29 January 2010

திருவிளையாடல் ஆரம்பம்

தலைப்பைப் பாத்து என்னவோ எதோன்னு பதறிப்போயிட்டீங்களா? :))

ஒன்னுமில்ல.. எனக்கு லீவு முடிஞ்சுட்டதால ப்ளாக்கு ஒரு ரெண்டு மூணு மாசம் லீவு விடலாம்ன்னு இருக்கேன்..

இதனால உங்களுக்கு கிடைக்கும் நன்மை:

நான் போடுற மொக்கை எல்லாம் படிச்சு அதுக்கு ஒரு கமெண்ட் வேற போடற வேலைகள் - யாவும் மிச்சம்.

தீமை:

உங்க ப்ளாக் ல முன்ன விட அதிக வேகத்தோட வண்டி ஓட்டி வந்து முட்டி மோதி கமெண்ட் போட்டுட்டு போகும் இந்த எல்போர்டு.


மே மாதிரி இல்லாட்டி ஆகஸ்ட் க்கு அப்புறம்.. பார்ப்போம்..  இதுவரைக்கும் உங்க அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி..




ஆரது.. நமக்கும் விட்டாச்சு லீவுன்னு ஓடறது.. மறுபடியும் வந்துடுவம்ல.. லைசன்ஸோட..

28 January 2010

ரங்கோலி

இங்க எழுதறவங்க நிறைய பேர் தனக்குன்னு ஒரு genre வச்சிருக்காங்க.. தனக்கு என்ன நல்லா வருதோ அதை களமா தேர்ந்தெடுக்கறாங்க.. சிலர் மொக்கை, சிலர் கதை கவிதை கட்டுரை, சிலர் அரசியல், சிலர் தன்னோட ரசனைகள் பார்வைகள், சிலர் சீரியசா ஏதாவது பிரச்சனையப் பத்தி, பெண்கள் நிறைய பேர் சமையல், குடும்பம் அப்படின்னு.. இன்னும் கொஞ்சம் பேர் தனக்கு தெரிஞ்சத சொல்லித் தராங்க.. இதுல நான் ஏதாவது ஒரு வகைல ஃபிட் ஆவேன்னு தோணல.. பல மரமும் கண்ட தச்சான் ஒரு மரமும் வெட்டான் மாதிரி :) இன்னைக்கு இன்னொரு புது அட்டெம்ப்ட்..




 ~~~~~*****~~~~~

டொயோடா வச்சிருக்கீங்களா?

கோயிலுக்கு ஒருக்கா போயிருந்தப்போ கொஞ்சம் நண்பர்கள் அங்க வரிசையா பார்க் பண்ணியிருந்த காரையெல்லாம் பாத்துட்டு சிரிச்சாங்க.. டொஹோ.. டொஹோஹோ... டொஹோடொடொஹோ ன்னு :)) டொயோடா ஹோண்டா இந்த ரெண்டும் தான் இங்க  நம்மாளுங்களோட விருப்ப ப்ராண்ட்ஸ்.. இந்த ரெண்டையும் தவிர மத்த வண்டிகள் குறைவு தான்.. காரணம் - ரீ சேல் வேல்யூ இந்த ரெண்டுக்கும் அதிகம்ன்னு சொன்னாங்க.. அப்படி இந்த ரெண்டு கம்பெனிக்கும் நிரந்தர விசுவாசிகளா இருந்தவங்களுக்கு இப்போ ஆப்பு கொடுத்துட்டாங்க. ஹோண்டா வச்சிருக்கறவங்க இப்போதைக்கு அதிர்ஷ்டசாலிகள்.. டொயோடாக்காரங்க? :(



ஒரு வருஷமிருக்கும்.. நாங்க நண்பர்களோட சுற்றுலா போயிருந்தப்போ ஒரு புது டொயொடா கேம்ரி விபத்துக்குள்ளாச்சு.. அவங்களும் அதிலிருந்து மீண்டு மறந்து இப்போ இன்னோரு டொயொடா வாங்கியாச்சு.. மறுபடியும் டொயொடா? தன்னுயிர் நீத்து அவங்க உயிரை காப்பாத்திடுச்சாம் அந்த வண்டி.. அந்த நன்றிக்கடன்.. இன்னைக்கு நொந்து நூடுல்ஸாயிருக்காங்க..

செய்திகள்ல படிச்சிருப்பீங்கன்னு நினைக்கறேன்.. தன்னோட பல ரக வாகனங்களோட சேல்ஸை டொயோடா நிறுத்தி வச்சிருக்கு.. காரணம் என்னன்னு அவங்களே சொல்லியிருக்காங்க - சில சமயம் அக்ஸலரேட்டர் பெடல (கேஸ் பெடல்) அமுக்கிட்டு ரிலீஸ் பண்ணினா அது உடனே பழைய நிலைக்கு திரும்பறதில்லயாம்.. ஏற்கனவே தெரிய வந்தது தான்.. முதல்ல ஃப்ளோர் மேட்ஸ் மேல காரணம் சொல்லியிருந்தாங்க.. இப்போ (என் மண்டைக்கு புரிஞ்ச வரைக்கும்) அந்த பெடலோட லீவர்ல உராய்வு பிரச்சனைனு கண்டுபிடிச்சிருக்காங்க..  எப்ப இந்த மாதிரி ஆகும்ன்னு சொல்ல முடியாதாம்... ஆன பின்னாடி தான் தெரிய வருமாம் :) .. வெயில்ல ஏசி போட்டாலும் ஆகுமாம்.. குளிர்ல ஹீட்டர் போட்டாலும் ஆகுமாம்.. என்னத்தச் சொல்ல? சேல்ஸை நிறுத்தினது சரி.. அப்ப, ஏற்கனவே ஓட்டிட்டு இருக்கறவங்க, இப்ப புதுசா வாங்கியிருக்கறவங்களோட நிலைமை???!!!  இவங்களுக்கும் மாத்தி தருவாங்களான்னு இப்போதைக்கு தெரியல.. ஹைவே ல மணிக்கு அறுவத்தஞ்சு எழுவது மைல்ஸ் ன்னு போயிட்டு இருக்கும் போது இப்படியாச்சுன்னா என்ன செய்ய முடியும்?

நம்ம நண்பர் இதையெல்லாம் படிச்சுட்டு ரொம்ப நேரம் யோசன பண்ணினார்.. சிலருக்கு சம்பவ இடத்துல நடந்ததெல்லாம் மறந்துடும்.. நல்லவேளையா இவருக்கு நினைவிருக்கு.. தன்னோட விபத்துக்கும் இந்தப் பிரச்சனை தான் காரணமோன்னு இப்போ ஆராய ஆரம்பிச்சிருக்கார்.. பகீர்ன்னு இருக்கு.

மித வேகம் எப்பவுமே மிக நன்று.. இப்போதைக்கு மிக மிக நன்று.. 

~~~~~*****~~~~~
 
கற்கும் முறைகள்

சர்வே குரங்கார் தமது பணியான சர்வே ஒன்றிற்காக எனக்கு ஒரு கேள்வித்தாள் அனுப்பியிருந்தார். அதில், கீழுள்ளவற்றில் எவற்றை மிகச் சிறந்த கற்கும் முறைகள் என்று எண்ணுகிறீர்கள் என்று ஒரு கேள்வி.. சாய்ஸ்கள் -

  • ஆசிரியர் தரும் லெக்சர்கள்
  • செய்த வேலையை ஆசிரியருடன் விவாதித்தல்
  • கணிணியில் வரும் பாடங்கள்
  • புத்தகங்கள்
  • ஜர்னல்கள்

எனக்கென்னமோ ஆசிரியரிடம் நேராக நின்றோ அமர்ந்தோ கற்றுக் கொள்வது போன்று மற்றவை வராதென்று தோன்றுகிறது. சிறிது நாட்களுக்கு முன்பு படித்த, குழந்தைகளுக்கான மன ஆய்வாளர் ஒருவரின், கட்டுரை ஒன்று நினைவுக்கு வருகிறது.. அதில் அவர், வீடியோ ஒன்றினை போட்டுவிட்டு தம் குழந்தைகளுக்கு ஏ பி சி டி  கற்றுத் தரும் தாய்மார்களின் முறையை சாடியிருந்தார். நேரில் நீங்கள் உங்கள் முக அசைவுகளுடன் ஆப்பிளையோ அதன் உருவத்தையோ காட்டி சொல்லித் தருவது தான் குழந்தைகளின் மனதில் அழுத்தமாக பதியும்.. வீடியோவை விளையாட்டாக போட்டுக் காண்பித்தால் பரவாயில்லை.. ஆனால் அதையே உங்கள் முறையாகக் கொள்வது தவறு என்று கூறியிருந்தார். எனக்கும் அதுவே சரியென்று பட்டது.

