20 April 2011

ரத்தமின்றி.. கத்தியின்றி..

கிபி பத்தொன்பதாம் நூற்றாண்டு, வருடம் 21, திகதி -182.5. நேரம்: 8

ரிஜூஸால் அவனது ஆசிரியர் சொன்னதை லாஜிக்கலாகப் புரிந்து கொள்ளவே முடியவில்லை. இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் இருபத்தோராம் நூற்றாண்டு நிகழ்ந்தது என்றால், நாம் இன்று வாழ்வது இருபத்திமூன்றாம் நூற்றாண்டு என்று தானே எண்ணிக்கை வர வேணும்? பாடத்தின் இடையில் ஆசிரியரிடம் இப்படி ஒரு சந்தேகத்தைக் கேட்ட போது, அவர் அவனை ஒரு புழுவைப் பார்ப்பது போன்று பார்த்தார். இருபத்தோராம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆதி மனிதன், காலமென்பது ஒரு திசையில் மட்டுமே செல்லக் கூடியது என்று நம்பியிருந்தான். அதனால் தான் அவனது காலத்தில், வருடங்கள் எல்லாமே முன்னோக்கி நகர்ந்தன. அதற்குப் பின்னர் பற்பல ஆராய்ச்சிகள் மூலமாக, கணக்கியல் வல்லுனர்களும் காலவியலாளர்களும், காலம் இரண்டு திசையிலும் பயணிக்கக் கூடியது என்று கண்டுபிடித்தார்கள். அதனால் தான் இப்போது பத்தொன்பதாம் நூற்றாண்டில் இருக்கிறோம், அடுத்ததாக பதினெட்டாம் நூற்றாண்டை நோக்கி பயணிக்கப் போகிறோம் என்றார். 

வேகமாக ஒரு கம்ப்யூட்டர் போர்டில் ஃபார்முலாக்களை அவர் கிறுக்கிக் காண்பிக்க, அதே நேரம் மற்றும் வேகத்தில், பல்லாயிரம் மைல்களுக்குப் அப்பால் இருந்த இவனது அறையின் திரையில் அவை ஒளிர்ந்து கொண்டிருந்தன. இதெல்லாம் தனது புரிதலுக்கு அப்பால் என்று உணர்ந்த ரிஜுஸ், தனது அடுத்த சந்தேகத்தை கொஞ்சம் தயக்கத்துடன் கேட்டான், “அப்படியென்றால் இதற்கு முன்னர் நிகழ்ந்து முடிந்திருந்த பத்தொன்பதாம் நூற்றாண்டின் மனிதர்களைச் சந்திக்க முடியுமா?”. ஆசிரியர் கொஞ்சமும் தயங்காமல், இப்போது தான் அது குறித்த ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன, முடிவுகள் வெளிவர சிலகாலம் ‘முன்ன’ ‘பின்ன’ ஆகும் என்றார்.

அந்தக்கால மனிதர்கள் வருடத்தை நாட்களாகவும் வாரங்களாகவும் மாதங்களாகவும் பிரித்து வைத்திருந்தனர் என்று அவர் சொன்னது அவனுக்கு மிகுந்த ஆச்சர்யத்தைத் தந்தது. பருவ நிலைகள் மாறி மாறி வந்தாலும், நாளை என்பது நேற்று என்பதிலிருந்து மாறுபட்டது என்ற ஆதி மனிதனின் நம்பிக்கையை அறிவியல்பூர்வமாகத் தகர்த்தெறிந்து காலநிலைக் கணக்கு மாற்றியமைக்கப்பட்டதாகவும், அதன்படி, வருடத்தின் பாதி நாட்களின் திகதி தொடர்ச்சியாக அமைக்கப்பட்டு, பாதி வருடம் வரை கூட்டலிலும் மீதி வருடம் கழித்தலிலும் கழியும் என்று விளக்கினார். 

அந்நேரம் கதவு தட்டப்படும் சத்தம் கேட்கவே, பாடத்தில் ஆழ்ந்திருந்த ரிஜூஸ் இயல் நிலைக்கு வந்தான். ரியா தான் தட்டிக் கொண்டிருந்தாள். ஆசிரியரிடம் அனுமதி கேட்கவும், அவரது நாப்பரிமாண வடிவம் அறையில் இருந்து மறைந்தது. அதே நொடியில், வகுப்பறையில் ஆசிரியரின் முன் அமர்ந்திருந்த மாணவர்களில், ரிஜூசின் நாப்பரிமாண வடிவம் மறைந்து போனது.

