16 February 2011

விழிப்புணர்வுக்காக..

இன்று நடந்த ஒரு சம்பவம்..

அலுவலகத்தில், எங்கள் வேலைகளை முடித்த பின், ஒரு மேற்பார்வையாளரிடம் காண்பித்து, அவர் சொல்லும் திருத்தங்களைச் செய்து முடித்த பின், கையெழுத்திட்டு, நிறைவு செய்வோம்.. 

இன்றும் அப்படித் தான் ராபர்ட் (வழக்கம் போல பெயர் மாற்றித் தான் சொல்லியிருக்கிறேன்) வந்திருந்தார் - மேற்பார்வை செய்ய.. எப்பவும் கொஞ்சம் வேலை பற்றிய பேச்சு கொஞ்சம் வெட்டிப் பேச்சு என்று கழியும் இந்த நேரம், இன்று ஏனோ ஒருவரும் பேசாமலே கழிந்து கொண்டிருந்தது..

இங்கு இடைச் செருகலாக, நேற்று நடந்த ஒரு குட்டி கலாட்டாவை சொல்லிவிடுகிறேன் - இந்த டீ காப்பி நிலையம் பற்றிச் சொல்லியிருக்கிறேன் இல்லையா.. அந்தப் பொருட்களைப் பூட்டி வைத்திருக்கும் கப் போர்டின் சாவி நேற்று தொலைந்து போய், எல்லோரும் தேடிக் கொண்டிருந்தனர்.. இறுதியாக, ராபர்டின் பான்ட் பாக்கெட்டில் இருந்ததைப் பார்த்துவிட்டு, இன்று காலையில் திருப்பித் தந்தார்.. இதை வைத்து அவரை ஓட்டுவதற்காக, என் சக அலுவலர் சாதியா எங்க மேசைக்கு வந்தார்.. உங்களால் நேற்று நான் டீ குடிக்கமுடியவில்லை, அதனால் எனக்கு தலைவலி வந்து சரியாக சாப்பிடவும் இல்ல.. அதனால, நீங்கதான் எங்களுக்கு இன்னைக்கு மதியச் சாப்பாடு வாங்கித் தரனும் என்று ஓட்டிக் கொண்டிருந்தார்.. இதற்கும் ராபர்ட் ஒன்றும் பதில் பேசவில்லை.. சிரித்துவிட்டு வேலையை சரிபார்க்கத் துவங்கினார்.. சாதியாவும் நகர்ந்து சென்றார்..

நானும் பார்க்கிறேன் - ராபர்ட் மவுசை ஸ்க்ரோல் செய்து கொண்டே இருக்கிறார்.. ஒருப்படியாக ஒரு குறிப்பும் சொல்லக் காணோம்.. எப்பவும் ஐந்து நிமிடத்தில் முடியக் கூடிய ஒரு வேலை, இருபது இருபத்தைந்து நிமிடங்கள் கடந்தும் ஒன்றும் ஆகக் காணோம்.. இது போன்று இன்னும் ஏழெட்டு சரிபார்த்தல்கள் மிஞ்சி இருந்தன.. இவ்வளவு நேரம் எடுக்கிறாரே என்று எனக்கு சலுப்பாக இருந்தது.. அப்படியே பக்கத்தில் இன்னொரு கணினியைத் திறந்து, மெயில்களைக் குப்பையில் தூக்கிக் கடாசும் வேலையைச் செய்து கொண்டிருந்தேன்.. 

திடீரென்று, இந்த இடம் சூடாக இருப்பது போல இருக்கு என்றார்.. எங்களுக்கு அவ்வளவாக வெப்பம் தெரியவில்லை.. பார்த்தால், அவரது நெற்றி வியர்த்திருப்பது போன்று இருந்தது.. 

