27 May 2011

ஊர்சுற்றி.. 1

இருபது நாட்களுக்கான விடுமுறை.. ஆனால் ஊரிலே தங்கியிருந்ததென்னவோ பத்து நாட்கள் போலத் தான்.. போனது வந்தது கொஞ்சம் நாட்கள் ஓய்வு மற்றும் சென்னையில் கொஞ்சம் நாட்கள் என்று இதர நாட்கள் விரைவாகக் கரைந்து விட்டன.. 

***

அபுதாபி வழியாகச் செல்லும் விமானப் பயணம்.. அபுதாபியில் சென்னை செல்வதற்கான போர்ட் மிகவும் மோசமாக கையாளப்பட்டு வருகிறது.. எந்த கேட் பக்கம் போவது என்பதைக் கூட சரியாகச் சொல்லவில்லை.. அங்கே சென்றதுமே தமிழ்நாட்டுக்கு வந்துவிட்ட உணர்வு.. எல்லோரும் தமிழ் முகங்கள்.. பேச்சுத் துணைக்கு வேறு, ஆள் கிடைத்துவிட்டார்.. :)

விசா வேலைகளுக்காக சென்னையில் மூன்று நாட்கள் தங்க நேர்ந்தது.. கடுமையான வெயில், நெரிசல் மற்றும் வாகனப் புகை முதல் நாளில் தகிக்க வைத்தன.. குளிக்கும் போதே வேர்த்துத் தொலைத்தது :) 

கொஞ்சமே கொஞ்சமாக பச்சையம் அதிகரித்தது போல இருக்கிறது.. 

இரண்டாவது நாளிலேயே ஜனத் திரளுடன் கலந்து விட்டோம்.. தி நகர் செல்வதற்காக மின்சார ரயில் ஏறுவதற்காக பிளாட்பார்முக்கு வந்தால், விசாரித்து விட்டு ஏறுவோம், ஏதாவது மாறியிருந்தாலும் மாறியிருக்கலாம் என்றார் கணவர்.. அந்தந்தத் தடங்களில் முன்பிருந்தது போன்ற திசைகளில் தான் ரயில்கள் ஓடிக் கொண்டிருந்தன.. அப்புறம் என்ன, பாரிசும் தாம்பரமுமா இடம் பெயர்ந்து மாறி உட்கார்ந்திருக்கும்? :))

மின்சார ரயிலில் கூட்டமாக சில பதின்ம வயதுப் பையன்கள் ஏறினார்கள்.. டிப்ளமோ மாணவர்கள் என்று நினைக்கிறேன்.. அவர்களிலே ஒருவன் அடித்துப் பிடித்து இருக்கையில் அமரப் போக, அந்நேரம் பார்த்து ஒரு சிறு பெண் ஏறி வர, அவனை எழுப்பி விட்டு விட்டார்கள் அவனது நண்பர்கள்.. அந்தப் பொண்ணு உட்காரட்டும்டா என்று.. என்னே ஒரு soft corner :))

கூவம் நதிக்கரை வீடுகள் இன்னமும் அப்படியே தான் உள்ளன.. பிளாட்பார மக்களும்.. 

இரவு எட்டு மணி போல மொட்டை மாடியில் ஏறி நின்றால்.. ஈரப்பதம் மிகுந்த குளிர்ச்சியான கடற்கரைக் காற்று உடலைத் தழுவி மனதைக் கொள்ளை கொண்டது.. 

சென்னையிலே எல்லோரும் சொல்வது போல விலைவாசி மிகவும் அதிகரித்து விட்டது.. அங்கே வாழ்வதென்று வந்துவிட்டால், ஆரம்பத்திலே செட்டில் ஆவதற்கான விலை மிகவும் அதிகம்.. வீட்டுக்கான முன்பணம், வீட்டுக்குத் தேவையான சாமான்கள் வாங்குதல், வாகன வசதி, குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கான கல்விக் கட்டணம்.. என்று கேட்கும் போதே கண்ணைக் கட்டியது.. 

உணவகங்களில் உணவிற்கான விலை இரு மடங்குக்கு மேலேயே அதிகரித்து விட்டது.. அதுவும் விமான நிலையங்களில், டாலர் கணக்கில் என்று எடுத்துக் கொண்டால் தான் டீ காப்பி கூட வாங்கிப் பருக முடியும்.. ரூபாய்க் கணக்கில் பார்த்தால் எதையும் வாங்க மனசு இடம் தராது.. 

விசா நேர்முகத்தின் போது வெளியே நிறைய நேரம் காத்திருக்க வேண்டி வந்தது.. அப்போது ஒருவர் அந்த வெய்யிலில் கோட்டும் சூட்டும் அணிந்து ஏகத்துக்கும் வியர்த்து வழிந்து கொண்டிருந்தார்.. அவன் அவனுடைய சீதோஷன நிலைக்கேற்ற உடைகளை அணிந்து கொண்டிருக்கிறான்.. அவனது நாட்டில் வேலை செய்யும் அனுமதி பெற அவனைச் சந்திக்கச் செல்லும் போது அவனது எதிர்பார்ப்புகளுக்கேற்ற ஃ பார்மல் உடையை அணிய வேண்டியது அவசியம் ஆகிறது - இதை மறுக்க இயலாது.. ஆனால் அதற்கு முழுக்கைச் சட்டையும் முழு நீளக் காற்சட்டையுமே போதுமே.. டையும் கோட்டும் அவசியமா என்ன? நீ உனது தட்பவெப்ப நிலைகேற்ற உடைகளை அல்லவா தேர்வு செய்து அணிய வேண்டும்??