ரியாவின் வருகைக்கான அனுமதியை ரிஜூஸ் உறுதி செய்ததும், அவளது வடிவம் அறையில் உருவெடுத்தது. "இன்று -பத்து மணிக்கு சைல்ட் மார்ட்டில் அவர்களது நிபுணருடன் கலந்துரையாட நாம் நேரம் வாங்கியிருக்கிறோம்.. உனக்கு நினைவுபடுத்திவிட்டுச் செல்ல வந்தேன்.." "ம்ம்.. வகுப்பு முடிந்தவுடன் உனக்கு தெரிவுபடுத்துகிறேன்.." என்றான் ரிஜூஸ். அத்துடன் ரியா அங்கிருந்து மறைந்து போனாள். ஆசிரியரின் அறையைத் தட்டி அனுமதி வாங்கி, மீண்டும் வகுப்பறையில் ஐக்கியமானான் ரிஜூஸ். 

****************

கிபி பத்தொன்பதாம் நூற்றாண்டு, வருடம் 21, திகதி -182.5. நேரம்: -10

சைல்ட் மார்ட் கட்டிடம் மிகப் பிரமாண்டமாக இருந்தது. முற்றிலும் குளிரூட்டப்பட்ட நிலையம். மிக விசாலமான வரவேற்பறை, அதிலே வீழ்ந்து வருவோர் போவோருக்கு சாரலைத் தெளித்துக் கொண்டிருந்த பெரிய நீர் வீழ்ச்சி, சூரிய வெளிச்சத்தை போன்றே ஒளிர்வூட்டிய செயற்கை ஒளி, இனிய இசை, என்று ரம்மியமான சூழலைக் கொண்டிருந்தது.  தங்களுக்கான அழைப்பு வந்ததும், நிபுணர் திரு சாம்சனின் அறைக்குள் நுழைந்தனர் இருவரும்.

திரு சாம்சன் தன்னை மரபணு வடிவமைப்பாளர் (genetic designer) என்று அறிமுகப் படுத்திக் கொண்டார். முதல் சந்திப்பில் நேரடியாகப் பேசுவது அவசியமென்றும், அடுத்தடுத்த சந்திப்புகளை இருந்த இடத்திலிருந்தே நடத்திக் கொள்ளலாம் என்றும் கூறினார். அவர்களைப் பற்றிய சில விபரங்கள் தேவைப்படுவதாகவும், அதைத் தொடர்ந்து சில பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும் என்றும், முடிவில் குழந்தையைக் குறித்த தங்களது எதிர்பார்ப்புகளை வெளிப்படுத்தலாம் என்றும் சொன்னார்.

ரிஜூஸ் மற்றும் ரியா பிறந்த பொழுது இம்மாதிரியான வசதிகள் எல்லாம் இருக்கவில்லை. அவர்களது பெற்றோரின் காலத்தில், முற்றிலும் உடலுக்கு வெளியே, கண்ணாடியால் ஆன சிறு பெட்டியினுள், பெற்றோரின் அரவணைப்புடன் சுயமாக இயங்கக் கூடிய மனிதக் குழந்தையை ஒரே மாதத்தில் உருவாக்கக் கூடிய அளவு தான் விஞ்ஞானம் முன்னேறி இருந்தது. அதன் வளர்ச்சியை முறையாகக்  கண்காணித்து நிறைவான ஊட்டச்சத்து அளித்து குறை வளர்ச்சி கொண்ட குழந்தைகளை சரிப்படுத்தியோ அல்லது அழித்துவிட்டோ, பிறப்புக் குறையற்ற குழந்தைகளை உருவாக்கிக்கொண்டு இருந்தார்கள். ரிஜூஸ் ரியா மற்றும் அவர்களது நண்பர்கள் எல்லோரும் அப்படிப் பிறந்தவர்கள் தாம். அதே காலகட்டத்தில் சில ஏழை நாடுகளில் வசதியற்ற பெண்கள் தங்கள் உடலினுள் கரு சுமந்து ஒன்பது மாதங்கள் வரைக் காத்திருந்து குழந்தை பெற்றுக் கொண்டிருந்தனர். அவர்களது பிள்ளைகளில் சிலர் குறைகளுடன் பிறப்பது தவிர்க்கவியலாததாக இருந்தது.

