18 March 2011

இன்னும் இருக்கா??


ஜூன் 12 2007
சென்னை

நீ அமெரிக்கா கிளம்பிச் சென்று பதினைந்து நாட்கள் ஆகியும் இன்னும் என்னுடன் தொலைபேசாமல் இருப்பது என்னை மிகவும் ஆச்சர்யப்படுத்துகிறது. என்னைப் பற்றி துளியளவும் அக்கறை இல்லாத ஒருவருக்காக நான் எனது பொழுதை வீணடிக்கிறேனோ என்று கூட நினைக்கிறேன். நான் இங்கே ஒரு நாளைக்கு பன்னிரண்டு மணி நேரம் வேலை செய்து ஆறுமணி நேரம் தூங்கி எழுந்து உழைத்துக் கொண்டிருக்கிறேன். இருந்தும் தினமும் வந்து செக் செய்கிறேன் - உன்னிடம் இருந்து மெயில் வந்திருக்கிறதா என்று. ஒன்றையும் காணோம்..

நீ உனது பெற்றோரை அழைத்துப் பேசாமல் இருந்திருந்தால், உனக்கு தொலைபேசுவதில் ஏதோ பிரச்சனை என்று தான் நினைத்திருப்பேன். என்னைத் தவறாக நினைத்து விடாதே - அவர்களிடம் பேசியதற்காக உன்னைக் குறை சொல்லவில்லை. அவர்களிடம் பேசிவிட்டு ஏன் என்னிடம் பேசாமல் போனாய் என்று தான் கேள்வி. 

ஒரு ஐந்து நிமிடமும் சிறிதளவு பணமும் கூடவா உன்னால் செலவழிக்க முடியாது, என்னிடம் தொலை பேசுவதற்கு? இந்தப் பதினைந்து நாட்களாக நீ என்னைப் பற்றி நினைத்துக் கூட பாத்திருக்க மாட்டாய் என்று தான் நினைக்கிறேன். உடன் வேலை செய்யும் சங்கர் கூட, இன்று, ஏன் சோர்வாக இருக்கிறாய், உடம்பு சரியில்லையா என்று கேட்டான். அவனிடம் எப்படிச் சொல்வேன், உண்மையில் எனது பிரச்சனை வேறு என்று. 

உன்னுடைய இந்த பாராமுகம் என்னை மிகவும் வருத்துகிறது. எனது வேலையை பாதிக்கிறது. காதலனாக இருக்க வேண்டாம், ஒரு நண்பராகவாவது உன்னால் இருக்க முடியாதா? 

கடுமையான வேலைப் பளுவுக்கிடையிலும் இவ்வளவு பெரிய மெயில் எழுதுகிறேன். இதற்கு ஒரு வரி பதில் கூட எழுத மாட்டாய் என்று தெரியும். கடந்த ஒரு வாரமாக அடிக்கடி அழுது கொண்டிருக்கிறேன் - குறிப்பிட்டுச் சொல்ல வேறெந்த காரணமும் இல்லாமல்.. வேலை காரணமாக மனச் சோர்வும் அழுத்தமும் அடைந்திருக்கிறேன், அடிக்கடி உணர்வுவயப் படுகிறேன்.. அதனால் தான் அழுகிறேனோ.. இந்த மாதத்துடன் இந்த வேலை முடிந்தவுடன் சரியாகிவிடுவேனோ? தெரியவில்லை.. 

இதைப் படித்ததும் கொஞ்சம் நேரம் எடுத்து யோசித்துப் பார்.. நீ அடுத்த முறை என்னிடம் பேசும் போது இது குறித்து அலசி முடிவெடுக்கலாம். இப்படித் தான் இனியும் உனது நடவடிக்கை இருக்குமென்றால் - இத்துடன் விட்டு விடுவோம்.. நீ இன்னொரு பெண்ணைக் காதலித்து அவளை மணந்து சந்தோஷமாக இருந்து கொள். 

பை

கோபமும் அழுகையும் ஒரு சேர்ந்து பொங்கி வர, கடிதத்துக்கு காதலனின் முகவரியிட்டு, ஜி மெயிலின் சென்ட் பட்டனைத் தட்டி விட்டு, எழுந்து சென்று படுக்கையில் விழுந்து, அழ ஆரம்பித்தாள் ராதா. 

