24 October 2010

உணவு, காதல்

நேற்று முன் தினம்.. ஆஷா, எங்க அலுவலகத்தில் வேலை/படிப்பு கற்கும் ஒரு சக பணியாளர்.. இவர், புலம் பெயர்ந்ததொரு இந்தியப் பெற்றோருக்கு, அமெரிக்காவில் பிறந்து, இங்கேயே வளர்ந்தவர்.. பெற்றோரின் பூர்வீகம் வட இந்தியா..  ஒன்றிரண்டு வருடங்களுக்கு ஒரு முறை அங்கு சென்று வருவது வழக்கம்..  வெள்ளி மாலை, வழக்கத்துக்குப் புறம்பாக, வேலை குறைவாக இருந்தது.. மெதுவாகப் பேச ஆரம்பித்தோம்..

நான் தமிழர் என்றதும் அவர் என்னிடம் முதலில் கேட்டது, இட்லி செய்யும் வித்தை :).. பின், அவரவர் கல்வி, குடும்பம் என, பேச்சு நீண்டது.. அவர் இன்னும் திருமணமாகாதவர்.. பையன் தேடிக் கொண்டிருக்கிறார்.. அதுக்கென்ன, சீக்கிரம் கிடைச்சிடுவான் என்று சொல்லிக் கொண்டிருந்தேன்.. எனக்கென்னமோ அப்படித் தோன்றவில்லை என்றார்.. ஏன் என்று கேட்டதற்கு, அவர் சொன்ன காரணம், உணவுப் பழக்கம்.. சைவம் என்பதையும் தாண்டி.. VEGAN என்பார்கள் ஆங்கிலத்தில்.. அதாவது, பால், தயிர், முட்டை, சீஸ் இதெல்லாம் கூட சாப்பிட மாட்டாராம்.. எனக்கு கொஞ்சம் தலை சுற்றித் தான் போனது.. முட்டை சாப்பிட மாட்டாரெனில், இங்கு விக்கும் ரொட்டிகள் கூட சாப்பிட முடியாது.. ஒரு பீட்சா கூட.. முட்டை கலக்காமலும் ரொட்டிகள் செய்கிறார்கள், அந்த பிராண்டை தெரிந்து வைத்துக் கொண்டால் எளிது தான் என்றார்.. தினமும் தனக்கென்று சமைத்து தான் சாப்பிடுகிறார்..

அமெரிக்காவில், பொதுவாக, அசைவ உணவுப் பிரியர்களே அதிகம்.. நிறைய பேர் தினமும் அசைவம் உண்கிறார்கள்.. இங்கு பிறந்து வளரும் இந்தியக் குழந்தைகளும், பொதுவாக, எல்லா வகை அசைவமும் (சிக்கன், போர்க், பீப், டர்கி) உண்பதைக் கண்டிருக்கிறேன்... இதற்கு சில விதிவிலக்குகளையும் கண்டிருக்கிறேன்..

சரி, மறுபடியும் கதைக்கு வருவோம்.. முதலில் சைவம் சாப்பிடுபவர் மட்டுமே துணையாக வேண்டும் என்று நினைத்ததாகவும், இப்பொழுது தன்னுடைய எதிர்பார்ப்பினை கொஞ்சம் தளர்த்திக் கொண்டதாகவும் சொன்னார்.. இருவகை உணவுகளுக்கும் ஒரே பாத்திரங்களைப் புழங்கினால் ஒத்துக் கொள்ள முடியுமா என்றேன்.. வேறு வழியில்லை என்றார்.. சைவ உணவு சாப்பிடுபவரே ஆனாலும், கொஞ்சம் பேர் flexible ஆக இருப்பார்கள்.. அவர்களுடைய பாத்திரங்களில் அசைவம் சமைத்தாலும் ஒன்றும் சொல்ல மாட்டார்கள்.. எங்கள் தோழி அறையில், அவரது கட்டில் மேலேயே வைத்து அசைவம் சாப்பிட்டு இருக்கிறோம் (அவர் இருக்கும் போது தான் :) ).. ஆனால், கொஞ்சம் பேருக்கு இதெல்லாம் பார்த்தாலே அருவருப்பாக இருக்கும்..

