Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

16 February 2011

விழிப்புணர்வுக்காக..

இன்று நடந்த ஒரு சம்பவம்..

அலுவலகத்தில், எங்கள் வேலைகளை முடித்த பின், ஒரு மேற்பார்வையாளரிடம் காண்பித்து, அவர் சொல்லும் திருத்தங்களைச் செய்து முடித்த பின், கையெழுத்திட்டு, நிறைவு செய்வோம்.. 

இன்றும் அப்படித் தான் ராபர்ட் (வழக்கம் போல பெயர் மாற்றித் தான் சொல்லியிருக்கிறேன்) வந்திருந்தார் - மேற்பார்வை செய்ய.. எப்பவும் கொஞ்சம் வேலை பற்றிய பேச்சு கொஞ்சம் வெட்டிப் பேச்சு என்று கழியும் இந்த நேரம், இன்று ஏனோ ஒருவரும் பேசாமலே கழிந்து கொண்டிருந்தது..

இங்கு இடைச் செருகலாக, நேற்று நடந்த ஒரு குட்டி கலாட்டாவை சொல்லிவிடுகிறேன் - இந்த டீ காப்பி நிலையம் பற்றிச் சொல்லியிருக்கிறேன் இல்லையா.. அந்தப் பொருட்களைப் பூட்டி வைத்திருக்கும் கப் போர்டின் சாவி நேற்று தொலைந்து போய், எல்லோரும் தேடிக் கொண்டிருந்தனர்.. இறுதியாக, ராபர்டின் பான்ட் பாக்கெட்டில் இருந்ததைப் பார்த்துவிட்டு, இன்று காலையில் திருப்பித் தந்தார்.. இதை வைத்து அவரை ஓட்டுவதற்காக, என் சக அலுவலர் சாதியா எங்க மேசைக்கு வந்தார்.. உங்களால் நேற்று நான் டீ குடிக்கமுடியவில்லை, அதனால் எனக்கு தலைவலி வந்து சரியாக சாப்பிடவும் இல்ல.. அதனால, நீங்கதான் எங்களுக்கு இன்னைக்கு மதியச் சாப்பாடு வாங்கித் தரனும் என்று ஓட்டிக் கொண்டிருந்தார்.. இதற்கும் ராபர்ட் ஒன்றும் பதில் பேசவில்லை.. சிரித்துவிட்டு வேலையை சரிபார்க்கத் துவங்கினார்.. சாதியாவும் நகர்ந்து சென்றார்..

நானும் பார்க்கிறேன் - ராபர்ட் மவுசை ஸ்க்ரோல் செய்து கொண்டே இருக்கிறார்.. ஒருப்படியாக ஒரு குறிப்பும் சொல்லக் காணோம்.. எப்பவும் ஐந்து நிமிடத்தில் முடியக் கூடிய ஒரு வேலை, இருபது இருபத்தைந்து நிமிடங்கள் கடந்தும் ஒன்றும் ஆகக் காணோம்.. இது போன்று இன்னும் ஏழெட்டு சரிபார்த்தல்கள் மிஞ்சி இருந்தன.. இவ்வளவு நேரம் எடுக்கிறாரே என்று எனக்கு சலுப்பாக இருந்தது.. அப்படியே பக்கத்தில் இன்னொரு கணினியைத் திறந்து, மெயில்களைக் குப்பையில் தூக்கிக் கடாசும் வேலையைச் செய்து கொண்டிருந்தேன்.. 

திடீரென்று, இந்த இடம் சூடாக இருப்பது போல இருக்கு என்றார்.. எங்களுக்கு அவ்வளவாக வெப்பம் தெரியவில்லை.. பார்த்தால், அவரது நெற்றி வியர்த்திருப்பது போன்று இருந்தது.. 

இன்னும் முதல் வேலையே முடிக்கவில்லை.. மவுசை உருட்டிக்கொண்டே இருந்தவரிடம், எனக்கு இருந்த சில சந்தேகங்களைக் கேட்டேன்.. ஒரு நிமிடம் மாதிரி நான் பேசி முடித்து அவர் முகத்தைப் பார்த்தால், எந்த ரியாக்ஷனும் இல்லை.. கடுப்பாக இருந்தது.. "இப்போ நான் சொன்னதைப் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க?" என்று தெளிவாக அவரிடம் கேட்டேன்.. திரும்பி, "வாட்?" என்றார்.. மீண்டும் நான் விளக்கினேன்.. மறுபடியும், "வாட்?" தான் பதிலாகக் கிடைத்தது!

"உங்க உடம்புக்கு ஏதும் சரியில்லையா? Are you okay?" என்று கொஞ்சம் பயந்தபடியே கேட்டேன்.. திரும்பி என்னை முப்பது நொடிகள் முறைப்பது மாதிரி பார்த்தார்.. பிறகு மீண்டும் மவுஸ் உருட்டல்.. எனக்குப் பொறுமையே போய் விட்டது..  "உங்களுக்கு வேர்த்திருக்கிறது.." என்று சொன்னேன்.. மீண்டும் திரும்பி முறைத்துவிட்டு, "யா.. யா.. I am fine.." என்று சொல்லிவிட்டு, தொடர் மவுஸ் உருட்டல்.. 

என்னமோ சரியில்லை.. எனக்கு விளங்கினார் போல இருந்தது.. நானே அவசரமாக அந்த வேலையை மூடிவிட்டு, அடுத்த பக்கத்தைத் திறந்தேன்.. அதுக்கும் இப்படியே தெளிவில்லாமல் உருட்டல்.. அதையும் நானே மூடிவிட்டு அவரை ஏறிட்டேன்.. அவருக்கு தான் குழப்பத்தில் இருக்கிறோம் என்பதே புரியவில்லை.. அதனால் அதை ஒப்புக்கொள்ளவும் முடியவில்லை..  "லஞ்ச் சாப்பிட்டுவிட்டுத் தொடரலாம்" என்று சொல்லி அவரை எழுப்பிவிட்டேன்.. திடமாக எழுந்து நடந்து போனார்.. அவர் போவதைப் பார்த்துக்கொண்டிருந்த நான் உடனே இன்னொரு ஆசிரியரிடம் சென்று நடந்ததைச் சொன்னேன்.. நான் நினைத்ததே தான்.. அவர், தலைவரிடம் போய்ச் சொல்லு என்றார்.. எனக்குத் தயக்கம் - மாட்டி விடுவது போன்று ஆகிவிடக் கூடாதில்லையா? அதற்குள் இன்னொருவர், "ராபர்டின் நலனுக்காகத் தான் சொல்கிறோம், உனக்குத் தயக்கமாக இருந்தால், நான் போய் சொல்கிறேன்" என்றார்.. 

நான் அதற்குள் கீழே சென்று ராபர்டைத் தேடினேன்.. சாப்பிடச் சென்று விட்டார்.. இடையில் சந்தித்த சாதியாவும், ராபர்ட் தன்னிடம் சரியாகப் பேசவில்லை என்றார்.. நான் நிலைமையை விளக்கிவிட்டு என் வேலையை கவனிக்கச் சென்றேன்..

லஞ்ச் நேரம் முடிந்து, ராபர்ட்டுக்கு போன் செய்தேன்.. கீழே இறங்கி வந்தார்.. தெளிவாகப் பேசினார் - எப்போதும் போல.. அதே பழைய ஆளாக மாறியிருந்தார்.. நீ கிளம்பு, நான் மீதியைக் கவனித்துக் கொள்கிறேன் என்று சொன்னார்..

உங்களுக்கு என்ன காரணமென்று புரிந்ததா? 

ராபர்ட்க்கு சர்க்கரை நோய்.. இள வயதிலேயே வந்துவிட்டது.. அதற்கான மருத்துவம் எடுத்துக் கொண்டிருக்கிறார்..  அதன் விளைவு தான் இது - மருந்தினால் ரத்தத்தில் குளுகோஸ் அளவு மிகவும் இறங்கிப் போனதால், யோசிக்கும் திறனில் வந்த குழப்பம்.. Hypoglycemia (மேலும் தகவல்களுக்கு லிங்க் கொடுத்திருக்கிறேன்) பொதுவாக, இப்படிப்பட்டவர்கள் மயங்கி கீழே விழுந்து விடுவார்கள்.. அவர்களைக் கண்டவர்கள் மருத்துவமனைக்கு கூட்டிச் சென்று ட்ரீட் செய்வார்கள்.. இல்லை, அவர்களே  தங்களுக்கு இப்படி இருக்கிறது என்று உணர்ந்து உடனே சர்க்கரை மாத்திரை (நோய்க்கான மாத்திரை அல்ல, சர்க்கரையே தான்) அல்லது ஜூஸ் எடுத்துக் கொள்ளுவார்கள்.. சர்க்கரை நோய்க்கான மருந்து உட்கொள்ளும் எனது பாட்டி கூட அடிக்கடி தலை கிறுகிறுப்பதாகச் சொல்லுவார்.. ஆனால் என்னுடன் வேலை செய்பவர் நான் பார்த்து கொண்டிருக்கக் கொண்டிருக்க இப்படியானது எனக்கும் திகைப்பு தான்.. 

உங்களுக்குத் தெரிந்தவரும் யாரேனும் இருக்கலாம், சர்க்கரை நோய்க்கான மருந்துகளை எடுத்துக் கொண்டு - ஒரு விழிப்புணர்வுக்காகவே இதைப் பகிர்ந்திருக்கிறேன்.. ராபர்டுக்காக அறையில் சர்க்கரை மாத்திரைகள் வாங்கி வைத்திருக்கிறார்கள் என்று இது முடிந்ததும் தான் தெரிந்து கொண்டேன்.. அவர் திடமாக இருந்ததால் மட்டுமே அவரை சாப்பிட அனுப்பி வைத்தேன்.. இல்லையென்றால், அவரை அங்கேயே இருத்திவிட்டு, உடனே  மற்றவர்களை உதவிக்கு அழைத்து, அவரை எமர்ஜென்சிக்கு அழைத்துப் போவது போன்று ஏதாவது செய்திருப்போம்.. (ஏற்கனவே ஒரு முறை இவ்வாறு செய்திருக்கிறார்கள், அப்போது நான் நேரிடையாக அவ்விடத்தில் இல்லை.. அதற்கப்புறம் தான் அவருடைய உடல்நிலை குறித்து ஆசிரியர்கள் தவிர்த்த ஏனையோருக்கும் (என்னைப் போன்று) தெரிய வந்தது..)