*****************************

ஆகஸ்ட் 20, 2010
கலிபோர்னியா 

கணினியில் தனது மெயில்களைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த ராதா, சோம்பல் முறித்து எழுந்தாள். காப்பி தயாரித்து, கணவன் சிவாவுக்கு கொடுத்து விட்டு, குளிக்கச் சென்றாள்.  அவள் மெயிலிலிருந்து லாக் அவுட் செய்ய மறந்ததை சிவா கவனித்து இருந்தான். ராதா குளியலறைக் கதவைத் தாளிட்டு, ஷவரைத் திறந்து விட்டதும், சட்டென எழுந்து வந்தான். அவளது லேப்டாப்பைக் கையில் எடுத்து, மிக வேகமாக இயங்கினான். 

அவர்களுடைய மெயில்கள் தனித் தனியாகத் தான் இயங்கி வந்தன. ஒருவரது பாஸ்வர்ட் இன்னொருவருக்குத் தெரிய வேண்டாம் என்று முன்கூட்டியே முடிவு செய்திருந்தார்கள். என்ன தான் கணவன் மனைவி என்றாலும், ஒருவரது தனிப்பட்ட வட்டத்தை இன்னொருவர் மதித்து நடக்க வேண்டும் என்பது தான் இருவரது விருப்பமும். ஆனால் கடந்த சில நாட்களாக சிவாவுக்கு என்னவோ ஒரு குறுகுறுப்பு..  இருப்பு கொள்ளவில்லை. எப்படியாவது அவளது மெயிலை எட்டிப்பார்த்து விடுவது என்று கங்கணம் கட்டியிருந்தான். 

காலத்தில் பின்னோக்கிச் சென்று வேகமாகத் தேடியவன், தனக்குத் தேவையானது கிடைத்தவுடன், உடனே பார்வர்ட் செய்தான். பின், ஒன்றும் தெரியாதவன் போல தன்னிடத்தில் வந்து அமர்ந்து கொண்டான். 

ராதா தலையைத் துவட்டிக் கொண்டே வந்தவள், காப்பிக் கோப்பையைச் சூடு செய்து, கணினியை மடியில் எடுத்துக் கொண்டு, சோபாவில் அமர்ந்தாள்.  புதியதாக ஒரு மெயில் வந்திருப்பதைக் கண்டதும், படிப்பதற்காக கிளிக்கினாள். 

****************

மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் மெயில், அவளுக்கே பார்வர்ட் செய்யப்பட்டிருந்தது. கூடவே ஒரு வரிக் கேள்வியும்..

"இந்த இன்னொரு பொண்ணக் கல்யாணம் பண்ணிக்கிற ஆபர் இன்னும் எனக்கு வேலிட் ஆ இருக்கா?"

அடுத்த நொடி அங்கே "ஐயோ அம்மா.. அடிக்காத.. கிள்ளாத.." என்ற அலறல் கேட்டது.. யார் யாரை அடித்திருப்பார்கள் என்பதை படிப்பவர்கள் யூகத்துக்கே விட்டு விடுகிறேன்.. :)

11 March 2011

சொல்லாத பேருக்கு... பொல்லாத காரணம்...


என் பெயரைச் சொல்ல விருப்பம் இல்லைன்னு ஏற்கனவே சொல்லியிருக்கேன்.. அதே தான் மறுபடியும்..


பெயர்க் காரணத்தைக் கேட்டால், என்னன்னு சொல்ல? எங்க ஊருல பொதுவான வழக்கம் என்னன்னா (தமிழ்நாட்டுல நிறைய ஊருல இப்படித்தான்).. கொழந்த பொறந்த உடனே, அது பொறந்த நாளு, நேரம் பாத்து குறிச்சு வச்சுப்பாங்க.. அதைய ஜோசியரு கிட்ட கொடுத்து ராசி நச்சத்திரம் எல்லாம் கணிக்கச் சொல்லி, ஜாதகம் எழுதச் சொல்லி, வாங்கி வச்சுப்பாங்க.. இந்த ஜாதகந்தா பிற்காலத்துல பலரோட தலைவிதிகளை நிர்ணயிக்கும் (நெஜமாத் தாங்க.. இதய வச்சுத் தானே பொருத்தம் பாத்து கண்ணாலம் கட்டி விடுறாங்க, அப்பிடிச் சொல்ல வர்றேன்).. அந்த மாதிரி தான் எனக்கும் என்னமோ நிர்ணயிச்சு, ரெண்டு மூணு எழுத்துகள அவரு சொல்லக் கேட்டு, அதுல தொடங்கற மாதிரி பேரத் தேர்ந்தெடுத்தாங்க.. எங்கம்மா ஒரு பேரை முடிவு பண்ணி வச்சிருக்க, எங்க பாட்டி (சின்னதா ஏதோ சடங்கு மாதிரி வச்சு, அவங்க மடியில போட்டு அவங்க வாயால பேர மூணு தடவ சொல்ல, அதிலேர்ந்து அந்தப் பேரு தான்) வெவரமா அதையே கொஞ்சம் மாத்திச் சொல்லி, மருமக வயித்தெரிச்சல வாங்கிக் கட்டிகிட்டாங்க.. அதுல இருந்து அதான் எம் பேரு..


