19 April 2011

சுயமரியாதை..



முரளிக்கு அன்று மனம் ஒரு நிலையில் இல்லை. அவனது கல்லூரியைச் சேர்ந்த மாணவர் விடுதியின் ஆண்டு விழா அன்று இரவு நடைபெறுவதாக இருந்தது. போகலாம் என்றும், இல்லை நேர விரயமென்றும், அவனுக்குள் போராட்டங்கள் நிகழ்ந்த வண்ணம் இருந்தன. சரி கொஞ்சம் நேரம் போயிட்டு வந்துடலாம்.. இல்லாட்டி அதையே நினைச்சுக்கிட்டு நேரத்த வீணாக்குவோம் என்று தோன்றியதால் கிளம்பிச் செல்வதென்று முடிவு செய்தான்.

முரளியைப் பற்றி சில வரிகள். கே ஜி எஸ் இன்ஜினியரிங் கல்லூரியின் இறுதி ஆண்டு மாணவன். டே ஸ்காலர். விடுதியில் தங்கிப் படிக்கும் அவனது நண்பர்கள், அவனையும் இதர டே ஸ்காலர் பசங்களையும் விழாவுக்கு வந்து விசிலடித்து ஆட்டம் போட்டு சிறப்பிக்கச் செய்யுமாறு அழைத்திருந்தனர். இதற்கு முன்பு ஒரு முறை முதலாம் ஆண்டு படிக்கும்பொழுது போய் வந்திருக்கிறான். அடுத்த இரண்டு வருடங்கள் சில காரணங்களால் போக முடியவில்லை.. இந்த வருடம் போயாக வேண்டும் என்று அவன் நினைக்க ஒரே காரணம், சிம்ரன்.. அவனுக்கு மிகவும் பிடித்த சிம்ரன். ஆம், நடிகை சிம்ரனே தான். அவரைத்தான் சிறப்பு விருந்தினராக அந்த நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தனர். அவரும் தனது வருகையை உறுதி செய்திருந்தார். மிகக் குறைந்த நேரமே என்றாலும் அவர் ஒப்புக்கொண்டதே அவர்களுக்கு பெரிய சந்தோஷத்தைத் தந்தது. சிம்ரன் மேலே முரளிக்கு செம க்ரேஸ்.. நளினமான உருவம், அழகிய முகத்தோற்றம், வெட்டி வெட்டி ஆடும் நடனம், அப்பப்போ நடிப்பு என்று கலக்கிய அவரை நேரில் காணக் கிடைக்கும் வாய்ப்பைத் தவற விடுவது தவறு என்று முரளிக்குத் தோன்றியது. 

போக வேண்டாம் என்று அவன் நினைக்கவும் ஒரே ஒரு காரணம் இருந்தது. அன்று வெள்ளிக்கிழமை. வரும் திங்கட்கிழமையில் இருந்து அவனுக்கு செமஸ்டர் பரிட்சைகள் தொடங்கப் போகின்றன. ஹாஸ்டலில் இருக்கும் இறுதியாண்டு படிப்ஸ் மாணவர்களும், கொஞ்சம் நேரம் மட்டும் தலை காட்டிவிட்டு அறைக்கு படிக்கப் போய்விடலாம் என்ற எண்ணத்துடன் தான் இருந்தார்கள். மற்றவர்கள், அன்றிரவு நன்றாக என்ஜாய் செய்துவிட்டு அடுத்தடுத்த நாட்களில் பார்த்துக்கொள்ளலாம் என்ற "தெளிவான" முடிவில் இருந்தார்கள்.

போகலாம் என்று முடிவு செய்ததும் கார்த்திக்கை அலைபேசியில் அழைத்தான். கார்த்திக், முரளியின் வகுப்புத் தோழன் மற்றும் விடுதி மாணவன். இருவருக்கும் படிப்பு, விளையாட்டு, சினிமா என்று நிறைய விஷயங்களில் ஒத்த ரசனைகள் உண்டு. கார்த்திக்குக்கும் சிம்ரனைப் பிடிக்கும். அவன்தான் இந்த விஷயத்தை முதலில் முரளியிடம் பகிர்ந்தது. கொஞ்ச நேரம் வந்துட்டுப் போயிடுடா என்று வற்புறுத்திக் கொண்டிருந்தான். முரளிக்காக அன்றிரவு விருந்துக்கு முன்னமே சொல்லி வைத்திருந்தான். கார்த்திக்கிடம், அலைபேசியில், சிம்ரன் வருவதற்கு அரை மணி நேரம் முன்பாக தனக்கு தகவல் சொல்லும்படி சொல்லிவிட்டு, முரளி முகம் கழுவப் போனான்.