இன்னும் முதல் வேலையே முடிக்கவில்லை.. மவுசை உருட்டிக்கொண்டே இருந்தவரிடம், எனக்கு இருந்த சில சந்தேகங்களைக் கேட்டேன்.. ஒரு நிமிடம் மாதிரி நான் பேசி முடித்து அவர் முகத்தைப் பார்த்தால், எந்த ரியாக்ஷனும் இல்லை.. கடுப்பாக இருந்தது.. "இப்போ நான் சொன்னதைப் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க?" என்று தெளிவாக அவரிடம் கேட்டேன்.. திரும்பி, "வாட்?" என்றார்.. மீண்டும் நான் விளக்கினேன்.. மறுபடியும், "வாட்?" தான் பதிலாகக் கிடைத்தது!

"உங்க உடம்புக்கு ஏதும் சரியில்லையா? Are you okay?" என்று கொஞ்சம் பயந்தபடியே கேட்டேன்.. திரும்பி என்னை முப்பது நொடிகள் முறைப்பது மாதிரி பார்த்தார்.. பிறகு மீண்டும் மவுஸ் உருட்டல்.. எனக்குப் பொறுமையே போய் விட்டது..  "உங்களுக்கு வேர்த்திருக்கிறது.." என்று சொன்னேன்.. மீண்டும் திரும்பி முறைத்துவிட்டு, "யா.. யா.. I am fine.." என்று சொல்லிவிட்டு, தொடர் மவுஸ் உருட்டல்.. 

என்னமோ சரியில்லை.. எனக்கு விளங்கினார் போல இருந்தது.. நானே அவசரமாக அந்த வேலையை மூடிவிட்டு, அடுத்த பக்கத்தைத் திறந்தேன்.. அதுக்கும் இப்படியே தெளிவில்லாமல் உருட்டல்.. அதையும் நானே மூடிவிட்டு அவரை ஏறிட்டேன்.. அவருக்கு தான் குழப்பத்தில் இருக்கிறோம் என்பதே புரியவில்லை.. அதனால் அதை ஒப்புக்கொள்ளவும் முடியவில்லை..  "லஞ்ச் சாப்பிட்டுவிட்டுத் தொடரலாம்" என்று சொல்லி அவரை எழுப்பிவிட்டேன்.. திடமாக எழுந்து நடந்து போனார்.. அவர் போவதைப் பார்த்துக்கொண்டிருந்த நான் உடனே இன்னொரு ஆசிரியரிடம் சென்று நடந்ததைச் சொன்னேன்.. நான் நினைத்ததே தான்.. அவர், தலைவரிடம் போய்ச் சொல்லு என்றார்.. எனக்குத் தயக்கம் - மாட்டி விடுவது போன்று ஆகிவிடக் கூடாதில்லையா? அதற்குள் இன்னொருவர், "ராபர்டின் நலனுக்காகத் தான் சொல்கிறோம், உனக்குத் தயக்கமாக இருந்தால், நான் போய் சொல்கிறேன்" என்றார்.. 

நான் அதற்குள் கீழே சென்று ராபர்டைத் தேடினேன்.. சாப்பிடச் சென்று விட்டார்.. இடையில் சந்தித்த சாதியாவும், ராபர்ட் தன்னிடம் சரியாகப் பேசவில்லை என்றார்.. நான் நிலைமையை விளக்கிவிட்டு என் வேலையை கவனிக்கச் சென்றேன்..

லஞ்ச் நேரம் முடிந்து, ராபர்ட்டுக்கு போன் செய்தேன்.. கீழே இறங்கி வந்தார்.. தெளிவாகப் பேசினார் - எப்போதும் போல.. அதே பழைய ஆளாக மாறியிருந்தார்.. நீ கிளம்பு, நான் மீதியைக் கவனித்துக் கொள்கிறேன் என்று சொன்னார்..

உங்களுக்கு என்ன காரணமென்று புரிந்ததா? 