விபரங்கள் பெற்று முடிந்த பின்னர், ரிஜூஸ் மற்றும் ரியாவின் விரல் நுனிகளைச் சிறு ஊசி கொண்டு குத்தி, சில துளி ரத்தத்தை சிறு கண்ணாடிப் பேழையில் சேமித்துக் கொண்டார் திரு சாம்சன். பின் எழுந்து சென்று உள்ளறையில் ஒரு ப்ரீசரினுள் வைத்துவிட்டு தமது இருக்கையில் அமர்ந்து கொண்டார். இந்த ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் டி என் ஏ வையும், அவர்கள் கருவாக இருந்த பொழுது எடுத்து வைத்திருந்த மிக ஆரம்ப நிலைச் செல்களையும், ஒப்பிட்டு உறுதி செய்த பின்னர்,  அவற்றிலிருந்து டி என் ஏ வை ச் சேகரித்து, அதன் மரபணு அமைப்பை ஆய்ந்து, ஜெனிடிக் மேப் வரைந்தெடுத்துக் கொள்வோம் என்றார். அடுத்ததாக இருவரும் தங்களது குழந்தையின் உருவ அமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்று கணினியில் டிசைன் செய்து கொடுத்தால், அதற்கேற்ப இருவரின் டி என் ஏ விலிருந்தும் அந்தந்த ஜீன்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றின் மாதிரிகளை வெளி வேதிப்பொருட்களைக் கொண்டு கட்டமைத்து, பின்னர் அவற்றை ஒருங்கிணைத்து, அடிப்படை டி என் ஏ வை உருவாக்கி, அதிலிருந்து ஒற்றைச் செல்லை வருவித்து, அதை மேற்கொண்டு வளர விடுவோம் என்றார். 

வெளிப்புறத் தோற்றமானது, குழந்தை இருபது வயதை எட்டும் நிலையில் எப்படி இருக்க வேண்டும் என்று பெற்றோர் எதிர்பார்க்கிறார்களோ அதற்கேற்ற மாதிரி டிசைன் செய்வோம். உட்பாகங்களைப் பொறுத்த வரை, யாருடைய மரபணு சிறப்பாக இயங்கக் கூடிய உறுப்பு அமைப்பைத் தரும் நிலையில் இருக்கிறதோ, அதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றார். 

இப்படிச் செய்வதால், பிறவி நோயற்ற ஆரோக்கியமான குழந்தையை உருவாக்க முடிகிறதென்றும், இதன் மூலம் அவர்களுக்கு பின்னாளில் வரும் நோய்களும் பெருமளவு குறைகின்றன என்று அறிவியற்பூர்வமாக நிரூபிக்கப் பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். ஒரு மாதத்தில் குழந்தை கிடைத்துவிடும் என்றும், ஒரே நேரத்தில் இரண்டு பிள்ளைகளை உருவாக்கிக் கொள்ளலாம், அப்படிச் செய்தால் தனித்தனியாகச் செய்வதை விட விலை குறைவு என்ற ஆஃபர் இருப்பதாகவும் தெரிவித்தார். அது போக, சில பிரபலங்களின் ஜெனிடிக் மேப்பும் தங்களிடம் இருப்பதாகவும், அவர்களின் தோற்ற அமைப்பு போன்று வேண்டுமென்றால், ஒவ்வொரு பாகத்துக்கும் தனித் தனி செலவாகும் என்றார். இது அவர்களின் அனுமதியோடு செய்யப்படும் என்றும் உறுதிப்படுத்தினார்.  அவர்களைப் போன்று என்றால் அது எப்படி தங்களது குழந்தையாகும் என்று சட்டென்று ரிஜூஸ்க்குத் தோன்றியதால் உடனே மறுத்துவிட்டான். 