கார்த்திக் மறுபடியும் அழைத்தவுடன், அம்மாவிடம் அதிகபட்சம் இரண்டு மணி நேரத்தில் வந்துவிடுவேன் என்று சொல்லிவிட்டு, யமஹாவில் ஏறிப் பறந்தான். மனம் கூண்டில் இருந்து விடுபட்ட பறவையைப் போல குதூகலித்துக் கொண்டிருந்தது. இதெல்லாம் பரிட்சை முடிந்தபின் நடந்தால் ரொம்ப நன்றாக இருக்கும் என்று தோன்றியது. கொஞ்சம் சாலை நெரிசல் இருந்தாலும் அதிகம் தாமதிக்காமல் போய்ச் சேர முடிந்தது. வழக்கமாகவே விடுதி களேபரமாகத் தான் இருக்கும். அன்றிரவு கண்டபடிக்கு களை கட்டியிருந்தது. மாணவிகளையும் வருமாறு அழைத்திருந்தார்கள். அவர்கள் பேட்சில் இருந்து யாரும் வரக் காணோம். நிறைய ஜூனியர் மாணவிகள் தென்பட்டார்கள். 

மூன்று வருடங்களுக்கு முன்பு விழாவுக்கென்று இங்கு வந்திருந்த போது நடிகர் விக்ரமை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார்கள். கூட, இவர்கள் துறையைச் சேர்ந்த ஒரு நிறுவன மேலாளரையும். விக்ரம் பேசிமுடித்து விழாமேடையில் இருந்து இறங்கி முன்வரிசையில் அமர்ந்ததும் முரளியின் நண்பர்கள் அவரை நோக்கி முன்னேறிச் சென்றார்கள். முரளியும் அவர்களுடன் இணைந்துகொண்டான். அவரை அருகில் இருந்து பார்க்க வேண்டும் என்று தோன்றியது. இவர்களைக் கண்டதும் விக்ரம் புன்னகைத்தார். அவரிடம் ஆட்டோக்ராப் வாங்க வேண்டும் என்றெல்லாம் தோன்றவில்லை.  ஆனால் மற்றவர்கள் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொள்வதைப் பார்த்ததும், இவனுக்கும் அந்த ஆசை எழுந்தது. நண்பனுடைய கேமராவில் தன்னையும் எடுக்கச் சொல்லி, நினைவில் வைத்திருந்து, அவனிடம் கேட்டு வாங்கி ப்ரிண்டும் போட்டுக் கொண்டான். இன்றும் அந்தப் புகைப்படம் அவன் வீட்டு பீரோவில் ஏதோ ஓர் ஆல்பத்தின் பிளாஸ்டிக் கவருக்குள் சிறைபட்டு படுத்துக் கிடக்கிறது. புகைப்படம் எடுத்துவிட்டு வரும்போது கார்த்திக்கைத் தேடினால், அவன் அந்த நிறுவன மேலாளருடன் கை குலுக்கிக் கொண்டிருந்தான். அதைப் பார்த்ததும் ஏனோ முரளிக்கு கொஞ்சம் பொறாமையாக இருந்தது.

கார்த்திக் வரவேற்பு ஹாலில் காத்திருந்தான். அவனுடன் சென்று சாப்பிட்டு முடித்து, மறுபடியும் வரவேற்பு ஹாலுக்கு வந்தமர்ந்து பேசிக்கொண்டிருந்த வேளையில், சிம்ரன் வந்தே விட்டார்.. விடுதியின் நுழைவுவாயிலுக்கும் விடுதிக் கட்டிடத்துக்கும் இடையே இருந்த பெரிய விளையாட்டு மைதானத்தில் தான் மேடை அமைக்கப்பட்டு நாற்காலிகளும் போடப்பட்டிருந்தன.  மேடையை அடைவதற்காக இவர்கள் நின்றிருந்த பகுதியை சிம்ரன் கடந்து போகும் பொழுது, ஹாலின் உள்ளிருந்து ஜன்னல் வழியாக, நிமிடத்திற்கும் குறைவான பொழுதில், அவரை ஓரளவுக்கு கிட்டே பார்க்க முடிந்தது. கருப்பு நிறச் சேலை அணிந்திருந்தார். முகத்தை சரியாகப் பார்க்க முடியவில்லை. ஆனால், நேரில் பார்த்ததை விட திரைப்படத்தில் அழகாக இருந்தார் போன்று தோன்றியது.