வேலை முடிந்ததும் விரைவு ரயில் ஏறி ஊருக்குப் பயணம்.. ரயில் பயணங்களின் சிறப்பம்சமே எதிர் இருக்கைகளில் அமர்ந்து அறிமுகம் பெற்று உரையாடியபடியே பயணம் செய்யும் பயணிகள் தான்.. ஆனால் இம்முறை எல்லா இருக்கைகளுமே ஒரே திசை நோக்கி இருக்குமாறு அமைக்கப் பட்டிருந்தன.. பேருந்துகளில் இருப்பதைப் போன்று.. bore ஆக இருந்தது.. 

***

9 comments:

  1. //அந்தப் பொண்ணு உட்காரட்டும்டா என்று.. என்னே ஒரு soft corner :))
    // சின்ன பசங்க அப்படித்தான்.

    //ஆனால் அதற்கு முழுக்கைச் சட்டையும் முழு நீளக் காற்சட்டையுமே போதுமே.. டையும் கோட்டும் அவசியமா என்ன? //

    எத்தன பேர் அட்வைஸ் கொடுத்தாங்களோ இப்படித்தான் போகணும்னு. இப்படி போனவர் இஷ்டப்பட்டு மட்டுமே போட்டிருக்காமலும் இருக்கலாம்

    ReplyDelete
  2. அடுத்து ஊர்சுற்றி 2 ஐயையும் சீக்ரம் எழுதிடுங்க

    ReplyDelete
  3. :) குளிக்கும் போதே வேர்த்து தொலைத்ததா? அப்படியே உணர்ந்து இருக்கீங்க. நானும் நேர்த்துதான் வந்து சேர்ந்தேன். வெயில் மக்களை கருக்கி கொண்டிருக்கிறது. விலைவாசியை கவனிக்கும் பொழுது மக்கள் எப்படி சமாளித்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று மலைக்க வைக்கிறது.

    பத்து வருடத்திற்குள் இத்தனை பெரிய மாற்றம் இந்திய ரூபாயில் மற்றும்... மற்றபடி அப்படியே மற்ற அனைத்தும் வைத்தது வைத்த படிதான் இருப்பதாக என்னால் புரிந்து, அனுபவித்து கொள்ள முடிந்தது. கன்சூலேட் அனுபவம் அப்படியே நான் நினைச்சது. அது போன்ற கோட் சூட்களை பார்க்கும் பொழுது பாவமாக இருந்தது.

    ReplyDelete
  4. அபுதாவி வழியாகத்தான் நானும் வந்தேன் :) . ஆடுமாடுகளை பாவிப்பதனைப் போன்றுதான் மத்திய கிழக்கு நாடுகளில் ஏர்லைன்ஸ் அனைத்தும் நம் மக்களை கையாளுவாங்கன்னு தெரியுது. முன்பு ஒரு முறை கல்ஃப் ஏர்லைன்ஸ்சில் பயணிக்கும் பொழுதும் - இப்பொழுது இதனைக் கொண்டும் ஒரு முடிவிற்கு வர முடிகிறது.

    நோ மோர் மத்திய கிழக்கு ஏர்லைன்ஸ்!

    ReplyDelete
  5. வாங்க, வாங்க. நல்வரவு.

    இவ்ளோதானா? வேற என்ன புதினம் ஊர்ல??

    ReplyDelete
  6. சந்தூ, சம்மரில் போய்ட்டு வெய்யில் வெய்யில் என்று புலம்பினா எப்படி? நான் 2001, செப்டெம்பரில் போன போதே பயங்கர வெய்யில். ஒரு முறை வெய்யில் தாங்க முடியாமல் மயங்கி விழுந்து விட்டேன்.
    மீதி போடுங்க.... வெயிட்டிங்

    ReplyDelete
  7. அம்மணி,ஒரு வாரமாச்சு,இன்னும் அடுத்த பகுதிய காணோம்? ஜெட் லாக் எல்லாம் யூஸ் பண்ணி இன்னேரம் எழுதி முடிச்சிருக்கவேணாமா? ;)

    ReplyDelete
  8. அதற்கு முழுக்கைச் சட்டையும் முழு நீளக் காற்சட்டையுமே போதுமே.. டையும் கோட்டும் அவசியமா என்ன? நீ உனது தட்பவெப்ப நிலைகேற்ற உடைகளை அல்லவா தேர்வு செய்து அணிய வேண்டும்??//

    Good Thinking.

    ReplyDelete

பழைய வரிய மாத்தச் சொல்லீட்டாங்க.. இப்ப புதுசு “என்ன சொல்லனும்னாலும் தெகிரியமா சொல்லிட்டுப் போங்க” :)