இதையெல்லாம் யோசித்திருந்தாலும், நம்ம ஆட்களில், சைவ-அசைவ ஜோடிகள் கொஞ்சம் பேரைக் கண்டிருப்பதால், நான் பாட்டுக்கு, அதெல்லாம் பிரச்சனையாகாது, அசைவ உணவுப் பழக்கம் இருந்தாலும், பையனைப் பிடித்திருந்தால் ஒத்துக்கொள் என்று சொல்லியிருந்தேன்.. என் எண்ணத்துக்கு நேர்மாறாக வந்து விழுந்தது, இன்று ஆனந்த விகடனில் நான் படித்த ஒரு கதை..

கதை ஆசிரியர், திரு எஸ்.ரா அவர்கள்.. கதையில், சைவ உணவுப் பழக்கம் உள்ள ஒரு பெண், அசைவ உணவுப் பிரியனைக் காதலித்து மணந்து, அவனது குடும்பத்தில் ஒருத்தியாக வாழும் நிலைமையில், அசைவ அருவருப்பினால் ஏற்படும் இன்னல்களும், அந்தப் பெண்ணுக்கு ஏற்படும் மனக்கசப்பும், படிக்கவே ரொம்ப கவலையாக, பதைபதைப்பாக இருந்தது.. கதையின் பெயர் - "ஜெயந்திக்கு ஞாயிற்று கிழமை பிடிப்பது இல்லை".. நம்மூர் உணவுப் பழக்கத்தை அறிந்தவர்களுக்கு இந்தத் தலைப்பை விளக்கத் தேவையில்லை :).. குடும்பம் (கணவன், மாமனார், மாமியார், நாத்தனார்) மொத்தமும், ஞாயிறு அன்று, அசைவம் சமைத்து ருசித்து உண்ண, தனித்து விடப்பட்டிருப்பார் கதை நாயகி.. அவளது கணவனுக்கு அசைவம் ரொம்பவே விருப்பம்.. முடிவில், அந்தப் பெண், இன்னும் எத்தனை வருடங்கள் இப்படி காலத்தை ஓட்ட வேண்டியிருக்குமோ என்று மனம் வெதும்பியிருப்பார்..

நேற்று முன் தினம் நான் ஆஷாவுக்கு சொன்னது தவறோ என்று இப்போது படுகிறது.. தினமும் ஒரு வேளையாவது சேர்ந்து உண்ணப் போகும் உணவு... அதற்கு சமைக்கும் நேரம் வேறு.. இருவருக்கும் ஓரளவுக்காவது ஒத்த ரசனை இருந்தால் தான் காதலும் உணவோடு சேர்ந்து ருசிக்கும் என்று தோன்றுகிறது.. ஓரளவு மட்டும் அசைவம் உண்ணுபவராக இருந்தால் பிரச்சனை இருக்கப் போவதில்லை தான்.. ஆனால், ஒருவர் மிகுதியான அசைவப் பிரியராகவும், இன்னொருவர் அசைவத்தைக் கண்டே அருவருப்பு கொள்பவராகவும் இருத்தல் கடினம் என்று படுகிறது.. நீங்க என்ன நினைக்கிறீங்க?

18 comments:

 1. இதெல்லாம் ஒரு பிரச்சனையா?எனக்கு மிக நெருக்கமாக தெரிந்த தோழி சுத்த சைவம்,அவர் கணவருக்கு மீன் இல்லாமல் முடியாது,தினமும் தனிச்சமையல் தான் அன்பாக அவருக்கும் சமைத்து தானும் சமைத்து வேலைக்கும் போய் ஆச்சரியப்பட்டிருக்கிறேன்,உண்மையான அன்பு முன்னாடி இதெல்லாம் தூசியாகிவிடும்,திருமணம் ஆன்பின்பு உங்கள் தோழி தேவையில்லாமல் பயந்ததாக சொல்வார்.இப்ப பெரிய மலைப்பாக தெரியும்,பின்பு ஈசியாகிவிடும்.அதில் யார் அட்ஜஸ்ட் பண்ணப்போறாங்க என்பதில் தான் இருக்கு.

  ReplyDelete
 2. //நீங்க என்ன நினைக்கிறீங்க? // நினைக்கிறது வேற. அனுபவிக்கிறது வேற. சிலரால் முடியும். சிலரால் முடியாது.

  கதை படிக்கல. ஞாயிறு 1/7 தானே. மீதி 6 நாள் சந்தோஷம் இருக்கே.