கூட்டத்தில் நிறைய பேர் பரபரப்பாகி எழுந்து நின்று விட்டார்கள். சிலர் முண்டியடிக்கவும் ஆரம்பித்தனர். விசிலுக்கும் கூச்சலுக்கும் குறைவே இல்லை. முரளியும் கார்த்திக்கும் விடுதிக் கட்டிடத்தை விட்டு வெளியே வந்து, கூட்டத்தின் முடிவில், மேடைக்கு வெகு தூரத்தில் நின்று கொண்டார்கள். ஏனோ இந்த முறை அருகில் சென்று பார்க்க வேண்டும் என்று முரளிக்குத் தோன்றவில்லை. சிம்ரனைப் பேச அழைத்தார்கள். கொஞ்சம் நேரம் தமிங்கலத்தில் என்னவோ பேசினார். அடுத்த நிகழ்ச்சியாக, ஆண்டுவிழா கொண்டாட்டங்களையொட்டி நடத்தப்பட்ட விளையாட்டு மற்றும் பல்சுவை போட்டிகளில் வெற்றிபெற்றோருக்கு, சிம்ரனின் கையால் பரிசளிப்பு ஆரம்பித்தது. இறுதியில் கலைநிகழ்ச்சிகள் நடைபெறுவதாக ஏற்பாடு. 

கார்த்திக்கின் பெயரும் மேடையில் அழைக்கப்பட்டது.. அவன் முரளியைப் பார்த்தான். "ஏன்டா.. போயேன்.." என்றான் முரளி. கார்த்திக் சிரித்தான்.. "ஸ்கிட் லயோ இல்ல டான்ஸ்லயோ ஜெயிச்சிருந்தா கண்டிப்பா போயிருப்பேண்டா.. வாலிபால் டீம் கேப்டனா போகனும்ன்னு தோனல.. சிம்ரன சிம்ரனா இருக்க விடுவோம்டா.. ரசிக்கறதோட நிறுத்திப்போம்.. ஆராதிக்கவும்  வேணாம்.. அப்புறமா தூக்கி குப்பையில போடுறதும் வேணாம்.."   

முரளி ஆமோதிப்பாய் புன்னகைத்தான். "சரிடா, நேரமாச்சு.. கிளம்பறேன்.." என்றபடி கார்த்திக்கின் தோளை ஒருமுறை தட்டி, பற்றி இறுக்கித் தளர்த்தினான்.. "போய்ச் சேர்ந்ததும் போன் பண்ணுடா.."   என்றான் கார்த்திக். பைக்கில் ஏறி நுழைவுவாயிலில் இருந்து வெளியேறும் முன், முரளி ஒருமுறை தலையைத் திருப்பிப் பார்த்தான்.. சிம்ரன் மேடையில் இருந்து இறங்குவதற்கு முன்பே மேடைக்குக் கீழே கூட்டம் சூழ ஆரம்பித்திருந்தது. கார்த்திக் விடுதியை நோக்கி நடந்து கொண்டிருந்தான்..


***************************

இது சில உண்மைச் சம்பவங்களை வைத்து எழுதப்பட்டது.. சிம்ரன் என்றால் இன்றைய சிம்ரன் அல்ல, அவர் பீக் இல் இருந்த போது நடந்தது.. என் தோழியின் அண்ணன் இவ்வாறு ஒரு நடிகையின் கையால் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றதற்கான பாராட்டுச் சான்றிதழைப் பெற மறுத்துவிட்டார் என்று கேள்விப் பட்டிருக்கிறேன்..


17 comments:

  1. :)

    இப்போதான் பிளாக் யூஆரெல்லுக்கு ஏத்த போஸ்ட் போட்ருக்கீங் அம்மிணி

    கார்த்திக் மாதிரி 1% பசங்கதான் இருப்பாங்க !!

    யார்கிட்ட சான்றிதழ் வாங்குனா என்ன? நமக்கு மேடையில் சான்றிதழ்தானே முக்கியம் ? இப்படி நினைக்கிற பசங்களும் இருப்பாங்களே !!

    ReplyDelete
  2. //கார்த்திக் மாதிரி 1% பசங்கதான் இருப்பாங்க !!//

    correct.. அப்படி நான் கேள்விப்பட்ட ஒரு சம்பவம் தான் இது..