ராபர்ட்க்கு சர்க்கரை நோய்.. இள வயதிலேயே வந்துவிட்டது.. அதற்கான மருத்துவம் எடுத்துக் கொண்டிருக்கிறார்..  அதன் விளைவு தான் இது - மருந்தினால் ரத்தத்தில் குளுகோஸ் அளவு மிகவும் இறங்கிப் போனதால், யோசிக்கும் திறனில் வந்த குழப்பம்.. Hypoglycemia (மேலும் தகவல்களுக்கு லிங்க் கொடுத்திருக்கிறேன்) பொதுவாக, இப்படிப்பட்டவர்கள் மயங்கி கீழே விழுந்து விடுவார்கள்.. அவர்களைக் கண்டவர்கள் மருத்துவமனைக்கு கூட்டிச் சென்று ட்ரீட் செய்வார்கள்.. இல்லை, அவர்களே  தங்களுக்கு இப்படி இருக்கிறது என்று உணர்ந்து உடனே சர்க்கரை மாத்திரை (நோய்க்கான மாத்திரை அல்ல, சர்க்கரையே தான்) அல்லது ஜூஸ் எடுத்துக் கொள்ளுவார்கள்.. சர்க்கரை நோய்க்கான மருந்து உட்கொள்ளும் எனது பாட்டி கூட அடிக்கடி தலை கிறுகிறுப்பதாகச் சொல்லுவார்.. ஆனால் என்னுடன் வேலை செய்பவர் நான் பார்த்து கொண்டிருக்கக் கொண்டிருக்க இப்படியானது எனக்கும் திகைப்பு தான்.. 

உங்களுக்குத் தெரிந்தவரும் யாரேனும் இருக்கலாம், சர்க்கரை நோய்க்கான மருந்துகளை எடுத்துக் கொண்டு - ஒரு விழிப்புணர்வுக்காகவே இதைப் பகிர்ந்திருக்கிறேன்.. ராபர்டுக்காக அறையில் சர்க்கரை மாத்திரைகள் வாங்கி வைத்திருக்கிறார்கள் என்று இது முடிந்ததும் தான் தெரிந்து கொண்டேன்.. அவர் திடமாக இருந்ததால் மட்டுமே அவரை சாப்பிட அனுப்பி வைத்தேன்.. இல்லையென்றால், அவரை அங்கேயே இருத்திவிட்டு, உடனே  மற்றவர்களை உதவிக்கு அழைத்து, அவரை எமர்ஜென்சிக்கு அழைத்துப் போவது போன்று ஏதாவது செய்திருப்போம்.. (ஏற்கனவே ஒரு முறை இவ்வாறு செய்திருக்கிறார்கள், அப்போது நான் நேரிடையாக அவ்விடத்தில் இல்லை.. அதற்கப்புறம் தான் அவருடைய உடல்நிலை குறித்து ஆசிரியர்கள் தவிர்த்த ஏனையோருக்கும் (என்னைப் போன்று) தெரிய வந்தது..)

11 comments:

 1. 6-7 வருஷங்களுக்கு முன் அம்மாவுக்கு டயாபடீஸ் வந்தப்ப எங்களுக்கு எதுவுமே தெரில..ஒருநாள் இப்படித்தான் கிறுகிறுப்பு வந்ததுபோலிருக்கு ஹாஸ்பிடல் போய் செக்-அப் செய்ததில் சுகர் லெவல் கன்னாபின்னான்னு ஏறி இருந்தது. இன்னும் கொஞ்சம் அதிகமாகியிருந்தால் அட்மிட்தான் பண்ணியிருப்பாங்க. :-| அப்ப இருந்து ஸ்ட்ரிக்ட்டான உணவு கட்டுபாடு,வெளியே போகையில் கையிலேயும் 2-3 சாக்லேட் எடுத்துகிட்டுதான் போவோம்.
  உபயோகமான பதிவு சந்தனா.

  ReplyDelete
 2. நன்றி மகி! அம்மாவுக்குமா? ம்ம்..