ஆசிரியரொருவர், நேரில் தன் பயமுகங்காட்டி, தூங்கும்போது தட்டியெழுப்பி, கேள்விகள் பல கேட்டு, பதில் தெரியாமல் திணறுகையில் திட்டி, அரிதாக பாராட்டி, கரணம் அடித்தோ இல்லை பிற சேஷ்டைகள் செய்தோ, தன்னுடைய அனுபவங்களையும் பாடங்களையும் சொல்லித் தருவது போன்று வீடியோ ஆசிரியரால் முடியாது (யார் கண்டது, சில ஆண்டுகளில் இதுவும் நடந்தாலும் நடக்கலாம்). நான் சொல்வது - நன்றாக கற்பிக்கக் கூடிய ஆசிரியர்களைப் பற்றி மட்டுந்தான்.. ஏனோதானோவென்று வகுப்பிற்கு வந்தோடுபவர்களுக்கு பொருந்தாது.  கரும்பலகை சாக்பீஸிலிருந்து ஸ்லைட் ஷோக்கு மாறியது ஓகே. ஆனால் மனிதர் என்பவரே இல்லாமல் கணினியாரே முழுமுதற் ஆசிரியராக உருவெடுக்கும்  நிலை வந்துவிடுமோ என்ற கவலை வந்து விட்டது திடீரென்று.






 என்னுடைய சாய்ஸ்.. மேற்ச்சொன்ன எல்லாமே கற்றுத் தருவன தான்.. அதில் மிகச் சிறந்ததாக கேட்டிருப்பதால் முதலிரண்டை சொல்லிவிட்டேன்.. உங்கள் சாய்ஸ் என்ன?

*****~~~~~ ‘ ^  ’ ~~~~~*****

23 January 2010

மூன்று முட்டாள்கள்

அடுத்ததாக எதை மெல்லுவது என்று, அவல் தேடி, வீட்டு அடுப்பங்கறை அஞ்சறைப்பெட்டி என எல்லாத்தையும் கொட்டிப் பார்த்ததில், எல் போர்டுக்கு வேறு ஒன்றும் தேறாததால், நேற்றுப் பார்த்த சினிமாவின்.. ஹி ஹி.. விமர்சனம் எல்லாம் இல்லீங்க.. ஃபீலிங்க் மட்டும்...



அமீர் (ரான்ச்சோ), மாதவன் (ஃபர்ஹான்), ஷர்மன் ஜோஷி (ராஜூ) - ரங்க் தே பஸந்தி யினுடைய அதே கூட்டணி.. இந்த முறையும் நல்ல ஆட்டம் போட்டு இருக்கிறார்கள்.. கூட போமன் இரானி, மற்றும் கரீனா கபூர்..

படத்தைப் பற்றி ஒரே வரியில் சொல்லுவதென்றால் - ”ஹா ஹா ஹா..” சென்றால் வாய் விட்டு வயிறு நோக சிரித்துவிட்டு வரலாம்.. கதை என்னவென்று எழுதப் போவதில்லை.. அதனால் மேற்கொண்டு தைரியமாக படிக்கலாம்..

மூவரும் காலேஜ் பாய்ஸ் மாதிரியே தான் இருக்கிறார்கள்.. நல்ல எக்ஸ்ப்ரெஷன்ஸ்.. சிறு வயது அமீர் செம க்யூட்டாக இருக்கிறார்.. போமன் சான்ஸே இல்லை.. அவசர அவசரமாக அடுத்தவனை முந்தி சைக்கிளை ஓட்டி வரும் அவருடைய இண்ட்ரோவே கலக்கலாக இருக்கிறது.. பறவைக்கூட்டைக் காட்டி அவர் கொடுக்கும் விளக்கத்தில் ஆரம்பித்து, மாணவர்களுக்கு கொடுக்கும் மெண்டல் டார்ச்சரில் தொடர்ந்து, கடைசி வரைக்கும் அருமை.. கரீனாவும் ஓகே.. அப்புறம் அந்த படிப்ஸ் சதுர்.. ம்ம்.. அவரைப் பற்றி கடைசியில் சொல்லுகிறேன்.. படத்தின் கதையும் போரடிக்காமல் செல்கிறது.. சின்னச் சின்ன திருப்புமுனைகளும் உண்டு..

நம் கல்வி முறையை நன்றாக  துவைத்து அலசி காயப் போட்டிருக்கிறார்கள்.. பிள்ளைகளை மனனம் செய்ய வைப்பதில் நாம் காட்டுகின்ற ஆர்வம் அவர்களது கற்பனையை, உருவாக்குத் திறனை வெளிக்கொண்டுவருவதில் காட்டுவதில்லை.. இது தான் கான்செப்ட்.. காமெடியாக இருப்பதற்காக கொஞ்சம் மிகைப்படுத்தி சொல்லியிருந்தாலும், உண்மை என்னவோ உறைக்கத் தான் செய்கிறது.. குதிரை ரேஸைப் போல, ஓடு ஓடிக்கொண்டேயிரு அடுத்தவனை முந்திச் செல், என்று தான் மக்களும் மாறி வருகிறார்கள்...


என்னுடைய அனுபவத்தில் - பள்ளியில் படித்ததை விட கல்லூரியில் எவ்வளவோ பரவாயில்லை.. ப்ராக்டிகல்லாகத் தான் இருந்தது.. இருந்தாலும், கல்லூரியை விட்டு வெளி வரும் போது, நிகழ் உலகம் நிறையவே வித்தியாசமாக இருந்தது.. ப்ரெஷர் கொடுத்து கொடுத்து என் பெர்ஃபார்மன்ஸே குறைஞ்சு போச்சு என்று ராஜூ சொல்லும் போது அவரது நிலை நன்றாகவே புரிகிறது..


நான் ரொம்ப நேரம் சிரித்த காட்சி - இண்டக்‌ஷன் மோட்டரை எப்படி ஸ்டார்ட் செய்வது என்று வைரஸ் கேட்க, அதுக்கு ராஜூ காட்டும் ப்ராக்டிகல் விளக்கம்.. அப்புறம், கரீனாவின் திருமணத்தை நிறுத்தி அவரை அழைத்து வரும் போது - ” உன் கல்யாணத்தை நிறுத்திட்டோம்.. ஆனா, ஒரு சின்னப் பிரச்சனை.. அவனுக்கு கல்யாணம் ஆயிடுச்சான்னு இன்னும் தெரியலியே..” ஹா ஹா.... அப்புறம் தேர்வு முடிவுகளைப் பார்த்து விட்டு இருவரும் சோகமாக அடிக்கும் டயலாக் - “நம்ம நண்பன் நம்மை விட குறைவா மார்க் வாங்குனா வருத்தமா இருக்கு.. நம்மை விட அதிகமா வாங்கினா ரொம்பவே வருத்தமா இருக்கு..”

குறைகளும் உண்டு... சில இடங்களில் நம்மை நெகிழ வைக்க முயற்சித்திருப்பதில் சினிமாத்தனம் தெரிகிறது.. பையன்கள் மூவரும் அடிக்கடி அழுகிறார்கள்.. மத்த கேரக்டர்ஸும்.. முன்னா பாய் எம்பிபிஸ் சம்பவங்களும் படத்தில் உண்டு.. ஜோக் சொல்லிச் சொல்லி நண்பருக்கு நினைவு வர வைத்தல்.. அப்புறம்.. அந்த ஆல் இஸ் வெல் சொல்லி பிறந்ததிலிருந்து மூச்சின்றி கிடக்கும் குழந்தையை அழ வைத்தல்.. (பசங்க படத்திலும் இது போன்றதொரு சீன் உண்டு).. கொஞ்சம் பூச் சுற்றல் தான்..