ரியாவுக்கு குழந்தையின் நிறம் இருவரையும் கலந்தது போன்று கோதுமை நிறத்தில் வேண்டும் என்று விருப்பம். கூந்தலமைப்பு தன்னைப் போன்றே சிறு சிறு சுருள்களாக இருக்கட்டும் என்றாள். ஆண் குழந்தைக்கு மூக்கு அவனைப் போன்றும், பெண்ணுக்கு அவளைப் போன்றும் என்று ஏற்கனவே முடிவு செய்திருந்தார்கள். இப்படியாக, கணினியில், கொஞ்சம் கொஞ்சமாக கண் உதடு தாடை கன்னம் என்று ஏற்றப்பட்டு, அவர்களது குழந்தைகளின் இருபது வயதுக்கான முகங்கள் முழுமை பெறத் துவங்கின. உயரம் இருவரையும் விடச் சற்று கூடுதலாக இருக்கட்டும் என்றார்கள். முழுவதும் உருவாகிய பின்னர், பார்வையிட்டு இன்னும் சில மாற்றங்கள் செய்த பின்னர், இருவருக்கும் திருப்தியாக இருந்தது. இறுதியாக, ரிஜூஸ், பெண் குழந்தைக்கு, உதட்டின் இடது ஓரத்தை ஒட்டிய கன்னத்து தோலில் சிறு மச்சம் வேண்டும் என்றான். 

**************

பெரும்பாலான கல்வி மற்றும் அலுவலக வேலைகள் இருந்த இடத்திலிருந்தே நடந்து கொண்டிருந்ததால், மக்கள் பயணிப்பது வெகுவாகக் குறைந்திருந்தது. அதனால் சாலைகளில் மிகக் குறைவான வாகனங்களே தென்பட்டன. தங்கள் வீட்டை விரைவாக அடைந்துவிட்டனர். உள்ளே நுழைந்ததும், ரியா, உறங்கப் போகிறேன் என்று சொல்லிவிட்டு தனது அறைக்குச் சென்றாள். ரிஜூஸ் தனது அறைக்குச் சென்று, கணினியைத் திறந்து, கோப்புகளின் ஏதோவொரு மூலையில் புதைந்து கிடந்த தனது முன்னாள் காதலியின் புகைப்படத்தைக் கண்டுபிடித்து பெரிதுபடுத்தினான். அவளது மச்சம் இடது பக்கமா இல்லை வலது பக்கமா என்று அவனுக்குச் சிறு குழப்பம் இருந்தது.. இடது பக்கம் தான், உறுதிப்படுத்திக் கொண்டான். 

***************

15 comments:

  1. avvvvvvvv! தலை இடம் வலமா 5 முறையும், வலமிருந்து இடமா 10 முறையும் சுத்துது!! மெதுவா வந்து படிக்கிறேன்! ;)

    ReplyDelete
  2. அவ்வ்வ்வ்.... இப்படியாகிடுமா உலகம்!! ரொம்பப் பயங்காட்டுறீங்க.

    ஆனாலும் அப்பவும், “முன்னாள் காதலிகள்” சென்டிமெண்ட்கள் இருக்கத்தான் செய்யும்னு சொல்றீங்க பாருங்க, ‘மனுசப்பய மாறவே மாட்டான்”ன்னு அடிச்சுச் சொல்ற மாதிரி இருக்கு. ;-)))))))))))))))))

    ReplyDelete
  3. ஜயன்ச் பிக்ஜன் ...you mean, Science fiction??? :-))))

    ReplyDelete
  4. நாவலாக எழுத வேண்டியதை ஒரு போஸ்டிங்ல அடக்கிட்டீங்களே என்று வருத்தமா இருக்கு சந்தூஸ். ;(
    பரவால்ல.. அடுத்த //ஜயன்ச் பிக்ஜன்// எப்போ வரும்!!

    ReplyDelete
  5. இமா has left a new comment on the post "பெண் எழுத்து":

    உலகத்துக்கு என்னவோ பிரச்சினை. ;( 'கத்தியின்றி ரத்தமின்றி'க்கு கருத்துச் சொல்ல ஏலாமல் கிடக்கு சந்தூஸ். ;( நல்லா எழுதி இருக்கிறீங்கள். இப்பதான் 'மீண்டும் ஜீனோ' மூடி வச்சுட்டு வந்தன். இது தொடர்ச்சி மாதிரி இருக்கு.