  இந்த டாபிக்ல நான் லெக்க்ஷரே வைப்பேன். ;) மத்தவங்க என்ன சொல்றாங்க என்று பார்க்கலாம் சந்தூஸ்.

  ஆளை ஆள் பிடிச்சுப் போச்சு என்றால் அட்ஜஸ்ட் பண்ணிருவாங்க. ;))

  ReplyDelete
 3. ம்ம்.. நானும் அந்தக் கதையைப் படிச்சேன்.. இந்தளவு ஒருவர் விருப்பத்தை(வெறுப்பை) ஒருவர் மதிக்காமல் இருப்பார்களா என்ன என்று ஆச்சர்யமாக இருந்தது. அதுவும் காதலித்து மணம் புரிந்தவர்கள். அந்தப் பெண்ணைப் பார்(படி)க்கப் பாவமாக இருந்தாலும், ஒரு இடத்தில் பள்ளியில் தோழி கருவாடு தின்றதை உடனிருந்து கவனித்ததாகச் சொல்லும் இடம் நெருடுகிறது. அதை ரசித்தவள், இதை ஏன் இப்படி வெறுக்க வேண்டும். அத்தோடு ஒரு குடும்பமே இப்படியா மூன்று வேளையும் அசைவத்தை மொக்குவார்கள் என்று கோபமாவும் இருந்தது. கதையில் நிறைய முரண்கள் தெரிந்தன.

  உங்கள் தோழி விஷயத்தில், அவர் தெரிந்தே முடிவு எடுப்பதால், இந்தளவு அதிர்ச்சியாகமாட்டார் என்றே தோணுகிறது. அவர் காம்ப்ரமைஸ் செய்துகொள்ள ரெடியாகத்தானே இருக்கிறார்.

  ReplyDelete
 4. சந்தூ, நானும் இந்த vegan டயட் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறேன். கொஞ்சம் கஷ்டம் தான் இவருக்கு வாழ்க்கைத்துணை கிடைப்பது என்று நினைக்கிறேன். சமீபத்தில் ஒரு நண்பர் வீட்டுக்கு போனோம் விருந்துக்கு. மனைவி வீட்டில் கறி, மீன் எதுவுமே சமைப்பதில்லையாம். கணவருக்கு அசைவம் வேண்டுமெனில் கடையில் தான் சாப்பிடுவாராம். இப்படிக் கூட இருப்பார்களா என்று நினைத்துக் கொண்டேன்.

  ReplyDelete
 5. சந்தூஸ்! நல்ல பதிவு!
  எனக்கும் சில விசயம் நெருடும்... அதெயெல்லாம் சொல்லி பயனில்லை... என்னோட தோழி இப்படி தான்.. இப்போ பிள்ளைகள் இரண்டு பேர் கணவர் எல்லாம் சிக்கன் ரைஸ் வேணுமாம்.. நேத்து தான் போனில் தெளிவா ரெசிபி சொன்னேன் :))

  ReplyDelete
 6. தமிழன்னாலே இட்லிதான் ஞாபகம் வரும் போல :))

  //ஆனால், ஒருவர் மிகுதியான அசைவப் பிரியராகவும், இன்னொருவர் அசைவத்தைக் கண்டே அருவருப்பு கொள்பவராகவும் இருத்தல் கடினம் என்று படுகிறது//

  ஈஸிதான்

  திருமண வாழ்க்கையே ஒருத்தருக்கொருத்தர் விட்டுக்கொடுத்து போறதுதானுங்களே!அப்படி இந்த விஷயத்திலயும் உங்க தோழி நடந்துப்பாங்க அதான் அவங்களே சொல்லிட்டாங்களே!

  கதைகளில் சொல்லப்பட்டிருப்பது பெரும்பாலும் உண்மையானவையே கிடையாது எனக்கு அந்த கதையப்படிச்சதும் எஸ்ரா ரொம்பவும் அதீத கற்பனைகள் நிரம்பியவற்றை நிஜ வாழ்க்கையோடு பொருத்திப்பார்க்கிறார் என்றே தோணியது!

