களுக்கு வேர்த்திருக்கிறது.." என்று சொன்னேன்.. மீண்டும் திரும்பி முறைத்துவிட்டு, "யா.. யா.. I am fine.." என்று சொல்லிவிட்டு, தொடர் மவுஸ் உருட்டல்.. 

என்னமோ சரியில்லை.. எனக்கு விளங்கினார் போல இருந்தது.. நானே அவசரமாக அந்த வேலையை மூடிவிட்டு, அடுத்த பக்கத்தைத் திறந்தேன்.. அதுக்கும் இப்படியே தெளிவில்லாமல் உருட்டல்.. அதையும் நானே மூடிவிட்டு அவரை ஏறிட்டேன்.. அவருக்கு தான் குழப்பத்தில் இருக்கிறோம் என்பதே புரியவில்லை.. அதனால் அதை ஒப்புக்கொள்ளவும் முடியவில்லை..  "லஞ்ச் சாப்பிட்டுவிட்டுத் தொடரலாம்" என்று சொல்லி அவரை எழுப்பிவிட்டேன்.. திடமாக எழுந்து நடந்து போனார்.. அவர் போவதைப் பார்த்துக்கொண்டிருந்த நான் உடனே இன்னொரு ஆசிரியரிடம் சென்று நடந்ததைச் சொன்னேன்.. நான் நினைத்ததே தான்.. அவர், தலைவரிடம் போய்ச் சொல்லு என்றார்.. எனக்குத் தயக்கம் - மாட்டி விடுவது போன்று ஆகிவிடக் கூடாதில்லையா? அதற்குள் இன்னொருவர், "ராபர்டின் நலனுக்காகத் தான் சொல்கிறோம், உனக்குத் தயக்கமாக இருந்தால், நான் போய் சொல்கிறேன்" என்றார்.. 

நான் அதற்குள் கீழே சென்று ராபர்டைத் தேடினேன்.. சாப்பிடச் சென்று விட்டார்.. இடையில் சந்தித்த சாதியாவும், ராபர்ட் தன்னிடம் சரியாகப் பேசவில்லை என்றார்.. நான் நிலைமையை விளக்கிவிட்டு என் வேலையை கவனிக்கச் சென்றேன்..

லஞ்ச் நேரம் முடிந்து, ராபர்ட்டுக்கு போன் செய்தேன்.. கீழே இறங்கி வந்தார்.. தெளிவாகப் பேசினார் - எப்போதும் போல.. அதே பழைய ஆளாக மாறியிருந்தார்.. நீ கிளம்பு, நான் மீதியைக் கவனித்துக் கொள்கிறேன் என்று சொன்னார்..

உங்களுக்கு என்ன காரணமென்று புரிந்ததா? 

ராபர்ட்க்கு சர்க்கரை நோய்.. இள வயதிலேயே வந்துவிட்டது.. அதற்கான மருத்துவம் எடுத்துக் கொண்டிருக்கிறார்..  அதன் விளைவு தான் இது - மருந்தினால் ரத்தத்தில் குளுகோஸ் அளவு மிகவும் இறங்கிப் போனதால், யோசிக்கும் திறனில் வந்த குழப்பம்.. Hypoglycemia (மேலும் தகவல்களுக்கு லிங்க் கொடுத்திருக்கிறேன்) பொதுவாக, இப்படிப்பட்டவர்கள் மயங்கி கீழே விழுந்து விடுவார்கள்.. அவர்களைக் கண்டவர்கள் மருத்துவமனைக்கு கூட்டிச் சென்று ட்ரீட் செய்வார்கள்.. இல்லை, அவர்களே  தங்களுக்கு இப்படி இருக்கிறது என்று உணர்ந்து உடனே சர்க்கரை மாத்திரை (நோய்க்கான மாத்திரை அல்ல, சர்க்கரையே தான்) அல்லது ஜூஸ் எடுத்துக் கொள்ளுவார்கள்.. சர்க்கரை நோய்க்கான மருந்து உட்கொள்ளும் எனது பாட்டி கூட அடிக்கடி தலை கிறுகிறுப்பதாகச் சொல்லுவார்.. ஆனால் என்னுடன் வேலை செய்பவர் நான் பார்த்து கொண்டிருக்கக் கொண்டிருக்க இப்படியானது எனக்கும் திகைப்பு தான்.. 

உங்களுக்குத் தெரிந்தவரும் யாரேனும் இருக்கலாம், சர்க்கரை நோய்க்கான மருந்துகளை எடுத்துக் கொண்டு - ஒரு விழிப்புணர்வுக்காகவே இதைப் பகிர்ந்திருக்கிறேன்.. ராபர்டுக்காக அறையில் சர்க்கரை மாத்திரைகள் வாங்கி வைத்திருக்கிறார்கள் என்று இது முடிந்ததும் தான் தெரிந்து கொண்டேன்.. அவர் திடமாக இருந்ததால் மட்டுமே அவரை சாப்பிட அனுப்பி வைத்தேன்.. இல்லையென்றால், அவரை அங்கேயே இருத்திவிட்டு, உடனே  மற்றவர்களை உதவிக்கு அழைத்து, அவரை எமர்ஜென்சிக்கு அழைத்துப் போவது போன்று ஏதாவது செய்திருப்போம்.. (ஏற்கனவே ஒரு முறை இவ்வாறு செய்திருக்கிறார்கள், அப்போது நான் நேரிடையாக அவ்விடத்தில் இல்லை.. அதற்கப்புறம் தான் அவருடைய உடல்நிலை குறித்து ஆசிரியர்கள் தவிர்த்த ஏனையோருக்கும் (என்னைப் போன்று) தெரிய வந்தது..)