சதுர் ராமலிங்கம்.. இவர் தான் படத்தின் செந்தில்.. போட்டு உதை உதை என உதைக்கிறார்கள் இவரை... நகைச்சுவைக்காகத் தான் என்றாலும் இந்தப் பெயர் தான் நமக்கும் கொஞ்சம் உதைக்கிறது.. உகாண்டாவில் பிறந்து பாண்டிச்சேரியில் படித்ததால் ஹிந்தி தெரியவில்லை என்கிறார்.. மை ஹன்ஸ் ரஹா ஹூன் என்று ஹ வை அழுத்தமாக உச்சரித்து ஹிந்தி பேசுகிறார்.. தலைகீழாக மனப்பாடம் பண்ணுகிறார்.. தென்னாட்டவர்களை கிண்டல் அடித்திருக்கிறார்களோ என்று ஒரு எண்ணம் வருகிறது.. அடிக்கடி இவர்கள் ஹிந்தித் திரைப்படங்களில் கிண்டலடிக்கப் படுகின்றார்கள் என்பது போன்று தோன்றுகிறது.. ஓம் சாந்தி ஓம், கோல்மால் ரிடர்ன்ஸ், அப்புறம் இது..  ஒரு வாசகம் நினைவுக்கு வருகிறது.. “ஒருவருக்கு உன்னுடைய மொழியை சரியாக பேசத் தெரியவில்லை என்பதற்காக சிரிக்காதே.. அப்படியென்றால், அவருக்கு உன்னை விட இன்னும் ஒரு மொழி தெரிந்திருக்கிறது என்று அர்த்தம்”.... இதையும் இந்த இடியட்ஸ் புரிந்து கொண்டால் நல்லது..

20 January 2010

நேரத்தைத் தின்று செரித்த பின்பு...




அதிகாலை.. அலுப்பு.. அசதி.. அலாரமணைத்து..

முடிவுறா முழுமைபெறாக்

கனவுடன் கண் கசக்கி..

போர்வை விலக்கி.. குளித்துடுத்தி..

அவசரமாய் விரையும் பொழுதில்..

எங்கிருந்தோ வரும் ஊதுபத்தி மணம்..

எங்கும் பரவும் சூர்யோதயம்..

ஓடோடி வந்து வண்டியை விட்டதில்

சிந்தவிடப்பட்ட புன்னகை..

இவைகளைக் கடந்து சென்ற வண்டியில் நானும்..






பத்தோடு பதினொன்றாய்..

பாதை கடந்து.. பணி சென்று..

உணர்வுகளை உள்ளடக்கி..

கற்று கற்பித்து.. களைப்புற்று.. கண்ணயர்ந்து..

அந்தியில் கூடு திரும்பி...

இணையம்.. கணினி.. வலைதளம்.. வலம்..

சமையல்.. சாப்பாடு..

உண்டுறங்கி.. வாரநாட்களோட்டி..



விடுமுறையில் வீட்டினருடன்..

அலைபேசி.. அளவளாவி..

திரைப்படங்கண்டு.. சலித்து முடித்து..

வீடு துலக்கி.. பொழுதுபோக்கி..



வாரமொன்று கழிந்தோடி..

ஞாயிறிரவு உறங்கச் செல்கையில்..

தூக்கம் வர மறுத்து..

ஏதோவொன்று மனதை யுறுத்த..

என்னவென்று தேடித் துழாவியிருக்கையில்...

நினைவுக்கு வருகின்றன...

முயற்சிக்கப்படாத என் முயற்சிகளும்

தின்று செரிக்கப்பட்ட என் நேரமும்.....................



இப்பவே சொல்லிட்டன்.. எல் போர்டு..  இதென்னன்னெல்லாம் கேள்வி கேட்டு ஆரும் இன்சல்ட் பண்ணப்படாது :))

18 January 2010

அவசரமாய் ஒரு விளக்கம்..

இது நம்ம மாதிரி கத்துக்குட்டி ப்ளாகர்ஸ் க்கு மட்டும்.. பெரியவர்கள் ஒதுங்கி நிற்க :)

மஹீ ட்ராஃபிக் ஃபீட் பத்தி கேட்டிருந்தாங்க.. எனக்கு படம் பிடித்து விளக்க நேரமில்லை.. அதனால் படங்களில்லாத ஸ்டெப் பை ஸ்டெப் ட்ராஃபிக் லட்டு இதோ :))

ஏதாவது ஒரு பதிவில் இருக்கும் க்ளிக் டு கெட் ஃபீட்ஜிட் ஐ க்ளிக் செய்து செல்லவும்..

அங்கிருக்கும் தலைப்புகளீல் விட்ஜெட் ஐ க்ளிக் செய்யவும்..

காட்டப்படும் விட்ஜெட்களில்  உங்களுக்கு எது பிடித்திருக்கிறதோ அதை உங்களுக்கு பிடித்த வடிவத்தில் கஸ்டமைஸ் செய்து, ஏட் டு ப்ளாக் க்ளிக் செய்யவும்..

உங்களிடம் அனுமதி கேட்கப்படும்.. ஆம் க்ளிக் செய்யவும்..

உங்கள் ப்ளாகில் அந்த பாக்ஸ் தெரிய வரும் போது, கீழே புரியாத மொழியில் :) என்ன இருக்கிறதோ அதனை காப்பி செய்து கொள்ளவும்..

பிறகு டாஷ்போர்ட் சென்று - லேஅவுட் - அதில் எடிட் ஹெச்டிமெல் க்ளிக்கி,

அதில் expand widgets க்ளிக் செய்து..

வேறு எதையும் மாற்றாமல், எல்லாவற்றுக்கும் கீழே, இதனை பேஸ்ட் செய்திடவும்.. சேவ் செய்திட்டு வெளியே வரவும்...

சுவையான ட்ராஃபிக் லட்டு ரெடி :)  செய்து பார்த்துவிட்டு சொல்லுங்கள்..

17 January 2010

திறப்பு விழா... சிறப்பு விழா....

வெகு நாட்களாக திட்டமிட்டிருந்த விழா.. இன்று தான் அமையப்பெற்றது..

இந்த ப்ளாக்கின் திறப்புவிழாவை சிறப்புவிழாவாக வெகு விமரிசையாகக் கொண்டாட வேண்டுமென்பது எமது ஆசை.. அதற்காக பல ஏற்பாடுகளை செய்திருந்தோம்.. நகரமெங்கும் கட் அவுட்கள்.. தோரணங்கள்.. சிறப்பு அழைப்பாளராக விவிஐபி திரு. கண்ணப்பன் அவர்களை அழைப்பதாக முடிவு செய்யப்பட்டிருந்தது.. தனது கடுமையான நேரமின்மைக்கிடையிலும், ரிப்பன் வெட்ட சிறிது நேரம் ஒதுக்கித் தந்திருந்த அவருக்கு முதலில் எமது முதற்கண் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.. ரசிகப் பெருமக்களுக்கு - திரு. கண்ணப்பனைப் பற்றி நீங்கள் அதிகம் அறிந்திருக்க வாய்ப்பிலை.. இவருக்கும் முன்னாள் மந்திரி கண்ணப்பனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை... இவர் கண்ணம்மாவின்  கணவன், சாரி, கணவர் கண்ணப்பன்..

சரி.. இனி நிகழ்ச்சிக்கு வருவோம்.. சுவையான சில காட்சிகள்..

சரியாக இந்தவூர் நேரப்படி இரவு எட்டு மணிக்கு ரிப்பன் வெட்ட நினைத்திருந்தோம்.. ஏழே முக்காலுக்கே வந்தமர்ந்து கணினியை ஆன் செய்து தன் நேரப்பற்றை வெளிப்படுத்தி அனைவரையும் வியப்புக்குள்ளாக்கினார்..

அவர் முதலில் விசிட் செய்தது.. எனது முதல் பதிவான ”செல்லமாய்ச் செல்லம் என்றாங்கடா”.... பக்கத்தை வெகு வேகமாக ஸ்க்ரோல் செய்துவிட்டு உளமார பாராட்டினார்.. அவருடைய வார்த்தைகளை அப்படியே இங்கு தந்துள்ளேன்..

”அந்தளவுக்கு (எந்தளவுக்கு???!!!) மோசமில்ல.. ஓகே வாத்தான் இருக்கு..”

ஜோக்கடிப்பதாக நினைத்துக் கொண்டு அவர் சொன்னது........ “என்ன இருந்தாலும் என்ன மாதிரி எழுத முடியாதுல்ல”

எமது எழுத்தார்வத்தை திறமையை கண்டு வியந்தார்..  ”நேரமில்ல நேரமில்லன்னு மத்த வேலையெல்லாம் அப்படியே கிடக்க எப்படி இங்க மட்டும் இந்தளவுக்கு எழுத முடியுது?”