14 February 2011

தொலச்சுப்போடுவேன் தொலச்சு..!




இன்னைக்கு மதியம் ஒரு விமானப் பயணம் இருந்ததால, ஒரு கேப் (டாக்ஸி) நிறுவனத்தைக் கூப்பிட்டு, என் வீட்டு முகவரியத் தந்திருந்தேன். இவங்க எப்பவும் சொன்னா சொன்ன நேரத்துக்கு வந்துடுவாங்க, நல்ல நேர்த்தி.. அதனால, நான் எப்பவும் இந்த கேப்ல தான் போறது! 

குறிப்பிட்ட நேரத்துக்கு, எங்க வீட்டு ஜன்னல் வழியா எட்டிப் பார்த்த பொழுது, அங்க எனக்காக ஒரு கேப் காத்துக்கொண்டிருந்தது. நானும் தயாராக இருந்ததால, உடனே கீழ வந்துட்டேன். கேப்பை கிளப்பினதும், அந்த ஓட்டுனர் திரும்பி எங்கிட்ட, “இதுக்கு முன்னாடி நான் உங்களைக் கூப்பிட்டுப் போயிருக்கேனா?” ன்னு கேட்டார். எனக்கு அவரைப் பார்த்த மாதிரி நினைவு இல்லன்னு சொன்னேன். உடனே அவர், “உங்களுக்குத் தெரியுமா? நான் இந்த முகவரிக்கு வரக் கூடாதுன்னு நினைச்சிருந்திருக்கேன். தெரியாம இன்னைக்கு வந்துட்டேன்..” னார்.

ஏன் இப்படிச் சொல்றார்ன்னு நினைக்கும் போதே, அவர், “ஆமா.. உங்க வீட்டுல இருந்து யாராவது இந்தியப் பயல் விமான நிலையத்துக்கு எங்க கேப்ல போயிருக்காங்களா? குறிப்பிட்டுச் சொல்லணும்னா, சுமார் ஒரு மாசத்துக்கு முன்னாடி?” ன்னு கேட்டார். நான் யோசிச்சேன்.. எங்க வூட்டுக்காரர் சமீபத்துல விமானப் பயணம் ஏதும் போனதில்ல.. “எங்க வீட்டுல இருந்து யாரும் போயிருக்க வாய்ப்பில்ல.. கீழ் வீட்டுப் பையன் வேணும்னா போயிருக்கலாம்.. அவன் ஐரோப்பிய அமெரிக்கன்..” ன்னேன். “இல்ல.. நான் சொல்ற ஆளு இந்தியன்.. இள வயசுக்காரன்..” ன்னார்..

யாராயிருக்கும்ன்னு குழம்பினேன் நான்.. “அன்னைக்கு அந்தப் பையன் பெரிய கூத்து பண்ணினான்.. அவன் சொன்ன நேரத்துக்கு நான் எங்க நிறுவனத்திலிருந்து ஒரு கேப் அனுப்பியிருந்தேன்.. அந்த ஓட்டுனர், அவனுக்காக வெளிய காத்துட்டு இருந்திருக்கார்.. அவனைக் கூப்பிட்டுச் சொல்லுங்க ன்னு எனக்கு அலைபேசில சொன்னார்.. நானும் அவனோட அலைபேசிக்கு மணியடிச்சுப் பார்க்கறேன்.. எடுக்கவே மாட்டேன்றான்.. இப்படியே அரை மணி நேரத்துக்கு மேல ஆயிடுச்சு.. இதுக்கு மேல காத்திருந்து பயன் இல்லன்னு, அந்த ஓட்டுனர் திரும்பிவரப் போறதாச் சொன்னார்.. இல்ல, வர்றாதீங்க, அவன் அங்கதான் இருக்கறான், எப்படியும் கொஞ்ச நேரத்துல வந்திருவான்னு நான் அவரை சமாதானப்படுத்தி வச்சிருந்தேன்..”

“அந்தப் பையனை மறுபடியும் மறுபடியும் கூப்பிட்டுப் பார்த்தேன்.. பதிலே இல்ல.. அதுக்கப்புப்புறம் பதினஞ்சு நிமிஷம் கழிச்சு ஒரு வழியா போனை எடுத்து, எங்க இருக்கிறன்னு கேட்டா, விமான நிலையத்துல ன்னு சொல்றான்.. எப்படிப்பா வந்தன்னா, உங்க நிறுவனத்துக் கேப்ல தான்னு சொல்றான்.. நான் செம கடுப்பாயிட்டேன்.. அப்புறம் தான் தெரிஞ்சது, அவன் இன்டர்நெட் மூலமா எங்களுக்கு போன் செய்து, அவனுடைய செல் நம்பர் கொடுத்து முன்பதிவு செய்திருக்கான்.. அவனோட போனுக்கு அந்த வீட்டுல இருந்து சிக்னல் கிடைக்கல.. எப்படியோ அரைமணி நேரத்துக்கப்புறம், வெளிய கேப் நிற்கரதப் பாத்துட்டு அவனே இறங்கி வந்திருக்கான்.. எங்கள இப்படிக் காக்க வச்ச கடுப்பு எனக்கு இன்னமும் போகல..”

“இன்டர்நெட் போன்..” “அந்த வீட்டுல இருந்து சிக்னல் கிடைக்கல..” இந்த வரிகளக் கேட்டதும் எனக்குப் பொறி தட்டுச்சு.. கடந்த சில மாதங்களா நம்ம ஒடன்பொறப்பும் பக்கத்து மாநிலத்துல தான் குப்ப கொட்டிக்கிட்டு இருக்காப்ல.. ஒரு மாசத்துக்கு முன்னாடி, எங்க வீட்டுக்கு வந்துட்டு திரும்பிப் போகும் நேரம், நாந்தான் இந்தக் கேப் நிறுவனத்துல முன்பதிவு செய்துக்கோன்னு, இவங்க தொலைபேசி எண் கொடுத்திருந்தேன்.. அன்னைக்கு எனக்கு வேலை இருந்ததால நான் அலுவலகம் கிளம்பிப் போயிட்டேன்.. அவனோட போனுக்கு எங்க வீட்டுல சிக்னல் கிடைக்காது..

மெதுவா அவர் கிட்ட, இது என்னோட சகோதரனா இருக்கலாம்ன்னு சொன்னேன்.. அவரு திரும்பி ஒரு மொறை விட்டாரு.. எதுக்கும் உறுதி படுத்திக்கலாம்ன்னு அவனுக்கு போன் செய்து பார்க்கிறேன்னு சொன்னேன்.. சரின்னார்.. பையன் வேலையில இருந்தான்.. “என்ன இந்த நேரத்துல? சொல்லு..” ன்னான்.. நானும் தமிழ்ல, இங்கயிருந்து கிளம்பிப் போறப்போ கேப் சம்பந்தமா ஏதும் பிரச்சனையாச்சா ன்னு கேட்டேன்.. அவனும் கிட்டத்தட்ட இதே கதைய சுருக்கமா சொல்லிட்டு, இப்ப ஏன் அதைக் கேக்கற ன்னான்.. அந்த கேப் ஓட்டுனர் தான் கேட்கச் சொன்னார், அவரோட தான் இப்போ போயிட்டு இருக்கேன்னு சொல்லிட்டு சிரிக்க ஆரம்பிச்சேன்.. பையன் கடுப்பாகி, “இப்ப எனக்கு வேலை இருக்கு.. வை போனை..” ன்னு வச்சிட்டான் J அவரு உடனே, “பாத்தியா.. நான் சொன்னன்ல..” ங்கற ரீதியில தொடர்ந்து கொஞ்சம் நேரம் திட்டினார்.. எனக்கு உள்ளூர சந்தோஷந்தான் J பயபுள்ள அடுத்த வாட்டி வீட்டுக்கு வரும் போது இத வச்சே ஓட்டி ஒழிச்சிட மாட்டோம்? J

அடுத்ததா ஒரு கதை சொன்னார்.. இது வேறொரு பையன் செய்ததைப் பத்தி.. அவன், அவசரமா விமான நிலையம் போகணும், பத்து நிமிஷத்துல கேப் வேணும்ன்னு கேட்டிருக்கான்.. நேரத்துக்கு வந்துடனும்ங்கறதுல உறுதியா இருக்கறதால, இவர் அடிச்சுப்புடிச்சு போயிச் சேர்ந்திருக்கார்.. பாத்தா, அவன் இன்னொரு கேப்ல ஏறிட்டு இருந்திருக்கான் (ஒரே நேரத்துல ரெண்டு கேப்கள கூப்பிட்டு இருக்கான்).. இவர் செம கடுப்பாயிட்டு, அவனோட தொலைபேசி எண்ணுக்கு ஒரு பெயர் கொடுத்து பாதுகாத்து வச்சிருந்திருக்கார்..

பின்னொரு நாள், அவன் மறுபடியும் இவங்களக் கூப்பிட்டப்போ, வர்றேன்னு சொல்லிட்டு, சொன்ன நேரத்துக்குப் போகாம, அஞ்சு நிமிஷம் கழிஞ்சதும், தோ வந்துகிட்டே இருக்கேன்னு சொல்லி, மறுபடியும் பத்து நிமிஷம் கழிச்சு, “மன்னிக்கணும், வர்ற வழியில எங்களுக்கு இன்னொரு ஆள் கிடைச்சுட்டார், அதனால நீங்க வேற கேப் கூப்பிட்டுக்கோங்க..” ன்னு சொல்லிட்டு, போகாமலே விட்டுட்டார்!!! அதுக்கப்புறம், அவனோட வாய்ஸ் மெயில்ல, வராததுக்கான உண்மையான காரணத்தையும் சொல்லி இருக்கார்!