மொதல்ல ஒன்னும் தெரியல.. பள்ளிக்கோடம் எல்லாம் போக ஆரம்பிச்ச பின்னால கொஞ்சம் பிடிக்காம போயிட்டது.. எங்க வீட்டுல கூட யோசிச்சாங்க, இவ்வளவு வெசனமாக் கெடக்காளே, மாத்தியிறலாமான்னு.. அப்புறம் அதுக்கு என்னென்னமோ செய்யணும்ன்னு அப்படியே விட்டாச்சு.. ஹூம்..


காலேஜ் வந்த பொறவு தான் கொஞ்சம் பிரச்சனையாச்சு.. அன்னன்னிக்கு பாடம் எடுக்கறவங்க அந்தந்த வகுப்புக்கு மட்டும் அட்டன்டென்ஸ் எடுப்பாங்க.. எம் பேரு கொஞ்சம் வித்தியாசமா இருந்ததால, கொஞ்சம் தடுமாறிட்டு, அதுக்கு பதிலா பையன் பேரு வர்ற மாதிரி ஒரு பேர தப்பாக கூப்பிடுவாங்க.. ஒருக்கா ரெண்டுக்கா இல்ல.. நெறைய வாட்டி இப்படித் தான்.. இதுல என்ன கொடுமைன்னா, அப்படி அவங்க கூப்பிடுற பையன் பேருல பாதிப் பேரு கொண்ட பையன் ஒருத்தரும் எங்க வகுப்புல இருந்தாரு.. அப்புறம் என்ன, நம்ம ப்றேன்ட்சு மக்களுக்கு ஒரே கொண்டாட்டந்தான்.. எம் பேரு தப்புத் தப்பா கூப்பிடப்படும் போதெல்லாம், அவர் அந்தப் பக்கமும் நான் இந்தப் பக்கமும் (எங்க காலேசுல, பசங்க பிள்ளைங்க தனித்தனியாகத் தான் உக்காருவோம்), ஓட்டப்படுவோம்.. யாராச்சும் வந்து அட்டன்டென்ஸ் எடுக்கும் போதே மனசு பக்கு பக்குன்னு அடிச்சுக்கும்.. இந்த வாட்டியாவது சரியாகக் கூப்பிட்டுத் தொலைக்கனுமேன்னு.. இல்லாட்டி இந்தக் களவாணிப் பயலுவ ஓட்டி ஒழிப்பானுவ.. அப்பவும் தப்பாத் தான் கூப்பிடுவாங்க..


இங்க வந்து இந்தத் தொரமாருங்க கூப்பிடற கூப்பிடுல, எம் பேரு எனக்கே மறந்து போயிரும் போல இருக்கு.. :) நல்ல வேள, இங்க கொஞ்சம் ப்றேன்ட்சு மக்கா கூப்பிடறதாலயும் அப்பப்ப பேனாவால பேரு எழுதி கையெழுத்துப் போடறதாலயும் இன்னமும் நினைவுல வச்சிருக்கேன்.. :)


புனைப் பேரு தான் எல்லாத்துக்கும் தெரியுமே - எல்போர்டு அலையாஸ் சந்து.. எல்போர்டு, புதுசா ப்ளாக் ஆரம்பிச்சப்ப என்ன பேரு வைக்கறதுன்னு தெரியாம வச்சது, அதே இப்ப நிலையா ஆயிட்டது.. சந்து, அதிரா திட்டறதுக்கு ஒரு பேரு வேணுமேன்னு கேட்டதால வச்சது.. ஏன் இந்தப் பேருன்னா, அதுக்கு வேணா ஒரு காரணம் இருக்கு, ஆனா அதைச் சொல்ல மாட்டேன் :)


இந்தக் கதை போதுமா?