ப்ளாக்கின் அடுத்தடுத்தடுத்தடுத்தடுத்த பதிவுகளைப் படித்து வியப்பின் உச்சிக்கே போனார்.. எம்மிடம் சிறு பேட்டியும் கண்டார்.... “எப்படி இப்படி திடீர்னு உங்களுக்குள்ள ஒரு எழுத்தாளர் உதயமானார்?” “அவரை எப்படி அடையாளம் கண்டுகொண்டீர்கள்?” எனக்கு மகிழ்ச்சியில் பதில் சொல்ல நா எழவில்லை...

எம்முடைய ரசிகப்பெருமக்களைப் பற்றி வினவினார்.. நேரப் பற்றாக்குறை காரணமாக பொதுவான சிறிய அறிமுகம் மட்டும் தரப்பட்டது..

அவருடைய பாராட்டுகளிலேயே நான் மணிமகுடமாகக் கருதும் வாக்கியம்... “நீங்கள் புதிய எழுத்தாளர் என்பதை படித்தவுடன் புரிந்து கொள்ளலாம்.. சற்று அல்ல நிறையவே அமெச்சூரிஷாக இருக்கிறது..”

அவ்வளவு நேர நெருக்கடிக்கிடையிலும், எமக்கு ஒரு சிறிய அறிவுரையை வழங்க அவர் தவறவில்லை....  “நேரம் பொன் போன்றது.. காலம் கண் போன்றது..”

அடுத்ததாக, பலத்த கரவொலிக்கிடையே... அவரது பொற்கரங்களால் ரிப்பன் வெட்டப்பட்டது..




நிகழ்ச்சியின் நிறைவாக மதியம் சாப்பிட்டு மீந்து போன கீரைக் குழம்பும், இரவு புதிதாக செய்யப்பட்ட சப்பாத்தியும் பரிமாறப்பட்டது..

புகைப்படக்காரரின் கேமரா அவர் சற்று கண்ணயர்ந்த கணப்பொழுதில் குரங்கு ஒன்றால் கவர்ந்து செல்லப்பட்டதால் புகைப்படங்கள் ஏதும் கிடைக்கப்பெறவில்லை.. அதில் எமக்கு சற்று வருத்தந்தான்..

திடீரென்று ஏற்பாடான விழா.. அதனால் உங்கள் அனைவருக்கும் முன்பே சொல்லமுடியவில்லை.. கட் அவுட்கள், தோரணங்கள் என பரப்பரப்பான அலுவல்களுக்கிடையே, அழைப்பிதழ் அனுப்பவும் அவகாசமில்லை.. இருந்தாலும், பொருத்தருள்ந்து, இந்த விழா விருந்தைப் படித்துண்டு மகிழ்வீராக..........................

14 January 2010

சில அப்பாவி கேள்விகளும், அசட்டை பதில்களும்..

கண்ணம்மா, நாதிரா, ராக்கண்ணன் மூவரும் ஒரு டின்னரில் சந்தித்து பேசிக்கொண்டிருக்கின்றனர்.. ராக்கண்ணன் அமெரிக்கர்.. கண்ணம்மா இந்தியர்... நாதிரா.......


இதற்கு முந்தைய கேள்விகள்...


ராக்: ”இந்தியால எந்த இடத்துல இருந்து வரீங்க”

நாதிரா: ”நான் இந்தியரில்லை..”

ராக்: (சற்று குழப்பத்துடன்....) ”ஆனா...... பாக்கறதுக்கு.......”

நாதிரா: ”என் பெற்றோர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள்...”

ராக் இருவரையும் மாறி மாறி பார்க்கிறார்.... முகத்தின் இடது பக்கத்தில் ஐந்து ஆச்சர்யக்குறிகளும், வலது பக்கத்தில் ஐந்து கேள்விக்குறிகளும் தென்படுகின்றன..

(இந்தூர்க்காரங்களுக்கு இதே பொழப்பாப் போச்சு...).......... கண்ஸ், நாதிரா இருவரும் ஒருவரையொருவர் பார்த்து பெருமூச்சு + புன்னகைத்துக் கொள்கின்றனர்...

நாதிரா: ”அதெல்லாம் அரசியலுங்க.. விடுங்க...”

ராக்: ”ஆமா, பாகிஸ்தானுக்கு பாகிஸ்தான் ன்ற பேரு எப்படி வந்தது ன்னு தெரியுமா?”

நாதிரா: (ஏனுங்க, நானும் உங்கள மாதிரி அமெரிக்கால பொறந்து வளர்ந்த பொண்ணுதானுங்க.. என்கிட்ட போயி.. இம்பூட்டு கஷ்டமா கேள்வி கேட்கிறீயளே..) ”ம்ம்.. பாகின்னா தூய்மைன்னு நினைக்கறேன்.. ஸ்தான் ன்னா இடம்.. ”

ராக்: ”இல்லயே.. நான் வேற மாதிரியில்ல கேள்விப்பட்டேன்.. பி ஃபார் பஞ்சாப்.. ஏ ஃபார்.........ம்ம் ஞாபகத்துக்கு வர மாட்டேங்குதே..”

நாதிரா: (இதுக்கு மேல என்கிட்ட ஏதாச்சும் கேட்டீங்க.. அழுதுருவேன்)... தலையையாட்டி உதட்டை பிதுக்குகிறார்...

கண்ஸ்: (ஆஆஆ.. எனக்கு பஞ்சாப் எங்க இருக்குன்னு ஞாபகம் வந்துடுச்சு....) ”நீங்க சொல்லறது சரியா இருக்கலாம்.. பஞ்சாப் பாகிஸ்தானுக்கும் இந்தியாக்கும் பார்டர்ல தான் இருக்கு..”

நாதிரா: (எனக்கும்... ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே..) ”ஆமாமா.. அங்க தான் இருக்கு..”

ராக்: (நல்ல அறிவாளிப் புள்ளைங்க கூடத் தான் பேசிட்டிருக்கேன்.. அடுத்த கேள்விய வீசுவோம்..) (கண்ஸ் பக்கம் திரும்பி...) ”இந்த சதி பத்தி நீங்க என்ன நினைக்கறீங்க?”

கண்ஸ்: (எந்தச் சதியப் பத்தி கேக்கறாரு? நாமதான் மூச்சுக்கு முன்னூறு சதி பண்ணறோமே... ) ”சதியா?”

ராக்: ”அதாங்க..... இந்தப் பொண்ணுங்க.... தீயில.......”

கண்ஸ்: (அடேங்கப்பாஆஆஆஆ... எனக்கு பதில் தெரிஞ்ச மாதிரி ஒரு கேள்வியக் கூட கேட்க மாட்டீங்களா???...) ”அதாவதுங்க.. அந்தக் காலத்துல... மறுபடியும்... நான் பொறக்கறதுக்கு முன்னால.. ஒவ்வொரு ராஜ்ஜியமும் தங்களுக்குள்ளாற சண்ட போட்டுப் போட்டு... தோத்துப் போன நாட்டுப் பொண்ணுங்க எதிரிங்க கிட்ட இருந்து தங்கள காப்பாத்திக்க தேர்ந்தெடுத்த வழி.. காலப்போக்குல அப்படி இப்படி மாறிப்போச்சு... இப்பல்லாம் இல்ல....”

(கண்ஸ் மண்டைக்குள் ஆயிரம் நரம்புகள் பரபரப்பாக முடிச்சிடுகின்றன... அடுத்ததா காந்தியப் பத்திக் கேப்பாரோ...... ஸ்லம் டாக் மில்லியனர் பத்தி கேப்பாரோ?? அவரு ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி நாமலே அமெரிக்கன் ஹிஸ்டரி பத்தி கேட்க ஆரம்பிச்சிருவோமா? அப்பவாச்சும் புரிஞ்சுக்கறாரான்னு பாப்போம்.... கேள்வி கேக்கறது ஈஸி.... பதில் சொல்றது கஷ்டம்னு....)