அவர் செய்ததில எனக்கு உடன்பாடில்ல.. அந்தப் பையனுக்கு என்ன அவசரமோ, விமானத்தை தவற விட்டிருந்தான்னா, அவனுக்கு அது பெரிய பிரச்சனையாயிருக்கும்.. நான் சொன்னேன், “உங்க நிறுவனத்தப் பத்தி அவனுக்கு தெரிஞ்சிருக்காதா இருக்கும்.. எங்க வராம போயிடுவீங்களோன்னு தான் அவன் அவசரத்துக்கு ரெண்டு பேரைக் கூப்பிட்டிருப்பான்.. காத்திருந்து ஏமாந்த அனுபவம் எனக்கும் இருக்கு..” 

ஆனா அவர் ஒத்துக்கல.. “என்னோட கேப்பைப் பாருங்க.. எவ்வளவு சுத்தமா வைத்திருக்கேன்.. நேரந் தவறாமை எங்களோட குறிக்கோள்.. நாங்க ரொம்ப ப்ரோபஷனல்.. வாடிக்கையாளருக்காக நாங்க கொண்டிருக்கும் பொறுப்புணர்வை, அவங்களும் எங்களுக்காகக் கொண்டிருக்கணும்..” ன்னார்.. “ம்ம்..” ன்னேன்.. இறங்கும் பொழுது, “You too.. remember this.. If you mess with me, I will pay back..” ன்னார்.. நான் சிரிச்சுட்டேன் J.. நான் அப்படிச் செய்ய மாட்டேன்னு சொல்லிட்டுக் கிளம்பினேன்..

அந்தப் பையனுக்குச் செய்ததுல எனக்கு உடன்பாடு இல்லாட்டியும்,  அவரோட ஆட்டிட்யூட் பிடிச்சிருந்தது.. அவருக்கு தன்னை ஏமாத்திட்டாங்களே ன்னு சுயபச்சாதாபம் இல்ல. நான் பொறுப்பா இருக்கேன், அதை உங்க கிட்டையும் எதிர்பார்க்கிறேன், என்னை நீங்க ஏமாத்தினா அதைத் திருப்பிக் கொடுப்பேன் என்கிற அந்தக் கோபம், சுயகம்பீரம் பிடிச்சிருந்தது!!

(வெள்ளியன்று எழுத ஆரம்பித்தது.. அதனால இன்று என்று வருவதெல்லாம் இன்று முந்தாநேத்து ஆகி விட்டது J )



இந்தப் பாட்டுக்கும் இடுகைக்கும் என்ன சம்பந்தம்ன்னு கேட்டுட மாட்டீங்கன்னு நம்பறேன் :) 

12 November 2010

ஓர் எல்போர்ட் வண்டியோட்டுகிறது.. 2

முதல் பாகம் படிச்சு அசந்து (தூங்கிப்) போன எல்லாரையும் எழுப்ப, ஹாரன்.. ஹாங்.. ஹாங்.. ஹாங்..

எப்பிடியோ அடிச்சுப்பிடிச்சு, ஒரு learners permit வாங்கி, வண்டிக்கு வெளிய ஒரு எல் போர்ட மாட்டிட்டு, வண்டி ஓட்டப் பழகியாச்சு.. அடுத்தது, லைசென்ஸ்.. இங்க நம்ம ஊரு மாதிரி இல்ல.. அதுவும் நான் வசிக்கும் மாநிலம் இதற்கான பரிட்சைகள்ல கண்டிப்புக்குப் பெயர் போனது.. காரணம், நம்ம ஊர்ல இரண்டு சக்கர வாகனங்கள் மாதிரி, இங்க கார்கள் தான் முக்கியமான தரை வழிப் போக்குவரத்து.. பைக், சைக்கிள் - இதெல்லாம் இங்க ரொம்பவும் குறைவு.. அது மட்டுமில்லாம, இங்க சாலையில் கார்கள் போகும் வேகமும் மிக அதிகம்.. சாலை விதிகளுக்கு மிக முக்கியத்துவம் கொடுக்கும் நாடு இது.. எல்லாரும் விதிகளைப் பின்பற்றி ஓட்டிச் செல்லும் போது, ஒருத்தர் தவறு செய்தா, மற்றவருக்கு ஏற்படும் பாதிப்பு ரொம்பவே அதிகம்.. ஒரு நபருக்கு லைசென்ஸ் கொடுக்கும் போதே அவரது திறனை நன்றாகப் பரிசோதனை செய்து தான் கொடுக்கறாங்க.. அப்பிடியும், குடி, மித மிஞ்சிய வேகம், கவனக்குறைவு மற்றும் இன்னும் பிற காரணங்களால விபத்து நடந்துட்டுத் தான் இருக்குது.. :((

லைசென்ஸ் பரிட்சைக்கு ஆதிரேயனே தேதி எடுத்துக் கொடுத்துட்டார்.. அதுலயும், நாங்க விவரமா, எளிதான சாலைகள் இருக்கும் பகுதியில நடக்கற மாதிரி வேணும்ன்னு கேட்டிருந்தோம்.. பரிட்சை அன்னைக்கு, நானும் ஆதியும் கிளம்பிப் போனோம்.. பரிட்சைக்கு முன்னாடி, பக்கத்துல ஒரு இடத்துல, ஒரு மணி நேரம் கூடுதல் பயிற்சி வேற.. ஆதி கூட வந்தது, மன ரீதியா நல்ல தெம்பா இருந்தது..

கிட்டத்தட்ட ஒரு மாசத்துக்கு மேல பயிற்சி எடுத்திருந்தாலும், மனசளவில, எனக்கு என்னமோ நம்பிக்கை குறைச்சலாவே இருந்தது.. அதுக்கு பல பல காரணங்கள்.. எதைச் சொல்ல எதை விட.. ஆனா, வாங்கியே ஆகணும்ன்ற கட்டாயம் இருந்தது.. ஏன்னா, அடுத்த ரெண்டு மாசத்துல என்னோட வேலை/கல்வி தொடங்கறதா இருந்தது.. வண்டி இல்லாட்டி கஷ்டமாப் போயிடும்..

இங்க பரீட்சைக்குன்னு தனி மைதானம் இல்ல.. எல்லாரும் உபயோகிக்கும் சாலை தான்.. பத்து-பதினைந்து நிமிஷம் தான் சோதனை நடக்கும்.. அதுக்குள்ள அவங்க சொல்ற மாதிரி நிறுத்தி, திருப்பி, சரியா ஓட்டிக் காமிக்கணும்.. ஒரே நாளைல நிறைய பேர் பரீட்சை எடுக்கறதால, பரிசோதகர்களும் சட்டுன்னு முடிவு பண்ணிடுவாங்க..  என்னோட முறை வந்தது.. என்னைப் பரிசோதிக்க வந்த அம்மா, வண்டியில ஏறும் போதே உர்ருன்னு இருந்தாங்க.. வண்டிய எடுத்தவுடனே முதல் குட்டு விழுந்தது.. வேகமாப் போ, பின்னாடி வர்ற வண்டிகளுக்கு இடைஞ்சலா இருக்கேன்னு.. அதுக்கப்புறம் அவங்க சொன்ன மாதிரி சரியாகத் தான் செஞ்சேன்.. ஆனா அவங்களோட ஆட்டிட்யூட் என்னை உதற வச்சிட்டே இருந்தது.. ஒவ்வொரு கட்டளைக்கும் உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் தான்.. கடைசியா, parallel parking.. இதை ஆதி மற்றும் ஆதிரேயன் கூட நல்லாத் தான் பழகியிருந்தேன்.. ஆனா, அந்த இடத்துல, பதற்றத்துல தப்பா செய்துட்டேன்.. உடனே தலைய இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் ஆட்டி, முகத்த சுளிச்சு, உதட்டப் பிதுக்கி (மறுபடியும், ஆட்டிட்யூட்), நீ தேறாத கேஸ் அப்பிடின்னு சொல்லாம சொல்லிக் காமிச்சாங்க..

எனக்காக ஆதி காத்திருந்தார் - என்ன பாஸா ன்னு சந்தோஷமான முகத்தோட.. அவரப் பாத்ததும் தான் கண் கலங்க ஆரம்பிச்சது.. தேறாம போனதுக்காக இல்ல.. நீயெல்லாம் தேறவே மாட்டே அப்பிடின்னு அந்தம்மா சொன்ன மாதிரி இருந்தது.. எம் முகத்தைப் பாத்துட்டு ஒண்ணும் சொல்லாம வண்டியைக் கிளப்பினார் ஆதி.. என்னால கட்டுப்படுத்தவே முடியல.. கண்ணுல இருந்து கொட்டுது.. அவரும் பாத்துட்டு, என்ன ஏதுன்னு கேக்காம, ஒரு டிஷ்யூ மட்டும் எடுத்துக் கொடுத்தார்... துடைச்சிட்டு, ரங்ஸ் க்கு போனப் போட்டு, மறுபடியும், ஹிஹி.. இப்ப நினைச்சா சிப்பு சிப்பா வருது.. :))

திரும்பிப் போகும் போது, ஆதி தன்னோட மனைவியோட கதையச் சொன்னார்.. அவங்களுக்கு சின்ன வயசுல ஏற்பட்ட ஒரு விபத்து மனசுல ஆழமா பதிஞ்சிருந்ததால ஓட்ட முடியாம சிரமப்பட்டதச் சொன்னார்.. அப்பத் தான் நானும் வாயத் திறந்து என்னோட கஷ்டங்களைச் சொன்னேன்.. அதை அவர் புரிஞ்சுகிட்டதே அந்த நேரத்துக்கு மிகப் பெரிய ஆறுதலா இருந்தது..

........................................  Intermission ......................................