    இந்த மாதிரி இருந்தா நல்லாயிருக்கும். அவ்வளவு தான்.. ஆனா இப்படித் தான் இருக்கனும்ன்னு நாம சொல்ல முடியாது..

    ஒரு celebrity ஐ உருவாக்குவது நாம தான், நாமும் ஊடகங்களும் கொடுக்கிற முக்கியத்துவம் தான்.. பின்னால அவங்க எதையாவது சொல்லப் போயி அவங்கள வெறுத்து ஒதுக்க வேண்டியது..

    //யார்கிட்ட சான்றிதழ் வாங்குனா என்ன? நமக்கு மேடையில் சான்றிதழ்தானே முக்கியம்?//
    ஸ்கூல் பசங்களுக்கு இது ஓக்கே.. காலேஜ் படிக்கும் போது, தன்னோட திறமையை மதித்து, சான்றிதழ் வழங்கத் தகுகியான கையால வாங்கினா நல்லாயிருக்கும்ன்னு நினைப்பது நல்ல விஷயம் தானே..

    //இப்போதான் பிளாக் யூஆரெல்லுக்கு ஏத்த போஸ்ட் போட்ருக்கீங் அம்மிணி//

    கருத்தூரு? அந்தப் பேரே மறந்து போச்சு :))

    ReplyDelete
  3. அன்புமணி ராமதாஸ் அமைச்சரா இருந்தப்ப, அந்தாளு கையால பட்டம் வாங்கணுமான்னு கூட கொஞ்சம் பேரு யோசிச்சிருக்காங்க :))

    ReplyDelete
  4. மேடையில போயி வாங்காட்டியும், விழா முடிஞ்சதும் எப்படியும் அது நமக்கு கிடைச்சிடும், அந்த நிலையில தான் அப்படி ஒரு முடிவு..

    ReplyDelete
  5. புகைப்படம் எடுத்துவிட்டு வரும்போது கார்த்திக்கைத் தேடினால், அவன் அந்த நிறுவன மேலாளருடன் கை குலுக்கிக் கொண்டிருந்தான்.


    ....... reality vs glamour
    ....good post.

    ReplyDelete
  6. ஆஹா... அருமையாகச் சொல்லியிருக்கிறீங்க கதையை.

    சிம்ரன், விக்ரம்... வேறு யாரையெல்லாம் புடிக்கும் சந்து?:)

    ReplyDelete
  7. //ஒரு celebrity ஐ உருவாக்குவது நாம தான், நாமும் ஊடகங்களும் கொடுக்கிற முக்கியத்துவம் தான்.. பின்னால அவங்க எதையாவது சொல்லப் போயி அவங்கள வெறுத்து ஒதுக்க வேண்டியது.. //

    :)

    இது யார் தப்பு? தப்பா பேசன அந்த செலப்ரட்டியா இல்ல அவங்கள செலப்ரட்டியாக்குன நாமளா?

    //தகுதியான கையால வாங்கினா நல்லாயிருக்கும்ன்னு நினைப்பது நல்ல விஷயம் தானே.. //

    இல்லைன்னு சொல்லல இப்படி நடிகைய கூட்டிவந்து பாராட்டு பத்திரம் கொடுக்குற கல்லூரியப்பத்தி ஏன் பேசலை நீங்க? அப்படிப்பார்த்தா அந்த சான்றிதழையே வாங்க கூடாது .

    தமிங்கிலிஷ்தான் சரி தமிங்கலம் புதுசா இருக்கு பட் சரிவரல :))

    ReplyDelete
  8. பட்டம் அளிப்பு விழாவுக்கு நடிகரைப் பொதுவாக எங்க கல்லூரியில கூப்பிட மாட்டாங்க..

    விடுதி ஆண்டுவிழால கலை நிகழ்ச்சிகளும் நடக்கும்.. கல்சுரல்ஸ் நிகழ்ச்சி தானே அது.. அதற்காக கூப்பிட்டாத் தவறில்லை.. அந்தப் பையனுக்கும் சிம்ரனைப் பிடிக்கும், அதான் பாக்கப் போறான்.. அதுக்காக விழுந்து அடிச்சுட்டு கை கொடுக்க நினைக்கறது மாதிரி எல்லாம் செய்வதில்லை, அதே மாதிரி அவங்ககிட்ட சான்றிதழ் வாங்குவது அந்தப் பையனுக்கு விருப்பமில்லை..