ராக்: ”அப்புறம்.. இந்த கேள்விய நானும் ரொம்ப நாளா யார் கிட்டயாவது கேட்டு தெரிஞ்சுக்கனும்னு நினைக்கறேன்.. ”

கண்ஸ்: (அநியாயத்துக்கு இப்புடி புதிர் போடுறாரே...) ”என்ன தெரிஞ்சுக்கனும்ன்னு சொல்லுங்க.. உங்க கேள்விக்கெல்லாம் பதில் சொல்லத்தான நாங்க இருக்கோம்.. ”

ராக்: ”இந்த க்ரிக்கெட் ல விக்கெட் விக்கெட் னு சொல்றாங்களே.. அப்டின்னா என்னங்க?”

கண்ஸ்: ”(சாமீஈஈஈஈஈஈஈஈஈஈ... நீ தான் காப்பாத்தனும்....) அதுவந்துங்க................................................”

அனேகமாக நாதிராவும் பலமாக சாமியை வேண்டியிருக்க வேண்டும்..  வெய்ட்ரஸ் வந்து சேர்ந்தார்..

“இந்தாங்க நீங்க கேட்ட பிஸா”






ராக்கின் கவனம் பிஸா பக்கம் திரும்பியது.........  கண்ஸ் முதன் முறையாக முழுமையாக..... நிம்மதியாக.... கண் மூடித்..... திறந்துகொண்டார்....



~~~~~~~~~~~~~~~உரையாடல் அத்தோடு முடிவுற்றது~~~~~~~~~~~~~~~~~~


அடைப்புக்குறிக்குள்ளே இருக்கும் ரியாக்‌ஷன் முழுக்க கற்பனை.. மத்தபடிக்கு உரையாடல் அப்படியே நிஜம்...

சில அப்பாவி கேள்விகளும், அசட்டை பதில்களும்..

இந்தச் சம்பவமும் உரையாடல்களும் உண்மையே.. சம்மந்தப்பட்டவர்களின் நலன் கருதி பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.... :))


லெட்ஸ் கோ டின்னர் டுநைட்...

கண்ணம்மா வின் அலுவலக மேலாளர் தன் பணியாளர்கள் அனைவருக்கும் இவ்வாறு ஒரு ஈமெய்ல் அனுப்பியிருந்தார்..

கண்ணம்மா தன் சக பணியாளர் நாதிரா (அதாங்க பொக்கிஷம் ஹீரோயின்) விடம் கருத்து கேட்டார் (எதுவும் சுயமா முடிவெடுக்கத் தெரியாதுல்ல, அதான்....)

”போகனுமா? ”

”போய்த்தான் பாப்போம்.. ”

எனவே.. நாமும்.. லெட்ஸ் கோ டின்னர் டுநைட்...

இருவருமாக, ஆறரை மணி டின்னருக்கு ஆற அமர ஆறு மணிக்கு கிளம்பி, வழி தெரியாம அங்கயிங்க சுத்தி, சரியா ஆறு இருபத்தஞ்சுக்கு வந்து சேர்ந்து பெருமூச்சிட்டார்கள்..

"யப்பாடி.. சரியான டைம்க்கு வந்துட்டோம்.."

அவர்கள் உள்ளே நுழைந்த போதே பல இதர பணியாளர்கள் வந்துவிட்டிருந்தனர்.. சில புதியவர்களும்.. அவர்களிடம் அறிமுகமாகி, அறிமுகம் பெற்று, எல்லோரும் இருக்கைகளில் அமரத் துவங்கினர்..

ஏற்கனவே இருவரும் பேசி வைத்திருந்தார்கள்.. பெரிய மேலாளரின் முன் அமர வேண்டாமென.. தேடிப் பார்த்து மேஜையோரமாக ரெண்டு சீட் பிடித்து ஒருவரை ஒருவர் பார்த்தவாறு அமர்ந்தனர்.. அவர்களின் நேரம், புதிதாக அறிமுகமான ஒருவர், அந்த நீள்சதுர மேஜையில் இவர்கள் அமர்ந்திருந்த முனைகளுக்கு நடுவிலான பக்கத்தில், ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டுக் கொண்டு உட்கார்ந்தார்..






ஆர்டர் கொடுத்துவிட்டு அனைவரும் தத்தம் அருகிலிருப்பவர்களிடம் பேச ஆரம்பித்தனர்..

கண்ணம்மாவத் தான் பாத்தாலே தெரியுமே.. எந்தூருன்னு.. அந்தவொரு அமெரிக்கரும் (பெயர் ராக்கண்ணன் னு வச்சுக்குவோம்) மாத்லாட ஆரம்பித்தார்..

ராக்: ”இந்தியால எந்த இடத்துல இருந்து வரீங்க”

(என்னமோ எல்லா இடமும் தெரிஞ்ச மாதிரி....)

கண்ஸ்: (நம்மூரு பேரச் சும்மானாச்சும் சொல்லிப் பாக்கலாம் என்றெழுந்த எண்ணத்தை கஷ்டப்பட்டு அடக்கிவிட்டு...) ”சென்னை ங்க”

ராக்: (சற்று யோசித்துவிட்டு...) ”கொல்கத்தா ன்றாங்களே அதுக்குப் பக்கமா?”

கண்ஸ்: (அடக் கொடுமையே....) ”இல்ல.. இது கீழ் முனைக்கும் கொஞ்சம் மேல”

ராக்: ”புரியலயே.... முக்கோணம் போட்டு எது எங்கன்னு காட்டுங்க..”




கண்ஸ்: (முக்கோணமா!!... இம்புட்டு இந்திய அறிவா!!...) ”இது கொல்கத்தா, இது சென்னை, இது மும்பை.. மும்பை - கேள்விப்பட்டிருக்கீங்களா?”

ராக்: ”ஓ.. மும்பை.. தெரியுந்தெரியும்..”

(ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா.. ரொம்ப சிம்பிளா மேட்டர் முடிஞ்சு போச்சு..)
கண்ஸ் நிம்மதியாக.... கண் மூடித்.... திறப்பதற்குள்......

 அடுத்த கேள்வி வந்து விழுந்தது..

ராக்: ”இங்கிலாந்து பற்றி என்ன நினைக்கிறீங்க?”

கண்ஸ்: (இது ரொம்ப ஈசியான கேள்வி, ஹிஹ்ஹீஹீ...) ”நான் அங்கல்லாம் போனதில்லீங்க.. அதனால சொல்லத் தெரியல..”

ராக்: (கண்களைச் சுருக்கி விரித்து கொஞ்சம் யோசித்து...) ”அதாவதுங்க, ப்ரிட்டிஷ் ராஜ் பத்தி என்ன நினைக்கறீங்க?”

கண்ஸ்: (போச்சுடா...) ”அதெல்லாம் நான் பொறக்கறதுக்கு முன்னாடியே கிளம்பி போய்ட்டாங்க....”

ராக்: ”அவங்க உங்களுக்கு நல்லது செஞ்சாங்கன்னு நினைக்கறீங்களா இல்ல...”

கண்ஸ்: (சரியான விடாக்கொண்டனா இருக்காரே...) ”சில விஷயத்துல நல்லது செஞ்சிருக்காங்க - அவங்க வரதுக்கு முன்னாடி சின்னச்சின்ன ராஜ்யங்களா இருந்தோம்.. ஒரு பொது எதிரிய எதிர்க்க எல்லாரும் ஒன்னு சேந்தோம்.. அப்புறம்.. காலேஜ் எல்லாங்கட்டியிருக்காங்க.. அவங்க அறிமுகப்படுத்திட்டு போன இங்கிலீஷ படிச்சு தான் உங்க கிட்ட பேசிட்டு இருக்கோம்.. ஆனாலும், எங்க வீட்டுக்குள்ள யாரோ வந்து எங்கள அதட்டி ஆண்டது எங்களுக்கு பிடிக்கல.. எங்க பொருள எல்லாம் அவங்க எடுத்துகிட்டு போனாங்க.. அதும் பிடிக்கல.. இப்படி.. அப்படி.. ரெண்டுமே..”

(எப்பிடியோ டிப்ளோமாடிக்கா ஒரு பதிலச் சொல்லி சமாளிச்சாச்சு.. ) கண்ஸ் நிம்மதியாக.... கண் மூடித்.... திறப்............................

அடுத்த கேள்வி வந்து விழுந்தது...