அடுத்த பரீட்சைக்கு தேதி உடனடியா கிடைக்காததால, ரயில்வே ஸ்டேஷனுக்கு எதிராவே வீடு எடுத்துட்டோம்.. எல்போர்டுக்கு கண்டபடி ரோஷம் வந்துடுச்சு.. அதனால சுமார் ஆறேழு மாசம் மாதிரி, வண்டிய ஒரு வாட்டி கூட ஓட்டிப் பாக்கல.. ஒரு வழியா சமாதானம் ஆகி, ஒரு கிறிஸ்மஸ் விடுமுறைல (ஒரு வாரம் கிடைத்தது) தேதி எடுக்கச் சொல்லி, ரங்ஸ் கிட்டச் சொல்லியிருந்தேன்.. விடுமுறைக்கு முன்னால வேற ஊர்ல இருந்து வந்து, ஓட்டிப் பழகனும்.. நான் சனிக்கிழமை மாதிரி வந்து இறங்கி, வியாழக்கிழமை மாதிரி பரிட்சைக்கு தேதி எடுத்தா, அஞ்சு நாளு இருக்கும் நடுவுல, மறுபடியும் பழகிக்கலாம்ன்னு யோசிச்சு வச்சிருந்தேன்.. ரங்ஸ் போன் பண்ணி, திங்கக் கிழமை தான் தேதி கிடைச்சது, எடுத்துட்டேன்னார்.. அவ்வ்வ்வ்வ்வ்வ்.. மறுபடியும் கொட்டுது.. எதுக்கா? எனக்கெதிரா எல்லாருமாச் சேர்ந்து சதி பண்றீங்கன்னு :)) இந்த வாட்டி யாரும் பக்கத்துல இல்ல டிஷ்யூ தர.. வீட்டுல டிஷ்யூவும் இல்ல.. நானே கையால தொடச்சிகிட்டேன்.. ஒரு மாசமா ஓட்டு ஓட்டுன்னு ஓட்டியே ஆப்பு தான் கிடைச்சது, ரெண்டே நாள்ல என்னத்தக் கிழிக்க?

சனிக்கிழமை காலை, நான் வரல, மறுபடியும் அவமானப்பட என்னால முடியாதுன்னுட்டேன்..  எப்பிடியோ தேறி, மதியம் மாதிரி ஓட்ட ஆரம்பிச்சா, பனித்தூறல் வேற கூடவே ஆரம்பிக்குது.. எனக்குச் சுத்தமா நம்பிக்கை இல்ல.. இருந்தாலும் பரவாயில்லன்னு ரங்ஸ் கூட்டிட்டுப் போனார்.. அதே cemetry.. வேண்டா வெறுப்பா அங்க சுமார் ஒரு நிமிஷம் ஓட்டினேன்.. என்னத்தச் சொல்ல? பழைய மாதிரி ஓட்ட வந்துட்டது.. மறுபடியும் அங்க வச்சே நம்பிக்கை வந்தது.. ரொம்ப நேரம் ஓட்டினோம்..  ஞாயிறும் தொடர்ந்து பயிற்சி.. இந்த வாட்டி parallel parking பண்ணும் போது, அடுத்தடுத்த sequential steps சை சரியாக நினைவில் வைக்க, ஒரு சுலபமான வரிசையை நானே மனசுல உருவாக்கிட்டேன்.. இப்படிச் செய்தது, ஒவ்வொரு முறையும் மிகவும் உதவியாக இருந்தது..

திங்கக்கிழமை.. இந்த வாட்டி ஆதிரேயன் கூடப் போனேன்.. அதே ஒரு மணி நேரப் பயிற்சி.. அதே இடத்துக்குப் போனோம்.. இந்த வாட்டி ஒரு இளம் கறுப்பினப் பெண் வந்தார்.. சிரித்த முகம்.. ஒரு பட்சி உள்ள பறந்தது.. முயற்சித்துத் தான் பார்ப்போமேன்னு.. சரியாக வந்தது எல்லாமே.. ஒரு இடத்துல திருத்தம் சொல்லும் போது கூட, குண இனமாகச் (ஊர்ப் பதம்.. in gentle tone ன்ற மாதிரி) சொன்னார்.. இப்பிடிச் செய்திருக்கனும்ன்னு.. மறுபடியும் parallel parking.. ஏற்கனவே மனசுல வரிசைப் படுத்தி இருந்த மாதிரி சரியாகச் செய்தேன்.. என்ன, கொஞ்சம் தள்ளி வந்தது.. சரி, மறுபடியும் பண்ணிப் பார்க்கலாமேன்னு சொன்னார் (மறுபடியும்.. in gentle tone).. செய்தாச்சு..

ஒரு மாசமா ஓட்டிக் கிடைக்காத லைசென்ஸ், ரெண்டே நாள்ல கிடைத்து விட்டது.. என்னத்தச் சொல்ல? அந்தப் பெண் இல்லாட்டி கிடைத்திருக்காதுன்னு நினைக்கறேன்.. அவங்களுக்கு, அவங்களோட மென்மையான அணுகுமுறைக்கு, மானசீகமா ஒரு நன்றி.. ஆதிரேயன் கூடத் தான் வந்திருந்தேன்..  திரும்பிப் போகும் போது, அந்த இடத்துல ஆதியும் நின்றிருந்தார்.. வேறொரு ஆளைக் கூட்டி வந்திருந்தார்.. அவர்கிட்ட ஓடிப் போயி சந்தோஷத்தப் பகிர்ந்துகிட்டு வந்தேன்..

என்ன, ரங்ஸ்சால தான் நம்பவே முடியல.. ஹாஹ்ஹா..

 ........................................  சுபம் ......................................

இதைத் தொடர இலாவையும் (வானதி கிட்ட இவங்களும் அடம் பண்ணினாங்க), ஹூசைனம்மாவையும் (தனக்கும் ஒரு இனிய எல்போர்ட் காலம் இருந்ததாகச் சொன்னாங்க) அழைக்கிறேன்.. நேரம் இருக்கும் போது தொடருங்க.. நன்றி.. 

10 November 2010

தோழியிருவர்..



1 

தோற்றம் கண்டேன்
தென் மாநிலத்தவள்..

தமிழரென்றாள்..
உடனே ஒட்டினேன்..

உன் நாட்டில் பிறந்து
வெளி மாநிலமொன்றில் 
வளர்ந்தேன் என்றாள்
கொஞ்சம் விலகினேன்..

தமிழில் பேச விருப்பமென்றாள்
தட்டுத் தடுமாறிப் பேசினாள்
பிழை கண்டு சுளித்தேன்..
ஆங்கிலத்தில் பதிலுரைத்தேன்..
இன்னும் விலகினேன்..

புரிதல் தொடங்கிய நாளொன்றில்
அதுவரை நான் இட்டிருந்த 
மனவேலிகளைத் தாண்டி
பூத்தது எங்கள் நட்பு.. 


2

தோற்றம் கண்டேன்
தென் மாநிலத்தவள்..

தமிழரென்றாள்
உடனே ஒட்டினேன்..

"நீங்க எந்த ஊரு?
அட, ..... ஆ?
நானும் பக்கத்துல தான்" என்றாள்
இன்னும் ஒட்டினேன்..

வட்டார வழக்கில் பேசினாள்
நட்பை இறுக்கினேன்..

அடையாளங்கள் மெல்ல 
சுவாரசியமிழந்து,
உணர்வுத்திரை விலகி,
அவள் முகம் 
தெரியத் துவங்கிய
நாளொன்றில்..
துடித்து விலகினேன்..


இன்று

முதலாமானவளிடம்
அவளது தமிழில் பேசுகிறேன்..

இரண்டாம் ஆளிடம்..
பேசுவதேயில்லை.....

29 October 2010

ஓர் எல்போர்ட் வண்டியோட்டுகிறது..

தலைப்பு எப்பூடி? சும்மா கவித மாதிரி இல்ல? ஓர் ஓடம் நதியாகிறது அப்படின்ற படத்தலைப்போட பாதிப்புல இ(சு)ட்டது.. (தமிழ்ப்படந்தான், டிவில எப்பவோ பாத்து பிடிச்சுப் போனது..) வானதி கிட்ட அடம் பண்ணி, கேட்டு வாங்குன தொடர் பதிவு..

எல்போர்டு வண்டியோட்ட பட்ட சிரமத்த விட, எல்போர்டு எல்போர்டாக பட்டச் சிரமந்தான் அதிகம்.. கதையச் சொல்றதுக்கு முன்னாடி, திரு. எக்ஸ் ஐப் பத்தி ஒத்த வரி அறிமுகம்.. தன்னப்பத்தி ப்ளாக்ல எதுவும் எழுதவேண்டாம்ன்னு வூட்டுக்காரர் சொல்லியிருக்கறதால, அவரப் பத்தி எதுவும் எழுதல, திரு. எக்ஸ் ஐப் பத்தி மட்டுந்தான் இங்க எழுதியிருக்கிறேன்னு இப்பவே சொல்லிப்போடறேன்.. :)

இங்க learner's permit (இது எல்போர்டா ஆவறதுக்கான லைசென்ஸ்) ஒரு முக்கியமான அடையாளச் சீட்டு.. ரெண்டு மூணு உறுதியான அடையாளச்சீட்டுக்கள் இருந்தாத்தான் பெர்மிட்டே கிடைக்கும்.. இந்த நாட்டுக்கு வேலைக்கான விசால வர்றவங்களுக்கு பிரச்சன எதுவும் இல்ல.. நாம யாரு.. கண்ணாலந்தான் கட்டிக்கிட்டு ஓடி வந்தவங்களாச்சே... அதனால, லொட்டு லொசுக்குன்னு பல அடையாளங்கள தேத்தோனும்.. இதுக்கோசரமே, வங்கியில கணக்கு ஆரம்பிச்சு, ரெண்டு வங்கிக்கணக்கு, இன்சூரன்ஸ், பாஸ்போர்ட், அது போவ இன்னும் ஒன்னோ ரெண்டோ..  எல்லாஞ் சேத்தி (அதுக்கே ஒரு வருஷமாயிப் போச்சு), ஒரு மஞ்சப் பையில போட்டு எடுத்துக்கிட்டு பஸ்ஸப் புடிச்சு தெகிரியமா ஒரு நா அந்த அலுவலகத்துக்குப் போயி நின்னா..  :(

எல்லாம் சரிதான், ஆனா இன்சூரன்ஸ் கார்டுல உன் நடு இனிசியல் வரல, அதனால செல்லுபடியாவாதுன்னு சொல்லிப்போட்டாங்க.. இந்த நாட்டுக்கு வந்ததுல இருந்தே பொழப்பு நாசமாத் தான் போயிக் கெடக்கு.. நமக்கு வாழ்க்கையே இனி அம்புட்டுத்தான் அப்பிடின்னு கண் கலங்க திரும்புனேன்.. அப்பப் பாத்து இன்னோரு அம்மா திரும்பவுங் கூப்புட்டு, இந்தா கண்ணு, போனாப் போவுதுன்னு உன்னைய ஏத்துக்கறோம்ன்னு பெரிய மனசு பண்ணி சொல்லிட்டாங்க.. பெர்மிட்டும் கிடைச்சுது..