    ReplyDelete
  9. //இது யார் தப்பு? தப்பா பேசன அந்த செலப்ரட்டியா இல்ல அவங்கள செலப்ரட்டியாக்குன நாமளா?//

    அவங்க கருத்தை அவங்க சொல்லுறாங்க..
    தப்பு, ஊடகங்களும் பிரபலங்களுக்கு அனாவசிய முக்கியத்துவம் தரும் நாமும்.. ரெண்டு பேரு மேலயும் தப்பு இருக்கு.. இங்கயும் இந்தப் பிரச்சனை உண்டு, கடையில பத்திரிகை கவர்ல எப்பவும் அவங்களப் பத்தின செய்திகள் அலங்கரிச்சுகிட்டு இருக்கும்..

    ReplyDelete
  10. நன்றி அதிரா.. எனக்கு ஒரு படம் புடிச்சா அதுல நடிச்சவங்களும் புடிச்சுப் போவாங்க.. நிறைய பேரு புடிக்கும், கொஞ்சம் பேரை புடிக்காது..

    ReplyDelete
  11. படிக்க ஆரம்பிச்ச கொஞ்ச நேரத்துலயே புரிஞ்சுது, எல் போர்ட் இஸ் சீரியஸ் என்று.
    கருத்து உரையாடலையும் ஃபாலோ பண்றேன்.

    ReplyDelete
  12. இப்புடி எல்லாம் எஸ்கேப்பு ஆவக் கூடாது.. நீங்க என்ன நினைக்கறீங்கன்னும் சொல்லிட்டுப் போவனும் :)

    //எல் போர்ட் இஸ் சீரியஸ்//
    மூச்சு இதயத் துடிப்பு எல்லாம் இருக்கு இமா :))

    ReplyDelete
  13. ஹா ஹா //மூச்சு இதயத் துடிப்பு// ;)))

    ReplyDelete
  14. நானும் உங்க கட்சிதான் எல் போர்ட் இந்த விஷயத்துல!! :-)))) நல்லவேளை நான் படிச்ச காலங்களில் இப்படி ‘சினிமா மோகம்’ தலைக்கேறியிருக்கவில்லை. (ஆமா, என்னவோ வருஷத்துக்கு பத்து பிரைஸுக்குக் குறையாம வாங்கின மாதிரி...) ;-)))))))

    ReplyDelete
  15. சந்தூ, எனக்கு இந்த நடிகைகள் மீது பெரிய மோகம் இருந்ததில்லை. ஒரு முறை பள்ளியில் படிச்ச போது போலீஸ் கமிஷனர் கைகளால் பரிசு வாங்கினேன். அதன் பிறகு எந்தப் பரிசும் வாங்கியதில்லை. நல்ல கதை.
    இப்பவும் நடிகைன்னா பறக்கிற பசங்க தான் அதிகம். தெளிவா சிந்திக்கிறவர்கள் 1% தான் இருப்பார்கள். சமீபத்தில் நடிகைகளின் மேக்கப் இல்லாத படங்கள் எங்கோ பார்த்தேன். அதன் பிறகு தான் நாமெல்லாம் இயற்கையிலேயே இம்பூட்டு அழகா (!!) இருக்கிறோம் என்று நினைச்சு சந்தோஷ பட்டுக் கொண்டேன்.

    ReplyDelete
  16. நன்றி ஹூசைனம்மா.. அப்பப்ப ரெண்டு பேரும் ஒரு கச்சியில இருக்கத் தான் செய்யுறோம் :)

    நன்றி வான்ஸ்.. நடிகரைப் பாத்து ஓடும் ரசிகைகளும் இருக்கிறாங்க.. மேக்கப் இல்லாம பார்த்தா எப்படின்னு தெரியல, அத்தோட பார்க்கும் போது நிறைய பேரு அழகாக இருக்கிறாங்க..

    //நாமெல்லாம் இயற்கையிலேயே இம்பூட்டு அழகா (!!) இருக்கிறோம் என்று நினைச்சு சந்தோஷ பட்டுக் கொண்டேன்.// நெனப்ஸ், நாமே நம்மளப் பத்தி நினைச்சுக்க வேண்டியது தான் :)

    ReplyDelete

பழைய வரிய மாத்தச் சொல்லீட்டாங்க.. இப்ப புதுசு “என்ன சொல்லனும்னாலும் தெகிரியமா சொல்லிட்டுப் போங்க” :)