ராக்:   ”இந்தியால எந்த இடத்துல இருந்து வரீங்க?”

எதிரில் அமர்ந்திருந்த நாதிரா பதிலளிக்க ஆரம்பித்திருந்தார்....

”நான் இந்தியரில்லை...”

(தொடரும்..)


எல்லாத்தையும் எழுதி முடிக்க சோம்பேறித்தனமா இருக்கு.. அதேன்.. ஆரும் கோச்சுக்கப்படாது..



10 January 2010

நம்பிக்கைச் சேதம்..

எனக்கு ஈமெய்லில் தோழியொருவர் அனுப்பியிருந்த கேள்வி - எப்படிப் படிச்சுப் பாத்தாலும், அந்த ஸ்கேட்டிங்க் பையனுக்கும், குதிரைக் கதைக்கும் என்ன தொடர்புன்னு புரியலயே?

நியாயமான கேள்வி தான்.. :))))))

முதல் பகுதி
இரண்டாம் பகுதி
மூன்றாம் பகுதி
நான்காம் பகுதி

ராமயணக் கதையில் ராவணன் யாசகன் கேட்பவன் போல் வேடந்தரித்து வந்து சீதையை அபகரித்து செல்கிறார்.. திரைப்படக் காட்சிகளில் பாத்திருக்கலாம்.. காரில் ஒருவர் சென்று கொண்டிருப்பார்.. வழியில் யாரோ விழுந்து கிடப்பதை கண்டு, இவர் அவருக்கு உதவி செய்யப் போக, உடனே எங்கிருந்தோ நான்கைந்து பேர் வந்து அவரைச் சூழ்ந்து கொண்டு..

கதைகளில், சினிமாக்களில் மட்டுமே கண்டிருந்தால் அதன் தாக்கம் குறைவாகவே இருக்கும்.. ஆனால், நாம் படிக்கும் கேட்கும் செய்திகளிலும் கூட, இது போன்று ஏமாற்றும் நோக்குடன், உதவி தேவை எனும் பெயரில் கபட நாடகம் ஆடி, பின் உதவியவரையே போட்டு தள்ளி விட்டு போவோரை பற்றி கேள்விப்படுகிறோம்.. சிலருக்கு உண்மையாலுமே இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கலாம்..

இது போன்ற நிகழ்வுகள், செய்திகள் குறைவுதானென்றாலும், அவை நம் மனதுக்குள் ஏற்படுத்தும் பாதிப்புகள் தான் எத்தனை? இரவு 11 மணி வாக்கில் நம் வீட்டுக் கதவை ஒருவர் உதவி கேட்டுத் தட்டுகிறார்.. நாம் முதலில் ஜன்னல் திறந்து என்னவென்று கேட்கிறோம்.. இதுவரையான பாதுகாப்புணர்வு சரி தான்.. ஆனால், அவர் தன் நிலைமையை விளக்கிய பின்பு, (உதாரணத்துக்கு, அவர் வந்த கார் நம் வீட்டருகே வந்தவுடன் நின்று விட்டது) நம்மில் எத்தனை பேரால் நம்பிக்கையுடன் கதவைத் திறந்து வெளியே வந்து அவருக்கு உதவ முடியும் என்கிறீர்கள்? காரில் சென்று கொண்டிருக்கும் போது வழியில் ஒருவர் கை காட்டி லிஃப்ட் கேட்கிறார்.. உதவி செய்ய மனமிருந்தும் பயத்துடன் விலகிச் செல்வர் எத்தனைப் பேர்! இவ்வளவு கூட வேண்டாம்..மழைக்கு வீட்டினருகில் ஒதுங்க வரும் சிறுவனைக் கூட சந்தேக கண் கொண்டு பார்க்க வேண்டிய நிலைமை இன்று..

அது தான் எனக்கும் ஏற்பட்டது..

நான் முதலில் அவனைச் சந்தேகித்து விட்டேன்.. கீழே விழுந்திருந்த நிலையில் அவனைக் கதவு லென்ஸ் வழியே பார்த்தவுடன், நான் கதவைத் திறந்து ஓடிச் சென்று அவனைத் தாங்கியிருக்க வேண்டும்.. அப்படிச்செய்யாமல், கதவைக் கொஞ்சமாகத் திறந்து பார்த்து, முதலில் பேசிவிட்டு, பின்னர் கொஞ்சம் நம்பிக்கை ஏற்பட்டவுடன் தான், அவனருகில் சென்றேன்..

உதவி தேவையாயிருந்த ஒருவனை - திருடனோ, இவ்வாறு நடிக்கிறானோ, அருகில் சென்றவுடன் கன் காமிப்பானோ - என்று சந்தேகித்துவிட்டேன்.. நான் தனித்திருந்த சூழலோ இல்லை திடீரென்று வந்த சத்தமோ (கதவில் இடித்ததால்)என்னை அதிக விழிப்புணர்வு கொள்ளச் செய்திருக்கலாம் தான்.. அவனை அனுப்பி விட்டு வீட்டுக்குள் வந்தமர்ந்தவுடன் எனக்கு சற்று குற்றவுணர்வு ஏற்பட்டது.. உட்கார்ந்து யோசித்ததில் இந்தக் கதை ஏனோ நினைவுக்கு வந்தது.. எங்கோ ஏதோ ஒரு நம்பிக்கை சேதப்படுத்தப்பட்டதாக கேட்டதன் விளைவு தான் இப்போது சந்தேகமாக வெளிப்பட்டிருக்கிறது..

அந்தக் கதையில் வரும் சாது திருடரை நோக்கி இந்த வேண்டுகோள் தான் வைக்கிறார் - என்னிடம் இருந்து திருடுவதென்றால் நேரடியாக திருடி கொள்.. உதவி கேட்போரின் மீதான எனது நம்பிக்கையைச் சேதப் படுத்தி விடாதே..

Example

என்னைக்காவது ஏதாவது திருடன் இதப் படிச்சி திருந்துவானெல்லாம் எண்ணமில்லீங்க.. சொல்லனும்னு தோனுச்சு.. சொல்லிட்டேன்..

நாமல்லாம் இதுக்கே இம்புட்டு கில்டி ஃப்லீங் விட்டுகிட்டு இருக்கோம்.. நம்ம மாண்புமிகு முந்திரிகள் என்னடான்னா :(((((

தோல்வியின் வெற்றி.. 4

சாது அந்த வழிப்போக்கனுக்கு உதவ முன்வந்து அவனைத் தன் குதிரையின் மேலேற்றி தானும் ஏறத் தயாரானார்..

முதல் பகுதி
இரண்டாம் பகுதி
மூன்றாம் பகுதி

ஆம்.. நீங்கள் எதிர்பார்த்ததே தான் அப்போது நடந்தது..

அந்த வழிப்போக்கன் அவரைக் கீழே உதறித் தள்ளிவிட்டு குதிரையை விரட்டிச் சென்றான்.. சாது நிகழ்வதறியாது குழம்பி நின்றார்.. குதிரை சிறிது தொலைவு சென்றதும், திரும்பி அவரைப் பார்த்து புன்னகைத்தான்..

உங்கள் குதிரையைக் களவாடுவதே என் நோக்கம்.. நிறைவேற்றிவிட்டேன்.. வருகிறேன்..

சாதுவிற்க்கு இப்போது நடந்ததனைத்தும் விளங்கியது..

குதிரையில் கிளம்ப ஆரம்பித்தவனை நோக்கி கத்தினார்..

நில்.. நான் சொல்வதை ஒரு நிமிடம் கேட்டு விட்டுச் செல்.. இதில் ஏதும் உள்நோக்கமில்லை..

ம்ம்ம்.. சீக்கிரம்..

என் குதிரையை நீயே வைத்துக் கொள்.. ஆனால், ஒரே ஒரு கோரிக்கை.. நிறைவேற்றுவாயா?

என்ன.. சொல்லுங்கள்..

வேறொன்றுமில்லை.. இனி ஒருவரைக் களவாடுவதாகயிருந்தால், நேரடியாக அவரிடத்தில் சென்று திருடிவிடு.. இது போல் நாடகம் நடத்தாதே..

????!!!!!!!