முதன்முதல்ல ஓட்டுனது, எக்ஸ் சோட அலுவலகத்துல இருக்கற கார் பார்க்கிங்ல.. நாமளே முயற்சி பண்ணிப்பாக்கலாம் அப்பிடின்னு கூட்டிட்டு போனாரு.. கேஸ் பெடல (அக்சலறேட்டர்)  ஒரு அமுக்கு அமுக்கி, சும்மா விர்ருன்னு கிளம்பி, இன்னொரு கார் பின்னாடி ரொம்ப பக்கத்துல போயி, சடாருன்னு ப்ரேக்கப் போட்டு நிறுத்துனேன்.. திரும்பிப் பாத்தா, எக்ஸ் நெஞ்சைப் பிடிச்சிகிட்டு பேச்சு மூச்சில்லாம உட்கார்ந்திருந்தார்..

அதுக்கப்புறம், பயிற்சி ஆட்களோட, அவங்க கார்கள்ல சில மணி நேரங்கள் கடுமையான பயிற்சி.. ரெண்டு பேரு வந்தாங்க; ஆதிரேயன் - இவர் பெரியவர்.. இவர் தான் பயிற்சிப் பள்ளி முதலாளி.. சொல்லிக் கொடுக்கறதும் கண்டிப்போட இருக்கும்.. பயந்து பயந்து ஓட்டுவேன்.. தான் சொன்ன மாதிரி சரியாகச் செய்யணும்ன்னு எதிர்பார்ப்பார்.. டூ வீலர் ஓட்டியிருக்கேன்னு சொல்லற, அதைய விட இது எளிதானது தான்னு சொன்னார்..  இவர் கூட ஓட்டுன வரைக்கும் நம்பிக்கையே வரல..

ரெண்டாவது - ஆதி.. இவர் நம்ம வயசுக்காரர்.. அதனால பயிற்சி ரொம்பவே இயல்பா இருக்கும்.. இப்போதைக்கு நான் சொல்ற மாதிரி ஓட்டு, நாளாக ஆக நீயே உனக்குன்னு ஒரு ஸ்டைல்ல (?!) ஓட்டுவ, அப்படிம்பார்.. எனக்கு பிரச்சனையே, வேகமாப் போக பயப்படறது தான்.. பின்னாடி வர்றவங்க எல்லாம் பொறுமையிழந்து போயி ஹாரன் அடிப்பாங்க.. ஒரு நாள் ரொம்ப நொந்து போய்ச் சொன்னார் - உன்னைய நம்பி நான் என் வாழ்க்கையவே பணயம் வச்சு இந்தக் கார்ல உட்கார்ந்திருக்கேன், நீயும் பதிலுக்கு என்னைய நம்பி தெகிரியமா ஓட்டனும்..

அதுக்கப்புறம் நிலைமை கொஞ்சம் சுமாராச்சு.. ஒருக்கா, இறக்கத்துல (downhill) போறப்ப, யாராயிருந்தாலும் தன்னிச்சையா இந்த இடத்துல ப்ரேக் போட்டிருப்பாங்களே, உனக்கு அது தோணலையா ன்னு ஆதிரேயன் கேட்டார்.. நாமல்லாம் யாரு?! கஷ்டப்பட்டு பெடல மிதிச்சு, மேடேறி, மேடு தாண்டினதும் வர்ற இறக்கத்துல, ரெண்டு கையையும் விட்டுட்டு சும்மா சல்லுன்னு சைக்கிள்ல போனவங்களாச்சே.. நமக்கெல்லாம் அது தன்னிச்சையா வராதுன்னு சொல்லிட்டேன்.. இந்த வெத்துப் பெருமைக்கெல்லாம் குறைச்சலே இல்ல!

இதெல்லாம் கொஞ்சம் மணி நேரங்கள் தான், பத்தாதுன்னு, எக்ஸ் சொன்னாரு.. எல்போர்டா இருக்கற வரைக்கும் தனியா ஓட்டக் கூடாது; அதனால அவரு கூட எங்கயாச்சும் போயி நல்லா பழகனும்.. எங்க போக? அப்பத்தான் இந்த எல்போர்ட் மண்டையில ஒரு "பயங்கரமான" யோசனை உதிச்சது.. நம்ம வீட்டுப் பக்கத்துல ஒரு cemetry இருக்கே (அர்த்தம் தெரியாதவங்க தேடிப் பிடிச்சு படிச்சுக்கோங்க :) ), அங்க போனா "யாருக்கும்" எந்தப் பிரச்சனையும் இருக்காதேன்னு! சும்மா சொல்லக் கூடாது.. நெறைய ரோடுங்க, குறுக்கும் நெடுக்குமா போட்டு வச்சிருந்தாங்க.. அந்தப்பக்கம் இந்தப்பக்கம்ன்னு திருப்பிப் பழகறதுக்கு ரொம்பவே உபயோகமா இருந்தது.. எப்பவாச்சும் ஒருக்காத் தான் ஏதாவது வண்டி கண்ணுல படும்.. மீதி நேரமெல்லாம் எங்க ராஜ்ஜியம் "மட்டுந்" தான்.. அங்க பல மணிநேரங்கள் ஓட்டின பிறகு, வாழ்க்கையில கொஞ்சம் நம்பிக்க வந்தது (?!)..

எங்க வீட்டுல இருந்து கொஞ்சம் தொலைவுல, நல்ல இயற்கை வளத்தோட, ரெண்டு பக்கமும் அடர்ந்த மரங்களோட, லேசான வலைவுகளோட, பாதைகள் உண்டு.. இங்க கொஞ்சம் நேரம் ஓட்டிப் பழகினேன்.. மழை லேசாத் தூறும் போது, இந்த மாதிரி இடத்துல, வேற யாராவது வண்டி ஓட்ட, உட்கார்ந்து பாட்டு கேட்டுக்கிட்டு வர்றது, சுகமான அனுபவம் - அப்படின்னு எக்ஸ் சார்பா நானே சொல்லிக்கறேன்.. என்ன, அப்பப்ப எதிர்தாப்புல வர்ற சிக்னல், ஸ்டாப் சைன் - இதெல்லாம் கவனமாப் பாத்து சொல்லிக்கிட்டே வரணும் :))


பிகு: கார்ல பயிற்சி ஆரம்பிக்கறதுக்கு முன்னால, பயிற்சிப் பள்ளில,  சாலை விதிகள் பத்தின வகுப்பு நடந்தது.. ஆதிரேயன் தான் சொல்லிக் கொடுத்தார்.. எல்லா நாடுகள்லயும், ஸ்டாப் சைன், ஓரளவுக்கு ஒரே மாதிரி தான் இருக்கும் அப்பிடின்னு சொல்லிட்டு, வெளிநாட்டு ஆளுங்க ரெண்டு மூணு பேர எழுப்பிவிட்டு, சொன்னது சரிதானன்னு கேட்டார்.. என் போதாத நேரம், என்னையும் எழுப்பி விட்டுட்டார்..  எங்க நாட்டுல நான் ஸ்டாப் சைனையே பாத்ததில்ல அப்பிடின்னு ஒரே போடாப் போட்டேன்.. கொஞ்சம் நேரம் விவாதம் பண்ணுனார் - அதில்லாம எப்படின்னு.. அப்பிடித் தான், வேணும்னா நீங்களே வந்து பாத்துக்கோங்கன்னு சொல்லிட்டு உட்கார்ந்துட்டேன்.. நீங்க யாரும் பாத்திருக்கீங்களா?

ஆவ்.. சொல்ல மறந்துட்டேன்.. இன்னொரு பாகம் இருக்கு! என்ன  செய்ய? பேச ஆரம்பிச்சா நிறுத்த முடியறதே இல்ல! 

24 October 2010

உணவு, காதல்

நேற்று முன் தினம்.. ஆஷா, எங்க அலுவலகத்தில் வேலை/படிப்பு கற்கும் ஒரு சக பணியாளர்.. இவர், புலம் பெயர்ந்ததொரு இந்தியப் பெற்றோருக்கு, அமெரிக்காவில் பிறந்து, இங்கேயே வளர்ந்தவர்.. பெற்றோரின் பூர்வீகம் வட இந்தியா..  ஒன்றிரண்டு வருடங்களுக்கு ஒரு முறை அங்கு சென்று வருவது வழக்கம்..  வெள்ளி மாலை, வழக்கத்துக்குப் புறம்பாக, வேலை குறைவாக இருந்தது.. மெதுவாகப் பேச ஆரம்பித்தோம்..

