16 October 2010

இலக்கை மீறிய பயணம்...



பிரபஞ்சவெளியில்
உயிர்த்தெழும்பியிருந்த
ரோஜாவின் மேற்
பனித்துகள்கள் அகற்றி
அதன் ஒற்றையிதழ் உதிர்த்து
முகர்ந்து சுவாசித்த வேளையில்
என்னருகில் மிதந்துவந்த
நிலவின் மீதேறி,
தேடித்திரிந்து கண்டெடுத்த கல்லில்
என்னவளின் நிழலைச்
செதுக்கி முடித்தபொழுது
வந்த பெரும் பிரளயத்தில்
அடித்துச் செல்லப்பட்டு
எதுவுமற்ற பல
வெளிகளைக் கடந்து
கொடியொன்றினைப் பற்றி
கரை சேர்ந்திருந்த
 'நான்'
அங்கு தியானித்துக் கொண்டிருந்த
ஜென் துறவி யொருவரின்
மூச்சில் உள்ளிழுக்கப்பட்டு
செந்நிறத்துச் சிறு
உலகமொன்றின் உதவிகொண்டு,
பிணைந்திருந்த ஏணிகளை
எட்டிப்பிடித்து அவைகளை
இணைத்திருந்த தொரு
கம்பியின் அங்கமாகி
யுகங்கள் சில காத்திருந்து
பின் வெளிப்பட்டதொரு நாளில்
மண்ணில் விழுந்து
முளைத்து வளர்ந்து
பூத்து ரோஜாவானேன்..