  //இப்படித்தான் கிறுகிறுப்பு வந்ததுபோலிருக்கு//

  அறிகுறி ஒன்று தான்னாலும், காரணிகள் வேறு வேறு - அம்மாவுக்கு அதிகமானதால, இவருக்கு குறைந்ததால.. சுகர் கேண்டிஸ் மாதிரி வச்சுக்கச் சொல்லுங்க..

  ReplyDelete
 3. ஓ! உபயோகமான பதிவு... பகிர்விற்கு நன்றி - எல்போர்ட்ஸ்!!

  ReplyDelete
 4. இதை சம்பந்த பட்ட நபர் அறிந்திருந்தாலே போதும்..!! பாதி வியாதி தீர்ந்த மாதிரிதான் ..!!சுகர் அதிகமானாலும் சரி லோவாக இருந்தாலும் சரி இதே பிரச்சனைதான் ..

  நீங்க முதல் தடவையா பார்த்ததால இந்த குழப்பம்..இல்லாட்டி நீங்களே சுகர் போட்டு ஒரு கப் காஃபி அவர்கிட்ட குடுத்து குடிக்க வச்சி இருப்பீங்க . :-))

  ReplyDelete
 5. அவர் அறிந்தவர் தான் ஜெய்.. ஆனால் சிந்திக்கும் திறன் குறைந்து விட்டால் அவர்களாலும் ஒன்னும் செய்ய முடியாது..

  //நீங்க முதல் தடவையா பார்த்ததால இந்த குழப்பம்..இல்லாட்டி நீங்களே சுகர் போட்டு ஒரு கப் காஃபி அவர்கிட்ட குடுத்து குடிக்க வச்சி இருப்பீங்க . :-))//

  க்கும்.. இப்படி நடிச்சு நடிச்சு ஓசி டீ நிறைய குடிச்சிருக்கீங்கன்னு மட்டும் தெரியுது :))

  எனக்கு குழப்பம்லாம் இல்ல.. ஆசிரியர் கிட்டப் போய், நீங்க ஏன் இன்னைக்கு தெளிவில்லாம இருக்கீங்கன்னு என்னால கேட்க முடியாது :) அந்தத் தயக்கம் தான்.. அப்புறம், இன்னைக்குன்னு பார்த்து வேலைகளும் கடினமாகவே இருந்தன.. அதனால தான் நிறைய நேரம் எடுத்துப் பார்க்கிறார் ன்னு முதல்ல நினைச்சுட்டேன்..

  ReplyDelete
 6. Good one chandu! My friend's son has type 1 diabetes at a very young age of 5 . Here in schools the teachers are educated about kids conditions like nut allergy/gluten allergy/strawberry/ watermelon (me) allergy etc. The dizziness could be because of various reasons like ear infection or vertigo .

  ReplyDelete
 7. நன்றி இலா.. தர்பூஸ் அலெர்ஜியா!! ம்ம்.. அதென்னமோ நம்மவூர்ல இம்புட்டு அலர்ஜி பார்த்ததில்ல.. அரிச்சா சொறிஞ்சுப்பதோட நாமே அந்த உணவை நிறுத்திடறோம் போல :)

  dizziness க்கு பல காரணங்கள் இருந்தாலும், in this given situation அப்படின்னு பார்த்தால், ஏற்கனவே அவருடைய வியாதி ஏற்கனவே அவருக்கு ஒரு எபிசொட் இப்படி நடந்திருக்குன்னு தெரிஞ்சதால இப்படி ஒரு முடிவுக்கு வந்தோம்..

  ReplyDelete
 8. பயனுள்ள தகவல்களுடன் ஒரு நல்ல பதிவு.

  ReplyDelete
 9. உண்மைதான் சந்து, நல்ல தகவல்தான், இப்படியானவர்கள் எப்பவுமே பொக்கட்டில் ஏதாவது சுவீட் வைத்திருக்க வேண்டும்.

  ReplyDelete

பழைய வரிய மாத்தச் சொல்லீட்டாங்க.. இப்ப புதுசு “என்ன சொல்லனும்னாலும் தெகிரியமா சொல்லிட்டுப் போங்க” :)