நான் தமிழர் என்றதும் அவர் என்னிடம் முதலில் கேட்டது, இட்லி செய்யும் வித்தை :).. பின், அவரவர் கல்வி, குடும்பம் என, பேச்சு நீண்டது.. அவர் இன்னும் திருமணமாகாதவர்.. பையன் தேடிக் கொண்டிருக்கிறார்.. அதுக்கென்ன, சீக்கிரம் கிடைச்சிடுவான் என்று சொல்லிக் கொண்டிருந்தேன்.. எனக்கென்னமோ அப்படித் தோன்றவில்லை என்றார்.. ஏன் என்று கேட்டதற்கு, அவர் சொன்ன காரணம், உணவுப் பழக்கம்.. சைவம் என்பதையும் தாண்டி.. VEGAN என்பார்கள் ஆங்கிலத்தில்.. அதாவது, பால், தயிர், முட்டை, சீஸ் இதெல்லாம் கூட சாப்பிட மாட்டாராம்.. எனக்கு கொஞ்சம் தலை சுற்றித் தான் போனது.. முட்டை சாப்பிட மாட்டாரெனில், இங்கு விக்கும் ரொட்டிகள் கூட சாப்பிட முடியாது.. ஒரு பீட்சா கூட.. முட்டை கலக்காமலும் ரொட்டிகள் செய்கிறார்கள், அந்த பிராண்டை தெரிந்து வைத்துக் கொண்டால் எளிது தான் என்றார்.. தினமும் தனக்கென்று சமைத்து தான் சாப்பிடுகிறார்..

அமெரிக்காவில், பொதுவாக, அசைவ உணவுப் பிரியர்களே அதிகம்.. நிறைய பேர் தினமும் அசைவம் உண்கிறார்கள்.. இங்கு பிறந்து வளரும் இந்தியக் குழந்தைகளும், பொதுவாக, எல்லா வகை அசைவமும் (சிக்கன், போர்க், பீப், டர்கி) உண்பதைக் கண்டிருக்கிறேன்... இதற்கு சில விதிவிலக்குகளையும் கண்டிருக்கிறேன்..

சரி, மறுபடியும் கதைக்கு வருவோம்.. முதலில் சைவம் சாப்பிடுபவர் மட்டுமே துணையாக வேண்டும் என்று நினைத்ததாகவும், இப்பொழுது தன்னுடைய எதிர்பார்ப்பினை கொஞ்சம் தளர்த்திக் கொண்டதாகவும் சொன்னார்.. இருவகை உணவுகளுக்கும் ஒரே பாத்திரங்களைப் புழங்கினால் ஒத்துக் கொள்ள முடியுமா என்றேன்.. வேறு வழியில்லை என்றார்.. சைவ உணவு சாப்பிடுபவரே ஆனாலும், கொஞ்சம் பேர் flexible ஆக இருப்பார்கள்.. அவர்களுடைய பாத்திரங்களில் அசைவம் சமைத்தாலும் ஒன்றும் சொல்ல மாட்டார்கள்.. எங்கள் தோழி அறையில், அவரது கட்டில் மேலேயே வைத்து அசைவம் சாப்பிட்டு இருக்கிறோம் (அவர் இருக்கும் போது தான் :) ).. ஆனால், கொஞ்சம் பேருக்கு இதெல்லாம் பார்த்தாலே அருவருப்பாக இருக்கும்..

இதையெல்லாம் யோசித்திருந்தாலும், நம்ம ஆட்களில், சைவ-அசைவ ஜோடிகள் கொஞ்சம் பேரைக் கண்டிருப்பதால், நான் பாட்டுக்கு, அதெல்லாம் பிரச்சனையாகாது, அசைவ உணவுப் பழக்கம் இருந்தாலும், பையனைப் பிடித்திருந்தால் ஒத்துக்கொள் என்று சொல்லியிருந்தேன்.. என் எண்ணத்துக்கு நேர்மாறாக வந்து விழுந்தது, இன்று ஆனந்த விகடனில் நான் படித்த ஒரு கதை..

கதை ஆசிரியர், திரு எஸ்.ரா அவர்கள்.. கதையில், சைவ உணவுப் பழக்கம் உள்ள ஒரு பெண், அசைவ உணவுப் பிரியனைக் காதலித்து மணந்து, அவனது குடும்பத்தில் ஒருத்தியாக வாழும் நிலைமையில், அசைவ அருவருப்பினால் ஏற்படும் இன்னல்களும், அந்தப் பெண்ணுக்கு ஏற்படும் மனக்கசப்பும், படிக்கவே ரொம்ப கவலையாக, பதைபதைப்பாக இருந்தது.. கதையின் பெயர் - "ஜெயந்திக்கு ஞாயிற்று கிழமை பிடிப்பது இல்லை".. நம்மூர் உணவுப் பழக்கத்தை அறிந்தவர்களுக்கு இந்தத் தலைப்பை விளக்கத் தேவையில்லை :).. குடும்பம் (கணவன், மாமனார், மாமியார், நாத்தனார்) மொத்தமும், ஞாயிறு அன்று, அசைவம் சமைத்து ருசித்து உண்ண, தனித்து விடப்பட்டிருப்பார் கதை நாயகி.. அவளது கணவனுக்கு அசைவம் ரொம்பவே விருப்பம்.. முடிவில், அந்தப் பெண், இன்னும் எத்தனை வருடங்கள் இப்படி காலத்தை ஓட்ட வேண்டியிருக்குமோ என்று மனம் வெதும்பியிருப்பார்..

நேற்று முன் தினம் நான் ஆஷாவுக்கு சொன்னது தவறோ என்று இப்போது படுகிறது.. தினமும் ஒரு வேளையாவது சேர்ந்து உண்ணப் போகும் உணவு... அதற்கு சமைக்கும் நேரம் வேறு.. இருவருக்கும் ஓரளவுக்காவது ஒத்த ரசனை இருந்தால் தான் காதலும் உணவோடு சேர்ந்து ருசிக்கும் என்று தோன்றுகிறது.. ஓரளவு மட்டும் அசைவம் உண்ணுபவராக இருந்தால் பிரச்சனை இருக்கப் போவதில்லை தான்.. ஆனால், ஒருவர் மிகுதியான அசைவப் பிரியராகவும், இன்னொருவர் அசைவத்தைக் கண்டே அருவருப்பு கொள்பவராகவும் இருத்தல் கடினம் என்று படுகிறது.. நீங்க என்ன நினைக்கிறீங்க?

17 September 2010

ஆரவாரம்? ஆலிப்பு?? பேரிரைச்சல்?

இதற்கு என்னவென்று பெயரிட்டழைப்பது?

நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்..



ஏற்கனவே ஒரு முறை பார்த்தது தான்.. ஆனால் இந்த முறை சென்ற அளவுக்கு அருகில் செல்லவில்லை.. இந்த நாட்டிற்கு வரும் இந்தியர்கள் கண்டிப்பாக பார்த்திருப்பார்கள்.. அவர்களுக்கு இந்த இடுகை புன்னகையை மட்டுமே வரவழைக்கும் என்று நினைக்கிறேன்.. மற்றவர்களுக்கு பிரமிப்பை வரவழைக்கலாம்.. 

ஏகப்பட்ட கூட்டம்.. அதில் எண்பது சதவிகிதம் இந்தியர்களே இருந்தனர்.. திருப்பதிக்கு வந்த மாதிரி இருக்கு என்று சலித்துக் கொண்டார் சகோதரர்.. 

மணிக்கணக்காக காத்திருந்து நிமிடக்கணக்கில் அருகினில் தரிசனம் கிடைத்து பின் சாரலில் நனைந்த  பொழுது ஒரு சிலிர்ப்பு உண்டாயிற்று..  அப்பொழுது எடுக்கப்பட்டது தான் இது.. கேமராவின் மீது தண்ணீர் விழவே, பயந்து அதை உறையின் உள்ளே வைத்து விட்டேன்.. இதிலேயே சில சொட்டுக்கள் தெறிப்பது தெரியும்.. அதுவும் நல்லதுக்குத் தான்.. இல்லையென்றால் முழுவதையுமே லென்ஸ் வழியே தான் பார்த்திருப்பேன் என்று நினைக்கிறேன்.. :)

பின்னொரு இடத்தில் மறுபடியும் நனைய வாய்ப்பு கிடைத்தது.. அதுவும், நேரடியாக அருவியில் இருந்து தெறித்து விழும் நீரில்.. அந்த உணர்வை என்னவென்று விவரிப்பது? மறுபடியும் வார்த்தை தடுமாறுகிறது.. ecstasy? அப்பா.. என்ன வேகம்.. இத்தனைக்கும் மிகக் குறைவான நீர் நம் மீது விழும்.. அதனை நோக்கியவாறு நின்றால் மூச்சு முட்டிவிடும்..  முதுகைக் காட்டியவாறு தான் நின்றாக வேண்டும்.. என்னமோ தெரியவில்லை.. இயற்கையின் வேகத்தை, அந்தச் சக்தியை,  நனைந்தவாறே கையெடுத்து கும்பிடத் தோன்றியது..  

இதில் குதித்து உயிருடன் மீண்டு வந்து சாதனை புரிய வேண்டும் என்று கொஞ்சம் ஆட்கள் முயன்றிருக்கிறார்கள்.. அநேகம் பேர் தப்பியதில்லை.. பிழைத்த சம்பவங்கள் இரண்டினைச் சொல்லிப் போகிறேன்.. சுமார் அறுபது வயது மூதாட்டி ஒருவர், மரப் பேரலின் உள்ளே பஞ்சு மெத்தை போட்டு, அதிலிருந்தவாறே உருண்டு வீழ்ந்திருக்கிறார்.. அவருடன் ஒரு பூனையும் :).. இருவரும் தப்பி விட்டார்கள்.. இன்னொரு சம்பவம் நெகிழ்ச்சியானது..  அக்கா தம்பி என இரு சிறுவர்கள், ஒரு படகோட்டியுடன் அருவிக்கு மேலே உள்ள ஆற்றில் பயணிக்கையில், படகு பழுதடைந்து விட, படகோட்டி இருவருக்கும் லைப் போட் மாட்டி விட்டு விட்டு படகைச் சரி செய்ய முயன்றிருக்கிறார்.. சிறுவன் அதற்குள் படகில் இருந்து விழுந்து, பின் அருவியில் இருந்து வீழ்ந்து.. அக்கா அவனைப் பார்த்து கதறியவாறே கரையோரமாக ஆற்றோட்டத்தில் அடித்து வரப்பட, வீழும் இடத்துக்கு சற்றே முன்னர் வேடிக்கை பார்க்க வந்த ஆட்களால் காப்பாற்றப் பட்டு விடுகிறார்.. அருவியில் வீழ்ந்த தம்பியும் சிறு காயங்களுடன் மட்டும் படகோட்டியவர்களால் கண்டெடுக்கப்பட்டு பிழைத்து விடுகிறார்.. ஆனால்.. படகோட்டியவர் உயிர் பிழைக்கவில்லை.. இதில் ஆச்சர்யம் என்னவென்றால், தவறி விழுந்த இருவரும் பிழைத்து விடுகையில், சாதனை செய்ய முயன்றவர்களில் பெரும்பாலானோர் தப்பியதில்லை!!