நடந்த இந்தச் சம்பவம் என் மனதை விட்டு மறையாது.. இனி எவன் என்னிடம் உதவி கேட்டாலும், அவனை சந்தேகக் கண் கொண்டு தான் பார்ப்பேன்.. என்னால் எந்த வழிப்போக்கனுக்கும், ஊனமுற்றவனுக்கும் உதவ முடியாதபடி செய்துவிட்டாய்.. உண்மையாலுமே யாருக்காவது உதவி தேவைப்பட்டாலும், என்னால் உதவ முடியாது.. இது என்னோடே போகட்டும்... இன்னுமொரு மனிதனின் மனத்தில் இது போன்ற வலியையும் வெறுப்பையும் ஏற்படுத்திவிடாதே..

சொல்லி முடித்துவிட்டீர்களா?

ம்ம்..

நன்றி.. நான் செல்கிறேன்..

திருடன் தன் இருப்பிடத்தை நோக்கி குதிரையைச் செலுத்தினான்..

சாது மெல்ல தன் வீட்டிற்க்கு நடந்து வந்து சேர்ந்தார்.. குதிரை கட்டுமிடத்தைப் பார்த்ததும் மீண்டும் வலி ஏற்ப்பட்டது.. உறங்கிப் போனார்..

நடுநிசியில் குதிரை கனைக்கும் சத்தம் கேட்டு தூக்கம் கலைந்து எழுந்து வந்து பார்த்தார்.. அவருடைய குதிரை அங்கு நின்று கொண்டிருந்தது.. கூடவே ஒரு ஓலையில் திருடரின் வாசகமும்..

என்னிடம் குதிரையை இழந்து நீங்கள் தோற்றதின் விளைவு பன்மடங்காகப் பெருகி அப்பாவிகளை பாதிக்கக் கூடும் என்று உணர்வதால்..

இம்முறை நான் தோற்க்கிறேன்.. நீங்கள் வெல்கிறீர்கள்..

Example

கதை இத்துடன் முடிந்தது..

கதைக்கும் ஸ்கேட்டிங் சிறுவனுக்குமான தொடர்பை என் பார்வையில் அடுத்து சொல்லுகிறேன்..

தோல்வியின் வெற்றி... 3

சாது, குதிரை, மற்றும் திருடரின் பெயர்கள் வெகு நாட்களாக நினைவில் இருந்தன.. பின் மெல்ல மெல்ல மறைந்தன.. இருந்தாலும், கதையின் கருத்து நினைவில் உள்ளது..

முதல் பகுதி
இரண்டாம் பகுதி

இப்போ மறுபடியும் கதைக்கு........

யார் மூலமாகவோ சாது ஒரு நாள் தொலைதூரப் பயணம் மேற்க்கொள்ளவிருக்கிறார் என்று திருடர் அறிந்துகொண்டார்.. புத்தியைத் தீட்ட ஆரம்பித்தார்..

திருடர் எதிர்பார்த்த நன்னாள் வந்தது.. அன்று அந்தி வேளையில் குதிரையின் மீதேறி சாது தன் பயணத்தை துவக்கினார்..

Example

யாருமற்ற பிரேசத்தில் அவர் பயணிக்கையில் ஒரு காட்சியைக் கண்டார்.. நடுத்தர வயது மனிதரொருவர் வழியோரமாய்க் கிடந்தார்.. சாதுவை நோக்கி கைகளையாட்டி அவர் ஏதோ முனகினார்.. அவரை அந்த நிலையில் கண்டதும்,சாது குதிரையை திருப்பி, நிறுத்தி, இறங்கிச் சென்று, அவரிடத்தில் வினவினார்..

மகனே, இந்நேரத்தில் இங்கென்ன செய்து கொண்டிருக்கிறாய்?

அய்யா.. எனக்கோர் உதவி செய்வீர்களா?

சொல்லப்பா..

நான் ஊனமுற்றவன்.. கால்கள் செயலிழந்துவிட்டன.. ஊரொன்றுக்கு செல்லும் வழியில் நான் வழிதவறி இங்கு வந்துவிட்டேன்.. சில வழிப்பறி கொள்ளைக்காரர்கள் என்னைச் சூழ்ந்து கொண்டு என்னுடைய குதிரை வண்டியையும் என்னுடைய பொருட்களையும் பறித்துக் கொண்டு என்னை இந்த யாருமற்ற வனத்தில் தள்ளிவிட்டு சென்று விட்டனர்..

சாதுவின் முகத்தில் துயரம் படர்ந்தது..

எங்கு செல்ல வேண்டுமெனச் சொல்.. நானுனக்கு உதவி செய்கிறேன்..

வழிப்போக்கர் தன் ஊரின் பெயரைக் கூறினார்..

சாதுவும் அவரை பத்திரமாக கொண்டு சென்று சேர்ப்பது தனது பொறுப்பென்று உறுதிமொழியளித்து அவரைத் தூக்கி தன் குதிரை மேல் உட்கார வைத்தார்.. தானும் மேலேற தயாரானார்..

(தொடரும்..)

தாங்க முடியலீங்க இவங்க பில்டப்பு னு என்னோட வாசகப் ”பெருமக்கள்” புலம்புவது கேட்குது.. சாரி, ஏற்க்கனவே இந்த மாதிரி எழுதி வச்சுட்டேன்..சாயந்திரம் கடைசி பார்ட் ரிலீஈஈஈஸ் பண்ணிடறேன்..

09 January 2010

தோல்வியின் வெற்றி..

கதையின் முதல் பகுதியை இங்கு கண்டோம்..

முதல் பகுதி

ஒரு வாரத்துக்கு முன்பு, இதே போன்ற ஒரு விடுமுறை நாள்.. நான் மதியம் வீட்டில் படித்துக் கொண்டு இருந்தேன்.. இம்முறையும் தனியே.. தனித்திருக்கும் போது நடக்கும் சம்பவங்கள் மனதில் பதிந்துவிடுகின்றன போலும்..

திடீரென்று கதவுடைபடும் அளவுக்கு ஒரு சத்தம் கேட்டது..

நான் வழக்கம் போலவே பயந்து போனேன்.. யாரேனும் திருடர்கள் வந்துவிட்டனரோ என்று.. இருக்கையிலிருந்து எழவே மனமில்லை.. என்னுடைய செல்போனைக் கையிலெடுத்து வைத்துக் கொண்டு மேலும் சில வினாடிகள் கதவைப் பார்த்தவாறே அமர்ந்திருந்தேன்..

மேற்க்கொண்டு எந்தச் சத்தமும் எழவில்லை.. சற்று நடுக்கத்துடன் கதவின் லென்ஸ் வழியே எட்டிப் பார்த்தேன்..

அங்கே ஒரு சிறுவன் ஸ்கேட்டிங் போர்டுடன் விழுந்து கிடந்தான்..

கதவைத் திறப்பதா வேண்டாமா என்று ஒரே யோசனை.. ஜன்னல் வழியே வெளியே நோக்கினால் வேறு யாரும் தென்படவில்லை..

லென்ஸ் வழியே மறுபடியும் பார்த்தேன்.. சிறுவனிடத்தில் எந்த அசைவும் இல்லை..

பின் ஒரு வழியாக மனதை திடப்படுத்திக்கொண்டு, கதவினை பாதி திறந்து வைத்து, அவனிடம் பேசினேன்.. ஆங்கில உரையாடல்.. தமிழில்..

என்னப்பா, என்னாயிற்று உனக்கு..

ஒன்றும்மில்லை..

இப்படி விழுந்து கிடக்கிறாயே..

மன்னித்துக் கொள்ளுங்கள்.. உங்கள் கதவின் மீது மோதி சப்தம் எழுப்பி விட்டேன்..

எனக்கு கொஞ்சம் தைரியம் வந்தது..கதவை இன்னும் சற்று திறந்து அவனை நோக்கினேன்..

பதின் வயதுக்காரன்.. காலில் ஸ்கேட்டிங் போர்ட் அணிந்திருந்தான்.. தலையில் ஹெல்மெட்.. கை, கால் இரண்டுக்கும் போதிய அளவு பேட் வைத்துக் கட்டியிருந்தான்.. இப்பொழுது தான் என்னால் அவனைப் பார்த்து புன்னகைக்க முடிந்தது.. ஹைஸ்கூல் சிறுவனென்றாலும், என்னுடைய அச்சம் முழுதும் அகலவில்லை..

Example