  ReplyDelete
 7. //நீங்க என்ன நினைக்கிறீங்க? //

  உண்மையான லவ்வா இருந்தா வாழ்க்கையில எதுவுமே பிரச்சனை இல்லை.. ஒருத்தொருக்கொருத்த விட்டு குடுக்கும் குணம் ஆட்டோமேட்டிகா ரெண்டு பேருக்குமே வந்துடும்..

  அப்படி வரும் போது அங்கே அன்பு இன்னும் அதிகமாகுமே தவிர குறை எதுவுமே கண்ணுக்கு முன்னாடி தெரியாது..!!

  ReplyDelete
 8. ஆசியா.. நீங்க சொல்றது சரிதான்.. இப்பிடி இருந்துட்டா பிரச்சனையே இல்லையே..

  ஆனால் அசைவத்தின் தோற்றமும் வாசமும் சிலருக்கு அருவருப்பைத் தரலாம்.. எனக்குத் தெரிந்த ஒருவர், அசைவ ஓட்டல்களில், சைவம் கூட சாப்பிட மாட்டார்..

  ReplyDelete
 9. ம்ம்ம்.. வெள்ளிகிழமை அப்படிச் சொல்லிட்டு, ஞாயிறு இந்தக் கதைய படித்ததும் எனக்கு கொஞ்சம் உறுத்தலா போயிடுச்சு இமா.. சேர்ந்து வாழறது இவ்வளவு கஷ்டமோ, தெரியாம சொல்லிட்டமோன்னு..

  லவ்வு வேற, அட்ஜஸ்ட் பண்ணிக்கறது வேறன்னு தோணுது :) பார்த்தாலே குமட்டலைத் தர மாதிரி இருந்தா என்ன செய்ய முடியும்? //சிலரால் முடியும். சிலரால் முடியாது.// சரிதான்..

  ReplyDelete
 10. ஹூசைனம்மா.. நீங்களும் படிச்சாச்சா? எனக்கும் அந்தக் கணவன் மீதும் அவன் குடும்பத்தின் மீதும் தான் கோபம் வந்தது.. இப்படியும் மனிதர்கள் இருப்பார்கள் என்று தான் தோன்றுகிறது..

  தோழி கருவாடு உண்பதை கொஞ்சம் நெளிவோடு பார்ப்பதாகச் சொல்லியிருப்பார்.. ஆனால், வீட்டிலோ, சமைப்பதைப் பார்க்க நேரிடும் அருவருப்பினாலும். தனித்து விடப்படுவதாலும் தான் அந்தப் பெண்ணுக்கு துன்பம் அதிகமானது என்று தோன்றுகிறது..

  வாரத்தில் ஒரு நாள் என்பதால் நன்றாகத் தான் மொக்குவார்கள்.. ஊரில் உள்ள எங்கள் வீட்டிலும், காலை சிக்கன் குழம்பு, மதியம் மட்டன் குழம்பு, மற்றும் இரவுக்கு மீந்தது என்று தான் ஞாயிறு ஓடியிருக்கிறது..

  ReplyDelete
 11. வான்ஸ்.. நீங்கள் பார்த்த குடும்பத்தில் நல்ல புரிந்துணர்வோடு இருக்கிறார்கள்.. நான் பார்த்த சில குடும்பங்களிலும் இப்படி உண்டு.. சிறு வயதில் இருந்தே சாப்பிடாமல் இருந்தவர்களுக்கு, அசைவத்தைக் கையால் கூட தொட முடியாது..

  ஒன்றாகச் சேர்ந்து வசித்த காலங்களில், ரூம்மேட் பெண் ஒருவர், தன்னுடைய பாத்திரங்களில் அசைவம் சமைக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.. நாங்களும் அவரது விருப்புவெறுப்புக்கு மதிப்பளித்தோம்.. கத்தி, ப்ளேட் கூட அசைவத்துக்கு வேறு வேறு தான்.

  ReplyDelete
 12. நன்றி இலா.. ஆமாம். எனக்கும் தான்.. :)

  இங்கு சிக்கனை வெட்டியும் விற்கிறார்கள்.. அப்படியென்றால் கொஞ்சம் பட்டும் படாமலும் சமைத்து விடலாம்.. சொல்லிப்பாருங்க இலா..