இன்னொரு முறை சென்றால் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை.. இதை விடவும் நன்றாக இருக்கலாம்.. இல்லை சலிப்பாகவும் தோன்றலாம்.. 

பி. கு:

ecstasy - இந்த வார்த்தையை இங்கு பிரயோகிப்பது சரி தானா என்ற சந்தேகம் வர, கூகிளில் போட்டுத் தேடிய போது வந்த விவரங்கள் வேறு..  எனவே அர்த்தம் தேடிப்பார்ப்பவர் யாரும் சந்துவை தவறாக நினைத்து விடாதீர்கள்.. :) ecstasy meaning என்று தேடியபின் ஓரளவுக்கு நிலைமை சரியானது.. :) ஏற்கனவே பூங்கதிர் தேசத்து தண்ணீரைக் குடித்து மயங்கிய ஆட்களெல்லாம் இருக்கிறார்கள்.. 


13 August 2010

நதிபோலே ஓடிக் கொண்டு இரு...



எதயும் எழுத மூட் இல்லை.. படிக்கவும்.. ஏன், எதற்குமே இப்போ மூட் இல்லை.. இந்தத் தலைப்பும் எனக்கு நானே அறிவுருத்திக்கொள்வது..

ஓரிடத்தில் இருந்து இன்னொரு ஊருக்கு மாறுகிறேன்.. மீண்டும் அங்கு என்றாவது செல்வேனோ தெரியவில்லை.. சொல்லாதீங்கோ என்று சொல்லியிருந்தும் மிஸ் யூ சொல்லி கலங்க வைத்தாயிற்று..

நதியானது எத்தனையோ இடங்களை, வனங்களை, மனிதர்களை பார்த்திருந்தாலும் , தான் போகும் வழியெங்கும் ஈரத்தை மிச்சம் விட்டுச் சென்றாலும், தன் இலக்கு நோக்கி ஓடிக் கொண்டே தான் இருக்கிறது.. நானோ இப்போதைக்கு கலங்கிய குட்டை போல நேற்றைய தேதியிலேயே தேங்கி நிற்கிறேன்..

எல்லாம் கொஞ்சம் நாட்களுக்குத் தான்.. சரியாகிக்கொண்டிருக்கிறேன்.. இன்னும் ஓரீரு நாட்களில் சரியாகிவிடுவேன் என்று தோன்றுகிறது..



21 March 2010

என்ன செய்ய?? அட என்ன செய்ய??

சரி பொன்னுத்தாயி.. நாங்க கிளம்பறோம்.. நேரமாச்சு.. போயித் தூங்கோனும்.. குட்டிப் பையா.. டாட்டா.. போயிட்டு வரோம்ங்க.. நீங்களும் முடியும் போது அங்க ஒரு நட வாங்க..

இரு இரு.. ஒரு நிமிஷம் நில்லு..

என்ன??

இந்தா.. பிரியாணி கொஞ்சம், குழம்பு கொஞ்சம் எடுத்துட்டுப் போ..

இல்ல.. வேண்டாம்..

அட உங்க சொந்தக்காரர் வந்திருக்கார்ன்னு சொன்னல்ல.. அவருக்கு கொடு..

இல்ல நீங்க ராத்திரிக்கு சாப்பிடுங்க..

எங்களுக்கு நிறைய இருக்கு.. ஒரே நிமிஷம்.. பேக் பண்ணித் தந்துடறேன்...

ம்ம்.. ரொம்ப நன்றி.. 

-------------------------------------------------------------------------------------------------------------

யப்பா.. ஒரு வழியா வீடு வந்தாச்சு.. செரியான மழ!!

இனிமே இந்த மாதிரி மழைல எல்லாம் கார்ல லாங்ட்ரைவ் போவக்கூடாது..

ம்ம்.. ஆமா.. என்ன இன்னைக்கு அபார்ட்மெண்ட் ஒரே இருட்டா இருக்கு?

ஓ.. ச்ச.. கரண்ட் போயிடுச்சு..

என்னது? அப்படி கூட நடக்குமா இங்க?

பின்ன? மழ பேயுது.. எல்லா வீடும் இருட்டாயிருக்கு? நிறைய பேர் வெளிய கிளம்பி போயிட்டு இருக்கற மாதிரி இருக்கு..

இல்ல.. அங்க கம்பத்துல லைட் எல்லாம் எரியுதே?

அது வேற கனெக்‌ஷன் போல..

பாரு.. கேரேஜ் ல கூட லைட் இல்ல.. நிறைய இடம் காலியாக்கிடக்கு.. எல்லாரும் வேறயெங்கயாவது போறாங்க போல..

காத்து இந்த அடி அடிக்குது.. மரங்கிரம் மேல சாஞ்சுடப் போவுது.. சீக்கிரமா வா..

-------------------------------------------------------------------------------------------------------------

கதவைத் தட்டியதும் வந்து திறந்து விடுகிறார் சுப்பரமணியண்ணன்..

அப்பாடி வந்துட்டீங்களா?

அப்ப நெசமாலுமே வீட்டுல கரண்ட் இல்ல..

நீங்க வர்ற வரைக்கும் என்ன பண்றதுன்னு தெரியல.. அதான் நானே உருள சப்ஜி பண்ணிட்டேன்.. பாதி பண்ணிட்டு இருக்கும் போது கரன்ட் போயிடுச்சு..

என்ன செய்ய? என்ன செய்ய? என்ன செய்ய? என்ன செய்ய????????????

ஆமா.. ஏதாவது டார்ச் லைட் இருக்கா?

இல்லன்னு தான் நினைக்கறேன்..

இல்ல.. இருந்துச்சு.. அதுவும் கைக்கெட்டறா மாதிரி முன்னாடியே தான் செல்ஃபுல வச்சிருந்தேன்..

உங்க செல்ல ஆன் பண்ணுங்க அண்ணே.. பாப்போம்..

அப்பாடி கிடைச்சிடுச்சு..

மெழுகுவர்த்தி ஏதாச்சும் இருக்கா?

ம்ஹூம்..

அட நாளைக்கு காலைல நான் கெளம்போனுமப்பா.. ப்ளைட் ஸ்டேட்டஸ் பாக்கனும்..

பாக்கலாம்.. ஆ.. கரண்ட் இல்லன்னா இண்டர்னெட் வேல பண்ணாதே..

ஆஃபீஸ் ஐ டச் ல பாக்க முடியுமா?

இல்ல அதுக்கும் இங்கத்த நெட்வர்க் வேணும்..

நான் என்னோட ப்ரெசெண்டேசன் இன்னைக்கு முடிச்சி அனுப்பனுமே.. ஆஆஆஆ.. என் லேப்டாப்புல சுத்தமா சார்ஜ் இல்ல.. என்ன பண்ண?

அடுப்ப அணைங்க.. தீஞ்சுடப் போவுது..

அடுப்ப ஆஃப் பண்ணிடாத.. மறுபடியும் ஆன் ஆவாது..

ஏன்... இது கேஸ் அடுப்பு தான்.. கரண்ட் அடுப்பு இல்ல.. 

ஆமா.. ஆனா அது ஆன் ஆவறதுக்கும் கரண்ட் வேணும் போல???

அப்படியா? எங்க நான் பாக்கறேன்.. அட ஆமா.. ஆனாவ மாட்டீங்குது.. கொடுமடா சாமீ.. இருங்க எப்பவோ ஒருக்கா வாங்குன அடுப்பு லைட்டர் ஒன்னிருக்குது.. அத ஒருக்கா டெஸ்ட் பண்ணிப் பாத்துடலாம்..

ம்ம்.. இத பத்து வாட்டி க்ளிக் பண்ணினா ஒரு வாட்டி பத்துது..

சரி சரி.. அப்ப அது போதும்..

நீங்க சமைச்சத விடுங்கண்ணே.. காத்தாலைக்கு பாத்துக்கலாம்.. எம் ஃப்ரெண்டு சாப்பாடு கொடுத்தனுப்பியிருக்கா உங்களுக்கு.. இருங்க ஒரு நிமிஷம் சூடு பண்ணியாறேன்.. அடக்கொடுமையே.. மைக்ரோவேவுக்கும் கரண்ட் வேணுமில்ல...

பரவாயில்ல அப்படியே சாப்பிடலாம்..

எனக்கு ரொம்ப குளிருது.. அப்ப இன்னிக்கு ரூம் ஹீட்டரும் கிடையாதா??


இப்போதைக்கு ஸ்வெட்டரப் போட்டுக்க.. பாக்கலா

ஏம்ப்பா.. ப்ளைட்க்கு என்னப்பா பண்ண?

இருங்க.. கருப்பனுக்கு போனப் போடறேன்.. அப்படியே அவன மெழுகுவர்த்தி வாங்கிட்டு வரச் சொல்றேன்.. நீ அந்த டார்ச் லைட்ட ஆஃப் பண்ணு.. அதுவும் மங்கலாயிட்டே வருது.. 

கருப்பனின் நிலைமையோ அதை விட மோசமாயிருந்தது..

(தொடரும்..)