இப்போ எப்படியிருக்கிறது?

பரவாயில்லை..

நான் உன்னைத் தூக்கி விடட்டுமா?

இல்லயில்லை.. நானே எழுந்து கொள்வேன்..

எங்கிருக்கிறது உன் வீடு?

இதே காம்ப்ளக்சில் தான்..

பேசியவாறே கைகளைக் கீழே ஊன்றி மெல்ல எழுந்து நின்றான்.. அவனருகில் வந்தேன்..

உன்னால் கை கால்களை நன்றாக அசைக்க முடிகிறதா? எங்கேனும் வலியிருந்தால் சொல்..

எனக்கொன்றுமில்லை.. நன்றாகத் தான் இருக்கிறேன்.. (இந்த வயதுக் குழந்தைகள் பயமறியாக் கன்றுகள்..)

நடந்து பார்த்துச் சொல்.. (ஏதேனும் ஃப்ராக்சர் ஆகியிருக்குமோ என்ற கவலை எனக்கு..

ஒன்றுமில்லை..

நடக்க முடியுந்தானே?

ம்ம்..

வீடு வரை உடன் வரவா?

வேண்டாம்.. நானே சென்று விடுவேன்..

மெல்ல நடக்க ஆரம்பித்தான்..

உன் அப்பா அம்மாவிடம் மறக்காமல் நடந்ததைச் சொல்லிவிடு.. வலியேதுமிருந்தால், மருத்துவரிடம் சென்று வாருங்கள்..

நன்றி..

அவன் சென்று விட்டிருந்தான்..

நான் வீட்டுக்குள் வந்து கதவை தாழிட்டேன்.. எனக்குள் சிறு குற்ற உணர்வு எழும்பி மறைந்த வண்ணமிருந்தது..

(தொடரும்..)

இந்தச் சம்பவம் தான் இத்தனை நாள் கழித்து கதை நினைவில் வரக் காரணம்.. அதான்.. சொல்லிவிட்டேன்..

08 January 2010

தோல்வியின் வெற்றி

சிறு வயதில் படித்த வேற்று மொழிக் கதை..

ஒரு ஊரில் ஒரு சாது இருந்தார்.. நல்லவர்.. வல்லவர்.. இத்யாதி.. இத்யாதி..

அவரிடம் ஒரு குதிரை இருந்தது..

அவர் அந்த குதிரையின் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தார்.. தன் குழந்தையாக அதனை எண்ணி வளர்த்து வந்தார்..

குதிரை திறம் மிகுந்தததாகவும், கம்பீரமான உருவத்துடனும், காண்பவரை கொள்ளை கொள்வதாகவும் இருந்தது..

அதே ஊரிலோ இல்லை அதற்க்கு அடுத்த ஊரிலோ ஒரு திருடரும் வசித்து வந்தார்..

சாதுவின் குதிரை மீது அவருக்கு எப்போதுமே ஒரு கண் இருந்தது.. அதனை தனதாக்கிக் கொள்ள வேண்டும் என உவகை கொண்டிருந்தார்..

என்ன காரணத்தினாலோ சாதுவின் இடத்துக்கு சென்று அதனை அபகரிப்பது அவருக்கு சிரமமாக இருந்தது..

எனவே, அதற்க்கானதொரு திட்டம் தீட்டி, சரியானதொரு சந்தர்ப்பம் வாய்க்க காத்திருந்தார்..

சந்தர்ப்பமும் ஒரு நாள் வாய்த்தது..

(தொடரும்..)

ம்கும்ம்ம்.. இத படிக்கறதுக்கே ஒரு ஆளக் கூடக் காணோம்.. இதுக்கு சஸ்பென்ஸ் வேற ஒரு கேடா ன்னு உள்ளுக்குள்ள ஒரு குரல் கேட்குது :) இருந்தாலும், ஒரு ஸ்பெஷல் எஃபக்ட் வேண்டாமா? :)

Example

04 January 2010

செல்லமாய்ச் செல்லம் என்றாங்கடா..

இந்தக் கொடுமைய எங்க சொல்றதுன்னு தெரியாம இங்க சொல்லிட்டுப் போறேன்..

இன்னிக்கி சாயந்திரம் தனியாளா :) வீட்டுல இருந்து வெளிய வந்தேன் - அபார்ட்மண்ட் ஆபிஸுக்கு போறதுக்காக. ஒரு பத்தடி எட்டி வச்சதும்.. அந்தக் கண் கொள்ளாக் காட்சி.. பகீர்ன்னுது.. திரும்பிப் போய்டலாமா இல்ல தெகிரியமா முன்னேறலாமான்னு ஒரு பத்து செகண்ட் யோசன பண்ணிட்டேன்.. அந்த கன நேரத்துல நம்மள நோக்கி.. நாலுகால் பாய்ச்சல்.. கூச்சல்..

ஆ.. ப்ளீஸ்.. ப்ளீஸ்.. ஸ்டாப் இட்.. வாட் இஸ் திஸ்... ஓ நோ.. (பீட்டரில்லீங்க, என்ன செய்ய, செல்லம் இந்தூர்க்காரராச்சே)

நகரக்கூட முடியாம ஃப்ரீஸ் ஆகி நின்னுட்டு.. கண்ணுல கண்ணீரெல்லாம் வந்து.. தட தடன்னு அடிச்சிகிட்டு (ஹார்ட்டு தாங்க).. ஓ நோ..

பாஞ்சு வந்த செல்லம் நம்ம கிட்ட வந்ததும் சுத்தி ஒரு ரவுண்ட் போனாரு.. கடிக்கலாமா வேணாமான்னு சின்ன டைலமா போல.. நல்லவேளையா வாயில பந்தைக் கொடுத்திருந்தாங்க அந்த தத்தெடுத்த புண்ணிவானுங்க.. இல்லாட்டி பந்துக்கு பதிலா எங்காலத்தான் கவ்விட்டு ஓடிருப்பாருன்னு நினைக்கறேன்..

திரும்பி ஓடினார்.. நேரா அவங்க கிட்ட.. அவங்க அவரை செல்லமா பிடிக்க முயற்சி (??!!) எல்லாம் பண்ணுனாங்க.. அவரா சிக்குவார்?

மறுபடியும் நம்மள நோக்கி... ரீப்பீட்டேய்..

Example

ஆ.. ப்ளீஸ்.. ப்ளீஸ்.. ஸ்டாப் இட்.. வாட் இஸ் திஸ்... ஓ நோ..

நகரக்கூட முடியாம ஃப்ரீஸ் ஆகி நின்னுட்டு.. கண்ணுல கண்ணீரெல்லாம் வந்து.. தட தடன்னு அடிச்சிட்டு (ஹார்ட்டு தாங்க).. ஓ நோ..

பாஞ்சு வந்த செல்லம் நம்ம கிட்ட வந்ததும் சுத்தி ஒரு ரவுண்ட் போனாரு.. கடிக்கலாமா வேணாமான்னு சின்ன டைலமா போல.. நல்லவேளையா வாயில பந்தைக் கொடுத்திருந்தாங்க அந்த தத்தெடுத்த புண்ணிவானுங்க.. இல்லாட்டி பந்துக்கு பதிலா எங்காலத்தான் கவ்விட்டு ஓடிருப்பாருன்னு நினைக்கறேன்..

திரும்பி ஓடினார்.. நேரா அவங்க கிட்ட.. அவங்க அவரை செல்லமா பிடிக்க முயற்சி (??!!) எல்லாம் பண்ணுனாங்க.. இந்தவாட்டி சிக்கிட்டார்..

என்னென்னமோ கேட்கனும்னு தோனுச்சு.. பதிலுக்கு அவங்க கைல இருந்த பிடிய விட்டுட்டாங்கன்னா???

கண்ணுல வழிஞ்சத தொடச்சிகிட்டு நடையக் கட்டுனேன் நானும்.. (அம்புட்டு நல்லவிங்கன்னு நெனச்சு ஏமாந்துறாதீங்க.. சொல்ல வேண்டிய இடத்துல சொல்லிடுவம்ல?)

இங்க மட்டுமில்லீங்க.. ஊர்லயும் செல்லங்கள் இருக்கற வீட்டுக்கு போனா(விருந்தாளியாத் தான்) இந்தக் கொடும நடக்கும். செல்லங்கள் வளர்ப்போரே.. உங்களுக்கு வேனும்னா இதுகள் செல்லங்களா இருக்கலாம்.. எங்களுக்கெல்லாம் டெரரிஸ்ட்ஸ்.. இன்னும் கொஞ்சம் கவனமா இருக்கலாமே?

செல்லமாய்ச் செல்லம் என்றாங்கடா..
டாகி என்றே சொன்னாங்கடா..
பாய்ந்தோடிவந்து என்னை அழ வைத்தாய் கண்ணா..