  ReplyDelete
 13. அதையேன் கேட்கறீங்க வசந்த்.. இட்லி ரெசிப்பி ஒருக்கா சொல்லப் போய், ஒருவருக்கு தலை சுற்றல் வந்து விட்டது :)

  தோழிய விடுங்க.. விட்டுக்கொடுத்து நடப்பது சிறு விஷயங்களுக்கு சாத்தியம் தான்.. ஆனால், உணவில் தினமும் அசைவம் வேண்டும் என விரும்பினால் கடினம் என்று தான் தோன்றுகிறது..

  ம்ம்ம்.. எனக்கென்னமோ, ஒருவரின் விருப்புவெறுப்புகளை மதிக்காத ஒரு குடும்பத்தில் வாழ்க்கைப்பட்ட ஒரு பெண்ணுக்கு நேரும் துயரங்களைச் சொல்லியிருப்பதாகவே பட்டது.. இப்படியும் மனிதர்கள் இருக்கலாம் வசந்த்..

  ReplyDelete
 14. //உண்மையான லவ்வா இருந்தா வாழ்க்கையில எதுவுமே பிரச்சனை இல்லை.. ஒருத்தொருக்கொருத்த விட்டு குடுக்கும் குணம் ஆட்டோமேட்டிகா ரெண்டு பேருக்குமே வந்துடும்..//

  லவ் உண்மையாக இருந்தாலும், சகிப்புத்தன்மை என்று ஒன்று இருக்கிறது தானே ஜெய்? சகித்துக் கொள்ளவே முடியாத ஒன்றை எத்தனை நாளைக்கு பொறுத்துக்கொள்ள முடியும்? இது போன்ற துணை அமைந்தவர்களுக்கு, அசைவ உணவில் விருப்பம் உள்ளவர்கள் தான் வெளியில் சாப்பிட்டுக் கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது..

  ReplyDelete
 15. எங்கள் வீட்டில் இது தான் கதை சந்தனா. ஆனால் அவர் வெளியில் தான் சாப்பிடுவர். என் எதிரிலேயே சாபிடமட்டார் அசைவம் மட்டும். இப்போது அவரையும் மாற்றிவிட்டேன் சைவத்திற்கு:))))

  ஸ்வர்ணா

  ReplyDelete
 16. ஸ்வர்ணா.. (ஒரு டவுட்டு - நீங்க அதே சிங்கை ஸ்வர்ணா தானே?) சபாஷ்.. புரிதல்ன்னா இப்படித் தான் இருக்கணும்.. அவர மாத்தாதீங்க.. அசைவமாவே இருந்துட்டுப் போகட்டும் :)

  x (இதுக்கு பேரு அமெரிக்கால செக் சிம்பல் :))) ) நன்றி மஹி..

  ReplyDelete
 17. எல்லாத்துக்கும் மனசுதான் காரணம் சந்தூ. என் பாட்டி சைவம் ஆனால் தாத்தாவுக்கோ டீ குடிக்கும் போது கூட அசைவம் வேண்டும். பாட்டி எல்லாமே சமைத்துக் கொடுப்பார் அதுவும் ருசியாக (எனக்கும் சமைச்சுத் தந்திருக்காங்களே).

  எனக்கு திருமணம் நிச்சயம் செய்த பிறகு எங்க அம்மாவுக்கு ஒரே கவலை. பையன் அசைவம் சாப்பிடுவாரோ மாட்டாரோன்னு. ஏன்னா எனக்கு மீன் இல்லாமல் சாப்பாடு இறங்காது :). இதே கவலை அவருடைய அக்காவுக்கும். ஏன்னா இவருக்கும் மீன் இல்லாமல் சாப்பாடு இறங்காதாம். அப்புறமா ஒரு நாள் என் நாத்தனாரே எங்க அம்மாக்கிட்ட கேட்டதுக்கு அப்புறம்தான் ரெண்டு பேருக்கும் நிம்மதியாச்சு.

  என்னது நாங்க ரெண்டுபேரும் இது பத்தி யோசிச்சோமான்னு கேட்கறீங்களா? அதுக்கெல்லாம் ஏது நேரம் கடலை போடவே அந்த 6மாசமும் போதலை :) அதுல இதைப் பத்தி யார் கவலைப்பட்டா :)

  ReplyDelete

பழைய வரிய மாத்தச் சொல்லீட்டாங்க.. இப்ப புதுசு “என்ன சொல்லனும்னாலும் தெகிரியமா சொல்லிட்டுப் போங்க” :)