    எல் போர்ட் சீ..ரியசாகச் சிந்திச்சதில... இன்னொரு சுஜாதா உருவாகிறார். ;)

    எனக்குப் பிரச்சினை சரியானதும் இதை அங்க கொண்டு வந்து ஒட்டி விடுறன். ;))

    ReplyDelete
  6. ம்ம்ம்... பொறுமையாகப் படிச்சு முடிச்சன்... அந்தக் காலத்திலயே... வித்தியாசமான பெயராக வைத்து அசத்திட்டீங்க சந்து...

    டவுட் வரலாம்தான் ஆனா... மச்சம் எந்தப்பக்கம் இருக்கு என்பதிலா வரோணும்..அவ்வ்வ்வ்வ்வ்வ்:))).

    ReplyDelete
  7. ஆழ்மனதிலிருக்கும் எண்ணங்கள் கனவுகளாக மட்டுமல்ல கதையாகவும் கூட வரும் போல எங்கள் ஆதர்ச எழுத்தாளர் சந்தனா வாழ்க வாழ்க - சாக்லேட்டாச்சும் வாங்கிக்கொடுத்திடுங்க சந்தூ :))

    ReplyDelete
  8. சுத்தல் நின்னுடுச்சா மகி? இப்போ தல முன்னால பாத்தா மாதிரி இருக்கா இல்ல சைடா இல்ல முதுகுப் பக்கமா?

    ReplyDelete
  9. ஹூசைனம்மா.. சும்மா கற்பனை தான்.. :) இது மரபணு மாற்று விதைகளை மனதில் வைத்து எழுதப்பட்டது.. கதையைக் கொஞ்சம் ஜோவியலா முடிப்பதற்காக அப்படிக் கொண்டுவந்தேன்.. எழுத நினைத்து விட்டுட்ட விஷயம், பொறக்கற பெண் குழந்தைக்கு கர்ப்பப்பை இருக்காது.. கம்பெனி தயாரிப்பு அப்படி :)) இயல்பா இன்று நடக்கும் விஷயம் நாளைக்கு வியாபாரமாக்கப் படலாம், அது தான் சொல்ல வந்தேன்..

    ReplyDelete
  10. அதிரா.. ரெம்ப பெருசா எழுதிட்டனா? :)) ரெண்டுக்கும் இடையிலே நிறைய நாள் இடைவெளி, அதான் நீளம் கூடிட்டது.. இந்தப் பேரெல்லாம் இந்தக் காலத்துலேயே இருக்குதாக்கும் :) அது சும்மா விளையாட்டுக்கு அதிரா..

    ReplyDelete
  11. இமா.. இது உங்களுக்கே ஓவரா இல்ல? :)) நல்லவேளை அவரு இப்போ உசுரோட இல்ல இந்தக் கொடுமைய எல்லாம் கேட்க.. :))

    பி டி எப் லிங்க் இருந்தா மெயில்ல அனுப்பி வையுங்க இமா, நான் சிறு வயதில் பார்த்த தொலைக்காட்சித் தொடர்.. மறுபடியும் படிச்சா நல்லா இருக்கும்..

    ReplyDelete
  12. வசந்த்.. என்ன பெரிய பெரிய வார்த்தையெல்லாம் சொல்லுறீங்க.. பயமா இருக்கே.. :)) ஆழ்மன எண்ணமா? நான் இதையெல்லாம் போன வருஷம் வரைக்கும் செய்தியில கூடப் படிச்சதில்ல.. மேல சொன்ன மாதிரி இது மரபணு மாற்று விதைகளை மனதில் வைத்து எழுதப்பட்டது.. கதையைப் பத்தி ஒன்னுஞ் சொல்லாததால சாக்லேட் கூட கிடையாது.. :))

    ReplyDelete
  13. உங்களுக்கு எனது இனிய இல்லத்தில் அவார்டு கொடுத்திருக்கேன்.. பெற்றுக்கொள்ள வாருங்கள்

    என்றும் நட்புடன் உங்கள் சிநேகிதி

    http://en-iniyaillam.blogspot.com/2011/04/blog-post_22.html

    ReplyDelete
  14. விருதுக்கு நன்றி சிநேகிதி!!

    ReplyDelete

பழைய வரிய மாத்தச் சொல்லீட்டாங்க.. இப்ப புதுசு “என்ன சொல்லனும்னாலும் தெகிரியமா சொல்லிட்டுப் போங்க” :)