அடிக்க வராதீங்க ஆரும்.. பெருசா இருக்கு.. மிச்சத்த நாளைக்கு ரிலீஸ் பண்ணிடறேன்..

09 January 2010

தோல்வியின் வெற்றி..

கதையின் முதல் பகுதியை இங்கு கண்டோம்..

முதல் பகுதி

ஒரு வாரத்துக்கு முன்பு, இதே போன்ற ஒரு விடுமுறை நாள்.. நான் மதியம் வீட்டில் படித்துக் கொண்டு இருந்தேன்.. இம்முறையும் தனியே.. தனித்திருக்கும் போது நடக்கும் சம்பவங்கள் மனதில் பதிந்துவிடுகின்றன போலும்..

திடீரென்று கதவுடைபடும் அளவுக்கு ஒரு சத்தம் கேட்டது..

நான் வழக்கம் போலவே பயந்து போனேன்.. யாரேனும் திருடர்கள் வந்துவிட்டனரோ என்று.. இருக்கையிலிருந்து எழவே மனமில்லை.. என்னுடைய செல்போனைக் கையிலெடுத்து வைத்துக் கொண்டு மேலும் சில வினாடிகள் கதவைப் பார்த்தவாறே அமர்ந்திருந்தேன்..

மேற்க்கொண்டு எந்தச் சத்தமும் எழவில்லை.. சற்று நடுக்கத்துடன் கதவின் லென்ஸ் வழியே எட்டிப் பார்த்தேன்..

அங்கே ஒரு சிறுவன் ஸ்கேட்டிங் போர்டுடன் விழுந்து கிடந்தான்..

கதவைத் திறப்பதா வேண்டாமா என்று ஒரே யோசனை.. ஜன்னல் வழியே வெளியே நோக்கினால் வேறு யாரும் தென்படவில்லை..

லென்ஸ் வழியே மறுபடியும் பார்த்தேன்.. சிறுவனிடத்தில் எந்த அசைவும் இல்லை..

பின் ஒரு வழியாக மனதை திடப்படுத்திக்கொண்டு, கதவினை பாதி திறந்து வைத்து, அவனிடம் பேசினேன்.. ஆங்கில உரையாடல்.. தமிழில்..

என்னப்பா, என்னாயிற்று உனக்கு..

ஒன்றும்மில்லை..

இப்படி விழுந்து கிடக்கிறாயே..

மன்னித்துக் கொள்ளுங்கள்.. உங்கள் கதவின் மீது மோதி சப்தம் எழுப்பி விட்டேன்..

எனக்கு கொஞ்சம் தைரியம் வந்தது..கதவை இன்னும் சற்று திறந்து அவனை நோக்கினேன்..

பதின் வயதுக்காரன்.. காலில் ஸ்கேட்டிங் போர்ட் அணிந்திருந்தான்.. தலையில் ஹெல்மெட்.. கை, கால் இரண்டுக்கும் போதிய அளவு பேட் வைத்துக் கட்டியிருந்தான்.. இப்பொழுது தான் என்னால் அவனைப் பார்த்து புன்னகைக்க முடிந்தது.. ஹைஸ்கூல் சிறுவனென்றாலும், என்னுடைய அச்சம் முழுதும் அகலவில்லை..

Example

இப்போ எப்படியிருக்கிறது?

பரவாயில்லை..

நான் உன்னைத் தூக்கி விடட்டுமா?

இல்லயில்லை.. நானே எழுந்து கொள்வேன்..

எங்கிருக்கிறது உன் வீடு?

இதே காம்ப்ளக்சில் தான்..

பேசியவாறே கைகளைக் கீழே ஊன்றி மெல்ல எழுந்து நின்றான்.. அவனருகில் வந்தேன்..

உன்னால் கை கால்களை நன்றாக அசைக்க முடிகிறதா? எங்கேனும் வலியிருந்தால் சொல்..

எனக்கொன்றுமில்லை.. நன்றாகத் தான் இருக்கிறேன்.. (இந்த வயதுக் குழந்தைகள் பயமறியாக் கன்றுகள்..)

நடந்து பார்த்துச் சொல்.. (ஏதேனும் ஃப்ராக்சர் ஆகியிருக்குமோ என்ற கவலை எனக்கு..

ஒன்றுமில்லை..

நடக்க முடியுந்தானே?

ம்ம்..

வீடு வரை உடன் வரவா?

வேண்டாம்.. நானே சென்று விடுவேன்..

மெல்ல நடக்க ஆரம்பித்தான்..

உன் அப்பா அம்மாவிடம் மறக்காமல் நடந்ததைச் சொல்லிவிடு.. வலியேதுமிருந்தால், மருத்துவரிடம் சென்று வாருங்கள்..

நன்றி..

அவன் சென்று விட்டிருந்தான்..

நான் வீட்டுக்குள் வந்து கதவை தாழிட்டேன்.. எனக்குள் சிறு குற்ற உணர்வு எழும்பி மறைந்த வண்ணமிருந்தது..

(தொடரும்..)

இந்தச் சம்பவம் தான் இத்தனை நாள் கழித்து கதை நினைவில் வரக் காரணம்.. அதான்.. சொல்லிவிட்டேன்..

04 January 2010

செல்லமாய்ச் செல்லம் என்றாங்கடா..

இந்தக் கொடுமைய எங்க சொல்றதுன்னு தெரியாம இங்க சொல்லிட்டுப் போறேன்..

இன்னிக்கி சாயந்திரம் தனியாளா :) வீட்டுல இருந்து வெளிய வந்தேன் - அபார்ட்மண்ட் ஆபிஸுக்கு போறதுக்காக. ஒரு பத்தடி எட்டி வச்சதும்.. அந்தக் கண் கொள்ளாக் காட்சி.. பகீர்ன்னுது.. திரும்பிப் போய்டலாமா இல்ல தெகிரியமா முன்னேறலாமான்னு ஒரு பத்து செகண்ட் யோசன பண்ணிட்டேன்.. அந்த கன நேரத்துல நம்மள நோக்கி.. நாலுகால் பாய்ச்சல்.. கூச்சல்..

ஆ.. ப்ளீஸ்.. ப்ளீஸ்.. ஸ்டாப் இட்.. வாட் இஸ் திஸ்... ஓ நோ.. (பீட்டரில்லீங்க, என்ன செய்ய, செல்லம் இந்தூர்க்காரராச்சே)

நகரக்கூட முடியாம ஃப்ரீஸ் ஆகி நின்னுட்டு.. கண்ணுல கண்ணீரெல்லாம் வந்து.. தட தடன்னு அடிச்சிகிட்டு (ஹார்ட்டு தாங்க).. ஓ நோ..

பாஞ்சு வந்த செல்லம் நம்ம கிட்ட வந்ததும் சுத்தி ஒரு ரவுண்ட் போனாரு.. கடிக்கலாமா வேணாமான்னு சின்ன டைலமா போல.. நல்லவேளையா வாயில பந்தைக் கொடுத்திருந்தாங்க அந்த தத்தெடுத்த புண்ணிவானுங்க.. இல்லாட்டி பந்துக்கு பதிலா எங்காலத்தான் கவ்விட்டு ஓடிருப்பாருன்னு நினைக்கறேன்..

திரும்பி ஓடினார்.. நேரா அவங்க கிட்ட.. அவங்க அவரை செல்லமா பிடிக்க முயற்சி (??!!) எல்லாம் பண்ணுனாங்க.. அவரா சிக்குவார்?

மறுபடியும் நம்மள நோக்கி... ரீப்பீட்டேய்..

Example

ஆ.. ப்ளீஸ்.. ப்ளீஸ்.. ஸ்டாப் இட்.. வாட் இஸ் திஸ்... ஓ நோ..

நகரக்கூட முடியாம ஃப்ரீஸ் ஆகி நின்னுட்டு.. கண்ணுல கண்ணீரெல்லாம் வந்து.. தட தடன்னு அடிச்சிட்டு (ஹார்ட்டு தாங்க).. ஓ நோ..

பாஞ்சு வந்த செல்லம் நம்ம கிட்ட வந்ததும் சுத்தி ஒரு ரவுண்ட் போனாரு.. கடிக்கலாமா வேணாமான்னு சின்ன டைலமா போல.. நல்லவேளையா வாயில பந்தைக் கொடுத்திருந்தாங்க அந்த தத்தெடுத்த புண்ணிவானுங்க.. இல்லாட்டி பந்துக்கு பதிலா எங்காலத்தான் கவ்விட்டு ஓடிருப்பாருன்னு நினைக்கறேன்..

திரும்பி ஓடினார்.. நேரா அவங்க கிட்ட.. அவங்க அவரை செல்லமா பிடிக்க முயற்சி (??!!) எல்லாம் பண்ணுனாங்க.. இந்தவாட்டி சிக்கிட்டார்..

என்னென்னமோ கேட்கனும்னு தோனுச்சு.. பதிலுக்கு அவங்க கைல இருந்த பிடிய விட்டுட்டாங்கன்னா???

கண்ணுல வழிஞ்சத தொடச்சிகிட்டு நடையக் கட்டுனேன் நானும்.. (அம்புட்டு நல்லவிங்கன்னு நெனச்சு ஏமாந்துறாதீங்க.. சொல்ல வேண்டிய இடத்துல சொல்லிடுவம்ல?)

இங்க மட்டுமில்லீங்க.. ஊர்லயும் செல்லங்கள் இருக்கற வீட்டுக்கு போனா(விருந்தாளியாத் தான்) இந்தக் கொடும நடக்கும். செல்லங்கள் வளர்ப்போரே.. உங்களுக்கு வேனும்னா இதுகள் செல்லங்களா இருக்கலாம்.. எங்களுக்கெல்லாம் டெரரிஸ்ட்ஸ்.. இன்னும் கொஞ்சம் கவனமா இருக்கலாமே?

செல்லமாய்ச் செல்லம் என்றாங்கடா..
டாகி என்றே சொன்னாங்கடா..
பாய்ந்தோடிவந்து என்னை அழ வைத்தாய் கண்ணா..